கட்டுரை, பொருளாதாரம், நிர்வாகம் 5 நிமிட வாசிப்பு

ஜிடிபி சொல்வது என்ன, மறைப்பது என்ன?

ப.சிதம்பரம்
05 Sep 2022, 5:00 am
0

தேசிய புள்ளிவிவர அலுவலகம் (என்எஸ்ஓ) 2022-23 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) ஜிடிபி (ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதம்) எவ்வளவாக இருக்கும் என்ற மதிப்பீட்டைக் கடந்த புதன்கிழமை வெளியிட்டது. வளர்ச்சி வீதம் 13.5%ஆக இருக்கும் என்பதே அதில் அனைவருக்கும் கண்ணில்படுவது ஆகும். அதையே, ‘ஒட்டுமொத்தமான மதிப்புக் கூட்டல்’ (ஜிவிஏ) என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும்போது 12.7%தான். தர மதிப்பீட்டு நிறுவனங்கள், வங்கிகள், இந்திய ரிசர்வ் வங்கி ஆகியவை ஒட்டுமொத்த வளர்ச்சி வீதம் 13% முதல் 16.2% வரையில் இருக்கும் என்று மதிப்பிட்டிருந்தன. ஒருவேளை அந்த வரம்புக்குள் வளர்ச்சி இருந்திருந்தால் நாம் பெருமைப்படலாம்!

புள்ளிவிவரங்களுக்கும் அப்பால் மிகப் பெரிய உலகம் இருக்கிறது. இந்தக் கட்டுரையானது தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டுள்ள உத்தேச மதிப்பீடுகள் சுட்டும் எண்கள் மூலம் யார் மகிழ்ச்சியாக இருக்கப் போகிறார்கள், யார் துயரப்படப் போகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளத்தான்.

முக்கியமானவை எண்கள்!

நான் ஓர் அட்டவணை தயாரித்திருக்கிறேன். அதில் 2019-20, 2021-22 நிதியாண்டுடன் 2022-23 நிதியாண்டின் முதல் காலாண்டின் எண்களையும் சேர்த்திருக்கிறேன். 2020-21 கோவிட்-19 பெருந்தொற்று ஆண்டு என்பதால் நீண்ட காலத்துக்கு பொது முடக்கம் அமலில் இருந்தது. எனவே, அந்த ஆண்டின் எண்களை இதில் சேர்க்கவில்லை. 2019-20 என்பது இயல்பான ஆண்டு. 2021-22 மீட்சி பெற்ற ஆண்டு என்று அரசுத் தரப்பால் கூறப்படுகிறது. 2022-23 என்பது எல்லாத் துறைகளிலும் முழு அளவு மீட்சி ஏற்பட்டுவிடும் என்று நம்பப்படுகிற ஆண்டு. எனவே, நம்முடைய கவனமெல்லாம் 2019-20, 2021-22, 2022-23 ஆண்டுகளுக்கான தரவுகளைச் சுற்றியே இருக்க வேண்டும்.  

மேலும், ஒவ்வொரு துறையிலும் பாதிக்கப்படும் மக்களின் கண்ணோட்டத்தில் அந்த எண்கள் ஆராயப்பட வேண்டும். உதாரணத்துக்கு, வேளாண்மை, வனவளம், மீனளம் ஆகிய துறைகளுடன் நாட்டின் பெரும்பாலான குடும்பங்கள் தொடர்புள்ளதால் அதில் ஏற்படும் தொய்வு அவற்றைப் பாதிக்கின்றன. அதிகம் படிக்காமலும் தொழில்திறனிலும் முறையான பயிற்சியும் பெறாத தொழிலாளர்கள்தான் கனிமச் சுரங்கங்கள் மற்றும் குவாரிகள் போன்றவற்றில் அதிக எண்ணிக்கையில் பணிபுரிகின்றனர். நிதித் துறை, மனை - வணிகத் துறை, தொழில் சார்ந்த சேவைத் துறை ஆகியவற்றில் படித்தவர்கள், திறன் பயிற்சி உள்ளவர்கள், அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்வோர் ஆகியோர் அதிகம் பணிபுரிகின்றனர்.

இங்கே ஒப்பிடுவதற்கான அளவீட்டு ஆண்டாக இருப்பது 2019-20. வளர்ச்சிபெறும் எந்த நாடும் அதற்கு முந்தைய ஆண்டைவிட அதிகம் வளர வேண்டும் அல்லது அளவீட்டு ஆண்டைக் காட்டிலும் அதிக வளர்ச்சி பெற வேண்டும்.

அட்டவணை:

நிலையான விலை அடிப்படையில், ஏப்ரல்-ஜூன் ஜிவிஏ (ரூபாய் கோடிகளில்)

வேளாண்மை, வனவளம், மீனளம் – கனிம அகழ்வு – கட்டுமானம் – நிதி மனை வணிகம்

2019-20 - 448,703    82,696     259,728    662,305    796,851

2021-22 - 472,258    80,243     225,166    445,454    805,847

2022-23 - 493,325    85,423     262,918    559,723    880,313

2022-23 சதவீதத்தில் ஒப்பிட:

2019-20 - 9.9       3.3         1.2     -15.5      10.5

2021-22 - 4.5       6.5        16.8     25.7       9.2

பெருந்தொற்று ஆண்டைவிட (2020-21) 2021-22இல் பொருளாதாரம் மீட்சி அடைந்திருக்கிறது. துறைவாரியான வளர்ச்சியோ 2019-20 உடன் ஒப்பிடுகையில் வேளாண் துறையைத் தவிர பிறவற்றில் வளரவில்லை.

இதில் யதார்த்தமான ஒரு பாடம் இருக்கிறது. பெருந்தொற்றோ, சாதாரணமான ஆண்டோ – வயிற்றுப்பாட்டுக்காக விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் நிலத்தில் பாடுபடுவதைவிட வேறு வழி அவர்களுக்கு இல்லை. வீட்டிலிருந்து வேலை என்கிற சொகுசான வேலைமுறை அவர்களுக்கு ஏற்படவே முடியாது. (பிற துறைகளில் ஓரளவுக்கு ஏற்பட்டுள்ள அதிகரிப்பெல்லாம் புள்ளிவிவரங்கள்படியும்கூட குறிப்பிடத்தக்கவை அல்ல).

இன்னமும் மீட்சி பெறவில்லை

எனவே, 2022-23இல் நாம் வளர்ச்சியைப் பற்றிப் பேசுவதாக இருந்தால், 2021-22ஐவிட, 2019-20இல் எவ்வளவு அதிகம் என்றுதான் பார்க்க வேண்டும். அட்டவணையின் கடைசி இரண்டு வரிசை, வேறுபாடு எவ்வளவு என்பதைத் தெளிவுபடுத்துகிறது. 2022-23இன் முதல் காலாண்டு வளர்ச்சி முந்தைய ஆண்டைவிட அதிகமாக இருந்தாலும் அளவீட்டு ஆண்டான 2019-20 உடன் ஒப்பிடும்போது கவலையைத் தருகிறது. வேளாண்மை போன்ற துறைகளில்தான் வளர்ச்சி தொடர்கிறது. நிதித் துறை, மனை வணிகம் போன்றவற்றில் ஊக்கமளிப்பதாக இருக்கிறது. இதர துறைகளில் பொருளாதாரம் இன்னமும் மீட்சியே பெறவில்லை என்பதையே உணர்த்துகிறது.

இந்த அட்டவணையில் தொழிற்சாலைகள் மூலமான உற்பத்தியை நான் சேர்க்கவில்லை. அந்தப் புள்ளிவிவரங்கள் பிறவற்றுடன் ஒப்பிடும்போது வளர்ச்சிக் கதையைச் சரியாகத் தெரிவிக்காது. நாம் இப்போது ஒப்பிட எடுத்துக்கொண்டுள்ள மூன்று ஆண்டுகளின் முதல் காலாண்டில் தொழிற்சாலை உற்பத்தி மதிப்பானது ரூ.565,526 577,249 605,104 கோடியாக இருக்கிறது. 2022-23 வளர்ச்சி 2019-20 உடன் ஒப்பிடுகையில் 7% அதிகமாகவும் 2021-22 உடன் ஒப்பிடுகையில் 4.8% ஆகவும் இருக்கிறது.

புதிய முதலீடுகளின் பற்றாக்குறையாலோ, குறைந்துவிட்ட கேட்புகளாலோ அல்லது இரண்டும் சேர்ந்த காரணங்களாலோ உற்பத்தித் துறையில் வளர்ச்சி மந்தமாகவே இருக்கிறது. இதனால் சிறு – குறு - நடுத்தரத் தொழிற்துறை இன்னமும் வீழ்ச்சியிலிருந்து மீட்சி பெறவில்லை என்ற முடிவுக்கே வருகிறேன். 

மெதுவான துவக்கம்

இந்தத் தரவுகள் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று கூறுகின்றன. அதிலும் குறிப்பாக வேலைவாய்ப்பு எப்படி இருக்கும் என்பதைத் தனியாக கவனத்தில் கொள்ள வேண்டும். விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு நிலைமை அப்படியே தொடரும். விவசாயமல்லாத துறைகளில் வேலைவாய்ப்பு அதிகமாகாது. சுரங்கம், கனிம அகழ்வு ஆகியவற்றில் 2019-20ஐவிட பரவாயில்லை என்றிருக்கும். வலுவான அரசு நடவடிக்கைகள் இல்லாமல் பாமர மக்களின் வேலைவாய்ப்பு அதிகரிக்காது.

தொழில் பயிற்சி அற்றவர்களும் குறைந்த அளவே தொழில் திறன் உள்ளவர்களும் வேலைபெற வலுவான பொருளாதாரத் தூண்டல் அவசியம். தொழிற்சாலைகளில் உற்பத்தியை அதிகரிக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் போதாது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. சிறு – குறு - நடுத்தரத் தொழில் பிரிவுகள் புத்துயிர் பெறவைக்க இது தவறிவிட்டது. தொழில் பயிற்சி பெற்ற தொழிலாளர்களுக்கும் அலுவலகப் பணிகளிலும் வேலைவாய்ப்புகள் வளர்கின்றன. வியாபாரம், ஹோட்டல் போன்ற சேவைத் துறையில் புத்துயிர்ப்பு இன்னும் ஏற்படவில்லை. எனவே, வேலைவாய்ப்புகள் பெருக வாய்ப்பில்லாமல் இருக்கிறது. (குறிப்பு: ஆகஸ்ட் மாதத்தில் வேலையில்லாத் திண்டாட்ட அளவு 8.3%ஆக அதிகரித்திருக்கிறது).

இந்திய ரிசர்வ் வங்கி 2022-23 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 16.2%, 6.2%, 4.1%, 4.0%ஆக இருக்கும் என்று கணித்துள்ளது. இந்த வளர்ச்சி வீதம் குறைந்துகொண்டே வருவதைக் கவனிக்க வேண்டும். முதல் காலாண்டில் 13.5% என்ற வளர்ச்சியுடன் தொடங்கியிருக்கிறோம், ஆனால் அதுவும் ரிசர்வ் வங்கியின் எதிர்பார்ப்பைவிடக் குறைவு. இப்படி மந்தமாகத் தொடங்கியிருப்பது பிற மூன்று காலாண்டுகளில் வளர்ச்சி எப்படி இருக்கும் என்று கட்டியம் கூறுகிறதா?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

2





1

உம்பெர்த்தோ எகோமருத்துவர் ஜீவாமூளைக்கான உணவுசுபாஷ் சந்திர போஸ்நீதிபதிகாலனிய கலாச்சார மேலாதிக்கம்ஜோத்பூர்நிதிபால்ஃபோர் பிரகடனம்அணைப் பாதுகாப்பு மசோதாபாலியல் வண்புணர்வுநெடு மயக்கம்முறைகேடு குற்றச்சாட்டுதுகள்படைப்புத் திறன்உண்மைகள்டெசிபல் சத்தம்திட்டமிடா நகரமயமாக்கல்அரசு இயந்திரம்குற்றவாளிஉலகம் சுற்றும் வாலிபன்அம்பேத்கர்: எல்லோருக்குமான தலைவர்தவ்லின் – அம்ரிதாமங்கை வரிசைச் சிற்பங்கள்நீராதாரம்சுஜீத் தாஸ்குப்தா கட்டுரைஆரோக்கியம்தனுஷ்காஸ்ரீ ரங்கநாதர்பூதம்பாடி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!