கட்டுரை, சமஸ், ஆசிரியரிடமிருந்து... 3 நிமிட வாசிப்பு

திமிருக்கான விலை

ஆசிரியர்
23 Jul 2022, 5:00 am
0

வாசகர்களோடு ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும் வகையில், ‘ஆசிரியரிடமிருந்து’ பகுதி வெளியிடப்படுகிறது. கூட்டங்கள், சமூகவலைதளங்கள் வழி ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும் குறிப்பிடத்தக்க செய்திகள் இங்கே இடம்பெறும்.

ள்ளக்குறிச்சி மாணவி சாவு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடம் கொடுத்திருக்கும் விலை அதிகம். தமிழ்நாடு முழுக்கவுள்ள தனியார் பள்ளிகள் இதுதொடர்பில் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கின்றன. 

என்னிடம் நேற்று ஒரு தனியார் பள்ளியின் நிர்வாகி பேசினார். “மக்களுடைய ஆவேசத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை, மாணவியை ஒரு பள்ளிக்கூடம் அடித்துக்  கொன்றிருக்கும் என்ற அளவுக்குப் பலரும் நம்புகிறார்களா?” 

நான் சொன்னேன்:

“நடந்த சம்பவங்கள் அனைத்தும் வருந்தத்தக்கவை.

ஒரு பள்ளிக்கூடம் தன்னுடைய மாணவியை அடித்துக் கொன்று, பின்னர் மாடியிலிருந்து தள்ளிவிட்டிருக்கும் என்று நம்பிதான் மக்கள் இவ்வளவு ஆவேசமாகப் பேசுகிறார்கள் என்று புரிந்துகொள்கிறீர்களா? அப்படி இல்லை. 

அது தற்கொலையாகவேகூட இருக்கலாம். நம் பள்ளியின் மாணவி உயிரிழந்திருக்கிறார் என்ற செய்தியை ஒரு பள்ளியின் நிர்வாகம் எப்படி அணுகியிருக்க வேண்டும்? சாவில் பாதிக்கப்பட்ட தரப்போடு, பெற்றோரோடு அது உடன் நின்றிருக்க வேண்டும். மாறாக, எடுத்த எடுப்பிலேயே எங்களுக்கு இதில் எந்தப் பொறுப்பும் இல்லை என்று பள்ளியைத் தற்காக்கும் அணுகுமுறையையே கையில் எடுத்தது. 

பள்ளி நிர்வாகிகளின் ஆரம்பப் பேட்டிகளையும் அதில் அவர்களுடைய உடல்மொழியையும் நீங்கள் பாருங்கள். துளிப் பரிவுணர்வு (Empathy) அதில் கிடையாது. பள்ளி நிர்வாகிக்கு ஆளும் பாஜகவோடு உள்ள நெருக்கம் உள்ளூரில் அப்பட்டமானது. உள்ளூரில் உள்ள ஏனைய கட்சிக்காரர்களைப் பணத்தைக் கொடுத்து சரிகட்டிவிடலாம் என்று முயன்றிருக்கிறார்கள். இந்த அணுகுமுறை அதிகார வர்க்கத்திடம் அழுத்தத்தை உண்டாக்கியிருக்கிறது. விசாரணைக்கு வந்த அவர்களும் பள்ளிக்கூடத்தைத் தற்காக்கும் வகையில், பரிவுணர்வு இல்லாமலேயே பாதிக்கப்பட்ட தரப்பிடம் பேசியிருக்கிறார்கள். 

முன்னதாக, உள்ளூர் அளவில் போராடச் சென்றவர்களிடம் பள்ளி நிர்வாகம் முறையாகப் பேசவில்லை என்று தெரிகிறது. இது எதிர்பார்க்கக் கூடியதுதான். எனக்குத் தெரிய நம்மூரில் நூற்றுக்குத் தொந்நூறு பள்ளி முதல்வர்கள் / தலைமையாசிரியர்களுக்கு இருக்கும் திமிர் வேறு எந்தத் துறையில் இருப்பவர்களிடமும் கிடையாது. எத்தனை பள்ளிகளில் நிர்வாகிகள் எல்லாப் பெற்றோரையும் முறையாக உட்காரவைத்துப் பேசுகிறார்கள் என்ற எளிமையான கேள்வியைக் கேட்டுக்கொண்டால் இதற்கான பதில் கிடைத்துவிடும். 

அரசுப் பள்ளிகளில் இங்கே கொஞ்சம் நிலைமை மேம்பட்டிருக்கலாம்; அதுவும் சமூகத்தின் ஜனநாயக மாற்றங்களை அரசு அலுவலகங்கள் பிரதிபலிப்பதன் தொடர்ச்சியாக - அரசின் ஓர் அங்கமாக - பள்ளிகளில் ஏற்பட்டுள்ள மாற்றம். தனியார் பள்ளிகளின் தடித்தனம் தனிப்பட்டது இல்லை. இதை இங்குள்ள சமூக இயங்கியலோடு இணைத்தே பார்க்க வேண்டும் என்று எண்ணுகிறேன். 

ன்றைக்கு நம் நாட்டிலுள்ள ஆகப் பெரும்பான்மை கல்வி நிறுவனங்கள்  நிலவுடைமைச் சமூகங்களிலிருந்து வந்தவர்களால் - பிராமணர்களில் தொடங்கி பிற்படுத்தப்பட்டோர் வரை - வந்தவர்களால் உருவாக்கப்பட்டவை.

தனியார் கல்வி நிறுவனங்கள் என்றாலே, மோசம் என்ற அணுகுமுறையைக் கொண்டவன் அல்ல நான்; நம் சமூகத்தின் வளர்ச்சிக்கு இந்த நிறுவனங்கள் அளப்பரிய பங்களிப்பைச் செலுத்தியிருக்கின்றன எனும் கருத்து எனக்கு உண்டு. 

கல்வி நிறுவனங்களை உருவாக்கும்போது, கல்வி இயல்பாகக் கோரும் சுயமரியாதை, சமூகநீதி, ஜனநாயகம்... இப்படியான சில  விழுமியங்கள் உண்டு. இவற்றுக்கு மாறாகக் காலங்காலமாகத் தங்கள் வீடுகளில் சாதியோடு சேர்த்து வளர்த்துவந்திருக்கும் நிலவுடைமைத் திமிரையே குலைத்து இங்குள்ள நிறுவனங்கள் கட்டப்படுகின்றன. அங்கே வெளிப்படும் மேலாதிக்க மனநிலையும், தடித்தனமும், கலாச்சாரமும் இந்த மண்ணின் வரலாற்றுத் தொடர்ச்சி.

பெற்றோர்களைப் பொறுத்த அளவில் அவர்கள் நிராதரர்கள். அவர்களுடைய வரிப் பணத்திலிருந்து ஆண்டுக்குப் பல ஆயிரம் கோடிகளைப் பெறும் அரசுப் பள்ளிகள் அவர்களைக் கிட்டத்தட்ட கை கழுவிவிட்டன. வேறு வழியின்றி தங்களுடைய உழைப்பின் பெரும் பகுதியை அவர்கள் இப்படியான தனியார் பள்ளிகளின் முன் வைத்து, குழந்தைகளை ஒப்படைக்கிறார்கள். குழந்தைகளின் எதிர்காலத்தை முன்வைத்து, கூடவே இத்தகு அவமானங்களையும் சுமக்கிறார்கள்.

மக்களிடம் ஒவ்வொருவரிடமும் சொல்ல ஏராளமான கதைகளும், வெளிப்படுத்த கோபமும் இருக்கும். ஏதோ ஒரு தருணத்தில் சீறி உடைத்துக்கொண்டு வெளிப்படும்போது இத்தகு விலையைக் கல்வி நிறுவனங்கள் தொடங்கி அரசு வரை கொடுக்க நேரிடுகிறது.

உண்மையாகவே பள்ளி நிர்வாகங்கள் இதையெல்லாம் கவலையோடு பார்க்கின்றன என்றால், ஒரு விஷயத்தைச் செய்யச் சொல்லுங்கள். தாளாளர்கள் -  தலைமையாசிரியர்களைச் சந்திக்க வரும் பெற்றோரை முதலில் உட்காரவைத்து அவர்கள் பிரச்சினையைப் பரிவோடு சில நிமிடங்கள் கேட்கச் சொல்லுங்கள்!”

நீண்ட பெருமூச்சுக்குப் பின் அவர் செல்பேசியை வைத்தார்!

- (சமஸ், முகநூல் பதிவு, 23|07|2022)


1


1
அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஜிஎஸ்டி தொடர்பான தீர்ப்பின் முக்கியத்துவம் என்ன?பார்ப்பனர்சித்திரம் பேசுதடிஅண்ணா நூலகம்அருண் மைராரிச்சர்ட் அட்டன்பரோமண்டல் கிராமம்பிஎஸ்எஃப்சாதிக் கொடுமைகளைத் தடுக்க அமெரிக்கா நடவடிக்கைவியக்க வைக்கும் ஹரப்ப நகரம் ‘பனவாலி’கான்ஷிராம்இந்தியமயம்விஜய் ரத் யாத்ராஇழிவுமச்சு நதிஇளைஞர் அணிசமஸ் - எஸ்.பாலசுப்ரமணியன்கிரிக்கெட்மதச்சார்பற்றஆடி பதினெட்டுசீருடைமணீஷ் சிசோடியாதசை வலிசக்தி வாய்ந்த இடத்தில் ராகுல்ஹெச்பிவிடி.வி.பரத்வாஜ்இ.பி.உன்னிகொரியா ஹெரால்டுஅசோவ் பட்டாலியன்செயலூக்கம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!