கட்டுரை, தொடர், தமிழ் ஒன்றே போதும் 5 நிமிட வாசிப்பு

மருத்துவக் கல்வி எளிது

பெருமாள்முருகன்
26 Aug 2023, 5:00 am
1

நீட் தேர்வின் காரணமாக மருத்துவக் கல்லூரியில் இடம்பெற முடியாததால் 2017 முதல் இவ்வாண்டு வரை இருபத்தைந்துக்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.  சென்னையைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்னும் மாணவரும் அவர் தந்தை செல்வமும் அடுத்தடுத்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ராஜஸ்தான் மாநிலத்திலும் ஏராளமான மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். பிற மாநிலங்களிலும் தற்கொலைகள் நடந்துள்ளன. இளம் தலைமுறையினரது தற்கொலைகளின் மேல் நின்று நீட் தேர்வுப் பயிற்சி மையங்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றன. 

ஒன்றிய அரசு இத்தேர்வை ரத்துசெய்வதற்குச் சிறிதும் இறங்கிவரவில்லை. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. மேலும் “நீட் தேர்வு தேவை என்பதில் நான் எப்போதும் உறுதியாக இருப்பேன். அத்தேர்வை ரத்துசெய்யும் மசோதாவில் ஒருபோதும் கையொப்பம் இட மாட்டேன்” என்று பெற்றோருடன் பேசிய நிகழ்ச்சியில் ஆளுநர் தெரிவித்துள்ளார். மக்கள் நலனைப் பொருட்படுத்தாத ஒன்றிய அரசின் போக்கை மாற்றத் தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் நிலை. ஒன்றிய அரசில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தவிர நீட் தேர்வு ஒழியாது என்று எண்ணும்படி இன்றைய சூழல் இருக்கிறது. 

நீட் தேர்வை ஒழிக்கத் தி.மு.க. அரசு கையாளும் சட்டரீதியான வழிமுறைகள் வெற்றிபெறும் வரைக்கும் மாணவர்களையும் பெற்றோரையும் தற்கொலை என்னும் விபரீத முடிவிலிருந்து பாதுகாக்க வேண்டியுள்ளது. அதற்குக் கலந்தாலோசனை உள்ளிட்ட பலவிதமான உத்திகளை அரசு கையாளலாம். அவ்வகையில் என் அனுபவம் ஒன்றைப் பகிர்ந்துகொள்வது பயன் தரும் என்று நினைக்கிறேன். 

இடைநிற்றல்…

அரசுக் கல்லூரியில் முதல்வராக நான் பணியாற்றிக்கொண்டிருந்தபோது அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக இருந்தவர் இரா.பிரபா. வேதியியல் பேராசிரியராக அதே கல்லூரியில் எங்களுடன் பணியாற்றிய அவரது கணவர் விபத்தொன்றில் அகாலமாக இறந்துபோனார். வாரிசு அடிப்படையில் பிரபாவுக்கு அலுவலகப் பணி கிடைத்தது. முனைவர் பட்டம் பெற்ற அவர் அலுவலகப் பணியாளராகச் சேர்ந்து தம் இரு மகன்களையும் ஒற்றைப் பெற்றோராக இருந்து வளர்த்துப் படிக்க வைக்க வேண்டிய நிலை. தம் பணிகளில் ஒருபோதும் சுணக்கம் காட்ட மாட்டார். வேலைகளைத் திருத்தமாகச் செய்யும் திறன் கொண்டவர்.

ஏதோ கோப்பு ஒன்றில் கையொப்பம் வாங்க முதல்வர் அறைக்கு வந்த அவரிடம் மகன்களின் கல்வி பற்றி விசாரித்தேன். சட்டென்று அவருக்குக் கண் கலங்கிவிட்டது. அமைதிப்படுத்தி விவரம் கேட்டேன். மூத்த மகன் ஸ்ரீவந்த் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு மருத்துவப் படிப்பில் சேர ஆர்வம் கொண்டிருந்தார். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றபோதும் போட்டி காரணமாக இடம் கிடைக்கவில்லை. இருமுறை முயன்றும் வாய்ப்பு அமையவில்லை. தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் பி.இ. படிப்பில் சேர வேண்டியானது. ஆனால், அவரால் அப்படிப்பில் பொருந்த இயலவில்லை. கிடைப்பதில் தம்மைப் பொருத்திக்கொள்ளும் மனம் வாய்க்கப் பெற்றவர்கள் உள்ளனர். விரும்பியது கிடைத்தால் ஒழியப் பொருந்த இயலாத மனம் கொண்டவர்களும் உள்ளனர். ஸ்ரீவந்த் கிடைத்ததில் நிலைகொள்ள இயலாதவர். விரும்பியதைப் பற்றியே நினைத்துக் குழம்பினார். பொறியியல் படிப்பிலிருந்து இடைநின்றார். 

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

ஒடுக்குமுறைத் தேர்வுகள்

சமஸ் 15 Jan 2020

ஆயுஷ்

ஒவ்வொரு மாணவரையும் லாபம் தரும் வாடிக்கையாளராக மட்டுமே கருதுபவை தனியார் கல்வி நிறுவனங்கள். அங்கே ஒரு மாணவர் இடைநின்றால் மீதமுள்ள ஆண்டுகளுக்கான கட்டணத்தை இழக்க நேரும் என்பதைப் பற்றி மட்டுமே யோசிப்பார்கள். மாணவர் மனநிலை, குடும்பச் சூழல் பற்றி எந்தக் ‘கல்வித் தந்தை’களுக்கும் அக்கரையில்லை. இடைநிற்கும் மாணவர் மீதமுள்ள ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணத்தையும் செலுத்தினால்தான் மாற்றுச் சான்றிதழ் தருவோம் என்று நிர்ப்பந்தம் செய்வார்கள். அவர்களின் கிடுக்கிப் பிடியில் இருந்து மீண்டுவருவது அத்தனை எளிதல்ல. எப்படியோ அங்கிருந்து மீண்டுவந்த அவர் மேற்கொண்டு என்ன படிப்பது என்னும் குழப்பத்தில் இருந்தார். மகன் எதிர்காலம் தொடர்பாகத் தாய்க்குக் கவலையும் அச்சமும் மிகுந்திருந்தன.

அவரைச் சந்திக்க வேண்டும் என்று சொல்லி அழைத்து வரச் செய்தேன். ஸ்ரீவந்த் வந்தார்; பேசினோம். மருத்துவக் கல்வியில் அவருக்கு இருக்கும் ஆர்வம் உண்மை என உணர்ந்தேன்.  ஆங்கில மருத்துவம் தவிர ‘இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி’ என்று தனித் துறை இருப்பதைச் சொன்னேன்.  ‘ஆயுஷ்’ (AYUSH) என்று இப்போது ஒன்றிய அரசு பெயர் சூட்டியுள்ள அத்துறையில் ஐந்து வகையான மருத்துவப் படிப்புகள் உள்ளன. ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்த மருத்துவம், ஹோமியோபதி ஆகிய ஐந்தின் ஆங்கில முதலெழுத்துக்களைக் கொண்டது ‘ஆயுஷ்.’

ஸ்ரீவந்த்

இப்படிப்புகளில் சித்த மருத்துவத்திற்கு மட்டும் அரசுக் கல்லூரிகள் இரண்டு உள்ளன. மற்றவற்றிற்கு ஒவ்வொரு அரசு கல்லூரி உள்ளது. ஆக மொத்தம் ஆறு அரசுக் கல்லூரிகள். அவற்றில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. அரசுக் கல்லூரிகளில் கட்டணம் மிகக் குறைவு. ஆண்டுக்குப் பத்தாயிரம் ரூபாய் அளவுக்குத்தான் இருக்கும். ஏறத்தாழ இருபதுக்கும் மேற்பட்ட தனியார் கல்லூரிகளில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. அவற்றில் ஐம்பது விழுக்காட்டுக்கும் மேல் அரசு ஒதுக்கீட்டு இடங்கள். நிர்வாக ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தாலும் ஆங்கில மருத்துவக் கல்வியை ஒப்பிட்டால் கட்டணம் மிக மிகக் குறைவு.  

மாற்று மருத்துவம்

பி.ஏ.எம்.எஸ்., பி.என்.ஒய்.எஸ்., பி.யு.எம்.எஸ்., பி.எஸ்.எம்.எஸ்., பி.ஹெச்.எம்.எஸ். என்பன பட்டங்களின் பெயர்கள். ஆங்கில மருத்துவப் படிப்பாகிய எம்.பி.பி.எஸ். பயில ஐந்தரை ஆண்டுகள் கால அளவு. ஆயுஷ் பட்டப் படிப்புகளுக்கும் அதே கால அளவுதான். இறுதி ஓராண்டு உள்மருத்துவராகப் பணியாற்றுவதிலும் மாற்றமில்லை. முதலிரண்டு ஆண்டுகள் பாடத்திட்டத்தில் உடற்கூறியல் உள்ளிட்டவை அனைத்து மருத்துவக் கல்விக்கும் பொதுவானவையே. இம்மருத்துவக் கல்விச் சேர்க்கைக்கும் நீட் தேர்வு மதிப்பெண்ணே அடிப்படை. மாற்று மருத்துவம் பற்றிய அறிவு மக்களிடம் குறைவாக இருப்பதால் சேர்க்கையில் போட்டியும் குறைவு. ஓரளவு மதிப்பெண் பெற்றிருந்தாலே இடம் கிடைத்துவிடும். 

மாவட்டத் தலைநகர்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சித்த மருத்துவம், ஹோமியோபதி மருத்துவப் பிரிவுகள் உள்ளன. அவற்றில் ஒவ்வொரு மருத்துவர் இருப்பார். யோகா மற்றும் இயற்கை மருத்துவத்திற்கு இப்போதைய ஒன்றிய அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது. ஆகவே, அரசு சார்ந்த பணி வாய்ப்புகள் அத்துறையில் கூடியுள்ளன. ஆங்கில மருத்துவத்தில் செலவு கூடுவதாலும் பல்வேறு பரிசோதனைகள் செய்யக் கட்டாயப்படுத்துவது உள்ளிட்ட காரணங்களாலும் பிற மருத்துவத்தை மக்கள் நாடுவது இப்போது அதிகரித்திருக்கிறது. ஆகவே, தனியாக மருத்துவமனை வைத்து நடத்துவது இயல்கின்ற செயல்தான். 

நாமக்கல்லில் ஹோமியோபதி மருத்துவர்கள் மட்டும் பன்னிரண்டு பேர் உள்ளனர்; மருத்துவமனை வைத்து நடத்துகின்றனர். ஆங்கில மருத்துவர்களைப் போல ஓய்வில்லாமல் உழைக்க வேண்டியதில்லை. பகலில் மட்டும் பணியாற்றினால் போதும். அமைதியான வாழ்க்கையை வழங்கும் வகையில் தொழில் புரியலாம். பெரும்பணம் ஈட்ட வாய்ப்பில்லை என்றாலும் வளமான வாழ்வுக்குத் தேவையான அளவு பொருளீட்டலாம். 

இந்த விவரங்களை எல்லாம் அம்மாணவரிடம் எடுத்துச் சொன்னேன். எப்போதுமே ஒரு விஷயம் மனதில் பதியத் தகவல்களைக் கொடுப்பது மட்டும் போதாது. அனுபவமும் சான்றுகளும் இருந்து எடுத்துச் சொன்னால் பலன் கிடைக்கும். இவற்றில் மருத்துவம் பார்த்துக்கொண்ட என் அனுபவத்தை எடுத்துச் சொன்னேன். முப்பது ஆண்டுகளுக்கு முன் ஹோமியோபதி எனக்கு அறிமுகம் ஆயிற்று. இன்று வரைக்கும் பிரதான மருத்துவமாக அதையே கருதுகிறேன். ஆங்கில மருத்துவம் உட்பட எந்த மருத்துவத்தையும் நான் புறக்கணிப்பதில்லை. அவசியத் தேவைகளுக்கு அவற்றையும் நாடுவதுண்டு. எனினும் எனக்கு மிகவும் பிடித்தது ஹோமியோபதி. மருத்துவத்தைக் கலை என்று சொல்வதுண்டு. உண்மையாகவே கலையம்சம் கூடிய மருத்துவம் என்றால் அது ஹோமியோபதிதான். மனித மனத்தோடு உறவாடும் அதன் செயல்முறைகளும் எளிதான மருந்துகளும் ரசனையானவை.

‘மாற்று மருத்துவம்’ என்று இவற்றைச் சொல்வதுண்டு. ஆனால், அத்துறை சார்ந்தவர்கள் இதை ஏற்றுக்கொள்வதில்லை. ஆங்கில மருத்துவத்தை முதன்மைப்படுத்தி அதற்கு மாற்றான மருத்துவம் என்று ஏன் குறிப்பிட வேண்டும் என்று கேட்பார்கள். ஒவ்வொரு மருத்துவத்திற்கும் தனித்தன்மைகள் உள்ளன. அந்தந்த மருத்துவத்தின் பெயரால் குறிப்பிடுவதே சரியானது என்பார்கள். ஆங்கில மருத்துவம் அளவுக்குப் பிற மருத்துவத் துறைகள் மக்களிடம் அறிமுகம் ஆகவில்லை என்றாலும் அவற்றை அறிந்த மக்கள் கணிசமாக உள்ளனர். அதனால்தான் கிட்டத்தட்ட முப்பது கல்லூரிகள் உள்ளன. அவற்றில் பயின்று வரும் மாணவர் எண்ணிக்கை ஆண்டுதோறும் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் உள்ளனர். அவர்கள் இச்சமூகத்தில்தான் தொழில் செய்து வாழ்கின்றனர்.

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

நீட்: உலகம் எப்படி அணுகுகிறது?

மு.இராமநாதன் 28 Jun 2023

என் மகள்கள்!

என் அண்ணன் மகள் டாக்டர் இரா.இளமதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவர். சென்னையில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் பயின்றவர். பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தபோதும் அப்போதிருந்த நுழைவுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் நாங்கள் விரும்பிய ஹோமியோபதி கிடைக்கவில்லை. அப்போதுதான் இயற்கை மருத்துவக் கல்லூரியை அரசு தொடங்கிச் சில ஆண்டுகள் ஆகியிருந்தன. எனினும் அப்படிப்பில் சேர்ந்தார். எந்தக் குறையுமில்லை. இப்போது எங்கள் ஊர் திருச்செங்கோட்டில் உள்நோயாளிகள் தங்குவதற்கான படுக்கை வசதியுடன் மிகப் பெரிய மருத்துவமனை வைத்துள்ளார். மருத்துவமனை தொடங்கிய பத்தாண்டுகளில் பெருமுன்னேற்றம் கண்டு பிரபலம் பெற்ற மருத்துவராக விளங்குகிறார். 

என் மகள் டாக்டர் மு.இளம்பிறை, ஹோமியோபதி மருத்துவர். மதுரை, திருமங்கலம் அரசு ஹோமியோபதி கல்லூரியில் பயின்றார். பின்னர் அகில இந்திய அளவில் நடைபெறும் முதுகலைப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு எழுதி பெங்களூர் அரசு ஹோமியோபதி கல்லூரியில் எம்.டி. பயின்றார். மூன்றாண்டுப் படிப்பிற்கு மாதந்தோறும் கணிசமான அளவுக்கு உதவித்தொகையும் கிடைத்தது. இப்போது நாமக்கல்லில் மருத்துவமனை நடத்திவருகிறார். ஹோமியோபதி மருத்துவமனைக்குப் பெரிய இடம் தேவையில்லை. ஒன்று அல்லது இரண்டு அறைகள் இருந்தால் போதும். 

இவ்வாறு என் அனுபவம் சார்ந்தும் எங்கள் வீட்டு மருத்துவர்களைப் பற்றியும் சொல்லி ஸ்ரீவந்துக்கு விளக்கினேன். அவர் எதையும் உடனே உள்வாங்கிக்கொள்ளும் திறன் கொண்டவராக இருந்தார். உரையாடலின்போது அவரது அறிவாற்றலையும் உணர்ந்தேன். அவருக்குப் பிடித்த மருத்துவத் துறையில் பயின்றால் நல்ல மருத்துவராக வருவார் என்னும் நம்பிக்கை எனக்கு வந்தது. எனக்குப் பிடித்தது ஹோமியோபதி என்றாலும் அவருக்குப் பிடித்த எந்த மருத்துவக் கல்வியிலும் சேரலாம். ஆங்கில மருத்துவம் கிடைக்கவில்லையே என்று வருந்த வேண்டாம் என்றெல்லாம் ஆலோசனை கூறினேன்.

அன்றே சென்று கூகுளில் இந்த மருத்துவ முறைகளைப் பற்றித் தேடி அறிந்துகொண்டார். பின்னர் அவருக்குப் பிடித்தமாகத் தோன்றிய சித்த மருத்துவம் பயில அரசு ஒதுக்கீட்டு இடத்தில் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் சேர்ந்தார். இப்போது விருப்பத்தோடும் மகிழ்ச்சியோடும் கற்றுவருகிறார். முதலாமாண்டு (ஒன்றரை ஆண்டு) படிப்பு முடிந்து தேர்வு எழுதிவிட்டார். மனம் சுணங்கியிருந்த மாணவர் ஒருவரை சற்றே திசை மாற்றி அவருக்கு விருப்பமான மருத்துவத் துறையிலேயே செலுத்தியதில் சிறுபங்கு எனக்கும் உண்டு என்பதில் மனநிறைவு கொள்கிறேன். 

அறிவுச் சோம்பேறிகள்

இத்தகைய படிப்புகளில் சேரும்போது நம்மைச் சுற்றி இருப்போர் சும்மா விடமாட்டார்கள். பலருக்குக் கல்வி வாய்ப்புகள் பற்றி ஏதும் தெரியாது. ஆனால், தெரிந்ததுபோல அறிவுரையும் ஆலோசனையும் வழங்க வந்துவிடுவார்கள். உறவினர்களையும் நண்பர்களையும் சமாளிப்பதற்கு வலு வேண்டும். எங்கள் பிள்ளைகள் இந்தப் படிப்புகளில் சேர்ந்தபோது முகம் சுழிக்க அறிவுரை சொல்ல வந்தோர் பலருண்டு. அவர்களுக்கு இந்த மருத்துவக் கல்வி பற்றி ஆதியோடு அந்தமாக விரிவுரை வழங்குவேன். ஒன்றுமே தெரியாத அவர்கள் பேசாமல் கேட்டுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. 

என் மகள் என்ன படிக்கிறாள் என்று கேட்போருக்கு ‘ஹோமியோபதி’ என்று நூறு முறை சொல்லியிருந்தாலும் அவர்களுக்கு மனதில் பதியாது. நூற்றொன்றாவது முறை பார்க்கும்போது ‘சித்தாதானே படிக்கறாங்க’ என்று கேட்பார்கள். ஏதோ சித்த மருத்துவம் மட்டுமாவது மனதில் பதிந்திருக்கிறதே என்று மகிழ்ச்சியடைய வேண்டியதுதான். சித்த மருத்துவம் என்பதும் மனதில் பதியாமல் ‘நாட்டு மருந்து’ என்று சொல்வோர் உண்டு. பல பட்டங்கள் பெற்ற ஆசிரியர்களிலும் பெரும்பான்மை அப்படித்தான். என்ன செய்வது, அறிவுச் சோம்பேறிகளை அதிகம் கொண்ட சமூகம் நமது. இத்தகையோரையும் சமாளித்து மீண்டு ஸ்ரீவந்த் இப்போது சித்த மருத்துவம் பயில்கிறார். 

மருத்துவக் கல்வியில் சேர ஏற்கெனவே தமிழ்நாடு அளவில் நடைபெற்று வந்த நுழைவுத் தேர்வை ஒழித்தது 2006 – 2011வரை இருந்த திமுக அரசுதான்.  மாணவர்களையும் பெற்றோர்களையும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும் நீட் தேர்வை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டு இப்போதைய திமுக அரசும் செயல்பட்டுவருகிறது. சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் அதற்குரிய போராட்டங்களை முன்னெடுத்துவரும் அதேசமயம் அத்தேர்வு ஒழியும் வரைக்கும் தற்கொலை எதுவும் நடைபெறாமல் மக்களைப் பாதுகாக்க வேண்டிய கடமையும் அரசுக்கு இருக்கிறது. அதற்கான வழிமுறைகளை அரசு வகுத்துச் செயல்பட வேண்டும். 

‘ஒரே’ முழக்கம்

அவ்வழிமுறைகளில் ஒன்று மாணவருக்கும் பெற்றோருக்கும் கலந்தாலோசனை வழங்குவதாகும். அவ்வாலோசனையில் ஆயுஷ் மருத்துவத் துறை பற்றி விரிவாக விளக்கலாம். பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்கள் பயிலும் பள்ளியிலேயே உயர்கல்வி வாய்ப்பு பற்றி ஆலோசனை வழங்கும் ஏற்பாட்டைக் கடந்த ஆண்டு முதல் இவ்வரசு செய்துள்ளது. ஆயுஷ் படிப்புகளைப் பற்றி ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். 

மேலும் ஆயுஷ் மருத்துவத் துறையில் அரசு இன்னும் கூடுதலாகக் கல்லூரிகளைத் திறக்கலாம். ஒரு மருத்துவத்திற்கு ஒரே ஒரு அரசுக் கல்லூரி என்பது போதவே போதாது. ஏற்கெனவே இருக்கும் கல்லூரிகளில் உட்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளில் இம்மருத்துவர்களுக்கான பணியிடங்களை அதிகப்படுத்த வேண்டும். மருந்துகள் எளிதாகக் கிடைக்கச் செய்ய வேண்டும்.

ஒன்றிய அரசு எல்லாவற்றிலும் ‘ஒரே’ முழக்கத்தை முன்வைத்துச் செயல்பட்டுவருகிறது. அதுதான் மருத்துவக் கல்வியிலும் பிரதிபலிக்கிறது. அதற்கு எதிராக மாற்றுகளை முன்வைத்துப் பல கோணங்களில் தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும். மாற்று மருத்துவக் கல்வியை வலுவாக்கி மக்களை அதில் ஈடுபாடு கொள்ளச் செய்வது அவ்வகையில் சிறந்தது. 

 

தொடர்புடைய கட்டுரைகள்

அகில இந்திய ஒதுக்கீடு நோக்கித் தமிழக மாணவர்கள் கவனம் திரும்ப வேண்டும்
நீட்: உலகம் எப்படி அணுகுகிறது?
கியூட் - நீட் - கேட்: தகுதித் தேர்வுகளா? தடைக் கற்களா?
ஒடுக்குமுறைத் தேர்வுகள்
மருத்துவப் படிப்பின் பெயரால் ஏனைய துறைகளை ஒழிக்கிறோம்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பெருமாள்முருகன்

பெருமாள் முருகன், பேராசிரியர், எழுத்தாளர். ‘அர்த்தநாரி ஆலவாயன்’, ‘பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.


1


பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Raja   6 months ago

மிகவும் நல்ல பதிவு. இப்போது மாற்று மருத்துவ முறைகள் மேல் பலருக்கு ஆர்வம் உள்ளது. இன்னும் பெரிய அளவில் மக்கள் சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி பக்கம் வரலாம். இந்தியா போன்ற மக்கள் தொகை பெருக்கம் உள்ள நாட்டில் மாற்று மருத்துவ முறைகளுக்கு நிச்சயமாக ஏராளமான தேவை உள்ளது.  

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

தமிழ் தாத்தாகிராமங்கள்Inter State Councilஆவணமாகும் புகைப்படத் தொகுப்புதீர்ப்பின் பொன்விழாவும் தீர்க்கமான பாதையும்விடுதலை ஒரு போர் வாள்அதானி குழுமம்2ஜி நெட்வொர்க்சுகுமாரன் கவிதைகள்: காலி அறையில் மாட்டிய கடிகாரம்பெருந்தொற்றுபீமா கோரேகான் வழக்குஇரண்டாம்தர மாநிலம்கழிவுதொழில்நுட்பமும் அடியாள் பலமும்உடல்மொழிதொழில்முனைவோர்சமஸ் - ட்ராட்ஸ்கி மருதுகாங்கோமக்கள்தொகை கொள்கைகல்கிபோக்குவரத்துசிதம்பரம்இந்தி அரசியல்தென்னிந்திய மாநிலங்கள்குஜராத் சாயல்இராம.சீனுவாசன் கட்டுரைஅயோத்தியில் ராமர் கோயில்ஏழைக் குடும்பங்கள்தங்க ஜெயராமன் பா.இரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது அரசோழர்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!