கட்டுரை, இலக்கியம், ஆளுமைகள், மொழி 3 நிமிட வாசிப்பு
மணவை முஸ்தபா: அறிவியல் தமிழ் முன்னோடி
தமிழ் மீது அளப்பரிய பற்றுகொண்டிருந்த மணவை முஸ்தபா, நவீன அறிவியல் போன்ற துறைகளிலும் தமிழ் தடம் பதிக்க வேண்டும் என்ற அக்கறையோடு செயல்பட்ட அரிதான ஆளுமை. அறிவியல் தமிழ்த் தந்தை. அறிவியல் தமிழ் தொடர்பாக இவர் ஆற்றிய பங்கு அளப்பரியது.
பிரிட்டானிக்கா கலைக் களஞ்சியத்தைத் தமிழில் கொண்டுவருவதற்கான குழுவைத் தலைமையேற்று வழிநடத்தியவர் மணவை முஸ்தபா. சோவியத் ஒன்றிய அரசு ‘யுனெஸ்கோ கூரியர்’ இதழைத் தமிழில் கொண்டுவந்தபோது, அதன் ஆசிரியராக 35 ஆண்டுகள் செயல்பட்டவர். அறிவியலும் தொழில்நுட்பமும் சார்ந்த கலைச்சொல் அகராதிகளைக் கொண்டுவந்தது இவருடைய மிக முக்கியமான பங்களிப்பாகும். அறிவியல் தமிழ் அறக்கட்டளை தொடங்கினார். அறிவியல் தமிழ் கருத்தரங்கை முதன்முதலில் நடத்தினார்.
தமிழே மூச்சாக, தமிழே வாழ்க்கையாக வாழ்ந்த மணவை முஸ்தபா 2017 பிப்ரவரி 6 அன்று காலமானார். அதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸ் பொங்கல் விழாவிற்குச் சென்றபோது இவருடைய உடல்நலம் நலிவுற்றது. வாத நோயோடு தமிழ்நாடு திரும்பினார். இந்தக் காலகட்டத்தில் அவருடன் இருந்த அவரின் இளைய மகன் மருத்துவர் செம்மல் தன்னுடைய தந்தையின் இறுதிக் கால உணர்ச்சிமிகு தருணங்கள் சிலவற்றை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். தமிழ் மீது மணவை முஸ்தபா கொண்டிருந்த பற்றை இந்தத் தருணங்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
நாவில் நிற்காத தமிழ்
பிரான்ஸிலிருந்து திரும்பிய என்னுடைய அப்பா வாத நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கண்டறியப்பட்டது. இதற்கான சிகிச்சையின் பொருட்டு வெவ்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருந்தும், இதற்கிடையில் அவருடைய பேச்சு தடைப்பட்டுப்போனது.
தமிழையே சுவாசமாகக் கொண்டிருந்தவர் சரிவர தமிழை உச்சரிக்க முடியாமலானது. இதனால், மருத்துவர்கள் என்ன சொன்னார்கள் என்றால், அப்பாவைப் பேச்சுப் பயிற்சிக்கு அனுப்ப வேண்டும் என்று. இதை அப்பாவிடம் தெரிவித்தபோது அவர் கேள்விக்குறியுடன் எங்களைப் பார்த்தார். “எனக்கே தமிழ் பேசுவதற்குப் பயிற்சியா?” என்று கேட்பதுபோல அந்தப் பார்வை இருந்தது. நியாயமானதுதான். ஆனால், எங்களுக்கு வேறு வழி இருக்கவில்லை. என்னுடைய குடும்பமே வற்புறுத்தியதால் இறுதியில் பயிற்சிக்குச் செல்ல இணங்கினார்.
முதல் நாள் பயிற்சிக்குப் போனார். உற்சாகமாகத் திரும்பிவருவார் என்று பார்த்தால் அவருடைய முகத்தில் வருத்தம் படர்ந்திருந்தது. இரண்டாம் நாளும் அப்படியே. மூன்றாம் நாள் போய்விட்டுத் திரும்பியவர் இனிப் பயிற்சிக்குப் போக முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அவருடைய மறுப்பில் மூர்க்கம் இருந்தது. எங்களால் முன்புபோல அவரை இணங்கவைக்க முடியாது என்று தோன்றும் அளவுக்கு வெளிப்படுத்திக்கொண்டார்.
பிறகு, என்ன காரணம் என்று கேட்டோம். அதற்கு அவர் சொன்ன பதிலைக் கேட்டு நாங்கள் எல்லோரும் உணர்ச்சிவசப்படும்படி ஆயிற்று. “எனக்கு இப்போது தமிழ் உச்சரிப்பு சரியாக வரவில்லை. ழ, ல எல்லாம் தவறாக உச்சரிக்கிறேன். இந்தக் கொடுமையை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. எனக்குப் பேச்சே வரவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால், தவறான தமிழ் உச்சரிப்பை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது” என்றார். அவ்வளவுதான். அதன் பிறகு பயிற்சிக்குப் போவதை நிறுத்திவிட்டார்.
பணி விலகலே நன்று!
இன்னொரு நிகழ்வு. தமிழ்நாடு அரசின் அறிவியல் தமிழ் மன்றத் தலைவராக பொறுப்புவகித்தபோது, அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதியிடம், “என்னால் சரிவர தமிழ்ப் பணி செய்ய இயலவில்லை. இப்படி இருக்கும்போது நான் அரசுச் சம்பளம், கார் போன்ற வசதிகளைப் பயன்படுத்துவது முறையல்ல” என்றார்.
ஆனால், அப்பாவின் ஆளுமையைப் பற்றிக் கலைஞருக்குத் தெரியும் என்பதால், “நீங்கள் தொடர்ந்து இருக்க வேண்டும். ஒருவேளை போக்குவரத்து உங்களுக்குச் சிரமமாக இருந்தால் தற்போது இயங்கிவருகிற அலுவலகத்தின் இடத்தை உங்கள் வீட்டின் அருகிலேயே மாற்றுகிறேன்” என்றார். சொன்னதுபோல் அண்ணா நகருக்கு மாற்றப்பட்டது. அவருக்குக் கீழே பல உதவியாளர்கள் இருந்தபோதும் அவர் அந்தப் பதவியை விரும்பவில்லை.
திடீரென்று தன்னுடைய உதவியாளரை அழைத்து, “என்னால் செயல்பட முடியவில்லை. தொடர்ந்து நான் பணியில் நீடிப்பது தமிழுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம்” என்று சொல்லிவிட்டு வேலையை ராஜிநாமா செய்தார்.
தமிழ் அன்னைக்கும் பங்கு
அவருடைய இறுதி நாட்களில் அவரின் நண்பரும் வழக்கறிஞருமான அப்துல் ரஸாக் எங்கள் வீட்டிற்கு வந்தார். எங்கள் தந்தை நல்ல ஆரோக்கியத்துடன் நலமாக இருக்கும்போது, அதாவது அவருக்குக் கிட்டத்தட்ட 60 வயது இருக்கும்போது எழுதிய உயில் ஒன்றை எங்களிடம் கொடுத்தார். யார் யாருக்கு சொத்தில் பங்கு என்ற விவரம் அதில் இருந்தது.
எனது அண்ணன் அண்ணல், அக்கா தேன்மொழி, நான் (செம்மல்) ஆகிய மூன்று பேருக்கும் பங்கு பிரித்திருந்ததைப் போல, நான்காவதாகத் தமிழ் அன்னைக்கும் ஒரு பங்கு பிரித்திருந்தார். நாங்கள் தற்போது வசிக்கும் வீட்டைக் கட்டும்போதே இவ்வாறான திட்டத்தை அவர் தன் மனதில் வைத்திருக்கிறார் என்பது அப்போதுதான் எங்களுக்குத் தெரியவந்தது.
வீடு கட்டும்போதே தமிழ் அன்னை வீட்டிற்குச் செல்வதற்கு எனத் தனிப் பாதை விட்டிருந்தார். எங்கள் மூன்று பேருக்குமான இடத்திற்கும் இதற்கும் சிறு இடைவெளி இருந்தது. இந்த இடத்தைப் பிற்காலத்தில் தனியாகப் பயன்படுத்துவதற்கு ஏற்ப இந்த இடம் கட்டமைக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் இது எங்களுக்கு மர்மமாகவே இருந்துவந்தது. இந்த உயிலைப் படித்த பிறகுதான் மர்மம் விலகிற்று. தற்போது இந்த இடத்தை நாங்கள் வாடடைக்கு விட்டு அதில் கிடைக்கும் வருவாயை அறிவியல் தமிழ் அறக்கட்டளைக்கு வழங்கிவருகிறோம்.
செம்மல் கொண்டுள்ள வருத்தம்
எதிர்காலத்தில் உலகத் தமிழர்கள் தமிழ்ப் பணிக்காக சென்னை வந்தால் தங்குவதற்காக, ‘தமிழுக்கான வெள்ளை அறை’ என்று பெயரிட்டு தமிழ்ச் சேவையே தொடங்கவிருக்கிறார் மருத்துவர் செம்மல். மூன்று நாட்கள் வரையில் இலவசமாகத் தங்குவதற்காக பிற்காலங்களில் இந்த ‘தமிழுக்கான வெள்ளை அறை’ வழங்கப்படும். விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்துக்கு 500 மீட்டர் அருகில் இவ்விடம் அமையவுள்ளது இதன் சிறப்பம்சமாகும்.
தமிழகத்தில் புகழ் பெற்ற அமைப்புகளாலும் நிறுவனங்களாலும் மணவை முஸ்தபா கௌரவிக்கப்பட்டுள்ளார். 60க்கும் மேற்பட்ட விருதுகள். தமிழ்நாடு அரசு சார்பிலே 5 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசால் இவருடைய வாழ்க்கை 7 மணி 20 நிமிட அளவில் பதிவுசெய்யப்பட்டு டெல்லி ஆவணக்காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது. 30க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார். அதில் 7 நூல்கள் இஸ்லாம் சார்ந்தவை. ‘இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்’ நூல் தமிழ்நாடு அரசின் பரிசு பெற்றது.
மணவை முஸ்தபா போன்ற அரிதான ஆளுமையை உரிய வகையில் அங்கீகரிக்கவும் கொண்டாடவும் மற்ற சமூகங்கள் முனைப்பு காட்டிய அளவுக்குத் தமிழ் பேசும் முஸ்லிம்கள் முனைப்பு காட்டவில்லை என்ற வருத்தம் செம்மலுக்கு உண்டு!

3






பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.

புதுமடம் ஜாஃபர் அலி
63801 53325
பி.ஆர்.அம்பேத்கர்
சி.என்.அண்ணாதுரை
ஞான. அலாய்சியஸ்
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
சமஸ் | Samas
Be the first person to add a comment.