கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

எதிர்காலம்: நம்பிக்கையுடனா, அச்சத்துடனா?

ப.சிதம்பரம்
21 Aug 2023, 5:00 am
0

ந்தியாவின் ஆயிரம் ஆண்டு அடிமைத்தனம் முடிந்து, போற்றுதலுக்குரிய ஆயிரம் ஆண்டு தொடங்கியிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாப் பேருரையில் குறிப்பிட்டார். தில்லி செங்கோட்டை கொத்தளத்தில் - அவர் பேசிக்கொண்டிருந்த அதே தருணத்தில் – இரண்டு வெவ்வேறு ஆயிரம் ஆண்டுகளும் சந்தித்துக்கொண்டன. 

அது மட்டும் உண்மையாக இருக்கும்பட்சத்தில் அந்த உரையே வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்துவிடும்; அதற்கும் முன்னால் உலக வரலாற்றில் இடம்பிடித்துவிட்ட அசாதாரணமான சில நிகழ்வுகளைப் போல – சித்தார்த்தருக்கு போதி மரத்தடியில் ஞானம் பிறந்ததைப் போல, ஏசுநாதர் அவதரித்ததைப் போல, இறைத்தூதர் முகம்மதுவுக்கு தேவ ரகசியங்கள் வெளிப்படுத்தப்பட்டதைப் போல - அதுவும் நிரந்தர இடத்தைப் பிடித்துவிடும். அல்லது உலகாயத வாழ்க்கையில் மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக நிகழ்ந்த, ஆப்பிள் ஏன் மரத்திலிருந்து பூமியை நோக்கி விழுகிறது என்பது தொடர்பான புவி ஈர்ப்புவிசை இருப்பது பற்றிய அறிவியல் கண்டுபிடிப்பைப் போல, மின்சாரம் என்ற எரிபொருள் பேராற்றலைக் கண்டுபிடித்ததைப் போல, தொலைபேசி என்ற தகவல் தொடர்பு சாதனத்தைக் கண்டுபிடித்ததைப் போல, ரைட் சகோதரர்கள் பறவையைப் பார்த்து ஆகாய விமானம் என்ற புதிய போக்குவரத்து சாதனத்தை வடிவமைத்ததைப் போல, அணுத்துகளை இரண்டாகப் பிளந்து அளவிட முடியாத ஆற்றலை வெளிப்படுத்தியதைப் போல, நிலவிலேயே மனிதன் கால் பதித்ததைப் போல - பேரதிசயங்களில் ஒன்றாக மாறியிருக்கும். இந்த அதிசயங்கள் எதற்கும் நான் சாட்சியாக இருந்ததில்லை என்பதில் எனக்கும் வருத்தம்தான்.

ஆனால், அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் சாதாரண ஒரு நிகழ்வுக்கு சாட்சியாக இருந்திருக்கிறேன். அது ‘இந்தியா டுடே’ தொலைக்காட்சிக்காக ராஜ்தீப் சர்தேசாய், இந்திய நாடாளுமன்றத்தின் எதிரெதிர் முகாம்களைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்களை நேருக்கு நேர் சந்திக்க வைத்து, பேச வைத்ததற்கு சாட்சியாக பார்த்துக்கொண்டிருந்தேன். ஜெயந்த் சின்ஹா (பாஜக), சசி தரூர் (காங்கிரஸ்) என்ற அந்த இருவரிடமும் அறிவார்ந்த நேயர்கள், அறிவுக்கூர்மை மிக்க கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் துருவித் துருவி கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தார் ராஜ்தீப்.

‘நூறில் (சுதந்திரம் பெற்ற நூறாவது ஆண்டில்) இந்தியா’ என்ற பொருளில் இருவரும் முதலில் பேசியது என்னுடைய ஆர்வத்தைத் தூண்டியது. 2047லும் ‘வளம்குன்றா தொடர் வளர்ச்சி’ இப்படியே நீடிக்க வேண்டும் என்ற வாழ்த்தை ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்; 2047லும் ‘அனைவருக்குமான'தாக இந்தியா நீடிக்க வேண்டும் என்ற விருப்பத்தை சசி தரூர் வெளியிட்டார். உடனே எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது; ஏன் நாம் இரண்டையுமே சேர்த்துப் பெறக் கூடாது? தத்தமது கட்சியின் நிலையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அந்த இருவரின் பேச்சையும் கேட்டபோது, இந்தியாவால் இரண்டையும் ஒருசேரப் பெற முடியாது என்பதைப் போன்ற போக்கு, கவலையை ஏற்படுத்தியது.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

சர்வாதிகாரத்துக்கான சட்டங்கள்

ப.சிதம்பரம் 07 Aug 2023

அப்பட்டமான முரண்பாடு

‘இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் காப்போம், அப்படியே தக்கவைப்போம், மதச்சார்பின்மைக் கொள்கையை முழுமையாக ஆதரிப்போம், கூட்டாட்சித் தத்துவத்துக்கு வலு சேர்ப்போம், மனித உரிமைகளைக் காப்போம்’ என்றெல்லாம் ஜெயந்த் சின்ஹா சபதமேற்றார். ‘சட்டப்படியான ஆட்சி என்பதை உறுதிசெய்வோம், ஆட்சியில் நடைபெறும் தவறுகளுக்கு உரியவர்களைப் பொறுப்பாளியாக்குவோம்’ என்றார்.

ராஜ்தீப் சர்தேசாயின் சில நேரடிக் கேள்விகளுக்கு மென்று விழுங்காமல் பதில் அளித்தார் சின்ஹா. ‘விரும்பியவரைத் திருமணம் செய்துகொள்ளும் உரிமை, விரும்பிய உணவை உண்ணும் உரிமை, விரும்பிய மதத்தைப் பின்பற்றும் உரிமை’ ஆகியவை தொடரும் என்றார். எங்களுடைய கட்சி அமைப்புக்குள் மாற்றுக் கருத்துகளைத் தெரிவிக்க முடியும் என்று கண்ணை இமைக்காமலேயே பதில் அளித்தார். எனக்குக் கவலையளித்த விஷயங்கள் குறித்துக் கட்சியின் மூத்த தலைவரையே நேரில் சந்தித்து விவாதித்திருக்கிறேன் என்றும் குறிப்பிட்டார். 2047இல் எது முக்கியமானதாக இருக்க முடியும் என்று கேட்டபோது, ‘சுதந்திரமும், சுயேச்சையான சிந்தனையும்’ என்று பதில் அளித்தார். தான் சொன்ன அனைத்திலும் ஜெயந்துக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது என்றே நம்புகிறேன்.

அடுத்த நாள், நாட்டின் 77வது சுதந்திர தினத்தன்று தில்லி செங்கோட்டை கொத்தளத்திலிருந்து பிரதமர் நரேந்திர மோடி 90 நிமிஷங்கள் பேசினார். அவருடைய உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்தேன். ‘நான்’, ‘எனது’, ‘என்னுடைய’ என்பவையே அந்த உரையின் முக்கிய தொனியாக இருந்தன. அவருடைய சிந்தனையின் தொடர் ஊர்வலமும், கடந்த 9 அல்லது 10 ஆண்டுகளில் சாதித்துவிட்டதாக அவர் கருதும் விஷயங்களைப் பற்றியும் பேசினார்.

பூடகமாக அவர் பேசும் அரசியலும் அதில் இடம்பெற்றிருந்தது. ‘ஊழல்’, ‘வாரிசு அரசியல்’, ‘சிறுபான்மையினரைத் தாஜா செய்யும் போக்கு’ ஆகியவற்றை வழக்கம்போலக் குறிப்பிட்டார். அவருடைய இலக்கு யார் என்பது வெளிப்படை. எதிர்க்கட்சித் தலைவர்கள், நேரு – இந்திரா காந்தி குடும்பம், முஸ்லிம்கள் ஆகியோரைத்தான் அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டார். அந்த நிலையில் அவருடைய பேச்சானது அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான ஒத்திகை போலவே மாறிவிட்டது. கடந்த 9 அல்லது 10 ஆண்டுகளில் நாட்டின் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டுவிடவில்லை.

ஜெயந்த் சின்ஹாவின் பேச்சுக்குத் திரும்பி அதை அப்படியே பிரதமர் பேசியதுடன் பொருத்திப் பார்ப்போம். ‘2047 பொற்காலமாக இருக்கும்’ என்று கல்லூரி மாணவர்களிடம் உறுதிபடக் கூறினார் சின்ஹா. ஆனால் பிரதமர் தனது பேச்சில், சின்ஹா கூறிய எதைப் பற்றியும் சொல்லாமலும் உறுதியளிக்காமலும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அரசமைப்புச் சட்டத்தைக் காப்போம், அப்படியே தக்கவைப்போம் என்று எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை.

மதச்சார்பின்மை குறித்தோ கூட்டாட்சி முறையின் அவசியம் குறித்தோ, மனித உரிமைகளைப் பாதுகாப்பது பற்றியோ, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவோம் என்றோ, ஆட்சிக்காலத்தில் நடைபெறும் தவறுகளுக்கு உரியவர்களைப் பொறுப்பாக்குவோம் என்றோ பேசவில்லை. அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு சின்ஹா அளித்த வாக்குறுதிகள் குறித்து ஒன்றும் இல்லை. காரணம், 2023 ஆகஸ்ட் 15இல் தொடங்கிய அடுத்த ஆயிரம் ஆண்டுகள் தொடர்பாக வெவ்வேறு விதமான சொற்சித்திரங்களைத்தான் இருவரும் மக்கள் முன் வைத்துள்ளனர்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

எரியும் மணிப்பூர்

ப.சிதம்பரம் 31 Jul 2023

இடைஞ்சலான கேள்விகள்

சின்ஹா பேசியதையும் இப்போது செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சி ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் அன்றாடம் இடம்பெறும் செய்திகளையும் அருகருகில் வைத்துப் பார்ப்போம். விரும்பியவர்களைத் திருமணம் செய்துகொள்ள உரிமை இருக்கிறது என்றால் சாதியை மறுத்து, மதத்தை மறுத்து திருமணம் செய்துகொள்வோர் ஏன் அலைக்கழிக்கப்படுகிறார்கள், அச்சுறுத்தப்படுகிறார்கள், அடிக்கப்படுகிறார்கள்? விரும்பிய உணவை உண்ணத் தடையில்லை என்றால் கர்நாடகத்தில் ஹலால் உணவு – ஹலால் செய்யப்படாத உணவு தொடர்பான சர்ச்சை ஏன் மூள்கிறது? விரும்பிய மதத்தை ஒருவர் பின்பற்றலாம் என்றால் பஜ்ரங் தளம், ஹிந்து மகா பஞ்சாயத்து, இதர வலதுசாரி அமைப்புகளுடைய செயல்கள் எப்படிப்பட்டவை, முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிராக ஏன் வெறுப்புணர்வு பரப்பப்படுகிறது?  எல்லாவற்றுக்கும் மேலாக ஏன் நம்மைச் சுற்றி இவ்வளவு வன்செயல்கள் நடக்கின்றன?

சட்டப்படியான ஆட்சியை நடத்துவதுதான் ஆட்சியாளர்களின் நோக்கம் என்றால் தில்லியில் ஏன் கலவரம் நடக்கிறது, மணிப்பூரில் ஏன் உள்நாட்டுப் போர் தொடர்கிறது, ஹரியாணாவின் நூ நகரில் ஏன் இரு மதங்களுக்கு இடையில் மோதல் வெடிக்கிறது? ஏழைகளுடைய வாழிடங்களையும் கடைகளையும் ஏன் புல்டோசர்கள் இடித்துத் தள்ளுகின்றன? அரசமைப்புச் சட்டம் காக்கப்படும் என்பது உண்மையானால் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டப் பிரிவு 370 ஏன் நீக்கப்படுகிறது, ஜம்மு – காஷ்மீர் மாநிலம் ஏன் அந்தஸ்து பறிக்கப்பட்டு இருவேறு யூனியன் பிரதேசங்களாக அடையாளம் இழக்க வைக்கப்படுகிறது, தில்லியில் துணைநிலை ஆளுநருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் இடையிலான அதிகாரப் பகிர்வுக்கு ஏன் திருத்தம் கொண்டுவரப்பட்டு அரசமைப்புச் சட்டமே சிதைக்கப்படுகிறது?

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

ராஜ தர்மம்: குஜராத்தும் மணிப்பூரும்

ராமச்சந்திர குஹா 25 Jul 2023

இவையெல்லாம் பதில் அளிக்க இடையூறான கேள்விகள், ஆனால் அங்கே வந்திருந்த கல்லூரி மாணவர்கள் இந்தக் கேள்விகளுக்கு விடையை நிச்சயம் விரும்புவார்கள். அவர்கள் கேட்க அனுமதிக்கப்பட்ட இரண்டு கேள்விகளும் துளைத்தெடுப்பை, சீண்டும் தன்மை மிக்கவை ஆனால் இரண்டுக்கும் திருப்திகரமான பதில்கள் தரப்படவில்லை என்றாலும் நிகழ்ச்சி நன்றாகவே நடந்தது.

ஓரங்கட்டப்பட்ட நம்பிக்கை

பாரதிய ஜனதாவில் இருக்கும் ஜெயந்த் சின்ஹாவும் இன்னும் சிலரும், மதச்சார்பற்றவர்கள் சுதந்திரச் சிந்தனையாளர்கள் அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க விரும்புகிறவர்கள் என்று நம்புகிறேன். ஆரவாரமான சொற்கள் நிரம்பிய பிரதமரின் அறிவிப்பு புதிய ஆயிரமாண்டு குறித்து நம்பிக்கையைத் தோற்றுவிக்கவில்லை, அச்சத்தையே ஏற்படுத்தியிருக்கிறது.

 

தொடர்புடைய கட்டுரைகள்

சர்வாதிகாரத்துக்கான சட்டங்கள்
எரியும் மணிப்பூர்
ராஜ தர்மம்: குஜராத்தும் மணிப்பூரும்
மோடியின் இன்னோர் அவமானகரத் தோல்வி

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

3






அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

பெருங்கவலைகள்வத்திராயிருப்பு2ஜிபி.சி.ஓ.எஸ்.ஓரங்கட்டப்படுதல்தொழிற்சங்கங்கள்கே.சந்துரு கட்டுரைமீன்கள்இருவேறு உலகம்அரசமைப்புச் சட்ட சீர்திருத்தக் குழு‘முதல்வரைப் போல’ அதிகாரம் செய்ய ஆசை!கார்கில் போர்துறை நிபுணர்கள்தூசுஜெர்மனி தேர்தல் முறைமாநகராட்சிஓம் சகோதர்யம் சர்வத்ரபாலசுப்ரமணியம் முத்துசாமி அருஞ்சொல் கட்டுரைகாந்திய சோஸலிஷம்பாரத் ராஷ்ட்ர சமிதிஇந்திய சாட்சியச் சட்டம்முற்பட்ட சாதிகள்சிறார் மீதான சைபர் குற்றங்கள்அரவிந்தன் கண்ணையன் பேட்டிஇளைஞர்கள்ஜோ பைடன்மாவோயிஸ்ட்மாங்கனித் திருவிழாஜேம்ஸ் பால்ட்வின்யதேச்சாதிகாரம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!