கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு

அரசியலில் எதற்காக இருக்கிறீர்கள் ராகுல்?

பாலசுப்ரமணியம் முத்துசாமி
01 Nov 2022, 5:00 am
8

2012 டிசம்பர் மாதம் இரவு, தில்லியில் ஒரு பெண் பேருந்தில் செல்கையில், பேருந்தின் ஓட்டுநர் உள்ளிட்ட ஆறு பேர்களால் தாக்கப்பட்டு, வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு தெருவில் வீசப்பட்டார். சஃப்தர்ஜங் மருத்துவமனையில் 5 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் சிங்கப்பூர் கொண்டுசெல்லப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல், இரண்டு நாட்கள் கழித்து இறந்துபோனார்.

போராடி மரணித்த அவர், ‘நிர்பயா’, (பயமில்லாதவள்) எனப் பெயரிடப்பட்டார். இந்தக் கோரச் சம்பவம், தில்லி நகர் மக்கள் இடையே பெரும் எழுச்சியை உருவாக்கியது. மக்களும் எதிர்க்கட்சிகளும் தெருவுக்கு வந்து போராடினர். நாடாளுமன்றம் ஸ்தம்பித்தது.

இதற்கான எதிர்வினையாக, அன்றைய மன்மோகன் சிங் அரசு ஒரு சட்டக்குழுவை அமைத்து, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைத் தடுக்கவும், சட்டங்களைக் கடுமையாக்கவும் முனைந்தது. 2013 டிசம்பர் மாதம், அதற்கான அரசாணையை அன்றைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வெளியிட்டார். 

நமது நீதித் துறை செயல்படும் முறையில் பல புகார்கள் இருந்தாலும், நிர்பயா வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, 2020 ஆண்டு நான்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர். வெளியே பிரகடனப்படுத்திக்கொள்ளாமல், ‘நிர்பயா’வின் சகோதரனுக்கு, ராகுல் காந்தி அவர் விரும்பியபடி விமானம் ஓட்டும் பயிற்சி பெற உதவியதோடு, வேலையும் வாங்கிக் கொடுத்தார். அது ராகுல் காந்தியின் தனிப்பட்ட நற்பண்புகளில் ஒன்று.

இந்த நிகழ்வில், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, பொதுமக்கள் எனச் சமூகமே ஒன்று திரண்டு, ஒரு சமூக அவலத்தை ஒன்றாக எதிர்கொண்டது. பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் உடனே குறைந்துவிட்டதா எனில் இல்லை என்பதே பதிலாக இருக்கும். ஆனால், பெண்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்பட்டன. கூடுதல் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன. பாலியல் குற்றம் பற்றிய சமூக அறிதல் மேம்பட்டது. போதாதுதான் எனினும், கொஞ்சம் சமூக நகர்வு ஏற்பட்டது என்பது உண்மை.

தமிழ்நாட்டிலும் இதுபோன்ற பல உதாரணங்கள் உண்டு. பலகாலம் முன்பு, கும்பகோணத்தில் கூரை தீப்பிடித்து குழந்தைகள் மாய்ந்தது ஒரு பெரும் அவல நிகழ்வு. அந்த நிகழ்வு தமிழ்ச் சமூகத்தில் ஆறாத காயமாக இன்றும் நீடிக்கிறது. அதன் எதிர்வினையாக, அதன் பின்னர், தீப்பிடிக்காத கூரைகள் இல்லாக் கட்டிடங்களுக்குப் பள்ளி அனுமதி மறுக்கப்பட்டது. பள்ளிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டன.

இதுதான் ஜனநாயக சமூகத்தில் இயல்பாக நடக்க வேண்டிய ஒன்று. அரசு நிர்வாகம் தவறுகையில், அதை எதிர்க்கட்சிகளும், பத்திரிகைகளும், பொதுமக்களும் தட்டிக் கேட்க வேண்டும்.  ஒரு சமூக அவலத்துக்கு எவ்வளவு உரத்த குரலில் எதிர்வினை எழுகிறதோ, அந்த அளவு ஆளும் கட்சிக்கு, அந்த அவலத்தை விசாரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அந்த அவலத்தை ஏற்படுத்தியவருக்கு சட்டப்படி வழங்கப்படும் தண்டனை, அவரைப் போன்ற மற்றவர்களுக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்கும். இனிமேல், அது போன்ற அவலங்கள் நடைபெறாமல் அரசு சட்டங்களை, விதிகளை உருவாக்கும். இதைச் செய்ய, அதிகபட்ச அழுத்தத்தைத் தர வேண்டியது எதிர்கட்சிகளின், ஊடகங்களின் கடமை.

குஜராத் மாநிலம், மோர்பி நகரில் நேற்று அக்டோபர் 30 அன்று அப்படி ஒரு பெரும் சமூக அவலம் நிகழ்ந்தது. அந்த ஊர் வழியே செல்லும் மச்சு நதியில் குறுக்கே உள்ள தொங்கு பாலம் உடைந்து விழுந்ததில் 140க்கும் அதிகமான பொதுமக்கள் இறந்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், இந்தப் பாலத்தை ‘ஒரேவா’ என்னும் நிறுவனம், பல ஆண்டு காலமாக நிர்வகித்துவருகிறது என்னும் தகவல் வருகிறது. பாலம் சமீப காலமாகப் பராமரிப்புக்காக மூடப்பட்டிருந்ததாகவும், சில நாட்கள் முன்புதான் மக்களின் உபயோகத்துக்காகத் திறக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.

இந்த அவலம் நிகழ்ந்ததுமே, உள்ளூர் நகராட்சி அதிகாரிகள், பாலம் ‘தகுதிச் சான்றிதழ்’ பெறாமல் திறக்கப்பட்டது என நழுவுகிறார்கள். பால நிர்வாகத்தைப் பல ஆண்டுகளாகச் செய்துவரும் ‘ஒரேவா’ நிறுவனம், “எங்கள் மீது பிழையில்லை... பராமரிப்பைச் செய்ய நாங்கள் ஒப்பந்தம் செய்த நிறுவனம்தான் பொறுப்பு” எனக் கை கழுவுகிறார்கள். இந்தியக் குற்றவியல் சட்டம் 304, 308, 114 பிரிவுகளில், முதல் தகவல் அறிக்கை, பாலத்தை நிர்வகித்த நிறுவனம் மற்றும் பராமரிப்பைச் செய்த நிறுவனம் – இவையிரண்டின் மீதும் பதியப்பட்டிருப்பதாக ‘இந்தியா டுடே’ செய்தி அறிக்கை கூறுகிறது. ஆனால், எந்தத் தனிநபரும் காவல் துறை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மாநில அரசும், மத்திய அரசும் நிவாரணங்களை அறிவித்துவிட்டார்கள்.

ஒரு பெரும் அவலம் நடைபெறுகையில், அதில் தொடர்புடைய எவரும், அதிலிருந்து தப்பித்துக்கொள்ளவே பார்ப்பார்கள். இதுதான் நிதர்சனம். முடிந்தவரை அரசு, காவல் துறை, தனியார் நிறுவனம் என அனைவரும், ஊடகங்களைச் சமாளித்து, குற்றத்தை நீர்த்துப் போகச் செய்யும் வழிகளைச் செய்வார்கள். முடிந்தவரை, அதன் மீதான வெளிச்சத்தை வேறு விஷயங்களுக்கு மடைமாற்ற முயற்சி செய்வார்கள். 

அங்கேதான், ஜனநாயகத்தில் எதிர்க்கட்சி என்னும் ஒரு உறுப்புக்கான கடமை உள்ளது. இந்த அவலத்தின் அனைத்துத் தகவல்களையும் வெளிக்கொணர்ந்து, இதில் உள்ள குறைகளை, தவறுகளை, ஊழல்களை வெளிக்கொணர்ந்து, குற்றவாளிகளுக்குச் சரியான தண்டனை வாங்கிக் கொடுக்கும் முயற்சிகளைச் செய்வது எதிர்க்கட்சிகளின், ஊடகங்களின் கடமை. அதுதான் அரசியல்.

உயிரிழந்த 140 பேர் குடும்பத்துக்கு அரசு தரும் சில லட்சங்கள் நிவாரணம் என்பது அலட்சியத்தின் பேரால் நடந்த படுகொலைகளுக்கு எந்த வகையிலும் ஈடாகாது. இந்தக் குற்றத்தின் பின்ணணியில் உள்ள குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதும், இனிமேல், இதுபோன்ற விபத்துக்கள் நடக்காமல் இருக்க ஏற்படுத்தப்பட வேண்டிய புதிய சட்டங்கள் / விதிகளே மிகச் சரியான பரிகாரமாக இருக்கும். இது நிகழும் வரையில் ஓயாமல் போராட வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை.

ஒரு நிர்பயாவுக்கு நிகழ்ந்த கொடுமைக்கு, நாட்டின் சட்டம் மாற்றப்பட்டது நம் கண் முன்னே நிகழ்ந்த வரலாறு. அன்றிருந்த அரசுக்கு, அந்தக் கட்டாயத்தை ஏற்படுத்தியது எதிர்க்கட்சிகள். பாகிஸ்தானுடன் நிகழ்ந்த கார்கில் போரில்கூட 527 இந்திய வீரர்கள்தாம் மாண்டார்கள். இங்கே பாலத்தை நிர்வகிக்கும் ஒரு ஒப்பந்தக்காரரின் அலட்சியத்தால், அதைச் சரியாக கண்காணிக்காத உள்ளூர் அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால், 140 உயிர்கள் பலியாகியிருக்கின்றன.

இந்திய நாட்டின் ஒவ்வொரு உயிரின் வாழ்வாதாரத்துக்கும், பாதுகாப்புக்கும் உழைக்க வேண்டியது ஒவ்வொரு அரசியலரின் கடமை. ஆனால், இந்தியாவை ஒன்றிணைப்பேன் என 3,500 கிலோமீட்டர் பாதயாத்திரை மேற்கொண்டிருக்கும் ராகுல் காந்தி சொன்னது இதுதான். ‘இதை நான் அரசியலாக்க விரும்பவில்லை’.

பின் எதற்காக அரசியலில் இருக்கிறீர்கள் ராகுல்?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பாலசுப்ரமணியம் முத்துசாமி

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.


8






பின்னூட்டம் (8)

Login / Create an account to add a comment / reply.

SATHISH SAMUEL M   1 year ago

கடந்த தேர்தலில் தோற்றவுடன் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ததே தவறு. காங்கிரஸ் பேரியக்கத்தை வலுப்படுத்தவும், சீரமைக்கவும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதைவிடுத்து தலைவர் பதவியை ராஜினாமா செய்து கட்சியை பலவீனப்படுத்தி விட்டார். தற்போது உள்ள சூழலில் மேம்போக்கான அரசியலில் இருந்து அதிரடி அரசியலுக்கு அவர் மாற்றிக் கொள்ள வேண்டும். இது போன்ற சம்பவங்களை கடுமையாக கண்டிக்க வேண்டும். அதை விடுத்து அரசியல் செய்ய விரும்ப வில்லை என்பதை ஏற்க முடியாது. நாங்கள் உங்களிடம் நிறைய எதிர் பார்க்கிறோம் தலைவா.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

அ.பி   1 year ago

தவறான கண்ணோட்டம்..

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

SelvaG   1 year ago

"இந்தியாவை ஒன்றிணைப்பேன் என 3,500 கிலோமீட்டர் பாதயாத்திரை மேற்கொண்டிருக்கும் ராகுல் காந்தி சொன்னது இதுதான். ‘இதை நான் அரசியலாக்க விரும்பவில்லை’. " தங்களது வரிகளில் உள்ளது போல் இந்தியாவை இணைக்கும் 3,500 யாத்திரையான கருமமே கண்ணாக உள்ளார். இது அவரது யாத்திரையின் தினசரி பத்திரிகை சந்திப்பில் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளார்.. அரசியலில் எதற்காக இருக்கிறீர்கள் ராகுல்? 1. Covid தொடங்கிய சமயம் அரசு மெத்தனமாக இருந்த போது முதல் குரல் எழுப்பியது யார். 2. புலம் பெயர்ந்த தொழிலாளரின் துயரங்களை அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது யார் 3. Covid இலவச தடுப்பூசி தரமாட்டோம் என்று அரசு சொன்ன போது அதற்கான அழுத்தமான குரல் யாருடையது இவர் முன்னெடுக்கும் விடயங்களை இவரது யுடியூப் பக்கங்களில் முழுவதும் தெரிந்து கொள்ளலாம் https://youtube.com/c/rahulgandhi

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

Saravanan P   1 year ago

Gujarat bridge tragedy is the most gravest of the recent times. About 140 died and 100 missing and a large number inured.. In the midst evacuating the dead bodies from waters and searching for the missing ones, no sensible person would start blaming for the mishap. It is the time for mourning. This is what Rahul Gandhi did as his immediate reaction when asked for his comments. May be, he will come forward to talk about it after ascertaining the full facts.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Abdul Rahim   1 year ago

முழுதும் உடன்படுகிறேன் . அரசியல் என்பதை பற்றிய பிம்பம் மென் வலதுசாரிகளாலும் , சில அறிவுஜீவிகளாலும் மாற்றப்பட்டு கொண்டிருக்கிறது என்று நினைக்கிறன். அவை அரசியல் என்பது அறத்துக்கு எதிரானது என்பதும் , அதிகாரம் மற்றும் பொருள் வேட்கை கொண்டவர்கள் மட்டுமே அரசியல் "செய்வார்கள்" என்றும் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. ஆனால் , உண்மையான அரசியல் என்பது ஜனநாயகத்தை காப்பது , சமூக நீதியை நிலைநாட்டுவதே . இதில் அனைவரும் பங்குகொள்ளவேண்டும். அந்த வகையில் , நீங்கள் சொல்வதை போல் , இந்த விஷயத்தில் ஆளும் கட்சியை எதிர் கட்சிகளும் , ஊடகமும் கேள்வி கேட்க வேண்டும் . உள்ளூர் அரசு அதிகாரத்தையும் , சம்பந்தப்பட்ட நிறுவனத்தையும் மக்களிடையே அம்பலப்படுத்த வேண்டும்.

Reply 2 1

Login / Create an account to add a comment / reply.

Radha prabhu   1 year ago

மதத்தை வைத்து, ஆன்மீகம் சனாதனம் ங்கற பேரில், கட்சியை எவர் எதிர்த்தாலும் தேசத்துரோகம், இந்துமத எதிர்ப்புன்னு திசை திருப்பிவிடும் அரசியல் சூழ்ச்சியில், மென்மையாக நகரிகமாக நடந்து கொள்வதாக சொல்வதே ஒரு அரசியல் தான்..மதத்துக்கான் எதிர் அரசியல் மனிதம் தான்.

Reply 3 1

Login / Create an account to add a comment / reply.

Saran Viveka   1 year ago

புல்வாமா தாக்குதல் நடந்த போது, தாக்குதல் நடந்த உடனேயே "இது நாட்டு பாதுகாப்பு/ இராணுவம் சம்பந்தப்பட்ட்து, இதில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யக்கூடாது" என்று தொடர்ந்து பிஜேபியர்கள் கூவ தொடங்கினர். நாட்டு பாதுகாப்பு சம்பந்தப்படட மிக முக்கியமான ஒன்றில் கோட்டைவிட்டு 40 CRPFவீரர்களை பலி கொடுத்த நிகழ்வை எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்க தொடங்கினால் பதில் சொல்ல முடியாது என்று பிஜேபியர்கள் எடுத்த முன்ஜாமீன் அது. ஆனால் பின் எதிர்க்கட்சிகள் அமைதியாகியவுடன், அவுரங்காபாத்தில் நடந்த எலெக்ஷன் கூட்டத்தில் மோடி "புல்வாமா அட்டாக்கில் பாதிக்கப்படடவர்களுக்காக உங்கள் ஓட்டுக்களை எங்களுக்கு டெடிகேட் பண்ணுங்கள்" என்று அந்த அவல தேசிய நிகழ்வை முன்வைத்து ஒட்டு பிச்சை எடுத்தார்.பத்திரிக்கையாளர்கள் குஜராத், மோர்பி பாலம் இடிந்து விழுந்தது சார்ந்து கேட்ட கேள்விக்கு ‘இதை நான் அரசியலாக்க விரும்பவில்லை’ என்று ஒற்றைவரியுடன் அதற்க்கு மேல் பதில் சொல்ல மறுத்துவிட்டதன் மூலம் ராகுல் பிஜேபியர்களுக்கான முன்ஜாமீனை அவர்கள் கேட்காமலேயே வழங்கி இருக்கிறார்.

Reply 8 0

Login / Create an account to add a comment / reply.

விஷ்வ துளசி.சி.வி   1 year ago

இந்திய ஒற்றுமை பயணம் நாடு முழுவதும் பெரும் எழுச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ள நிலையில் ராகுல் காந்தி ‘இதை நான் அரசியலாக்க விரும்பவில்லை’.என சொன்னது மக்களின் உயிர் இழப்பினை துயரத்தினை வேதனையை பகிர்ந்து கொண்ட ஒரு உன்னத தலைவனின் பக்குவப்பட்ட அரசியல் . #இந்திய_ஒற்றுமை_பயணம்

Reply 8 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஹிஜாப்: ஆதரவு – எதிர்ப்புசெலன்ஸ்கிஉற்சாகம் தரும் காலை உணவுபோர்த்துகல் எழுத்தாளர்ஜி.குப்புசாமிநிகழ்நேரப் பதிவுகள்தகுதித் தேர்வுகளா? தடைக் கற்களா?நடவுசெவிப்பறைகலைஞர் கோட்டத்தில் கவனிக்க வேண்டிய அரசியல்நோய்த்தொற்றுஇன்பம்மங்கோலிய இனத்தவர்ஓப்பிபா.வெங்கடேசன் சிறுகதைசென்னை உயர் நீதிமன்றம்வட இந்திய கோட்டைஅடையாளச் சின்னங்கள்இஞ்சித் திருவிழாஒவைசியை எதிர்க்கும் பாஜகவின் மாதவி லதாதேசிய வருமானம்சுதந்திர இந்தியாகருச்சிதைவுசோழர் இன்றுசி / 2022 இ3 (இஸெட்டிஎஃப்)செங்கோல்பெண் அடிமைத்தனம்நச்சரிப்பு காதல் இல்லைசோறுஜவாஹர்லால் நேரு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!