இன்னொரு குரல் 5 நிமிட வாசிப்பு

உற்சாகம் தரும் காலை உணவு

20 Apr 2022, 5:01 am
0

தமிழில் விவாதங்களை வளர்க்கும் பணியில் தன்னையும் ஈடுபடுத்திக்கொள்கிறது ‘அருஞ்சொல்’. அதனால்தான் தலையங்கம், கட்டுரை ஆகியவற்றுக்கு இணையான முக்கியத்துவத்தை ‘இன்னொரு குரல்’ பகுதிக்கு அளித்து, இணையதளத்தின் பிரதான இடத்திலேயே அதற்கு இடமும் அளிக்கிறது. ‘அருஞ்சொல்’ இதழை வாசிப்பவர்கள் வெறும் வாசகர்கள் மட்டும் இல்லை; எழுத்தாளர்கள், அறிஞர்கள், பத்திரிகையாளர்கள், கொள்கை வகுப்பாளர்களான அரசியலர்கள் – அதிகாரிகள், செயல்பாட்டாளர்கள், ஆசிரியர்கள் என்று பல்வேறு துறை ஆளுமைகளும் ‘அருஞ்சொல்’லை வாசிக்கிறார்கள் என்பதை அறிந்திருக்கிறோம். ஆகையால், கட்டுரைகளை வாசிப்பவர்கள் ‘எனக்குப் பிடிக்கிறது அல்லது பிடிக்கவில்லை’, ‘நான் இதை ஆதரிக்கிறேன் அல்லது எதிர்க்கிறேன்’ என்பதுபோல ஓரிரு வரிகளில் தங்கள் கருத்துகளை எழுதாமல் விரிவாக எழுதிட வேண்டுகிறோம். அப்படி எழுதப்படும் கருத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை ‘இன்னொரு குரல்’ பகுதியில் வெளியாகும். கருத்துகளைப் பின்னூட்டப் பகுதியில் எழுதிடுங்கள் அல்லது aruncholeditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடுங்கள். தயவுசெய்து உங்கள் பெயருடன், ஊர் பெயரையும் குறிப்பிடுங்கள். ‘அருஞ்சொல்’ ஆசிரியர் சமஸ் எழுதி ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் வெளியான ‘காலை உணவுக்குத் தேவை கண்ணியமான கற்பனை’ எனும் கட்டுரை சமீபத்தில் ‘அருஞ்சொல்’ இதழில் மறுபிரசுரம் செய்யப்பட்டது. அந்த கட்டுரைக்கு ஏராளமான எதிர்வினைகள் வந்தன; அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவற்றை இங்கே தருகிறோம். 

மூளைக்கான உணவு 

காலை உணவின் முக்கியத்துவத்தைச் சொல்லவே இந்தத் தலைப்பு. 20 ஆண்டுகளாக ‘அருஞ்சொல்’ ஆசிரியர் சமஸ் பள்ளிகளில் காலை உணவு கொடுக்க வேண்டும் என்று எழுதிவருகிறார். அவரது காலை உணவுக்கு தேவை கண்ணியமான கற்பனை என்ற கட்டுரையை அரசும் சமூகமும் படிக்க வேண்டும்; செயல்படுத்தவும் வேண்டும். 

நான் ஆசிரியராகப் பணியாற்றிய மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியில் தினமும் 5, 6 மாணவர்கள் காலை உணவு சாப்பிடாமல் என் வகுப்பில் இருப்பதைக் கண்டிருக்கிறேன். அந்த மாணவர்களோ கிராமத்தில் இருந்து வருகின்றனர். 8 மணி டியூஷன். காலை, மதிய உணவானது பையில் இருக்கும். 

அவர்களுக்குக் காலை உணவைச் சாப்பிட சில சமயம் நேரம் கிடைக்காது. நான் முதல் பீரியட் பாடம் நடத்தும்போதே 5 நிமிடத்தில் சாப்பிட்டுவிட்டு கையை பேப்பரில் துடைத்து, பேப்பரை டிபன் பாக்ஸில் போட்டு மூடிவிட அனுமதிப்பேன். ஏனென்றால், காலை உணவுதான் முளைக்கான உணவு (பிரெயின் ஃபுட்). 

இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை சாப்பிடாமல் இருந்துவிட்டு பிறகு சாப்பிடுவதை நோன்பு முறித்தல் என்பார்கள். அதுவே, ஆங்கிலத்தில் ‘பிரேக் ஃபாஸ்ட்’ என்பதற்கு பெயர்க் காரணம். உடல், தான் சேமித்த சக்தியைக் காலை எழுந்தவுடன் செலவழிக்க ஆரம்பிக்கும். மூளை சுறுசுறுப்புக்குப் புரதமும் உடல் இயக்கத்துக்கு சக்தி கொடுக்க மாவும் வேண்டும். எடை குறைக்க எந்த மருத்துவரும் காலை உணவைத் தவிர்க்கச் சொல்லவில்லை. காலை உணவே ஒரு நாளின் முக்கிய உணவாக இருக்க வேண்டும் என்கிறார்கள். 

காலை உணவு சாப்பிட முடியாத நிலை 5, 6 மாணவர்களுக்கு ஏற்படும். நான் முதல் பாடவேளைக்குச் செல்லும் வகுப்புக்கு வெளியே இறை வணக்கம் அனுசரிக்கப்படும். அப்போது இவர்கள் மூளைக்கான உணவு (காலை உணவு) சாப்பிட்டு கை ‘துடைத்து’ பாடம் கேட்க தயார் ஆவார்கள். இந்த ரகசியம் அன்றுதான் அம்பலம். சாப்பிட முடியாத இறைவனுக்கே நாம் அமுது படைக்கின்றோம். அவன் நம் பசி அறிவான். கோபித்துக்கொள்ள மாட்டான். ஆனால், தலைமை ஆசிரியர் அனுமதிக்க மாட்டார். அதனால்தான்  ‘கை துடைத்தல்’ ரகசியம்.

திருச்சி கி.ஆ.பெ. பள்ளியின் தலைமை ஆசிரியர் கிராமியன் காலை உணவு இல்லாமல் மூளை செல்கள் சோர்ந்திருக்கும் என்ற மருத்துவ அறிவியல் உணர்ந்து, ஆசிரியர்கள் பொருள் உதவியோடு காலை உணவுத் திட்டத்தை அமல்படுத்தியதாக சமஸ் தன் கட்டுரையில் சொல்கிறார். திருச்சி சேவா சங்கம் பள்ளியும் பின்பற்றுகின்றனர்.

காமராஜர் மதிய உணவு கொண்டுவந்தார். எம்ஜிஆர் சத்துணவு என்றார். ஆனால், சோறு, சாம்பாரில் சில காய்கறிகள் எட்டிப்பார்க்கும். மாணவனின் தட்டில் விழுந்தவுடன் முதலில் கறிவேப்பிலையோடு காய்களையும் தரையில் போட்டுவிடுவான்.

உண்மையான சத்துணவு முட்டையோடு வந்தது. யாரும் வீணடிக்கவில்லை. முட்டை பிடிக்காதவன் நண்பனுக்குக் கொடுத்தான். கலைஞர் முட்டை சாப்பிடாதவர்களுக்கு வாழைப்பழம் என்றார். நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு பழங்கள் வேண்டும். அதனால்தான் வாழைப்பழம் என்று விளக்கமும் கொடுத்தார். தற்போது கொடுக்கிறார்களா என்று தெரியவில்லை.

மூளைக்கு உண்மையான உணவு வாழைப்பழம்தான். எப்படி?

பிரிட்டனில் மிடில்செக்ஸ் என்ற ஊரிலுள்ள ‘டிவிக்கென்ஹாம்’ பள்ளிக்கூட மாணவர்கள் 200 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பள்ளித் தேர்வு சமயத்தில் அந்த 200 மாணவர்களுக்கும் காலை, இடைவேளை, மதியம் என மூன்று வாழைப்பழங்கள் கொடுக்கப்பட்டன. ஆய்வு முடிவு, ‘இவர்களின் கற்றல் திறன் துடிப்போடு மேம்பாடு அடைகிறது’ என்றது. இதை 2008 ஜூன் 17 அன்று ‘டெக்கான் க்ரானிகல்’ நாளிதழில் நான் படித்தேன். 

அதன் பின் பிரிட்டனில் எல்லாப் பள்ளி மாணவர்களுக்கும் தினசரி ஒரு வாழைப்பழம் கொடுக்கப்படுவதாக சிங்கப்பூர் இங்லீஷ் தினசரியான ‘டுடே’யில் 2009ஆம் ஆண்டு படித்தேன். வாழைப்பழத்தில் உள்ள ‘ட்ரைப்டோபன்’ என்ற புரதத்தை நம் உடல் ‘செரோடோனின்’னாக மாற்றுகிறது. இந்த செரோடோனின்தான் நம் மூளையைச் சமநிலைப்படுத்தி மகிழ்ச்சியாக வைக்கிறது.

சர்க்கரை வியாதி உள்ளவர்ளும் கொஞ்சம் சோற்றைக் குறைத்துவிட்டு ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம். சத்துக்களின் அடிப்படையில் பழங்களைத் தரவரிசைப்படுத்தினால் ஐந்தாம் இடம் வாழைப்பழத்திற்குதான். விலையையும் பார்த்து வரிசைப்படுத்தினால் முதல் இடம்.

கடந்த மூன்று ஆண்டுகளாக எனது காலை உணவு 5.30க்கு நடுத்தரமான 2 வாழைப்பழங்கள். ஒரு கப் சர்க்கரை இல்லாத ஸ்ட்ராங் காபி 9 மணிக்கு, ஐந்து நடுத்தர அளவு இட்லி, 150மிலி பொட்டுக்கடலை தேங்காய் சட்னி. எப்போதாவது இட்லிக்குப் பதில் வேறு ஏதாவது இருக்கும்.

இதோடு முதல் நாள் பகலில் ஊறவைத்து, இரவில் முளைகட்டிய ஒரு கைப்பிடி நிலக்கடலைப் பருப்பு கட்டாயம் உண்டு. 12 வயது வரை காலை விழித்தெழுந்த உடன் (கிராமம்) வீட்டு உத்தரத்தில் கட்டித் தொங்கும் பழத்தாரிலிருந்து இரண்டு பழங்களை நானே பிய்த்துச் சாப்பிட்டவன். பழம் இல்லை என்றால்தான் பிரிட்டானியா பிஸ்கட்.

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பி.ஏ படிக்கும்போது லாட்ஜ் வாசம். ஹாஸ்டல் கட்டுப்பாடில்லா ஜாலி ஜமாலியன். வாரம் இரண்டு சினிமா நல்லிரவு வரை அரட்டை. தேர்வுக்கு ஒரு மாதம் முன்புதான் படிக்க ஆரம்பித்தேன். மனம் புத்தகத்திற்கு வெளியே மேய்ந்தது. எப்படி பாஸ் செய்தேன்? வாழைப்பழம், கடலை சாப்பிட்டதால் மூளைக்கு கிடைத்த செரோடோனின் காரணமாக இருக்கலாம். பி.ஏ ஆங்கில இலக்கியம் படிப்பு. கொஞ்சம் ஆங்கிலப் புலமையும் கற்பனையும் இருந்தால் போதும் ‘ஜஸ்ட் பாஸ் மதிப்பெண்’ வாங்கிவிடலாம். நல்ல வேளையாக அறிவியல் படிப்பில் சேரவில்லை.

அப்போது ஒருவேளை சாப்பாடு ஒரு ரூபாய். இரவு உணவுக்கு பதில் சில நாட்கள் தள்ளுவண்டியில் ரூபாய்க்கு பத்துப் பழம் எனக் கூவி விற்கப்பட்ட நேந்திரம் பழங்களை வாங்கி பத்தையும் சாப்பிடுவது வழக்கம். வண்டியில் விற்கும் பச்சைக் கடலை பிடித்த பண்டம். 

வாழைப்பழத்தை உண்டவுடன் துரிதமான குலுகோஸாக மாறி உடலுக்கு உடனடி சக்தி கொடுக்கக் கூடியது என்பதை டென்னிஸ் வீரர்கள் இடைவேளையில் வாழைப்பழம் சாப்பிடுவதைப் பார்த்தே தெரிந்துகொண்டேன். இந்த உண்மையை அறியாமலேயே எனக்குக் காலையில் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் இருந்துள்ளது. வாழை மாலையில் சாப்பிடும் பழம் அல்ல. காலையிலும் மதியத்திலும் சாப்பிட வேண்டிய பழம். பிள்ளைகளுக்கு காலை உணவு கொடுக்க தாமதமானால் இரண்டு வாழைப்பழங்கள் சாப்பிட வைத்து பள்ளிக்கு அனுப்புங்கள். 

ஆசிரியர் அறையில் எனது நண்பர்கள் என்னை அதிகமாகக் கலாய்ப்பார்கள். இதைப் பார்த்த புதிய ஆசிரிய நண்பர், “சார் உங்களுக்குக் கோபமே வராதா?” என்று கேட்டார். அதற்கு “இல்லை, கோபம் வராது. அதற்கு நான் சாப்பிட்ட, சாப்பிட்டுக்கொண்டிருக்கும் வாழைப்பழமும் (புரதமும் மாவும்) நிலக்கடலையுமே (அதிக புரதம்) காரணம்” என்றேன். இப்போது எனக்கு 70 வயது முடியப்போகிறது. கொஞ்சம் கோபம் எட்டிப்பார்க்கிறது. நாளை முதல் வழக்கமாக சாப்பிடும் இரண்டு பழங்களை மூன்றாக ஆக்கினால் சரியாகிவிடும்.

-கௌதமன், ஓய்வுபெற்ற ஆசிரியர், கல்வியாளர்.

 

தொடர்புடைய கட்டுரை: காலை உணவுக்கு தேவை கண்ணியமான கற்பனை

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

2

3





பொது விநியோக திட்டம்பத்திரிகையுலக முதல் சூப்பர் ஸ்டார்ஜாம்நகர் விமான நிலையம்ஒன்றியம்காதில் இரைச்சல்அருஞ்சொல் ப.சிதம்பரம் கட்டுரைதுணை முதல்வர்500 மெகாவாட்மூ.அப்பணசாமிஅட்லாண்டிக் பெருங்கடல்edible oilசென்னைஹேஷ்டேக்வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறைநீதி நிபுணர்அண்ணா பேட்டிசாரு நிவேதிதாபிராந்தியச் சமநிலை அறிவிப்புக்கு வேண்டும் முன்னுரிஉக்கிரமான அரசியல் போர்க்களத்தில் மஹ்வா மொய்த்ராஇந்தியச் சமூகம்குழந்தைகள்ஆண்-பெண் உறவுஇந்தியப் பிரதமர்கள்கற்றல்புதியன விரும்பஇரட்டை இலைபிரிட்டிஷ் இந்தியா ஜாதியும்துயரப்படும் பிரிவினர்காசி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!