கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

கர்நாடகத் தேர்தலில் பேசப்படாதவை எவை?

ப.சிதம்பரம்
08 May 2023, 5:00 am
1

ர்நாடக மாநிலத்தை இந்தியா முழுவதும் அறியும் – ஏன் உலகமே அறியும் – பல்வேறு காரணங்களுக்காக. மிக முக்கியமான காரணம் மாநிலத்தின் தலைநகரமான பெங்களூரு, இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தலைநகரம் என்று எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

தொழிலும் மூலதனமும் தங்கள் நாட்டிலிருந்து வெளியேறியதால் - பெங்களூரு என்றாலே அமெரிக்காவுக்கு கிலி. தொழிலும் மூலதனமும் குவிந்ததால் இளம் பொறியாளர்களுக்கும் தொழில்முனைவோர்களுக்கும் பெங்களூரு விரும்பி வேலைக்குச் செல்லும் நகரமாகிவிட்டது. கர்நாடகத்தில் தனிமனித (நபர்வாரி) மொத்த உற்பத்தி மதிப்பானது இந்தியாவிலேயே நாலாவது இடத்தில் இருக்கிறது.

இரண்டாம்தர மாநிலம்

இந்த அம்சங்களும் பிறவும் சேர்ந்து கர்நாடகத்தை இந்தியாவின் முதல் ஐந்து மாநிலங்களில் ஒன்றாக்கி இருக்க வேண்டும். துரதிருஷ்டவசமாக அப்படி இல்லை. கல்வி, சுகாதாரத் துறைகளில் 2019 - 21 ஆண்டுகளில் மாநிலத்தின் நிலைமையைச் சற்றே பாருங்கள் (ஆதாரம்: தி இந்து, 24.04.2023).  

குறிகாட்டி (இன்டிகேட்டர்) தர வரிசை
பள்ளிப் படிப்புப் பெண்கள் 18 (30)
18 வயதுக்குள் மணம் முடித்த பெண்கள் (20-24 வயது) 19 (30)
சிசு மரண விகிதம் 13 (30)
வளர்ச்சி குன்றிய குழந்தைகள் 24 (30)
நலிவுற்ற குழந்தைகள் 23 (30)
எடை குறைந்த குழந்தைகள் 25 (30)
மருத்துவக் காப்பீடு செய்த குடும்பங்கள் 20 (30)
சுகாதார வசதி பெற்ற மக்கள் 17 (30)
மனிதவளக் குறியீடு 14 (30)

இவ்வாறு பல அம்சங்களில் கர்நாடம் 2015 - 16இல் சரிந்தது.

கர்நாடகத்தின் துயரங்கள் அத்துடன் முடிந்துவிடவில்லை. மாநில சட்டப்பேரவைக்கு நடந்த 15வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு (2018), நான்கு அரசுகள் மிகக் குறுகிய காலமே பதவி வகித்தன. ஓர் அரசு 6 நாள்கள், அடுத்த அரசு ஓராண்டு 64 நாள்கள், மற்றொரு அரசு 2 ஆண்டுகள் 2 நாள்கள், இப்போதைய அரசு 2021 ஜூலை 28 முதல் 2023 மே 10 வரையில். நிலையற்ற இந்த நாடகங்களுக்கு முக்கிய காரணம் பாரதிய ஜனதா.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

கர்நாடகத்தில் காங்கிரஸ் காற்று

யோகேந்திர யாதவ் 07 May 2023

நியாயப்படுத்த வாதமில்லை

நிலையற்ற ஆட்சிகளாலும் குறுகிய கால அரசுகளாலும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஏற்படக்கூடிய விளைவுகள் முன்கூட்டியே கூறப்படக்கூடியவையே. மக்களுடைய கண்ணோட்டத்தின்படி, இப்போதுள்ள அரசுதான் கர்நாடக வரலாற்றிலேயே ஊழலில் உச்சபட்சமானது. இதை மக்கள் ‘40 சதவீத சர்க்கார்’ (40% சர்க்காரா) என்று அழைக்கின்றனர். கர்நாடக ஒப்பந்ததாரர்கள் சங்கம் எழுதிய கடிதத்திலிருந்து இந்தப் பட்டம் கிடைத்துள்ளது. அரசு எடுக்கும் எந்த முடிவை நிறைவேற்றவும் ஒப்பந்ததாரர்களிடமிருந்து அதன் மதிப்பில் 40% கமிஷனாக கோரிப் பெறப்படுகிறது.

இது மட்டுமல்லாமல் பாஜக தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளில் பல நிறைவேற்றப்படாமலேயே இருக்கின்றன. வேளாண்மை, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, அடித்தளக் கட்டமைப்பு, பொருளாதாரம் தொடர்பானவை அந்த வாக்குறுதிகள். அத்துடன் கடந்த நான்கு ஆண்டுகளாக மாநிலத்தில் நிகழ்ந்த அரசியல் விவாதங்கள் அனைத்துமே ஹிஜாப் அணிவது, ஹலால் செய்த உணவை விற்பது, லவ் ஜிகாத், மதமாற்றத்தைத் தடை செய்யும் மசோதா – இவை போதாது என்று கர்நாடகத்தை கி.பி. 1782 முதல் 1799 வரையில் ஆண்ட திப்பு சுல்தான் பற்றி என்று பயனற்றவையாகவே இருந்தன.

இந்தத் தேர்தல் சமயத்திலாவது மக்களுடைய உண்மையான பிரச்சினைகள் குறித்து விவாதங்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. தேர்தல் தொடர்பாக மக்களுடைய கருத்துகளை அறியும் ஒவ்வொரு கணிப்பிலும் மக்கள் வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, அடித்தளக் கட்டமைப்பு போதாமை, ஊழல் ஆகியவை பற்றியே அதிகம் பேசினர். அரசுப் பணிகளில் 2,58,000 காலிப் பணியிடங்கள் உள்ளன. 2020 முதல் 1,258 நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. 13 அரசுத் துறை நிறுவனங்கள் செயல்படுவதே இல்லை. அரசு தொடர்பாக ஏராளமான ஊழல் புகார்கள் கூறப்படுகின்றன.

மதரீதியில் மக்களைத் திரட்ட முயற்சி

ஆனால், விவாதங்களோ வேறு திசைகளில் செல்கின்றன. ஊழல் செய்த முதல்வரைப் பற்றிப் பேசியது (லிங்காயத்து), அவர் சார்ந்த சமூகத்துக்கு எதிரானது என்று திசை திருப்பப்பட்டது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கர்நாடகத்தில் கலவரங்கள்தான் நடக்கும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் பிரச்சாரத்தின்போது எச்சரித்தார். ஒரு முஸ்லிமைக்கூட வேட்பாளராகக் களம் இறக்காத ஆளும் கட்சி சார்பில் பேசிய மூத்த தலைவர், எங்களுக்கு முஸ்லிம்களுடைய வாக்குகள் தேவையே இல்லை என்று அறிவித்தார்.

மக்களிடையே வெறுப்பைத் தூண்டும் பஜ்ரங் தளம், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா போன்ற அமைப்புகள் மீது தடை உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதியை, பஜ்ரங் பலிகள் (ஆஞ்சநேய பக்தர்கள்) மீது தடை விதிக்கப்படும் என்று பொருள்கொள்ளும் வகையில் திரித்துவிட்டார் பிரதமர்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

விட்டுக்கொடுத்து வெற்றியைப் பெறுவோம்

ப.சிதம்பரம் 01 May 2023

இவற்றையெல்லாம்விட அதிர்ச்சி தரும் வகையில் – ‘கர்நாடகத்தை மோடியிடம் ஒப்படைத்துவிடுங்கள்’ என்று வேண்டுகோள் விடுத்தார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா. இந்தியா ஒரு கூட்டாட்சி நாடுதான் என்றாலும் பிரதமரால் எப்படி மாநிலத்தை, நகராட்சியை, பஞ்சாயத்துகளை ஒரே சமயத்தில் நிர்வகிக்க முடியும்? பாஜக தன்னுடைய தேர்தல் அறிக்கையில், அனைவருக்கும் பொது சிவில் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டுவரப்படும் என்று கூறியிருக்கிறது. இவ்விரு பிரச்சினைகளும் வடக்கு, வடகிழக்கு மாநிலங்களில் மக்களைப் பிளவுபடுத்தி இருக்கிறது.

காங்கிரஸ் கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கையில் ஐந்து கூடுதல் உத்தரவாதங்களை அளித்துள்ளது, அதற்குக் கூடுதலாக ஆண்டுதோறும் ரூ.30,000 கோடி முதல் ரூ.35,000 கோடி வரைதான் செலவாகும். இதற்குப் போட்டியாக பாஜக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு மூன்று சமையல் கேஸ் சிலிண்டர்கள் விலையில்லாமல் தரப்படும் (மூன்று இந்து பண்டிகைகளை ஒட்டி) என்று அறிவித்துள்ளது. ஏழைக் குடும்பங்களுக்கு அன்றாடம் அரை லிட்டர் பால் இலவசம், அரிசி, பருப்பு, சாம்பார், தயிர், ஆறு கோப்பை காய்கறியுடன் குறைந்த விலையில் ஏழைகளுக்கு கேன்டீன்கள் மூலம் சாப்பாடு வழங்கப்படும் என்றும் கூறியிருக்கிறது. இப்படி அறிவித்துவிட்டு, மானியக் கலாச்சாரத்தைக் கண்டித்திருக்கிறார் பிரதமர் மோடி.

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களான பிரதமரும் உள்துறை அமைச்சரும் பொம்மை தலைமையிலான கர்நாடக பாஜக அரசின் ஆட்சிச் சிறப்புகள் குறித்து எதையும் பேசாமலேயே மவுனம் சாதிக்கிறார்கள். மவுனம் பொன் போன்றது என்பார்கள், இந்தக் கள்ள மவுனம் அப்படிப்பட்டதல்ல. நாளாக நாளாக அவர்களுடைய பிரச்சாரம் அர்த்தமில்லாத வெறுப்பின் குரலாக ஒலிக்கிறது. பிரதமர் மோடி மீதான வசவுகளைத் தொகுத்து எண்ணி, அதைப் பேசி அனுதாபம் தேடப் பார்க்கிறார்கள்.

சிவன், அனுமான், அனுமான் பக்தர்கள் எல்லாம் பிரச்சாரத்தில் பேசுபொருளாகிவிட்டனர். கர்நாடக பேரவைத் தேர்தல் களத்தைப் பார்த்தால் மகாபாரத காலத்துக்கே வந்துவிட்டதைப் போல இருக்கிறது. ஹஸ்தினாபுரத்தை ஆள்கிறவர்களுடன், ஏற்கெனவே ஆண்டவர்கள் போருக்குச் செல்வதைப் போலத் தோன்றுகிறது. நாட்டை இழந்தவர்கள் அந்த புராணக் கதையில் போருக்குப் பிறகு நாட்டை மீண்டும் பெற்றார்கள், அந்த வரலாறு திரும்புமா?

 

தொடர்புடைய கட்டுரைகள்

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி: ‘ஈ-தினா’ கணிப்பு
விட்டுக்கொடுத்து வெற்றியைப் பெறுவோம்
கர்நாடகம்: இந்துத்துவத்தின் தென்னக ஆய்வுக் கூடம்
கர்நாடகத்தில் காங்கிரஸ் காற்று

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

4






பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Rajarajacholan   11 months ago

இந்துத்துவத்தைத் தாண்டி பா.ச.கவால் வேறு எதைச் சொல்லியும் ஓட்டுக் கேட்கவோ, தேர்தலை எதிர்கொள்ளவோ முடியாது என்பதும் உண்மை. இந்த உண்மையைப் போலவே இன்னொரு உண்மையையும் நாம் ஏற்றாக வேண்டும். பத்தாண்டுகளுக்கு முன்பை விட தமிழகத்தில் பா.ச.க இந்து உணர்வுகளைத் தூண்டி வளர்ந்திருக்கிறது. முன்பெல்லாம் பா.ச.க கொடிபறக்காத ஊராட்சிகளிலும் கூட இப்பொழுதெல்லாம் கொடிகள் பறக்கின்றன. பா.ச.க வின் பொதுக்கூட்டங்களை நாம் நக்கல் செய்துகொண்டிருக்கிறோம். உண்மை அதுவல்ல ஆட்களோ, கூட்டங்களோ ஒரு காலத்தில் எள் அளவும் நடத்த முடியாதவர்களாக இருந்தவர்கள் அவர்கள் இன்று அப்படியல்ல ஊராட்சி அளவில் ஆட்களோ கூட்டங்களோ இல்லை என்பதைத் தாண்டி கூட்டம் நடத்த தயாராகிவிட்டார்கள் என்ற உண்மையை நாம் உணராமல் நோட்டா கட்சி என்கிறோம். முன்பு வேட்பாளர்களே இல்லாமல் இருந்தவர்கள் தொகுதிகளில் இன்று போட்டிப்போட வேட்பாளர்கள் தயாராகிவிட்டார்கள் என்பது எவ்வளவு பெரிய வெற்றி. ஒன்றிலிருந்து தானே நூறு . அவர்கள் நூறு என்ற எண்ணை நோக்கிப் பயணப்பட்டுவிட்டார்கள் பா.ச.க ஆளாத மாநிலத்திலே இப்படி ஒரு வளர்ச்சயை அது எட்டியிருக்கிறது எனில் ஆளும். மாநிலங்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதை சமநோக்குள்ளவர்கள் சிந்தித்துப் பார்க்கும் காலமாக இக்காலம் அமைய வேண்டாமா? நாம் என்ன செய்கிறோம் தனிதனியாக சனாதனத்தை எதிர்க்கிறோம் என்று மூலைக்கு ஒருவராகக் கம்பு சுற்றிக்கொண்டிருக்கிறோம். அநீதி்தனித்து ஆர்ப்பரிக்கிறது. அறம் தனிதனியாகக் கிடந்து வலிமை இழக்கிறது. ஒன்று பட்ட இந்தியாவா? ஒன்றுபட்ட பாரதமா?( பாரதமாதகி சேவா)என்பதை வலிமைக இந்தியா முழுமைக்கும் பேசப்போகும் தேர்தலாக அமையும் கருநாடகத் தேர்தல்... காத்திருப்போம்.... மீண.டும் அநீதி எந்த வடிவிலும் நம்மை ஆட்கொள்ளக்கூடாது என்ற நம்பிக்கையில். மகா.இராஜராஜசோழன் சீர்காழி.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

வரலாற்றாய்வாளர்கல்லில் அடங்கா அழகுமலம் அள்ளும் வேலைலவ் யூ லாலுரோஹித் குமார் கட்டுரைஉக்ரைனின் பொருளாதாரம்சட்டமன்ற உறுப்பினர்நிர்வாணம்காஷ்மீர் விவகாரம்சருமநலம்தனியார் துறைஇலவச மின்சார இணைப்புகள்நவீன காலம்திரைப்படம்ஆட்சி நிர்வாகம்ராஜகோபாலசாமிஅண்ணன் பெயர்கேரளம்தகுதித்தேர்வுநுழைவுத் தேர்வுகள்சாதிப் பிரிவினைபச்சோந்திமூன்று தரப்புகள்பிராமி எழுத்துபாலு மகேந்திரா சமஸ்ஷிழ் சிங் பாடல்தமிழ் ஒன்றே போதும்நல்வாழ்வு வாரியப் பதிவுரெங்கையா முருகன்தூக்குத்தண்டனை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!