கட்டுரை, அரசியல், பொருளாதாரம் 4 நிமிட வாசிப்பு

7.5% ஜிடிபி வளர்ச்சி முடியுமா, முடியாதா?

ப.சிதம்பரம்
24 Jul 2023, 5:00 am
0

ந்திய ரிசர்வ் வங்கியின் முக்கியமான கடமை விலைவாசி உயராமல் கட்டுக்குள் வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதே; ஆனால் உலகின் பிற மத்திய வங்கிகளைப் போல, ‘வளங்குன்றா வளர்ச்சி’ என்ற அரசின் இலக்கு வெற்றிபெற அது களத்தில் நிற்கிறது. ஆட்சியில் இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தன்னுடைய அரசியல் நோக்கங்களிலேயே அதிகம் கவனம் செலுத்தி பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தாத நிலையில், ரிசர்வ் வங்கி எடுக்கும் நடவடிக்கைகள் வளர்ச்சிக்கு உதவுகின்றன.

இப்போது கிடைத்துள்ள அனைத்துத் தரவுகளுமே உலகப் பொருளாதாரமும் இந்தியப் பொருளாதாரமும் மிகவும் மந்த நிலையிலேயே வளர்வதைக் காட்டுகின்றன. 

இந்திய ரிசர்வ் வங்கியின் 2023 ஜூலை மாதத்துக்கான அறிக்கையில் உள்ள கட்டுரை இப்போதைய பொருளாதார நிலை குறித்து விரிவாக விளக்குகிறது. உலகப் பொருளாதார நிலை குறித்து எழுதுகையில், “உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி முன்னேற்றம் காண முடியாமல் திணறுகிறது, குறிப்பாக தொழிற்சாலை உற்பத்தியும் முதலீடும் உயரவில்லை; சர்வதேச வர்த்தகம் அரசுகளின் கொள்கைகளாலும் வலிமைமிக்க தொழில் துறையின் முடிவுகளாலும் குறைந்துவருகிறது. பொருளாதார வளர்ச்சிக்கும் பொருள்களின் உற்பத்திக்கும் மிகவும் அவசியமான ‘பொருள் – சேவை வழங்கு சங்கிலி’ முழு அளவில் செயல்பட முடியாததால், அனைத்திலும் அது எதிரொலிக்கிறது. மீண்டும் ஒருமுறை, உலகின் வளரச்சிக்கான அங்கங்கள் வெவ்வேறு பாதைகளில் பயணிக்கின்றன…” என்று கட்டுரை சுட்டுகிறது.

இந்தியப் பொருளாதாரம்

இந்தியப் பொருளாதாரம் குறித்து அந்தக் கட்டுரை சில முன்னேற்றங்களையும் சாதனைகளையும் குறிப்பிடுகிறது: அடித்தளக் கட்டமைப்பில் மேம்பாடு, எண்மமயமாக்கல், சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திறனைக் கூட்டல், சேவைகள் ஏற்றுமதி, உற்பத்திக்குச் சாதகமான மக்கள்தொகை – மக்களின் வயது அமைப்பு, உற்சாகம் பொங்கும் பங்குச் சந்தை என்று அந்தக் கட்டுரை விவரிக்கிறது. அவற்றில் சில உண்மையும்கூட. பொருளாதார நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக நிலவும் மிதமான வேகத்தையும் கட்டுரை சுட்டுகிறது. 

வேலையில்லாத் திண்டாட்டம் உச்ச அளவில் இருக்கிறது, மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டம் மூலம் வேலை கொடுங்கள் என்று மக்கள் கோரிக்கை விடுப்பது உச்சபட்சத்தில் இருக்கிறது, ஏற்றுமதி சார் தொழில்களின் உற்பத்தி மதிப்பு சுருங்கிவருகிறது, அரசு வருவாய்க் கணக்கில் செய்யும் செலவுகளும் குறைந்துவருகின்றன,  இவற்றின் காரணமாக நிகர வரி வசூலிப்பும் குறைந்துள்ளது, நுகர்வோர் விலைப்பட்டியல் அடிப்படையிலான பணவீக்கம் அதிகரித்துள்ளது, உள்நாட்டுக் கடன் பத்திரங்களுக்கும் பெருநிறுவனங்களின் கடன் பத்திரங்களுக்கும் கிடைக்கும் வருமானம் முதலீட்டாளர்களுக்குக் குறைவாக இருக்கிறது, விலைவாசி உயர்வுக்கு எதிராக முடிவடையாத ஒரு போரை அரசு நிகழ்த்திக்கொண்டிருக்கிறது.

பொருளாதார நிர்வாகத்தில் எப்போதுமே சாதகங்களும் ஏற்படும், பாதகங்களும் உருவாகும். இப்படி இருந்தபோதிலும் இந்தியாவின் ஜிடிபி (நிலையான விலைகளின் அடிப்படையில்) 2004 - 2009 ஐக்கிய முற்போக்கு ஆட்சிக் காலத்தில் ஆண்டுக்கு 8.5%ஆகவும், 2004 - 2014 வரையிலான பத்தாண்டு காலத்தில் சராசரியாக 7.5%ஆகவும் இருந்தது. அதற்கு மாறாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் 2014-2023 வரையிலான ஒன்பதாண்டு ஆட்சியில் ஒட்டுமொத்த ஜிடிபி சராசரி 5.7%ஆகவே இருக்கிறது.

சராசரி வளர்ச்சி வீதம் ஏன் சரிந்தது? தடைகளற்ற பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடிக்கத் தொடங்கிய ஆரம்பக் காலத்தில், சந்தையை மையமாக வைத்தே அனைத்தும் நிகழ்ந்தன. பொருளாதார உற்பத்திக்கு தொடர்ந்து ஊக்குவிப்புகள், தூண்டுதல்கள் என்று அரசு அளித்ததால் வளர்ச்சி வீதமும் வளர்ந்தது.

உலக அளவிலான நிதி நெருக்கடியாலும் கோவிட்-19 பெருந்தொற்றாலும் நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பைக் கருத்தில் கொண்டு, மரபல்லாத முறையில் பணக் கொள்கையையும் இதர பொருளாதாரக் கொள்கைகளையும் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் பின்பற்றியதால் இந்தியா போன்ற வளரும் நாடுகளை நோக்கி அன்னிய முதலீடும் அதிகரித்தன. ஆனால், அப்படியான ஊக்குவிப்புகளும் தூண்டுதல்களும் இல்லாத நிலையில் நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பில் உள்ள குறைகள் மீது கவனம் செலுத்தி அவற்றை நீக்குவதன் மூலமே உயர் பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும்.

அடிப்படையான பலவீனங்கள்

என்னுடைய கண்ணோட்டப்படி, பொருளாதாரத்தில் நிலவும் அடிப்படையான சில பலவீனங்களை இந்த அரசு அலட்சியப்படுத்திக்கொண்டே வருகிறது. அவற்றில் நான்கு இதோ:

வேலை செய்யும் தொழிலாளர்கள் குறைவு, உயர் அளவு வேலையில்லாத் திண்டாட்டம்: இந்திய மக்கள்தொகையில் 61% பேர் வேலை செய்யும் வயது, உடல் தகுதிகளுடன் (15 வயதுக்கு மேற்பட்டவர்கள்) இருக்கின்றனர். அந்த எண்ணிக்கை 84 கோடி. 2036க்குப் பிறகு இந்த எண்ணிக்கை குறையக்கூடும். நாம் கொண்டாடிவந்த, வேலை செய்யும் வயதில் அதிகம் பேர் உள்ள நாடு என்பது, குறுகிய கால வரம்தான். அதைவிட முக்கியம் வேலை செய்யும் வயதுள்ளவர்களில், வேலை செய்வோர் எண்ணிக்கைதான்! 

அதாவது வேலை செய்ய உடல், வயது தகுதி இருந்தும், வேலை செய்யும் ஆர்வம் தொழிலாளர்களுக்கு இருந்தும் அவர்களுக்கு வேலை கிடைக்காமல் இருப்பதுதான் அவர்களுடைய பங்கேற்புக் குறையக் காரணம். சீனத்தில் வேலை செய்ய விரும்பும் தொழிலாளர்களுக்கு வேலை தருவது 67% என்றால் இந்தியாவில் அது 2023 ஜூனில் 40%க்கும் கீழே போய்விட்டது. பெண்கள் வேலைக்குச் செல்வது இந்தியாவில் 32.8%ஆகக் குறைந்துவிட்டது.

வேலை செய்யும் வயதில் உள்ள ஆடவர்-மகளிர் இருபாலரிலும் ஏன் 60% வேலை செய்யவில்லை, மகளிரில் ஏன் 67.2% வேலைக்குப் போகவில்லை, அவர்கள் வேலை வேண்டாம் என்று போகவில்லையா? அரசின் தரவுகளின்படி வேலையில்லாத் திண்டாட்டம் 8.5%. வேலைக்குப் போகாத ஆண்-பெண் சதவீதத்தையும் வேலையில்லாத் திண்டாட்டம் 8.5% என்பதையும் இணைத்துப் பாருங்கள். 15 வயது முதல் 24 வயது வரையிலானவர்கள் வேலைக்குச் செல்லத் தயாராக இருந்தாலும் அவர்களிடையேயான வேலையில்லாத் திண்டாட்டம் 24%ஆக இருக்கிறது.

எந்த அளவுக்கு மனித வளம் பயன்படுத்தப்படாமல் வீணாகிறது என்பதை இந்தத் தரவுகள் உணர்த்துகின்றன. வேலை செய்யத் தயாராக இருப்போரில் 60% பேருக்கு வேலை தர முடியவில்லை என்றால் சுகாதார நடவடிக்கைகள் மூலம் மக்களுடைய சராசரி ஆயுள் காலத்தை நீட்டிப்பதிலும் கல்வியை மேலும் விரிவுபடுத்துவதிலும் அர்த்தமே இல்லை. இந்தியப் பொருளாதாரம் நான்கு சக்கரங்களுக்குப் பதிலாக இப்போது இரண்டே இரண்டு சக்கரங்களில் மட்டும் ஓடிக்கொண்டிருக்கிறது.

கல்வியின் தரம்: ஆண்டுதோறும் இந்தியாவின் கல்வித்தரம் எப்படி இருக்கிறது என்பதை உணர்த்தும் ‘அசர்’ (Annual Status of Education Report) அறிக்கை வெளியாகிறது. இது தேசிய அளவில் மாணவர்களின் கல்வித் தரத்தை, குறிப்பாக கிராமங்களில் நிலவும் தரத்தை வெளிப்படுத்துகிறது. இந்த ஆய்வுக்குழு நாட்டின் அனைத்து கிராமப்பகுதிகளிலும் ஆய்வு நடத்தியிருக்கிறது. புத்தகத்தைப் பார்த்து வாசிப்பது, கணக்குப் போடுவது, ஆங்கிலம் எழுத, படிக்கத் தேர்ச்சி பெறுவது தொடர்பாக அசர் ஆய்வறிக்கை தெரிவிப்பதாவது:

பயிலும் வகுப்பு

2ஆம் வகுப்பு புத்தகம் வாசிப்பது

ஆங்கிலம் வாசிப்பது கணிதத் திறமை
3 25.9% 20.5%   கிட்டவில்லை
5 24.5% 42.8% 25.6%
8 46.7% 69.6% 44.7%

ஆனால், இந்தத் திறமையிலும் மாநிலத்துக்கு மாநிலம் பெரிய வேறுபாடு நிலவுகிறது. இந்தியாவில் மாணவர்கள் பள்ளிக்கூடங்களில் பயிலும் காலம் சராசரியாக 7 – 8 ஆண்டுகளாக இருக்கிறது. இந்த அளவுக்குத்தான் அவர்களுக்கு வாசிப்புப் பழக்கமும் கணிதத் திறனும் கிடைக்கிறது என்றால் உயர் அளவிலான கற்றல் திறனும், தொழில்நுட்ப அறிவும் தேவைப்படும் வேலைக்கு அவர்களை எப்படித் தயார் செய்யப்போகிறோம்?

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

ஜிடிபி சொல்வது என்ன, மறைப்பது என்ன?

ப.சிதம்பரம் 05 Sep 2022

வேளாண்மை உற்பத்தித் திறனிலும் குறைவு: பொருளாதார ஆய்வறிக்கை 2022-23இன்படி இந்தியாவில் ஒரு ஹெக்டேர் சாகுபடி மூலம் கிடைக்கும் நெல் 2,718 கிலோ முதல் 3521 கிலோ வரை, கோதுமை 3,507 கிலோ மட்டுமே; சீனத்தில் (2022) இதுவே சீனத்தில் 6,500 கிலோ நெல், 5,800 கிலோ கோதுமையாக இருக்கிறது. நாம்தான் நெல், கோதுமை ஏற்றுமதி செய்யும் நாடாகிவிட்டோமே என்ற மெத்தனம் காரணமாக மேற்கொண்டு இதை அதிகப்படுத்தும் முனைப்பான திட்டங்கள் ஏதும் இல்லை. 

பருவநிலை மாறுதல்களால் மழையளவு குறைகிறது அல்லது காலமல்லா காலத்தில் கொட்டித் தீர்க்கிறது, வேலை தேடி கோடிக்கணக்கான மக்கள் கிராமங்களைவிட்டு நகரங்களுக்குக் குடி பெயர்கிறார்கள், நகர்மயமாதல் வேகம் பெற்றுள்ளது, அனைத்துத் தேவைகளுக்கும் தண்ணீர் கிடைப்பது குறைந்துகொண்டேவருகிறது, வேளாண்மைக்கான இடுபொருள் செலவும் அதிகரித்துவருகிறது, அப்படியென்றால் இனியும் வேளாண்மை ஈர்ப்பான தொழிலாக இருக்க வேண்டும் என்றால் அதில் லாபம் கிடைக்க வேண்டும். உற்பத்தி மட்டுமல்ல உற்பத்தித் திறனும் அதிகரிக்க வேண்டும்.

பணவீக்கம், வட்டி வீதம்: உயர் பணவீக்க விகிதம் (விலைவாசி உயர்வு), அதிக வட்டி வீதம், அபரிமிதமான காப்பு வரி வீதம் ஆகியவற்றுக்கு இடையே இந்தியத் தொழில் துறை தங்களைத் தக்கவைத்துக்கொள்ள அதிகம் போராட வேண்டிய நிலையில் இருக்கிறது. இவை அனைத்தையுமே அரசு இடைவிடாமல் கண்காணித்து குறைத்தாக வேண்டும். இந்த அடித்தளக் கட்டமைப்பில் உள்ள குறைபாடுகள் குறித்தெல்லாம் மாண்புமிகு பிரதமரோ அமைச்சர் பெருமக்களோ எப்போதாவது பேசி நீங்கள் கேட்டிருக்கிறீர்களா, எப்போதும் இல்லை!

இந்தியா ஆண்டுக்கு 7.5% ஜிடிபி வளர்ச்சியை எட்ட வேண்டும் என்று விரும்புகிறோமா – அப்படி எட்டுவதன் மூலம் உலக நாடுகளிடையே நடுத்தர வருவாயுள்ள நாடாக முடியும், அல்லது 5-6% வளர்ச்சியே போதும் என்று திருப்திப்பட்டுக்கொண்டு, ‘உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரம்’ என்று தற்பெருமை பேசப் போகிறோமா?  அப்படிச் செய்வது, ‘பார்வையற்ற மக்களுக்கு - ஒற்றைக் கண்ணர் சக்ரவர்த்தி’ என்பதைப் போலாகிவிடும்.

 

தொடர்புடைய கட்டுரைகள்

பொருளாதாரப் பேரழிவை எதிர்நோக்குகிறதா இந்தியா?
பணக்கார நாடா இந்தியா?
ஜிடிபி சொல்வது என்ன, மறைப்பது என்ன?
பொருளாதாரம் எப்போது மீளும்?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

1






தணிக்கைச் சட்டம்மழைநீர் வெளியேற்றம்த செவன் மூன்ஸ் ஆஃப் மாலி அல்மெய்டாமது கொள்கைஅம்பேத்கர் மேளாமாலன்கற்பவர்களின் சுதந்திரம்அமுல் பொது மேலாளர் எஸ்.ஆர்.சோதி நேர்காணல்இஸம்மக்களவைத் தேர்தல் முடிவு: 10 அம்சங்கள்இலக்கிய வட்டம்தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்இறையாண்மைஹிந்தவிஅரசியல் தலைவர்கள்பாகிஸ்தான் கிரிக்கெட் அணிஓப்பிஅம்பிகாபூர்கல்விப்புலம்அருஞ்சொல் டி.எம்.கிருஷ்ணாசண்முகநாதன் சமஸ் பேட்டிஇந்தித் திணிப்புமகிழ்ச்சியடையும் மக்கள்இரண்டாம் உலகப் போர்திணிக்கப்படும் மௌனத்தால் தீராது பிரச்சினைகள்பித்தப்பைஅந்தரங்க மிரட்டல்பாரத் ராஷ்டிர சமிதிகடவுளின் விரல்புதிய நாடாளுமன்றம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!