கட்டுரை, தொடர், தமிழ் ஒன்றே போதும் 5 நிமிட வாசிப்பு

தமிழாசிரியர் வரலாறு

பெருமாள்முருகன்
17 Jun 2023, 5:00 am
3

நான் 1980களில் தமிழ் இலக்கிய மாணவனாக இருந்தபோது பிற துறையில் பயின்ற நண்பர்கள் ‘புலவா’ என்று பட்டப் பெயரிட்டு என்னை அழைத்தார்கள். பயிலும் பாடம் சார்ந்து வேறெவருக்கும் பட்டப்பெயர் கிடையாது. தமிழிலக்கியம் பயில்வோருக்கு மட்டும் ஏன் ‘புலவர்’ பட்டம்? நெருங்கிய நண்பர்களிடம் “அப்படி அழைக்க வேண்டாம்” என்று சொல்லிக் கோபித்ததுண்டு. அந்தப் பெயருக்குப் பின்னிருக்கும் வரலாறு எனக்குத் தெரியாது.

இளங்கலைப் பட்டப் படிப்பாகத் தமிழிலக்கியப் பாடம் வருவதற்கு முன்னர் தமிழிலக்கியம் பயில்பவர்களுக்குப் ‘புலவர்’ பட்டம் வழங்கப்பட்டது என்பதை வெகுகாலத்திற்குப் பிறகே அறிந்தேன். புலவர் இருந்தது. பிறகு பி.லிட். வந்தது. பி.லிட். பட்டப் படிப்பு இப்போதும் சில கல்லூரிகளில் உள்ளது. பகுதி 2இல் ஆங்கில மொழிப்பாடம் இப்படிப்பில் கிடையாது. அதன் பின்னரே பி.ஏ. தமிழிலக்கியப் பட்டப் படிப்பு. சரி, புலவர் படிப்புக்கு முன்னால் என்ன இருந்தது? 

வரலாற்றாசிரியரின் தமிழ் தேடல்

உ.வே.சாமிநாதையர் எந்தக் கல்லூரியிலும் சென்று படித்தவரல்லர். குருகுலக் கல்விமுறையில் பயின்றவர். ஆனால், கும்பகோணம் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக (‘தமிழ்ப் பண்டிட்’ என்பது அப்போதைய வழக்கு) இருந்தார். அவருக்கு முன் தமிழ்ப் பண்டிதராக அக்கல்லூரியில் பணியாற்றிய தியாகராச செட்டியாரின் பரிந்துரை, அவரது கல்வியறிவைப் பரிசோதிக்கும் நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டும் சேர்ந்து அவருக்குப் ‘பண்டிட்’ பணியைப் பெற்றுக் கொடுத்தன. நவீனக் கல்விமுறையில் பயிலாத அவர் நவீனக் கல்விமுறையில் பயிற்றுவிக்கும் ஆசிரியரானார்.

அறிவியல், கலைப் பாடங்களைப் பயிலும் மாணவர்களுக்குத் தமிழ்ப் பாடமும் இருந்தது. அதைப் பயிற்றுவிக்கும் ஆசிரியராக அவர் இருந்தார். தமிழிலக்கியம் அப்போது பட்டப் படிப்பாக உயர்கல்வியில் வரவில்லை. எப்போது நவீனக் கல்விக்குள் தமிழிலக்கியம் வந்தது? அதைத் தேடிப் போனால் ‘தமிழாசிரியர் வரலாறு’ ஒன்றை விரிவான தளத்தில் கண்டடையலாம்.

அதைக் கண்டடையும் தேடலில் ஒருவர் ஈடுபட்டார். அவர் தமிழாசிரியர் அல்லர்; வரலாற்றுப் பேராசிரியர். நவீனத் தமிழ்நாட்டு வரலாற்றுக்குத் தம் தமிழ், ஆங்கில நூல்களால் பெரும்பங்களிப்பு செய்துள்ள வரலாற்றறிஞர் ஆ.இரா.வேங்கடாசலபதிதான் அவர். ஆங்கிலத்தில் அவர் எழுதிய ‘ஃப்ரம் புலவர் டு ப்ரொஃபெஸர்: பாலிடிக்ஸ் அண்ட் த ப்ரொஃபசனலைசேஸன் ஆஃப் தமிழ் பண்டிட்ஸ்’ (From Pulavar to Professor: Politics and the Professionalization of Tamil Pandits) என்னும் விரிவான கட்டுரையை ‘வொர்கிங் பேப்பர் சீரீஸ்’ (Working Paper Series) என்னும் வரிசையில் ‘மேக்ஸ் வெபர் ஃபௌண்டேசன்’ (Max Weber Foundation) வெளியிட்டுள்ளது.

முப்பதாண்டுகளுக்கு மேல் உழைத்து ஆவணச் சான்றுகளைத் திரட்டி 141 அடிக்குறிப்புகளுடன் அவர் எழுதியுள்ள இக்கட்டுரை நூலாக விரியும் தன்மை கொண்டது. இதில் தமிழாசிரியரிகளின் துயர்மிகு நிலையும் போராட்ட வரலாறும் பதிவாகியுள்ளன. வியப்பிற்குரிய பல தகவல்களை இக்கட்டுரை பொதிந்து வைத்துள்ளது. 

முன்ஷியிலிருந்து பண்டிட்…

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பிற ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தைத் தமிழாசிரியர்கள் இன்று பெறுகின்றனர். எல்லா வகைப் பதவிகளுக்கும் தமிழ்ப் படிப்பும் தகுதியுடையதாக இருக்கிறது. நூறாண்டுகள் என்ன, ஐம்பதாண்டுகளுக்கு முன்னால்கூட இந்த நிலை இல்லை. மொழிகளில் தமிழைக் கீழாக வைத்துப் பார்த்தனர். ஆகவே, தமிழாசிரியர்களும் கீழான நிலையிலேயே இருந்தனர். 1810களில் ஆங்கில இளம் அதிகாரிகளுக்கு இந்திய மொழிகளைக் கற்பிக்கும் திட்டத்தில் தமிழாசிரியர்களும் அமர்த்தப்பட்டனர். செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்தே நவீனத் தமிழாசிரியர் வரலாறு தொடங்குகிறது. 

பின்னர் மெக்காலே கல்விமுறைப்படி ஆங்கில அரசு நிறுவிய பள்ளிகளில் வட்டார மொழியாகத் தமிழைக் கற்பிக்க ஆசிரியர்களை நியமித்தனர். சென்னையில் மாநிலக் கல்லூரியைத் தொடங்கியபோது அங்கும் வட்டார மொழியாகத் தமிழைக் கற்பிக்க ஆசிரியரை நியமித்தனர். இப்படித் தொடங்கினாலும் தமிழ்நாட்டில் முதன்மை மொழியாகத் தமிழ் இல்லை. பிறருக்கு நிகரான மதிப்பைத் தமிழாசிரியர்களுக்கு வழங்கவில்லை. 1880வரை தமிழாசிரியர்களுக்கு ‘முன்ஷி’ என்றுதான் பெயர். அதன் பிறகு ‘பண்டிட்’ எனவாயிற்று. பிற ஆசிரியர்களைவிட மிகக் குறைவான ஊதியத்தையே தமிழாசிரியர்களுக்கு வழங்கினர். ஆங்கிலம், சம்ஸ்கிருதம் ஆகியவையும் மொழிப் பாடங்களே. அவற்றைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இருந்த மதிப்பும் ஊதியமும் தமிழாசிரியர்களுக்கு இல்லை. 

தமிழாசிரியராக ஒரு ஆங்கிலேயர் பணியாற்றினால் அவருக்கு ஊதியம் மிகுதி. அதே பணியைச் செய்யும் தமிழருக்குக் குறைவு. 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கல்வித் துறை அதிகாரி ஒருவர் ரூ.2000 ஊதியம் பெற்றுக்கொண்டிருந்தார். அரசுக் கல்லூரி முதல்வரும் பிற துறை ஆசிரியர்களும் ரூ.750 ஊதியம் பெற்றனர். அப்போது பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழாசிரியராகப் பணியாற்றி 1880இல் ஓய்வுபெற்ற தியாகராச செட்டியார் ரூ.50 ஊதியம் பெற்றார். இந்த நிலை மாறுவதற்கு நூறாண்டு காலம் ஆயிற்று. 

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

தமிழாசிரியர்கள் தற்குறிகளா?

பெருமாள்முருகன் 27 May 2023

வெறும் கதை சொல்லலா தமிழ்ப் பாடம்?

இந்தியாவின் பண்பாட்டு அடையாள மொழியாகச் சம்ஸ்கிருதத்தையே கருதினர். 1864இலிலேயே சம்ஸ்கிருதத்துக்கு எனச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் துறை உருவாக்கப்பட்டது. ஆசிரியர் நியமிக்கப்பட்டார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறை 1936இல்தான் உருவாக்கப்பட்டது. அப்போது தமிழில் இளங்கலை, முதுகலைப் படிப்புகள் வரவில்லை. 1960களில்தான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் அப்படிப்புகள் உருவாக்கப்பட்டன. பிற துறை ஆசிரியர்களே பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தமிழ்ப் பாடத்தை நடத்தலாம் என்று கருதிய நிலையும் இருந்தது. 

நான் 2020இல் கல்லூரி முதல்வர் ஆனபோது என் சக அறிவியல் ஆசிரியர் ஒருவர் “தமிழை யார் வேண்ணாலும் நடத்தலாம். கத சொல்றதுதானே. அதுக்குத் தனியாசிரியர் எதுக்கு?” என்றார். “தமிழ்ப் பாடத்துல ஒருபகுதிய நான் குடுக்கறன். உங்க பாடத்துல ஒருபகுதிய நீங்க குடுங்க. ரண்டு பேரும் ஒருநாள் அவகாசம் எடுத்துக்கலாம். அடுத்த நாள் நீங்க வந்து தமிழ்ப் பாடத்த நடத்துங்க. நான் உங்க பாடத்த நடத்தறன். யாரு நல்லா நடத்தறாங்கன்னு மாணவர்கள் சொல்லட்டும்” என்று அவரைச் சவாலுக்கு அழைக்க வேண்டியதாயிற்று. பன்னிரண்டாம் வகுப்பு வரை அறிவியலும் கணிதமும் பயின்று சிறந்த மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்ற தைரியத்தில் அந்தச் சவாலை விடுத்தேன். தமிழ்ப் பாடம் என்பது வெறும் கதை சொல்லல் என்னும் பார்வையை வேறு எப்படித்தான் எதிர்கொள்வது? தாய்மொழிப் பாடம் பற்றி இத்தனை குறைவான மதிப்பீட்டைக் கொண்ட சமூகத்தை உலகில் வேறெங்கும் காண முடியாது. இந்த மதிப்பீட்டுக்கு எதிராகத்தான் ‘தமிழ் தமிழ்’ என்று இன்றும் உரக்கக் கூவ வேண்டி இருக்கிறது.  

கல்லூரி முதல்வர் வெவ்வேறு துறை நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டியிருக்கும். அந்தத் துறை ஆசிரியர்களிடம் எழுதிக் கொடுக்கச் சொல்லி அதை வாசித்து முதல்வர் ஒப்பேற்றுவார். நான் அவ்வழக்கத்தைக் கைக்கொள்ளவில்லை. எந்தத் துறை நிகழ்வுக்குச் சென்றாலும் அத்துறை சார்ந்து பொதுப் பார்வையில் பேசுவதற்கு எனக்கு விஷயங்கள் இருந்தன. தாவரவியல் துறை விழா என்றால் சூழலியல் சார்ந்து பேசுவேன். மரங்களை அறிவதில் எனக்குச் சிறுவயதிலிருந்தே ஆர்வம் உண்டு.

கல்லூரி வளாகத்தில் இருக்கும் நான்கைந்து மரங்களைப் பற்றிப் பேசுவேன். ‘ஆரியர் கயிறாடு பறையின் கால் பொரக் கலங்கி வாகை வெண்ணெற்று ஒலிக்கும் வேய்பயில் அழுவம்’ பற்றி மட்டும் ஒரு நிகழ்வில் பேசினேன். விலங்கியல் துறையில் ஒருமுறை ‘பறவை பார்த்தல்’ பற்றிப் பேசினேன். பறவையியலாளர் மா.கிருஷ்ணன் குறித்துப் பேசியதும் உண்டு. தமிழாசிரியர் தன்னை நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டும். பிற துறை ஆசிரியர்களுக்கு அந்த நிர்ப்பந்தம் இல்லை. அவர்கள் எளிதாக ‘எனக்குத் தமிழில் பேச வராது’ என்று சொல்லிவிடலாம்; ‘நான் இந்தத் துறை சார்ந்தவனல்ல’ என்று தற்காத்துக்கொள்ளலாம். நான் அப்படிச் சொன்னால் ‘தமிழாசிரியருக்கு ஒன்றும் தெரியாது’ என்றே கருதப்படுவேன்.  

தமிழாசிரியர்கள் மீதான கற்பிதங்கள்

தமிழாசிரியர்கள் நவீனமாகவில்லை என்றும் பழங்காலச் சிந்தனைகளைக் கொண்டவர்கள் என்றும் கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டது. அது ஒருவகையில் உண்மை என்றாலும் நடைமுறை சார்ந்து பல துறைகளிலும் தளங்களிலும் மொழியை நவீனமாக்கும் முயற்சிகள் நடைபெறாத காலத்தில் தமிழாசிரியர்கள் மீது மட்டும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்று வரைக்கும் இந்தக் கருத்து செல்வாக்கு செலுத்திக்கொண்டிருக்கிறது. இதற்கு இடையேதான் தமிழாசிரியர்கள் பதிப்பு, ஆய்வு, கலைச்சொல் உருவாக்கம், கற்பித்தல் என்றெல்லாம் இயங்க வேண்டியுள்ளது. 

தமிழாசிரியர்கள் ஜீன்ஸ் போன்ற ஆடைகளை அணியக் கூடாது, இருசக்கர வாகனங்களை ஓட்டக் கூடாது என்றெல்லாம் சமூகம் எதிர்பார்க்கிறது; நிர்ப்பந்திக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் என்னுடன் பணியாற்றிய தமிழாசிரியர் ஒருவர் ‘புல்லட்’ பைக் வாங்கினார். அப்போதைய கல்லூரி முதல்வர் “புல்லட்டுல வர்றாரு, இவரெல்லாம் ஒரு தமிழாசிரியரா?” என்று என்னிடமே சொன்னார். தமிழாசிரியர்கள் கோட் அணியக் கூடாது, ஷூ போடக் கூடாது, வாகனங்கள் ஓட்டக் கூடாது என்றெல்லாம் விதித்து வைத்தவர் எவர்? இது நூற்றாண்டுக்கும் மேற்பட்ட பொதுப்புத்தி மனோபாவம். இதை மாற்றுவதற்கு இன்றுவரை தமிழாசிரியர்கள் போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது. 1940களில் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் தமிழாசிரியராக இருந்த முத்துசிவன் மேல்நாட்டு பாணியில் உடை அணிந்தார். மு.வரதராசன் ஷெர்வானி அணிந்தார். 1970, 80களில் கோட் அணிந்துகொண்ட தமிழாசிரியர்கள் பலருண்டு. புல்லட் பைக்கில் இரா.இளவரசு கல்லூரிக்கு வந்தார் என்னும் தகவலும் உண்டு. பஞ்சகச்சமும் தலைப்பாகையும் தமிழாசிரியர் உடையாக இருந்து பின் வேட்டிக்கு மாறியது. 

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

தனிப்பாடல் எனும் தூண்டில் புழு

பெருமாள்முருகன் 04 Mar 2023

பேண்ட் அணியும் மாற்றம் வந்த பிறகும் கல்வி நிறுவன விழாக்களில் தமிழாசிரியர்களும் தமிழ் மாணவர்களும் மட்டும் வேட்டி கட்டி வர வேண்டும் என்னும் எதிர்பார்ப்பு நிலவியது. இந்த அடையாளத்தை மாற்ற வேண்டும் என்பதற்காகவே தமிழாசிரியர்கள் வேட்டி கட்டுவதைத் தவிர்த்தனர். தமிழ் மாணவர்கள் பிறருக்கு நிகராகவோ பிறரை பின்தள்ளியோ நவீன உடைகளை அணியும் போக்குக்கு மாறினர். இப்போது ‘தமிழ்ப் பண்பாட்டு அடையாளம்’ என வேட்டி மாறியுள்ளது. குடும்ப விழாக்களிலும் கல்வி நிறுவன விழாக்களிலும் அனைவரும் வேட்டி கட்டி வருகின்றனர். இந்த மாற்றத்திற்கு ராம்ராஜ் காட்டன் போன்ற ஆடை வணிக நிறுவனங்களும் ‘வேட்டி நாள்’ கடைபிடித்தலும் எனப் பல காரணங்கள் உள்ளன. 

திராவிட இயக்கத்தின் பங்கு

தமிழுக்கு எனப் பட்டப் படிப்புகள் தொடங்கியதும் நீண்ட வரலாறு. மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் முயற்சிகள் தொடங்கி அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பங்களிப்பு வரை பலவற்றைப் பேச வேண்டும். வித்வான், புலவர் என்றெல்லாம் படிப்புகளைத் தொடங்கி அங்கீகாரம் பெறப் போராடி இன்று பிற துறைப் படிப்புகளுக்கு இணையாக வந்து நிற்கிறோம். இது சாதாரணமாக நிகழ்ந்ததல்ல. இதற்குப் பின்னால் இருபதாம் நூற்றாண்டு அரசியலின் காத்திரமான பங்களிப்பு இருக்கிறது. திராவிட இயக்கம் தமிழை அடையாள அரசியலுக்கான கருவியாகக் கையில் எடுத்ததும் அதனுடன் தமிழாசிரியர்கள் இணைந்துகொண்டதும் விரிவாகப் பேச வேண்டிய வரலாறு. தமிழ் அடையாளத்துக்கான பல்வேறு சான்றாதாரங்களைத் தமிழறிஞர்கள் வழங்கினர். திருக்குறள், சிலப்பதிகாரம், புறநானூறு முதலிய பழந்தமிழ் இலக்கியங்களின் அரசியல் தேவையும் தமிழாசிரியர்களையும் திராவிட இயக்கத்தையும் நெருங்கச் செய்தன. 

சென்னை மாகாண முதல்வராக ராஜாஜி 1937இல் பதவியேற்ற பின் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கி உத்தரவிட்டார். அதை எதிர்த்துப் பெரியார் நடத்திய ‘இந்தி எதிர்ப்புப் போராட்டம்’ தமிழாசிரியர்களை முழுமையாக அரசியல் மயப்படுத்தியது. “‘சி.ராஜகோபாலாச்சாரி மதராஸ் மாகாணத்தில் பொறுப்பேற்றவுடன் (1937-39) பள்ளிகளில் இந்தி மொழி கற்பதைக் கட்டாயமாக்கினார். இந்த அந்நிய மொழித் திணிப்பு தமிழுக்கும் தமிழரின் பண்பாட்டிற்கும் எதிரான தாக்குதலாகக் கருதப்பட்டது. சுயமரியாதை இயக்கம் இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி வலிமையான போராட்டத்தை முன்னெடுத்து நடத்தியது. தமிழ் அறிஞர்கள் அரசின் நடவடிக்கைகளுக்கு அஞ்சாமல் பெருமளவில் கலந்துகொண்டதோடு ராஜாஜியின் நடவடிக்கையைக் கண்டித்துத் தமிழகம் முழுவதும் ஏராளமான கூட்டங்களும் ஊர்வலங்களும் நடத்தினார்கள். இச்சமயத்தில் மறைமலைஅடிகளாரின் 'இந்தி ஏன் இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்கக் கூடாது’ என்ற ஆங்கிலத் துண்டுப் பிரசுரத்தைச் சுயமரியாதை இயக்கம் 15,000 படிகள் அச்சிட்டு விநியோகித்தது” என்று ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதுகிறார். 

அதன் பின்னர் இந்தி ஆதிக்கத்திற்கு எதிராக நடைபெற்ற எல்லாப் போராட்டங்களிலும் தமிழாசிரியர்கள் பங்கு பெற்றனர். தனித்தமிழ் இயக்கத்தின் பங்களிப்பும் இவ்வகையில் குறிப்பிடத்தக்கது. தனித்தமிழ் இயக்கத்தோடு உடன்பட்டும் முரண்பட்டும் திராவிட இயக்கம் வந்திருந்தாலும் இரண்டுக்குமான இயைபு தொடர்ந்திருக்கிறது. தமிழாசிரியர்கள் என்றால் நாத்திகர்கள், பெரியாரைப் பின்பற்றுபவர்கள், திராவிட இயக்கச் சார்புடையவர்கள் என்று இன்றுவரை நிலவும் கருத்தோட்டம் சாதாரணமாக வந்ததல்ல. அதற்குப் பெரும்பின்னணி உள்ளது. 1996இல் கல்லூரியில் தமிழாசிரியராக நான் பணியேற்றபோது கணினி அறிவியல் துறை மாணவர் ஒருவர் “தமிழாசிரியர்கள் பெரும்பாலும் நாத்திகரா இருக்கறாங்களே, அது ஏன் ஐயா?” என்று கேட்டார். அப்போது அவருக்கு நிறைவான பதிலைச் சொல்ல என்னால் இயலவில்லை. இப்போது சொல்ல முடியும். அதற்குரிய தரவுகளையும் வரலாற்றையும் ஆ.இரா.வேங்கடாசலபதி கொடுத்திருக்கிறார்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

தமிழ்ச் சொல் நன்று

பெருமாள்முருகன் 25 Mar 2023

முக்கியமான நூல்

ஒன்றிய அரசு 2004ஆம் ஆண்டு தமிழைச் செம்மொழியாக அறிவித்தது. அப்போது பலர் அதை விமர்சித்தனர். ஆனால், பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டு முற்பகுதியிலும்  தமிழும் தமிழாசிரியர்களும் பெற்றிருந்த கீழ்நிலையை அறிந்தால் செம்மொழி அறிவிப்பு எத்தகைய சாதனை என்பதை உணர முடியும். திராவிட இயக்க வரலாற்றின் ஒருபகுதியாகவும் தமிழாசிரியர் வரலாற்றைக் காணலாம். தமிழ் இலக்கியப் பதிப்புகள் பெருகியமை, ஆய்வுகள் விரிந்தமை என எல்லாவற்றின் பின்னணியிலும் அக்கால அரசியலும் இருக்கிறது என்பது உண்மை. அவ்வகையில் பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்களின் பங்களிப்புக்குத் தமிழாசிரியர் வரலாற்றில் முக்கியமான இடம் உண்டு.

இத்தகைய நீண்ட வரலாற்றை, கிட்டத்தட்ட இருநூறாண்டு தமிழாசிரியர் வரலாற்றை விவரித்துத்தான் ஆ.இரா.வேங்கடாசலபதி கட்டுரை எழுதியுள்ளார். அதன் ஓரிரு துளிகளையே என் அனுபவத்தோடு இயைத்து இதில் தொட்டுக் காட்டியுள்ளேன். சம்ஸ்கிருதத்தை இந்தியப் பண்பாட்டின் அடையாளமாகப் பார்க்கும் இன்றைய பிரிவினைவாத அரசியல் சூழல் தமிழை ஊறுகாய் போலத் தொட்டுக்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது. தமிழ் வளர்ச்சிக்கு ஏதும் செய்யவில்லை என்றாலும் தமிழ்ப் பெருமையைப் பேச வேண்டிய அரசியல் நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது. ஆ.இரா.வேங்கடாசலபதியின் இக்கட்டுரையை வாசித்துத் தமிழாசிரியர் வரலாற்றை அறிந்தோருக்கு இந்நிலை மகிழ்ச்சியையே தரும்.  

இக்கட்டுரை விரிந்து தமிழிலும் ஆங்கிலத்திலும் நூலாக வெளிவர வேண்டியது உடனடித் தேவை. ஆங்கிலத்தில் வரத் தாமதமானாலும் தமிழில் விரைவில் வெளியாக வேண்டும். தமிழாசிரியர்களும் தமிழ் மாணவர்களும் தம் வரலாற்றை அறிந்துகொள்வதற்கு மட்டுமல்ல, இன்றைய சூழலில் தம் அரசியல் நிலைப்பாட்டைத் தீர்மானித்துக்கொள்வதற்கான கையேடாகவும் அந்நூல் திகழும்.  

 

பயன்பட்ட நூல்:

A.R.Venkatachalapathy, From Pulavar to Professor: Politics and the Professionalization of Tamil Pandits, 2018, Working Papers of the Max Weber Foundation’s Transnational Research Group India. (இதன் பிடிஎப் வடிவம் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.)

(மேற்கண்ட கட்டுரையின் முக்கியப் பகுதிகளையும் சாரத்தையும் மொழிபெயர்த்து எனக்கு வழங்கிய ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரியர் கமலா கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு நன்றி). 

 

தொடர்புடைய கட்டுரைகள்

தமிழாசிரியர்கள் தற்குறிகளா?
உயர்கல்விப் பாடத்திட்டத்தில் பன்மைத்துவம் அழிகிறதா?
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவும்
தனிப்பாடல் எனும் தூண்டில் புழு
தமிழ்ச் சொல் நன்று

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பெருமாள்முருகன்

பெருமாள் முருகன், பேராசிரியர், எழுத்தாளர். ‘அர்த்தநாரி ஆலவாயன்’, ‘பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.


1


1




பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

Parthiban.s   1 year ago

வணக்கம் தோழர் இன்றைய காலகட்டத்திலும் தமிழாசிரியர் மீது பார்க்கப்படுகிற பார்வை தமிழாசிரியர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது உங்களின் கட்டுரை தமிழாசிரியர்கள் அறிவியல் சார்ந்த உணர்வோடு இருக்க வேண்டும். அவர்கள் பன்முக தன்மை கொண்டவராகவும் சமூகத்தில் பயன் உடையவராகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. அந்த வகையில் நானும் ஒரு தமிழாசிரியர் என்பதில் பெருமை கொள்கிறேன். அன்பன் ச.பார்த்திபன் 8807895744

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Krishnamoorthy Muniyappan   1 year ago

it's really surprising that you are able to remember the question raised by a student in 1996. you are really great teacher..

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

bharath Thamizh   1 year ago

மிகச் சிறந்த கட்டுரை. நானும் தமிழ்த் துறையைத் தேர்வு செய்து படிக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், அப்போது வேலூர் மாவட்டத்தில் சில கல்லூரிகளில் மட்டுமே அத்துறை இருந்தது. ஆனாலும் பிழையின்றி எழுதவும் பேசவும் தொடர்ந்து முயற்சி செய்கிறேன்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

திருப்தி இல்லைஅரசியல் சிந்தனையில் வீழ்ச்சிசமஸ் ராஜன் குறைகட்டிட விதிமுறைகளை விரிவாக்குவோம்!காங்கிரஸ்: 255 மக்களவைத் தொகுதிகளில் கவனக்குவிப்புஇந்தியப் பெரியவர்கள்குழந்தையின்மைமஹுவா மொய்த்ராமத்திய பல்கலைக்கழகம்நம்பிக்கையில்லாத் தீர்மானம்பெரும் சாதனைக்குச் சொந்தக்காரர்அரசர் கான்ஸ்டன்டைன்சில்க்யாரா சுரங்கம்ஹரிஹரசுதன் தங்கவேலு கட்டுரைகாங்கேயம் பாலசுப்ரமணியம் முத்துசாமிதேர்தல் ஆணையர்கள்பாலஸ்தீனம்: கடந்ததும் நடப்பதும்oilseedsதீட்சிதர்கள்சிறுபான்மைக்கு வெற்றிஒரு துறவியின் மனநிலையில் வாழ்பவன் நான்: சாரு பேட்டபிரிவு 348(2)இங்கிலாந்துஆளுநரின் இழுத்தடிப்பு தந்திரம்யூஎஸ்எஸ்டிமதசார்பின்மைகூட்டுத் தலைமைதமிழுக்கான வெள்ளை அறைகுஜராத் பின்தங்குகிறதுசட்டமன்றங்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!