கட்டுரை, அரசியல், நிர்வாகம் 10 நிமிட வாசிப்பு
சுதந்திர நாடு இந்தியா; சுதந்திரமற்றவர்கள் இந்தியர்கள்
பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில மாதங்களாகப் பேசும்போதெல்லாம், ‘உலகமே நம்மை உற்று நோக்குகிறது…’ என்று புதிய பாணியில் பேசி வருகிறார். பிரதமர் இந்தியில் பேசும் உரையில் இது அடிக்கடி இடம்பெறுகிறது. ‘இந்தியா உற்பத்திக்கான மையமாகப் பார்க்கப்படுகிறது’, ‘இந்தியாவின் புத்தாக்கத் தொழில்களே நமது எதிர்காலம்’, ‘உலகம் இந்தியாவின் ஆற்றலை உணர்ந்து அதன் செயல்திறனைப் பாராட்டுகிறது’ என்று அவருடைய இத்தகு சொல்லாடல் தொடர்கிறது.
உற்றுப்பார்க்கிறது உலகம்
உலகமே இந்தியாவை உற்றுப்பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது, மோடி சொல்கிறார்போல உயர்வானவற்றுக்காக அல்ல – என்பதை ஆகார் படேல் எழுதியுள்ள ‘பிரைஸ் ஆஃப் தி மோடி இயர்ஸ்’ (Price of the Modi Years) என்கிற புத்தகம் உறுதிப்படுத்துகிறது. பொருளாதார, சமூக, அரசியல் குறியீடுகளில் ஒரு நாடு எப்படி கணிக்கப்படுகிறது என்று அந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இந்த எல்லா அம்சங்களிலும் இந்தியா மிகவும் தாழ்நிலையில் – வாய்விட்டு கதறும்படியான தாழ்நிலையில் – இருப்பதையே அது காட்டுகிறது.
பிரதமர் தனது உரையில் பீற்றிக்கொள்வதற்கு நேர் எதிராகவே இது இருக்கிறது. ஹென்லேயின் பாஸ்போர்ட் அட்டவணையில் இந்தியா 85வது இடத்தில் இருக்கிறது. உலக பொருளாதார அரங்கு தயாரித்துள்ள மனிதவள மூலதன குறியீட்டெண்ணில் 103வது இடத்தில் இருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை தயாரித்துள்ள மனித வளர்ச்சிக் குறியீட்டில் 131வது இடத்தில் இருக்கிறது. இந்தக் குறியீடுகளில் பெரும்பாலானவற்றில், நரேந்திர மோடி பிரதமரான 2014க்குப் பிறகு இந்தியா சரிவையே கண்டுள்ளது.
உலகம் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறது என்பது முக்கியம். நாம் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறோம் என்பது அதைவிட முக்கியம். பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற எழுபத்தைந்தாவது ஆண்டில், நம்மை நாமே சில கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்: இந்தியா எப்படி இருக்கிறது? இந்தியர்கள் எப்படி இருக்கிறார்கள்? ஒரு நாடாகவும் குடிமக்களாகவும் நம்முடைய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள லட்சியங்களை எந்த அளவுக்கு நிறைவேற்றியிருக்கிறோம்? சுதந்திரத்துக்காகப் பாடுபட்டவர்கள் அடுத்துவரும் தலைமுறை மீது வைத்த நம்பிக்கைக்குப் பாத்திரமாக எந்த அளவுக்குச் செயல்பட்டிருக்கிறோம்?
நான் ‘தேர்தலில் மட்டுமே - ஜனநாயக நாடு’ என்று இந்தியாவை 2015இல் வர்ணித்திருந்தேன். இங்கு தேர்தல்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்துவிடுகிறது, இந்த இடைப்பட்ட காலத்தில் யாரும் யாருக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் அல்ல என்ற நிலையே நிலவுகிறது. நாடாளுமன்றம், ஊடகம், குடிமைப்பணித் துறை என்பவை பயனற்றுப் போய்விட்டன அல்லது ஆள்வோருடன் சமரசம் செய்துகொண்டுவிட்டன அல்லது ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகம் குறித்து கேள்வி கேட்பதே கிடையாது. இப்போது தேர்தல் மட்டுமே ஜனநாயகமாக இருக்கிறது என்பதையும் திருத்த விழைகிறேன்.
காரணம், தேர்தல் நன்கொடைப் பத்திரம் என்பதில் மூடுமந்திரமே நிலவுகிறது. தேர்தல் ஆணையம் பாகுபாடு பார்க்கிறது. தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசுகளைக் கவிழ்க்கவும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவும் லஞ்சம் தரப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மிரட்டப்பட்டு நெருக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். தேர்தலுமே முறையாகவும் நியாயமாகவும் நடப்பதில்லை, தேர்தல் முடிவுகளும் மதிக்கப்படுவதில்லை.
கருத்துச் சுதந்திரத்துக்கு இடம் இல்லையா?
எதிர்க்கருத்துகளை ஒடுக்கும் செயலை இந்திய அரசு ஈவு இரக்கமின்றி மேற்கொள்கிறது. அரசின் புள்ளிவிவரங்களின்படியே, 2016 முதல் 2020 வரையில் ‘சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்’ என்கிற கொடூர சட்டப்படி 24,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 1%க்கும் குறைவானவர்களே விசாரணை முடிந்து தண்டிக்கப்பட்டனர். எஞ்சிய 99% பேர்களுடைய வாழ்க்கை அரசு அமைப்புகளால் அலைக்கழிக்கப்பட்டு அச்சத்துக்கும் பீதிக்கும் ஆளாக்கப்பட்டுள்ளது. ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் தீவிரமைடந்துள்ளன. ஆகார் படேலின் புத்தகத்தை இதற்காக திருத்தச் சொன்னால், உலக பத்திரிகைச் சுதந்திரத்தில் 142வது இடத்தில் இருக்கும் இந்தியா 150வது இடத்துக்கே வந்துவிட்டது என்று திருத்துவார்.
இப்படிப்பட்ட ஒடுக்குமுறையான சூழ்நிலையில், நீதித் துறையின் உயர்பீடமானது குற்றஞ்சாட்டப்பட்ட மக்களுக்கு எதிராகவும், அரசுக்கு ஆதரவாகவும் அடிக்கடி நின்றுகொள்வது ஏமாற்றத்தை அளிக்கிறது. ‘மக்களுடைய உரிமைகளுக்கான பாதுகாவலனாக இருப்பதற்குப் பதிலாக, உரிமைகளுக்குப் பெரிய ஆபத்தாக உச்ச நீதிமன்றமே திகழ்கிறது’ என்று பிரதாப் பானு மேத்தா சமீபத்தில் எழுதியிருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பெரும்பான்மையினவிய அரசுக்கு முன்னால் உச்ச நீதிமன்றம் முழுமையாகச் சரணாகதி அடைந்துவிட்டது என்று அரசமைப்புச் சட்ட அறிஞர் அனுஜ் புவானியா பேசியிருக்கிறார். மோடியின் ஆட்சிக்காலத்தில் அரசின் அத்துமீறிய நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய தனது அரசமைப்புச் சட்ட கடமைக்குப் பதிலாக, மோடி அரசின் செயல்திட்டங்களை வரவேற்கும் உற்சாகக் குழுவாக மாறிவிட்டது; அரசின் அராஜகத்துக்கு எதிராக மக்களைக் காக்க வேண்டிய கேடயமாகச் செயல்படுவதற்குப் பதிலாக, அரசின் கையிலிருக்கும் வலுவான வாளாக மாறிவிட்டது என்றும் அனுஜ் புவானியா நீதித் துறையைச் சாடுகிறார்.
அரசியல்ரீதியாக இந்தியர்கள் சுதந்திரத்தன்மையில் குறைந்திருக்கிறார்கள், சமூகரீதியில் அதைவிட சுதந்திரக் குறைவான நிலையில் இருக்கிறார்கள். பிரிட்டிஷ்காரர்கள் இந்த நாட்டைவிட்டு வெளியேறி எழுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு நம்முடைய சமூகம் இன்னமும் குருமார்களின் காலடியிலேயே வீழ்ந்து கிடக்கிறது. சாதிரீதியிலான, பாலினரீதியிலான பாகுபாடுகள் சட்டவிரோதம் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் 1950லேயே அறிவித்துவிட்டது. அவை இன்னமும் அதே வேகத்தோடு கடைப்பிடிக்கப்படுகின்றன. பொது நன்மை கருதி அரசு எடுத்த உறுதியான நடவடிக்கைகளால் துடிப்பு மிக்க பட்டியலின விழிப்புற்ற வர்க்கம் தோன்றியிருக்கிறது. இருந்தும் இன்னும் பல இடங்களில் சமூக வாழ்க்கையில் சாதிரீதியிலான அடக்குமுறைகளும் விலக்கல்களும் நீடிக்கின்றன.
சாதிகளை ஒழிக்க வேண்டும் என்று பி.ஆர்.அம்பேத்கர் அழைப்பு விடுத்து அனேக ஆண்டுகளுக்குப் பிறகும், சாதி மறுப்புத் திருமணங்கள் மிகக் குறைவாகத்தான் நடக்கின்றன. இந்திய சமூகம் இன்னமும் மரபார்ந்த சமூகமாகவே பின் தங்கியிருப்பதையே இது உணர்த்துகிறது. பாலினம் பொருத்தவரையில் இரண்டு தரவுகள், லட்சிய இலக்கைவிட நாம் எவ்வளவு கீழ்நிலையில் இருக்கிறோம் என்பதைச் சொல்கின்றன.
கலாச்சாரமும் பொருளாதாரமும்
முதலாவது, பெண் தொழிலாளர்கள் உற்பத்தி நடவடிக்கையில் பங்கேற்கும் விகிதம். அது வெறும் 20% ஆக இருக்கிறது, வங்கதேசத்தைவிடக் குறைவு (வியட்நாம் – சீனா ஆகியவற்றுடன் ஒப்பிடுவது அப்புறம் இருக்கட்டும்). உலக பாலின வேறுபாட்டு குறியீட்டில் 2022 ஜூலை நிலவரப்படி நாம் மொத்தம் கணக்கிடப்பட்ட 146 நாடுகளில் 135வது இடத்தில் இருக்கிறோம்! சுகாதாரம் மற்றும் நோயிலிருந்து நீங்கி உயிர் வாழ்தலிலும் இதேபோல தாழ்நிலையிலேயே இருக்கிறோம்.
சமூகத்திலிருந்து அடுத்து கலாச்சாரம், மதம் தொடர்பான துறைக்குச் செல்வோம். இங்குமே நிலைமை நாம் பெருமைப்படும்படியாக இல்லை. மக்கள் என்ன சாப்பிட வேண்டும், எதை உடுத்த வேண்டும், எங்கே வசிக்க வேண்டும், எதை எழுத வேண்டும், யாரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றெல்லாம் அரசும், ஆயுதமேந்திய ஆதிக்க கும்பல்களும் தீர்மானிக்கின்றன.
இவை எல்லாவற்றையும்விட கவலை தரும் அம்சம் எதுவென்றால், இந்திய முஸ்லிம்களைத் தங்களுடைய வார்த்தைகளாலும் செயல்களாலும் கொடியவர்களைப் போலச் சித்தரிக்கும் போக்குதான். இன்றைய இந்தியாவில் அரசியலில் முஸ்லிம்களுக்கு மிகவும் குறைவான பிரதிநிதித்துவமே கிடைக்கிறது. வேலை செய்யும் இடங்களிலும் சந்தைகளிலும் முஸ்லிம்கள் பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர். தொலைக்காட்சிகளிலும் சமூக ஊடகங்களிலும் முஸ்லிம்களை ஏளனம் செய்கின்றனர், அவமதிக்கின்றனர். அவர்களுக்கு இழைக்கப்படும் துயரங்களும் களங்கமும் நம் அனைவருக்குமேயான அவமானமாகும்.
கலாச்சாரத்திலிருந்து பொருளாதாரத்துக்குச் செல்கிறேன். பொருளாதாரத்தை மேலும் தாராளமயப்படுத்துவேன் என்று சொல்லித்தான் மோடி ஆட்சிக்கு வந்தார். ஆனால், 1991இல் கொண்டுவரப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள் முடிவுக்கு வரும்வகையில், அரசின் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தியிருக்கிறார். இந்த நடவடிக்கை உள்நாட்டிலேயேகூட அனைத்து சுதேசி நிறுவனங்களுக்கும் சமமான போட்டிக்கு வழி வகுத்துவிடவில்லை.
அதற்கு மாறாக, ஆளுங்கட்சிக்கு நெருக்கமான சில பெரும் தொழிலதிபர்களுக்கே சாதகமாக இருக்கிறது. உலகளவில் இகழப்படும் முதலாளித்துவத்தின் அடுத்த நிலை இது என்று அரசுக்கு முதன்மைப் பொருளாதார ஆலோசகராக இருந்தவரே அலுத்துக்கொள்ளும் அளவுக்கு நிலைமை இருக்கிறது. இதை ‘2ஏ மாடல்’ என்று அவர் குத்தலாகக் குறிப்பிட்டுள்ளார். அரசு நிர்வாகத்தில் அதிகார வர்க்கம் மீண்டும் பலம் படைத்ததாக உருவெடுத்துள்ளது.
வருமான வரி, சுங்கத் துறை அதிகாரிகளிடமிருந்து ஒரு காலத்தில் பறிக்கப்பட்ட அதிகாரங்கள் இப்போது மீண்டும் தரப்பட்டுவிட்டன. இவ்வாறு புதுப்பிறவி கண்டுள்ள ‘பர்மிட் - லைசென்ஸ் - கோட்டா ராஜ்’ நிர்வாகத்தால் சிறு தொழிலதிபர்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது, இந்தியத் தொழிலாளர்களின் பணித் திறனோ பாதாளத்தில் இருக்கிறது.
வரலாற்றாசிரியர்கள் எப்படி பார்ப்பார்கள்?
உலகின் தலைசிறந்த பொருளாதார அறிஞர்கள் 2022ஆம் ஆண்டுக்கான ‘உலக அசமத்துவ’ அறிக்கையைத் தயாரித்துள்ளனர். இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் நாட்டு மக்கள்தொகையில் 1% என்றால், அவர்களிடம் இருக்கும் செல்வ மதிப்பு தேசிய வருமானத்தில் 22% என்று சுட்டுகின்றனர். மிகவும் வறிய நிலையில் இருக்கும் 50% ஏழைகளுடைய மொத்த சொத்து மதிப்பைக் கூட்டினால் தேசிய வருமானத்தில் 13%தான் வருகிறது. இது வருவாயிலும் செல்வத்திலும் இந்திய சமூகத்தில் எவ்வளவு பெரிய ஏற்றத்தாழ்வு நிலவுகிறது என்பதைக் காட்டுகிறது.
2021 ஜூலையில், தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் செல்வ மதிப்பு 8,000 கோடி அமெரிக்க டாலர்கள். அதற்கும் முந்தைய ஆண்டைவிட 1,500 கோடி அமெரிக்க டாலர்கள் அதிகம். கௌதம் அதானியின் செல்வ மதிப்போ 1,300 கோடி அமெரிக்க டாலரிலிருந்து 55,000 கோடி அமெரிக்க டாலராக உயர்ந்திருக்கிறது. அதானியின் சொந்த சொத்து மட்டுமே 11,000 கோடி டாலருக்கும் மேல் உயர்ந்துவிட்டது. வரலாற்றுரீதியாகவே இந்தியாவில் மக்களிடையே வருமானத்திலும் செல்வ மதிப்பிலும் பெரும் ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன. இப்போது தீவிரம் பெற்றுவிட்டன.
அளவுரீதியாகப் பார்த்தாலும் தரத்தை அடிப்படையாக வைத்துப் பார்த்தாலும் எழுபத்தைந்து ஆண்டு சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவின் நிலைமை திருப்திகரமாக இல்லை. இந்த நிலைமைக்கு முழுக்க முழுக்கக் காரணம் மோடி தலைமையிலான அரசுதான் என்று பழி முழுவதையும் அதன் மீதே சுமத்திவிடவும் முடியாது. ஜவாஹர்லால் நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசு, ஜனநாயக நிறுவனங்களைக் கண்போல் காத்தது, மத – மொழி பன்மைத்துவத்தை வளர்த்தது.
ஆனால், இந்தியத் தொழிலதிபர்கள் மீது மேலதிக நம்பிக்கை வைத்திருந்திருக்க வேண்டும். எழுத்தறிவின்மையைப் போக்கவும் மக்களுக்கு சுகாதார வசதிகள் கிட்டவும் அதிகம் உழைத்திருக்க வேண்டும். போர் ஏற்பட்டபோதெல்லாம் இந்திரா காந்தி நாட்டுக்குச் சிறப்பான தலைமையை வழங்கினார். ஆனால், அவருடைய நிர்வாகமும், சுதந்திரமான அமைப்புகளைத் தன்னுடைய கட்டுக்குள் கொண்டுவந்தது, பொருளாதாரத்தின் மீது அரசின் கட்டுப்பாட்டை தீவிரப்படுத்தியது. காங்கிரஸ் பேரியக்கத்தை குடும்ப நிறுவனமாக மாற்றினார். நிகரில்லாத தலைவர் என்று கட்சிக்காரர்களால் போற்றப்பட்டு ஆராதனைக்குரிய தேவதையாகவே மாறிப்போனார். அது நம்முடைய அரசியல் வாழ்வையே நாசப்படுத்தியதுடன் பொருளாதாரரீதியாகவும் வளர்ச்சி வாய்ப்புகளைக் குன்ற வைத்துவிட்டது.
நரேந்திர மோடி முழுக்க முழுக்க தனது சொந்த முயற்சியால் இந்தப் பதவிக்கு வந்தவராக இருக்கலாம், இந்திரா காந்தியைப் பின்பற்றும் அவருடைய போக்கும், சர்வாதிகார உள்ளுணர்வுகளும், ஆர்எஸ்எஸ் பயிற்சியால் உலகை அவர் பார்க்கும் பார்வையும் வருங்கால வரலாற்றாசிரியர்களால் அவர் மிகக் கடுமையாகவே விமர்சிக்கப்படுவார், அவருடைய பக்தகோடிகள் வேண்டுமானால் எல்லையில்லாமல் அவரைத் துதித்துக்கொண்டிருக்கலாம்.
நம் பணிகள் ஏராளம்…
செல்வாக்கு மிக்க தலைவர்களின் வாக்குறுதிக்கும், செய்து முடிக்க அவர்களுக்கிருந்த ஆற்றலுக்கும் – உண்மையில் அவர்கள் செய்த செயலுக்கும் இடையிலான இடைவெளியை ஆராய்ந்தால், இந்தியா ஏன் இப்படி எல்லா குறியீடுகளிலும் தாழ்நிலையை அடைந்துள்ளது என்பதற்கு விளக்கம் கிடைக்கலாம். அல்லது சமூகரீதியாக இதற்கு விளக்கம் காணலாம். “ஜனநாயகம் என்பது இந்தியாவின் மேல்பூச்சுதான், அடியில் எல்லாமே அஜனநாயகம்தான்” என்றார் அம்பேத்கர்.
இந்தியக் கலாச்சாரத்திலும் வரலாற்றிலும் ஊறிவிட்ட சுதந்திரத்துக்கு எதிரான உணர்வுகளை மாற்றி, புரட்சிகரமாக திருப்பம் உண்டாக்கச் செய்வதற்கு எழுபத்தைந்து ஆண்டுகள் என்ற காலம் குறுகியதாகவும் போதாமலும் இருக்கலாம்!
எப்படியிருந்தாலும், நாட்டை முன்னேற்றப்போவதகாவும் முன்னேற்றிவிட்டதாகவும் மார்தட்டும் தலைவர்களின் வாய்ச் சவடால்களை இனியும் நம்பி நாம் ஏமாறக் கூடாது. இனி வரும் காலங்களில் இந்த மார்தட்டல் மேலும் தீவிரமடையும். மோடி பேசியதைப் போல உலகமே வாய் பிளந்து இந்தியாவை அற்புதமான நாடாக வியந்து பார்த்துக்கொண்டிருக்கவில்லை.
சுயமாக சிந்திக்கக்கூடிய, நடப்பவற்றைக் கண்கொண்டு பார்க்கத் தெரிந்த இந்தியர்களும் அப்படி வியப்பில் ஆழ்ந்துவிடவில்லை. இப்போதைக்கு இந்தியா சுதந்திர நாடாக இருக்கிறது, இந்தியர்களோ அரசியல்ரீதியாக, சமூகரீதியாக, பொருளாதாரரீதியாக, கலாச்சாரரீதியாக, நிறுவனரீதியாக சுதந்திரம் குறைந்தவர்களாகவே வாழ்கிறார்கள். நாம் ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம்.
தமிழில்: வ.ரங்காசாரி
5
3
1
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.