கட்டுரை, அரசியல், பொருளாதாரம் 7 நிமிட வாசிப்பு

பொருளாதாரம் எப்போது மீளும்?

ப.சிதம்பரம்
06 Jun 2022, 5:00 am
0

தேசிய வருமானம் மற்றும் நான்கு காலாண்டுகளில் மொத்த உற்பத்தி மதிப்பு அளவு (ஜிடிபி) ஆகியவை உத்தேசமாக எவ்வளவு இருக்கும் என்பதை தேசிய புள்ளிவிவர அலுவலகம் (என்.எஸ்.எஸ்.ஓ) இந்த ஆண்டு மே 31 அன்று வெளியிட்டது. அப்போது ஊடகங்களைச் சந்தித்த முதன்மைப் பொருளாதார ஆலோசகரின் குரல் சற்றே தெம்பு குறைந்தும், எச்சரிக்கை கலந்த நம்பிக்கையுடன் கூடிய வகையிலும் இருந்தது. பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் அறிந்து வைத்திருப்பதைப் போல - அவருக்கும் தெரியும் - இந்தியப் பொருளாதாரம் இன்னமும் சிக்கல்களிலிருந்தும் பிரச்சினைகளிலிருந்தும் விடுபட்டுவிடவில்லை என்று. 

மோசம் – படுமோசம்

‘நிலையான விலைகள்’ அடிப்படையில் நாட்டுப் பொருளாதாரத்தின் மொத்த மதிப்பு 2022 மார்ச் 31இல் ரூ.147.36 லட்சம் கோடியாக இருக்கிறது என்பதுதான் மிகவும் மோசமான தகவல். காரணம், 2000 மார்ச் 31இல் அது ரூ.145.16 லட்சம் கோடியாக – கிட்டத்தட்ட அதே அளவில் – இருந்தது. அதாவது நாம் அதே இடத்தில் தொடர்ந்து நிற்பதற்குத்தான், வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறோம்!

ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தி மதிப்பு (ஜிடிபி) இப்படி இருந்தாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நபர்வாரி வருமானம் ரூ.1,08,247 எனும் இடத்திலிருந்து ரூ.1,07,760 எனும் இடத்துக்குச் சரிந்துவிட்டதால் தனிநபர்கள் மேலும் வறியவர்களாகிவிட்டார்கள்.

அடுத்த மோசமான தகவல் என்னவென்றால், ஜிடிபி வளர்ச்சி வீதம் 2021-22 காலாண்டுகளில் தொடர்ந்து சரிந்தபடியே இருக்கிறது. நான்கு காலாண்டுகளுக்கான ஜிடிபி வளர்ச்சி வீதமானது 20.1%, 8.4%, 5.4% மற்றும் 4.1% ஆக இருக்கிறது. பெருந்தொற்று காலத்துக்கும் முன்னால் 2019-20இல் நாலாவது காலாண்டில் ஜிடிபி ரூ.38,21,081 கோடியாக இருந்தது. அந்த அளவை 2021-22இன் நாலாவது காலாண்டில்தான் தாண்டி ரூ.40,78,025 கோடிக்கு வந்திருக்கிறோம்.

8.7% என்ற வேகத்தில் உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரம் நம்முடையதுதான் என்று அரசு பீற்றிக்கொள்வதில் பொருளே இல்லை. பணவீக்க விகிதம் (விலைவாசி உயர்வு), வேலையில்லாத் திண்டாட்டம், வறுமைக்கோட்டுக்கும் கீழே வாழும் மக்களின் தொகை அதிகரிப்பு, மக்களில் கணிசமானவர்கள் உணவை வாங்க முடியாமல் பட்டினி கிடக்கும் நிலைமை, சுகாதார அடையாளங்களில் வீழ்ச்சி, கற்றலில் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள குறைபாடுகள் ஆகியவற்றையெல்லாம் பார்க்கும்போது வேகமான பொருளாதார வளர்ச்சி என்கிற பெருமிதத்துக்கு நியாயமே இல்லை.

ஜிடிபி வளர்ச்சி 8.7% என்பது பார்ப்பதற்கு மெச்சத்தக்க விதத்தில் இருந்தாலும், அனைத்து அம்சங்களையும் கருத்தில்கொண்டு அவற்றின் முழுமையான பின்னணியில் பார்க்க வேண்டும். முந்தைய ஆண்டு பொருளாதார வளர்ச்சியில் இருந்தது எதிர்மறை வீழ்ச்சி (-)6.6% என்பதை இந்த அளவோடு ஒப்பிட வேண்டும். இரண்டாவது, சீனம் 2021இல் 8.1% என்ற வேகத்தில் வளர்ந்திருக்கிறது. 26,000 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புக்கு அது ஜிடிபியை 12 மாதங்களில் (நடப்பு விலைகள் அடிப்படையில்) சேர்த்திருக்கிறது. இந்தியாவோ 8.7% வளர்ச்சியில் 50,000 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புக்குத்தான் 12 மாதங்களில் ஜிடிபியை வளர்த்திருக்கிறது.

நமக்கும் அப்பால் உள்ள உலகம்

உணர்ச்சிகளுக்கு இடம் தராமல் நாம் நிதானத்துக்கு வந்தால், 2022-23 நிதியாண்டிலும் அதற்கும் அப்பாலும் நம்முடைய வளர்ச்சி எப்படியிருக்கும் என்று பார்ப்பதற்கு உதவியாக இருக்கும். நம்மை நாமே பெரிதாக நினைத்துக் கொண்டிருப்பதால் நமக்கும் அப்பால் உலகம் ஒன்று இருக்கிறது என்பதையே மறந்துவிடுகிறோம். நமக்கு உலகத்தின் சந்தை, பொருள்கள், மூலதனம், தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள் அவசியம் தேவை. உலக அளவில் பொருளாதாரம் பெரிய நெருக்கடியில் ஆழ்ந்திருக்கிறது.

அமெரிக்காவில் பணவீக்க விகிதமும் (விலைவாசி உயர்வு), வட்டி வீதமும் அதிகரித்துவருகின்றன, பொருள்களுக்கும், சேவைகளுக்குமான தேவை குறைந்துவருகிறது. கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு புதிய வகை நோய்க்கிருமிகள் பரவுவதால் சீனத்தின் பெரும்பாலான நகரங்களில் முழுமையாகவும் பகுதியளவிலும் பொது முடக்கம் கடைப்பிடிக்கப்படுவதால் சீனத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியும் சுருங்கவிருக்கிறது. கேஸ் விலை கடுமையாக உயர்ந்துவிட்டதால் ஐரோப்பியர்களின் வாங்கும் சக்தி வெகுவாகக் குறைந்துவிட்டது.

உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி வீதம் 2022இல் 4.4%-லிருந்து 3.6%ஆகக் குறையும் என்று பன்னாட்டுச் செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) திருத்தியிருப்பதை இந்திய ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை வகுப்புக் குழு கருத்தில் கொண்டிருக்கிறது. உலக வர்த்தக அமைப்பு (டபிள்யு.டி.ஓ), உலக வர்த்தக வளர்ச்சி 4.7%லிருந்து 3.0%ஆகக் குறையும் என்று தன்னுடைய பழைய மதிப்பீட்டைத் திருத்தியிருக்கிறது. பணவீக்க விகிதம் பணக்கார நாடுகளில் 5.7% ஆகவும் வளரும் நாடுகளில் 8.7% ஆகவும் இருக்கும் என்றும் பன்னாட்டுச் செலாவணி நிதியம் மதிப்பிட்டிருக்கிறது.

ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழுவானது (எம்.பி.சி.) பொருளாதார வளர்ச்சிக்கு சவாலாக விளங்கக்கூடிய பல அம்சங்களை அடையாளம் கண்டிருக்கிறது. “உலக அளவில் பொருளாதாரச் சூழல் மோசமாகி வருகிறது, பண்டங்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கிறது, மூலப் பொருள்களையும் – உற்பத்தி செய்து முடித்த பொருள்களையும் சந்தைக்கு அனுப்ப முடியாதபடிக்கு விநியோகச் சங்கிலியில் தொடர்ந்து தடங்கல்கள் ஏற்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. வளர்ந்த நாடுகள், தங்களுடைய பணக் கொள்கையை நிலைமைக்கேற்ப மாற்றிக்கொண்டேயிருப்பதால் நிலையற்ற ஏற்ற இறக்கங்கள் தொடர்கின்றன” என்று பணக் கொள்கை வகுப்புக் குழு விவரிக்கிறது. அரசில் (பொறுப்பில்) உள்ள யாராவது இதையெல்லாம் கவனிக்கிறார்களா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது.

நோய் முதல் நாடியது சரி, சிசிச்சைதான் இல்லை 

பொருளாதாரத்துக்குப் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தவும், வளர்ச்சியைத் தூண்டவும் ஐந்து முக்கிய துறைகளில் செய்ய வேண்டியவற்றை ரிசர்வ் வங்கியின் மாதாந்திர அறிக்கை (மே, 2022) சரியாக அடையாளம் கண்டிருக்கிறது.

  • தனியார் முதலீடு பெருமளவு பெருக வேண்டும்.
  • அரசின் மூலதனச் செலவுகள் மேலும் பல மடங்கு அதிகரிக்கப்பட வேண்டும்.
  • அடித்தளக் கட்டமைப்புகள் மேலும் மேம்படுத்தப்பட வேண்டும்.
  • பணவீக்கம் கட்டுப்படுத்தப்படுவதுடன், மேலும் உயராமல் குறைந்த அளவில், நிலையாகப் பராமரிக்கப்பட வேண்டும்.
  • பேரியியல் பொருளாதார அம்சங்களில் பெரிய மாற்றங்கள் ஏற்படாமல், நிலைத்தன்மை பராமரிக்கப்பட வேண்டும்.

இந்த ஐந்து அம்சங்களில் அரசின் மூலதனச் செலவு என்கிற அம்சம் மட்டுமே அரசினால் இப்போதைக்குச் செயல்படுத்தக் கூடியதாக இருக்கிறது. ஒன்றிய அரசின் வரவு-செலவு அறிக்கை தாக்கலுக்குப் பிறகு பெட்ரோல்-டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் மீதான கூடுதல் உற்பத்தி வரியைக் குறைத்ததாலும், மானியச் செலவுகளை அதிகப்படுத்தியதாலும், சில சமூக நலத் திட்டங்களுக்கான செலவுகளை உயர்த்தியதாலும் மூலதனச் செலவுகளுக்கு அதிக நிதியை ஒதுக்க முடியாமல் அரசின் கைகள் கட்டப்பட்டுள்ளன.

விநியோகச் சங்கிலியில் இடர்கள் இருக்கும்வரையிலும், ஏற்கெனவே உள்ள உற்பத்திக் கொள்ளளவு முழுதாகப் பயன்படுத்திக் கொள்ளப்படும் வரையிலும் தனியார் துறை முதலீடு வேகம் பெறாது. அன்னிய முதலீடுகளைப் பொருத்தவரையில் கெய்ர்ன், ஹட்சிசன், ஹார்லி-டேவிட்சன், ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோர்டு, ஹோல்சிம், சிட்டி பேங்க், பார்க்லேஸ், ஆர்பிஎஸ், மெட்ரோ கேஷ் அண்ட் கேரி ஆகியவை இந்தியாவிலிருந்து சென்றுவிட்டன அல்லது செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கின்றன.

அடித்தளக் கட்டமைப்பில் மேம்பாடு ஏற்பட வேண்டும் என்றால் டெண்டர் நடைமுறைகளில், விலை விதிப்புகளில், திட்டங்களைச் செயல்படுத்துவதில், திட்டங்களுக்குப் பொறுப்பேற்பதில் புரட்சிகரமான மாறுதல்கள் அவசியம், அவற்றுக்கான அறிகுறிகளே தென்படவில்லை. அடித்தளக் கட்டமைப்புத் துறைகளில் எண்ணிக்கையைக் கூட்டுகிறோமே தவிர தரத்தை மேம்படுத்துவதாக இல்லை. மோடி தலைமையிலான அரசின் கடந்த காலச் செயல்பாடுகளைப் பார்க்கும்போது விலைவாசியைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பதும் பேரியியல் பொருளாதாரத்தை நிலையாகப் பராமரிப்பது எவ்வாறு என்பதும் தெரியாமல் திகைப்பது புரிகிறது.

கொந்தளிப்பான கடலில் கப்பலை பாதுகாப்பாகச் செலுத்துவதற்கு கப்பலின் தலைவரும் அவருடைய அணியினரும் ஒற்றுமை உணர்வுடனும் பொது இலக்குடனும் செயல்பட்டாக வேண்டும்.  முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையில் கருத்தொற்றுமை இல்லை. பொது சரக்கு சேவை வரி விவகாரமானது ஒன்றிய – மாநில அரசுகளுக்கு இடையிலான நம்பிக்கையைச் சிதைத்துவிட்டது.

மாநில ஆளுநர்கள் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கோடரிக் காம்புகளாகச் செயல்படுகிறார்கள். எல்லா எதிர்க்கட்சிகளுக்கும் எதிராக மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் ஏவிவிடப்பட்டு அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. (மையப் புலனாய்வு முகமைகளால் கைதுசெய்யப்படும் மாநில அமைச்சர்கள் பட்டியலைப் பாருங்கள்).

வேலை செய்யக்கூடிய மொத்த தொழிலாளர்கள் எண்ணிக்கையில் 40% பேருக்குத்தான் வேலை கிடைத்திருக்கிறது, அவர்கள் மட்டும்தான் உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள் என்றால் எந்த நாடும் பொருளாதார சக்தியாக வளர்ச்சி பெற முடியாது. வேலை செய்யக்கூடிய பிராயத்தில் இருக்கும் தொழிலாளர்களில் கணிசமானவர்கள் வேலை செய்வதில்லை அல்லது வேலைகளை நாடுவதில்லை. பெண்களிடையே எழுத்தறிவு வளர்ந்திருந்த நிலையிலும், தொழிலாளர்கள் பங்கேற்பில் அவர்களுடைய எண்ணிக்கை 9.4%க்கும் மேல் அதிகரிக்கவில்லை. வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை இப்போது 7.1%ஆக இருக்கிறது.

நம்முடைய பொருளாதாரம் நோய்வாய்ப்பட்ட நிலையில் இருக்கிறது. நாம் மிக நன்றாக நோயின் தன்மையை அறிந்துவிட்டோம். மருந்தகத்தில் இதற்கான மருந்தும் இருக்கிறது. ஆனால், மருந்துகளைக் கொடுக்க வேண்டிய மருத்துவர்தான் போலியானவராக இருக்கிறார் அல்லது நோயாளியைப் பற்றி அக்கறை கொள்ளாமல் அவர் வலியால் துடிதுடித்து மெல்லச் சாகட்டும் என்று அலட்சியம் காட்டுகிறார். 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

1

1

நிறப் பாகுபாடுகடுமையான தலைவர்விரக்திநடப்பு நிகழ்வுகள்கர்நாடக பிரச்சினைஜவஹர்லால் நேருராக்கெட் குண்டுகள் பெரியார் இருவருக்கும் இடம் உண்டு: ச.கௌதமன் பேட்டிஆவணம்தலைச்சாயம்மூளை வேலைஐடிதுளசிதாசன்50 ஆண்டு சிறைதுக்ளக் இதழ்பொருளாதாரம்ஐஆர்எஃப்ஒளிதான் முதல் நினைவுமொபைல் செயலிகள்பரிணாம வளர்ச்சிததும்பும் மேற்குபுற்றுநோய்மசோதாமுக்கியமானவை எண்கள்ஸ்ரீதர் சுப்ரமணியம் கட்டுரைபடுகுழியில் தள்ளிவிடக்கூடும் ராகுலின் தொடர் மௌனம்மொழியியல்அடர் மஞ்சள்மோடிசூழலியல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!