கட்டுரை, அரசியல், பொருளாதாரம் 7 நிமிட வாசிப்பு

நான் ஆற்றியிருக்கக்கூடிய உரை

ப.சிதம்பரம்
08 Aug 2022, 5:00 am
1

வைத் தலைவர் அவர்களே, இந்த விவாதம் பல நாள்களுக்கு முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும். அவை விதி எண் 26இன்படி அல்லது வேறு விதியின்படி என்று ஏன் இது தொடர்பாகக் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அரசு இதில் பிடிவாதமாக இருந்தது, அதற்குக் காரணம் அதன் ஆணவம்தான் என்று மக்கள் கூறுகின்றனர்.

விலைவாசி உயர்வு குறித்து விவாதிப்போம். இது நாட்டின் பொருளாதார நிலை குறித்த விவாதம் அல்ல. அப்படியாக இருந்தால் பொருளாதார நிர்வாகம் குறித்து நூற்றுக்கணக்கானவற்றைப் பேசியாக வேண்டும். நிர்வாகம் என்பதைவிட நிர்வகிக்கத் தவறியது குறித்து – அதிலும் குறிப்பாக நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைத்த பணமதிப்புநீக்க நாள்கள் முதல் - அரசு எடுத்துவரும் அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் பேசியாக வேண்டும்.

விலைவாசி உயர்ந்துவருகிறது. அப்படி உயர்ந்துவரும் விலைவாசி மக்களை வெகுவாகப் பாதிக்கிறது, அதிலும் குறிப்பாக ஏழைகள், நடுத்தர வர்க்கத்தை மிகவும் பாதிக்கிறது. மக்களுடைய நுகர்வும், சேமிப்பும் வீழ்ந்துவிட்டன. குடும்பங்களின் கடன் சுமை உயர்ந்துகொண்டேவருகிறது. ஊட்டச்சத்துக் குறைவு – அதிலும் குறிப்பாக - பெண்களிடமும் குழந்தைகளிடமும் அதிகரித்துக்கொண்டேவருகிறது.

இந்த உண்மைகளையெல்லாம் அரசு ஒப்புக்கொள்ள மறுப்பது வருத்தத்தையே தருகிறது. “ஜிஎஸ்டி வரி விகித உயர்வு மக்களைப் பாதிக்கவே இல்லை” என்று இன்னொரு அவையில் நிதியமைச்சர் பேசியிருப்பத்தைக் கேட்டு நான் திடுக்கிட்டேன்! அவர் கூறியது உண்மையா என்பதை அறிய மிகச் சிறிய சோதனையை நடத்தினால் போதும், அது என்ன என்பதை என்னுடைய உரையின் கடைசிப் பகுதியில் குறிப்பிடுகிறேன்.

காரணங்களும் வழிகளும்

விலைவாசி உயர்வு தொடர்பான இந்த விவாதம் இலக்கின்றி வேறு வேறு பாதைகளில் பயணித்துவிடாது என்று நம்புகிறேன். “இதற்கெல்லாம் காரணம் நீங்கள்தான் – இல்லை நீங்கள்தான்” என்று பரஸ்பரம் நாம் தூற்றிக்கொள்வதால் விவாதம் ஒரு தீர்வைக் காட்டாது. மக்களால் தாங்க முடியாத அளவுக்கு எல்லாப் பொருள்களின் விலையும் உயர்ந்துவருகின்றன என்பதை முதலில் ஒப்புக்கொண்டு, அதற்கு உற்ற கேள்விகளை மட்டும் முன்வைக்குமாறு அரசையும் மாண்புமிகு உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கிறேன். விலைவாசி உயர்வை (பணவீக்கம்) குறைப்பதற்காக அரசு என்ன நடவடிக்கைகளை எடுக்கவிருக்கிறது?

இதன் தொடக்கப்புள்ளி, இப்போதைய விலைவாசி உயர்வுக்கான காரணங்கள் எவை என்று அடையாளம் காண்பதுதான்.

நிதி பற்றாக்குறை என்பதிலிருந்து இதை நான் தொடங்குகிறேன். அரசின் வருவாய்க்கும் செலவுக்கும் இடையிலான பற்றாக்குறை பெரிதாக இருக்கும்போதும் அது மேலும் பெரிதாகும்போதும் விலைவாசி உயர்கிறது. இது எப்படி என்று விளக்க இப்போது நேரம் இல்லை. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையை அளித்த அரசு, நிதிப் பற்றாக்குறை 6.4%ஆக அல்லது ரூ.16,61,196 கோடியாக இருக்கும் என்று மதிப்பிட்டது.

கடந்த ஏப்ரல் – ஜூன் மாதத்தில் இந்த நிதிப் பற்றாக்குறை ரூ.3,51,871 கோடி என்ற அளவை எட்டியது. செலவு எவ்வளவாகும் என்பதை அரசு குறைத்து மதிப்பிட்டுவிட்டது. எனவே, அதற்கேற்ப நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படவில்லை. அதேபோல வருவாயையும் அரசு குறைத்தே மதிப்பிட்டுவிட்டதோ? நிதி பற்றாக்குறையை நிதிநிலை அறிக்கையில் கூறியபடி 6.4% என்ற அளவுக்குள் அரசால் கட்டுப்படுத்திவிட முடியுமா? திட்டவட்டமான பதிலை அரசிடம் எதிர்பார்க்கிறோம்.

மனிதர்களால்தான் அதிக அதிகரிப்பு

அடுத்தது நடப்புக் கணக்குப் பற்றாக்குறை. ஏற்றுமதி மதிப்பைவிட இறக்குமதி மதிப்பு அதிகமாக இருப்பதை நடப்புக் கணக்குப் பற்றாக்குறை என்கிறோம். இந்த நடப்பு கணக்குப் பற்றாக்குறை ஏப்ரல் - ஜூன் மாதங்களில் 3,000 கோடி அமெரிக்க டாலர்களை எட்டக்கூடும். ஜூலை மாதம் வர்த்தகப் பற்றாக்குறை 3,100 கோடி டாலர்கள்.

நடப்புக் கணக்குப் பற்றாக்குறை முழு நிதியாண்டில் 10,000 கோடி அமெரிக்க டாலர்களை மிஞ்சும் என்றால் அது மிக மோசமான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்திவிடும். நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் குறைக்க அல்லது கட்டுக்குள் வைக்க என்ன செய்ய உத்தேசித்திருக்கிறது என்று இந்த அவைக்கு அரசு தெரிவிக்கட்டும். தலைவர் அவர்களே, இதிலும் நான் திட்டவட்டமான பதிலையே எதிர்பார்க்கிறேன்.

மூன்றாவது அடையாள எச்சரிக்கை, வங்கி வட்டி வீதம். வட்டி வீதத்தை இந்திய ரிசர்வ் வங்கிதான் நிர்ணயிக்கிறது. நிதிக் கொள்கைக் குழுவுக்கு அரசு தன்னுடைய தரப்பில் மூன்று பேரைப் பிரதிநிதியாக நியமிக்கிறது. அது மட்டுமல்லாமல் அரசின் செயலாளரும் ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழுவில் இடம்பெறுகிறார். எனவே, வட்டி வீதத்தை நிர்ணயிப்பதில் எங்களுக்குப் பொறுப்பில்லை என்று அரசு தட்டிக்கழிக்க முடியாது.

அனைவருக்கும் வாய்ப்பு தரும் பணக் கொள்கையைப் பின்பற்றி, சந்தையில் தொழில் – வியாபாரம் தொடங்க அதிக நிதியைச் சுற்றுக்கு விடுவதற்கு, முன்னேறிய நாடுகளைப் பின்பற்றியே இந்தியாவும் வட்டி வீதத்தைத் தீர்மானிக்கிறது. முன்னேறிய நாடுகள், வட்டி வீதங்களை உயர்த்தி வருகின்றன. நம் நாடு இப்போது இதற்கு எதிரான முடிவை எடுக்க முடியுமா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. வட்டி வீதத்தை அரசு உயர்த்தினால் சந்தையில் நுகர்வுக்கான மட்டற்ற தேவையை அது ஓரளவுக்குக் கட்டுப்படுத்தும் எனவே விலைவாசிகூட குறையலாம்.

ஆனால், அதனால் பொருள்களின் விற்பனை, நிறுவனங்களின் லாபம், எல்லாவற்றுக்கும் மேலாக வேலைவாய்ப்பு ஆகிய அனைத்தும் சரிந்துவிடும். எனவே இதில் சூட்சுமம் என்பது, எந்த அளவில் நாம் வட்டியை உயர்த்துகிறோம், எந்த அளவுக்கு நாம் சந்தைக்கு நிதியைத் தரப் போகிறோம் என்பதில்தான் இருக்கிறது. இந்த அம்சத்தில் அரசும் இந்திய ரிசர்வ் வங்கியும் ஒரே மாதிரியான சிந்தனையில்தான் இருக்கின்றனவா? வட்டி வீதம் எப்படியாகும் என்ற ஊகத்தை அரசு அவை உறுப்பினர்களிடம் பகிர்ந்துகொள்ளுமா?  

நான்காவது அம்சம் அளிப்பு (சப்ளை) பக்கத்தைச் சேர்ந்தது. பொருள்களைத் தாராளமாக இறக்குமதி செய்ய இப்போதைக்கு அனுமதிக்க முடியாது என்பதால் உள்நாட்டில் பொருள்களின் உற்பத்தியையும் விநியோகத்தையும் பெருக்க அரசு என்ன நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது? குறு, சிறு, நடுத்தரத் தொழில் பிரிவுகள் ஆழ்ந்த சிக்கலில் சிக்கிக்கொண்டிருப்பதால் அவற்றுக்கு அரசு முதலில் உதவியளித்து மீட்டால்தான், இந்தப் பிரச்சினையிலிருந்து மீள அரசுக்கு அவற்றால் உதவிக்கு வர முடியும்.

பெருந்தொழில் நிறுவனங்கள் லாபத்தை அதிகப்படுத்துவதில் மட்டுமே ஆர்வம் கொண்டிருப்பதால் செயற்கையாக பொருள்கள் – சேவைகளின் அளிப்பைக் குறைவாக வைத்திருக்கவே முயற்சிகளை மேற்கொள்ளும். ஜிஎஸ்டி சட்டங்களும் வரி விகித அளவுகளும் வர்த்தகத்தை முடக்கிப்போட்டிருக்கிறது. பொருள்களும் சேவைகளும் மக்களுக்கு அதிக அளவில் கிடைக்க அரசு என்ன செய்யப் போகிறது?

மூல வடிவிலான பாவம்

என்னுடைய பட்டியலில் கடைசியாக வருவது, மக்களை மிகவும் தொல்லைக்குள்படுத்தி வரும் அம்சமாகும்; அது அரசின் வரிவிதிப்புக் கொள்கை. விலைவாசி உயர்வதற்குக் காரணமான மூல பாவத்தை அரசு இதன்மூலம்தான் செய்தது.

பெட்ரோல், டீசல் மீது கொடூரமான அளவுக்கு வரிகளையும் கூடுதல் வரிகளையும் விதித்தது. எண்ணெய் நிறுவனங்கள் மூலம் வரி வருவாய், கூடுதல் வரி வருவாய், பங்குகள் மீதான ஈவுத்தொகை என்று கிட்டத்தட்ட 26 லட்சம் கோடி ரூபாயை எண்ணெய் நிறுவனங்கள் மூலமாக வசூலித்தது. மக்களுடைய நலன் பற்றியோ, அவர்களுடைய துயரங்கள் பற்றியோ சிறிதும் அக்கறை இல்லாதது, இதயமற்றது, ஏழைகளுக்கு எதிரானது இந்த அரசு.

அது மட்டுமல்லாமல் ஏழைகளும் நடுத்தர மக்களும் வாங்கும் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரிகளை அவ்வப்போது உயர்த்தி, அதிலும் வருவாயை ஈட்டுகிறது. இன்னொரு பென்சில் வேண்டும் என்று கேட்டபோது அம்மா ஏன் தன்னை சரமாரியாகத் திட்டினாள் என்று ஆறு வயது கீர்த்தி துபே தெரியாமல் பரிதவித்த துயரம் இந்த அரசுக்குத் தெரியாது அல்லது மகளுக்கு கூடுதலாக இன்னொரு பென்சில் வாங்கித்தர முடியாத அந்தத் தாயின் தவிப்பும் இந்த அரசுக்குத் தெரியாது.

இந்த அரசுக்கு உண்மையிலேயே தலையும் இதயமும் இருக்கும் என்றால் பெட்ரோல் – டீசல் மீதான வரிகளைக் கணிசமாக குறைக்கும், சமையல் எரிவாயுவின் விலையை மட்டுப்படுத்தும், ஏழைகளும் நடுத்தர மக்களும் வாங்கிப் பயன்படுத்தும் அவசியப் பொருள்கள் மீதான வரிகளை விலக்கிக்கொள்ளும்.

அவைத் தலைவர் அவர்களே, ஜிஎஸ்டி வரி உயர்வு மக்களைப் பாதித்திருக்கிறதா இல்லையா என்பதை அறிவதற்கான சோதனை குறித்து என்னுடைய உரையின் முற்பகுதியில் கூறியிருந்தேன். அது என்ன என்று விளக்கி என்னுடைய உரையை முடிக்க விரும்புகிறேன். அவைத் தலைவரான நீங்களும், நிதியமைச்சரும், நானும் எந்தவித அடையாளமும் இல்லாத சாதாரண காரில், தில்லியில் நடுத்தர வர்க்கமும் ஏழைகளும் வசிக்கும் பகுதிக்கு எந்தவிதப் பாதுகாவலரும் இல்லாமல் செல்வோம்.

எரிபொருள் விலை உயர்வாலும் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பாலும் ஜிஎஸ்டி வரி விகிதங்களாலும் பாதிப்பு உண்டா என்று அங்கு வாழும் மக்களிடம் அவைத் தலைவரே கேட்கட்டும். மக்கள் என்ன கூறுகிறார்களோ அதை நான் அப்படியே ஏற்கிறேன். வரிவிதிப்பினால் மக்களுக்கு பாதிப்பு ஏதுமில்லை என்று இன்னொரு அவையில் பேசிய நிதியமைச்சரும் அதை அப்படியே ஏற்பார் என்று நம்புகிறேன்.

நன்றி.

ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.


3


பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Vidhya sankari    6 months ago

நாடாளுமன்றத்தில் ஒலித்திருக்க வேண்டிய உரை. தலையும் இதயமும் இல்லாத அரசு! - எங்கள் தலையெழுத்து.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அதிகம் வாசிக்கப்பட்டவை

மிரியாகோர்பசெவ்: மாபெரும் அவல நாயகர்யுஏபிஏசெயற்கை மூட்டுதமிழ் உரிமைகாலம் மாறிப்போச்சு காங்கிரஸ்காரரே!ரஜினிகாந்த்நீதிபதி கே சந்துருஇந்திரஜித் ராய் கட்டுரைதிலீப் மண்டல் கட்டுரைசமஸ் பெரியார்கௌதம் பாட்டியா கட்டுரைஅரவிந்தன் கண்ணையன் பேட்டிஎல்.இளையபெருமாள்ஈழத்தின் ரத்த வரலாறுபிரணாய் ராய்உதய்ப்பூர் மாநாடுஸரமாகோ நாவல்களின் பயணம்நா.மணிஅமர்த்யா சென் பீட்டருக்கே கொடு!தகவல்கள்வர்கீஸ் குரியன்வியாபாரம்பொதுப் பயணம்பாரதி நினைவு நூற்றாண்டுதமிழ் விக்கிமருத்துவர் ஆலோசனைஆவின்: பாதுகாக்கப்பட வேண்டிய பால் கூட்டுறவு நிறுவனலீ

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!