கட்டுரை, புத்தகங்கள் 10 நிமிட வாசிப்பு

மாட்டில் ஒலிக்கும் தாளம்

டி.எம்.கிருஷ்ணா
23 Jan 2022, 5:00 am
3

பாரமான இசைக் கலைஞர் மட்டுமல்லாது, தேர்ந்த ஓர் எழுத்தாளுமை டி.எம்.கிருஷ்ணா. இசைத் துறையில் நிலவும் சாதியப் பாகுபாட்டைத் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கிவரும் கிருஷ்ணாவினுடைய முக்கியமான நூல் செபாஸ்டியன் அண்டு சன்ஸ்’. ஆங்கிலத்தில் வெளியான இந்நூல் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போது அது, தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. கிருஷ்ணாவின் உணர்வுகள் ததும்பும் ஆங்கிலத்தைத் தமிழுக்கு அப்படியே கடத்தியிருக்கிறார் அரவிந்தன். இந்த ஆண்டின் முக்கியமான நூல்களில் ஒன்று என்று சொல்லத்தக்க அளவில் வெளியாகியிருக்கும் இந்நூலிலிருந்து, முக்கியமான ஒரு பகுதியை அருஞ்சொல்’ தன் வாசகர்களுக்கு இங்கே தருகிறது.  

 

சென்னையில் நான் அதுவரை சென்றிராத இடம் அது. அசல் தென்சென்னைக்காரனான எனக்கு வடசென்னையின் பகுதிகள் மிகவும் புதியதாக இருந்தன. சூசைநாதன் காட்டிய வழியில் சென்றேன். சிறிது நேரம் கழிந்ததும் நாங்கள் சந்தையொன்றின் நுழைவாயிலில் இருந்தோம்.

அன்று ஞாயிற்றுக்கிழமை காலை நேரம். நான் கார் ஓட்டிச் சென்ற சாலையின் ஓரங்களில் பிளைவுட் மேசைகளின் மேல் சிறிய கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. காலையில் சீக்கிரமே எழுந்து சந்தைக்கு வந்திருந்தவர்கள் மாட்டுக்கறி, போட்டி ஆகியவற்றைப் பேரம் பேசி வாங்கிச் சென்றார்கள். ரத்தத்தைச் சுட்டிக்காட்டிய சூசை அதை சாம்பாருக்குப் பயன்படுத்துவோம் என்றார். சாம்பார் என்பதை பிராமணர்களின் உணவு என்றே நினைத்துவந்த எனக்கு அது ஆச்சரியமாக இருந்தது. சாம்பார் என்றாலே சைவம்தான் என்று அதுவரை நினைத்திருந்தேன். குழம்பு என்று சொல்லியிருந்தால் அசைவம் நினைவுக்கு வந்திருக்கலாம். நான் அப்போதுதான் கடல் உணவுகளைச் சாப்பிட ஆரம்பித்திருந்தேன். அதில் ரத்தம் இல்லாமல் இருந்ததால் எளிதாகப் பழகிக்கொள்ள முடிந்தது.

“அதைப் பாத்தீங்களா?” என்று சூசை சுட்டிக்காட்டிய திசைநோக்கித் திரும்பினேன். தாறுமாறான தோற்றம் கொண்ட ஆட்டிறைச்சி அது. “அதுதான் போட்டி” என்றார் சூசை. அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு அவர் அது எவ்வளவு அற்புதமான பண்டம் என்பதை எனக்கு விளக்க முயன்றார். போட்டி என்பது ஆட்டின் குடல். அதில் மருத்துவப் பயன்கள் அதிகம் உண்டு என்றார் சூசை. அன்று எனக்கு ஏற்படவிருக்கும் அனுபவங்கள் குறித்த அச்சம் சட்டென்று என்னைக் கவ்வியது.

எனக்கு இடதுபுறம் இறைச்சிக்கூடம் இருந்தது. அதற்கு எதிரில் ஆடுகள் தங்கள் முறை வருவதற்காகக் காத்திருந்தன. ஒவ்வொரு ஆட்டுக்கும் ஆதார் எண்போல ஒரு எண் கொடுத்திருந்தார்கள். அந்த இறைச்சிக் கூடம் தமிழக அரசுக்குச் சொந்தமானது. தனிநபர்கள் கட்டணம் செலுத்தி அந்த இடத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த வர்த்தகத்தில் பெரும்பாலும் முஸ்லிம்களே இருப்பதாகவும் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் தலித்துக்கள் என்றும் சூசை தெரிவித்தார். காரைச் சற்று உட்புறமாக நிறுத்திவிட்டு உள்ளே நடந்தோம். வளைவில் வலது பக்கம் திரும்பினோம். அங்கே பசுக்களையும் எருமைகளையும் கொக்கிகளில் மாட்டித் தலைகீழாகத் தொங்கவிட்டிருந்தார்கள். அந்தச் சடலங்களின் தோல்கள் பாதியளவு உரித்தெடுக்கப்பட்டிருந்தன. வெட்டும் காட்சியை நான் பார்க்கத் தவறிவிட்டேன் என்றார் சூசை. “இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. டிமாண்ட் அதிகம். அதனால் எல்லாமே சீக்கிரம் ஆரம்பித்துவிடும்” என்றார்.

என்னைச் சுற்றிலும் ரத்தம் சிதறியிருந்ததை அப்போதுதான் பார்த்தேன். அப்போதுதான் அந்த வாசனை என்னை நிஜமாகவே தாக்கியது. அதை எப்படி வர்ணிப்பேன்? அது நாற்றம் அல்ல, சகிக்க முடியாதது அல்ல; அது என்னை அருவருப்படைய வைக்கவில்லை. ஆனால் அது என்னை முற்றிலுமாக ஆக்கிரமித்துக்கொண்டது. தாழ்வாக இருக்கும் அடர்த்தியான மேகத்தைப் போல அந்த வாசனையை உங்களால் தோலில் உணர முடியும்.

என்னைச் சுற்றிலும் இருப்பவர்கள் பனியனும் லுங்கியும் அணிந்திருந்தார்கள். அவர்களுடைய உடைகளிலும் உடல்

களிலும் ரத்தக் கறை. அவர்கள் அங்கே பேசிச் சிரித்தபடி, பேரம் பேசியபடி இயல்பாக நடமாடிக்கொண்டிருந்தார்கள். ரத்தக் கறை படிந்த கையில் டீ கோப்பையை ஏந்தி டீயைச் சுவைத்தபடி இருந்தார்கள். இது அவர்களுடைய பணியிடம். இது அவர்களுடைய அன்றாடம். இங்கே எதுவுமே இயல்புக்கு மாறானது அல்ல. விலங்குகளைக் கொல்வதுதான் அவர்களுடைய வாழ்வாதாரம். ஒப்புக்கொள்ளப்பட்டதும் தேவையானதுமான யதார்த்தம் இது. அவர்கள் அனைவரும் சுறுசுறுப்பாக வேலை செய்துகொண்டிருப்பதைக் கண்ட நான் இயல்பு நிலைக்கு வரத் தொடங்கினேன்.

அங்கே காளி என்பவர்தான் எங்களுக்கான தொடர்புக் கண்ணி. அறிமுகங்கள், ‘இவருக்கு இங்கே என்ன வேலை’ என்பது போன்ற விசாரணைகள், விளக்கங்கள் ஆகியவற்றுக்குப் பிறகு, ஏன் காமிரா கொண்டுவரவில்லை என்று கேட்டார் காளி. அண்மையில்தான் பாம்பே உயர் நீதிமன்றம் பசுவைக் கொல்வதற்கு மகாராஷ்டிர மாநில அரசு பிறப்பித்திருந்த தடையை அங்கீகரித்திருந்தது. 2014ஆம் ஆண்டில் மத்தியில் நரேந்திர மோடியின் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி அமைந்த பிறகு மாட்டுக்கறி வியாபாரத்தில் ஈடுபடும் பல முஸ்லிம்கள் மீதும் தலித்துகள் மீதும் தாக்குதல்கள் நடந்துவருகின்றன. பசுவைக் கொல்வது என்பது மாநில அரசின் கீழ் வரும் விவகாரம். தமிழகத்தில் பசுவை இறைச்சிக்காகக் கொல்வதற்குத் தடை இல்லை. கொல்வது சட்டப்பூர்வமானதுதான். ஆனாலும், காமிராவை எடுத்துவந்தால் அவர்கள் சங்கடப்படுவார்களோ என்று நினைத்திருந்தேன். ஆனால், அவர்கள் யாருமே அதுபற்றிக் கவலையே படவில்லை.

இறைச்சிக் கூடத்தின் கழிவுகளைத் தாண்டிச் சென்றோம். விலங்குகளின் உடலிலிருந்து வெளியேறும் திரவம் தண்ணீரோடு கலந்து அதற்கான கால்வாய் வழியே போய்க்கொண்டிருந்தது. சிறிய குவியல் போன்றதொரு பொருளைச் சுட்டிக்காட்டிய காளி, “இதைப் பாருங்கள்” என்றார். சாக்கு மூட்டைபோல இருந்த அது உண்மையில் எருமை மாட்டின் தோல். அதைத் தொட்டுப்பார்க்கச் சொன்னார் சூசை. “எப்படி இருக்கிறது?” என்று கேட்டார். அது எப்படி இருக்க வேண்டும் அல்லது இருக்கும் என்பது பற்றி எனக்கு எந்தக் கற்பனையும் இல்லை. அந்தத் தோல் மயிர் அடர்ந்ததாகவும் பிசுபிசுப்பாகவும் 

இருந்தது. இன்னொரு தோலைத் தொட்டுப்பார்க்கச் சொன்னார் சூசை. நான் அவர் சொன்னபடி செய்தேன். காளி என்னைச் சற்று வியப்போடும் எரிச்சலோடும் பார்த்துக்கொண்டிருந்தார். நான் அங்கே இருப்பது வியாபாரத்தைத் தாமதமாக்கிக் கொண்டிருந்தது. “இதை எடுத்துக்கொள்கிறோம்” என்றார் சூசை. இந்தத் தோல் அதைக் காட்டிலும் தடிமனாக இருப்பதால் இது நமக்குத் தோதாக இருக்கும் என்று விளக்கினார்.

மிருதங்கத்தின் தொப்பிப் பகுதி மூன்று அடுக்குகள் கொண்டது. எருமைத் தோல் இரண்டு அடுக்குகளிலும் ஆட்டுத் தோல் மூன்றாவது அடுக்கிலும் பயன்படுத்தப்படுகின்றன. அந்தத் தோலுக்கு 1,500 ரூபாய் விலை சொன்னார்கள். சூசை பேரம் பேசி 1,300 ரூபாய்க்கு வாங்கினார். அந்தத் தோலை வெளியில் கொண்டுவர வேண்டும். காளியின் உதவியோடு அதை நாங்கள் மூன்று சக்கர வண்டியில் ஏற்றித் தள்ளிக்கொண்டு வந்தோம். “இங்கே எதுவும் வீணாவதில்லை. ஆடு, மாடுகளின் ஒவ்வொரு பகுதியும் சாப்பாடு, தோல், மருந்து என்று ஏதாவது ஒரு வகையில் பயன்படும்” என்றார் சூசை.

மிருதங்கம் செய்வதற்காக எந்த விலங்கும் கொல்லப்படுவதில்லை என்று மிருதங்கக் கலைஞர்கள் அடிக்கடி கூறுவதுண்டு. 2003இல் ‘அவுட்லுக்’ இதழுக்காக எஸ்.ஆனந்துக்கு அளித்த நேர்காணலில் உமையாள்புரம் சிவராமன் இவ்வாறு கூறுகிறார்: “மிருதங்கத்திற்காகப் பசுக்களைக் கொல்வதில்லை. வேறு காரணங்களுக்காகக் கொல்லப்படும் பசுக்களின் தோலை நாங்கள் பயன்படுத்திக்கொள்கிறோம்.” அதே கட்டுரையில் ராஜமாணிக்கம் இதற்குப் பதிலளித்திருந்தார்: “இறைச்சிக் கூடத்தில் நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை இவர்கள் நேரில் வந்து பார்த்திருக்கிறார்களா? நாங்கள் பசுக்களைச் சோதித்துப்பார்ப்போம். நல்ல, காம வேட்கை கொண்ட, மிருதுவான தோல் கொண்ட பசுவாகத் தேர்ந்தெடுப்போம். அந்தப் பசு இரண்டு கன்றுகளையாவது ஈன்றிருக்க வேண்டும். அதேசமயம், வயதான பசுவாகவும் இருக்கக் கூடாது.” இது எருமை, ஆடு ஆகியவற்றுக்கும் பொருந்தும். 

பெண் விலங்கின் தோலைத்தான் மிருதங்கத்திற்குப் பயன்படுத்துகிறார்கள். இரண்டு முறையாவது ஈன்ற பசுவின் தோலை நன்றாக இழுக்க முடியும். சுத்த மத்தளம் என்னும் கருவிக்கு எருதின் தோல் பயன்படுத்தப்படுகிறது. ஏனென்றால் அதற்குக் கெட்டியான, இறுக்கமான சவ்வு தேவைப்படுகிறது.

சூசைநாதனுக்குத் தோல் தேவைப்படும்போது காளி அதற்காகவே ஒரு எருமையைத் தேர்ந்தெடுக்கிறார். மிருதங்கத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் மாட்டின் தோலை உரிக்கும்போது தோலில் கத்தி அதிகம் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கத்தி பட்ட தழும்புகளைக் ‘கத்தி அடி’ என்கிறார்கள்.

ஆக, மிருதங்கத்திற்குத் தேவையான தோலை, அதற்காகவே தேர்ந்தெடுக்கப்பட்ட பசு அல்லது எருமையிடமிருந்து எடுக்கிறார்கள். மாட்டின் தோலைக் குறிப்பிட்ட முறையில் உரித்து எடுக்கிறார்கள்.

இயற்கையாக மரணம் அடையும் விலங்கின் தோல்தான் பயன்படுத்தப்படுகிறது என்று சில கலைஞர்கள் சொல்வது உண்மை அல்ல. அப்படிப்பட்ட தோல் வேலைக்கு ஆகாது என்பதை ஜான் பிரிட்டோ விளக்குகிறார். “விலங்கைக் கொல்லும்போது கழுத்தை வெட்டிச் சீவிவிடுவார்கள். இதனால் ரத்தம் பூராவும் வெளியேறி, தோலுக்கு அடியில் இருக்கும் நரம்புகளில் ரத்தம் வற்றிப்போகும். இதனால் தோலுக்கு இழுவைத்தன்மை உண்டாகும். இயற்கையாகச் சாகும் விலங்கின் ரத்தம் உறைந்துபோகும். தோல் கெட்டி அட்டைபோல ஆகிவிடும். அதைத் தண்ணீரில் முக்கி இழுக்க முயன்றால் உடைந்துவிடும்” என்கிறார். வியாபாரிகள் ஏற்கெனவே செத்துப்போன விலங்கின் தோலின் மீது உப்பைத் தடவி அது கெட்டுப்போகாமல் வைத்திருப்பார்கள். மிருதங்கம் செய்பவர்களை ஏமாற்றி இதை விற்றுவிடுவதும் உண்டு. இந்தத் தந்திரத்தை முறியடிக்க மிருதங்கம் செய்பவர்கள் தோலை நக்கிப் பார்ப்பார்கள். உப்புக் கரித்தால் அது பழைய தோல்.

வெயில் சூடு ஏறிக்கொண்டே இருந்தது. அந்தச் சூட்டில் வெந்தபடியே நாங்கள் மெல்கிஸின் வருகைக்காகக் காத்திருந்தோம். மெல்கிஸ் தாமதமாக வருவதற்குப் பேர்போனவர். “செத்த அன்னிக்கு வாடான்னா பத்து அன்னிக்கித்தான் நீ வருவே” என்று சூசை மெல்கிஸைத் திட்டுவது உண்டு. மெல்கிஸ் ஒரு வழியாக வந்தார். நீளமான இரும்பு ஆணிகளை அவர் கொண்டுவந்தார். அந்த ஆணிகளைப் புழுதி படர்ந்த தரையில் போட்டுவிட்டுச் சட்டையைக் கழற்றினார். வேட்டியை மடித்துத் தார்ப்பாச்சு கட்டிக்கொண்டார். வேலையைத் தொடங்கினார்.

எங்கள் முன்னால் தோல் குவியலாகக் கிடந்தது. சூசையும் மெல்கிஸும் அதைத் திறந்த பிறகு அது முற்றிலும் வேறொன்றாகக் காட்சி அளித்தது. தோல் இன்னமும் ஈரப்பதத்துடன் இருந்தது. மயிரடர்ந்த மேற்புறம் ரத்தம் வழிந்ததால் பிசுபிசுப்பாக இருந்தது. உள்ளே அடர் ஊதா நிறமாகவும் வெளிர் மஞ்சள் நிறமாகவும் அழுக்குப் போன்ற பழுப்பு நிறமாகவும் இருந்தது. தூசியும் மணலும் ஒட்டியிருந்தன. எருமையின் வயிற்றில் கிழிக்கப்பட்டிருந்தது. இதனால் தோல் உட்புறம் வெளிப்புறமாகத் திரும்பியிருந்தது. உட்புறத்தில் இருந்த சதைப் பகுதியை வெயிலில் படுமாறு வைத்தார்கள். சதையின் அடியில் ஓடும் நரம்புகளைப் பார்க்க முடிந்தது. தோல் முழுவதிலும் ரத்தக் கறை. வாடை மிகவும் வலுவாகவே இருந்தது. ‘கறி வாசனை’ என்று ரவிக்குமார் இதைக் குறிப்பிட்டார்.

சூசைநாதனும் மெல்கிஸும் தோலை இழுத்துத் தரையோடு சேர்த்து ஆணி அடித்தார்கள். அதை இழுத்துப் பிடித்து ஓரங்களில் ஆணிகளை அறைந்தார்கள். அதைப் பார்க்கும்போது எருமையின் உடலை என்னால் கற்பனை செய்துபார்க்க முடிந்தது. முகம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. காதுகள் அருகருகே இருக்குமாறு வைக்கப்பட்டிருந்தன. பாம்பு சட்டையை உரிப்பதுபோல் எருமை தன் தோலை உரித்திருப்பதுபோலத் தோன்றியது. முன்னங்கால்கள் கைகளைப்போலக் காணப்பட்டன. பின்பகுதி இழுக்கப்பட்டதுபோலக் காட்சியளித்தது. மயிர் நிறைந்த வால் பத்திரமாக இருந்தது. ஆணி அடிக்கப்பட்டதும் தோல் தரையிலிருந்து சற்றே மேலே உயர்ந்திருந்தது. மெல்கிஸ் கூரான கத்தியை வெளியே எடுத்தார். “இப்போ ஜவ்வை வெளியே எடுக்கப்போறோம்” என்றார் சூசை. ஜவ்வு என்றால் கொழுப்பா என்று நான் கேட்டேன். தோலுக்கு அடியில் உள்ள சதை என்றார் சூசை. மிகுந்த கவனத்துடனும் பொறுமையுடனும் அவர்கள் ஜவ்வை நீக்கினார்கள். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகளில் தேர்ந்த சமையல் கலைஞர்கள் ஆப்பிளின் தோலை உரிப்பதைப் போல அவ்வளவு பக்குவமாகத் தோல் தனியே பிரித்து எடுக்கப்பட்டது. மெல்லிய சதைப்படலத்தை மிகத் துல்லியமாக இருவரும் சீவி எடுத்தார்கள். விரலில் ஒட்டிக் காய்ந்துபோயிருந்த ஃபெவிகால் படலத்தை உரித்து எடுப்பதைப் போல இருந்தது.

எனக்கும் அதைச் செய்துபார்க்க வேண்டும்போல இருந்தது. பார்க்க எளிதானதாகவே தெரிந்தது. ஆனால், சதை தோலோடு ஒட்டியிருந்ததால் அதைத் தனியே பிரிப்பது லேசுப்பட்ட காரியமாக இல்லை. தோலை மட்டும் துல்லியமாக வெட்டி எடுக்க வேண்டும். தோலில் கத்தியின் தடம் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பதினைந்து நிமிஷம் போராடிய பிறகு என் முயற்சியைக் கைவிட்டேன். சதையை அப்புறப்படுத்திய பிறகு தோலின் உட்பகுதி பளிச்சென்ற வெண்ணிறமாகக் காட்சி தந்தது. இதைச் செய்து முடிக்க ஒரு மணிநேரம் ஆயிற்று. இப்போது நாங்கள் காத்திருக்க வேண்டும். மேகமற்ற வானில் சூரியன் பிரகாசித்துக்கொண்டிருந்தது. தோல் காய இரண்டு மணிநேரம் ஆகும் என்றார் மெல்கிஸ். பக்கத்திலிருந்த தேநீர்க் கடைக்குச் சென்றோம். எங்கள் உடல்களிலிருந்து பச்சை மாமிசத்தின் வாசனை வீசியது.

அரசியல், மிருதங்கம் என்று பல விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்துவிட்டு மீண்டும் இறைச்சிக் கூடத்திற்குத் திரும்பினோம். சுட்டெரிக்கும் வெயிலில் மேலும் ஒரு மணிநேரம் காத்திருந்தோம். பிறகு சூசைநாதன் சாக்கட்டியை எடுத்து அந்தத் தோலின் நடுவே தலையிலிருந்து வால்வரை ஒரு கோடு போட்டார். பிறகு தோலின் வயிற்றுப் பகுதியில் ஆங்காங்கே சில வட்டங்களை வரைந்தார். அந்த வட்டங்களைத் தட்டு என்று சொல்கிறார்கள். அப்படிச் செய்வதைத் ‘தட்டு போடறது’ என்று குறிப்பிடுகிறார்கள். தட்டு அல்லாத பகுதிகளை (மாட்டின் பின்புற, பக்கவாட்டுப் பகுதிகள்) முதலில் வெட்டி எடுத்தார்கள். பிறகு தட்டுக்களைக் கூரான கத்தியின் மூலம் கவனமாக வெட்டி எடுத்தார்கள். இந்தத் தட்டுக்கள் மிருதங்கத்தின் தொப்பி பகுதியில் பொருத்தப்படும் இரண்டு எருமைத் தோல் ஜவ்வுகளாகப் பயன்படுத்தப்படும் என்று நீங்கள் யூகித்திருப்பீர்கள். அந்தத் தோலிலிருந்து 19 தட்டுக்களை வெட்டி எடுத்தார் சூசை.

“இப்போதெல்லாம் இதைச் செய்யப் போதுமான இடம் கிடைப்பதில்லை” என்றார் மெல்கிஸ். முன்பெல்லாம் சாலையின் எதிர்ப்புறத்தில் தனியார் நிலம் ஒன்றில் இதைச் செய்தார்கள். அந்த நிலத்தின் காவலாளிக்கு ஏதாவது சில்லறை கொடுப்பது உண்டு. அந்த இடத்தின் பொறுப்பில் இருந்தவர்களிடமிருந்து டோக்கன்களை வாங்கிக்கொள்வார்கள். அந்த டோக்கன்களுக்கு ஏதாவது மதிப்பு இருந்ததா என்பது எனக்குத் தெரியவில்லை. இப்போது அங்கே கட்டிடங்கள் வந்துவிட்டன. எனவே இறைச்சிக் கூடத்தின் மைதானத்தில் இருக்கும் குறுகிய பகுதியில்தான் இதை இப்போதெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது.

பக்கத்தில் உள்ள இன்னொரு இடத்தைப் பற்றிப் பிற்பாடு முருகானந்தம் என்னிடம் சொன்னார். “நீங்க போன இடம் சூளை. அங்கே தோலில் ஆணி அடிக்கப் போதுமான இடம் இல்லை. பக்கத்தில் ரயில்வே ரோடு இருக்கிறது. அங்கே வைத்து ஆணியடிப்போம். அங்கே வேலை செய்துகொண்டிருக்கும்போது பக்கத்திலேயே சிலர் கக்கூசு போவார்கள்” என்றார்.

மிருதங்கம் செய்பவர்கள் தோலைக் காயவைத்து வெட்டுவதற்காகச் சூளைக்கு வருகிறார்கள். அது அவர்கள் சந்தித்துப் பேசிக்கொள்ளும் இடமாகவும் உள்ளது. வயதான ஒரு பெண்மணி உள்ளே வந்தபோது என் நண்பர்கள் அவரை அன்போடு வரவேற்றார்கள். அவருடைய கணவன் அரிக்குட்டி தோலை விற்பனை செய்துகொண்டிருந்தார். இப்போது அரிக்குட்டி உயிருடன் இல்லை. இந்த அம்மாளுக்கு வீடோ வேலையோ இல்லை. மிருதங்கம் செய்பவர்கள் அவருக்குக் கொஞ்சம் பணம் கொடுத்தார்கள். அவர் அவர்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்தார். கொஞ்ச நாட்களாக அவரைப் பார்க்க முடியவில்லை என்று சூசைநாதன் என்னிடம் சொன்னார்.

எங்ளுக்குப் பக்கத்தில் இளைஞர் ஒருவர் எருமைத் தோலை விரித்துப் போட்டார். “நாங்க வேணாம்னு தள்ளிவிட்ட 

தோலை இவன் வாங்கியிருக்கான்” என்று சூசை என் காதில் கிசுகிசுத்தார். அந்த இளைஞர் கையில் காம்பஸ் முதலான கருவிகளை வைத்திருந்தார். சூசையும் மெல்கிஸும் அவரை இதுவரை பார்த்ததில்லை. எந்தக் கடையில் அவர் வேலை பார்க்கிறார் என்று அவர்களுக்கு யோசனை. தோலையும் கருவிகளையும் வைத்துக்கொண்டு அவர் திணறுவதை இருவரும் வேடிக்கையாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஏதாவது உதவி வேண்டுமா என்றும் கேட்டார்கள். அந்த இளைஞர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். “எல்லாம் தெரிந்த பெரிசுகள்” தங்களுடைய வேலையில் தலையிடுவதை எந்த இளைஞரும் விரும்புவதில்லை. இவரும் அப்படித்தான். “தட்டை அளக்க நாங்கள் காம்பஸ் பயன்படுத்த மாட்டோம். கொஞ்சம் பெரிசா இருக்கறது எப்பவுமே நல்லது. மிருதங்கத்தின் பிரேம் சரியா என்ன அளவுல இருக்கும்னு நமக்குத் தெரியாது. கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்க வசதி இருக்கணும். இந்தப் பையனுக்கு அது தெரியல” என்று சூசை முணுமுணுத்தார்.

என்னுடைய வேலை முடிந்துவிட்டது. ஆனால், அவர்களுக்கு இன்னும் நிறைய வேலை இருந்தது. அவர்கள் தட்டுக்களையும் மீதி உள்ள தோலையும் வீட்டுக்குக் கொண்டுபோய் மின்விசிறிக்கு ஆயில் காயவைப்பார்கள். வீடு முழுவதும் தோலின் வாடை பரவிவிடும் என்றார் சூசைநாதன். உண்மைதான். என்னுடைய காரில் இருந்த வாடையைப் போக்க இரண்டு நாட்கள் ஆயின. காரை மொத்தமாகக் கழுவ வேண்டியிருந்தது.

அன்று இரவு சூசைநாதன் மீதியுள்ள தோலை நீரில் ஊறவைப்பார். இரவு முழுவதும் அது ஊறிக்கொண்டிருக்கும். அடுத்த நாள் அது நீளமான இழைகளாக வெட்டப்படும். அவற்றை ‘வார்’ என்று சொல்வார்கள். எருமைத் தோலால் செய்யப்படும் கயிறு என்றும் சொல்வார்கள். மிருதங்கத்தின் இரு புறங்களிலும் பொருத்தப்படும் தோல்களை ஒன்றாகச் சேர்த்துக் கட்ட இவை பயன்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக வார்க்குப் பதில் கயிறு பயன்படுத்தப்படுகிறது. டி.வி. கோபாலகிருஷ்ணன் பல்வேறு பொருட்களைப் பரிசோதித்துப் பார்த்துக் கடைசியில் டெஃப்லான் கயிறுகளில் திருப்தி அடைந்தார். மற்றவர்கள் பால் எத்திலீன் கயிறுகள், நைலானில் செய்யப்பட்ட பாராசூட் கயிறுகள் அல்லது வலைக்குப் பயன்படுத்தப்படும் நைலான் கயிறுகளைப் பயன்படுத்துகிறார்கள். இவை வாரைக் காட்டிலும் நீடித்து உழைப்பவை; வேலை செய்ய எளிதானவை. ஆனால் மரபில் ஊறிய சிலர் இன்னமும் வாரையே பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.

கிளம்ப வேண்டிய நேரம் வந்தது. காருக்குள் உட்கார்ந்தோம். மிகவும் களைத்துப்போயிருந்தோம். சில்லென்று பியர் குடிக்க வேண்டும் என்ற வேட்கை எங்களுக்கு எழுந்தது. டாஸ்மாக் கடைக்குப் போய் மதியம் அது திறக்கும்வரை காத்திருந்து வாங்கிக்கொண்டோம். பியர் அன்றுபோல என்றும் சுவையாக இருந்ததில்லை!

நூல் விவரம்:

மறைக்கப்பட்ட மிருதங்கச் சிற்பிகள் செபாஸ்டியன் குடும்பக் கலை

டி.எம்.கிருஷ்ணா
தமிழில்: அரவிந்தன்
பக்கங்கள் : 328
விலை: ரூ. 195
காலச்சுவடு பதிப்பகம்
669, கேபி சாலை, நாகர்கோவில்
தொலைபேசி: 04652 278525 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
டி.எம்.கிருஷ்ணா

டி.எம். கிருஷ்ணா, கர்நாடக இசைக் கலைஞர். சமூகநீதிச் செயல்பாட்டாளர்.

தமிழில்: அரவிந்தன்

4

5

பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

RAJA RAJAMANI   3 years ago

மீண்டும் சொல்கிறேன். பிரமாதமான கட்டுரை. உடனே அமேசானில் கிண்டல் பாதிப்பை வாங்கி படிக்க துவங்கியுள்ளேன். வெகு சுவாரசியமான வரலாற்று சரித்திரம். இதை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கு சமசுக்கு நன்றி.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

RAJA RAJAMANI   3 years ago

மிக்க சுவாரஸ்யமான பதிவு. வாழ்த்துக்கள்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Amaipaidhiralvom   3 years ago

Expecting this book in Tamil Translated version in very long back. Super ARUNCHOL

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

மனிதவளம்இரட்டைப் பெயர்பெண்களின் அட்ராசிட்டிசந்நியாசமும் தீண்டாமையும்மினி தொடர்போலியோபத்ம விருதுகள்விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன்அதிபர்பாக்டீரியாரஅ பாதித்தால் பக்கவாதம் வரலாம்: சமாளிப்பது எப்படி?தந்தை பெரியார்லத்தீன் அமெரிக்க இலக்கியம்நிதா அம்பானிசட்டத் திருத்த மசோதா காட்சி ஊடகமும்உயிரியல் பூங்காஉலகமயமாக்கப்பட்ட வையகம்இந்தியர்களின் ஆங்கிலம்சலுகைசார் முதலாளித்துவம்டீசல்அண்ணாவும் பொங்கலும்தனிச் சட்டங்களை சீர்திருத்துங்கள்சமஸ் வடலூர் கட்டுரைதமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் இந்தியில் பேச முற்பட வேசமஸ் உதயநிதிசமூக அறிவியல்பல்லவிநிரந்தர வேலைமிகைப்படுத்தப்பட்ட வளர்ச்சி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!