கட்டுரை, அரசியல், பொருளாதாரம், கூட்டாட்சி 7 நிமிட வாசிப்பு

குஜராத்: பின்பற்றக் கூடாத முன்மாதிரி

ப.சிதம்பரம்
21 Nov 2022, 5:00 am
0

பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்துக்கு அக்டோபர் மாதம் சில முறை சென்று வந்தார், நவம்பர் மாதத்திலும் மேலும் பல முறை சென்று வருவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது – காரணம் அந்த மாநில சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1 – 5 ஆகிய இரு நாள்களில் பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேர்தல் ஆணையம் கெடுபிடியில்லாமல் அனுமதித்த நிலையில், ஏராளமான திட்டங்களை அங்கு தொடங்கிவைத்தார். அவையெல்லாம் ‘அரசு நிகழ்ச்சி’களாகவே அறிவிக்கப்பட்டாலும் அங்கு கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளிலோ, பிரதமர் உரைகளின் உள்ளடக்கத்திலோ ‘அரசுபூர்வமாக’ அதிகம் இருக்கவில்லை.

மோடியுடைய உரைகள் அனைத்திலும் (அது குஜராத்தாக இருந்தாலும், வெளிநாடுகளிலாக இருந்தாலும்) மீண்டும் மீண்டும் ஒரு கருத்து மட்டுமே வலியுறுத்தப்படுகிறது; ‘நவீன, மறுமலர்ச்சி கண்ட இந்தியாவின் வரலாறு 2014 முதல்தான் தொடங்குகிறது’ என்பதே அது. அதே கருத்தின்படி, ‘நவீன, மறுமலர்ச்சி பெற்ற குஜராத்தின் வரலாறு 2001 முதல்தான் தொடங்குகிறது.’ அதில் ஏதேனும் கர்ண கடூரமாக ஒலித்தால் (இந்தியாவுக்கும் முன்னதாக, குஜராத்?), அந்தப் புதிருக்கு விடை காணும் வேலையை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

பிரதமர் மோடியின் கருத்துப்படி, ‘இந்தியாவுக்கே முன்மாதிரி’யாக திகழும் மாநிலம் குஜராத். ‘உலகுக்கே முன்மாதிரி இந்தியா’ என்று கூறுவதற்கு இன்னும் சில காலம் பிடிக்கும். பிரதமருடைய கூற்றைக் கேட்ட குஜராத் மக்கள், டிசம்பர் மாதத் தொடக்கத்தில் வாக்களிக்கப் போகிறார்கள். உலக மக்களுக்கோ அப்படி வாக்களிக்கும் வாய்ப்பு, ‘துரதிருஷ்டவசமாக’ வாய்க்கவில்லை. அது அவர்களுடைய தலையெழுத்து என்றே நானும் வருத்தப்படுகிறேன்!

பொறாமைப்பட ஏதுமில்லை

குஜராத் எப்படிப்பட்ட ‘முன்மாதிரி’ என்று சற்று ஆராய்வோம். உண்மையிலேயே ‘தன்னிகரில்லா’ சில அம்சங்களைக் குஜராத்தில் காண்கிறேன்.

  • குஜராத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான அரசுதான் தொடர்ந்து ஆட்சியில் இருக்கிறது. ஆனால், 2016க்குப் பிறகு மூன்று பேர் முதல்வர்களாகிவிட்டார்கள். அந்த மூவரில் அதிக காலம் முல்வராக இருந்தவர் விஜய் ரூபானி – 2016 முதல் 2021 வரையில் இருந்திருக்கிறார். அவர் தன்னுடைய ஆட்சியின் சிறப்பால் ஏற்படுத்திய, காலத்தால் அழிக்க முடியாத சாதனை காரணமாக, முதல்வர் பதவியிலிருந்து -அனைத்து அமைச்சரவை சகாக்களுடன் – அகற்றப்பட்டார். நவீன, மறுமலர்ச்சி கண்ட குஜராத்தின் வளர்ச்சிக்காக வகுக்கப்பட்ட உத்தியில் ஒன்றுதான் ‘சுழல் நாற்காலி’ முதல்வர்கள்! (கர்நாடகம், உத்தராகண்டிலும் இதற்கு முன்மாதிரிகள் உண்டு).
  • குஜராத் மாதிரியின் இன்னொரு சிறப்பான அம்சம் ‘இரட்டை இன்ஜின்’ அரசாங்கம். பிரதமரும் முதல்வரும்தான் இரட்டை என்ஜின்கள் என்றே நீங்கள் நினைப்பீர்கள்; உங்களுடைய நினைப்பு தவறு. இங்கே இரட்டை இன்ஜின்கள் ‘பிரதமரும்’ ‘ஒன்றிய உள்துறை அமைச்சரும்’தான்! (மோடி-ஷா). இவ்விரு இரட்டை என்ஜின்களைச் சூடேற்றாமல் குஜராத்தில் அணுவும் அசையாது. பிற மாநிலங்களும் குஜராத்தைப் பின்பற்றும்பட்சத்தில் நாம் மாநில அரசுகளையே ஒழித்துக்கட்டிவிடலாம் – அவ்வளவு ஏன், மாநிலங்களையே இல்லாமலாக்கிவிடலாம்!  ‘ஒரே இந்தியா - ஒரே அரசாங்கம்’.

வீழ்ச்சியில் பெருமிதம்

குஜராத் மாதிரியின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் எதுவென்றால், குறைந்துகொண்டே வரும் அதன் பொருளாதார வளர்ச்சி வீதம், அதற்குப் பொருத்தமாக உயர்ந்துகொண்டே போகும் குஜராத்தியர்களின் பெருமிதம்!

குஜராத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதம் (ஜிடிபி) நான்கு ஆண்டுகளில் வருமாறு: 2017-18: 10.7%, 2018-29: 8.9%, 2019-20: 7.3%, 2020-21: மைனஸ் (-) 1.9%. நீங்கள் கேட்கலாம், 2017-18 முதல் தேசிய அளவிலும் பொருளாதார வளர்ச்சிவீதம் சரிந்துதான் வருகிறதா என்று. பதில் – ஆமாம், அப்படித்தான். அதற்குக் காரணம் முழு தேசமே குஜராத்தைப் பின்பற்றுவதுதான்! பெருந்தொற்றுக் காலத்துக்குப் பிறகு குஜராத்தின் மாநில ஜிடிபி 2021-22இல் துள்ளிக் குதித்தது என்றால் அனைத்திந்திய ஜிடிபியும் அதையே பின்பற்றியது. குஜராத் நேற்று செய்வதை, இந்தியா நாளை செய்யும்.

இந்தியா இனி கடைப்பிடிக்கப்போகும் அடுத்த லட்சியம், எதற்கும் ‘மன்னிப்பு கோருவதும் கிடையாது – பதவி விலகுவதும் கிடையாது’ என்பதுதான். குஜராத்தின் மோர்பி நகரில் தொங்குபாலம் அறுந்து விழுந்து 53 குழந்தைகள் உள்பட 135 பேர் அநியாயமாக உயிரிழந்தனர். இவ்வளவு பெரிய உயிரிழப்புகள் நடந்தும், ஊடகங்களைச் சந்தித்து அவர்களுடைய கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் கடமையை பிரதமர் நிறைவேற்றவில்லை.

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

மோர்பி: யாரும் மன்னிப்பு கேட்கவில்லை

ப.சிதம்பரம் 07 Nov 2022

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பாலத்தைப் பழுதுபார்த்து, பராமரிப்பது தொடர்பாக வெறும் ஒன்றேகால் பக்க ஒப்பந்தம் மட்டுமே செய்துகொள்ளப்பட்டிருக்கிறது என்று உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டுகிறது; இதை நன்றாகப் பராமரிப்போம் என்ற அக்கறை வெளிக்காட்டப்படவில்லை; பாலத்தைப் பழுதுபார்க்கவும் பராமரிக்கவும் பொதுவான ஏல அறிவிப்பு மூலம் ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்படவில்லை; பாலத்தைப் பழுதுபார்க்கவும் பராமரிக்கவும் முன்வந்த நிறுவனத்துக்கு அதில் முன் அனுபவமே இல்லை; அந்த வேலைக்கு ஏலம் எடுக்க போட்டியே நடக்கவில்லை; பாலத்தை எப்படியெல்லாம் பராமரிக்க வேண்டும் என்று எந்தவித முன் நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை; பாலத்துக்குப் புதிதாக வண்ணம் மட்டுமே அடிக்கப்பட்ட நிலையில், அது பயன்படுத்தும் தரத்தில் இருக்கிறது என்று யாரும் தகுதிச் சான்றிதழும் வழங்கவில்லை; இவ்வளவுக்குப் பிறகும் அந்தப் பாலம் மக்கள் பயன்படுத்த திறந்துவிடப்பட்டது. இப்படி எது நடந்தாலும் ‘வருந்தி மன்னிப்பு கேட்பதுமில்லை’, ‘யாரும் பதவி விலகுவதுமில்லை’ என்ற கொள்கையில் குஜராத் நம்பிக்கை கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் இந்தியாவும் இதே கொள்கையைப் பின்பற்றக்கூடும்.

பெருமை மிக்க சிங்கங்களைப் போல (கிர் காடுகளில் வாழும் சிங்கங்களாக இருப்பது நல்லது) எண்ணிக்கைகளில்தான் பெருமை அதிகம். இந்த எண்கள்தான் குஜராத்தியர்களின் பெருமையைப் பெரிதாக்குகிறது. உதாரணத்துக்கு, குஜராத் மாநிலத்தில் தொழில் துறையில் முதலீடு செய்வதாக ஒப்புக்கொள்ளப்பட்ட தொகையையும், உண்மையில் முதலீடு செய்யப்பட்ட தொகையையும் ஒப்பிடும் அட்டவணையைப் பார்ப்போம்: (ரூபாய் கோடிகளில்).

ஆண்டு –  ஒப்புக்கொள்ளப்பட்டது –  உண்மை முதலீடு

2003                -  66,068                                - 30,746

2005                - 1,06,160                                 - 37,939

2007                - 4,65,309                                - 1,07,897

2009                - 12,39,562                                - 1,04,590

2011                 - 20,83,047                                - 29,813

இப்படியே ஒப்புக்கொள்ளப்பட்டதற்கும் உண்மையில் பெறப்படுவதற்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி இருந்தால் இந்தியாவின் பெருமையும் பெரிதாகும்.

மகளிர், இளைஞர்கள், குழந்தைகள்

  • பெண்களை எப்படி நடத்தக் கூடாது என்பதற்கு குஜராத் நல்ல ‘முன்மாதிரி’. பெண் குழந்தைகளின் நிலையை முதலில் பார்ப்போம். குஜராத்தில் 1,000 சிறுவர்களுக்கு 919 சிறுமிகள்தான் இருக்கின்றனர். அனைத்திந்திய சராசரி 943. அதாவது, பெண் குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கைக் குறைவு. குஜராத்தில் வேலைக்குச் செல்லும் தொழிலாளர் எண்ணிக்கை 41.0%, அதில் மகளிரின் பங்கேற்பு 23.4%. எஞ்சிய பெண்கள் எங்கே? அவர்கள் அனைவரும் உயிரோடு இருக்கும்பட்சத்தில் 76% மகளிர் வேலைக்காக வீட்டைவிட்டுச் செல்வதில்லை.
  • குஜராத் மாதிரியில் இளைஞர்களை ‘வேலைக்குப் போய் சம்பாதி’ என்று தொல்லைப்படுத்துவதே இல்லை. 20 முதல் 24 வயது வரையிலான இளைஞர்களில் 12.49% பேர் வேலை கிடைக்காமல் வீட்டிலேயே இருக்கின்றனர். பொதுத் தேர்தல் வருகிறதல்லவா - ஓய்வளிக்கப்பட்டிருக்கின்றனர்!
  • குஜராத் மாதிரியில், குழந்தைகளைப் பற்றியும் அதிகம் கவலைப்படுவதில்லை. அவர்களுடைய ஊட்டச்சத்து, சுகாதாரக் குறியீடுகள் இதைத் தெரிவிக்கின்றன. குஜராத் சிறார்களில் 39% வயதுக்கேற்ற உயரமும் எடையும் இல்லாமல் வளர்ச்சி குன்றியிருக்கின்றனர். 39.7% பேர் உயரத்துக்கேற்ற எடை இல்லாமல் இளைத்துள்ளனர். நாட்டின் மொத்தமுள்ள 30 மாநிலங்களில் குஜராத் இந்த அம்சத்தில், 26 முதல் 29 வரையிலான இடங்களிலேயே இருக்கிறது.
  • குஜராத் மாதிரியானது ‘இந்தியாவில் வாழும் அனைவருமே இந்துக்களே’ என்ற ஆர்எஸ்எஸ் கொள்கையை அப்படியே கடைப்பிடிக்கிறது. மாநில மக்கள்தொகையில் 9.67% பேர் முஸ்லிம்கள் என்றாலும் அவர்களும் இந்துக்களே! எனவே, 1995 முதல் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் எந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலிலும் பாஜக ஒரு முஸ்லிமைக்கூட வேட்பாளராக நிறுத்துவதே இல்லை.

இப்படிப்பட்ட குஜராத் மாதிரிதான் பிற மாநிலங்களுக்கும் பிற நாடுகளுக்கும், பின்பற்றத்தக்க உதாரணமாக மேடைகளில் பேசப்படுகிறது. குஜராத் மாதிரிக்கு அளிக்கப்படும் வாக்கு, இந்த லட்சியங்களையெல்லாம் பிற இடங்களிலும் நிறைவேற வழிவகுக்கும். ஆமென்.

 

தொடர்புடைய கட்டுரைகள்

மோர்பி: யாரும் மன்னிப்பு கேட்கவில்லை

குஜராத்திகள் இன்றும் காந்தியைக் கைவிட்டுவிட்டார்களா?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

5

1





திருக்குறள் உரைசிங்கப்பூர் புதிய சட்டம் அருஞ்சொல்அபயாபொருந்து வேதிவினைஆசிரியர்களும் கையூட்டும்கிழக்கு சட்டமன்றத் தொகுதிகுடும்ப வருமானம்ஷுபாங்கி கப்ரே கட்டுரைஅறையை ஆக்கிரமித்துள்ளது சீன டிராகன்!அ.முத்துலிங்கம்முதலீடுபோப்பாண்டவர்சமஸ்தானங்கள்க்ரூடாயில்அறிவியல் துறைதொழில்நுட்பத் துறைஆசிரியர் தலையங்கம்பேரறிவாளன்உபிந்தர் சிங்dr ganesanகொள்கைகள்உள்நாட்டுப் போர்பதிப்பாளர்சுந்தர் சருக்கைமுற்காலச் சேரர்கள்writersamasபி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்ஜேம்ஸ் பால்ட்வின்வனப்பகுதிமேற்கு வங்கம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!