கட்டுரை, கலை, கலாச்சாரம், ஆளுமைகள் 4 நிமிட வாசிப்பு

டி.எம்.கிருஷ்ணாவை நாம் ஏன் கொண்டாட வேண்டும்?

ராஜன் குறை கிருஷ்ணன்
24 Mar 2024, 5:00 am
2

றுபது ஆண்டுகளுக்கு முன்னால் ‘பாரிசுக்குப் போ!’ என்ற நாவலை எழுதினார் ஜெயகாந்தன். அதன் முக்கிய இழை என்னவென்றால் நவீனம் என்றால் மேற்கத்திய வாழ்க்கை முறை என்பதல்ல; ஒவ்வொரு மரபும் அதன் போக்கிலேயே நவீனமடைய வேண்டும் என்பதுதான். ஒரு காலகட்டத்தின் விழுமியங்கள் பெற்றுத்தரும் பழக்க வழக்கங்கள், விதிமுறைகள் மரபாக இறுக்கமடையும்போது, மறுபரிசீலனை என்ற விழுமியமே அந்த மரபிற்குள்ளிருந்து புதியவற்றை, நவீனத்தை உருவாக்க வேண்டும். 

இந்தக் கருத்தை வலியுறுத்த ஜெயகாந்தன் ‘பாரிசுக்குப் போ’ நாவலில் கர்நாடக சங்கீதத்தை உதாரணமாக எடுத்துக்கொண்டார். அந்த நாவலின் கதாநாயகன் சாரங்கன் ஒரு சாஸ்திரீய கர்நாடக இசைக் கலைஞரின் மகன். சிறு வயதில் கல்வி கற்க ஐரோப்பாவிற்குச் செல்லும் அவன், மேற்கத்திய இசை பயின்று பாரிசில் இரவு நேர விடுதிகளில் ஜாஸ் இசை வாசிப்பவனாக வாழ்கிறான். தனிப்பட்ட சில பிரச்சினைகளால் இந்தியாவிற்கு, தன் குடும்பத்திற்கு திரும்பவரும் அவனுக்கு கர்நாடக சங்கீகத்தை நவீனப்படுத்த வேண்டும் என்ற இலட்சியம் தோன்றுகிறது. 

ஜெயகாந்தன் மரபார்ந்த சங்கீதத்தை உருவகமாக வைத்து விழுமியங்கள், மரபு, நவீனம் ஆகிய மூன்றும் வாழ்வியலில் எப்படியெல்லாம் செயல்படுகின்றன என்று பரிசீலிக்கிறார். நவீனம் என்பது எப்படி வாழ்வியலில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும், அது எப்படிக் கலைகளிலும் விகசிக்க வேண்டும் என்றெல்லாம் சிந்திக்கும்படியாக அந்த நாவல் அமைந்துள்ளது எனலாம். ஜெயகாந்தனின் பல படைப்புகள் போல மரபிற்கும், மாற்றத்திற்குமான கூரிய முரண்களை அந்த நாவலும் பல தளங்களில் விவாதிக்கிறது. 

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

சாரங்கனின் கர்நாடக சங்கீதத்தை நவீனப்படுத்தும் முயற்சிக்கு அவன் தந்தையிடமிருந்தோ சென்னை சூழலிலோ ஆதரவு கிடைக்காத நிலையில், வேறு பல முரண்பாடுகளும் சேர்ந்துகொள்ள சாரங்கன் பாரிசுக்கே திரும்பிச் செல்ல முடிவெடுக்கிறான். ஆனால், அவன் கட்டுரைகளை எல்லாம் வாசித்திருந்த ஒரு கல்கத்தா வாழ் தமிழர், அவனை அங்கே அவர் நடத்தும் ரவீந்திர சங்கீத பள்ளிக்குக் கூட்டிச் செல்கிறார். மரபிலிருந்து நவீனம் பிறப்பதற்கான முன்மாதிரியாக ரவீந்தர சங்கீதத்தை இந்த நாவல் சுட்டுவதாகக் கொள்ளலாம். நாவலில் வேறொரு இடத்திலும் தாகூரின் பிம்பம் சிலாகிக்கப்படுகிறது. 

வேறு வார்த்தைகளில் சொன்னால் பல்வேறு நிலப்பகுதிகளில் வாழும் மனிதர்களிடையே வித்தியாசமான பழக்கங்கள், நடைமுறைகள் தோன்றுகின்றன. இந்த வித்தியாசம் என்பது இயற்கையின் பன்மையைப் போன்றதே. நாவலின் முதல் வரியிலேயே “நாடுகள் என்னும் நந்தவனங்கள்” என்று கூறுகிறார் ஜெயகாந்தன். இந்த வித்தியாசங்கள் வழமைகளாக இறுகி அடையாளங்களாக மாறுகின்றன. நவீனம் என்பது அந்த அடையாளங்களிலிருந்து மீண்டும் வித்தியாசங்கள் முகிழ்வதுதான் எனலாம். அல்லது நவீனம் என்னும் களத்தில் அடையாளங்களுடன் வித்தியாசங்கள் முரணுற்று மோதுகின்றன எனலாம்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

சங்க இலக்கிய இசைக் கச்சேரி

பெருமாள்முருகன் 22 Jul 2023

நான் டி.எம்.கிருஷ்ணாவின் கர்நாடக இசையுலகம் குறித்த விமர்சங்களை முதலில் அறிந்தபோது எனக்கு ஜெயகாந்தனின் சாரங்கன் கதாபாத்திரம்தான் நினைவுக்கு வந்தது. ஆனால் சாரங்கனுக்கும், கிருஷ்ணாவிற்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உள்ளது. கிருஷ்ணா இசையில் வடிவத்தை நவீனப்படுத்த வேண்டும் என்றோ, மெல்லிசையாக்க வேண்டும் என்றோ அல்லது ஃபியூஷன் என்று சொல்வதுபோல பிற இசைமரபுகளுடன் சேர்ந்து புது வடிவங்கள் தோன்ற வேண்டும் என்பதற்கோ முக்கியத்துவம் கொடுப்பதில்லை.  

மாறாக அவர் கர்நாடக இசையின் வடிவம் அதனளவிலேயே பல்வேறு சமூக பயன்பாடுகளுக்கும் உரித்தாக முடியும் என்று நினைக்கிறார். கர்நாடக சங்கீதம் என்பதற்குச் சாராம்சமாக இதுதான் பயன்பாடு என்று அவர் நினைப்பதில்லை. இசையின் சாராம்சம் இசைதான் என்பதால் எந்தச் சூழ்நிலையில், எந்த மரபுகளை அது முன்வைத்தாலும் இசை என்ற அளவில் அது ஒருவரை நெகிழச் செய்ய முடியும். 

கிரிகோரியன் சேண்ட்டோ, சூஃபி கவாலியோ, தியாகையர் கிருதியோ அந்தந்த வழிபாட்டு, சடங்கு, கலாச்சார சூழல்களைக் கடந்து யார் உள்ளத்தையும் பண்படுத்த முடியும். எனவே, கர்நாடக இசை வடிவம் என்பது ஒரு ஆற்றல் மட்டுமே. அதன் பயன்பாட்டை எந்த ஒரு குறுகிய பண்பாட்டுச் சூழலிலும் சிறைபிடிக்க வேண்டியதில்லை என்பதே கிருஷ்ணாவின் செய்தி; அதனை விரிவாக்குவதே அவர் இயக்கம். 

ஜாதிய, நிறுவன அடையாளங்கள்  

சமகால தமிழ்ச் சமூகம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவானபோது கர்நாடக இசை, பரத நாட்டியம் இரண்டும் பிராமண சமூகத்தினரின் கலாச்சார அடையாளங்களாக மாற்றப்பட்டன. சென்னையில் உருவான மியூசிக் அகாடமி, கலாக்ஷேத்ரா உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தக் கலாசார அடையாளப்படுத்தலைப் பல வகைகளில் உறுதிசெய்தன. இந்தக் கலை வடிவங்களைப் பிராமண சமூகம் தானாகவே உருவாக்கவில்லை. அவை தமிழ் வெகுமக்கள் பண்பாடுகளில்தான் வேர்கொண்டு இருந்தன.  

உலகெங்குமே நவீன சமூகங்கள் உருவாக்கத்தின் அங்கமாகத்தான் இந்த மரபுசார்ந்த அடையாளங்களின் உருவாக்கமும் அமைந்தன. இதனை ‘இன்வென்ஷன் ஆஃப் டிரெடிஷன்’ - மரபுகளைக் கண்டுபிடித்தல் என்பார்கள். இப்படி நடக்கும்போது சில மரபுகளை ஆதிக்க சக்திகள் தங்கள் அடையாளமாக சுவீகரித்துக்கொள்வது என்பது சமூக இயக்கத்தின் ஒரு பகுதியாகவே விளங்குகிறது. கலை வடிவங்களின் பிராமணர்கள் சுவீகரிப்பு என்பது மிக எளிதாக கடக்கக்கூடிய வரலாற்றுக் காலகட்டம்தான். 

இதில் உருவாகக்கூடிய முரண்பாடு என்னவென்றால் கலாச்சார, பண்பாட்டு அரசியலை தவறாகப் புரிந்துகொண்டு வடிவங்களையும், அதிக்க சமூக அடையாளங்களையும் முற்போக்காளர்களே இணைத்துவிடுவதுதான். கிளாஸிகல் என்பதோ, சாஸ்தீரிய, மரபுசார் வடிவம் என்பதோ ஆதிக்கக் குழுக்களின் அடையாளமாக இருக்க வேண்டிய தேவையே இல்லை. தமிழ் பண்பாட்டுப் பரப்பில் எத்தனையோ இசை, நடன வடிவங்கள் இருக்கலாம். அவை எல்லாவற்றையுமே யாரும் பயன்படுத்தலாம், சுவீகரித்துக்கொள்ளலாம். கிளாஸிகல் என்பது ஆதிக்க வடிவம், ஃபோல்க் என்பது வெகுமக்கள் வடிவம் என்ற பிரிவினையை உருவாக்குவது இன்றைய சூழ்நிலையில் தேவையற்றது. பண்பாட்டிற்குப் பாத்தி கட்ட வேண்டியதில்லை. 

இதையும் வாசியுங்கள்... 25 நிமிட வாசிப்பு

ஹார்மோனியத்தின் கதை

பழ.அதியமான் 31 Oct 2021

உதாரணமாக, பல ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சமூக ஊடக விவாதம் ஒன்றை நினைவுகூர விரும்புகிறேன். ஒரு பள்ளி ஆசிரியர் கிராமப்புற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு செஸ் விளையாட்டு பயிற்சி கொடுத்து அவர்களைப் போட்டிகளுக்கு அழைத்துச் சென்று வெற்றிபெறச் செய்தார். இந்தச் செய்தியை ஒருவர் பகிர்ந்துபோது மற்றொருவர் செஸ் என்பது மேட்டுக்குடியினர் விளையாட்டு, பண்பாடு; அதனை ஏன் உழைக்கும் வர்க்க பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று கேள்வியை எழுப்பினார். இந்தக் கேள்வி என்னை அதிர்ச்சியடையச் செய்தது.

பண்பாட்டின், கலாச்சாரத்தின் எந்த வடிவமும், வெளிப்பாடும் எந்தச் சமூகப் பிரிவிலும், அடையாளத்திலும், வர்க்கத்திலும் தேங்க வேண்டியதில்லை. எல்லா வெளிப்பாடுகளும், வடிவங்களும் அனைவருக்கும் உரியவைதான். மானுடத்தின் முதிர்ச்சி என்பது உலகப் பொதுப் பன்மையாகத்தான் இருக்க வேண்டுமே தவிர பாத்தி கட்டி பிரிப்பதாக இருக்கக் கூடாது. 

இந்த விரிவான பின்னணியில்தான் நாம் கர்நாடக இசை என்பது பிராமண சமூகத்துடன் பிணைக்கப்பட்ட சூழலை, நிறுவன சூழலை மாற்றும் முயற்சியை புரிந்துகொள்ள வேண்டும். டி.எம்.கிருஷ்ணாவின் சிறப்பான வரலாற்றுப் பங்களிப்பு இந்த முயற்சியை முன்னெடுத்ததே. 

எல்லைகளை தகர்த்தலும், விரிவாக்கலும் 

முதலில் கர்நாடக இசையின் நிகழ்விடம் எது என்பதை டி.எம்.கிருஷ்ணா மாற்றினார். ஆல்காட் குப்பத்தில் இசை விழா நடத்தினார். ரயில்களில்கூட மக்களுக்கிடையே அவர் நண்பர்களுடன் பாடிக்கொண்டு செல்லும் காணொலியைக் கண்டுள்ளேன். யார் கர்நாடக சங்கீதம் பயில வேண்டும், பயில இயலும் என்பதிலுள்ள தடைகளை அகற்ற முயற்சித்தார்.

அவர் தகர்த்த மற்றொரு முக்கிய எல்லை எதைப் பாடுவது என்பது. சமகால அக்கறையை, விமர்சனத்தைப் பாடலாம் என்று நிறுவினார். எண்ணூர் சூழலியல் பிரச்சினை குறித்து நித்யானந்த் ஜெயராமன் உள்ளிட்டோருடன் இணைந்து அவர் இசைத்த ‘புறம்போக்கு உனக்கு இல்ல’ என்ற பாடல் அற்புதமான புதிய முயற்சியாகும். இசைக்கென்று ஒரு ஆற்றல் இருந்தால் அந்த ஆற்றல் முற்போக்குச் சிந்தனைகளை, சமூக அக்கறையைப் பேச முடியாதா என்ன? 

அதனை விரிவாக்கவே அவர் தமிழின் முன்னணி எழுத்தாளர், இலக்கிய சாதனையாளர் பெருமாள் முருகன் பாடல்களை பாடினார். பெரியாரைக் குறித்து பெருமாள் முருகன் எழுதி டி.எம்.கிருஷ்ணா பாடிய ‘சிந்திக்கச் சொன்னவர் பெரியார்’ என்ற பாடல் ஆசிரியர் வீரமணியால் மனப்பூர்வமாக பாராட்டப்பட்டது. இதுபோன்ற செயல்பாடுகள் காரணமாகவே பிராமணிய பழமையாளர்கள் அவரை வெறுக்கிறார்கள். மியூசிக் அகாடமி அவர் இசை ஆற்றலை அங்கீகரிப்பதை எதிர்க்கிறார்கள்.  

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

சிந்திக்கச் சொன்னவர் பெரியார்

பெருமாள்முருகன் 01 Apr 2023

இசை வடிவம் என்ற மானுடப் பொதுச் சொத்தை ஏன் ஒரு சில கடவுளர்களுக்கு மட்டும் உரித்தாக்க வேண்டும்? எல்லா மத கடவுளர்களைப் பாடவும் அதே வடிவம் பயன்படலாம்தானே? அதனால் டி.எம்.கிருஷ்ணா இஸ்லாமிய, கிறிஸ்துவ பாடல்களையும் கர்நாடக இசையில் பாடினார். அதனால் பிராமண, இந்துத்துவ சக்திகளிடமிருந்து கடும் எதிர்ப்பை ஈட்டினார். 

இசை என்று மட்டுமில்லாது, பிராமண சமூகத்தின் தனித்தொதுங்கும் ஜாதிய மனப்பான்மையை பல்வேறு தளங்களிலும் அவர் விமர்சித்தார். சமூக ஏற்றத்தாழ்வு கற்பித்தலை, ஆண்-பெண் ஏற்றத்தாழ்வு கற்பித்தலை விமர்சித்தார். ஒரு முற்போக்களராக அவர் சிந்தனைகளை எழுதினார். கர்நாடக இசையின் தாளக்கருவிகளில் பயன்படுத்தப்படும் மாட்டுத்தோலை, ஆட்டுத்தோலை குறித்து கவனம் ஈர்த்தார். மிருதங்கம் போன்ற கருவிகளை யார் செய்தார்கள் என்பதை ஆராய்ந்து ‘செபஸ்டியன் அண்ட் சன்ஸ்’ என்ற மிகச் சிறந்த மானுடவியல் பிரதியினை வெளியிட்டார். பசுவின் தோல் என்ற வடிவில் கர்நாடக இசைக்குள் பல்வேறு சமூகப் பிரிவுகள் வந்துவிடுகின்றன அல்லவா? எந்தச் சமூகம்தான் தனித்தியங்க முடியும்? எந்தப் புனிதத்தை ஒட்டுமொத்த சமூகத்திலிருந்து பிரிக்க முடியும்? 

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

மாட்டில் ஒலிக்கும் தாளம்

டி.எம்.கிருஷ்ணா 23 Jan 2022

டி.எம்.கிருஷ்ணாவின் அரும்பணிகளை பட்டியலிட்டால் கட்டுரை நீண்டுவிடும். நீங்கள் அவர் விரிவாக்கும் எல்லைகளைப் புரிந்துகொள்ள அசோகா பல்கலைகழகத்துடன் இணைந்து அவர் அசோகர் கல்வெட்டு வரிகளைப் பாடியுள்ளதைக் கேட்டுப் பாருங்கள். ‘எடிக்ட் பிராஜெக்ட்’ (The Edict Project | TM Krishna) என்ற பெயரில் அது வலைத்தளத்தில் கிடைக்கிறது. 

மானுட தன்னுணர்வு என்பது சுய விமர்சனமும், குறுகிய பண்பாட்டு எல்லைகளை விரிவாக்குவதும்தான். டி.எம்.கிருஷ்ணாவின் கலை, அறிவியக்கச் செயல்பாடுகள் மானுட விகசிப்பின் அங்கமே என்பதை உணரும்போது ஒரு சில நிறுவனங்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாடே அவரைக் கொண்டாடும். கொண்டாட வேண்டும் என்பதே மானுட விழுமியங்களில் அக்கறை கொண்டோரின் கூற்றாக இருக்க முடியும். 

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

சங்க இலக்கிய இசைக் கச்சேரி
அப்துல் காதிரும் தியாகராய கீர்த்தனைகளும்
ஹார்மோனியத்தின் கதை
தவிலுக்கு ஒரு சரியாசனம் தந்த ஷண்முகசுந்தரம் பிள்ளை
சிந்திக்கச் சொன்னவர் பெரியார்
மாட்டில் ஒலிக்கும் தாளம்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ராஜன் குறை கிருஷ்ணன்

ராஜன்குறை கிருஷ்ணன், ஆய்வறிஞர். பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி.


6

1

பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

இ.பு.ஞானப்பிரகாசன்   21 days ago

மிகச் சிறப்பான படைப்பு! கட்டுரையின் தொடக்க வரிகளைப் பார்த்து, கருநாடக இசை என்பது பார்ப்பனியக் கலை வடிவம் என்றும் அது முற்போக்குத் திசை நோக்கி நகர டி.எம்.கிருட்டிணா பாடுபடுகிறார் என்றும் பாராட்டுகிற மற்றுமொரு பார்ப்பனியத் துதியாக இது அமைந்து விடுமோ என்று அஞ்சியபடி படித்தேன். ஆனால் பிந்தைய பத்திகளில் கருநாடக இசையின் தோற்றுவாய் பற்றியும் தெள்ளத் தெளிவாக அறைந்தது இதை வெறும் முற்போக்குச் சிந்தனையாளர் ஒருவரைப் பற்றிய பாராட்டுக் கட்டுரை என்கிற வட்டத்தைத் தாண்டி முக்கியமான வரலாற்றுப் பண்பாட்டுக் கட்டுரையாக மாற்றியுள்ளது. மிக்க நன்றி! கருநாடக இசை, பரதநாட்டியம் போன்றவை எங்களுக்கு மட்டுமே சொந்தம் எனப் பார்ப்பனர்கள் சொந்தம் கொண்டாடி அதை உருவாக்கிய தமிழ் மக்களை அந்தக் கலைகள் கற்க விடாமல் ஒருபுறம் ஒதுக்கி வைக்க மறுபுறம் அது பார்ப்பனியக் கலை எனத் தமிழ் மக்களும் ஒதுக்கி வைக்கிறார்கள். இரண்டுமே பொறுத்துக் கொள்ள முடியாதவை! அதை மிகச் சரியாக எடுத்துக்காட்டிய வகையில் இந்தக் கட்டுரை மிக மிக முக்கியத்தன்மை பெறுகிறது! முற்போக்குச் சிந்தனையாளர்களும் மனிதநேயர்களும் எதிர்க்க வேண்டியது பார்ப்பனியம் எனும் தவறான கொள்கையைத்தானே தவிர பார்ப்பனர்கள் எனும் தனிமனிதர்களை இல்லை என்பதை டி.எம்.கிருட்டிணா போன்ற ஓரிருவர் மீண்டும் மீண்டும் நமக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கிறார்கள். கலைக்கும் மனிதநேயத்துக்கும் எல்லை என்பது கிடையாது. எல்லைகள் தகர்த்து ஒலிக்கட்டும் டி.எம்.கிருட்டிணாவின் குரலும் புகழும்!

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

VIJAYAKUMAR   24 days ago

Good one

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்மதுப்பழக்கம்கவச்கர்த்தநாதபுரம்சம்பாரண் சத்தியாகிரகம்: இந்தியப் புரட்சியின் நூற்றஉணவுஅரசின் வருவாய்மனைவிமவுத் வாஷ்ஆட்சிபணிமனைகள்சமஸ் ஜெயமோகன்கொய்மலர்ப் பண்ணைகாந்தியர்அந்தரம்சூரியகாந்திஏபிபி - சி வோட்டர்கை நீட்டி அடிக்கலாமா?உரிமையியல்கலைஞர் கோட்டம்அமரத்துவம்யிம் ஹுன்-சுபிரபஞ்ச உடல்மின் கட்டணம்டர்பன் முருகன்கேரலின் ஆர். பெர்டோஸிஅயோத்தி பிரதேசம்பாஜக வெல்ல இன்னொரு காரணம்தலைச்சாயம்சம்ஸ்கிருதமயம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!