கட்டுரை, அரசியல், சட்டம் 7 நிமிட வாசிப்பு

ஆளுநர் ரவியின் பேச்சு சரியா?

கே.சந்துரு
30 Aug 2022, 5:00 am
6

மேனாள் காவல் துறை அதிகாரியான ஆர்.என்.ரவியை ஒரு திட்டத்துடன்தான் தமிழக ஆளுநராக ஒன்றிய அரசு அனுப்பியிருக்கிறது என்பதை அவரது பல நடவடிக்கைகள் தொடர்ந்து நிரூபிக்கின்றன. ரவி  பதவியேற்ற தினத்தன்று அரசமைப்புச் சட்டப் பிரிவு 159இன் கீழ் தலைமை நீதிபதியால் அவருக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டபோது “என்னுடைய முழுத் திறமைக்கேற்ப அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பேன்” என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டார். ஆனால், கடந்த ஒரு வருடத்தில் அவருடைய செயல்பாடுகள் அனைத்தும் அவர் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு விரோதமாகவேதான் இருந்துவருகின்றன.

ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையின் பிரச்சார பீரங்கியாகவும், தமிழகத்தில் சனாதன தர்மத்தைக் காக்கும் வீரராகவும், திருக்குறளுக்குப் புதிய உரை எழுதும் இரண்டாவது பரிமேலழகராகவும் செயல்பட்டுவரும் ஆளுநர் ரவி தமிழக சட்டமன்றம் இயற்றியுள்ள பல சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது அவரது உண்மையான அக்கறையின் குவிமையத்தைக் காட்டுகிறது.

சர்ச்சைக்குரிய உரை…

ஆளுநர் ரவி 26.6.2022 அன்று ராமகிருஷ்ண மிஷன் நடத்திவரும் உறைவிடப் பள்ளியின் நூற்றாண்டு விழாவில் கீழ்க்காணும் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்:

பாரத தேசத்தின் முதுகெலும்பாக, பாரதத்தின் ஆன்மாவாகக் கருதப்படும் சனாதன தர்மம் எங்கும் பரவி வளர்ந்தால்தான் இந்தியா முழுமை பெற்று வளர்ச்சி அடைய முடியும். ....பன்முகத்தன்மை (Pluralism) கொண்ட நம் நாட்டை, மதத்திலிருந்து வேறுபடுத்தினால்தான் பாதுகாத்திட முடியும் என்று நம்புகின்றனர். 

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 1976ஆம் ஆண்டு 42வது சட்டத்திருத்தத்தின்படி அதன் முன்னுரையில் செகுலரிஸம் (Secularism) என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், அதன் பொருள் என்ன என்று விளக்கப்படவில்லை. செகுலரிஸம் (Secularism) என்ற வார்த்தைக்குப் பொதுவில் வெளியான பல்வேறு அர்த்தங்களும் வியாக்கியானங்களும் தொடர்ந்து போதிக்கப்பட்டுவருகின்றன. ஆனால், இந்த செகுலரிஸம் (Secularism) என்ற வார்த்தையை அரசமைப்புச் சட்டத்தின் வரைவு அறிஞர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 1950இல் அமலுக்கு வந்த அரசமைப்புச் சட்டத்திலும் இந்த வார்த்தை இடம்பெறவில்லை. பாரத தேசத்தின் அடிப்படையாக எந்தத் தத்துவம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற விவாதம் அரசமைப்புச் சட்ட வரைவுக்குழுவிலும் கடுமையாக விவாதிக்கப்பட்டுள்ளது. பாரத அரசின் நோக்கமும் குறிக்கோளும் தர்மம்தான். 

அந்த விவாதத்தின்போது அனைத்துச் சமயங்களும் சமம் என்ற (சர்வமத ஸமபாவம்) என்ற கருத்தொற்றுமை ஏற்பட்டது. பாரதத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வேரூன்றி வளர்ந்துவரும் தர்மம் இதுதான்.” -‘(ஸ்ரீராமகிருஷ்ண விஜயம், இதழ் 9, செப்டம்பர் 2022). 

என்ன புரிதல் இது?

அரசமைப்புச் சட்டத்தைப் பற்றிய தன்னுடைய மேதமையை வெளிக்காட்ட விரும்பிய ஆளுநர் உண்மையில் அதில் போதிய புரிதல் இல்லை என்பதையே வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஆளுநர், இரண்டு விஷயத்தை மறந்துவிட்டார். அரசமைப்புச் சட்டம் புனித நூல் அல்ல, மாற்றத்துக்கு உட்பட்டது என்பதை நாம் அறிவோம். அதனால்தான் இதுவரை 102 முறை அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட திருத்தங்கள், அரசமைப்புச் சட்டத்துடன் ஒருங்கிணைந்தவை. அத்திருத்தங்களை உச்ச நீதிமன்றம் அடிப்படை உரிமைக்கு விரோதம் என்று அறிவிக்காதவரை அவையும் அரசமைப்புச் சட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் கருதப்படும் என்று தீர்ப்பு கூறியுள்ளது. 

சோஷலிஸம் மற்றும் மதசார்பின்மை என்ற இரண்டு வார்த்தைகளும் ஆரம்ப அரசமைப்புச் சட்டத்தில் கூறப்படவில்லை என்றாலும், 1976ஆம் வருடம் கொண்டுவரப்பட்ட 42வது சட்டத்திருத்தத்தின்படி அவ்விரு வார்த்தைகளும் அரசமைப்புச் சட்டத்தின் முகப்பு வரிகளில் (Preamble)  சேர்க்கப்பட்டன.  எனவே, அவையும் ஆளுநர் தன்னுடைய பதவிப்பிரமாணத்தில் முழுத் திறமையுடன் பாதுகாப்பேன் என்று கூறிய வாசகத்தில் அடங்கும். இதை மறுத்தால் அவரைப் பதவியிலிருந்து நீதிமன்ற உத்தரவின் மூலம் நீக்க முடியும் என்பதை அவர் தெரிந்துகொள்ள வேண்டும்.   

1976ஆம் வருடம் 42வது அரசமைப்புத் திருத்தச் சட்டம் மூலம் அரசமைப்புச் சட்டத்தின் பல பகுதிகள் திருத்தப்பட்டன. மிசா சட்டத்தில் சிறையிலிருந்து, நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்ஜ் பெர்னான்டஸ் தனது உறுப்பினர் பதவி ஏற்பதற்காகப் பதவிப்பிரமாணம் ஏற்கும்போது அரசமைப்புச் சட்டத்தைக் காப்பேன் என்று கூறியபோது 42வது அரசமைப்புத் திருத்தச் சட்டம் தவிர்த்து என்று கூடுதலாக உறுதிமொழி எடுத்துக்கொண்டதாகக் கூறி, அவர் பதவியேற்பைத் தடுப்பதற்காக வழக்கு போடப்பட்டது. இதற்கிடையில் அவர் பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையிலான அமைச்சரவையில் தொழிற்துறை அமைச்சராகி இருந்தார். வழக்கிற்கு ஆதாரமாக அகில இந்திய வானொலி உறுதியேற்பு நிகழ்வைப் பதிவுசெய்த ஒலிநாடா கொண்டுவர உத்தரவிடப்பட்டது. ஆனால், உறுதிமொழி ஏற்றுக்கொண்ட பகுதி அடங்கிய ஒலிநாடாவில், குறிப்பிட்ட பகுதியில் தேய்மானம் ஏற்பட்டிருந்ததனால் அவ்வார்த்தைகள் தெளிவாக வெளிப்படவில்லை. எனவே, பெர்னான்டஸின் எம்பி பதவிப் பறிப்பு தப்பியது.  

ஆனால், அதேசமயத்தில் இந்தி மொழி ஆதிக்கத்தை எதிர்த்து 1986இல் நடத்திய போராட்டத்தின்போது அரசமைப்புச் சட்டத்தில், இந்திய ஆட்சி மொழி பற்றிக் கூறப்பட்டுள்ள 17வது பகுதியை நகலெடுத்து பொது இடங்களில் எரித்ததைக் காரணம் காட்டி திமுகவின் பொதுச் செயலாளர் அன்பழகனும், மேலும் 10 சட்டமன்ற உறுப்பினர்களும் தமிழக சட்டப்பேரவைத் தலைவரால் நிரந்தரமாக அவையிலிருந்து நீக்கப்பட்டனர். அரசமைப்புச் சட்டத்தின் ஒரு பகுதியை எரித்ததால் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை மீறியதற்காக சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அதை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

எதையெல்லாம் எதிர்ப்பார்?

அசல் அரசமைப்புச் சட்டத்தையும், அதற்குக் கொண்டுவரப்பட்ட திருத்தங்களையும் பிரித்துப் பேசும் ஆளுநர் ரவி எல்லாச் சட்டத் திருத்தங்களையும் எதிர்ப்பாரா? 42வது சட்டத்திருத்தத்தின் மூலம்தான் கல்வி என்ற அதிகாரப் பிரிவினை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. எனவேதான் ஒன்றிய அரசு புதிய கல்விக் கொள்கையை வகுத்து மாநிலங்கள் மீது திணிக்க முடிகிறது. ஆளுநர் இப்படியெல்லாம் பேச முடிகிறது. இதை ஆளுநரால் மறுக்க முடியுமா?

அரசமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலம் பிரிவு 370 ரத்துசெய்யப்பட்டு ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டதுடன், அம்மாநிலம் இரு ஒன்றிய அரசுப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. ஆரம்ப அரசமைப்புச் சட்டத்தின் பகுதியாக இருந்த இப்பிரிவை ஒன்றிய அரசு நீக்கியது தவறு என்று ஆளுநர் கூறுவாரா? 

அரசமைப்புச் சட்டத்தின் 15 மற்றும் 16வது பிரிவுகளின் ஆரம்ப கட்ட வாசகங்களுக்கு விரோதமாகப் பொருளாதாரரீதியாக பின்தங்கியுள்ள உயர்சாதியினருக்கும் இடஒதுக்கீடு கொண்டுவந்த 103வது சட்டத்திருத்தத்தை எதிர்ப்பாரா? 

மதச்சார்பின்மைக்கான பற்றுறுதி

மேலும், ஆளுநர் தனது கருத்தை வலியுறுத்துவதற்காக மதசார்பின்மை பற்றி அரசமைப்புச் சட்டப்பேரவையில் இதுகுறித்து கருத்து ஒற்றுமை இல்லாததோடு, அதற்கான உரிய விளக்கமும் அறிஞர்களால் வழங்கப்படவில்லை என்று கூறியுள்ளார். ஆனால், எஸ்.ஆர்.பொம்மை என்ற வழக்கில் (1994) ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வில் உச்ச நீதிமன்றம் தனது கருத்தைத் தெளிவாக இவ்வாறு பதிவுசெய்துள்ளது:

"மதசார்பின்மை என்பது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளில் ஒன்றானது. இந்தியாவிலுள்ள அனைவருக்கும் மதத்திற்கான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ள அதேநேரத்தில், அரசைப் பொறுத்தவரை எந்த ஒருவரது மதம், பற்றுறுதி, நம்பிக்கையையும் கணக்கில் கொள்ளத் தேவையில்லை. அரசைப் பொறுத்தவரை அனைவரும் சமம். அவர்கள் சமமாக நடத்தப்பட வேண்டும். அரசு விவகாரங்களில் மதத்திற்கு இடமில்லை. எந்த ஒரு அரசியல் கட்சியும் ஒரே நேரத்தில் மதம் சார்ந்த கட்சியாகவும் செயல்பட முடியாது. அரசியலும், மதமும் கலக்கப்படக் கூடாது. எந்த ஒரு மாநில அரசும் மதசார்பின்மைக்கு விரோதமான கொள்கைகளையோ (அ) மதசார்பின்மைக்கு விரோதமாக நடவடிக்கையில் ஈடுபட்டாலோ அவர்கள் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு பிரிவு 356இன் கீழ் அந்த ஆட்சியைக் கலைப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம்.” 

அரசமைப்புச் சட்டத்தில் என்ன கூறப்பட்டிருந்தாலும் அதை வியாக்கியானம் செய்யும் உரிமை உச்ச நீதிமன்றத்திற்கு உண்டு என்பதையும், அதுகுறித்து உச்ச நீதிமன்றம் அறிவிக்கும் தீர்ப்புகள் அனைவரையும் கட்டுப்படுத்தும் என்று அரசமைப்புச் சட்டப்பிரிவு 141இல் கூறப்பட்டுள்ளதோடு, 144வது பிரிவின்படி இந்தியாவிலுள்ள சிவில் மற்றும் நீதித் துறை அதன் தீர்ப்புகளை நிறைவேற்ற உச்ச நீதிமன்றத்துக்கு உதவ வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

இப்படித் தெளிவான உச்ச நீதிமன்றத்தின் விளக்க உரை கைவிளக்காக உள்ள நிலையில், பொதுமேடைகளில் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகப் பேசிவரும் ஆளுநரை அவர் எடுத்துக்கொண்ட பதவிப்பிரமாணத்திற்கு விரோதமாகச் செயல்படுகிறார் என்று கூறி பதவி நீக்க நடவடிக்கைகூட எடுக்கலாம் என்பதை ஆர்.என்.ரவி அறிவாரா? 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கே.சந்துரு

கே.சந்துரு, சென்னை உயர் நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி; சமூக விமர்சனங்களை முன்வைப்பதோடு நீதித் துறையின் சீர்திருத்தங்களுக்கான சிந்தனைகளையும் தொடர்ந்து முன்வைப்பவர். ‘ஆர்டர்.. ஆர்டர்!’, ‘நீதிமாரே, நம்பினோமே!’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.


8

1



1


பின்னூட்டம் (6)

Login / Create an account to add a comment / reply.

அ.பி   2 years ago

ஊசி இடம் குடுக்காம நூல் வருமா... Tn govt ஒன்றும் கண்டு கொள்ளாமல் இருப்பது நல்லது அல்ல

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Karthikeyan M   3 years ago

ஐயா அப்படியே இந்து பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்காமல் மதச்சார்பின்மையை கடைபிடிக்கும் தமிழக முதல்வர் செய்வது சரியா / தவறா?

Reply 1 4

Shanmugakani   3 years ago

எந்தப் பண்டிகைக்கும் வாழ்த்துச் சொல்ல வேண்டும் என்கிற சட்டமில்லை. பொங்கல் பண்டிகைக்கு நமது முதலமைச்சர் வாழ்த்து சொல்கிறாரே, அது தமிழர்களின் பண்டிகை என்பதால்.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Saravanan P   3 years ago

More than this one, nobody can explain the legal position with regard to the implications of misinterpreting the Constitutional provisions and speaking about it in public forums. . Better the Governor of Tamil Nadu understands and refrains from doing it. The people of the State are fed up with the Governor's overtures on New Education Policy and secularism.

Reply 1 0

Shanmugakani   3 years ago

The time is approaching. the Tamils ​​will oppose the governor en masse and send him out. Everything has a limit. Tamils ​​are patient. It won't last long.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

K. Ramasami   3 years ago

உச்ச நீதிமன்றம் தலையிடாமல், இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது வினோதமானது.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

மாநிலத் தலைகள்: ரேவந்த் ரெட்டிவிவாசாயிகள் போராட்டம்நடப்பு நிகழ்வுகள்ரூர்க்கி ஐஐடிஇந்தியத் தொல்லியல் துறைபசுவய்யாபோயர்கள்சாவர்க்கர் ராஜன் குறை பி.ஏ. கிருஷ்ணன்இல்லம் தேடிஅரசியலும் ஆங்கிலமும்பஞ்சாப் காங்கிரஸ்டி20 உலகக் கோப்பை 20241977: மீண்டும் நினைவுக்கு வருகிறதுபாமணியாறுதனிச் சொத்துசமஸ் கட்டுரைகள்இளம் தம்பதியர்விரித்தலும் சுருக்குதலும்ராஜீவ் மீதான வெறுப்புபணமதிப்புநீக்கம்வடக்கு அயர்லாந்துமயிர்கொரோனாஇரண்டு முறை மனவிலகல்விளைபொருள்கள்நியாயமற்ற வரிக் கொள்கைவலிப்பு நோய்ரயில்வே துறைதிரைக்கலை அறிஞர்மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!