கட்டுரை, தொடர், தமிழ் ஒன்றே போதும் 5 நிமிட வாசிப்பு

ஆவணமாகும் புகைப்படத் தொகுப்பு

பெருமாள்முருகன்
09 Sep 2023, 5:00 am
0

சேலம், ஆத்தூர் அரசுக் கலைக் கல்லூரியில் ஆசிரியப் பணியில் சேர்ந்து ஐந்தாண்டுகள் பணியாற்றிய பிறகு நாமக்கல் கல்லூரிக்குப் பணியிட மாறுதல் பெற்று 2001இல் வந்தேன். நாமக்கல் வருவதற்குப் பல காரணங்கள் இருந்தன. அதில் ஒன்று, பேசுவதற்கும் பகிர்ந்துகொள்வதற்கும் இலக்கிய நண்பர்கள் பலர் இருக்கிறார்கள் என்பது. அங்கே வந்த பிறகு நான் எதிர்பார்க்காத இன்னொரு சிறப்பும் நாமக்கல்லுக்கு இருப்பதை அறிந்தேன். நூல் சேகரிக்கும் நற்பழக்கம் கொண்ட சிலர் நாமக்கல்லில் இருந்தனர்.   

இராமசாமி என்னும் பெருந்தகை

பத்துக்கும் மேற்பட்ட தனிநபர் நூலகங்கள் இருந்தன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை. நவீன இலக்கியங்களை மட்டும் வாங்கிச் சேகரிப்போர் ஒருவகை; பழந்தமிழ் இலக்கியங்களை மட்டும் சேகரிப்போர் ஒருவகை; எவ்வகை இலக்கியமாக இருப்பினும் புதிய பதிப்புகள் மட்டும் போதும் என்று கருதி வாங்குவோர் ஒருவகை; தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழி நூல்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்போர் ஒருவகை. அவர்களில் நா.ப.இராமசாமி என்னும் பெருந்தகையும் ஒருவர். 

நா.ப.இராமசாமி அரசியல் ஆர்வம் கொண்டவர். சில கட்சிகளில் பதவி வகித்திருக்கிறார். தேர்தல்களில் போட்டியிட்டிருக்கிறார். சமூக உணர்வு நிறைந்தவர். பொருள் வசதி குறைவில்லாதவர். நான் சந்தித்த காலத்தில் அறுபதைக் கடந்த வயதில் இருந்தார்.  தம் தொழில்களை மகன்களிடம் ஒப்படைத்துவிட்டுத் தமக்கென ஒருதொகையை வைத்துக்கொண்டு தன்னியல்பாக வாழ்ந்தார். அவர் நூலகம் மிகப் பெரிது.  தமிழ், தமிழர், தமிழ்நாடு ஆகியவை தொடர்பாக தமிழிலும் ஆங்கிலத்திலும் வந்த நூல்கள், இதழ்கள், மலர்கள் என எல்லாவற்றையும் வாங்கிச் சேகரித்திருந்தார். அவரைச் சாதாரண நூல் சேகரிப்பாளர் என்று சொல்லக் கூடாது; பெருநூல் சேகரிப்பாளர் என்பதே சரி.

ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்ட நூலகம் அது. அதற்கெனத் தனி வீட்டை ஒதுக்கியிருந்தார். எனினும் அவற்றைப் பராமரிக்க அவரால் இயலவில்லை. திருக்குறளில் அவருக்கு அளவற்ற ஈடுபாடு. திருக்குறள் தொடர்பான ஆயிரத்திற்கும் அதிகமான நூல்களை ஒருபுறம் அடுக்கி வைத்திருந்தார். அதுபோலப் பிரித்து அடுக்கிப் பராமரிக்க அவரால் இயலவில்லை. நூல் வாங்குவதற்கு எவ்வளவு தொகையும் செலவிடுவார். பராமரிப்பைப் பற்றிச் சிறிதும் கவனம் எடுத்துக்கொள்ளவில்லை.

தனி ஈழம் விரைவில் அமைந்துவிடும், விடுதலைப் புலிகள் ஆட்சியில் யாழ்ப்பாண நூலகம் புதுப்பிக்கப்படும், அப்போது தம் சேகரம் அனைத்தையும் அந்நூலகத்திற்குக் கொடுத்துவிடலாம் என்று கருதியிருந்தார். பெருமை மிகுந்த தமிழினத்திற்கு என்று தனிநாடு இதுவரை இல்லை. ஈழம்தான் முதலில் அமையப்போகும் தமிழர் நாடு. அங்கே உள்ள நூலகத்தில் தமிழ் தொடர்பான அனைத்தும் அடங்கியிருக்க வேண்டும், அதற்குத் தம் பங்களிப்பை வழங்க வேண்டும் என்பது அவரது ஆழ்ந்த விருப்பம். எந்நேரத்திலும் நூல்களை ஈழத்திற்கு அனுப்ப நேரும் என்பதால் பராமரிப்பைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை. 

தீபாவளி மலர்

அவர் நூலகத்திற்கு அவ்வப்போது நானும் பொ.வேல்சாமியும் செல்வது வழக்கம். தொடக்கப் பள்ளி வரைக்கும்கூடக் கல்வி கற்காத நா.ப.இராமசாமி தாம் வாங்கும் நூல் ஒவ்வொன்றைப் பற்றியும் தெளிவாக அறிந்து வைத்திருந்தார் என்பது வியப்பு. பெட்டகம், இரும்பு அலமாரிகள், சுவர் அலமாரிகள் ஆகியவற்றில் மட்டுமல்ல, தரையிலும் குவிந்து கிடக்கும் ஆயிரக்கணக்கான நூல்களில் எதை எடுத்தாலும் அதைப் பற்றி ஐந்து நிமிடத்திலிருந்து அரைமணி நேரம் வரைக்கும் பேசும் அளவு விவரம் தெரிந்து வைத்திருந்தார். 

அந்நூலகத்திற்கு ஒவ்வொரு முறை செல்லும்போதும் ஏதேனும் ஒரு புதையல் கைக்குக் கிடைத்துவிடும். அப்படி ஏறத்தாழப் பதினைந்து ஆண்டுகளுக்கு (2005 அல்லது 2006ஆக இருக்கலாம் என நினைவு) முன்னர் கிடைத்த ஒன்றுதான் 1944ஆம் ஆண்டு வெளியான ‘ஆனந்த விகடன் தீபாவளி மலர்.’ அப்போதெல்லாம் மலர்களைத் தனி விலை வைத்து வெளியிடும் வழக்கமில்லை போல. வழக்கமாக வரும் இதழோடான இணைப்பாக மலரும் கிடைக்கும். அதற்கேற்ற வகையில் கூடுதல் விலை. 08.10.1944 என்னும் நாளிட்ட ‘ஆனந்த விகடன்’ இதழுடன் அவ்வாண்டுக்கான தீபாவளி மலர் இணைப்பு. 

அக்காலத்தில் ஆர்.ஷண்முகசுந்தரம், கு.ப.ராஜகோபாலன் ஆகிய இருவரின் படைப்புகளில் தொடர்ந்து கவனம் செலுத்திவந்தேன். பழைய இதழ் எதைக் கண்டாலும் அவ்விருவரின் படைப்புகள் ஏதும் இருக்கிறதா, அவர்களைப் பற்றிய செய்திகள் உள்ளனவா எனத் தேடுவது வழக்கம். அப்படிப் புரட்டிக்கொண்டிருந்தபோது பரவசப்படுத்தும் விஷயம் ஒன்று அதிலிருந்தது. உடனே நா.ப.இராமசாமி அவர்களிடம் அப்பகுதியை நகலெடுத்துக்கொள்ள அனுமதி கேட்டேன். அவரிடம் நூல் எதையும் இரவல் பெற முடியாது. அங்கேயே இருந்து படிக்கலாம், குறிப்பெடுத்துக்கொள்ளலாம். உடனே நகலெடுத்துக்கொண்டு திருப்பிக் கொடுத்துவிட அனுமதித்தார். வழக்கமாக அவர் நகலெடுக்கும் கடை ஒன்றுண்டு. அங்குதான் போக வேண்டும் என்று சொல்வார். பழைய புத்தகங்கள், இதழ்கள் ஆகியவற்றைக் கிழியாமல், பாதிப்பு ஏதுமில்லாமல் நகலெடுக்க அக்கடைக்காரரைப் பழக்கப்படுத்தியிருந்தார். அவர் பெயரைச் சொன்னாலே போதும், நிதானமாகவும் நன்றாகவும் நகலெடுத்துக் கொடுப்பார்கள். 

தொடக்கக் குறிப்பு

அப்படி நான் நகலெடுத்துக்கொண்டவை பன்னிரண்டு பக்கங்கள். அம்மலரின் சிறப்பான ‘தமிழ் எழுத்தாளர்கள்’ என்னும் பகுதி ஒருபக்கக் குறிப்பும் பதினொரு பக்கப் புகைப்படத் தொகுப்பும் கொண்டது. அதன் தொடக்கக் குறிப்பு இப்படி அமைந்திருந்தது: 

‘சென்ற இருபது வருஷங்களாகத் தமிழுக்குப் புதுயோகம் பிறந்துவிட்டதென்று சொல்லலாம். நாடெங்கும் தமிழ் மணம் கமழ, தமிழ் படிப்பவர்களின் எண்ணிக்கை ஒன்றுக்கு நூறாக உயர்ந்துவிட்டது. பத்திரிகைகளுக்கும் புஸ்தகங்களுக்கும் அமோகமான செல்வாக்கு ஏற்பட்டுவிட்டது. “ஆங்கிலம்தான் படிப்போம், ஆங்கிலமேதான் பேசுவோம்” என்று வைராக்யம் கொண்டிருந்தவர்கள்கூட தமிழை ஆவலுடன் படிக்கவும் பேசவும் முற்பட்டிருக்கிறார்கள்.

‘இந்த மகத்தான மாறுதலைச் செய்திருப்பவர்கள் இன்றைய தமிழ் எழுத்தாளர்கள்தான். கவிதையிலும், கற்பனையிலும், காவியத்திலும், நாடகத்திலும், நவீன இலக்கியங்களிலும் மற்றெந்த நாட்டுக்கும் தமிழ்நாடு பின்வாங்காம லிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் இவர்களே.

‘சிறந்த விஷயங்களைப் படித்து ரஸிக்கும் வாசகர்கள் அவைகளைச் சிருஷ்டி செய்தவர்களைக் காண விரும்புவது சகஜம். ஆனால் ஆசிரியர்களோ, விசேஷமாக இதர கலைவிற்பன்னர்களைப் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களைப் பிராபல்யப்படுத்துகிறார்களே தவிர, தாங்கள் மட்டும் மறைமுகமாகவே இருந்துவிடுகிறார்கள். தங்கள் பெயரைக்கூட பகிரங்கப்படுத்திக்கொள்ளாமல் புனைபெயர் வைத்துக்கொண்டு எழுதுகிறார்கள். இவர்களை நமது வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்துடனேயே இவர்களுடைய உருவப் படங்களை கிடைத்த மட்டும் சேகரித்து வெளியிட்டிருக்கிறோம். கூடுமான வரையில் அவரவர்கள் எழுதியுள்ள சிறந்த ஒரு விஷயத்தையும் குறிப்பிட்டிருக்கிறோம்.’ 

இந்தக் குறிப்பு இன்று வரலாற்று முக்கியத்துவம் உடையதாக மாறியுள்ளது. 1930, 1940களில் தமிழ் வெகுஜன இதழ்கள் பெருவாரியாகத் தோன்றின. அதற்குத் தமிழில் வாசிப்போர் எண்ணிக்கை உயர்ந்திருப்பது முக்கியமான காரணம் என்பது தெரிகிறது. ‘தமிழ் படிப்போர் எண்ணிக்கை ஒன்றுக்கு நூறாக உயர்ந்துவிட்டது’ என்னும் வாசகம் முக்கியமான மாற்றம் ஒன்றைக் கவனப்படுத்துகிறது. அதுவும் ‘ஆங்கிலத்தில்தான் வாசிப்போம்’ என்று சொல்லிக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் தமிழின் பக்கம் திரும்பிவிட்டனர் என்பதும் முக்கியமான செய்தி. அக்காலத்தின் கல்விப் பரவலாக்கம், அரசியல் சூழ்நிலை, தமிழ் சார்ந்த உணர்வுகளின் பெருக்கம் என்பவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு இந்தக் குறிப்பைக் காணலாம். 

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

சூப்பர் ஸ்டார் கல்கி

சமஸ் | Samas 26 Jan 2020

எழுத்தாளர்களின் முகம்

தமிழில் எழுதுவோர் எண்ணிக்கையும் மிகுந்திருப்பதை இக்குறிப்பு சுட்டுகிறது. எத்தனையோ விஷயங்களைப் பற்றி அவர்கள் எழுதினாலும் தம் முகத்தை வெளியில் காட்டாமல் மறைமுகமாகவே இருந்துவிடும் அவர்களை வாசகர்களுக்குக் காட்டும் வகையில் புகைப்படங்களை வெளியிடுவதுதான் அப்பகுதியின் நோக்கம். இந்தக் குறிப்பு மட்டுமல்ல, அதைத் தொடர்ந்து இடம்பெற்றிருக்கும் புகைப்படங்களும் இன்று அரிதானதாக மாறிப் பெரும்பங்களிப்பு என்று சொல்லத்தக்க வகையில் விளங்குகின்றன. புகைப்பட வெளியீட்டுக்கு ஒதுக்கப்பட்டவை பதினொரு பக்கங்கள். ஒவ்வொரு பக்கத்திலும் நான்கு வரிசை. முதல் வரிசையில் நான்கு படங்கள். அடுத்த வரிசைகளில் மும்மூன்று படங்கள். பக்கத்திற்குப் பதின்மூன்று படங்கள். 

மொத்தம் 143 எழுத்தாளர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளன. பெ.நா.அப்புஸ்வாமி தொடங்கி கா.ஸ்ரீ.ஸ்ரீநிவாஸாச்சாரி வரைக்கும் அகர வரிசையில் பெயர்களை அமைத்துப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். ஒவ்வொரு எழுத்தாளரின் படத்திற்குக் கீழும் அவர் பெயர், அவரது சிறந்த படைப்பு ஒன்றின் பெயர் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. சான்றாக, தி.ஜானகிராமன் படத்திற்குக் கீழ் ‘தாழம்பூ’ என்னும் தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அத்தலைப்பில் தி.ஜானகிராமன் சிறுகதை ஒன்றை எழுதியுள்ளார் என்பதும் அக்கதை இன்றுவரை கிடைக்கவில்லை என்பதும் இப்போதைய தகவல். 1943 அல்லது 1944ஆம் ஆண்டு வெளியான ‘கிராம ஊழியன்’ இதழில் அக்கதை வெளியாகியிருக்கலாம் என்று தெரிகிறது. அவரது சிறந்த படைப்பாக ‘ஆனந்த விகடன்’ குறிப்பிடும் அக்கதை தி.ஜானகிராமன் தொகுப்பு எதிலும் சேர்க்கப்படவில்லை என்பது ஆச்சரியமான விஷயம்தான். 

புனைபெயரில் எழுதும் எழுத்தாளராக இருந்தால் அவரின் புகைப்படத்திற்குக் கீழ் இயற்பெயர், புனைபெயர், சிறந்த படைப்பு ஆகிய மூன்று விவரங்களும் இடம்பெற்றுள்ளன. ‘குகப்ரியை’ என்னும் பெயரை இலக்கிய வாசகர்கள் அறிந்திருக்கக்கூடும். அது புனைபெயர். அவர் படத்திற்குக் கீழே ‘சுவர்ணாம்பாள்’ என்னும் இயற்பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. அதையடுத்துக் ‘குகப்ரியை’ என்னும் புனைபெயரும் ‘சந்திரிகா’ என்னும் அவரது படைப்பின் பெயரும் கொடுக்கப்பட்டுள்ளன. புனைபெயரே இயற்பெயர் போல அமைந்த சில எழுத்தாளர்களைப் பற்றி அறிய முடிகிறது. மணிக்கொடி இதழில் சிறுகதைகள் எழுதியவரும் புகழ்பெற்ற திரைப்பட வசனகர்த்தாவுமாகிய ‘இளங்கோவன்’ பெயர் புனைபெயர் என்பதும் அவரது இயற்பெயர் ‘தணிகாசலம்’ என்பது எனக்குப் புதிய தகவல். 

பத்திரிகை ஆசிரியராக ஒருவர் இருப்பின் அவரது பெயருக்குக் கீழே அவ்விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. ‘ரா.கிருஷ்ணமூர்த்தி, ஆசிரியர், “கல்கி”’ – என்று  ‘கல்கி’யின் புகைப்படத்திற்குக் கீழே விவரம் உள்ளது. ‘நவசக்தி’ இதழின் ஆசிரியர் சக்திதாஸன் சுப்பிரமணியன், ‘சிவாஜி’ இதழின் டி.சிவஞானம், ‘ஹிந்துஸ்தான்’ ஆசிரியர் ரா.நாராயண அய்யங்கார் முதலிய தகவல்கள் கிடைக்கின்றன. எஸ்.வையாபுரிப் பிள்ளையின் பெயருக்குக் கீழே ‘ஆசிரியர், தமிழ் அகராதி’ என்றுள்ளது. தமிழ் அகராதி என்பது ஓர் இதழின் பெயராக அர்த்தப்படுகிறது. அப்படியல்ல, இன்று ‘தமிழ்ப் பேரகராதி’ என்று சொல்லும் ‘தமிழ் லெக்சிகன்’ ஆசிரியர் என்பதையே அக்குறிப்பு உணர்த்துகிறது.

இவற்றில் சில குழப்பங்களும் இருக்கின்றன. 1944இல் இருந்த வாசகர்களுக்கு நன்கு அறிமுகமாக இருந்த படைப்புகள் பற்றி இப்போது நமக்குத் தெரியவில்லை. ஆகவே, ஒரு படைப்பின் பெயர் தரும்போது அது நாவலா சிறுகதையா கட்டுரையா என்பதில் தெளிவு கிடைக்கவில்லை.  ’பேனா’ என்னும் புனைபெயரில் எழுதிய பெ.நா.அப்புஸ்வாமி பெயருக்குக் கீழே ‘அற்புத உலகம்’ என்றுள்ளது. அவர் அறிவியல் கட்டுரைகள் எழுதியவர் என்னும் ஊகத்தில் அது ஒரு கட்டுரையாகவோ அத்தலைப்பில் வெளியான நூலாகவோ இருக்கலாம் என ஊகிக்கலாம். 

புனைவெழுத்தாளர்கள் பலரின் படைப்புகளின் பெயர்கள் சிறுகதையைக் குறிக்கின்றனவா நாவலா என்று ஊகிக்க இயலவில்லை. எம்.எஸ்.கமலா எழுதிய படைப்பு ‘காதற் கோவில்.’ சரோஜா ராமமூர்த்தியின் படைப்பு ‘குழலோசை.’ இவற்றின் வகைமையைத் தெளிவுபடுத்திக்கொள்ள இயலவில்லை. 143 எழுத்தாளர்களில் 27 பேர் பெண்கள். அவர்களில் எஸ்.அம்புஜம்மாள், கோதைநாயகி அம்மாள், சரோஜா ராமமூர்த்தி, சேது அம்மாள், குகப்ரியை, லக்‌ஷ்மி, குமுதினி, தங்கம்மாள் பாரதி ஆகியோரைத் தவிரப் பெரும்பாலானோரை எனக்குத் தெரியவில்லை. 

எம்.எஸ்.கமலா, கமலா கோபாலன், கமலா பத்மநாபன், கீதா சீநிவாசன், என்.சகுந்தலா, கி.சரஸ்வதி அம்மாள், சரஸ்வதி பாஸு, கி.சாவித்திரி அம்மாள், சியாமளா, ஆர்.சுந்தரி, செல்லம், ஜி.தஞ்சம், ஆர்.பத்மா, வி.ராதாமணி, விசாலாக்‌ஷி, வெங்கடலக்‌ஷ்மி, ஜயம்மாள் ஸ்ரீநிவாஸன், ஜானம்மாள், ஆர்.ஜானகி, ஹரிணி ஆகிய இருபது பேரின் படைப்புகள் பற்றி என் நினைவில் ஏதுமில்லை. ஆகவே, படைப்புகளின் வகைமை பற்றியும் அறிய இயலவில்லை.  

சிலருடைய படைப்புகளை நம் வாசிப்பு அனுபவம் கொண்டு தீர்மானித்து முடிகிறது. சி.சு.செல்லப்பாவின் படைப்பு ‘சரசாவின் பொம்மை’ சிறுகதை என்பது பலருக்கும் தெரிந்ததே. வ.ரா. எழுதிய ‘தமிழ்ப் பெரியார்கள்’ என்பது கட்டுரை நூல். ஆண் எழுத்தாளர்களில் கிட்டத்தட்டப் பாதியளவு பேரை எனக்குத் தெரிந்திருக்கிறது. பாதிப் பேர் எனக்குப் புதியவர்களே. அதனால் அவர்களின் படைப்பு வகைமை பற்றியும் தெளிவில்லை. 

இந்தக் குறிப்புகளில் சில சுவையான செய்திகளும் உள்ளன. ஒவ்வொரு எழுத்தாளரின் ஒவ்வொரு படைப்புப் பெயரைக் கொடுத்திருக்கும் முறைக்கு மாறாகச் சுத்தானந்த பாரதியின் பெயருக்குக் கீழ் ‘கவிதைகள்’ என்று பொதுவாக மட்டும் குறிப்புள்ளது. ஏராளமான கவிதைகள் எழுதிய அவரது ஒரே ஒரு கவிதைப் பெயரைக் குறிப்பிட இயலவில்லை போலும். ‘ஹரிணி’ என்னும் பெயரை ஒற்றை மேற்கோளில் கொடுத்துள்ளனர். புனைபெயரையே அப்படிக் கொடுக்கும் முறை பின்பற்றப்பட்டிருக்கும் பட்டியல் ‘ஹரிணி’யின் இயற்பெயர் இல்லை. அவர் தம் இயற்பெயரை வெளிப்படுத்த விரும்பவில்லையா, அணுகி இயற்பெயரைக் கண்டறிய இயலவில்லையா என்பது தெரியவில்லை. ஆனந்த விகடன் இதழில் பணியாற்றிய எழுத்தாளர்கள் சிலர் படங்களும் உள்ளன. அவர்களின் படைப்புப் பெயர் எதையும் தரவில்லை. புனைபெயரோடு ‘ஆனந்த விகடன்’ என்று மட்டும் குறிப்புள்ளது. அதே இதழில் பணியாற்றும் ஒருவரின் படைப்பைக் குறிப்பிடுவது எளிதுதான். அதைவிடவும் அவர் ‘ஆனந்த விகடன்’ இதழ்க் குழுவைச் சார்ந்தவர் என்பதுதான் முக்கியமானதாக இருந்திருக்கலாம்.

புகைப்படம் எடுப்பது அரிதான அக்காலத்தில், கிட்டத்தட்ட எண்பது ஆண்டுகளுக்கு முன் வெளியான இப்புகைப்படத் தொகுப்பு இன்று அரிய ஆவணமாகத் திகழும் தன்மையைப் பெற்றுள்ளது. 2019ஆம் ஆண்டின் பிற்பகுதியில் எழுத்தாளர் கல்யாணராமனும் (இப்போது சென்னை, மாநிலக் கல்லூரி முதல்வராகப் பணியாற்றும் இரா.இராமன்) அவர் மாணவர் ஏ.தனசேகரும் இணைந்து தி.ஜானகிராமன் படைப்புகளைப் பழைய இதழ்களில் தேடி எடுக்கச் சூறாவளிச் சுற்றுப்பயணம் செய்தார்கள். 

அப்போது சென்னை, ஆவணக் காப்பகத்தில் இருந்து 1944 ‘ஆனந்த விகடன்’ தீபாவளி மலரைப் பார்த்து அதிலிருந்த தி.ஜானகிராமனின் இளமைக் காலப் புகைப்படம் ஒன்றைக் கண்டெடுத்தார்கள். பின்னர் சுகுமாரனைப் பதிப்பாசிரியராகக் கொண்டு ‘காலச்சுவடு’ பதிப்பகம் வெளியிட்ட தி.ஜானகிராமனின் தொகுக்கப்படாத சிறுகதைகளைக் கொண்ட ‘கச்சேரி’ என்னும் தொகுப்பு நூல் அட்டைப்படமாக அப்புகைப்படம் அமைந்தது. நூலின் முன்னுரையில் சுகுமாரன் “கதைகளைத் தேடிச் சென்ற தளரா முயற்சியில் கல்யாணராமனுக்குக் கிடைத்த உபரி ஆதாயம் தி.ஜானகிராமனின் இளமைக் காலப் புகைப்படம்” என்று கூறியுள்ளார். 

நான் அப்புகைப்படத் தொகுப்பை நகலெடுக்கக் காரணம் அதில் ஆர்.ஷண்முகசுந்தரம் அவர்களின் இளமைப் புகைப்படம் இருந்ததுதான். 1917இல் பிறந்த அவர் இருபத்தொரு நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகள் செய்தவர். ஆனால், அவரது நடுத்தர வயதில், 1960வாக்கில் எடுக்கப்பட்டது எனக் கருதப்படும் ஒரே ஒரு புகைப்படம் மட்டுமே கிடைத்துள்ளது. வாசகர் வட்ட வெளியீடான ‘மாயத்தாகம்’ நாவல் அட்டையில் காணப்படும் அப்புகைப்படமே எல்லா இடங்களிலும் பயன்பட்டு வந்தது. 

‘ஆனந்த விகடன்’ புகைப்படத் தொகுப்பில் அப்போது 26 அல்லது 27 வயதேயான அவரது இளமைப் புகைப்படம் உள்ளதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். வரைந்தது போன்ற ஹிட்லர் மீசையும் பருத்த கன்னங்களும் கொண்டு உள்ளுக்குள் சிரித்துக்கொண்டிருப்பது லேசாக உதடுகளில் தெரிவது போன்ற தோற்றமும் இளமைப் பொலிவுமாக அவர் விளங்கும் புகைப்படம் இது. பிற்காலப் புகைப்படத்துடன் ஒப்பிடும்போது தலைமுடி வாரும் முறை மட்டும் மாறவில்லை என்பது தெரிகிறது. அடர்ந்த மீசை, ஒடுங்கிய கன்னங்கள் எனத் தோற்றத்தில் பெருமாற்றம். 

அவரது படைப்புகள் சிலவற்றைத் தொகுத்து வெளியிடும் என் திட்டம் நிறைவேறும்போது இளமைக் காலப் புகைப்படத்தில் பயன்படுத்தலாம் என்று நினைத்திருந்தேன். திட்டம் தள்ளிக்கொண்டே போனதால் புகைப்படமும் வெளியாகவில்லை. அத்தொகுப்பில் அவரது தம்பியும் ‘வசந்தம்’ இதழின் ஆசிரியருமான ஆர்.திருஞானசம்பந்தம் புகைப்படமும் உள்ளது. 

இவையல்லாமல் எழுத்தாளர்கள் சிலரின் அறியப்பட்ட புகைப்படங்களும் சிலரின் புதிய தோற்றம் காட்டும் புகைப்படங்களும் அதில் உள்ளன. சி.சு.செல்லப்பா, திரு.வி.க. உள்ளிட்டோரின் படங்கள் பொதுவெளியில் அறியப்பட்டவையே. க.நா.சுப்ரமணியன், ச.வையாபுரிப் பிள்ளை முதலிய பலர் படங்கள் புதியவை. கண்ணாடி, அங்கவஸ்திரம், தலையில் தொப்பி ஆகியவற்றுடன் காணப்படுகிறார் வையாபுரிப் பிள்ளை. 

அக்காலத்தில் எழுதிக்கொண்டிருந்த பலரைப் பற்றி அறியவும் ஆராயவும் தேடவும் இப்புகைப்படத் தொகுப்பு தூண்டுகிறது. ஆவணப்படுத்தலின் தேவையைத் தமிழ்ச் சமூகம் பெரிதும் உணரவும் இத்தொகுப்பு நிச்சயம் உதவும்.

(இக்கட்டுரை எழுதுவதற்குக் கால.சுப்பிரமணியன் அவர்களின் முகநூல் பதிவு ஒன்றே தூண்டுதலாக அமைந்தது. அவருக்கு நன்றி).

 

தொடர்புடைய கட்டுரைகள்

கோவை நூலகம் ஏன் மூடப்படுகிறது? தியாகராஜன் பேட்டி
சூப்பர் ஸ்டார் கல்கி

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பெருமாள்முருகன்

பெருமாள் முருகன், பேராசிரியர், எழுத்தாளர். ‘அர்த்தநாரி ஆலவாயன்’, ‘பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.


4


அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

தி.ஜ.ரங்கநாதன்உறுதியான எதிரிடம்சீனிவாச ராமாநுஜம் கட்டுரைஇந்தியா வங்கதேசம்மோனு மனோசர்உள்ளூரியம்அடிப்படைக் கல்விசமஸ் - எஸ்.பாலசுப்ரமணியன்பெட்ரோல் டீசல் விலை உயர்வுமோடியின் கவர்ச்சியில் தேய்வுவெற்றிடத்தின் பாடல்கள்மனச்சோர்வுகலைஞர் தோற்கக் கூடாதுன்னு நெனைச்சார் எம்ஜிஆர்: ஹண்இறவாணம்சம்ஸ்கிருதம் அழிவுக்கே விழிஞ்சம் திட்டம்!முற்பட்ட சாதிகள்சோஷலிஸ மரபுசாதி அணிதிரட்டல்வல்லினம்குஜராத் படுகொலைவாசிப்புப் பழக்கம்யோசாமானுடவியலாளர் எஸ்.ஜே. தம்பையாபீடிகைசங்கீத கலாநிதி டி.எம்.கிருஷ்ணாசீர்திருத்த நடவடிக்கைகென்யா: கிழக்கு ஆப்பிரிக்காவின் பெரும் பொருளாதாரம்தமிழர் பண்பாடு தமிழ்ப் பண்பாடுஅமுல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!