கோணங்கள், கட்டுரை, அரசியல் 10 நிமிட வாசிப்பு
உத்தர பிரதேசம்: எவராலும் ஆள முடியாத பிரதேசம்
பெருவாரியான மக்கள் பேசும் மொழி அடிப்படையில்தான் மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசிடம் 1955 செப்டம்பரில் பரிந்துரைத்த ‘மொழிவாரி மாநிலங்கள் மறுசீரமைப்பு ஆணைய அறிக்கை’ இன்றளவும் நினைவுகூரப்படுகிறது. அந்த அறிக்கையின் யோசனைகளை ஏற்றதால்தான் நான் வசிக்கும் கர்நாடகம் போன்ற மாநிலங்கள் உருவாயின. நான்கு பெரும் நிர்வாகப் பிரதேசங்களில் வாழ்ந்த கன்னடம் பேசுவோர், ஒரே ஐக்கிய மாநிலத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதால் கர்நாடகம் உருவானது.
மாநில மறுசீரமைப்பு ஆணைய உறுப்பினரின் குறிப்பு
மாநில மறுசீரமைப்பு ஆணையம் மூன்று உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. நீதிபதி கான்பகதூர் சையத் சர் ஃபசல் அலி (அவரே அந்த ஆணையத்தின் தலைவர்), சமூக சேவகர் பண்டிட் ஹிருதயநாத் குன்ஸ்ரு, வரலாற்றாய்வாளர் காவளம் மாதவன் பணிக்கர் அதன் உறுப்பினர்கள். பிரதான அறிக்கைக்கு இணைப்பாக சுவாரஸ்யமான ஒரு யோசனையைப் பின்குறிப்பில் அளித்திருக்கிறார் கே.எம்.பணிக்கர். கன்னடம் பேசுவோர், தமிழ் பேசுவோர், ஒடியா பேசுவோர் என்று மொழி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிப்பதுடன் இந்தியாவிலேயே மிகப் பெரியதாக இருக்கும் உத்தர பிரதேசத்தைப் பிரிக்கவும் மாநில மறுசீரமைப்பு ஆணையம் பரிந்துரைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இப்போதும்கூட, மக்கள்தொகைப்படிப் பார்த்தால் வேறு சில மாநிலங்களின் மக்கள்தொகையைக் கூட்டினாலும் அதற்கு இணையான தனி மாநிலமாகத் திகழ்கிறது உத்தர பிரதேசம். இது தேசிய அரசியலில் அதற்கு, தேவைக்கும் அதிகமான முக்கியத்துவத்தை அளிக்கிறது. இது இந்தியாவின் ஒற்றுமைக்கேகூட ஆபத்தாக முடியலாம் என்று பணிக்கர் கருதினார்.
ஒரு கூட்டாட்சியாக (ஃபெடரல்) வெற்றிகரமாகச் செயல்பட அதன் எல்லா உறுப்பு மாநிலங்களும், எல்லா வகைகளிலும் சமமானவையாக இருக்க வேண்டும் என்று கருதினார் பணிக்கர். மாநிலங்களுக்கு இடையே பரப்பளவு, மக்கள்தொகை, நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் போன்றவற்றில் அதிக அளவில் வேறுபாடுகள் இருப்பது பரஸ்பர சந்தேகங்களையும், எதிர்ப்புகளையும் உருவாக்கி, கூட்டரசின் அடித்தளத்தையே வலுவிழக்கச் செய்வதுடன், நாளடைவில் நாட்டின் ஒற்றுமைக்கே உலை வைத்துவிடும் என்றும் அஞ்சினார்.
பணிக்கர் அந்தக் குறிப்பை மேலும் தொடர்கிறார். “உலகம் முழுவதும் அரசுகள் எப்படிச் செயல்படுகின்றன என்பதைக் கருத்தில் கொள்வதுடன், யதார்த்தமான நடைமுறைகள் எப்படி அமையும் என்பதையும் ஒருவர் உணர வேண்டும். ஒரேயொரு மாநிலத்துக்கு இப்படி மிதமிஞ்சிய (அரசியல்) செல்வாக்கு ஏற்படுவது நாளடைவில் தவறாகப் பயன்படுத்தப்படுவதுடன், கூட்டரசின் பிற உறுப்புகளால் நாளடைவில் கடுமையாக எதிர்ப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்படும். நவீன அரசுகள் - பெருமளவுக்கோ, சிறிய அளவுக்கோ - கட்சி அரசியலால் கட்டுப்படுத்தப்படுபவை, அதில் அதிக வாக்குரிமை பெறும் மாநிலம் நாளாக நாளாக மிக வலிமையானதாக வளர்ந்துகொண்டே செல்லும்.”
பணிக்கரின் குறிப்பு செயல்வேகம் மிக்கது மட்டும் அல்ல; தொலைநோக்குப் பார்வையும் கொண்டது. கேரளத்தைச் சேர்ந்த வரலாற்றாய்வாளரான பணிக்கர் 1955-லேயே இப்படி எழுதியிருக்கிறார். “இப்போது மாநிலங்களுக்கு இடையே பரப்பளவு - மக்கள்தொகை - நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் ஆகியவற்றில் காணப்படும் இந்தச் சமமற்ற நிலை, உத்தர பிரதேசம் தாண்டி பிற மாநிலங்களில் அவநம்பிக்கையையும் எதிர்ப்புணர்வையுமே ஏற்படுத்தும். தென்னிந்திய மாநிலங்களில் மட்டும் அல்ல; பஞ்சாப், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள்கூட, மாநில மறுசீரமைப்பு ஆணையத்தின் முன்பாகத் தங்களுடைய கருத்துகளை எடுத்துரைக்கும்போது அனைத்திந்திய விவகாரங்களில் உத்தர பிரதேசம்தான் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதைப் பதிவுசெய்தன” என்கிறார்.
ஜெர்மனி உதாரணம்
சமமற்ற இந்தத் தன்மையை எப்படிச் சரி செய்வது? பிஸ்மார்க் காலத்தில் ஜெர்மனியில் கையாளப்பட்ட முன்னுதாரணத்தை இங்கே சுட்டிக்காட்டுகிறார் பணிக்கர். ஜெர்மனியில் பிரஷ்யா என்ற மாநிலம் மக்கள்தொகை, பொருளாதார வலிமை ஆகியவற்றில் பிற மாநிலங்களைவிட பெரிதாக இருந்தது. எனவே தேசிய நாடாளுமன்றத்தில் அதற்கு விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத்தில் இடங்கள் குறைக்கப்பட்டன. மாநிலங்கள் இணைந்து, ‘ஐக்கிய ஜெர்மனி’ உருவாகும்போது அது பிரஷ்யாவின் ஆதிக்கமுள்ள நாடாக இருந்துவிடாது என்ற நம்பிக்கை சிறிய மாநிலங்களுக்கு ஏற்படுத்தப்பட்டது.
பணிக்கர் அமெரிக்க உதாரணத்தையும்கூட சுட்டிக்காட்டியிருக்கலாம். அமெரிக்காவில் மாநிலங்களின் பரப்பளவு - மக்கள் தொகை எப்படிப்பட்டதாக இருந்தாலும் செனட் சபையில் அனைத்துக்குமே தலா இரண்டு உறுப்பினர்கள்தான், இது கலிபோர்னியா போன்ற மக்கள்தொகைப் பெருக்கமுள்ள மாநிலங்கள் தேவையற்ற செல்வாக்கைப் பெற முடியாமல் தடுத்துவிட்டது.
நேருவும் ஒரு காரணகர்த்தா
இந்த முன்னுதாரணங்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தால் புறக்கணிக்கப்பட்டன, மக்களவையில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் மக்கள்தொகைக்கு ஏற்பவே தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த அடிப்படையில் 1955-ல் மொத்தமிருந்த 499 தொகுதிகளில் 86 தொகுதிகள் உத்தர பிரதேசத்துக்கு வழங்கப்பட்டன. 2000இல் உத்தராகண்ட் மாநிலம் தனியாகப் பிரிக்கப்பட்ட பிறகும்கூட 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில், உத்தர பிரதேசத்துக்கு 80 இடங்கள் கிடைத்துள்ளன.
நாட்டின் நிர்வாகத்திலும் முக்கிய முடிவுகளை எடுப்பதிலும் மக்களவைக்குள்ள ஆதிக்க செல்வாக்கு காரணமாக, பெரிய மாநிலங்களுக்குத் தேவைக்கும் மேல் அதிகாரம் ஏற்பட்டுவிடாமல் பார்த்துக்கொள்வதுதான் - சுருக்கமாகச் சொல்வதானால் பிரிப்பதுதான் - கூட்டாட்சியின் தன்மையைக் காக்கும் வழியாக இருக்க முடியும் என்றார் பணிக்கர். இதுதான் வெளிப்படையான யோசனையாகத் தோன்றுகிறது.
உத்தர பிரதேசத்தை இரண்டாகப் பிரித்து, மீரட், ஆக்ரா, ரோஹில்கண்ட், ஜான்சி பகுதிகளை அதில் சேர்த்து புதிய ‘ஆக்ரா மாநிலம்’ ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் யோசனை தெரிவித்திருக்கிறார் பணிக்கர்.
உத்தர பிரதேசத்தைக் கட்டாயம் பிரித்தாக வேண்டும் என்று பணிக்கருக்குத் தோன்றியிருந்தாலும், ஆணையத்தின் இதர உறுப்பினர்களுக்கு அப்படித் தோன்றவில்லை. காங்கிரஸுக்கு அந்த யோசனை, அதிக முக்கியத்துவம் இல்லாததாகத் தோன்றியிருக்கிறது. பிரதமரான ஜவாஹர்லால் நேரு, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது அதற்கு முக்கியமான காரணம். காங்கிரஸ் தலைமையில் நடந்த சுதந்திரப் போராட்டத்தில் உத்தர பிரதேசம்தான் செயல் மையமாகத் திகழ்ந்தது. 1955-ல் அந்தக் கட்சிதான் தேசிய அரசியலைத் தீர்மானிக்கும் செல்வாக்கு மிக்கதாகத் தொடர்ந்தது.
அம்பேத்கரின் யோசனை என்ன?
மாநிலங்கள் மறுசீரமைப்பு ஆணையத்தின் அறிக்கையை முதலில் வாசித்தவர்களில் பி.ஆர்.அம்பேத்கரும் ஒருவர். பரிந்துரைகள் தொடர்பாக தனது கருத்து என்னவென்பதை, ஒரு கைப்பிரதி அறிக்கையாக 1955 டிசம்பரிலேயே வெளியிட்டார் அவர். உத்தர பிரதேசத்தைச் சுட்டிக்காட்டி பணிக்கர் தெரிவித்த கருத்தை ஏற்று, மாநிலங்களுக்கு இடையே மக்கள்தொகை மற்றும் செல்வாக்கு காரணமாக ஏற்படக்கூடிய ஏற்றத்தாழ்வுகள் நாட்டை மிகவும் அலைக்கழிக்கும் என்று அதில் அம்பேத்கர் குறிப்பிட்டார். இந்த ஏற்றத்தாழ்வை நீக்க, வழிமுறையைக் காண்பது மிகவும் அவசியம் என்றும் அதில் வலியுறுத்தினார்.
பணிக்கர் கூறியதைப் போல இரண்டாக அல்லாமல், உத்தர பிரதேசத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்றார் அம்பேத்கர். இந்தப் புதிய மாநிலங்களுக்கு மீரட், கான்பூர், அலாகாபாத் தலைநகரங்களாக இருக்கலாம் என்றார். அம்பேத்கரின் யோசனைக்கும் பதில் ஏதும் தராமல் அன்றைய மத்திய அரசு மௌனம் சாதித்தது.
மாயாவதியின் உரத்த குரல்
உத்தர பிரதேசத்தைப் பிரிக்க வேண்டும் என்று பணிக்கரும் அம்பேத்கரும் யோசனை தெரிவித்த 55 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே பாணியிலான புதிய யோசனை மாயாவதியால் தெரிவிக்கப்பட்டது. உத்தர பிரதேச முதல்வராக இருந்தபோது உத்தர பிரதேசத்தை நான்கு சிறிய மாநிலங்களாகப் பிரிக்கலாம் என்று சட்டமன்றத்தில் 2011இல் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார் மாயாவதி. பூர்வாஞ்சல், புந்தேல்கண்ட், அவத் பிரதேசம், பஸ்சிம் பிரதேசம் என்பவை அவர் பரிந்துரைத்த நான்கு மாநிலங்கள். அந்த யோசனையை சமாஜ்வாதி கட்சி மிகக் கடுமையாக எதிர்த்தது. அப்போது மத்தியில் ஆண்ட காங்கிரஸ் கட்சி, மாயாவதியின் யோசனையை பொருட்படுத்தவே இல்லை.
உத்தர பிரதேசத்தைப் பிரிக்க வேண்டும் என்று 1955இல் கே.எம்.பணிக்கர் தெரிவித்த யோசனை, இன்னமும் இறைஞ்சும் விதத்திலேயே தொடர்கிறது. ஆரம்பத்தில் இதற்கான வாதம் அரசியல் சார்ந்ததாக இருந்தது. ‘ஒரு பெரிய மாநிலம் நாட்டு நிர்வாகத்தில் தொடர்ந்து ஆதிக்கமும் செல்வாக்கும் செலுத்துகிறதே - இந்திய கூட்டாட்சித்தன்மையை இரண்டாம்பட்சமாக்கி விடுகிறதே!’ என்ற வகையில் அந்த யோசனை இருந்தது. மிகச் சமீப காலமாக இதே யோசனை, நல்ல நிர்வாகத்தை அளிக்க மாநிலத்தைப் பிரிப்பது அவசியம் என்ற வகையில் முன்வைக்கப்பட்டுவருகிறது.
உத்தர பிரதேசம் உண்மையிலேயே ஆட்சிசெய்ய முடியாத அளவுக்குப் பெரியது, மிகவும் பரந்து விரிந்திருப்பது, அதிகளவு மக்கள்தொகையைக் கொண்டது, ஒரேயொரு முதலமைச்சரால் ஒரேயொரு அரசைக் கொண்டு ஆள முடியாததாக இருக்கிறது.
வளர்ச்சிக்கான அறிகுறிகளில், இந்திய மாநிலங்களுக்கிடையே மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பது உத்தர பிரதேசம். சமூக அடிப்படையிலும் பொருளாதாரத்திலும் அது பின்தங்கிய மாநிலமாகவே இருக்கிறது. சமீபத்திய பத்தாண்டுகளில் இந்த மாநிலத்தின் அரசியல் கலாச்சாரம், பெரும்பான்மையினவியப் பெருமையைத் தூக்கிப் பிடிப்பதாலேயே பின்தங்குவது வெளிப்படை. இரண்டாவது காரணம், இந்த மாநிலம் தீவிரமான ஆணாதிக்கத்தன்மை கொண்டது. மூன்றாவது காரணம், நிச்சயமாக அதன் மக்கள்தொகை. இருபது கோடிக்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட அது, உலகின் ஐந்தாவது பெரிய நாட்டைவிட அதிக மக்கள் வாழும் மாநிலமாக இருக்கிறது.
ஆள முடியாத பிரதேசம்
உத்தர பிரதேச சட்டமன்றத்துக்குப் பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக 2017 பிப்ரவரியில் ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ நாளிதழில், ‘மாநிலத்தைப் பிரிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி கட்டுரை எழுதினேன். ஆங்கிலத்தில் உத்தர பிரதேசத்தை யு.பி. என்பார்கள். அந்த ‘யு’வுக்கு உத்தர் - வடக்கு என்று பொருள். இதுவே தவறானது. உத்தர பிரதேசத்துக்கும் மேலே வடக்கில் மேலும் சில இந்திய மாநிலங்கள் இருக்கின்றன. எனவே ஆங்கில எழுத்து ‘யு’வுக்கு அர்த்தம் - ஆள முடியாதது - ‘அன்கவர்னபிள்’ (Ungovernable) என்று குறிப்பிட்டிருந்தேன். ‘சட்டமன்றப் பொதுத் தேர்தலில் யார் வென்று ஆட்சிக்கு வந்தாலும், இந்த நிலைமை மாறப்போவதில்லை. உத்தர பிரதேசத்தின் நன்மைக்காகவாவது அதை மூன்று அல்லது நான்கு பகுதிகளாகப் பிரிக்க வேண்டும்’ என்று அப்போது வலியுறுத்தியிருந்தேன்.
இந்தியாவின் நன்மைக்காகவும், தன்னுடைய மாநில மக்களின் நன்மைக்காகவும், உத்தர பிரதேசம் மூன்றாக - ஏன் நான்காகக்கூட, தனித்தனியான - நன்கு வரையறுக்கப்பட்ட மாநிலங்களாக, ஒவ்வொன்றுக்கும் சொந்தமாக சட்டமன்றங்கள் - அமைச்சரவைகளுடன் பிரிக்கப்பட வேண்டும். இப்படி நடப்பதற்கு இப்போது சிறிதளவும் வாய்ப்பில்லை என்பதுதான் துயரம்.
நரேந்திர மோடிக்கும் அவருடைய கட்சிக்கும், நல்ல நிர்வாகத்தை அளிப்பதைவிட, ஆட்சியைப் பிடிப்பதும் - அதைத் தக்கவைப்பதும்தான் மிகவும் முக்கியம். நாடாளுமன்றத்துக்கு 2014, 2019களில் நடந்த பொதுத் தேர்தல்களில் உத்தர பிரதேசத்தில் பாஜக தலா 71, 62 தொகுதிகளைக் கைப்பற்றியது; இதனால்தான் பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்க வழி ஏற்பட்டது. பொருளாதாரத்தை நிர்வகிப்பதிலும், பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதிலும் தாங்கள் செய்த தவறுகள் 2024 மக்களவைப் பொதுத் தேர்தலின்போது மறக்கப்பட்டுவிடும், ராமருக்குக் கோயில் கட்டுவது, முஸ்லிம் மக்கள்தொகை பெருகுவது என்றெல்லாம் பேசினால் இந்துக்களுடைய பெரும்பான்மையான வாக்குகள் தங்கள் கூட்டணிக்குக் கிடைத்துவிடும், உத்தர பிரதேசத்தின் 80 தொகுதிகளில் பெரும்பான்மையைக் கைப்பற்றிவிடலாம் என்ற வகையில் பாஜக சிந்திக்கக்கூடும்.
எனவே உத்தர பிரதேசம் மேலும் பிரிக்கப்படாமல், அதே பாதிப்புகளுடன் தேக்க நிலையிலேயே தொடருவதே நடக்கும். நாட்டின் பிற மாநிலங்கள் மீது அதன் எதிர்மறை நிழல் நீண்ட காலத்துக்குப் படிந்துகொண்டே இருக்கும். ஒரே மனிதர் - ஒரே கட்சியின் அரசியல் ஆசைகளுக்காக ஒரு மாநிலத்தின் எதிர்காலம் - ஏன் நாட்டின் எதிர்காலமே இப்போது பிணையாக வைக்கப்பட்டிருக்கிறது!
தமிழில்: வ.ரங்காசாரி
1
பின்னூட்டம் (16)
Login / Create an account to add a comment / reply.
Amaipaidhiralvom 3 years ago
What I think in past few years is replicated in this article even though I'm not a politician but how can those things were not mesured in past congress regim.....?
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Abdul Kareem 3 years ago
ஆகச் சிறந்த படைப்பு. இவரது படைப்புகள் போன்று தொடர்ந்து வெளியிடவும். சிறிய மாநிலங்கள் நிர்வாக வசதிக்காக மட்டுமின்றி கூட்டாட்சி தத்துவத்திற்கும் வேட்டு வைக்கிறது என்பதை அழகாக சுட்டி காட்டியிருக்கிறார். தற்போதுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது போன்ற பிரச்சனைகளே பெரிதாக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அது மட்டும் இன்றி பெரும்பாலான நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கும் மற்ற மாநிலங்களுக்கு தலைவலியாக அமைகின்றன.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
janakiraman.V 3 years ago
அருமையான கட்டுரை விவாதிக்கவும், பகிரபடவேண்டிய கட்டுரை....இன்றய உ.பி.யின். அவலநிலையை சில விவரங்களை அனைத்து எழுதினால் நன்றாக இருந்திருக்கும்..... சிறந்த கட்டுரைகளை தோடர்ந்து வெளியிடும் *அருஞ்சொல்லுக்கு* வாழ்த்துகள்
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
குணசேகரன் 3 years ago
மூன்றுமுறை வாசித்துவிட்டேன் கட்டுரையை அருமையான கட்டுரை ஆனாலும் எனக்கு புரியாத ஒரே விசயம் ஏன் மத்திய அரசுக்கு இந்த நிர்வாக சீர்கேட்டை சரிசெய்ய தோன்றவில்லை வளர்ச்சியை பார்க்காமல் சுயநல அரசியலின் தொட்டிலாக இந்தியா மாற உத்திரபிரதேசமே முதல் காரணியாக தெரிகிறது.......மாற்றம் ஆளும் மனிதர்களிடமே வரவேண்டும்
Reply 7 0
Login / Create an account to add a comment / reply.
V NEELAKANDAN 3 years ago
உபி மாநிலப் பிரிப்பு என்பது மாநிலச் சீரமைப்பு காலம் தொட்டு பேராசிரியர் பணிக்கர், பிஆர் அம்பேத்கர் மற்றும் மாயாவதி வரை வேறுபட்ட ஆளுமைகள் இரண்டாக, மூன்றாக, நான்காகப் பிரிப்பதே நலம் பயக்கும் என வலியுறுத்தி வருவது ஒன்றே இக்கோரிக்கையின் நியாயத்தை வலியுறுத்தும். மேலும் வாஜ்பாய் காலத்தில் பிரிக்கப்பட்ட பகுதிகள் வளர்ச்சி அடைந்தன என்பதும் அதற்கு வலு சேர்க்கும். அந்த மாநிலத்தைப் பிரிக்கிறார்களோ இல்லையோ, பிற மாநிலங்களின் உரிமைகள் வலிமையாக வலிறுத்தப்படுவது ஒன்றே இன்று நிலைமை மேலும் மோசமாகாமல் காத்திட வல்லது.
Reply 3 0
Login / Create an account to add a comment / reply.
Abdul azeez 3 years ago
அப்படி உத்தர பிரதேசம் பிரிக்கப் படுவதற்கு அம்மாநில மக்களின் கருத்தும் அதன் மேல் முயற்சிகளும் எதுவும் கிடையாதா?.
Reply 2 0
Barani R 3 years ago
உறுதியாக உண்டு. அம் மக்களின் கருத்தை கேட்கும் பட்சத்தில் குறைந்தபட்சம் நான்காக பிரிப்பதற்கான ஒத்த கருத்துக்கள் உருவாகும். ஒரு சிலநூறு கிமீ. தொலைவில் வேறுபடும் மொழியும் ஊருக்கு ஊர் வேறுபடும் மதம் , இனம் முக்கியமாக சாதீய அடுக்கில் வேறுபட்டு நிற்பவர்களை வெறும் அதிகாரம் என்ற ஒற்றைச் சொல்லால் அடக்கி வைத்திருக்கும் ஆட்சியாளர்கள் மக்களின் கருத்தைக் கேட்பார்களா என்பது தான் கேள்வி.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
VIJAYAKUMAR 3 years ago
அற்புதமான கட்டுரை. மற்ற மாநிலங்களைவிட உத்திரப்பிரதேசத்தில் தலையெடுக்கும் முக்கியமான பிரச்சினைகளுக்கான அடிப்படைக்காரணத்தைத் தொட்டுக்கட்டியிருக்கிறார் ஆசிரியர். இவற்றுடன் பொதுமக்கள் - காவல்துறை, மருத்துவமனை, அங்கன்வாடி, பள்ளிக்கூட விகிதாச்சாரம், மொழிப்பன்மைத்துவம் என் எந்த வகையில் பார்த்தாலும் உத்திரப்பிரதேசப் பிரிப்பு அது அந்நில மக்களுக்கு நன்மை பயப்பதாகவே அமையும். மிக முக்கியமாக தேசிய அரசியலிலும் கூட்டாட்சித்தத்துவத்திலும் அது ஏற்படுத்தும் தாக்கம் குறையும்; பெரும்பான்மைவாதம் மட்டுப்படும். சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாட்டைப் பிரிக்கவேண்டும் என சலசலப்புகள் எழுந்தபோது உத்திரப்பிரதேச நிலையைக் குறிப்பிட்டு - இத்தகைய அரசியல் தெளிவுடன் இல்லையென்றாலும் - அங்கிருந்து துவங்கவேண்டும் என வாதாடினேன். இந்திய ஒன்றிய உருவாக்கத்தின் பல்வேறு கட்டங்களிலும் சுதந்திரத்திற்குப் பின்னும் இத்தகைய வாதங்கள் இருந்தததும் இருப்பதும் மகிழ்வளிக்கிறது. பணிக்கரின் மதி நின்றொளிர்கிறது.
Reply 7 0
Login / Create an account to add a comment / reply.
Dhamodharan 3 years ago
Good one..but last two paragraphs divert the intent of the article..
Reply 0 0
K Chitra 3 years ago
Ni divertion at all. That is the intention of this article. And sadly that is true also
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Branding Kumar 3 years ago
உங்கள் தலைப்பு என்னவோ மிகவும் பந்தாவாக உள்ளது. ஆனால் உள்ளடக்கத்தில் ஒரு சாரமும் இல்லை. வெறுமனே உத்தரப்பிரதேசம் ஆள முடியாத பிரதேசம் என்று சொல்லும் நீங்கள், எப்படி அது ஆள முடியாத பிரதேசமாக உங்களால் கணிக்கப்பட்டது என்று எந்தவித ஆதாரத்தையும் அளிக்கவில்லை. இது ஒரு பொழுதுபோக்கு மோடி எதிர்ப்பு கட்டுரை என்பதைத்தவிர வேறு ஒன்றும் சாராம்சம் இல்லை இதில்.
Reply 6 11
குணசேகரன் 3 years ago
இன்றைய மருத்துவ பேரிடரை அம்மாநில அரசு கையாண்ட விதத்தில் நீங்க அறிந்துகொள்ளலாமே சார் ஏன் ஆள முடியாத தேசம் என்பதை
Reply 5 0
K Chitra 3 years ago
இது எவ்வளவு அழகாக ஆளப் படுகிறது என்பதை பார்த்துமா இந்த கேள்வி 🤣
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Ganeshram Palanisamy 3 years ago
நான்காக பிரிக்கமுடியாவிட்டால், உத்தர்காண்ட் போல் ஒரு பகுதியையும் மட்டும் இப்போதைக்கு பிரித்துவிடலாம்.
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.
Vivek 3 years ago
There are two glaring problems with your thesis 1) the American example , just because every state gets 2 senate votes the small states consortium gets all the benefits . Like California has a population equal to combined population of 5-7 small states and this is the exact opposite problem of Uttar Pradesh . 2) splitting Uttar Pradesh seems reasonable at a logical level , but given its caste politics of having 20% Brahmins ans 20% Muslims it will create new problems . Like what if Muslims want their own state , won’t this be a precursor to Their own country? What if Brahmins wants the same for them ? Where would all these lead to? And how about states with 20 seats like Kerala compare to maharastra and Bengal who have 40+ seats.
Reply 3 1
Login / Create an account to add a comment / reply.
M. Balasubramaniam 3 years ago
ராமச்சந்திர குஹாவின் மிக முக்கியமான கட்டுரை. வாஜ்பேயி காலத்தில், பிரிக்கப்பட்ட உத்திராக்கண்ட், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் போன்ற பின் தங்கிய பகுதிகள், தன்னாட்சி பெற்ற பின்பு, வேகமான பொருளாதார வளர்ச்சியையும், சமூக நல மேம்பாட்டையும் அடைந்துள்ளன. உத்திரப் பிரதேசம், பீஹார் மாநிலங்கள், சிறு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டால், அங்கே நிர்வாகம் மேம்படும். சமூகப் பொருளாதார முன்னேற்றமும் ஏற்பட்டு, இந்தியாவின் சீரான முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்.
Reply 14 0
Login / Create an account to add a comment / reply.