கட்டுரை, அரசியல், நிர்வாகம் 7 நிமிட வாசிப்பு

மோர்பி: யாரும் மன்னிப்பு கேட்கவில்லை

ப.சிதம்பரம்
07 Nov 2022, 5:00 am
0

மேற்கு வங்கத் தலைநகரம் கொல்கத்தாவின் விவேகானந்தர் சாலையில் கட்டப்பட்டுவந்த மேம்பாலம் 2016 மார்ச் 31இல் இடிந்து விழுந்தது. அதில் 27 பேர் இறந்தனர், அவர்களில் பெரும்பாலானவர்கள் அந்தப் பாலத்தைக் கட்டிக்கொண்டிருந்த கட்டுமானத் தொழிலாளர்கள்.

அந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட உடனேயே பிரதமர் நரேந்திர மோடி அதிர்ச்சியையும், திகைப்பையும், பெரும் துயரத்தையும் வெளிப்படுத்தினார்.

மோடி அப்போது என்ன சொன்னார் என்பதை நினைவுகூர்வோம்: “மேம்பாலம் இடிந்து விழுந்துவிட்டது. இது கடவுளின் செயலால் அல்ல, மோசடியால் – ஆள்வோரின் ஊழலால் நிகழ்ந்தது. இந்த மாநிலத்தை ஆள்வது எப்படிப்பட்ட அரசு என்பதை மக்களுக்குப் புரிய வைக்கும் வகையில் வேண்டுமானால் இது கடவுளின் செயலாக இருக்கலாம். இன்றைக்குப் பாலம் இடிந்து விழுந்தது – நாளை முழு மாநிலமே சேதம் அடையலாம் என்ற கருத்தை கடவுள் இதன் மூலம் உணர்த்தியிருக்கிறார். இந்த மாநிலத்தை மேற்கொண்டு அழிவிலிருந்து காக்க வேண்டும் என்பதற்காக இந்த செய்தியைக் கடவுள் விடுத்திருக்கிறார்!” 

இந்த ஆண்டு அக்டோபர் 26ஆம் நாள் குஜராத் மாநிலத்தின் மோர்பி நகரில், 143 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் – மச்சு ஆற்றின் மீது கட்டப்பட்டது - பழுதுபார்ப்பு மற்றும் புதுப்பிப்புப் பணிகளுக்காக ஏழு மாதங்களாக மூடியிருந்தது, பொதுமக்கள் சிற்றுலா வந்து பார்த்து ரசிப்பதற்காகத் திறந்து வைக்கப்பட்டது. பெரிய நகரம் ஒன்றில் ஆற்றின் குறுக்கே இப்படி தொங்கு பாலம் கட்டப்படுவது மிகவும் அபூர்வமானது. தூண்களைக் கட்ட முடியாத மலைப்பகுதிகளில்தான் ஆறுகள், ஓடைகள், பள்ளத்தாக்குகள் மீது இப்படி தொங்கு பாலங்கள் அமைக்கப்படும்.

எனவே, நகருக்குள் இருந்த அந்தத் தொங்கு பாலம் உள்ளூர்க்காரர்களுக்கும் வெளியூர்வாசிகளுக்கும் ஈர்ப்பான இடம். குஜராத்தியரின் புத்தாண்டு, தீபாவளிப் பண்டிகைகள் காரணமாக ஏராளமானோர் அந்தப் பாலத்தில் நடந்து ஆற்றின் அழகை ரசிப்பதற்காக வந்தனர். அக்டோபர் 30 ஞாயிற்றுக்கிழமை, ஏராளமானோர் பாலத்தின் மீது ஒரே சமயத்தில் திரண்டதால் தாங்கு கம்பிகள் பட்டென்று அறுந்து விழுந்தன. இதனால் 53 குழந்தைகள் உள்பட 135க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

உண்மைகளும் புதைக்கப்படுகின்றன

ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாள்களிலும் அனைவருடைய கவனமும் ஆற்றில் விழுந்தவர்களை மீட்பதிலும் காப்பதிலுமே இருந்தது. பலர் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டனர். நூறு முஸ்லிம் இளைஞர்கள் உள்பட ஏராளமான உள்ளூர்வாசிகள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அந்த முஸ்லிம் இளைஞர்கள் அருகிலேயே உள்ள மக்ராணி வாஸ் என்ற பகுதியில் வசிப்பவர்கள். திங்கள்கிழமைக்குப் பிறகு யாரும் உயிருடன் மீட்கப்படவில்லை, சடலங்கள்தான் கிடைத்தன.

ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாள்களிலும் யாரும் விபத்து குறித்து எந்தக் கேள்வியையும் எழுப்பவில்லை, அது சரியானதும்கூட. ஆனால், அறுந்து விழுந்த தொங்கு பாலத்தோடு கூடவே கேள்விகளையும் ஆற்றில் புதைத்துவிட முடியாது.

உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிப்பட வெளிப்பட, கேள்விகளும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. பல கேள்விகள் பொருள்பொதிந்தவை, பதில் சொல்லப்பட வேண்டியவை. அப்படி கேட்கப்படக்கூடிய கேள்விகளும் அதற்கு ஆளும் தரப்பிலிருந்து ‘வரக்கூடிய’ பதில்கள் அடைப்புக் குறிக்குள்ளும் தரப்படுகின்றன.

  1. பாலத்தைப் பழுதுபார்க்கவும் புதுப்பிக்கவும் ஒப்பந்ததாரரை அடையாளம் காண ஒப்பந்தப்புள்ளி (டெண்டர்) கோரப்பட்டதா? (பதில் - இல்லை).
  2. ஒப்பந்ததாரரை நியமிக்க யார் காரணம் அல்லது பொறுப்பு? (மோர்பி நகராட்சி மன்றம் – மாநில அரசின் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் ஒப்புதலுடன்).
  3. பாலத்தின் வலிமை தொடர்பாக பொறியியல் அறிக்கையும், அதை வலுப்படுத்துவதற்கான கட்டுமான நடவடிக்கைகள் தொடர்பான செயல்திட்டமும் பழுதுபார்ப்பு – புதுப்பிப்புப் பணிக்காக ஒப்பந்ததாரரிடமிருந்து பெறப்பட்டதா? (இல்லை. மாநில அரசோ, மோர்பி நகராட்சி மன்றமோ, காவல் துறையோ அப்படிப்பட்ட அறிக்கையோ திட்டங்களோ இருப்பதாகத் தெரிவிக்கவில்லை). ஒப்பந்ததாரர் - கடிகாரம் தயாரிப்பவர்!
  4. பாலத்தைப் பழுதுபார்க்கும் அளவுக்குத் தொழில்ரீதியாக ஒப்பந்ததாரர் தகுதியானவரா? (இல்லை. ‘ஒரேவா’ என்கிற பெயரில் கடிகாரங்களைத் தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளர். பாலங்களைப் பழுதுபார்ப்பதற்கான தொழில்நுட்பத் தகுதிகளோ அனுபவமோ இல்லாதவர். அந்த வேலையை ‘தேவ் பிரகாஷ் ஃபேப்ரிகேஷன்ஸ்’ என்ற நிறுவனத்துக்கு அவர் ‘துணை ஒப்பந்தப் பணியாக’ ஒப்படைத்துவிட்டார்.) மோர்பி நகரம் கடிகாரங்கள் தயாரிப்புக்காகப் புகழ் பெற்றது.
  5. பழுதுபார்ப்பு, புதுப்பிப்புப் பணிகள் உண்மையில் நடந்தனவா? (இல்லை. தொங்கு பாலத்தைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்த இரும்புக் கம்பிகளில் ஏறியிருந்த துருவைச் சுரண்டிவிட்டு, அதற்கு வர்ணம் மட்டுமே பூசியுள்ளனர். பாலத்தின் தரைப்பகுதியைப் பெயர்த்தெடுத்து அலுமினியத் தகடுகளைப் பதித்துள்ளனர். விபத்து குறித்து விசாரணை நடத்தும் முகமை, உள்ளூர் நீதிமன்றத்தில் அளித்த அறிக்கை இதைத் தெரிவிக்கிறது.
  6. பொதுமக்களுடைய பயன்பாட்டுக்காக பாலத்தைத் திறப்பதற்கு ஒப்பந்ததாரர் உரிய அதிகாரிகளிடம் அனுமதி வாங்கினாரா? (இல்லை. பாலத்தை மீண்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டதாகத் தங்களுக்குத் தகவலே கிடையாது என்று நகராட்சி நிர்வாகமும் காவல் துறையும் மறுக்கின்றன. பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொண்டதாகக் கூறும் ஒப்பந்த நிறுவனம், தகுதிச் சான்றிதழ் எதையும் யாரிடமிருந்தும் பெறவில்லை).
  7. இந்த விவகாரத்தில் என்னதான் ஒப்பந்தம்? (ஒரேவா நிறுவனம் பழுதுபார்ப்பு – புதுப்பிப்புச் செலவுகளை ஏற்றுக்கொள்ளும், அடுத்த 15 ஆண்டுகளுக்குப் பாலத்தைப் பார்வையிடவரும் மக்களிடம் கட்டணம் வசூலிக்கும் உரிமையைப் பதிலுக்குப் பெற்றுக்கொள்ளும். இதில் மோர்பி நகராட்சியோ மாநில அரசோ தலையிடாது).

கடவுளும் அவருடைய செய்தியும்

கொல்கத்தா மாநகர மேம்பால விபத்திலும் மோர்பி தொங்கு பால விபத்திலும் பல அம்சங்கள் ஒன்றாக இருக்கின்றன. கொல்கத்தா விபத்து தொடர்பாக 16 பேர் கைதுசெய்யப்பட்டனர், கொலை அல்லாத – உயிரிழப்புக்கு மட்டும் காரணமான, குற்றமாக பதிவுசெய்யப்பட்டு பிறகு அனைவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். கைதானவர்களில் பலர் ஒப்பந்ததாரர், துணை ஒப்பந்ததாரரின் பிரதிநிதிகள் மட்டுமே. அந்த வழக்கில் 3,500 பக்கத்துக்கு குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டது, மேலும் பல நூறு பக்கங்கள் சேர்க்கப்பட திட்டமிடப்பட்டது. மேம்பாலக் கட்டுமானம் தொடர்பான வரைபடங்களுக்கு சுயாதீனமான எந்த அமைப்பும் ஒப்புதல் தரவில்லை என்று அப்போது கூறப்பட்டது.

கட்டுமானத்தில் பயன்படுத்திய உருக்கு, தரமானதாக இல்லை என்று தெரிந்தும் பயன்படுத்தப்பட்டது. கட்டுமானத்தில் பயன்படுத்திய நட்டுகள், போல்ட்டுகள், மணல் என்று அனைத்துமே தரக்குறைவானவை என்றும் தெரியவந்தது. ஊழல் காரணமாகத்தான், தரக்குறைவான பாலம் இடிந்து விழுந்தது என்று ஊடகங்களில் ஒரு பகுதி குற்றம்சாட்டியது.

பாலம் எப்படிக் கட்டப்படுகிறது என்று யாரும் மேற்பார்வையிடவும் இல்லை. இந்த அளவுக்குப் பாலம் தொடர்பாக கடுமையாக உழைத்து தகவல்களைத் திரட்டியிருந்தும் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகும் வழக்கு வேகமெடுக்கவில்லை. மேலே கூறிய குற்றச்சாட்டுகளில் பல - ஒரு சில மாற்றங்களுடன் - இந்த தொங்குபால விவகாரத்துக்கும் பொருந்துகின்றன.

மோர்பி தொங்கு பால விபத்துக்குப் பிறகு, அதில் நேரடியாகவும் முக்கியமாகவும் தொடர்பில்லாத சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஒப்பந்த நிறுவனம், துணை ஒப்பந்த நிறுவனம் ஆகியவற்றின் உரிமையாளர்கள் யாருமே கைதாகவில்லை. வழக்கம்போல பிரதமர் இந்த விபத்து குறித்தும் கேள்விப்பட்டதும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்தார். மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுகிறவர்களைப் பார்த்து ஆறுதல் கூறினார். (பிரதமர் வருகிறார் என்பதற்காக அந்த மருத்துவமனைக்கு இரவோடு இரவாக புதிய வர்ணம் பூசியிருக்கின்றனர்).

உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கும் காயம் அடைந்தவர்களுக்கும் வழக்கம்போல ஒன்றிய, மாநில அரசுகள் இழப்பீட்டுத் தொகைகளை அறிவித்துள்ளன. விபத்து குறித்து சுதந்திரமான, முழுமையான விசாரணை நடைபெறும் என்றும் ‘வழக்கம்போலவே’ அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்துக்குப் பொறுப்பேற்று யார் பதவி விலகுவது என்பதிலும் ‘வழக்கம்போலவே’ மௌனம் நிலவுகிறது.

இந்திய அரசியல் நிர்வாக அமைப்பில் எந்த ஒரு தவறுக்கும், துயரகரமான செயலுக்கும், தோல்விக்கும் யார் பொறுப்பேற்பது என்ற கேள்விக்குப் பதிலே கிடையாது. விபத்துக்குப் பிறகு யாருமே அரசின் சார்பிலோ, பொதுவாகவோ மக்களிடமோ, பாதிக்கப்பட்டவர்களிடமோ மன்னிப்பே கோரவில்லை. யாரும் தார்மிகமாக பொறுப்பேற்றுக்கூட பதவி விலக முன்வரவில்லை. அரசின் விமர்சகர்கள் கூறுவதைப்போல இந்த விபத்துக்கு யாரையும் பொறுப்பாக்குவதோ, அவருக்குத் தண்டனை வழங்குவதுகூட நிர்வாகத் தரப்பில் நடக்காது.

மோடியின் வார்த்தையில் கூறுவதென்றால், இந்த விபத்தை கடவுள் உண்மையிலேயே பார்த்துக்கொண்டிருக்கிறார் என்றால் – குஜராத் மக்களுக்கு அவர் விடுக்கும் செய்தி என்னவாக இருக்கும்? 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

3

1





பாகிஸ்தான் அரசமைப்பை அறிவீர்களா?பாஜக தேர்தல் அறிக்கைபோட்டி தொடரட்டும்மேதைராஜன் குறை பி.ஏ.கிருஷ்ணன்கலைக் கல்லூரிவான் கடிகாரம்ஜெய்பீம்ஆன்மீகம்தேர்வுச் சீர்திருத்தம்பொது நிதிக் கொள்கைஎழுத்துப் பயிற்சிஜெயலலிதாவாதல்!மாநிலங்களவையின் அதிகாரங்கள்ஜவாஹர்லால் நேரு கட்டுரை கவலை தரும் நிதி நிர்வாகம்!உள்நாட்டுப் பயணம்ஜாமீன் மனுபிரான்ஸின் நிலைதேசத் தந்தைசூத்திரர்கள் இடம்மணமக்கள்குறைந்தபட்ச ஆதார விலைஇந்திரா என்ன நினைத்தார்?உடற்பருமனைக் குறைக்கும் முக்கிய வழிகள்நிர்விகார் சிங் கட்டுரைஜக்கி வாசுதேவ்2015 வெள்ளம்தடைக் கற்கள்சூரிய மின்சக்தி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!