கட்டுரை, அரசியல், பொருளாதாரம் 4 நிமிட வாசிப்பு
அக்கறையுள்ள கேள்விகள், எச்சரிக்கையான பதில்கள்
வழக்கத்துக்கு மாறான சம்பவங்களால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் உரிய நாள்களுக்கு முன்னதாக டிசம்பர் 23 அன்று கூட்டத்தொடர் முடித்துவைக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டன. எதிர்க்கட்சிகளைவிட ஆளும் தரப்புதான் அவையை முன்கூட்டியே முடித்துவைப்பதில் ஆர்வமாக இருந்தது.
மாநிலங்களவை ஒத்திவைக்கப்படுவதற்கு முன்னதாக, நிதியாண்டு 2022-23இல் கூடுதல் செலவுகளுக்கு ரூ.3,25,756 கோடிக்கான துணை மானியக் கோரிக்கை மீது – மீண்டும் வழக்கத்துக்கு மாறாகவே – விவாதம் நடந்தது. ரூ.1,10,180 கோடிக்கான செலவு அனுமதி கோரிக்கை மசோதாவும் தாக்கலானது (இதில் செலவுக்குத் தேவைப்படும் நிதி, சேமிப்புகளிலிருந்து பெறப்படும்). நாட்டின் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள மாநிலங்களில் எல்லைப்புறச் சாலைகளை அமைக்க ராணுவத் துறைக்கான மூலதனச் செலவு ரூ.500 கோடியும் இந்தப் பெருந்தொகையில் அடக்கம்.
எதிர்க்கட்சிகள் தரப்பில் நான்தான் விவாதத்தைத் தொடங்கினேன். எதிர்க்கட்சிகளிடமிருந்து கேள்விகள் கேட்கப்படும்; ஆனால் அரசுத் தரப்பிலிருந்து பதில்களே வராது என்ற வகையில் பயனற்ற விவாதமாக அது தொடருவதை நான் விரும்பவில்லை. இது தொடர்பான கடந்த கால அனுபவங்களைச் சுட்டிக்காட்டி, இந்த முறை வித்தியாசமாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று முதலிலேயே குறிப்பிட்டேன்.
உண்மையில் வித்தியாசமாகத்தான் இருந்தது. எதிர்த் தரப்பிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டன; வியப்பு கலந்த மகிழ்ச்சி தரும் வகையில் - அரசுத் தரப்பிடமிருந்து பதில்களும் வந்தன – ஆனால், அவற்றில் சில தெளிவற்றவை அல்லது வெவ்வேறு அர்த்தங்களைத் தருபவை, சில பதில்கள் எச்சரிக்கையானவை, சிலவற்றை பதில்களாகவே கருத முடியாது.
கேள்விகளையும் அதற்கான பதில்களையும் வெகு கவனமாக ஆராய்ந்தால், இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த ரகுராம் ராஜன் சமீபத்தில் வெளிப்படுத்தியுள்ள கவலை சரி என்றே புரிகிறது; 2022-23இல் இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி மிதமாகத்தான் இருக்கும், 2023-24இல் மிகவும் கடுமையான சவால்களை எதிர்கொள்ள நேரும் என்று கூறியிருந்தார் ராஜன்.
என் கேள்விகளும் நிதியமைச்சர் பதில்களும்
1. பட்ஜெட் ஆவணங்களின்படி 2022-23இல் நாட்டின் ஜிடிபி பெயரளவில் 11.1%ஆக இருக்குமென்று தெரிகிறது, பணவீக்க விகிதம் என்னவாக இருக்கும், உண்மையான ஜிடிபி வளர்ச்சி வீதம் என்னவாக இருக்கும்? (பணவீக்க விகிதத்துடன் உண்மையான வளர்ச்சி வீதத்தைக் கூட்டினால் கிடைப்பதுதான் பெயரளவிலான வளர்ச்சி வீதம் என்பது அனுபவக் கணக்கீடு).
இந்தக் கேள்விக்கு நேரடியான பதில் இல்லை. எது எவ்வளவு என்று பிரித்து, பதில் அளிக்கப்படவில்லை. என்னுடைய இரண்டாவது கேள்விக்குப் பதில் அளிக்கும்போது, பெயரளவிலான வளர்ச்சி வீதம் அதிகமாக இருக்கக்கூடும் என்று கூறிய நிதியமைச்சர், இந்த மூன்றும் எவ்வளவு இருக்கும் என்று திட்டவட்டமாகக் கூறவில்லை. இது திருப்தியளிக்காத பதில்.
2. செலவுக்குத் தேவைப்படும் கூடுதல் தொகை ரூ.3,25,756 கோடியை அரசு எங்கிருந்து திரட்டும்?
(அ) பட்ஜெட்டில் எதிர்பார்த்த அளவைவிட அரசு அதிகமாக வருவாயைத் திரட்டியிருக்கிறதா?
(ஆ) கடனாக இந்த நிதியைத் திரட்டப் போகிறதா?
(இ) பெயரளவிலான வளர்ச்சி 11.1%ஐவிட அதிகமாக இருக்கும் என்று அரசு எதிர்பார்க்கிறதா? அதிகம் கடன் வாங்கி - அதிகம் செலவழித்தாலும்கூட அரசின் வருவாய்க்கும் செலவுக்குமான (பொது நிதி) பற்றாக்குறையை 6.4% என்ற அளவிலேயே அதனால் வைத்திருக்க முடியுமா?
(ஈ) அல்லது இதில் எதுவுமே சாத்தியமே இல்லையா?
நிதி பற்றாக்குறை 6.4% என்ற அளவை மீறாமல் நிர்வகிக்க அரசு உறுதியோடு இருப்பதாக நிதியமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார். வரி வசூல் மூலமான வருவாய், பட்ஜெட்டில் எதிர்பார்த்த அளவைவிட அதிகமாக இன்றைய கட்டத்தில் இருப்பதை கோடிட்டுக்காட்டினார். சுருக்கமாகச் சொல்வதென்றால் - வரி உள்ளிட்ட வருவாய் இனங்களிலிருந்து கூடுதலாக ரூ.3,25,756 கோடி கிடைத்துவிடும் என்று அரசு எதிர்பார்க்கிறது. இந்த நம்பிக்கையும், பெயரளவிலான வளர்ச்சியின் உயர் அளவும் அரசாங்கத்தை உற்சாகமான நிலைக்குக் கொண்டுசெல்லக்கூடும். அதேசமயம், 2022-23 நிதியாண்டின் மூன்றாவது நான்காவது காலாண்டுகளில் ஒருவேளை பொருளாதார வளர்ச்சி இப்படியே தொடராமல் குறைந்துவிட்டால் என்னாவது என்ற எச்சரிக்கையுடன் பதில் இருந்தது.
3. 2013-14இல் பெருந்தொழில் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட நிறுவன வரி வசூல், மொத்த வரி வருவாயில் 34%ஆக இருந்தது. 2022-23இல் மொத்த வரி வருவாயில், பெருநிறுவனங்கள் மீதான வரி மூலம் கிடைப்பது 26%தான். அரசு இப்படிச் சலுகை அளித்தும் (அதன் மதிப்பு ரூ.2,50,000 கோடி) தனியார் துறையில் உள்ள பெருந்தொழில் நிறுவனங்கள் ஏன் முதலீட்டை அதிகரிக்காமல் இருக்கின்றன?
நிதியமைச்சர் உடனே 14 துறைகளில் வெவ்வேறு முதலீட்டுத் தி்ட்டங்களைப் பட்டியலிட்டார் (இவற்றில் பெரும்பாலானவை பிரதமரின் ‘உற்பத்தி ஊக்குவிப்பு திட்டம்’ - பிஎல்ஐ கீழ் முதலீடு செய்வதாக வாக்குறுதி அளிக்கப்பட்டவை), ஆனால் தனியார் பெருந்தொழில் நிறுவனங்களைப் பாராட்டி நிதியமைச்சர் எதையும் கூறவில்லை. நாட்டின் தொழில் – வர்த்தக சபையின் உச்ச மாநாட்டில் கடிந்துகொண்டதைப் போலவும் அவர்கள் குறித்து கடுமையாக எதையும் பேசவில்லை. அடுத்து என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்க விரும்புகிறார் என்பது புரிகிறது. சந்தையில் கேட்பு குறைந்துவிட்டது, பணவீக்கம் அதிகரித்துள்ளது, வட்டி வீதம் அதிகமாகிவிட்டது, தொழில் துறையினர் முழுக் கொள்ளளவுக்கு உற்பத்திகளை மேற்கொள்ளவில்லை, உலக அளவில், பொருளாதார வளர்ச்சி குறித்து நிச்சயமற்ற நிலை நிலவுகிறது, தனியார் துறையினருமே சந்தை எப்படி மாறும் என்று காத்திருந்து பார்க்கும் மனநிலையில் உள்ளனர். இவ்வாறு அரசும், தொழில் துறையினரும் ‘காத்திருந்து பார்ப்பது’ என்ற முடிவுக்கு வந்துவிட்டதால் புதிய முதலீடுகள் பெருகாமல் புதிய ஆண்டும் அதிருப்தியைத் தரும் ஆண்டாகவே தொடரும்.
4. வளர்ச்சிக்கான நான்கு இயந்திரங்களில் அரசின் செலவுகள் தவிர, வேறு எவை நம்பிக்கையளிக்கும் விதத்தில் இருக்கின்றன?
தனியார் தொழில் முதலீடு குறித்து நிதியமைச்சர் எச்சரிக்கையாகவே பதில் அளித்தார். தனிநபர் நுகர்வையும் அவர் நம்பிக்கையோடு பேசவில்லை. ஏற்றுமதி அதிகரிக்கும் என்று நம்புவதாகக் குறிப்பிட்டார்; ஆனால், வெளிவர்த்தகப் பற்றுவரவில் அதிக இறக்குமதி காரணமாக பற்றாக்குறை அதிகரிப்பது நமக்குத் தெரிந்ததுதான். எனவே, இது ஒரு பதிலே அல்ல.
5. உண்மையான ஜிடிபி 1991-92 முதல் 2003-04 வரையிலான 12 ஆண்டுக்காலத்தில் இரட்டிப்பானது. அடுத்த பத்தாண்டுகளில் 2013-14 வரையிலும்கூட மீண்டும் இரட்டிப்பானது. உங்களுடைய அரசு, உங்களுடைய பத்தாண்டுக் கால ஆட்சி முடிவில் அதேபோல ஜிடிபியை இரட்டிப்பாக்குமா?
இந்தக் கேள்வி நிதியமைச்சரை நிலைகுலையச் செய்துவிட்டது. அவரால் ‘ஆம்’ என்றும் சொல்ல முடியவில்லை; ‘முடியாது’ என்றும் சொல்வதற்கு அவருக்குத் தயக்கம்; 200 லட்சம் கோடி ரூபாய்க்கு ஜிடிபியை உயர்த்திவிட வேண்டும் என்ற இலக்கை எட்ட முடியாமல் இந்த அரசு தோல்வியையே காணும் என்பதுதான் என்னுடைய கணிப்பு.
6. ராணுவத் துறையில் மூலதனச் செலவாக ரூ.500 கோடியை மட்டுமே அனுமதிக்க விரும்புவதால், வெந்நீர் ஊற்றுப் பகுதி தொடர்பாக சீனம் நமக்குச் சாதகமாக இடத்தைத் தருவதாகக் கூறியிருக்கிறதா, டேப்சாங் சமவெளியிலிருந்தும் டேம்சோக் சந்திப்பு என்ற இடத்திலிருந்தும் படைகளை விலக்கிக்கொள்வதாக வாக்களித்திருக்கிறதா; கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டருகில் சாலைகள், பாலங்கள், தகவல் தொடர்பு வசதிகள், ஹெலிகாப்டர்கள் இறங்கு தளங்கள், குடியிருப்புகள் ஆகியவற்றைப் பெருமளவில் ஏற்படுத்தியிருப்பதுடன் ஏராளமான ராணுவ வீரர்களையும் ஆயுதங்களையும் குவித்துக்கொண்டிருக்கிறதா சீனம்? எந்தத் தரப்பும் நடமாடக் கூடாத பகுதியை சீனம் உருவாக்குகிறது என்றால் இந்தியத் துருப்புகள் இனிமேல் அங்கே ரோந்து சுற்றவே முடியாதா, பாலியில் சீன அதிபர் ஜி ஜிங்பின்னைச் சந்தித்தபோது பிரதமர் மோடி இவை குறித்து அவரிடம் விவாதித்தாரா?
‘சீனம்‘ என்பது பேசக் கூடாத வார்த்தை என்பதால் மௌனத்தையே பதிலாகத் தந்தார் நிதியமைச்சர்.
அன்புள்ள வாசகரே, இதுதான் இன்றைய இந்தியப் பொருளாதாரத்தின் நிலைமை, இந்திய – சீன எல்லையின் நிலை, நாடாளுமன்றங்களில் விவாதம் நடத்துவதால் கிடைக்கும் பலன்!

2

1





பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.