கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

சாதி, சமத்துவமின்மை: இரு அடையாளங்கள்

ப.சிதம்பரம்
27 May 2024, 5:00 am
0

லவற்றை நாம் ‘பார்க்கிறோம்’ ஆனால் ‘கவனிப்பதில்லை’. பல விஷயங்களைப் ‘படிக்கிறோம்’ ஆனால் ‘மனதில் பதியவைத்துக்கொள்வதில்லை’. சில விஷயங்கள் நம்மை ‘படபடக்க வைத்து சில விநாடிகள் உறுத்துகின்றன’ ஆனால் அதை அப்படியே ‘உதறித் தள்ளிவிடுகிறோம்’. 

இந்தியர்களின் வாழ்க்கை இயல்புத்தன்மையும் இப்படித்தான்; கோடிக்கணக்கானவர்கள் கடுமையான வறுமையில் உழல்கின்றனர், தங்களுக்கு எதிராக சமூகம் கடைப்பிடிக்கும் தீண்டாமையையும் வன்கொடுமைகளையும் எதிர்த்துக் கடுமையாகப் போராடுகின்றனர். சமூகத்தின் ஒரு பிரிவு மக்கள் சாதிக்க விரும்புவதற்கு நேரெதிராக, செல்வாக்கு படைத்தவர்களின் வளம் குவிக்கும் ஆசை - போட்டியிட்டு வெல்கிறது.

கொல்கத்தா நகரின் ‘சென்ட்ரல் அவென்யு’ நகர்ப்புற பகுதிக்கு நள்ளிரவு செல்லுங்கள், நூற்றுக்கணக்கானவர்கள் சாலையோரங்களிலேயே படுத்து உறங்குவதைக் காணலாம்; ஏன் இவர்களுக்கெல்லாம் படுத்துறங்க தலைக்கு மேல் கூரை (வீடு) இல்லையா? டெல்லி மாநகர வீதிகளில் செல்லும்போது நான்கு வீதிகள் சந்திக்கும் இடங்களிலெல்லாம் ஏராளமான குழந்தைகள் பிச்சை எடுப்பதையும் பூ விற்பதையும் தூவாலைகளையும் காப்புரிமம் பெறாமல் அச்சிட்ட புத்தகங்களையும் வாங்கிக்கொள்ளச் சொல்லிக் கெஞ்சுவதைக் காணலாம்; இந்தக் குழந்தைகள் ஏன் பள்ளிக்கூடங்களுக்குப் போகாமல் வீதிகளில் இப்படித் திரிகிறார்கள்? 

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

நாட்டின் வறண்ட நிலப்பகுதி வழியாக சாலைகளில் பயணியுங்கள், கண்ணுக்கெட்டியவரை தண்ணீரே தென்படாது, அந்த நிலங்களிலும் ஏதும் பயிர்கள் விளைந்திருக்காது, இருப்பினும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வறண்ட பூமியை நம்பித்தான் இன்னமும் கிராமங்களில் வாழ்கிறார்கள்; இவர்களுக்கு எவ்வளவு வருமானம் வருகிறது, அதை வைத்து எப்படிக் காலம் தள்ளுகிறார்கள் என்று சிலராவது அனுதாபத்துடன் சிந்திப்பார்கள்? 

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

எருமைகள் மீது வாரிசுரிமை வரி!

ப.சிதம்பரம் 20 May 2024

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

காங்கிரஸ் கட்சி 2024 மக்களவை பொதுத் தேர்தலுக்காக தயாரித்த வாக்குறுதிகளைக் கொண்ட அறிக்கை, கடந்த பல ஆண்டுகளாக – குறிப்பாக கடந்த முப்பதாண்டுகளாக – இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிபெற்றுவருவதையும் அங்கீகரித்துள்ளது.

லட்சக்கணக்கில் அதிகரித்துள்ள நடுத்தரக் குடும்பங்களின் எண்ணிக்கை, நுகர்பொருள்களின் பெருக்கம், ஒவ்வொருவர் கையிலும் இருக்கும் சில ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள், மாநிலங்களுக்கு இடையில் தரமான நெடுஞ்சாலைகள், கண்ணைக் கவரும் வகையில் கட்டப்பட்டுள்ள நேர்த்தியான வணிக வளாகங்கள், நவீன திரையரங்குகள், இளைஞர்கள் கூடி மகிழ பொது மதுபானக்கூடங்கள், நகரங்களில் மேல்தட்டு மக்கள் குடியிருக்கும் செழிப்பான மையங்கள் ஆகியவற்றில் நாட்டின் வளர்ச்சி தெரிகிறது.

அதேசமயம், ‘ஒளிரும் இந்த இந்தியா’, நாம் சாதிக்கத் தவறிய வறுமை ஒழிப்பு நடவடிக்கை பற்றிய உண்மைகளைத் திரைபோட்டு மறைத்தும் விடாது; இனியாவது நாம் தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்பதை நினைவூட்டும் அவலமான அசிங்கங்கள் இவை.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

‘வலிய’ தலைவர் பொய் சொல்வது ஏன்?

ப.சிதம்பரம் 13 May 2024

சமூகத்தின் பிரதிபலிப்பே பொருளாதாரம்

ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சி திட்டப் பிரிவு (யுஎன்டிபி), வறுமைக்கோடு எது என்பதை வரையறுத்திருக்கிறது. இந்தியாவில் நகர்ப்புறமாக இருந்தால் மாதம் ரூ.1,286க்குக் கீழும், கிராமமாக இருந்தால் ரூ.1,089க்குக் கீழும் சம்பாதிக்கும் குடும்பங்களை ‘வறிய குடும்பம்’ என்கிறது. அதன்படி இந்தியாவில் 22.8 கோடி பேர் ‘வறியவர்கள்’. இந்தக் கணக்கே மிக மிகக் குறைவான மதிப்பீடு.

உலக அசமத்துவ ஆய்வகத்தின் அறிக்கைப்படி இந்திய சமூக அடுக்கில், கடைசி 50% ஆக உள்ள 71 கோடி மக்களுடைய பங்கு, தேசிய வருமானத்தில் வெறும் 13% மட்டுமே, தேசிய வளத்தில் அவர்கள் அனைவருடைய மொத்த உடமைகளையும் கூட்டினால் வருவது 3% மட்டுமே. ‘குடும்பங்களின் மாதாந்திர செலவு ஆய்வறிக்கை’ (எச்சிஎஸ்இ), சமூகத்தின் கடைசி 50% ஆக இருக்கும் மக்கள் கிராமங்களில் மாதம்தோறும் ரூ.3,094, நகரங்களில் மாதந்தோறும் ரூ.2,001 மட்டுமே செலவிடுவதாகத் தெரிவிக்கிறது.

சமூகத்தின் கடைநிலையில் உள்ள 20% மக்களுடைய வருமானம் எவ்வளவு என்று மதிப்பிட மிகப் பெரிய கணிதப் புலமையெல்லாம் அவசியமே இல்லை. அவர்களுக்கென்று சொந்தமாக எதுவுமில்லை, அவர்களுக்கு வீடு-வாசல் கிடையாது, நிரந்தர வேலையும் வருமானமும் கிடையாது ஏதோ சில ஆதாரங்களைப் பற்றிக்கொண்டு உயிர் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். உலக வறுமை குறியீட்டெண்படி மொத்தமுள்ள 125 நாடுகளில், இந்தியா 111வது இடத்தில் இருக்கிறது.

ஏழைகளில் ஓபிசி, எஸ்சி அதிகம்

எச்சிஎஸ்இ அறிக்கைப்படி, ஏழைகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி), ‘சராசரி’ வருமானத்துடன் வாழ்கிறார்கள் பட்டியல் இனத்தவரும் பழங்குடிகளும் ‘மிகவும் ஏழைக’ளாக இருக்கின்றனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த சமூகத்தில் நிலவிவரும், சமூகப் படிநிலையே பொருளாதாரப் படிநிலையிலும் எதிரொலிப்பதில் வியப்பு ஏதுமில்லை.

சமூகப் படிநிலையானது சாதியை அடிப்படையாகக் கொண்டது. குறைந்தபட்ச ஊதியத்தைப் பெற பரம ஏழைகளும், மிகவும் அழுத்தப்பட்ட நிலையில் உள்ளவர்களும் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் வேலை கேட்டு, 15.4 கோடிப் பேர் தங்களுடைய பெயர்களைப் பதிவுசெய்துள்ளனர். அவர்களுக்கு சராசரியாக ஆண்டுக்கு 50 நாள்களுக்கு மட்டுமே அத்திட்டத்தில் வேலை தரப்படுகிறது.

இன்னொருபுறம், சமூகத்தின் மேல்தட்டில் இருக்கும் 10% மக்கள், தேசிய வருமானத்தில் 57.7% ஈட்டுகிறார்கள். 9,223 பேர் தேசிய வருமானத்தில் 2.1% பெறுகிறார்கள். 92,234 பேர் 4.3% வருமானம் பெறுகிறார்கள். குறைந்தபட்சம் ரூ.3.22 கோடியிலிருந்து அதிகபட்சம் ரூ.8.89 கோடி வரை விற்கப்படும் அயல்நாட்டு ‘லம்போகினி’ சொகுசு கார், 2023இல் மட்டும் இந்தியாவில் 103 விற்கப்பட்டுள்ளன. இந்த அரசுக்குத் தங்களுடைய நன்றியைத் தெரிவிக்கும் வகையில் 362 தனி நபர்கள், ரூ.757 கோடி மதிப்புக்கு ‘தேர்தல் நன்கொடை பத்திரங்க’ளை வாங்கி அளித்துள்ளனர். எல்லா அரசியல் கட்சிகளுக்கும் இது கிடைத்திருக்கிறது.

‘அச்சே தின்’ (நல்ல நாள்) வந்துவிட்டதா? இந்தியர்கள் அனைவரும் ‘ஆத்ம நிர்பர்’ (சுயசார்பு) அடைந்துவிட்டனரா? சீன நாட்டுடன் (ஆம், நம்முடைய பிரதேசத்தை ஆக்கிரமித்ததுடன், நம்முடைய ராணுவம் ரோந்துக்கு வரக் கூடாது என்று தடுத்துவிட்டதே அதே சீனத்துடன்தான்) நமக்கிருக்கும் வெளிவர்த்தகப் பற்று வரவு பற்றாக்குறை 2023-2024இல், 100 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். ஒரு பில்லியன் 100 கோடி. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 83,05,87,50,00,000.00. இதுதான் ‘அம்ருத கால’ விடியலா? இன்னும் எத்தனை காலம்தான் மக்கள் இப்படி ஏமாற்றப்படுவார்கள்? பொய்யுரைகள் பரப்பப்படும்?

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

காங்கிரஸின் தெளிவான தேர்தல் அறிக்கை

ப.சிதம்பரம் 15 Apr 2024

இரண்டு அடையாளங்கள்

இந்திய அரசியல் – பொருளாதாரம் ஆகியவற்றின் முக்கியமான இரண்டு குறிப்பிடத்தக்க சாபக்கேடுகள் சாதியும், அசமத்துவமும் (சமத்துவமின்மை)தான் என்பதை இந்திய அரசியல் கட்சிகள் ஒப்புக்கொண்டு செயல்படும்வரை, வறுமையின் ஆணிவேரை நம்மால் கெல்லி எறிய முடியாது, ஒடுக்குமுறைகளையும் பாரபட்சமான நடவடிக்கைகளையும் களைய முடியாது. 

பாஜக, ‘வளர்ச்சி’ என்று கதை சொல்லும்போது, சமூகத்தின் இருண்ட பக்கங்களை நோக்கி கவனம் திருப்புகிறது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை; பாதிக்கப்பட்ட மக்களுடைய வாழ்க்கையை மேம்படுத்த எளிமையான, நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளையும் அளித்திருக்கிறது.

எஸ்சி., எஸ்டி., ஓபிசிகளுக்கு

  • மக்களுடைய சாதி மற்றும் சமூக – பொருளாதார பின்னணித் தரவுகளுடன் புதிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அவர்களுடைய துயரங்களைக் களைய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
  • பட்டியல் இனத்தவர், பழங்குடிகளுக்கான இடஒதுக்கீட்டு அளவு 50% என்பதை தாண்டக் கூடாது என்ற வரம்பு நீக்கப்படும்.
  • ஒன்றிய அரசுப் பணிகளில் பட்டியல் இனத்தவர், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கென்று ஒதுக்கப்பட்டு நிரப்பப்படாமல் உள்ள அனைத்துப் பணியிடங்களும் ஆட்சிக்கு வந்த ஓராண்டுக்குள் நிரப்பப்பட்டுவிடும்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

காங்கிரஸுக்கு மோடி தந்துள்ள விளம்பரம்!

ப.சிதம்பரம் 29 Apr 2024

இளைஞர்களுக்கு…

  • தொழில் பழகும் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்படும், ஓராண்டு பயிற்சியுடன் ஆண்டுக்கு ரூ.10,000 உதவித் தொகையும் தரப்பட்டு வேலையும் வழங்கப்படும்.
  • ஒன்றிய அரசின் துறைகளிலும் அரசுத்துறைகளிலும் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்.
  • கல்விக் கடன்கள் நிலுவை முழுமையாக ரத்துசெய்யப்படுவதுடன், இதுவரை செலுத்தாத வட்டியும் ரத்தாகிவிடும்.

மகளிருக்கு…

  • ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு ‘மகாலட்சுமி’ திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய், அவரவர் வங்கிக் கணக்கில் போடப்படும்.
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் ஒரு நாள் ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தப்படும்.
  • ஒன்றிய அரசு வேலைகளில் 50% பெண்களுக்கென்றே ஒதுக்கப்படும்.

ஏழைகளை மையமாக வைத்தே திட்டங்கள்

2024 மக்களவை தேர்தல் முடிவுக்குப் பிறகு ஆட்சிக்கு வரும் புதிய அரசின் வழிகாட்டுக் கொள்கை, ஏழைகள் – சமூகத்தால் விலக்கி வைக்கப்பட்டவர்களுடைய நல்வாழ்வாகவே இருக்க வேண்டும். 

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இந்தக் கட்டாயத்தை உணர்ந்திருக்கிறது, எனவே அது நாடு முழுக்க பேசுபொருளானது. பாஜக தனது பிரச்சாரத்தின் பெரும்பகுதியையும் பண பலத்தையும் காங்கிரஸ் அறிக்கையை மறுப்பதிலும் - தானாக கற்பித்துக்கொண்ட - காங்கிரஸ் வாக்குறுதிகளைப் பரப்புவதிலுமே செலவிட்டது.

ஏழு கட்ட மக்களவைத் தேர்தலில் போட்டியானது இப்போதுள்ள சமூக – பொருளாதார அமைப்பை அப்படியே கட்டிக்காக்க வேண்டும் என்று நினைப்போருக்கும், இதை அடியோடு மாற்றி ஏழைகளின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைப்போருக்கும் இடையில்தான். ஜூன் 4இல் பொதுத் தேர்தல் முடிவுகள் வரும் வரையில் படபடக்கும் நெஞ்சோடு காத்திருங்கள்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள் 

எருமைகள் மீது வாரிசுரிமை வரி!
‘வலிய’ தலைவர் பொய் சொல்வது ஏன்?
மோடியைக் கலவரப்படுத்திய காங்கிரஸ் அறிக்கை
காங்கிரஸின் தெளிவான தேர்தல் அறிக்கை
காங்கிரஸுக்கு மோடி தந்துள்ள விளம்பரம்!
பாஜக: அரசியல் கட்சியா, தனிமனித வழிபாட்டு மன்றமா?

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

2

2





கிரைசில்முகமது அபுபக்கர் பாரூக் கட்டுரைஅரசர்களின் ஆட்சிசீன டிராகன்வீழ்ச்சியும் காரணங்களும்ஹிந்துத்துவர்அணைப் பாதுகாப்பு மசோதா என்றால் என்ன?முஜிபுர் ரெஹ்மான்பந்து வீச்சாளர்கள்இயம்தாளம்விக்கிப்பீடியாஅரபு நாடுகள்ஐஏஎஸ் அதிகாரிபுத்தக அட்டைஇந்தியாவுக்குப் பாடம்பிரேசில் அரசியல்வருவாய் ஏற்றத்தாழ்வு அத்வானிபாஜக வெல்ல இன்னொரு காரணம்மக்களிடையே அச்சம்அறிவியலுக்கு பாரத ரத்னாதேனுகாகாப்பியம்நல்வாழ்வு வாரியப் பதிவுஉலக அமைதிக்கான நோபல் பரிசு – 2022கோகலேவீட்டிலிருந்தே வேலைநல்வாழ்வுப் பொருளாதாரம்மத்திய நல்வாழ்வுத் துறையின் செயலர்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!