கட்டுரை, அரசியல், சர்வதேசம் 4 நிமிட வாசிப்பு

அயல் உறவில் மோடிக்கு தோல்விகளே!

ப.சிதம்பரம்
29 Sep 2024, 5:00 am
0

ந்தியாவுக்குப் பக்கத்திலேயே இருக்கும் நாடுகளுடன் உறவைப் பராமரிப்பதிலும் வளர்ப்பதிலும் மோடி அரசு தோல்வி கண்டுவிட்டது. சீனத்துடன் நமக்கு 3,488 கிலோ மீட்டர் நீள, நில எல்லை இருக்கிறது. ஆனால், எவருக்குமே ‘சீனம் நமது பக்கத்து நாடு’ என்ற உணர்வே ஏற்படுவதில்லை - ஏன் என்றே வியக்கிறேன்?

வெகு அருகிலேயே இருக்கும் பாகிஸ்தான் (3,310 கி.மீ.), வங்கதேசம் (4,096 கி.மீ.) ஆகியவற்றுடனான நில எல்லையைப் பெரும்பகுதி வேலியமைத்து காத்துவருகிறோம். நேபாளத்துக்கும் இந்தியாவுக்கும் பொதுவான நில எல்லை இருந்தாலும் வேலியடைக்காமல் திறந்தே வைத்திருக்கிறோம்; அவ்வப்போது சிறுசிறு உரசல்கள் - மோதல்கள் ஏற்பட்டாலும், மனிதர்கள் போய்வரவும் சரக்குகள் போக்குவரத்துக்கும் திறந்த இந்த எல்லை மிகவும் பயன்பட்டுக்கொண்டிருக்கிறது. பூடான் சிறிய நாடு, பொது நில எல்லையாக 578 கிலோ மீட்டர் நீளம் இருக்கிறது. அந்த நாட்டுடனான உறவு மிகவும் மதிப்புள்ளதாகவும் ராணுவ நோக்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் திகழ்கிறது.

இலங்கையையும் நம்மையும் பாக் நீரிணைதான் பிரிக்கிறது. வரலாற்றின் அடிப்படையிலும் பண்பாட்டிலும் இலங்கை நமக்கு நெருங்கிய பக்கத்து நாடாகவும் - சில வகைகளில் பிரச்சினைக்குரியதாகவும் இருக்கிறது. மாலத்தீவு சிறிது தொலைவில் இருந்தாலும், நல்லுறவைப் பேணுகிறோம். சீனத்தின் செல்வாக்கு அந்நாட்டின் மீது அதிகம். 1988இல் அந்நாட்டைக் கைப்பற்ற ஆயுதமேந்திய சிறு கொள்ளை கும்பல் முயன்றபோது நாம்தான் அதை மீட்டோம், ‘ஆபரேஷன் காக்டஸ்’ என்ற அந்த நடவடிக்கை இப்போது எத்தனை பேருக்கு நினைவில் இருக்கிறது என்று தெரியாது. 

ஆப்கானிஸ்தானுடனும் 106 கிலோ மீட்டருக்கு பொது நில எல்லை இருக்கிறது. அந்த நாட்டுக்குள் நிலவும் கொந்தளிப்பான உள்நாட்டு அரசியல் காரணமாக, நம்முடனான உறவு திடீரென்று ‘கனிந்தும்’ சில வேளைகளில் ‘கசந்தும்’ இருக்கிறது. இந்தப் பக்கத்து நாடுகளில் சீனத்தைத் தவிர ஏனைய அனைத்தும் ‘தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்க’ (சார்க்) உறுப்பு நாடுகள்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

உதிர்கிறதா ‘சார்க்’?

இன்றைய இந்திய அரசின் அயலுறவுக் கொள்கையில் பக்கத்து நாடுகளுக்கு எந்த இடம் தரப்பட்டிருக்கிறது? 

வெளியுறவு அமைச்சராகவும் பிறகு சிறிது காலத்துக்குப் பிரதமராகவும் இருந்த இந்தர் குமார் குஜ்ரால், ‘கிழக்கே பார்’ என்ற கொள்கையை அரசுக்கு வழிகாட்டியாக அளித்தார். அடல் பிஹாரி வாஜ்பாய் அதையே கூர்மதியுடன், ‘கிழக்கில் (உறவை வலுப்படுத்த) செயல்படுத்து’ என்று மாற்றினார். நரேந்திர மோடியோ, டாம்பீகமான தனது பாணியில் ‘பக்கத்து நாடுகளுக்குத்தான் உறவில் முன்னுரிமை’ என்று அறிவித்தார்.

பிரதமர் மோடிக்கு உண்மையிலேயே பக்கத்து நாடுகளுடன் உறவை வளர்ப்பதில் தனிப்பட்ட அக்கறை இருக்கிறதா என்று அறிய விரும்புகிறேன். அப்படியானால் ‘சார்க்’ அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள பக்கத்து நாடு ஒவ்வொன்றுக்கும் அவர் கடைசியாகச் சென்றது எப்போது என்று அறிய விரும்புகிறேன். பிரதமருக்கான தனி இணையதளம் தரும் தகவல் இதோ:

மாதம் நாடு ஆண்டு
மார்ச் பூடான் 2024
மே நேபாளம் 2022
மார்ச் வங்கதேசம் 2021
ஜூன் மாலத்தீவுகள் 2019
ஜூன் இலங்கை 2019
ஜூன் ஆப்கனிஸ்தான் 2016
டிசம்பர் பாகிஸ்தான் 2015

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

வரவேற்பறையில் டிராகன்

ப.சிதம்பரம் 01 Aug 2022

கடந்த பத்தாண்டுகளில் பிரதமர் மோடி நேபாளத்துக்கு ஐந்து முறையும், பூடானுக்கு மூன்று முறையும், இலங்கைக்கு மூன்று முறையும், வங்கதேசத்துக்கு இரண்டு முறையும், மாலத்தீவுக்கு இரண்டு முறையும், ஆப்கானிஸ்தானுக்கு இரண்டு முறையும், பாகிஸ்தானுக்கு ஒருமுறையும் சென்றிருக்கிறார்.

மோடி தனது பதவிக்காலத்தில் மேற்கொண்ட மொத்த வெளிநாட்டுப் பயணம் 82இல் பக்கத்து நாடுகளில் மேற்கொண்ட பயணங்களின் எண்ணிக்கை 18. இந்த ஆண்டு மார்ச் மாதம் பூடானுக்கு, ஒரேயொரு நாள் சென்றுவந்த பிறகு அவர் வேறெந்த பக்கத்து நாட்டுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக செல்லவே இல்லை என்பதை அறிந்து ஏமாற்றம் அடைகிறேன்.

‘சார்க்’ அமைப்பின் 18வது உச்சி மாநாடு நேபாளத் தலைநகர் காத்மாண்டில் 2014 நவம்பர் மாதம் நடந்தது. 19வது உச்சி மாநாடு 2016 நவம்பரில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் நடப்பதாக இருந்தது. இந்தியாவும் வேறு நான்கு நாடுகளும் அதைப் புறக்கணித்தன. அதற்குப் பிறகு உச்சி மாநாடே நடக்கவில்லை. வாஜ்பாய் அரசில் வெளியுறவு அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங், ‘சார்க் அமைப்பு முழுத் தோல்வி’ என்று கருத்து தெரிவித்தார். அது உண்மைதான் – ‘சார்க்’ அமைப்பு முடிவுக்கு வந்துவிட்டது என்று மோடி அரசும் முழுமனதாக ஏற்றுக்கொண்டுவிட்டதைப் போலத் தெரிகிறது.

சீன டிராகனும் இந்திய யானையும்

பத்தாண்டுகளில் பிரதமர் மோடி 2015 முதல் 2018 ஜூன் வரையில் ஐந்து முறை சீனத்துக்குச் சென்றுவந்தார். அதற்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு கெட ஆரம்பித்தது. மியான்மர் (பர்மா) நாட்டுக்கு இரண்டு முறையும், மோரிஷஸ் நாட்டுக்கு ஒருமுறையும் இந்தப் பத்தாண்டுகளில் சென்றிருக்கிறார் மோடி.

இந்திய எல்லையை ஆக்கிரமித்து மோடிக்கு சினமூட்டியது சீனம். அவரால் பதிலுக்கு எதையும் செய்ய முடியவில்லை; இந்தியா என்ன செய்ய வேண்டும் என்று சீனம் கட்டளையிட இடம்கொடுத்துவிட்டார் மோடி. இந்திய எல்லையிலிருந்து சீனத் துருப்புகளை விலக்குவது தொடர்பாகப் பேசுகிறார்கள் என்றார்கள், சீனம்தான் செயல்திட்டத்தை வகுக்கிறது, இந்தப் பேச்சுகள் முடிவில்லாமல் நீண்டுகொண்டே போகின்றன; தீர்வு எதுவும் கண்ணுக்குப் புலப்படவில்லை. ‘உண்மையான கட்டுப்பாட்டு எல்லைக்கோடு’ (எல்ஏசி) பகுதியில் சீனம் துருப்புகளைக் குவிக்கிறது, சாலைகளையும் பாலங்களையும் குடியிருப்புகளையும் தொடர்ந்து அமைக்கிறது. 

முகாம்கள் அமைக்கப்படுகின்றன, பூமிக்கு அடியிலும் பாசறைகளும் ஆயுதக் கிடங்குகளும் நிறுவப்படுகின்றன. சீனத்துடனான வெளிவர்த்தகப் பற்றாக்குறை 2013 - 2014இல் 3,700 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்தது, 2023 – 2024இல் 8,500 கோடி அமெரிக்க டாலர்களாக பெருகிவிட்டது.

கறுப்புப் பணத்தை இந்தியாவில் முதலீடு செய்ய, மோரிஷஸ் நாடு பாதுகாப்பான திரையாகப் பயன்படுகிறது. ரோங்கியா அகதிகளை மியான்மர் அரசு, எவரும் கவனிக்காத நேரத்தில் இந்திய எல்லைக்குள் விரட்டிக்கொண்டிருக்கிறது. இந்த நிலைமைகளையெல்லாம் மாற்ற இந்திய அரசு என்ன நடவடிக்கையை எடுத்திருக்கிறது? இதுவரையில் அப்படி எதையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

இழப்புகள் ஏராளம்

பக்கத்து நாடுகளைப் புறக்கணித்ததன் விளைவாக ஏராளமாக இழந்துகொண்டிருக்கிறோம். நேபாளத்தில் திடீரென்று அரசியல் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. கே.பி.சர்மா ஒலி மீண்டும் பிரதமராகிவிட்டரா. வங்கதேசத்திலிருந்து பிரதமர் ஷேக் ஹசீனா விரட்டப்படுவார் என்றும் எதிர்பார்க்கவே இல்லை. இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கவுக்குச் செல்லம் கொடுத்து கொஞ்சினோம், அனுரா திஸ்ஸநாயகவைக் கண்டுகொள்ளவே இல்லை. இப்போது அவர்தான் மக்களில் 42.3% பேரின் ஆதரவுடன் அதிபராகிவிட்டார்.

மாலத்தீவில் அதிபரான முகம்மது முய்சு செய்த முதல் வேலை அங்கிருந்த இந்திய ராணுவ ஆலோசகர்களை வெளியேற்றியதுதான்.

பாகிஸ்தானைப் பொருத்தவரை மோடி அரசின் கொள்கை, அதன் உள்நாட்டு அரசியல் நோக்கங்களுக்கு ஏற்ப இருப்பதாகவே சந்தேகிக்கிறேன், அங்கே யார் ஆட்சிசெய்கிறார்கள், யாருக்கு மக்களுடைய ஆதரவு என்றெல்லாம் இந்தியா கவலைப்படவில்லை.

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

க்வாட்: நால்வர் ஆடும் சதுரங்கம்

கார்த்திக் வேலு 15 Oct 2021

சுயமாக ஏற்படுத்திக்கொண்ட காயம்

தெற்காசிய நாடுகளில் நமக்கு செல்வாக்கில் ஏற்பட்டிருக்கும் சரிவுக்குக் காரணம், நாம் சுயமாக ஏற்படுத்திக்கொண்ட காயம்தான். உலக அரங்கில் இந்தியாவை பெரிய சமாதானத் தூதுவராக காட்ட மோடியின் வெளியுறவுத் துறை கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதனால்தான் ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு மோடி சமீபத்தில் சென்றார். அது மட்டுமின்றி ‘ஜி-20’, ஐக்கிய நாடுகள் சபை உச்சி மாநாடு, ‘குவாட்’ அமைப்பின் உயர்நிலைக் கூட்டம் ஆகியவற்றுக்கும் நேரிலேயே சென்றுவந்தார்.

மோடி தன்னுடைய சமாதான முயற்சிகளில் வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்தும் அதேவேளையில், பக்கத்து நாடுகளுடன் உறவை மேம்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகள் ‘கடைசியானவை’ (Last) என்றும், ‘காணாமல் போனவை’ (Lost) என்றும் அவருக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

ஜனநாயகமே பற்றாக்குறை!
வரவேற்பறையில் டிராகன்
சீனா பறக்கவிடும் இந்தியக் கொடி
முடிவுக்கு வருமா இந்திய-சீன எல்லைப் பிரச்சினை?
க்வாட்: நால்வர் ஆடும் சதுரங்கம்
இரு நாடுகள் கொள்கைக்குப் புத்துயிர்?

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

1






குடியரசுத் தலைவர்சியரா நூஜன்ட்தொன்மக் கதைஇந்திய ஆட்சிப் பணியாளர்களின் மேட்டிமை மனநிலை!தமிழுக்கான வெள்ளை அறைமார்க்ஸிய அறிஞர்கல்வியியல்முலாயம் சிங் யாதவ்தமிழ்ப் பௌத்தம்: ஒரு நவீன சமுதாய இயக்கம்யுடர்ன்அதிகாரிகர்சான் வைலிதமிழ்நாடு முதல்வர்விமர்சனங்களே விளக்குகள்மருத்துவர்அண்ணா ஹசாரே ஆர்எஸ்எஸ்எதிர்வினைகள்பாஜக உள்ளுக்குள் எதிர்கொள்ளும் எதிர்க்குரல்கள்டெல்லி முதல்வர்சிறந்த நிர்வாகிசஞ்சய் மிஸ்ரா: வெட்கமற்ற முன்னெடுப்புஅரவிந்தன்சுயவிமர்சனம்சோஷலிஸ மரபுகலங்கள் உபி தேர்தல் மட்டுமல்ல...காந்தி பேச்சுகள் தொகுப்புவனப்பகுதிநேர்முகத் தேர்வை எதிர்கொள்ளுவது எப்படி?உடல்நலம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!