கோணங்கள், கட்டுரை, இன்னொரு குரல் 10 நிமிட வாசிப்பு

சாவர்க்கர்: தனி மனிதர்களும் வரலாறும்

ராஜன் குறை கிருஷ்ணன்
11 Nov 2021, 4:59 am
3

சாவர்க்கர் தொடர்பாக சமீபத்தில் ஆங்கிலத்தில் வெளியான சில வாழ்க்கை வரலாற்று நூல்களின் அடிப்படையில் 'அருஞ்சொல்' ஒரு குறுந்தொடரை வெளியிட்டது. நான் அந்தக் குறுந்தொடரை கண்டித்து ஒரு எதிர்வினை ஆற்றியிருந்தேன். 

என் எதிர்வினைக்கு முகம் கொடுத்து சில கட்டுரைகளும், வாசகர் பின்னூட்டங்களும் 'அருஞ்சொல்' தளத்தில் வெளியாகியிருப்பதைக் கண்டேன். அவற்றைப் படித்த பிறகு நான் எழுதிய கண்டனம் சரியானது என்ற உறுதி ஏற்பட்டது. அவற்றிற்கெல்லாம் வார்த்தைக்கு வார்த்தை பதில் அளிப்பது பயனுள்ளதாக இருக்காது. அதேசமயம், என் எதிர்வினையின் ஒரு சில அம்சங்களைத் தெளிவுபடுத்துவது வாசகர்களுக்கு பயனளிக்கும் என்று நினைக்கிறேன்.

வரலாறு தனிமனிதர்களை உருவாக்குகிறதா, தனிமனிதர்கள் வரலாற்றை உருவாக்குகிறார்களா என்பது கோழி முதலில் வந்ததா, முட்டை முதலில் வந்ததா என்பது போன்ற விடைகூறக் கடினமான கேள்விதான். முதல் மனுஷி உருவானதையோ, முதல் கோழி உருவானதையோ நாம் பார்க்கவில்லை என்பதால் திட்டவட்டமாகச் சொல்ல முடியாது என்றுதான் தோன்றும். ஆனால், குழந்தைகள் பிறந்து வளர்வதை நாம் காணும்போது, சூழல்தான் அதன் வளர்ச்சியை, குணாதிசயங்களை தீர்மானிக்கிறது என்பதை நாம் உணர முடிகிறது. 

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே; அது நல்லவராவதும், தீயவராவதும் அன்னை வளர்க்கையிலே என்று ஒரு திரைப்படப் பாடல் உண்டு. பாவம், அன்னையின் மீது மொத்தப் பழியையும் போடாமல் “நல்லவராவதும், தீயவராவதும் சமூக வரலாற்று சூழலிலே” என்று கூறிக்கொள்ளலாம்.

இதற்கும் ஒருவர் மறுப்பு கூறலாம். ஒரே சூழலில் வளரும் எல்லோரும் ஒரே மாதிரி இல்லையே என்று. அதனால்தான், எந்த சூழலையும் முற்றிலும் நிர்ணயிக்கும் சக்தியாக பார்க்காமல், பல சாத்தியங்களை உள்ளடக்கியதாக பார்க்க வேண்டியதாகிறது. ஒருவரை சிறையில் முஸ்லீம் வார்டன் கொடுமைப்படுத்தினால், அவருக்கு ஏற்கனவே நல்ல முஸ்லீம் நண்பர்கள் இருந்தால், வார்டன் மீது வரும் கோபம் ஒட்டுமொத்தமாக முஸ்லீம்கள் மீதான கோபமாக மாறாது. 

வேறு வார்த்தையில் சொன்னால், ஒற்றைக் காரணங்கள் எதையும் நிர்ணயிப்பதில்லை எனலாம். எந்த ஒற்றைக் காரணமும் தனி மனிதரை நிர்ணயிப்பதில்லை என்பதுபோலவே எந்த ஒரு தனி மனிதரும் வரலாற்றை நிர்ணயிப்பதில்லை. வரலாறு தரும் சாத்தியங்களுக்கு உள்ளாகத்தான் செயல்பட்டு வரலாற்றை உருவாக்குகிறார்கள்.

இத்தகு விவாதங்களில் கார்ல் மார்க்ஸின் வழிகாட்டலைச் சுட்டாமல் கடக்க முடியாது. 'கடந்த காலம் கொடுத்த சுமைகளின் ஊடாகத்தான் மனிதர்கள் வரலாற்றை உருவாக்குகிறார்கள்' என்பதே அவர் சொன்ன அடிப்படை கருத்து.

கீழ்க்காணும்  வரிகளை மொழிபெயர்ப்பது அதன் அழகை குறைக்கலாம் என்பதால் ஆங்கிலத்திலேயே தருகிறேன். (Men make their own history, but they do not make it as they please; they do not make it under self-selected circumstances, but under circumstances existing already, given and transmitted from the past. The tradition of all dead generations weighs like a nightmare on the brains of the living. And just as they seem to be occupied with revolutionizing themselves and things, creating something that did not exist before, precisely in such epochs of revolutionary crisis they anxiously conjure up the spirits of the past to their service, borrowing from them names, battle slogans, and costumes in order to present this new scene in world history in time-honoured disguise and borrowed language.

இதன் காரணமாக வரலாற்றை புரிந்துகொள்வது, ஆராய்வது, பல்வேறு மனிதர்களின் வரலாற்று பங்களிப்பை மதிப்பிடுவது ஆகியவற்றில் இருவேறு போக்குகள் நிலவுவது உண்டு. ஒன்று, வரலாற்றைத் தனி மனிதர்களின் செயல்களமாக பார்ப்பது. இந்த பார்வைதான் 'விதி சமைப்பவர்கள்', 'மாஸ்டர்கள்' என்றெல்லாம் பிற்போக்காளர்களால் கூறப்படுவது. ஹெகல் World Historical Personages/ Figures என்று சித்தரித்ததுபோல. இதற்கு மாறான அணுகுமுறை வரலாற்றுப் போக்குகளை மையப்படுத்தி அதனுள் தனிமனிதர்கள் உருவாகி இயங்கிய விதத்தை ஆராய்வது. மார்க்ஸிய நோக்கில் வரலாற்று சூழல் என்று சொல்வதை, குறியியக்க நோக்கில் சாத்தியங்களின் சூழல் (Conditions of Possibility) என்று கூறலாம்.

அப்படியானால் தனி நபர்களின் வாழ்க்கை வரலாற்றிற்கு (biography) முக்கியத்துவம் இல்லையா என்ற கேள்வி எழும். அவசியம் அவற்றிற்கான தேவை இருக்கிறது. அது, அந்தந்த மனிதர்கள் இயங்கிய சூழல்களை நாம் முழுவதும் உள்வாங்க அவசியமானது. ஆய்வு நோக்கில் எழுதப்படும் வாழ்க்கை வரலாற்று நூல்கள் பெரிதும் பொது வாழ்க்கை அனுபவங்களை அந்த நபரை மையப்படுத்தி கூறுவதாக அமையும். 

ஓர் உதாரணமாக காந்தியைக்கூட உளவியல் நோக்கில் சுதிர் கக்கார் ஆராய்ந்து எழுதியது உண்டு. ஆனால், காந்தியின் வரலாற்று சாத்தியங்களை அறிய சுதந்திரவாதத்திற்கும், மரபுவாதத்திற்கும், புரட்சிவாதத்திற்கும் உலக அளவில் நடந்த பிரம்மாண்ட உரையாடலை நாம் புரிந்துகொள்வதுதான் மிகவும் முக்கியம். தால்ஸ்தோயும், தோரோவும் இல்லாமல் காந்தியைப் புரிந்துகொள்வது கடினம். அதை மனதில் கொண்டு அவருக்கு காலன்பாக்குடன் ஏற்பட்ட நட்பையும் குறித்து அறிவதில் தவறில்லை. ஆனால், காந்தியின் தனிப்பட்ட வாழ்க்கை சம்பவங்களை அறிவது இந்திய வரலாற்றை அறிவதற்கு இன்றியமையாதது என்று ஒருவர் கூறினால் நான் ஏற்க மாட்டேன். 

இது என்னுடைய ஆய்வுமுறை, அணுகுமுறை. காந்தியை வரலாற்றில் வைத்து பார்ப்பேனே தவிர, வரலாற்றை காந்தியினுள் வைத்து பார்க்க மாட்டேன். அவருடைய உளவியலை சித்தரிப்பதனால் வரலாற்றைப் புரிந்துகொள்ள நினைக்க மாட்டேன். அது தனி நபர் மையப் பார்வையாகும். நான் குறியியக்க நோக்கு கொண்டவன்.

இந்த இரண்டு அணுகுமுறைகளையும் முதலில் நாம் நுட்பமாக பிரித்து அறிய வேண்டும். ஒருவரது வரலாற்று பங்களிப்பை மதிப்பிடும்போது, 'அவர் நல்லவரா, கெட்டவரா?' என்ற நாயகன் திரைப்படக் கேள்வியை அதில் கொண்டு வரக்கூடாது. அப்படி செய்தால் மிக மோசமான வரலாற்றுப் பங்களிப்பை செய்தவரைக் கூட, அனுதாபத்துடன் பார்க்கத் தூண்டப்படுவோம். காந்தி – அம்பேத்கர் முரணை ஆராயும்போது காந்தி நல்லவரா, இல்லையா என்பதற்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது. அது மரபுவாதத்திற்கும், சுதந்திரவாதத்திற்கும் இடையிலான முரண்.

தேசியம் என்பது ஒரு நவீன அரசியல் கருத்தாக்கம். பதினேழாம் நூற்றாண்டில் விதைகள் தூவப்பட்டு, பதினெட்டாம் நூற்றாண்டில் செடியாக வளர்ந்து, பத்தொன்பதாம் நூற்றாண்டில் விருட்சமாகி, இருபதாம் நூற்றாண்டில் மொத்த உலகையும் தேசிய அரசுகளாக மாற்றி மானுடத்தைக் கூறுபோட்ட மாபெரும் வரலாற்று வியக்தி. தேசியம் இரண்டு வகையான போக்குகளை கொண்டது: ஒன்று சுயாட்சி, மக்கள் உரிமை நோக்கிலான தேசியம். மற்றொன்று பழைய இறையாண்மை, வல்லாதிக்க தேசியம்.

சுதந்திரவிய மக்களாட்சியை மலரச்செய்ய, சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றைச் செயல்படுத்த தேசியம் உதவும் என்ற அளவில் பல சான்றோர்கள் அதில் ஈடுபட்டதும் நிகழ்ந்தது. அவர்கள் சுயாட்சி சார்ந்த தேசியத்தை வலியுறுத்துவார்கள். அதிகாரப் பரவல் மூலம் மக்களின் உரிமைகள் மேம்பட, அவர்கள் சுயாட்சி வடிவங்கள் உருவாக வேண்டும் என நினைப்பார்கள். அதற்கு உதாரணம் காந்தி. இதற்கு மாறாக, இறையாண்மை, வல்லாதிக்க தேசியம் மிகவும் கவர்ச்சிகரமானது. இது எதிரிகளைப் புறத்தே கட்டமைத்து, அகத்தே முரண்களை மூடி மறைப்பது. அது சாவர்க்கர்.

சாவர்க்கர் (1883-1966), முசோலினி (1883-1945), ஹிட்லர் (1889-1945) ஆகிய மூவரும் உலகில் தேசியம் கொரோனா தொற்றுபோல உச்சகட்டமாகப் பரவியிருந்த சமயத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். அதில் இறையாண்மை வல்லாதிக்க தேசியத்தைத் தேர்ந்தெடுத்தவர்கள். இந்தப் போக்கு குறிப்பாக பொதுவுடமைச் சிந்தனைக்கு மிகப் பெரிய தடைக்கல்லாக உருவானது என்றால் மிகையாகாது. 

தேசம் என்பது ஒன்றுபட்ட சக்தி; அதற்குள் வர்க்க முரண் பேசுபவர்கள் தேச விரோதிகள் என்பதே இந்தச் சிந்தனையின் முக்கியமான பிரச்சினை. அதுவே பாசிஸமாக, நாசிஸமாக, இந்துத்துவமாக வடிவெடுத்தது. அதனால்தான் எவ்வளவு தூரம் வெகுஜன அரசியல் வடிவில் வந்தாலும், தேசியமும், சோஷலிஸமும் கீரியும், பாம்பும்போல முரண்படும். ஆனால், இறையாண்மை தேசியர்கள் தேசிய உணர்வு எல்லோருக்குள்ளும் புகுந்துவிட்டால் அதுவே சோஷலிஸம் என்பார்கள். பச்சைப் பொய். அதுபோல எங்கும் நிகழ்ந்ததில்லை. நிகழவும்போவதில்லை. விரிக்கில் பெருகும்.

காந்தி இந்திய தேசியத்தை சுயாட்சி நோக்கில் பேசியதில் உலக அளவில் ஒரு முன்னோடி. அதேபோல மதம் என்பதை அவர் வெகுஜன இறையியல் நோக்கில்தான் பார்த்தார். இறையுணர்வு என்பது, பக்தி என்பது மக்களை அறவியல் பாதையில் செலுத்தும் ஆற்றல் மிக்கது என்று நினைத்தார். அவர் பூசாரி வர்க்கத்தின் சாஸ்திரங்களையோ, வரலாறு கற்பித்த மத அடையாளத்தையோ நம்பவில்லை. வெகுஜன இறையுணர்வு நோக்கில்தான் அவர் 'கிலாஃபத் இயக்க'த்தையும் ஆதரித்தார். அதற்கு மாறாக சாவர்க்கர் ஜெர்மானியர்கள் தேசத்தை 'ஃபாதர்லாண்ட்' என்றதுபோல, தேசத்தை 'பித்ருபூமி' என்றார். அதில் தோன்றாத மதம், அந்த 'பித்ருபூமி'க்கு வெளியேயுள்ள ஒரு புனித அடையாளத்தை நம்புவது தேச விரோதம் என்று நினைத்தார். அவருடைய புகழ் பெற்ற 'எரிமலை' நூலிலேயே அவர், மொகலாய சாம்ரஜ்யம் மராத்தியர்களால் வீழ்த்தப்பட்டதைக் குறிப்பிட்டு, 'இதுவே இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கான அடித்தளம்' என்றும் கூறுகிறார். அதாவது இறையாண்மை இந்து அடையாளம்; முஸ்லீம்கள் அதற்கு உள்ளடங்கியிருக்கலாம். அதனால்தான் அப்படி முடியாவிட்டால் இரண்டு தேசங்களாக பிரியலாம் என்றும் பின்னாளில் சொன்னார்.

தேசியம் பேசுபவர்களுக்குள் எத்தனையோ வேறுபாடுகள் இருந்தாலும், வெகுஜன அளவில் தேசியம் பேசிய ஒருவரை முற்றிலும் புறமொதுக்காமல் மரியாதை செய்யும் சுதந்திரவாதப் பழக்கம் பலருக்கும் உண்டு. அதை வைத்து கருத்தியல் முரண்பாடுகளை குறைத்து மதிப்பிடுவதோ, யாரும் அப்படி மதிப்பிட வாய்ப்பளிப்பதோ ஆபத்தானது. வாழ்க்கை வரலாறு எழுதுவதும், வரலாற்றின் பிரம்மாண்டமான கோட்பாட்டு முரண்களை ஆராய்வதும் ஒன்றல்ல. எனவே, “சாவர்க்கரை சிலர் வழிபடுகிறார்கள், சிலர் வெறுக்கிறார்கள், உண்மை அவர் வாழ்க்கையை முழுமையாக அறிவதில் இருக்கிறது” என்பது மிகத் தவறான அணுகுமுறை.

வழிபடுகிறோமா, வெறுக்கிறோமோ என்பது தனி நபர் வாழ்க்கையில் அல்ல, கோட்பாட்டுத் தளத்தில் நாம் உலக வரலாற்றை எப்படிப் புரிந்துகொள்கிறோம் என்பதில்தான் அடங்கியுள்ளது. அந்த விதத்தில் காந்தியுடன் முரண்பட்ட அம்பேத்கரோ, பெரியாரோ, ஜின்னாவோகூட காந்தியைக் கொல்லத் தூண்டுமளவு கருத்தியல் முரண் கொண்டிருக்கவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அப்படி ஒரு வன்மமான கருத்தியல் முரணை காந்தியுடன் சாவர்க்கர் கொண்டது ஏன் என்பதே நமக்குத் தேவையான அரசியல் பாடமாகும்.

என் பார்வையில் மானுட எதிர்காலம் சுயாட்சி-கூட்டாட்சி, சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை நோக்கிதான் செல்ல வேண்டும். தேசியம் எந்த வடிவிலும் அதற்கு உதவக் கூடியதல்ல. அதிலும் மத அடையாளவாதம் (இந்துத்துவம்), ஆண்மையவாதம் (பித்ருபூமி), இறையாண்மை வல்லாதிக்க தேசியவாதம் பேசிய சாவர்க்கர் முற்றிலும் புறமொதுக்கப்பட வேண்டிய ஒரு மனிதர் என்பதை அறிவதே அவசியமானது!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ராஜன் குறை கிருஷ்ணன்

ராஜன்குறை கிருஷ்ணன், ஆய்வறிஞர். பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி.



1





பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

M.Gnanajothi    3 years ago

நல்ல கட்டுரை.நேர்மையான வாதம்.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

V NEELAKANDAN   3 years ago

முன்வைத்த கருத்துக்களின் கோட்பாட்டு அடித்தளத்தை மிகச் சிறப்பாக வெளியிட்டுள்ளார். தமிழில் பயன்படுத்தும் கலைச் சொற்களுக்கு இணையான ஆங்கிலத் தொடரை, குறைந்தபட்சம் முதல்முறை பயன்படுத்தும் போதாவது குறிப்பிடுவது புரிதலை எளிதாக்கும் என எனது விழைவைக் கூறுகிறேன். உண்மையில் தனிநபர் குறித்த விமர்சனம் அல்ல, தனிநபர் வாழ்ந்த கருத்தியல் சூழலை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது. காந்தியைப் புரிந்து கொள்வதில் அவர் தனிபட்ட முறையில் நல்லவரா கெட்டவரா என்பது முக்கியமல்ல என அவர் கூறுவது ஒன்றே அவரது விமர்சனம் தனிநபர் மீதானதல்ல என்பதற்குச் சான்று. திரு சமஸ் இது எதிர்வினை என்பதைவிட, இதனளவில் இது தனிக் கட்டுரை எனக் குறிப்பிட்டது நூறு சதவீதம் உண்மை.

Reply 10 0

Login / Create an account to add a comment / reply.

V NEELAKANDAN   3 years ago

முன்வைத்த கருத்துக்களின் கோட்பாட்டு அடித்தளத்தை மிகச் சிறப்பாக வெளியிட்டுள்ளார். தமிழில் பயன்படுத்தும் கலைச் சொற்களுக்கு இணையான ஆங்கிலத் தொடரை, குறைந்தபட்சம் முதல்முறை பயன்படுத்தும் போதாவது குறிப்பிடுவது புரிதலை எளிதாக்கும் என எனது விழைவைக் கூறுகிறேன். உண்மையில் தனிநபர் குறித்த விமர்சனம் அல்ல, தனிநபர் வாழ்ந்த கருத்தியல் சூழலை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது. காந்தியைப் புரிந்து கொள்வதில் அவர் தனிபட்ட முறையில் நல்லவரா கெட்டவரா என்பது முக்கியமல்ல என அவர் கூறுவது ஒன்றே அவரது விமர்சனம் தனிநபர் மீதானதல்ல என்பதற்குச் சான்று. திரு சமஸ் இது எதிர்வினை என்பதைவிட, இதனளவில் இது தனிக் கட்டுரை எனக் குறிப்பிட்டது நூறு சதவீதம் உண்மை.

Reply 7 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாஇந்திய வேளாண் சிக்கல் – மூன்றாவது வழிபங்குச்சந்தைகருச்சிதைவுதொலைத்தொடர்புசட்டப்பேரவைத் தேர்தல்குடல் புற்றுநோய்வாழ்க்கைஅனல் மின் நிலையம்ஒலிப்பியல்ஏழு கடமைகள்அகிலேஷ் யாதவ்மன்னார்குடிபி.ஏ.கிருஷ்ணன் ராஜன் குறைநடிகர் சங்கம்வெள்ளியங்கிரி மலைசமமற்ற பிரதிநிதித்துவம்கால் டாக்ஸிசெல்வாக்கை இழந்த ஜான்சன்பி.சி.கந்தூரிசமூகப் பிரக்ஞைத.வி.வெங்கடேஸ்வரன் கட்டுரைநடுத்தர வருமானம்மதிப்பெண்களை வாரி வழங்குகின்றனவா மாநிலக் கல்வி வாரமுசோலினிஇப்ராஹிம் இராவுத்தர்சிறுநீரகம் செயலிழப்பது ஏன்?இந்தியத்தன்மை என்பது குடியுரிமை - சாதி அல்லதாழ்வுணர்ச்சிபொது தகன மேடை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!