கலை, கலாச்சாரம், நிதான வாசிப்பு 25 நிமிட வாசிப்பு

ஹார்மோனியத்தின் கதை

பழ.அதியமான்
31 Oct 2021, 5:00 am
3

"சியாமா சாஸ்திரியின் ஆலாபனை, முத்துச்சாமி தீட்சிதரின் ஸ்வரக்கட்டு, பனை ஓலைகளில் துளசிதாசரின் எழுத்தாணி கீறி நகர்கிறது. சரளி வரிசை ஹார்மோனியத்தின் கமகக் குழைவும், ஒரு காந்தர்வக் குரலுமாக..."

- இது பாட்காஸ்டிங்கில் எம்.டி.ஆர். எஃப்.எம். வானொலியில் ஜெய்சக்திவேல் குரலில் சமீபத்தில் கேட்ட கதையில் வரும் வர்ணனை. அந்தக் கதையை அவரிடம் வாங்கி அந்த குறிப்பிட்ட வர்ணனையையே மேலே எழுதியுள்ளேன். ஹார்மோனியத்தில் கமகக்குழைவு சாத்தியமா என்பதுதான் என் சந்தேகம், குழப்பம்.

இசையமைப்பாளர்கள் இளையராஜா, எம்.எஸ்.விஸ்வநாதன் போன்றோரை நினைத்துப் பார்த்தால் ஹார்மோனியப் பெட்டியுடன்தான் அவர்களது சித்திரம் காட்சி தருகிறது. பாடகருக்கு 'ட்யூன்' சொல்லித்தர இருவருக்குமே ஹார்மோனியமே பயன்படுகிறது. சுமார் ஏழு ஆண்டுக்கு முன், டிரம்ஸ் சிவமணி தன் மனைவி பாடகி ரூனா ரிஸ்வியுடன் இசை பற்றி இளையராஜாவுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இளையராஜா ஹார்மோனியம் வழியாகத்தான் தன் பதிலை விளக்கிக்கொண்டிருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதனின் 'குடும்பம் ஒரு கதம்பம்' என்ற பாடலை ஹார்மோனியத்தோடு இரண்டறக் கலந்துவிட்ட தொனியில்தான் நகலிசைக் கலைஞர் ஜான் சுந்தர் என்னிடம் ஒருமுறை பாடிக்காட்டினார்.

பக்தி உபன்யாசகர் கிருபானந்த வாரியார் பேசிக்கொண்டிருக்கும்போதே, இடையில் அடிக்கடி பாட முயற்சிப்பார். அவரது குரலின் கரகரப்பைக் குறைத்து, பாடலை நம் மனத்திற்குக் கொண்டுசெல்வது, அவர் கையில் எப்போதும் இருக்கும் ஹார்மோனியம்தான். இவர்களைத் தவிர அந்தக் கால மேடைப்பாடகர்கள், வீதிகளில் சுற்றித்திரியும் ஏழைக் கலைஞர்கள், சினிமாவில் வாய்ப்புக் கேட்டு அலையும் புதிய இசையமைப்பாளர்கள் (அந்த ஏழு நாட்கள் பாக்யராஜ்) போன்ற எளியவர்களோடுதான் ஹார்மோனியம் எப்போதும் காட்சி தருகிறது.

சிலருக்கு ஏழ்மையையும், பலருக்கு பழமையையும் உணர்த்தும் ஒரு இசைக்கருவி ஹார்மோனியம். கர்நாடக சங்கீதக்காரர்களுக்கு அது ஒரு வாத்தியமே அல்ல. ஆனால், ஓ.எஸ்.அருண் கச்சேரிகளில் பக்கவாத்தியமாக ஹார்மோனியத்தைப் பார்த்திருக்கிறேன் (உதாரணம், 'ஆசை முகம் மறந்துபோச்சே' - பாடல்).

இந்திய இசைக்கருவி அல்ல...

ஹார்மோனியம் இந்தியாவில் உருவான கருவி அல்ல. அது மேற்கத்திய வணிகர்களால் அல்லது சமயப் பிரச்சாரகர்களால் 19-ம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவிற்குள் நுழைந்த இசைக்கருவி. அலேக்சான்மரி டிபெய்ன் (1842) என்ற பிரெஞ்சுக்காரரின் பெயரில் ஹார்மோனியத்தின் வடிவமைப்பு உரிமை இருக்கிறது. கிரினி என்ற பிரெஞ்சுக்காரர் கண்டுபிடித்த கருவியென மு.அருணாசலம் எழுதியுள்ளார். மெலாடியன், ரீட், ஆர்கன், பம்ப் ஆர்கன் எனும் பெயர்களும் ஹார்மோனியத்துக்கு உண்டு.

ஹார்மோனியம் இந்திய இசையோடு கலப்பதற்கு, 20-ம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் பெரும் எதிர்ப்பு எழுந்தது. இந்தியாவின் பெரும் இசை நிறுவனமான அகில இந்திய வானொலியில் அதற்கு நேர்ந்த தடையும், தடை விலக்கின் பின்னணியில், ஹார்மோனியத்தின் எதிர்ப்பு வரலாற்றை இக்கட்டுரையில் காண்போம். கமகக்குழைவு அதில் முக்கியப் பங்கு வகித்தது.

அகில இந்திய வானொலி (1936) தொடங்கி நான்கு ஆண்டுகளுக்குள்ளேயே, இந்தியப் பெருங்கவிஞர் ரவீந்திரநாத் தாகூரிடமிருந்து ஹார்மோனிய எதிர்ப்புக் கடிதம் அதற்கு வந்துவிட்டது. “நமது சங்கீதத்தில் பக்கவாத்தியமாக ஹார்மோனியம் பயன்படுத்தப்படுவதற்கு நான் எதிராகவே இருக்கிறேன். நமது ஆசிரமத்திலிருந்து அது முற்றிலுமாக வெளியேற்றப்பட்டுவிட்டது. அகில இந்திய வானொலியில் இருந்தும் அதைக் கைவிடச்செய்தால், இந்திய இசை உலகிற்கு பெரிய சேவையாக அது இருக்கும்” என்று கல்கத்தா நிலைய இயக்குநர் அசோக்கி சென்னுக்குக் கடிதம் எழுதினார் தாகூர் (19 ஜனவரி 1940). சங்கீத சிந்தனை என்கிற தாகூரின் தொகுப்பில் இக்கடிதத்தை நீங்கள் இன்றும் பார்க்கலாம்.

தாகூருக்கு முன்பே ஹார்மோனியத்துக்கு எதிரான கருத்து, இந்திய இசை உலகில் உருவாகிவிட்டது. எதிர்ப்பின் மதிப்புமிக்க வெளிப்பாடுதான் தாகூருடையது. தாம் கருதிய நல்லிசைக்கு ஆதரவான கருத்து என்றே, ஹார்மோனியத்துக்கு எதிரான கருத்தை அவர்கள் கருதினர் எனலாம்.

வாய்ப்பாட்டை மூழ்கடித்துவிடும்...

அகில இந்திய வானொலியில் இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கும் அடையாள இசையை (signature tune) வால்டர் காஃப்மேன் உடன் இணைந்து உருவாக்கியவர் ஜான் போல்ட்ஸ் (1880-1939). அவர் மேற்கத்திய இசை வல்லுநர். டெல்லி ரேடியோ நிலையத்தில் இசை இயக்குநராகப் பணிபுரிந்தவர். அவரும் இந்திய இசையில் ஹார்மோனியத்தைக் கலக்க வேண்டாம் என்று கருதினார். டெல்லியில் இருந்து வெளிவந்த வானொலியின் சஞ்சிகையான ‘தி இந்தியன் லிஸனர்’ (The Indian Listener) இதழில், “ஹார்மோனியம் இந்தியத்தன்மையும் இசைத்தன்மையும் அற்ற இசைக்கருவி” என்று எழுதினார்  (22 ஜூன் 1938). இந்தக் கட்டுரைக்கு அவர் இட்ட தலைப்பு ‘Harm - monium'.

அவரது இணையரான மாட் மெக்கார்த்தி (1882-1967), இந்திய இசையில் மட்டுமல்ல; மேற்கத்திய இசையிலுமே ஹார்மோனியம் பயன்பாட்டை எதிர்த்தவர். “சாவி பயன்படுத்தப்படும் இசைக்கருவிகள் தம்முடைய வலிமையான இசையால், வாய்ப்பாட்டுத் திறனை வீழ்த்திவிடும்” என்பது அவரது கருத்து.

இந்திய இசையில் ஹார்மோனியத்தைச் சேர்க்க வேண்டாம் என்று சொல்வதற்கு ஐரீஷ் நாட்டவரான மெக்கார்த்திக்கு என்ன தார்மீகத் தகுதி இருக்கிறது என்று சுதேசி வாசகர்கள் கருதலாம். வயலின் கற்றவரான மெக்கார்த்தி, அன்னிபெசன்ட்டுடன் இந்தியா வந்தவர். அவருடன் இந்தியாவில் வாழ்ந்தவர் (சென்னையாகத்தான் இருக்க வேண்டும்). அப்போது, நான்காண்டுகள் (1905-1909) இந்திய இசையைப் பயின்றார்.

இந்த அடிப்படையில் மெக்கார்த்தி கருத்துரைத்திருக்கலாம். பின்னர் இங்கிலாந்து திரும்பிய மெக்கார்த்தி, ஜான்போல்ட்ஸை மணந்துகொண்டு மீண்டும் 1935-ல் இந்தியா திரும்பினார். ஜான்போல்ட்ஸ் ரேடியோ பணியில் சேர்ந்தார். பிறகு திடீரென 1939-ல் தன் 55-வது வயதில் காலமானார்.

மெக்கார்த்தி பல காலம் இந்தியாவிலேயே துறவியாக, கவிஞராக, பிறகு இல்லறத்தாராக வாழ்ந்து, அதன் பின் நாடு திரும்பி தன் 87-வது வயதில் 1967-ல் காலமானார். அவரது இந்திய வாழ்க்கை சுவாரஸ்யமான வேறு கதை.

1938-ல் தொடங்கிய சென்னை வானொலி நிலையத்தின் முதல் இயக்குநர் விக்டர் பரஞ்சோதியும் மேற்கத்திய இசை வல்லுநர் ஆவார். அவருக்கும் ஹார்மோனியத்தின்பால் உவப்பற்ற நிலையே இருந்திருக்கக் கூடும். அவர் ஜான் போல்ட்ஸின் ‘இந்தியன் லிஸ்னர்’ இதழில் வந்த கட்டுரையை மொழிபெயர்த்து சென்னையிலிருந்து வந்த அவர் ஆசிரியராகவும், டி.கே.சி.யின் மகன் தீத்தாரப்பன் துணை ஆசிரியராகவும் விளங்கிய 'வானொலி' இதழில் வெளியிட்டார்.

கட்டுரையின் முகப்பில், “இந்த ஆபாசமான வாத்தியத்தை பகிஷ்கரிப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கையைத் தெரிவிக்கிறார் நேரு” என்று நேரு ஹார்மோனியத்தை வெறுத்ததை முகப்பாக்கி வெளிப்படுத்தினார் (வானொலி 1 ஆகஸ்ட் 1938).

இந்துஸ்தானியில் ஹார்மோனியத்தின் பங்கு, ஒப்பீட்டளவில் அதிகம். எனினும், இந்துஸ்தானி வாய்ப்பாட்டுக் கலைஞர் எஸ்.என்.ரதன் ஜங்கர் (1900-1974) அவர்களும் ஹார்மோனியத்துக்கு எதிராக இருந்தார். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கர்நாடக இசை அறிஞரான தி.லக்குமணப்பிள்ளை (1864-1950) அவர்களும் ஹார்மோனியத்தை எதிர்த்து கருத்துத் தெரிவித்திருந்தார். “கர்நாடக இசையின் அழகுகளான கமகங்களையும், ஸ்ருதியையும் சரிவர ஹார்மோனியத்தால் தர இயலாதிருக்கிறது”  என்றார் அவர் (பக்கம் 304, இந்தியன் பிராட்காஸ்டிங்).

தடை விதித்த வானொலி...

இவ்வாறு இந்திய அறிஞர், மேற்கத்திய இசை அறிஞர்கள், இந்துஸ்தானி இசைவாணர், கர்நாடக இசையறிஞர், இந்தியத் தலைவர்கள் எனப் பலநிலை இசையறிந்தோரும் ஹார்மோனியத்தை எதிர்த்துவந்தது தெரிகிறது. இதில் ஆச்சர்யமில்லை. ஓர் இஸ்லாமிய அறிஞரும் இதை எதிர்த்தார். அவர், கல்வி வல்லுனரும், பின்னாளில் அரசியலருமான டாக்டர் ஜாகீர் உசேன் (1897-1969); ஜாமியா மில்லியா இஸ்லாமி கல்லூரியின் தலைவராக அப்போது இருந்தார். அவரும் ஹார்மோனியத்தைத் தடைசெய்யலாம் என அகில இந்திய வானொலிக்கு எழுதினார்.

இப்படியான கருத்துகளால் தார்மீகப் பலம் பெற்ற வானொலி, 1 மார்ச் 1940ல் அகில இந்திய வானொலியில் ஹார்மோனியத்தைத் தடைசெய்தது. வானொலி நிலையங்களில் அதுவரை பயன்பட்டுவந்த ஹார்மோனியப் பெட்டிகளை ஏலம்விட்டு விற்றுவிடச் செய்தது, ஒத்திகைக்கோ, நாடகம், சித்திரம் போன்றவற்றில் பயன்படும் இசைக்கீற்றுகளை உருவாக்கக்கூட ஹார்மோனியத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று தடைக் கடிதம் நிலையங்களை அறிவுறுத்தியது.

ஹார்மோனியத்தைத் தன் நிறுவனத்தில் தடைசெய்த வானொலி, தன் ‘தி இந்தியன் லிஸனர்’  இதழில் தடையை ஆதரிக்கும் கட்டுரைகளை வெளியிட்டது. ‘Herr monium’ என்ற தலைப்புடன் ஒரு கேலிச்சித்திரத்தை வரைந்தது. ஒரு சர்வாதிகாரியின் எழுச்சியும், வீழ்ச்சியும் என்று தலைப்பிட்டு ஹார்மோனியத்தைப் பற்றி ஒரு நிகழ்ச்சியை நடப்பு சம்பவத்தோடு தொடர்புடைய தலைப்பில் ஒலிபரப்பியது(1940 ஏப்ரல் 13). அது 'சர்வாதிகாரி' என்று குறிப்பிட்டது ஹார்மோனியத்தையே ஆகும். இரண்டாம் உலகப் போர் சமயமாதலால், இத்தலைப்பு கவர்ச்சியாக இருந்தது.

பாரதியே எதிர்த்தவர்தான் 

ஹார்மோனியத் தடைக்கு, அதைப் பயன்படுத்துவோரிடம் இருந்து எதிர்ப்பு எழுந்திருக்க வேண்டும். ஆனால், அது செல்வாக்கு பெறவில்லை. அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. இந்த எதிர்ப்பு 1930,40-களில்தான் எழுந்தது என்று கருத வேண்டாம். 1921ல் காலமாகிவிட்ட பாரதியாரே, ‘சங்கீத விஷயம்’ கட்டுரையில் ஹார்மோனியத்தை மறுத்து எழுதியுள்ளார். “நமது சங்கீதத்தில் உள்ள சுருள்கள், வீழ்ச்சிகள் போன்றவற்றை ஹார்மோனியத்தில் காட்ட முடியாது. ஆதலால், இந்த வாத்தியத்தில் அதிகப் பழக்கமுடையோரிடம் நமது சங்கீதத்தில் உள்ள விசேஷ நயங்கள் மங்கிப்போகின்றன. இதையெல்லாம் காட்டிலும், அந்தப் பெட்டி போடுகிற பெருங்கூச்சல்தான் என் காதுக்கும் பெரிய கஷ்டமாக தோன்றுகிறது” என்பது பாரதியின் ஹார்மோனிய எதிர்ப்புக் கருத்துக்களுள் ஒன்று.

சுருள்கள், வீழ்ச்சிகள் ஆகியவற்றை ஹார்மோனியத்தில் காட்ட முடியாது என்று பாரதி சொல்வது அநேகமாக கமகங்களையே என்று கருதலாம். கூடவே, ஹார்மோனியம் எழுப்பும் அதிக சப்தமும் தவிர்க்கப்பட வேண்டியதாகப் பாரதிக்குத் தோன்றுகிறது. ஜாகீர் உசேன், ஹார்மோனியத்தை மறுக்கிறபோது ஏறக்குறைய இதேபோன்ற கருத்தையே தெரிவிக்கிறார். “நுட்பமான காரணத்தை என்னால் கூற முடியாது என்றாலும், ஹார்மோனியம் புலன்களுக்கு எரிச்சலையும், வெறுப்பையும் ஊட்டுகிறது. நமது இசையின் உணர்வோடு அது இயைந்து செல்லவில்லை” என்று ஜாகீர் உசேன் தெரிவிக்கிறார் (பக்கம் 302, இந்தியன் பிராட்காஸ்டிங்).

ஹார்மோனியத்தில் இருந்து எழும் அந்தச் ‘சத்த’த்தைப்  பாரதியால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. மேலும் அவர் எழுதுகிறார், “ஒரு வீட்டிலே ஹார்மோனியம் வாசித்தால், பக்கத்திலே 50 வீட்டுக்குக் கேட்கும். அறியாதவன் தன் அறியாமையை வீட்டில் இருந்தபடியே இரண்டு மூன்று வீதிகளுக்குப் பிரச்சாரம் பண்ண வேண்டுமானால், அதற்கு இந்தக் கருவியைப் போலே உதவி வேறொன்றுமில்லை. வீணை தவறாக வாசித்தால் வீட்டில் உள்ள ஜனங்களுக்கு மாத்திரம்தான் துன்பம். ஹார்மோனியம் தெரு முழுதையும் ஹிம்சைப்படுத்திவிடுகிறது. ஒரு தேசத்தாரின் செவியைக் கெடுத்து, சங்கீத உணர்ச்சி குறையும்படி செய்ய வேண்டுமானால் கிராமந்தோறும் நான்கைந்து ஹார்மோனியம் பரவும்படிச் செய்தால் போதும்” (சங்கீத விஷயம், கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி பாடல்கள், எட்டாம் தொகுதி).

ஹார்மோனியத்தை அந்நிய நாட்டுப்பொருள் என்ற நோக்கில் தேசியக் கவிஞர் பாரதியார் எதிர்க்கவில்லை. இந்திய இசையின் நுட்ப அம்சங்களை அது மழுங்கடித்துவிடுகிறது என்பதுதான் அவரது குற்றச்சாட்டு. பிடில் என்று பெயர் படைத்திருந்த வயலினை பாரதியார் எதிர்த்ததாகத் தெரியவில்லை.

பெரியார் கருத்து

பாரதி, தாகூர், நேருவெல்லாம் ஹார்மோனியம் பற்றி கருத்தறிவித்திருக்க, பெரியார் ஏதும் சொல்லியிருக்கிறாரா என்று யோசித்துத் தேடியதில் அப்படியேதும் கிடைக்கவில்லை. ஆனால், “ஒவ்வொரு நாட்டுக்காரனுக்கும் ஓர் இசையிருக்கும். இது உயர்ந்தது, அது தாழ்ந்தது என்று அதைச் சொல்ல முடியாது” என்று கருதுவதாகவே தெரிகிறது.

“சங்கீதம் என்பது தேசத்துக்குத் தகுந்தபடியும், அங்குள்ள சீதோஷ்ண நிலைக்குத் தகுந்தபடியும் அவரவர்களது அறிவு வளர்ச்சிக்கும் இருப்பதே தவிர, ஒரே சங்கீத முறையானது உலகத்திற்கெல்லாம் பொருத்தமானது என்று சொல்ல முடியாது. ஒரு நாட்டுச் சங்கீத உணர்ச்சிக்காரனுக்கு இன்பமாய் இருப்பது, மற்றொரு நாட்டு வித்வானுக்கு புரியாததாகவே இருக்கும். மேல்நாட்டு சங்கீத இன்பம், கீழ்நாட்டான் அனுபவிக்க முடியாது. அதுபோலவே, கீழ்நாட்டானின் சங்கீதம் மேல்நாட்டானுக்கு இன்பம் தராது. ஆனால், பொதுவில் சங்கீதத்தில் உலக மக்களுக்கெல்லாம் ஒருவித போக்கில் அனுபவம் இருக்கிறது என்பதை மாத்திரம் காணலாம். ஆனால், ஒருவர் அதிகமாக அனுபவிக்க ஆசைப்படுவார், மற்றொருவர் அதை சாதாரணமாகக் கருதுவார். எப்படியிருந்தாலும் உலகிலுள்ள பல கலைகளில் அதுவும் ஒன்றாய் இருக்கிறது” (குடிஅரசு, 20 ஏப்ரல் 1930).

பிரிட்டீஷ் இந்தியாவில் வானொலியில் ஹார்மோனியத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை, விடுதலையடைந்த இந்தியாவிலும் நீங்கவில்லை. ஹார்மோனியத்துக்கு ஆதரவானோர், தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர்களாகப் பொறுப்பேற்ற வல்லபாய் படேல், ஆர்.ஆர்.திவாகர், டாக்டர் பி.வி.கேஸ்கர் ஆகியோரிடம் தடையை நீக்க கோரிக்கை வைத்தனர். தோல்வியையே சந்தித்துவந்தனர். பத்தாண்டு காலம் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சராக நீண்ட காலம் நீடித்த பி.வி.கேஸ்கர் (1952-1962), அந்தச் சுத்த சங்கீதத்தில் ப்ரியமான மராத்தி பிராமணர். அவர் தடையை நீக்க முடியாது என்பதில் உறுதியாக இருந்தார்.

அடுத்து பொறுப்பேற்ற ஆந்திர மாநிலத்து கோபால ரெட்டியை, புனேயில் வைத்து கெரோகூட செய்தனர் ஹார்மோனிய ஆதரவாளர்கள். எனினும், அமைச்சகத்தின் உறுதி தளரவில்லை.

ஹார்மோனிய ஆதரவாளர்களின் எண்ணிக்கையும், செல்வாக்கும் உயர்ந்துகொண்டே (ஜனநாயகத்தில்) வந்திருக்க வேண்டும். 1930-களில் ஹார்மோனியத்தை இந்தியாவில் தடைசெய்ய நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ளப்படும் என்று சொன்ன நேருவும் பிரதமராகிவிட்டார். ஆனால், அவரால் தடைசெய்ய இயலவில்லை. அரசின் ஓர் அங்கமான ரேடியோவில், அதுவும் முன்பே போடப்பட்டுவிட்ட தடையைத்தான் அவரால் நீட்டிக்க முடிந்ததே தவிர, நாடு முழுவதுமான தடையை விதிக்க அவரால் இயலவில்லை.

நேருவின் சிறப்பு உதவியாளராகப் பலகாலம் பணிபுரிந்த எம்.ஓ.மத்தாய் தன்னுடைய, 'நேருவுடன் எனது நாட்கள்’ நூலில் தடை விதிக்க முடியாத சூழலை விவரிக்கிறார். “1930களில் பொதுமேடை ஒன்றில், சுதந்திரமடையும் இந்தியாவில் ஹார்மோனியம் தடைசெய்யப்படும் என்று பேசியிருந்தார் நேரு. இதைவைத்து நீங்கள் பிரதமராகி இரண்டாண்டுகள் ஆகின்றனவே, ஏன் இன்னும் அதைத் தடைசெய்யவில்லை என்று ஆயிரக்கணக்கானோர் கடிதம் எழுதிக்கேட்டனர். இத்தகைய கடிதங்கள் வந்துகொண்டிருக்கின்றன என்று நேருவுக்குச் சொல்லிவிட்டோம். யாருக்கும் தனிப்பட்ட பதில்கள் அனுப்பப்படவில்லை. நேரு ஏதோ கூட்டம் ஒன்றில் இதைப் பற்றி குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இதைப் பற்றி அவர் அலட்சியம் செய்துவிட்டார். கள்ளச்சந்தைக்காரர்களும், ஹார்மோனியமும் தப்பிப் பிழைத்துவிட்டது. தொடர்ந்து பிழைத்திருக்கும்!" (பக்கம் 46, My Days with Nehru - எம்.ஓ. மத்தாய், 1959).

நீங்கியது தடை...

1970-களின் இறுதியில் ஹார்மோனியத்துக்கு ஆதரவான குரல்கள் செல்வாக்குப் பெறத் தொடங்கின. வானொலியும் அசைந்துகொடுக்க வேண்டிவந்தது. ரேடியோ சங்கீத சம்மேளனம் என்ற வருடாந்திர வானொலி இசை நிகழ்ச்சியின் கூடவே, டெல்லியில் இசை தொடர்பான கருத்தரங்குகள் நடைபெற்றுவந்தது. பின்னால், கருத்தரங்குகள் நின்றுவிட்டன, கச்சேரிகள் மட்டும் தொடர்ந்தன. அத்தகைய கருத்தரங்கு ஒன்றில், ஹார்மோனியத்தை ஏற்கலாமா? என்பது பற்றி விவாதம் ஒன்று 1970-ல் ஏற்பாடு செய்யப்பட்டது. ஹார்மோனியத்தின் மீதான தடையை நீக்குவதற்கான முன்நடவடிக்கையாக இருந்திருக்கலாம்.

ஹார்மோனியமும் இந்திய சங்கீதமும் என்கிற அந்தக் கலந்துரையாடல், அகில இந்திய அளவில் 1970 அக்டோபர் 22, 23-ம் தேதிகளில் டெல்லியில் நடைபெற்றது. இவ்விவாதம் 26ம் தேதி இரவு இந்தியா முழுவதும் உள்ள வானொலி நிலையங்கள் மூலம் ஒலிபரப்பப்பட்டது. ‘ஹார்மோனியமும் கர்நாடக சாஸ்த்ரீய சங்கீதமும்’ (பேராசிரியர் பி.சாம்பமூர்த்தி), ‘கர்நாடக மெல்லிசையும் சாஸ்த்ரீய மெல்லிசையும்’ (பி.வி.சுப்பிரமணியம் - 'சுப்புடு') என்று கர்நாடக இசையின் பல பிரிவுகளோடு ஹார்மோனியம் இயைந்துவருமா என்று பேசினர். அதேபோல, ‘ஹார்மோனியத்தை ஹிந்துஸ்தானி பக்கவாத்தியமாக பயன்படுத்த முடியுமா?’ என்பதுபற்றி எஸ்.என்.ரத்தன் ஜங்கரும், வி.எச்.தேஷ்பாண்டேவும் கருத்துரைத்தனர்.

ஹார்மோனியமும் ஹிந்துஸ்தானி சாஸ்த்ரீய சங்கீதமும் என்பது பற்றி டாக்டர் பிரேமலதா சர்மாவும், சலீல் சௌத்ரியும் பேசினர். ஹார்மோனியமும் இந்திய சங்கீதப் பயிற்சியும் என்பதுகுறித்து தீபாலி நாக்கும், தனிவாத்தியமாக ஹார்மோனியத்தைப் பயன்படுத்தலாமா என்று ஞான பிரகாச கோஷ் அவர்களும் பேசினர் (வானொலி, 7 அக்டோபர் 1970). இந்தக் கட்டுரைகளின் பதிவுகள் சங்கீத நாடக அகாதெமி இதழ்களில் படிக்கக் கிடைக்கின்றன. எம் அறிஞர்களுக்கு அரசு நடவடிக்கையின் பொருள் புரியாதா என்ன? ஹார்மோனியத்துக்கு ஆதரவான கருத்தையே கருத்தரங்கம் வெளியிட்டது. விளைவாக, ஹார்மோனியம் 32 ஆண்டுகளுக்குப் பிறகு வானொலிக்குள் நுழைந்தது.

1972 நவம்பர் முதல் ஹார்மோனியத்துக்கு வானொலியில் இருந்த தடை நீக்கப்பட்டது. எனினும் சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. சங்கீத வித்வான்களின் உயர்நிலைத் தகுதி (வானொலியின் தரப்பட்டியலில்) பெற்றவர்கள் மட்டும் விரும்பினால் ஹார்மோனியத்தைப் பயன்படுத்தலாம் என்பது கருத்து. ஹார்மோனியம் செல்வாக்கு உள்ளவர்களோடு நுழையுமாறு கதவைக் கொஞ்சம் ஒருக்கழித்தது மாதிரி திறந்துவைத்தது வானொலி, பின்னர் 1980ல் தேவைக்கேற்பத் திறந்துவிட்டது (பக்கம் 305, இந்தியன் பிராட்காஸ்டிங்). 1972-ல் முறையான அறிவிப்பு வரும்முன்பே ஹார்மோனியம் குறைவான பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

நாடக மேடையில் ஹார்மோனியம்

'விடுதலைப் போரில் தமிழ் நாடக மேடை' என்பதை நினைவூட்டும் நோக்கில் அமைக்கப்பட்ட இசை நிகழ்ச்சியில், ஹார்மோனியம் பயன்படுத்தப்பட்டது. குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைப்பில் கே.சண்முகசுந்தரி பாடிய பாடல் கச்சேரியில், எஸ்.ஜி.காசி ஐயர் ஹார்மோனியம் வாசித்தார். இந்நிகழ்ச்சி 21 ஆகஸ்ட் 1971 அன்று சென்னை வானொலியில் ஒலிபரப்பானது. காசி ஐயர், புகழ்பெற்ற நடிகர், பாடகர் கிட்டப்பாவின் சகோதரர் ஆவார்.

ஹார்மோனியத்தின் செல்வாக்கு கர்நாடக இசைக் கச்சேரிகள் தவிர, மற்ற இடங்களில் ஒரு கட்டம் வரை சிறப்பாகவே இருந்தது. குறிப்பாக மேடை நாடகங்களில். அதனால், மேலே கண்ட நாடக மேடையை அடையாளப்படுத்த ஹார்மோனியத்தை தடை விலகாதபோதும் பயன்படுத்த வேண்டியிருந்தது. தமிழ் இசை இலக்கண வரலாற்றை எழுதிய மு.அருணாசலம், ஆர்மோனியத்தின் தமிழ்நாட்டு வாழ்வை படம் பிடித்துக்காட்டியது போல எழுதியுள்ளார்.

“கிராமபோன் ஏற்பட்ட ஆரம்ப காலங்களில் நாடகங்கள் மேடையேறிய தொடக்கத்தில் ஆர்மோனியமே சர்வாதிகாரம் செலுத்திற்று. நம்மவருக்கு சங்கீத உணர்வு ஏற்படத் தொடங்கிய பிறகு, சங்கீதக் கச்சேரிகள் வர ஆரம்பித்த பின், ஆர்மோனியம் மேடையில் இருந்து மறைந்து தம்புரா சுருதி வழக்கத்திற்கு வந்தது” என்று ஹார்மோனியத்தின் வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் விவரித்த மு.அருணாசலம், கையால் வாசிக்கும் ஹார்மோனியம் போலவே, காலால் வாசிக்கும் ஹார்மோனியம் ஒன்றும் இருந்தது என்று சொல்லி ஆச்சர்யப்படுத்துகிறார்.  “ஆர்மோனியத்தில் தரையில் உட்கார்ந்து கையால் சுதி போடும் வகையொன்றும், நாற்காலியில் உட்கார்ந்து மேசை மேல் அமைத்து காலால் இயக்குகிற வகையொன்றும் உள்ளது” என்பது அவர் தரும் தகவல்.

“இக்கருவி (ஆர்மோனியம்) ஒரு சாமானிய மரப்பெட்டி போல் தோன்றும். இசைப்பவருக்கு எதிர்ப் பக்கத்தில் சாவிபோல நான்கு பொத்தான்கள் இருக்கும். இவற்றை இழுத்தும், அழுத்தியும் உட்புகும் காற்றின் அளவை ஒழுங்குபடுத்த முடியும். பெட்டியின் மறுபக்கத்தில் துருத்தி போன்ற ஒரு பை. அதைக் கையினால் பக்கத்தில் உள்ள பலகை மூலம் அழுத்தவும் விரிக்கவும் செய்யும்போது காற்று உட்புகுந்து ஒலியை எழுப்புகின்ற சிறு தகட்டை அசைக்கின்றது. வரிசையாய் உள்ள இத்தகடுகளின் ஓரம் இடுக்கி, மேலே வெண்ணிறத்திலும் கருநிறத்திலும் கட்டைகள். இவற்றை விரல்களால் அமுக்கும்போது இடுக்கி திறந்து துருத்தியில் இருந்து காற்று வெளிவர ஒலி எழும்புகிறது. கட்டைகளின் அமைப்பும் பல்வேறு சுரங்களுக்கு இடம் கொடுக்கிறது. விரல்களால் கட்டைகளை சரிகம பதநி என்ற சுரங்களுக்கு ஏற்றவாறு அழுத்த, சுரங்கள் தோன்றுகின்றன. இந்த சுரங்கள் மொட்டையாக இருக்கும் நேர்க்கோடு போல, ஒன்றுக்கொன்று தொடர்பு இராது. குழைவும் கமகமும் இங்கு எழ வழியில்லை.” (பக்கம் 146, தமிழ் இசை இலக்கண வரலாறு).

கமகமும் ஹார்மோனியமும் 

ஹார்மோனியப் பெட்டியில் இருந்து இசை எப்படி எழுகிறது? என்கிற விதத்தை விளக்கிய மு.அருணாசலமும் கமகம் எழ வாய்ப்பில்லை என்றே கூறுகிறார். நரம்புக் கருவிகளில் தான் கமகம் இழையும், கட்டையைப் பயன்படுத்தும் கருவிகளில் கமகம் வராது என்பதுதான் கருத்து.

அப்படியிருக்க இக்கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள சிறுகதையில் வரும், ‘ஹார்மோனியத்தின் கமகக் குழைவும் காந்தர்வக் குரலுமாக’ என்ற வரி குழப்பத்தையே தருகிறது. இளையராஜாவின் பழைய காணொளி ஒன்றை முன்பொருமுறை யுடியூப்பில் பார்த்தேன். அதில் அவர் இசை தெரிந்த எத்தனையோ பேர் புகழ்பெறாமல் போய்விட்டனர். “திருச்சியில் ஒருவர் இருந்தார். மகாமேதை. கமகம் வரும் மாதிரி ஹார்மோனியம் ஒன்றை அவர் உருவாக்கியிருந்தார்” என்று குறிப்பிட்டிருந்தார் இளையராஜா. ஒருவேளை அந்த ஹார்மோனியமாக அந்த சிறுகதை குறிப்பிடும் ஹசன் பண்டிட் வாசிக்கும் வாத்தியம் இருக்குமோ?

ஹார்மோனியத்தை பற்றிய குறைகளாக அதற்கெதிரானவர்கள் நான்கு அம்சங்களைப் பட்டியலிடுகின்றனர். முதலாவது ஹார்மோனியம் அதிக சப்தம் போடுகிறது. பாடலைக் கேட்கவிடாமல் குரலை மூழ்கடித்துவிடுகிறது. இரண்டாவது, இந்திய இசையில் உள்ள அலங்காரங்களான Meer Andolon முதலியவற்றை ஹார்மோனியத்தால் உருவாக்க முடியவில்லை. மூன்றாவது, இந்திய இசையின் சுருதியை அதனால் தர முடிவதில்லை. நான்காவது, குரலை அடிமைப்படுத்தி, பாடகர்களை ஹார்மோனியத்தையே நம்பியிருக்கச் செய்துவிடுகிறது. இந்தப் பட்டியலைத்தரும் ஆய்வாளரே பின்வரும் சமாதானங்களையும் அதற்குத் தருகிறார்.

அதிக சப்தமில்லாமல், ஒரு குறைவான தளத்தில் ஹார்மோனியத்தை வாசிக்க முடியும். ஆமாம், அலங்காரங்களை ஹார்மோனியத்தால் உருவாக்க முடியாது. ஆனால், Discreate குறிப்புகளை இந்தக் கருவியால் உருவாக்க முடியும் என்பது இரண்டாவது குற்றச்சாட்டுக்கான பதில்; சுருதியை உருவாக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால், அது பாடலைப் பாதிப்பதில்லையே? குரலை அடிமைப்படுத்துவதும் உண்மைதான். ஆனால், அதைத் தவிர்க்க வழிகள் இருக்கின்றன என்ற வாதங்களால் ஹார்மோனியத்தைக் காப்பாற்ற அந்த ஆய்வாளர் முயன்றார்.

சுருதி கூட்டத் தேவையில்லை; கச்சேரியின் இடையில் சுருதி விலக வாய்ப்பே இல்லை; வாசிப்பது எளிது; எந்த அளவிலும் வாசிக்க முடியும் என்ற ஹார்மோனியத்தில் இருக்கும் வசதிகளை எடுத்துக்காட்டுகிறார்கள். இசையில் கற்றுக்கொள்வது (Learning), சாதகம் செய்வது (Practise), வாசித்துக் கச்சேரி செய்வது (Perform) என்ற மூன்று நிலைகளில் ஹார்மோனியத்தை முதலிரு நிலைகளில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றே கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பு போல ஒரு சமாதானத்தைத் தருகிறார் அந்த ஆய்வாளர். நல்லாத்தான் இருக்கு!

ஒரு வால் குறிப்பு:

எழுத்தாளர் அசோகமித்திரன், நான் வானொலியில் பணியாற்றியபோது ஒரு நிகழ்ச்சியில், ‘ஹார்மோனியம்’ என்ற தலைப்பில் ஒரு கதை படித்தார். இக்கட்டுரையில் முதலில் சுட்டப்படும் கதையல்ல அது. அக்கதையின் வேறொரு வடிவம் 'கல்கி'யில் வரப்போவதாகவும் சொன்னார். அக்கதையையும் தேடிப் படிப்பது வாசகர்களுக்கு ஒரு சுவையான அனுபவமாக அமையலாம். 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பழ.அதியமான்

பழ.அதியமான், எழுத்தாளர். வரலாற்று ஆய்வாளர். அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். ‘சக்தி வை.கோவிந்தன்’, 'சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்', ‘வைக்கம் போராட்டம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.








பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

Ravichandran RJ   3 years ago

பழ.அதியமான் ஐயா அவர்கள் அகில இந்திய வானொலி, கோடைப்பண்பலையில் இயக்குநராக இருந்தபோது, ஒரு அறிவிப்பாளராக அவருடன் நெருங்கிப் பேசும் சந்தர்ப்பங்கள் (பேறுகள்) எனக்கு வாய்த்திருக்கின்றன. அவரது அறையில் அவரை நூறு முறை பார்த்திருந்தால், 98 முறை அவர் எழுதிக் கொண்டிருக்கும் காட்சியையே என் கண்கள் கண்டிருக்கும். ரசித்திருக்கும் என்று கூடச் சொல்லலாம். அவர் எதைப்பேசினாலும், அது அத்தனை சீக்கிரத்தில் முடியாது, (அதைப்பற்றி அவ்வ்வ்வளவு தெரிந்து வைத்திருப்பார்) அதற்காகவே சொல்லும் விஷயத்தை அவராகவே சுருக்கி முடித்துக் கொள்வார். இந்த கட்டுரையை வாசிக்கும் போது கூட "மெக்கார்த்தி பல காலம் இந்தியாவிலேயே துறவியாக, கவிஞராக, பிறகு இல்லறத்தாராக வாழ்ந்து, அதன் பின் நாடு திரும்பி தன் 87-வது வயதில் 1967-ல் காலமானார். அவரது இந்திய வாழ்க்கை சுவாரஸ்யமான வேறு கதை." என்பதை வாசிக்கும் போது, எனக்குள் நானே சிரித்துக்கொண்டேன். திரு பிரபு அவர்கள் தன் பின்னூட்டத்தில் சொல்லியிருப்பதைப் போல, எதையும் சுவாரஸ்யமாக்கிவிடும் வித்தை ஐயா அவர்களிடம் உண்டு. அதன் சூட்சுமம், கட்டுரையை எழுதுவதற்கு முன்பாகவே, கட்டுரை வாசிக்கப் போகிறவர்களை, அவர் வாசித்துவிடுகிறாரோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. அந்தத் திறன் அவருக்கு உண்டு. அவர் இயக்குனர் என்றாலும், மனம் என்னவோ அவரை ஒரு பேராசிரியராகவே பணிகிறது.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Prabhu   3 years ago

ஆ ரா வேங்கட சலபதிக்கு இணையான தமிழ் கலாச்சார பண்பாட்டு இலக்கிய ஆய்வாளர் பழ அதியமான் அவர்கள். ஆய்வு எழுத்துக்கு ஒரு objective tone முக்கியம். அதற்கு உள்கிடக்கையான நோக்கம் இருக்கும்; இருக்கலாம். ஆனால் அது வெளியில் எளிதாக தெரிந்து விடக் கூடாது. தரவுகளின் மீது பெரிதும் சார்ந்தும், தரப்புகளை மையப்படுத்தாமலும் ஒரு detached tenor கொண்டு எழுதுவதில் சலபதி அவர்களும் அதியமான் அவர்களும் தமிழில் இன்று முதன்மையானவர்கள். அதியமான் அவர்களின் "வைக்கம் போராட்டம்" அந்தப் பொருளைப் பற்றிய முக்கியமான ஆய்வு. ஆய்வு எழுத்துக்களுக்கு பொதுவான ஒரு தன்மை உண்டு: சுவாரஸ்யமின்மை. அதை உடைத்தவர்கள் சலபதியும் அதியமானும். ஹார்மோனியத்தைப் பற்றிய இந்தக் கட்டுரையிலும் சுவராஸ்யத்திற்கு குறைவில்லை.

Reply 5 0

Login / Create an account to add a comment / reply.

Cheenu Narasimhan   3 years ago

//இந்திய இசையின் சுருதியை அதனால் தர முடிவதில்லை.// //சுருதியை உருவாக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால், அது பாடலைப் பாதிப்பதில்லையே? // அருமையான கட்டுரை. ஆனால் மேற்சுட்டியுள்ளதில் எனக்கு ஒரு ஆட்சேபம் இருக்கிறது. ஹார்மோனியம் ஈக்வி-டெம்பர்ட் ட்யூனிங் செய்யப்பட்டுளதால் இந்திய இசையில் ஒட்ட ஒரு சிறு பிரச்சினை உள்ளது. மேலும் ஒரே ஸ்வரமானாலும் வெவ்வேறு ராகங்களில் அதன் அளவீடு மாறும். எ.கா. சாவேரிக்கும் ரேவதிக்கும் உள்ள (ரா) ஒன்றேயானலும் பாடும்போது அவை வெவ்வேறு அளவீடுகள் கொண்டது. அப்படி பாடினால்தான் ராகம் கேட்கும். ஹார்மோனியம் அந்த ஸ்ருதியை உருவாக்கமுடியவில்லையென்றால் பாடல் கெட்டுதான் போகும். மேலும் இந்திய இசையில் பாடலைவிட ராகம் பாடுவது முக்கியம். அங்கு இது மேலும் பிரச்சினையைத் தான் உருவாக்கும். இந்த குறைபாட்டை போக்க மஹாரஷ்ட்ராவின் ஹார்மோனிய இசை வித்வான் வித்யாதர் ஓக் 22 ஸ்ருதி ஹார்மோனியத்தை உருவாக்கியுள்ளார். சுட்டிகள் கீழே: https://www.youtube.com/watch?v=5e3C4efyb2g https://youtu.be/MJ3RQVIKErw கர்னாடக இசையில் வயலின் ப்ரபலாமாக இதுவே காரணம். ஹிந்துஸ்தானி இசையில் வயலின் ப்ரபலமாகவில்லை. அதற்கு முன் சாரங்கியே இருந்தது. சாரங்கி ப்ராக்டிகலாக இல்லாததால், ஹார்மோனியம் வசதியாக பலரால் இந்த குறையுடனே ஏற்கப்பட்டுள்ளது. கர்னாடக இசையில் இல்லையென்றாலும், அதைவிட ப்ரபலமாக உள்ள பஜனையிசையில் ஹார்மோனியமே கோலொச்சுகிறது.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

தமிழகம்இன்னமும் மீட்சி பெறவில்லைபாஜக வெற்றிபெற பிற காரணங்கள்நாஜிக்கள்சாரதா சட்டம்மாயக் குடமுருட்டி: ஒளிதான் முதல் நினைவுஅரசியல் அறிஞர்கள்வேளாண் சட்டங்கள்நடிகர் சூர்யாவிரித்தலும் சுருக்குதலும்ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் பேட்டிசிவசங்கர் எஸ்.ஜேசாதி அழிந்துவிடுமா?2023 வெள்ளம்சமஸ் - கி.ராஜநாராயணன்மகுடேசுவரன் கட்டுரைவெடிப்புகள்கோபால்ட்குடும்பம்தினேஷ் அகிரா கட்டுரைமஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்கள்ளக்குறிச்சி கலவரம்: காவல் துறையின் அம்மணம்ஓய்வூதியத்துக்கு வெற்றிபூனா ஒப்பந்தம்Dr.Vகே.சி.சந்திரசேகர ராவ்தலைநகரம்பொதுக் கணக்குபன்னி சோஆசிரியர்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!