கட்டுரை, சினிமா, சமஸ் கட்டுரை 5 நிமிட வாசிப்பு

ஜெய்பீம்: எதிர்மறை அரசியல் போதும் அன்புமணி

சமஸ்
17 Nov 2021, 7:42 am
8

தமிழ்நாடு மேலே ஒரு சாண் ஏறினால், அதன் காலை முழம் அளவுக்குக் கீழே இழுப்பார்கள் நம் ஆட்கள்.

இந்தியாவில் முன்னுதாரணம் இல்லாத, ஓர் யதேச்சதிகார ஆட்சி நடக்கிறது. மாநிலங்கள் என்னும் மொத்த அமைப்பின் மீதும், இன்றைய ஒன்றிய அரசு மோதுகிறது. தன் கை கால்களை முறித்து, தானே புசிக்க முற்படும் ஒரு விநோத விலங்கைப் போல அது காட்சியளிக்கிறது. எல்லா மாநிலக் கட்சிகளுக்குமே இது கலக்கக் காலம்.

அடுத்த மக்களவைத் தேர்தலில், பாஜக வென்று ஆட்சியமைத்தால் என்னவாகும்? இப்படியொரு கேள்வி எழும்போதே, மாநிலங்கள் எனும் உயிரின் சுயாதீனம் என்னவாகும் என்ற கேள்வியும் கூடவே எழும். மாநிலங்களே அதிர்வுக்குளாகும்போது, மாநிலக் கட்சிகளின் எதிர்காலம் என்னவாகும்? ஏனென்றால், ஆட்சியாளர்கள் புரளும்போதெல்லாம் அமைப்பு சரிந்துவிடாமல் தூக்கிப்பிடித்த அரசமைப்பு அதிகாரம் மிக்க அமைப்புகளும் இன்று கடும் தாக்குதல்களை எதிர்கொள்கின்றன. ஆக, எந்த மாநிலக் கட்சிக்கும் இன்றைக்குப் பிரதான அரசியலுக்குப் பிரச்சினையைத் தேட வேண்டிய தேவை இல்லை. 

பருவநிலை மாறுதல் தொடர்பான மாநாட்டின் தோல்வி, உலகெங்கும் விவாதிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சென்னையும், குமரியும், வேதராண்யமும் ஒரே நேரத்தில் வெள்ளத்தில் மிதக்கும் சூழலை எதிர்கொள்கின்றன. பள்ளிக்கூடத்தில் பாலியல் தாக்குதலின் விளைவாக மேலும் ஒரு குழந்தை இறந்துபோகிறது. ஒரு குழந்தைக்கும், ஆசிரியருக்கும் இடையிலான செல்பேசி உரையாடல், இன்றைய காலகட்டத்தின் நிலைக்குலைவை அதிரவைக்கும் வகையில் வெளிக்கொணர்கிறது. எதுவுமே தனித்த சம்பவம் இல்லை.

எப்படிப் பார்த்தாலும், தமிழ்நாட்டில் எதிர்வரிசையில் இருக்கும் ஒரு கட்சிக்குக்  கையிலெடுக்கப் பிரச்சினைப் பஞ்சம் ஏதும்  இருப்பதாகத் தெரியவில்லை. எல்லாவற்றையும் விட்டுவிட்டு திரைப்படத்தில் வெளியான, அதுவும் விமர்சனங்களின் தொடர்ச்சியாக நீக்கப்பட்டுவிட்ட ஒரு காட்சியை முன்வைத்து அரசியல் நடத்த முடிவெடுக்கப்படுவது மட்டமான வியூகம்.

ஏன் ஜெய்பீம் முக்கியமானதாகிறது?

பல வகைகளில் 'ஜெய்பீம்' படம் முக்கியமானதாகிறது. திரைப்பட உருவாக்கம் சார்ந்து, அதன் நிறைகுறைகளை விமர்சிக்க தனியாக ஒரு கட்டுரை எழுதலாம். தமிழ் சினிமா வரலாற்றின் போக்கில் ஒரு பெரும் திருப்பம் நிகழ்வதை அது நிச்சயப்படுத்தியிருக்கிறது. ஒரு திரைப்படம், எப்படி மக்கள் அரசியலைப் பேசுவதற்கான கருவியாக அல்லது ஆயுதமாக கையாளப்பட வேண்டும் என்பதில் அது துல்லியமான இடத்தை எட்டியிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுடைய குரலாக இந்தப் படத்தைப் பார்த்ததோடு அல்லாமல், பாதிப்புக்குள்ளாக்கும் அமைப்பும், பொதுச் சமூகமும் குற்றவுணர்வை உணர்கிறது. 

இந்தியச் சமூகத்தின் ஒட்டுமொத்த அமைப்பிலும் பழங்குடிகள் எவ்வளவு விளிம்பில் அழுத்தப்பட்டிருக்கின்றனர் என்பதையும் நாம் சமத்துவமான ஜனநாயக அமைப்பு என்று நம்பும் நம்முடைய ஆட்சியமைப்பு, எவ்வளவு கொடூரமான உள் முகத்தை வைத்திருக்கிறது என்பதையும் ஒருசேர அம்பலப்படுத்துகிறது ஜெய்பீம். அது சார்ந்த தொடர் உரையாடலை உருவாக்கியிருக்கிறது.

எத்தனை பேர் இதைக் கவனித்தார்கள் என்று தெரியவில்லை. படத்தில் பேசப்பட்ட விஷயங்களை, மனிதர்களை அடிப்படையாகக் கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட காணொளிப் பேட்டிகள் வெளியாகியிருக்கின்றன. கோடிக்கணக்கான பார்வையாளர்களை அவை சென்றடைந்திருக்கின்றன. முன்னுதாரணமற்ற போக்கு இது.

தனிமனித யதார்த்தமும் சமூக யதார்த்தமும்

உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் கதையோ, உருவாக்கப்படும் திரைப்படமோ அது எதுவாயினும் கூடுமானவரை, நடந்த நிகழ்வுக்கு அருகில் நின்று பேசுவது அவசியம். இதற்கு அர்த்தம், ஒரு படைப்பில் நூற்றுக்கு நூறு  எல்லாமே அப்படியே நடந்த நிகழ்வை ஒத்திருக்க வேண்டும் என்பது இல்லை. சித்திரிப்புகள்  புனைவு அளவிலும்கூட நடந்த நிகழ்வோடு, முரண்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

எந்த ஒரு மனித நிகழ்வும் இரு யதார்த்தங்களை ஒட்டியிருக்கின்றன. ஒன்று, தனிமனித யதார்த்தம். மற்றொன்று சமூக யதார்த்தம். 'ஜெய்பீம்' திரைப்படம் சமூக யதார்த்தத்தைப் பிரதானமாகக் கொள்கிறது. தனிமனித யதார்த்தத்தை அது பின்னுக்குத் தள்ளுகிறது.

போலீஸால் அடித்துக் கொல்லப்பட்ட ராஜாக்கண்ணு, நிஜத்தில் குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர். படத்தில் அவர் இருளராகக் காட்டப்படுகிறார். சமூக வாழ்க்கைப்பாட்டில் இருவருமே பழங்குடிகள் என்பதே உண்மை. பொதுச் சமூகத்தின் கண்களுக்கு, பழங்குடியின் பிரதிநிதியாக ஒரு குறவர் தென்படுவதில்லை. இருளர்களின் வனம் சூழ் பின்னணியில், ராஜாக்கண்ணுவைப் புகுத்தும்போது பொதுச் சமூகத்தின் கண்ணுக்கு அவர் புலப்படுகிறார். 

இங்கே பொதுச் சமூகம் என்பது விளிம்புக்கு உள்ளே நிற்கும் எல்லா சாதி, மதத்தினரையும்  உள்ளடக்கியதுதான். படத்தில் பிரதான வில்லனாகக் காட்டப்படும் குருமூர்த்தி அதனாலேயே எந்தச் சமூகப் பின்னணியையும்  நினைவூட்டவில்லை அல்லது இந்த அமைப்பின் பிரதிநிதியாக எல்லா ஆதிக்கச் சக்திகளோடும்  பொருந்துபவர் ஆகிறார்.

நிஜத்தில் வேறு ஒரு சமூகப் பின்னணியைக் கொண்டவரை வன்னியர் சமூகத்தைச் சார்ந்தவராகக் குறிக்கும் வகையில், வன்னியர் சங்கத்தைப் பிரதிபலிக்கும் படத்தைத் தாங்கிய நாட்காட்டி அந்தக் கதாபாத்திரத்தின் வீட்டில் காட்டப்பட்டதானது தேவையற்றது; ஏனென்றால், நிஜத்துக்கும் படத்துக்கும் இடையில் தனிமனித யதார்த்தமும், சமூக யதார்த்தமும் முரண்படும் பின்னணி கொண்டது இது. ராஜாக்கண்ணு வழக்கைப் பொருத்த அளவில் அவருக்கு உள்ளூரில் துணை நின்ற மார்க்ஸிஸ்ட் இயக்கத்தினர் உள்பட பலர் வன்னிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே உண்மை நிலை. மேலும், 'சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் எந்தச் சாதியாகக் காட்டப்பட்டிருந்தால் என்ன?  அமைப்பில் உள்ள ஆட்கள் யாராக இருந்தாலும், விளிம்புநிலையினரை இப்படி அணுகுவதுதானே நம் சமூக நிதர்சனமாக இருக்கிறது!' என்று சமூக யதார்த்தம் கருதிக் கடக்கும் நிலையில் இன்றைய நம் சமூகமும் இல்லாதபோது முற்றிலும்  தவிர்த்திருக்கப்பட வேண்டியது.

இதுகுறித்த விமர்சனம் வந்தபோது, திரைப்படக் குழுவினர் நேர்மையாக அதை எதிர்கொண்டனர். அந்தக் காட்சியைக் கையோடு அவர்கள் நீக்கினர். தமக்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்பதைத் துலக்கமாக வெளிப்படுத்தினர்.

விஷயம் அதோடு முடிந்திருக்க வேண்டும். இதன் பின்னர் பாமக இளந்தலைவர் அன்புமணி,  படத்தின் நாயகனும் தயாரிப்பாளருமான சூர்யாவுக்கு அடுக்கடுக்கான கேள்விகளுடன் கடிதம் எழுதினார். அதற்கு ஓர் அரசியல் பிரதிநிதிக்கு அளிக்க வேண்டிய மரியாதையோடு, கண்ணியமாகவே பதில் எழுதியிருந்தார் சூர்யா.

மோசமான செயல்பாடு

இதற்குப் பின்னர் வன்னியர் சங்கம் சார்பில்  நடிகர் சூர்யாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. அதில், 'ஜெய் பீம்' திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தைத் தவறாக சித்திரித்ததற்காக 24 மணி நேரத்தில் மன்னிப்புக் கோர வேண்டும்; 7 நாட்களில் ரூ. 5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்; தவறினால் கிரிமினல் அவதூறு வழக்கு மற்றும் இழப்பீடு கோரி வழக்குகள் தொடரப்படும் என்று எச்சரித்திருக்கிறார்கள்.

மோசமான செயல்பாடு இது. எந்த ஒரு படைப்பையும் அது தவறாகவே கையாளப்பட்டிருந்தாலும், அதை இடைமறிக்கும் தணிக்கையாளராக அரசியல் அல்லது சமூகம் சார்ந்த இயக்கங்கள் உருவெடுக்க முடியாது. அதிலும் சமூக அமைதி என்ற பெயரில் இந்தப் படத்தின் தவறைச் சுட்டிக்காட்டுவதற்கான  தார்மிகத் தகுதிகூட இப்படிப் பேசுவோருக்குக் கிடையாது. 

அன்புமணியின் திசை

பாமகவுக்கு வேறொரு தலைமுறை மாற்றத்தைக் கொடுத்து மேம்பட்ட இடத்திற்கு நகர்த்தியிருக்க வேண்டியவர் அன்புமணி. அப்படி நகர்த்தியிருந்தால் வன்னியர் சங்கமும் கூடவே வேறோர் இடம் நோக்கி நகர்ந்திருக்கும்.

அதிகாரத்தின் மீதான அன்புமணியின் வேட்கையும், அதிகாரத்தை அடைவதற்கான தவறான வியூகங்களும் சேர்ந்து அவரோடு ஒரு கட்சியையும் ஏற்கெனவே கீழே சரித்துவிட்டன. இப்போது இந்தி மாநிலங்களில், நடிகர்களை மிரட்டல் விடுக்கும் அடியாள் அரசியலர்களுக்கு எத்தகுப் பிம்பமும் மரியாதையும் இங்கே உண்டோ, அந்த இடத்துக்கே அகில இந்தியாவுக்கும் இன்று தமிழகத்தின் பிரதிநிதியாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் வேலையில் இறங்கியிருக்கிறார் அன்புமணி. தமிழுக்கு இணையாக இந்தி உள்ளிட்ட நான்கு மொழிகளிலும் பெரிய வரவேற்பைப் படம் பெற்றிருப்பதைக்கூட அவர் கண்ணுற்றதாகத் தெரியவில்லை.

சினிமா பிரச்சினை அல்ல இது!

வெறும் திரைப்படம் அல்லது அரசியல் அல்லது சாதி அமைப்பு அல்லது தனிநபர்கள் சார்ந்து  அணுகக்கூடிய விவகாரம் இல்லை இது.

ஒரு சமூகத்தில் எப்படி எத்தகு மனிதர்களையும் கீழே சாய்த்துவிட நாம் சின்ன சறுக்கலுக்காகவும் காத்திருக்கிறோம், சுயநலத்தோடு பாய்ந்து தாக்க  எதிர்பார்த்திருக்கிறோம் எனும் வளர்ந்துவரும் பொது மனோபாவத்துக்கான சாட்சியம்.

யார் இந்த சூர்யா, ஞானவேல்? அவர்களுடைய பின்னணி என்ன? பொதுச் சமூகத்துக்கான இதுவரையிலான அவர்களுடைய பங்களிப்பு என்ன? எதுவும் பொருட்டில்லை.

இன்றைக்குத் திரையுலகில் சூர்யா - ஞானவேல் போன்று நம் கண்ணுக்குத் தெரியும் சமூகச் செயல்பாட்டாளர்கள் குறைவு. அகரம் போன்ற ஒரு முன்னுதாரணப் பொதுக் கல்வி அமைப்பு அவர்களுடைய முன்னெடுப்பு. அகரம் பின்பற்றும் உள்ளணைக்கும் கொள்கை இந்தியக் கல்வித் துறை கவனிக்க வேண்டிய பாடம்.

சமூக அடுக்கில் அடியில் உள்ள பழங்குடிகளையோ, தலித்துகளையோ மட்டும் அல்லாது, வன்னியர் சமூகம் போன்று பொருளாதாரத் தட்டில் கீழே உள்ள சமூகங்களைச் சேர்ந்தோரையும் ஏனைய சமூகத்தவரிடமிருந்து பிரித்துப் பார்த்து, அச்சமூகக் குழந்தைகளுக்கும் கல்வி உதவியில் முன்னுரிமை தரும் செயல்முறையைப் பின்பற்றும் அமைப்பு அகரம். 

சமீபத்திய ஆண்டுகளில் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, பொதுக்கல்விக்கான அரசியலைத் துணிச்சலாக, தடுமாற்றம் இல்லாமல் பேசிவருகிறார் சூர்யா. 'நீட் தேர்வு'க்கு எதிரான அவருடைய தொடர் எதிர்ப்பானது, பின்தள்ளப்பட்டோரின் சமூகநீதிக்கான குரல். ஒரு பத்திரிகையாளராக தன்னுடைய 20 ஆண்டு வாழ்க்கையில் சமூகநலம்சார்  இதழியலுக்காக அறியப்பட்டவர்  ஞானவேல். ஒருவேளை தவறே இழைத்திருந்தாலும்கூட, இயல்பாகவே அதனால் ஒரு சாதியோ, சமூகமோ உணர்ச்சிவசப்பட்டுக் கிளர்ந்தெழுந்தாலும், இத்தகையோரை இக்கட்டான தருணத்தில் தற்காத்து, தடுப்பரணாக முன்னே நிற்க வேண்டிய கடமை நல்ல அரசியல் தலைவர்களுக்கு உண்டு. அன்புமணி நேரெதிர் திசையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

தமிழக மக்கள், 'ஜெய்பீம்' படக் குழுவின் பின் அணிதிரள்வது இயல்பானது. தாங்கள் இன்னமும் முழு சமூகநீதியின் பாதைக்குள் வரவில்லை என்றபோதிலும், அதற்கு எதிர்த்திசையில் இல்லை என்பதை இந்தத் தார்மீக ஆதரவு மூலம் தமிழ்ச் சமூகம் உரக்கச் சொல்கிறது. தமிழகமும், தமிழ் சினிமாவும் சறுக்காது முன்னகரட்டும்!

சமஸ்

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘அருஞ்சொல்’ இதழின் ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


5

1

1

பின்னூட்டம் (8)

Login / Create an account to add a comment / reply.

Ma Amar Murugesan   1 year ago

கடும் உழைப்பு சமூகத்தை சார்ந்த மக்களை ஒரு ஐம்பது ஆண்டு காலம் பின்னோக்கி இழுத்து சென்ற பெருமை புகழ் அனைத்துக்கும் பெரும் சொந்தக்காரர்கள் முதலாமவர் திரு டாக்டர் இரா ராமதாஸ் இரண்டாமவர் திரு அன்புமணி ராமதாஸ் M P அவர்களே ஆவர்

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   1 year ago

படிப்பு, விளையாட்டு, தொழில், அரசியல் போன்ற எல்லாவற்றிலும் சிறப்பான முயற்சிகள் மட்டுமே முக்கியம். ஆனால் இலட்சியம் என்ற பெயரில், மிகப்பெரிய இலக்கை அடைந்து ஆகவேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் தோல்வி என்பது கிட்டத்தட்ட உறுதி.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Rathan Chandrasekar   1 year ago

VEGU SIRAPPU.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Karupalanisamy   1 year ago

ஆசிரியர் சமஸ் அவர்களுக்கு வணக்கங்கள். இந்த நேரத்தில் இந்த கட்டுரை வழி ஒரு நல்ல செய்திவழி அறிவுரையும் கூட, திரு அன்புமணி அவர்கள் நிச்சயம் உங்களின் வரிகளுக்கு இதயம்கொடுக்க வேண்டும்.

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

Murugaiah   1 year ago

தமிழ்நாட்டில் காய்கறி விலை உயர்ந்துவிட்டது... 2006-2011 கலைஞர் ஆட்சியில் இதுபோல் காய்கறி விலை உயர்ந்த போது மலிவு விலை காய்கறி கடைகள் திறக்கப்பட்டன... ரேசனில் மலிவு விலையில் காய்கறி விற்பனை செய்யப்பட்டது... இதுபோன்ற அன்றாட நிகழ்வுகளை பதிவு செய்யுங்கள்....

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

Murugaiah   1 year ago

பரியேறும் பெருமாள், அசுரன் போன்ற படங்களில் விளிம்பு நிலை மக்களின் நிலை குறித்து எடுத்துரைத்தார்கள்... ஆனால் மாற்று சமுதாயம் குறித்து குறியீடாக கூட காட்டவில்லை.... அதுபோல் இப்படம் எடுத்திருந்தால் சர்ச்சையில் சிக்கி இருக்க வாய்ப்பில்லை.... சார் இதற்கும் பா.ஜனதாவுக்கும் என்ன சம்மந்தம்...

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Rajarajacholan   1 year ago

கேட்டினும் உண்டோர் உறுதி... நாட்காட்டி நாட்களை மட்டும் காட்டாது மனித குணங்களைப் பொது வெளியில் கிழித்துப் போட்டுக்கொண்டிருக்கிறது... முரண்களும் படிப்பினை தானே... கற்போம். மகா. இராஜராஜசோழன்.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

Seyed Bukhari   1 year ago

நல்லதோர் கட்டுரை.ஆயினும் அநீதம் செய்யும் காவல்துறையினரின் வீட்டில் தொங்கும் நாட்காட்டி குறித்த விமர்சனத்தோடு உள்ளம் ஒட்ட மறுக்கிறது.தேவர் மகன் ஊர் எல்லை மதுரை வீரன் கோயில் அறிவாள் தான் தேவரை வெட்டும் என்ற காட்சியமைப்பிலிருந்த வன்மத்தில் பாதியளவும் ஜெய்பீம் நாட்காட்டியில் இல்லை.உண்மையில் இது சமுக அக்கறையோ நாட்காட்டி அரசியலோ அல்ல.வீழ்ந்த இடத்தை நிரப்பும் தந்திரம்.பாவம் வைத்தியர் படிப்பிற்கும் பழக்கத்திற்கும் தொடர்பின்றி சுருங்கி விட்டார்.

Reply 10 1

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

சுயசரிதைராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனைஎஸ். அப்துல் மஜீத்திமுக அரசுவரவேற்புபள்ளிக்கல்வித் துறைஇந்திய எல்லைஇந்து மதம்தமிழகப் பள்ளிக்கல்வித் துறைதகவல் தொடர்புத் துறைஇந்துவியம்பரக் அகர்வால் நியமனம்தமிழ் வரலாறுடெல்லி பல்கலைக்கழகம்நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்சமூக ஒற்றுமைசபாநாயகர் அப்பாவுவன்முறைலட்சியவாதம்புதியன விரும்புகம்யூனிஸ்ட் கட்சிபிஜேபிஉணவு தானியம்கேம்பிரிட்ஜ் சமரசம்ஞானவேல் சமஸ் பேட்டிமரிக்கோஆவின் ப்ரீமியம்அலைக்கற்றை விவகாரம்விற்கன்ஸ்ரைன்குடல் இறக்கம்: என்ன செய்வது?

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!