கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு
அதிமுகவின் முஸ்லிம் வியூகம் ஏன் முக்கியமானது?
தமிழக அரசியல் தளத்தில் பேச்சை உருவாக்கியிருக்கிறது அதிமுக. எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்துக்குப் பிறகு, ஒரே தலைமையின் கீழ் அதிமுக அணிதிரண்டு நடத்திய ‘செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம்’ கவனம் ஈர்ப்பதாக அமைந்ததில் பல காரணங்கள் உண்டு. “பாஜகவுடன் உறவு இல்லை” என்ற அதன் திட்டவட்ட அறிவிப்பு அதில் முக்கியமான ஒன்று.
ஒரே கல், நான்கு குறி
பாஜகவிடமிருந்து தன்னை அதிமுக விலக்கிக்கொள்வது மூன்று வகைகளில் அதற்கு முன்னகர்வைத் தரும்.
1. தமிழக மக்களிடம் இயல்பாக உள்ள பாஜக எதிர் மனநிலையைத் தானும் தூக்கிச் சுமக்க வேண்டிய நிலை இனி அதிமுகவுக்கு இல்லை. மாநிலத்தில் ஆளும் கட்சியை விமர்சிப்பது போன்றே, மத்தியில் ஆளும் கட்சியையும் அதிமுகவால் விமர்சிக்க முடியும். ஆளும் அரசுகளுக்கு எதிரான ஓட்டுகளை ஒருங்கிணைக்க இது உதவும்.
2. அதிமுக உள்விவகாரங்களில் அத்துமீறி நுழைந்து, பழனிசாமியின் தலைமையையே கேள்விக்குள்ளாக்கியது பாஜக. தினகரன், பன்னீர்செல்வம் இரு தரப்பையும் உள்ளே அரவணைக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தது பாஜக. உறவை முறித்துக்கொண்டதால், இனி தன்னுடைய கட்சி முடிவுகளை அதிமுக சுதந்திரமாக எடுக்க முடியும்.
3. திமுக கூட்டணியில் உள்ள பல கட்சிகள் அழுத்தத்தில் உள்ளன. இந்தக் கட்சிகளில் பெரும்பாலானவை சித்தாந்தரீதியாக பாஜகவை எதிர்ப்பவை. பாஜகவுடன் உறவில் இருந்ததாலேயே அதிமுகவை விட்டும் இவை விலகியிருக்க வேண்டிய சூழல் இருந்தது. திமுகவை விட்டால், வேறு வழி இல்லை எனும் சூழல் இருந்தது. இப்போது அதிமுக கூட்டணிக்கான கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிறது.
4. முஸ்லிம்களுடைய ஓட்டுகள் திமுக, அதிமுக இரு தரப்பிலும் பிரிந்தே எப்போதும் சென்றன. 1998 மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்தபோது, திமுகவுடன் மொத்தமாக ஒதுங்கினர் முஸ்லிம்கள். ஆனால், 2004 தேர்தலோடு பாஜகவுடனான உறவை முறித்துக்கொண்டது அதிமுக. இதற்குப் பின் மீண்டும் பழைய நிலைக்கு முஸ்லிம்கள் திரும்பினர். 2019 தேர்தல் வரை இது நீடித்தது. அப்போது பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்த பிறகு, முஸ்லிம்கள் மொத்தமாக திமுகவுடன் சென்றனர். 2024 தேர்தலில் அவர்களை மீண்டும் தன் பக்கம் திருப்புகிறது அதிமுக.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
முஸ்லிம் ஓட்டுகள் ஏன் முக்கியம்?
அதிமுகவின் நான்கு குறிகளில் நாலாவது குறி - அதாவது முஸ்லிம்களை நோக்கிய அதன் வியூகம் - மிக முக்கியமானது. எப்படி?
இந்தியாவின் பல மாநிலங்களை ஒப்பிட தமிழ்நாட்டில் முஸ்லிம்களின் மக்கள்தொகை குறைவுதான். தென்னகத்தையே எடுத்துக்கொண்டால், கேரளத்தில் 26.5%, கர்நாடகத்தில் 13%, தெலங்கானாவில் 12.5%, ஆந்திரத்தில் 9.5% என்றால், தமிழகத்தில் 6% அளவுக்கே முஸ்லிம்கள் இருக்கின்றனர். அதாவது, சற்றேறத்தாழ 50 லட்சம் பேர் இருக்கின்றனர்.
சதவீத அடிப்படையில் முஸ்லிம்கள் குறைவு என்றாலும், தமிழக அரசியல் சூழல் பின்னணியில் முஸ்லிம்களின் எண்ணிக்கை முக்கியமானது. ஏனென்றால், இந்த எண்ணிக்கை ஒரு சில தொகுதிகளுக்குள் அடங்கிவிடவில்லை.
தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் விரவியிருக்கிறார்கள். ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் குறைந்தபட்சம் 50 ஆயிரம் பேர் முதல் 1.5 லட்சம் பேர் வரை பரவியிருக்கிறார்கள்.
இப்படிப் பல தொகுதிகளிலும் விரவியிருப்பது முஸ்லிம்களுக்கு ஒருவகையில் பலவீனம். ஏனென்றால், எந்த ஒரு தொகுதியிலும் அவர்கள் தனித்து நின்று வெல்ல இந்த எண்ணிக்கை போதாது. இன்னொரு வகையில் பலம். ஏனென்றால், எல்லாத் தொகுதிகளிலும் வெற்றிக்கான ஓட்டுகள் எண்ணிக்கையைத் தீர்மானிக்கும் வலு அவர்களுக்கு இருக்கிறது. மேலும், தமிழகத்தைப் பொறுத்த அளவில் ஆட்சியைத் தீர்மானிக்கும் இடைவெளியே பல சமயங்களில் சில லட்சம் ஓட்டுகள்தான்!
பாஜகவும் திராவிடக் கட்சிகளும்
நண்பர்களுக்காக நஞ்சு உண்ட கதைகளெல்லாம் புராணங்களில் மட்டும் நடக்கும் நிகழ்வு அல்ல; அரசியலிலும் அவ்வப்போது நடப்பதுதான். அதிமுகவில் தன்னையும், தன் தலைமையிலான அதிமுகவின் ஆட்சியையும் தக்க வைத்துக்கொள்ள பாஜகவுடன் கூட்டணி உறவு கொண்டிருந்ததே அன்றி இயல்பான கூட்டணி என்று பாஜக-அதிமுக கூட்டணியைக் கூறிட இயலாது. ஏனென்றால், பாஜகவுடன் கூட்டணியை உருவாக்கிக்கொண்டால் முடிவு என்னவாகும் என்று திமுக, அதிமுக இரு கட்சிகளுக்குமே தெரியும்.
திமுகவின் 1996-2001 ஆட்சிக் காலம் ஒப்பீட்டளவில் ஒரு நல்லாட்சிக் காலம். ஆனால், 1999இல் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் உறவு கொண்டு வென்ற திமுக, அடுத்து வந்த 2001 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவ வேண்டியிருந்தது.
அதிமுக 1998, 2004, 2019 மூன்று மக்களவைத் தேர்தல்களில் பாஜகவுடன் கூட்டணியுறவு கொண்டது. விளைவாக, அடுத்து வந்த 2006, 2021 சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வியைத் தழுவியது. 1998 கூட்டணியை 1999இல் முறித்துக்கொண்டதன் விளைவாகவே 2001 தேர்தலில் அதிமுகவால் வெல்ல முடிந்தது.
பாஜகவோ இந்தக் கூட்டணியால் பலன் பெற்றது. மக்களவைத் தேர்தல்களில் சில தொகுதிகளில் வெற்றி அடைந்தது மட்டுமல்ல; தமிழ் மக்களிடம் தன்னுடைய செல்வாக்கை வளர்த்துக்கொள்ளவும் பாஜகவுக்கு இது உதவியது.
விளைவாக, திமுக, அதிமுக இரு கட்சிகளுமே பாஜகவை அசூயையோடுதான் பார்க்கின்றன.
அதிமுக மீதான நிர்ப்பந்தம்
திமுக மட்டும்தான் பாஜகவை நிராகரிக்கிறது; அதிமுக அணைக்கிறது என்பது போன்ற ஒரு பார்வை பொதுவில் இருக்கிறது. அது உண்மையல்ல என்பதைக் கடந்த கால வரலாற்றுச் சூழலை நாம் அலசினால் புரியவரும்.
டெல்லியில் ஆட்சியில் உள்ள கட்சிகளுடன் திமுகதான் அதிகமான உறவை வைத்திருக்கிறது. எம்ஜிஆர் காலத்தில் காங்கிரஸோடு திமுக கூட்டணியுறவில் இருந்தபோதும், பெரும்பாலான காலம் அதிமுகவைத் தனித்தே முன்னகர்த்திச் சென்றார் எம்ஜிஆர். ஜெயலலிதா காலத்தில் காங்கிரஸோடு திமுக கூட்டணியுறவில் இருந்தபோதும், பெரும்பான்மைக் காலம் அதிமுகவைத் தனித்தே முன்னகர்த்திச் சென்றார் ஜெயலலிதா.
திமுக தலைமை அலுவலகத்தில், அன்றைய முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளுவிடமே மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் மத்திய புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போதும் காங்கிரஸுடன் கூட்டணியைத் தொடர்ந்தது திமுக. காரணம் 2ஜி வழக்குகள் நிர்ப்பந்தம் என்பதை ஊர் அறியும். ஜெயலலிதா, பழனிசாமிக்கு மட்டும் அந்த நிர்ப்பந்த நியாயம் பொருந்ததா?
இரு வரலாற்று நிகழ்வுகள், ஒரு சான்று
தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் எப்போதும் திமுக வட்டத்திலேயே இருக்கிறார்கள் என்பதான ஒரு பேச்சு இன்று திட்டமிட்டோ, அறியாமையாலோ பலரால் பேசப்படுகிறது. இது உண்மை இல்லை.
இரு விஷயங்களை நினைவுகூரலாம்.
திமுக ஆட்சியில், 1998 கோவை குண்டுவெடிப்புச் சம்பவத்தின் தொடர்ச்சியாகக் குற்றவாளிகளோடு எண்ணற்ற அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டதும், கணிசமான முஸ்லிம்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டதும் திமுக மீது கசப்பை உண்டாக்கின.
அடுத்து, 1999இல் தமுமுக சார்பில் நடைபெற்ற மாநாட்டில் ஜெயலலிதா சிறப்புரையாற்றினார். “முஸ்லிம் சகோதரர்களுக்கு நான் ஒரு உத்தரவாதம் தருகிறேன். முன்பு ஒரு தவறுசெய்துவிட்டேன். செய்த தவறை ஒப்புக்கொள்ளும் துணிச்சலும் தைரியமும் எனக்கு உண்டு. அந்தத் தவறுக்குப் பரிகாரமாக, பாஜக ஆட்சியைக் கவிழ்த்தேன். இனி ஒருபோதும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துக்கொள்ளாது. கடைசி வரை முஸ்லிம் மக்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருப்பேன். உங்கள் கஷ்டங்களில் பங்குகொள்வேன்” என்பதாக அந்தப் பேச்சு அமைந்திருந்தது.
இந்த இரண்டும் அடுத்த இருபதாண்டுகள் அதிமுகவோடு முஸ்லிம்களைப் பிணைத்து வைத்திருந்தன என்பதை மறந்துவிடக் கூடாது.
2006 சட்டமன்றத் தேர்தல் வரை, முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கும் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் கருணாநிதி, அதன் பிறகு அங்கே போட்டியிட விரும்பவில்லை. காரணம் என்ன?
1996இல் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி 77% வாக்குகளைப் பெற்றார். ஆனால், 2001இல் 51% வாக்குகளையே அவரால் பெற முடிந்தது. 2006 தேர்தலிலும் 50.90% வாக்குகளே கிடைத்தன. திமுகவின் முஸ்லிம் வாக்கு வங்கி எப்படி அதிமுக பக்கம் மாறியது என்பதற்கு ஒரு சான்று இது.
முஸ்லிம்களும் அதிமுகவும்
தமுமுகவின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சி 2009இல் தொடங்கப்பட்டது. அந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் இந்தக் கட்சிக்கு திமுக இடம் தர விரும்பவில்லை. முஸ்லீம் லீக் இருக்கும்போது ஏன் மற்றொரு அமைப்பு என்று கருதியது; இந்தப் புதிய தலைமுறையை உற்சாகப்படுத்தத் தவறியது.
2011 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா மூன்று இடங்கள் கொடுத்தார்; இரண்டில் வெற்றி. தமிழக முஸ்லிம்களின் முகங்களில் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹில்லாஹ், தமீம் அன்சாரி போன்றவர்களை முதல் முறையாகச் சட்டமன்ற உறுப்பினராக்கியது அதிமுகதான்.
புதிய நகர்வு பழைய சாத்தியம்
ஆக, அதிமுகவின் இந்த முடிவு சிறுபான்மைச் சமூகத்திடம் ஓர் அசைவை உண்டாக்கவே செய்யும்.
வரவிருக்கும் தேர்தலுக்கான உத்தியாக மட்டும் அல்லாமல், பாஜகவுடன் விலகியிருக்கும் முடிவை சித்தாந்த அடிப்படையிலும் அதிமுக எடுத்தது என்றால், ஜெயலலிதா பெற்ற பலன்களை நோக்கி பழனிசாமியும் நகர முடியும்!
தொடர்புடைய கட்டுரைகள்
பாஜக - அதிமுக முறிவு.. நல்ல முடிவு: சமஸ்
மீண்டெழட்டும் அதிமுக
அதிமுகவும் பாஜகவும் ஒன்றா?
சசிகலாவை நீக்கிவிட்டால் அதிமுக பரிசுத்தமாகிவிடுமா?
ஜெயலலிதாவாதல்!

2




1


பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
Thileeban 1 year ago
Lot of factual errors in this article, few are below 1) Author says Muslims are the reason for ADMK losing election in 2004, 2006 and 2009. In other place he is mentioning after Jaya gave assurance in 1999, Muslims backed her for 20 years 2) He is telling Kalaignar moved from Chepauk fearing Muslim votes, but J anabazhagan won 2011 despite of huge anti-incumbency. Author took 1996 elections as a reference point. But even in the previous elections also DMK got 50+% of votes only. ADMK Muslims will vote back to admk again as in 2006,2009
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.