தலையங்கம், கல்வி, நிர்வாகம் 5 நிமிட வாசிப்பு

காவல் துறையின் அவமானம் கள்ளக்குறிச்சி கலவரம்

ஆசிரியர்
20 Jul 2022, 5:00 am
11

ஒரு படையெடுப்புபோலத் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது கள்ளக்குறிச்சி பள்ளி மீதான தாக்குதல். பல்வேறு ஊர்களில் இருந்தும் மோட்டார் சைக்கிள்களில், ஆயுதங்களோடு சில ஆயிரம் பேர் திரண்டு வந்து, ஒரு பள்ளியை நிதானமாக சூறையாடி, வாகனங்களை எரித்தழித்து, பொருட்களைக் கொள்ளையடித்து, இதையெல்லாம் செல்பேசியில் படம் பிடித்து காணொலியாகவும் சமூக வலைதளங்களில் பகிரும் அளவுக்கான ரௌடித்தனம் சாதாரண மனிதர்களிடம் எங்கிருந்து உருவாகிறது? 

இது கும்பல் மனநிலை உருவாக்கும் செயல்பாடு. ஒரு குறிப்பிட்ட புள்ளியை உருவாக்காமல் கும்பல்களை உருவாக்கி இப்படியான திட்டமிட்ட வன்முறையை நிகழ்த்திட முடியாது. அந்தப் புள்ளி எது?  எவற்றால் அந்தப் புள்ளி உருவாக்கப்பட்டது?

ஒரு மாணவி பள்ளி வளாகத்திலேயே மர்மமான முறையில் காயங்களோடு இறந்து கிடக்கிறார். பள்ளி நிர்வாகம் இதைத் தற்கொலை என்கிறது. பெற்றோரும் உறவினர்களும் பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்ட  கொலை என்கிறார்கள். மேலும், பாலியல் வன்முறைக்கு மாணவி  ஆளாக்கப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.

சம்பந்தபட்ட பள்ளி நிர்வாகமும், பள்ளிக்கல்வித் துறையும் உடனடியாகப் பரிவோடும், பொறுப்புணர்வோடும் இதை அணுகியிருக்க வேண்டும். அது நடக்கவில்லை. அடுத்து, போராட்டச் சூழல் உருவானபோது காவல் துறை, மாவட்ட நிர்வாகம் இணைந்து துரித விசாரணைக்கு ஏற்பாடுகளை செய்ததோடு, தம்முடைய நடவடிக்கைகள் மீது நம்பகத்தன்மையும் பாதிக்கப்பட்டோர் மீதான அக்கறையும் வெளிப்படும் வகையில் செயலாற்றி  இருக்க வேண்டும். அதுவும் நடக்கவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பாக பள்ளி மீதும், தொடர்ந்து காவல் மற்றும் மாவட்ட நிர்வாகம் மீதும் உள்ளூர் மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தி உணர்வுக்கான  அடிப்படையே அவை பரிவுணர்வையும் நம்பகத்தன்மையையும் வெளிப்படுத்தத் தவறின என்பதிலிருந்தே உருவானது. பள்ளி நிர்வாகிகளின் பேட்டிகள்,  அதிகாரிகளின் பேட்டிகள் எதுவுமே, ஆயிரம் கனவுகளுடன் வளர்க்கப்படும் ஒரு பிள்ளையை சந்தேகத்துக்குரிய வகையில் பிணமாகப் பார்ப்பது பெற்றோர்களுக்கு எத்தகைய வயிற்றெரிச்சலையும் துயரத்தையும் தரும் என்கிற வலியைப் பொருட்படுத்தவே இல்லை. ஒருவேளை, நடந்த சாவு தற்கொலையாகவே இருந்தாலும்கூட அதற்கும் நம்முடைய கல்வி அமைப்பு – சமூகச் சூழல் ஒரு காரணம் என்கிற குற்றவுணர்வு சம்பந்தப்பட்ட பள்ளிக்கூட நிர்வாகத்துக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இருக்க வேண்டுமா, இல்லையா? 

விசாரணை முடியும் முன்னரே “இது தற்கொலைதான்; பள்ளிக்கூட நிர்வாகத்தின் மீது தவறு இருப்பதாக தெரியவில்லை” என்கிற தொனி வெளிப்படுத்தப்பட்டது. இது பள்ளி தவறிழைத்திருப்பதான தோற்றத்தையும், அதைக் காவல் அலுவலர்கள்  மறைப்பதற்கான  உணர்வையும் உள்ளூர் மக்களிடம் உருவாக்கியது. மக்களிடம் ஆத்திரம் மூள முக்கிய காரணம் இதுதான்.

தனியார் பள்ளிகள் தவறிழைக்கும்போது போராட்டத்தில் இறங்கும் அரசியல் குழுக்கள் வழக்கம்போல இங்கும் போராட்டத்தில் இறங்கின. கூடவே உயிரிழந்த மாணவியுடைய சாதியின் பெயரால் சாதி அமைப்புகளும் களத்தில் இறங்கியிருக்கின்றன. காவல் துறையினரால் இரண்டையும் பிரித்தரிய முடியவில்லை.

சமூக வலைதளங்களில் சாதியரீதியான கடுமையான வெறிப் பிரச்சாரங்களும் அவதூறுகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அடுத்தடுத்தக் கட்ட நகர்வுகளில் சாதிய சக்திகள் முழுமையாகக் களத்தைத் தங்கள் கையில் எடுத்திருக்கின்றன. ஸ்ரீதர் வாண்டையாரின் அமைப்புக்கு இதில் முக்கியமான பங்கு இருப்பதாகப் பேசப்படுகிறது. 

சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சொந்தமானது என்றும் இறந்த மாணவி அகமுடையர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிகிறது. சமூக வலைதளங்களில் சாதியரீதியாகப் பரப்பப்பப்பட்ட வெறுப்புப் பிரச்சாரமே, மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆட்கள் திரண்டு வரக் காரணமாகி இருக்கிறது. பல பகுதிகளில் இருந்தும்  ஊர்வலம்போல கள்ளக்குறிச்சி வந்தவர்கள்  படையெடுப்புபோல பெரும் தாக்குதலை நிகழ்த்திவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

இவ்வளவும் ஐந்து  நாட்களில் நிதானமாக நடக்கிறது என்றால், தமிழகக் காவல் துறை என்ன செய்துகொண்டிருந்தது;  உளவுத் துறை என்ன செய்துகொண்டிருந்தது? தமிழகக் காவல் துறையின்  அவமானகரமான தோல்வி இது.  'தூத்துக்குடிபோல போராட்டக்காரர்களைச் சுட்டுக் கொல்வோம் அல்லது கள்ளக்குறிச்சிபோல வன்முறையாளர்களைச் சூறையாடவிட்டு, வாளாவிருந்து வேடிக்கை பார்த்திருப்போம்!' என்பதுதான் தமிழக காவல் துறை இன்று வந்தடைந்திருக்கும் இடமா? கையில் அடக்குமுறையை எடுக்காமல் சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்கும் ஆற்றலையும், முன்கூட்டி விஷயங்களைக் கணித்து, கடும் சூழல்களை எதிர்கொள்ளும் வல்லமையையும் தமிழகக் காவல் துறை இழந்துவிட்டதா? காவல் துறை ஸ்தம்பித்து நின்றது வெட்கக்கேடு!

ஒரு பிரச்சினையை முன்னிறுத்தி போராட்டம் நடக்கிறது என்றால், போராட்டக்காரர்களுடன் பேசுவதிலும், பேச்சுவார்த்தை வழியாகத் தீர்வு காண்பதிலும் என்ன சங்கடம்? அப்படியான ஆற்றலே இன்று அதிகார வர்க்கத்திடம் ஆவியாகிவிட்டதா?

வன்முறையின் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியரையும், காவல் கண்காணிப்பாளரையும்  பணியிட மாற்றம் செய்திருக்கிறது தமிழக அரசு. பரபரப்பான எந்தவொரு நிகழ்வும் அடுத்த சில மணி நேரங்களில் மொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்துவிடும் இன்றைய தகவல் தொலைத்தொடர்பு யுகத்தில், நடந்த சம்பவங்களுக்கான பொறுப்பை  வெறும் மாவட்ட நிர்வாகத்துடன் மட்டும் சுருக்கிட முடியாது. காவல் துறையின் மாநில அளவிலான உயர் அதிகாரிகள் இதற்குப்  பொறுப்பேற்கத்தான் வேண்டும். அவர்களுடைய இடையீடு, அவர்கள் கொடுத்த ஆலோசனைகள் என்ன என்பது வெளியே வர வேண்டும். இந்த விவகாரத்தில் விமர்சனத்துக்குரிய இன்னொரு தரப்பு ஆளும் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள். அந்த பிராந்தியத்தைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களோ, அமைச்சர்களோ கையோடு இறங்கிச் செயல்பட்டு பதற்றத்தைத் தணித்திருக்க வேண்டாமா? அரசியலர்களுக்கும் அரசு அலுவலர்களுக்கும் இடையிலான அணுகுமுறை இந்த விஷயத்தில் எப்படி இருந்தது; ஒருவேளை அலுவலர்களுக்கு  ஆளுங்கட்சியினரால் அழுத்தம் தரப்பட்டதா  என்பதும் விசாரிக்கப்பட வேண்டும். 

ஆட்சிமாற்றத்துக்குப் பின்னரும், இந்த ஓராண்டில் அதிக விமர்சனங்களைக் காவல் துறை தொடர்ந்து  எதிர்கொள்கிறது. முறையற்ற கைதுகள், விசாரணை கைதிகளின் மரணங்கள், இப்போது இத்தகு முன்னுதாரணமற்ற கலவரம்... இவையெல்லாமே தமிழகக் காவல் துறை பெரும் சீர்திருத்தத்தை வேண்டி நிற்பதைச் சொல்கின்றன. 

திமுக ஆட்சியின் மீதான முதல் களங்கமாக இந்தச் சம்பவம் அமைந்துவிட்டது. உளுத்துப்போன ஓர் அமைப்பைச் சீரமைத்து நிர்வகிக்க எல்லா இடங்களிலும் திறன்மிகு அலுவலர்கள் வேண்டும்; சீர்திருத்தத்துக்கான முயற்சிகள் தொடர் செயல்பாடாக நடக்க வேண்டும். நிர்வாகத் திறன் அற்ற அதிகாரிகளைப் பணியில் அமர்த்துவதும், தவறுகளுக்குப் பின்னரும் நீடிக்கவிடுவதும் அரசியல் தலைமையின் நிர்வாகக் குறைபாடாகவே பார்க்கப்படும். இதற்குரிய தீவிரத்துடன் இந்த விவகாரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அணுக வேண்டும். கலவரத்தில் சாதியத்தின் பங்கைப் பேசுவதிலும், நடவடிக்கை எடுப்பதிலும் ஏன் காவல் துறை அடக்கி வாசிக்கிறது என்பதும் புரிபடவில்லை. சாதிய சக்திகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சாதிய அமைப்புகள் - மதவிய சக்திகளிடம் ஈவிரக்கமே அரசு காட்ட வேண்டியதில்லை. இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ள சகலரும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். 

எல்லாவற்றுக்கும் மேல் கல்வியானது, சித்திரவதையாக மாறிவிடக் கூடாது. மதிப்பெண்கள் வழியிலான மதிப்பீடுகள் கொலைக் கருவிகளாகிவரும் காலத்தில் இருக்கிறோம். இதுபற்றி ஆழ்ந்த கவனத்தை நாம் செலுத்துவது அவசியம் ஆகிறது; அந்த இடத்தில் ஒரு சமூகமாக நம்முடைய தொடர் தோல்வியையே கள்ளக்குறிச்சி மாணவியின் மரணமும் உணர்த்துகிறது. 


6

6

1




பின்னூட்டம் (11)

Login / Create an account to add a comment / reply.

Narayanamoorthy. C   1 year ago

இதை உணர்ந்தாள் அரசுக்கு நல்லது - ஆசிரியர் குழுவுக்கு வாழ்த்துக்கள்

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Suresh kumar   1 year ago

அருஞ்சொல் அளும் அரசுக்கு மயிலிறாகல் வருடுகிறது. பிரச்சனையின் மையம் யார் என பேச தைரியம் வரவில்லையா ??? இல்லை ஆளும் அரசுக்கு கோவம் வரும் என்பதால் ஊமையானதா அருஞ்சொல்.?

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Sakthivel   1 year ago

திமுக ஆட்சி ஏற்பட்டதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நாம் சரியானதைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. என்றைக்கு நிதியமைச்சர் நிதியில்லை என்று ஒவ்வொன்றாக நிறுத்த ஆரம்பித்தார்களோ அப்போதே தோன்றியது இந்த ஆட்சி அரசின் ஆட்சியல்ல அதிகாரிகளின் ஆட்சி என்று. அதிகாரிகளின் சொல்லை மந்திரிகளும், மந்திரிகளின் சொல்லை முதல்வரும் கேட்க ஆரம்பித்ததால் இந்நிலை உருவாகியுள்ளது. திருத்திக்கொள்ள நேரம் உள்ளது, திருந்த மனம் உள்ளதா என்பதை சம்மந்தப்பட்டவர்கள் செயல்களில்தான் நிருபித்துக்காட்ட வேண்டும்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Rajendra kumar   1 year ago

இந்த அரசின் மீது அக்கறையுள்ள ஒவ்வொருவரின் முழுக்கருத்தும் இந்த கட்டுரையின் பிரதிபலிப்பாகத்தான் இருக்கும்... காவல்துறையின் செயல்பாடுகள் முதல்வரின் கம்பீரத்தை குறைக்கிறது.. குடும்ப அரசியலின் சூழலில் தமிழகம் திணறுகிறதா என்று எண்ணத் தோன்றுகிறது... திமுக வின் தேர்தல் வாக்குறுதிகள், தேர்தலின் கதாநாயகன் என்று பல கூட்டங்களில் பறைசாற்றினார்கள்... ஆனால் நிதியமைச்சரோ, அந்த வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்பட வாய்ப்பில்லை என்று வெளிப்படையாக தெரிவிக்கிறார்... இவையெல்லாம் , தமிழகத்தில் வலிமை பெற நினைக்கும் பாஜக விற்கு நல்வாய்ப்பாக அமையும்... தமிழகத்தின் ஒவ்வொரு தமிழனும் மாற்றத்தை எதிர்நோக்குகிறான்

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Kathiresan   1 year ago

நண்பர் பெரியசாமி அவர்கள் தெரிவித்துள்ள கருத்து மிகச்சரியானது. அதை நான் வழிமொழிகிறேன்.

Reply 2 0

Periasamy   1 year ago

நன்றி நண்பரே💪😊

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

I Poul Bharathi Rajkumar   1 year ago

உண்மை சார் இது போன்ற சம்பவங்கள் மாணவர்களின் மனநிலையை பாதிக்கிறது பெண்குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விகுறியாகிறது. ஏன் அரசு மௌனம் சாதிக்கிறது. அதிகாரிகளின் இட மாற்றம் என்ன பலனை தந்துவிட போகிறது. திமுக அரசின் மீது விழுந்த மிகப் பெரிய கலங்கம்.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

அறிவன்   1 year ago

உளுத்துப் போன உலுத்துப்போன அல்ல. செய்நேர்த்தியில் அரச நிறைய மாறவேண்டும். நல்ல கவர்னிங் என்றால் என்ன என்பது அரசுக்குப் புரியும் விதமாக ஒரு கட்டுரைத்தொடரே எழுதலாம். எழுதித்தர நான் அணியம். பிரசுரிக்கவும், உரிய அதகாரகளின் கவனத்தைக் கொரிப்பெறவும் முடியும் என்றால் சொல்லுங்கள், நான் எழுதுகிறேன்.

Reply 7 1

Login / Create an account to add a comment / reply.

அ.பி   1 year ago

கட‌ந்த ஆட்சியின் நீட்சியாகதான் இந்த ஆட்சி உள்ளது. மிக அதிகமான எதிர்பார்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.. CM Cell க்கு அனுப்ப படும் petitions அதைதான் பிரதிபலிதா க தெரிகிறது.

Reply 6 0

Login / Create an account to add a comment / reply.

Vidhya sankari    1 year ago

இந்த கட்டுரை முழுவதையும் பொதுமக்களின் கருத்தாகவே முதலமைச்சர் எடுத்துக் கொள்ள வேண்டும். சமூக விரோதிகள் பள்ளியை சூறையாடுவதை youtube இல் கண்ட பொழுது அதிர்ச்சியும் காவல்துறை, அரசு மீதான அவநம்பிக்கையும் பாதுகாப்பின்மையும் மேலோங்கியது.கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீதான நடவடிக்கை தொடங்கி இருப்பதை வரவேற்கிறோம், சட்டப்படி உரிய கடுமையான நடவடிக்கை அவர்கள் அனைவர் மீதும் எடுக்கப்படுவதே இனி இப்படிப்பட்ட செயல்கள் தொடராமல் தடுக்கும். சமூக வலைதளங்களில் வன்முறையைத் தூண்டுபவர்கள், பள்ளி நிர்வாகம், மாணவியின் பெற்றோர் இவர்கள் அனைவரது குரலும் ஒலித்தது. ஆனால் அரசின், காவல் துறையின் குரல் ஒலிக்கவில்லை. பாதிக்கப்பட்ட பெற்றோரிடம் கரிசனம் காட்டி, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நீதிமன்றத்தில் தண்டனை வாங்கித்தரப்படும் என்று உறுதியளித்து வன்முறையில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை பாயும் என்று எச்சரித்திருக்க வேண்டும். ஒரு பெருந்திரளின் உணர்வுகளைப் பாதிக்கும் இது போன்ற விஷயத்தில் அரசு செயல்படுவதோடு அது எடுக்கும் நிலைப்பாட்டை மக்களுக்கு சொல்வதும் இந்த சமூக வலைதளங்களின் காலத்தில் அவசியம் ஆகிறது. கல்வி, குழந்தை வளர்ப்பு சம்பந்தப்பட்ட நிபுணர்கள் உதவியோடு இவ்விஷயத்தை ஆராய்ந்து தேவையான மாற்றங்களைக் கொண்டு வருவதையும் பெற்றோர், ஆசிரியர், பள்ளி நிர்வாகங்களுக்கு விழிப்புணர்வூட்டுவதையும் இந்த அரசு செய்யவில்லை என்றால் வேறு எந்த அரசு செய்யும்? தனியார் பள்ளிகளை குழந்தைகள் நலம் சார்ந்து கடுமையான விதிமுறைகளுக்கு உட்படுத்த வேண்டும். தனியார் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் நலன் காப்பதும் பொதுச்சமூகத்தின், அரசின் கடமை.

Reply 6 0

Login / Create an account to add a comment / reply.

Periasamy   1 year ago

திரு. இறையன்பு, சைலேந்திர பாபு, திருமதி அமுதா போன்ற அதிகாரிகள் நியமிக்கப்பட்ட பொழுது மாற்றம் வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.. இப்போது ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. ஆளுமையற்ற அரசியல் தலைமையால் எதையும் சிறப்பாக செய்ய முடியாது.. திமுக அரசினால் நிறுத்தப்பட்ட திட்டங்கள் ஏராளம். தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றுவதில் ஜல்ஜாப்பு.. ஓராண்டு காலம் மக்களுக்கு ஊழிக்காலம்.

Reply 8 1

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

நிர்பயாநீட் தேர்வு சர்ச்சைகள்பழமையான நகரம்5 மாநிலத் தேர்தல்வளர்ச்சி நாயகர்நவீன வேளாண் முறைஊரக மேம்பாட்டு நிறுவனம்தொழிற்சாலைகள்சமஸ் கட்டுரை ராஜாஜி கலைஞர்நோக்கமும் தோற்றமும்பத்ம விருதுகள் அரசியல்மிதமானது முதல் வலுவானது வரைவெளி மூலம்ஏக்நாத் ஷிண்டேமதச் சிறுபான்மைவாசிக்க வேண்டிய 50 நூல்கள்அம்பேத்கரின் 10 கடிதங்கள்சமந்தா நாக சைதன்யாஒற்றைத் தலைவலிதமிழிசை சௌந்தரராஜன்வாட் வரிசட்டமன்றங்கள்ஈஸ்ட்ரோஜென்லாலு சமஸ்நீதிபதி!கண்கள்சமூக நலத் திட்டங்களும் அதிகாரப்பரவலாக்கமும்பிசிசிஐதனிப் பயிற்சி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!