கட்டுரை, கல்வி, ஆசிரியரிடமிருந்து... 3 நிமிட வாசிப்பு

அசைந்து கொடுக்கக் கூடாது தமிழக அரசு

ஆசிரியர்
04 Nov 2022, 5:00 am
2

வாசகர்களோடு ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும் வகையில், ‘ஆசிரியரிடமிருந்து’ பகுதி வெளியிடப்படுகிறது. கூட்டங்கள், சமூகவலைதளங்கள் வழி ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும் குறிப்பிடத்தக்க செய்திகள் இங்கே இடம்பெறும்.

ல்வித் துறைக்கான தர மதிப்பீட்டில் தொடர் வீழ்ச்சியைச் சந்திக்கிறது தமிழ்நாடு. அடிப்படையில் பள்ளிக்கூடங்களின் - குறிப்பாக அரசுப் பள்ளிக்கூடங்களின் வீழ்ச்சிக்கு - இதில் முக்கியமான பங்கு உண்டு.

பொதுவெளியில் அரசுப் பள்ளிகளின் முக்கியத்துவம், அவற்றுக்கான வசதிகள், ஆசிரியர்களின் தேவைகளைப் பேசுவது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு அவற்றின் செயல்பாடுகளை மதிப்பிடுவதும் முக்கியமானது. அரசுப் பள்ளிகளுக்கு ஆதரவு என்ற பெயரில் அவற்றின் மோசமான செயல்பாடுகளுக்கு முட்டுக்கொடுப்பதோ, வாய் மூடியிருப்பதோ அயோக்கியத்தனம். 

தமிழ்நாட்டின் கல்வித் துறையில் இரு தசாப்தங்களில் நடந்த இந்த வீழ்ச்சிக்கு முகம் கொடுத்து, கறாரான பல நடவடிக்கைகளை இன்றைக்குத் தமிழக அரசு முன்னெடுப்பதைப் பார்க்கிறோம். கவலை தரும் விஷயம் என்னவென்றால், கணிசமான அலுவலர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இந்த நடவடிக்கைகள் பெரும் எரிச்சலை உண்டாக்கியிருக்கின்றன. குறிப்பாக, ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் பேசுகையில், இந்த அரசுக்கு எதிரான வெளிப்படையான ஆத்திரத்தைப் பார்க்க முடிகிறது. 

நேற்றைய தினம் என்னிடம் பேசிய ஓர் ஆசிரியர், "பள்ளிக்கல்வித் துறையையே முழுவதுமாகத் தூக்கியடிக்க வேண்டும்; சீக்கிரமே இதைச் செய்வோம்" என்றார். அதாவது, அதிகாரிகள் தொடங்கி அமைச்சர் வரை எல்லோரையும் மாற்றியமைக்க சங்கங்கள் முழு வேலையில் இறங்கியிருக்கின்றனவாம். தங்களுக்கு உள்ள வாக்கு வங்கி பலத்தால் இது சாத்தியம் என்றும் இது நியாயம் என்றும் அவர் பேசினார்.

துறையிலிருந்து தரப்படும் புதிய பணிகளையும், அவை தருவதாக சொன்ன பணிச்சுமைகளையும் தவிர இதற்கான காரணமாக அந்த ஆசிரியர் எதையும் குறிப்பிடவில்லை. பள்ளிக்கல்வித் துறை தொடர்பில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று பொதுவெளியில் பரப்பப்படும் அதிருப்திக்கு முக்கியமான காரணமும் இதுவே.

நண்பர்தான் என்றாலும், பொறுக்காமல் கேட்டேன், "இவ்வளவு கஷ்டம் தரும் வேலையைக் கட்டிக்கொண்டு ஏன் மாறடிக்கிறீர்கள்? உங்களிடம் அரசுப் பள்ளிகளில் படிக்க வரும் மாணவர்களின் பெற்றோர் ஒவ்வொருவரும் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க படும் பாடுகளையோ, தனியார் பள்ளி ஆசிரியர்கள் படும் பாடுகளையோ என்றைக்காவது யோசிக்க முடிந்தால் அரசு உங்களுக்குத் தரும் வேலைகளை ஒருநாளும் இவ்வளவு சுமையாகப் பார்க்க மாட்டீர்கள், இல்லையா?"

அவருக்குப் பேச ஒரு வார்த்தை இல்லை. 

ஆசிரியர் சங்கங்களே இந்த லட்சணத்தில்தானே இன்று இருக்கின்றன? சம்பளத்தைத் தவிர வேறு எதுபற்றி அவை பேசுகின்றன? இந்தியா முழுவதும் தாய்மொழிவழிக் கல்வி தொடர்பில் இன்று விவாதம் நடக்கிறது. தமிழ்நாட்டில் ஏதாவது ஓர் ஆசிரியர் சங்கம் இதுகுறித்துப் பேசியிருக்கிறதா? 

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சுமைகளை அறியாதவன் இல்லை நான். என்னுடைய பணி அனுபவத்தில் வருஷங்களாக ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை எவ்வளவோ வலியுறுத்திப் பேசியிருக்கிறேன், எழுதியிருக்கிறேன். இன்றும்கூட அரசுப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்பட பல விஷயங்களில் அவர்களுடைய குரலைப் பிரதிபலிக்கிறேன். உயிரைக் கொடுத்து வேலை செய்யும் பல ஆசிரியர்களை எனக்குத் தெரியும். அவர்களின் பொருட்டு பெரும் போக்கை நியாயப்படுத்திவிட முடியாது என்றே எண்ணுகிறேன்.

இந்தியாவில் ஆரம்பிக்கப்படும் 10இல் 7 பள்ளிகள் தனியார் பள்ளிகள் என்கிறது யுனெஸ்கோ ஆய்வு. உலகளாவியப் போக்கு என்றாலும், நம்முடைய நிலை மேலும் மோசமான இடத்தில் இருப்பதற்கு அரசுப் பள்ளிகளின் செயல்பாடே காரணம்.

நான் ‘தினமணி’ ஆசிரியர் இலாகாவில் இருந்த காலத்தில்கூட ஒவ்வொரு நாளும் உள்ளூர் பக்கங்களில் 'புதிய அரசுப் பள்ளி வேண்டும்', 'பள்ளியைத் தரம் உயர்த்த கோரிக்கை' என்று மக்கள் அமைப்புகளிடமிருந்து நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், போராட்டங்கள் அன்றாடம் செய்திகளாக வரும். இன்றைக்கு எந்தப் பத்திரிகையில், எத்தனை செய்திகளை அப்படி பார்க்க முடிகிறது? காரணம் என்ன? 

தமிழ்நாட்டின் இன்றைய சாதனைகளுக்குக் கடந்த காலத்தின் கல்வித் துறையும், ஆசிரியர்களும் ஒரு காரணம் என்றால், நாளைய சாதனைகள் / வீழ்ச்சிகளுக்கும் நிச்சயம் அவர்கள் ஒரு காரணமாக இருப்பார்கள். 

இன்றைய தமிழக அரசுக்கு உள்ள முக்கியமான கடமை, சீழ்பிடித்திருக்கும் கல்வித் துறையைச் சீரமைப்பது. கல்வித் துறைக்குத் தேவையான நிதியை அது ஒதுக்கட்டும்; ஆசிரியர்களுக்குத் தேவைப்படும் உள்கட்டமைப்புகளை அது செய்யட்டும்; ஆனால், பள்ளிகள் முறையாகச் செயல்படுவதைக் கறாராக உறுதிப்படுத்த வேண்டும். சொல்லப்போனால், அறுவைச் சிகிச்சை தேவைப்படும் இடம் அது. இல்லையென்றால், நாளை இந்த அரசின் பெயரும் சேர்ந்தே வரலாற்றில் அடி வாங்கும். 

கல்வித் துறையில் யாருக்கும் அசைந்து கொடுக்காமல், சீரமைப்புப் பணியை மேலும் தீவிரமாக தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும். மக்கள் துணை நிற்பார்கள். ஒரு நல்ல அரசு ஒருபோதும் வளைந்துகொடுக்கக் கூடாத இடம் இது!

- சமஸ், ஃபேஸ்புக் குறிப்பு, 04.11.2022

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

4





1

பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Saravanan P   2 years ago

Sometime back, a report on the corruption level in State government departments, revealed that the school education department was one in the top list of most corruptive departments. State government should be serious in this matter also, in addition to the various reform measures relating to this department.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

BABUJI S   2 years ago

நூறு சதவீதம் உண்மை. கடமை உணர்வோடு பணியாற்றும் ஆசிரியர்கள் மிகவும் குறைவு. அர்ப்பணிப்பு உள்ளவர்களை பார்க்கவே இயலாது. கண்காணிப்பு இல்லை. பல ஆசிரியர்கள் பணிக்கு வெளியில் பணம் சம்பாதிக்கும் தங்கள் வேலைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கல்விக்கு தருவதில்லை. அதுவரை கல்வித்துறை கொண்டு வரும் சீர்த்திருத்தங்களுக்கு மிகக் குறைவான பலன் ஏற்படும். அரசு உடன் நடவடிக்கை எடுப்பது அவசியம்.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

அம்பானியின் வறுமை‘கல்கி’ இதழ்சிஏஏகை நீட்டி அடிக்கலாமா?பஞ்சாப் காங்கிரஸ்தமிழ்நாட்டின் மொழிக் கொள்கைஊடகம்சமூக ஒற்றுமைமொழித் திணிப்புநீரியல் நிபுணர் எஸ்.ஜனகராஜன் பேட்டிகால்பந்து வீரர்சிற்றிலக்கியங்கள்மலம் அள்ளும் தொழில்ஜம்முராம ராஜ்ஜியம்ரோ எதிர் வேட்இந்திய குடிமைப் பணிகல்வியாளர்களுக்கு முதுகெலும்பு தேவைஅரசு செய்யாததால் நாங்கள் செய்கிறோம்: ஜெயமோகன் பேட்சமஸ்தானங்கள்ஆம் ஆத்மிசும்மா இருப்பதே பெரிய வேலைசிக்கிம்ஓய்வூதியக் காப்பீடுபுத்தகம்அமெரிக்கை நாராயணர்களே!இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்வேலையைக் காதலிஓய்வுமந்திர்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!