கட்டுரை, அரசியல், கலாச்சாரம், தொழில் 15 நிமிட வாசிப்பு

சீனா பறக்கவிடும் இந்தியக் கொடி

மு.இராமநாதன்
16 Sep 2022, 5:00 am
1

ப்பாவுதான் முதலில் சொன்னவர். பிறகுதான் அது பேசுபொருளானது. அவர் சொன்னது ஆகஸ்ட் கடைசி வாரத்தில். ஆனாலும், இந்தக் கதை அதற்கு ஒரு மாதம் முன்பே தொடங்கிவிட்டது.

இந்திய விடுதலையின் பவள விழாவை முன்னிட்டு ‘ஹர் கர் திரங்கா’ என்று குடிமக்களைக் கேட்டுக்கொண்டார் பிரதமர். அதற்கு ‘வீடுதோறும் மூவண்ணக் கொடி’ என்பது பொருள். இந்தி தெரிந்தவர்கள்தான் சொன்னார்கள். பிரதமரின் வேண்டுகோளுக்குக் கோடிக்கணக்கான மக்கள் செவிசாய்த்தனர். அவர்களில் இந்தி தெரிந்தவர்கள் இருந்தனர், தெரியாதவர்களும் இருந்தனர். செங்கோட்டையில் கொடி ஏறுவதற்கு முன்னர் அவர்கள் தத்தமது வீடுகளில் கொடி ஏற்றினர். 

நாடெங்கிலுமுள்ள அஞ்சலகங்கள் ஆன்லைனிலும் நேரிலுமாகக் கொடிகளை விற்றன. அவற்றின் விலையும் சகாயமாக இருந்தது. 2-1/2'x1'8" என்ற அளவுள்ள கொடியின் விலை ரூ.25. அதனினும் சிறிய கொடிகளும் இருந்தன. ஒரு கோடிக் கொடிகள் விற்றுத் தீர்ந்ததாகச் சொன்னது ஒரு செய்தி. எனினும் அது போதுமானதாக இல்லை. மேலும் அவை நடுத்தரமான, சிறிய அளவுகளில் இருந்தன. ஆகவே, பலர் சந்தையை நாடினர்.

அங்கே விலை அதிகம். பரவாயில்லை. ஆனால், அந்தக் கொடிகளில் கணிசமானவை சீனாவில் தயாரிக்கப்பட்டவை என்று சிலர் குற்றம் சுமத்தினர். இருந்துவிட்டுப் போகட்டும். அதை நமக்குள் வைத்துக்கொள்வோம். உள்வீட்டுச் செய்தியெல்லாம் ஊரம் பலத்துரைக்க வேண்டாம். ஆனால், கொண்டாட்டங்கள் முடிந்து பத்து நாட்களுக்குப் பிறகு நடந்த சம்பவத்தை உள்வீட்டில் வைத்துக்கொள்ள முடியவில்லை. ஏனெனில், அது வெளிவீட்டில் நடந்தது. ஹாலிபேக்ஸ் நகரம் கனடாவில் இருக்கிறது. அங்குதான் பொதுநல (காமன்வெல்த்) நாடுகளின் மாநாடு நடந்தது.

நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவின் தலைமையில் எல்லா இந்திய மாநிலங்களின் சபாநாயகர்களும் அந்த மாநாட்டில் கலந்துகொண்டார்கள். நன்று. அப்பாவு குழுவில் இருந்தார். குழுவினர் அரங்கத்திற்குத் தேசியக் கொடி ஏந்தி வந்தனர். மிக நன்று. அந்தோ, அதன் கீழ் மூலையில் சீனாவில் தயாரிக்கப்பட்டது என்று கண்டிருந்தது. குழுவில் பலருக்குத் தர்மசங்கடமாகப் போய்விட்டது.

பிர்லாவிடம் முறையிட்டார் அப்பாவு. அவருக்கு ஒரு புன்சிரிப்பு பதிலாகக் கிடைத்தது. அப்பாவுக்கு ஆறவில்லை. பிர்லாவைப் போல் அவரால் சிரித்துக் கடக்கவும் ஏலவில்லை. அவர் அங்கிருந்தபடியே ஒரு தமிழ்த் தொலைக்காட்சி வாயிலாகத் தனது ஆவலாதியை வெளியிட்டார். "எங்களிடத்தில் சொல்லியிருக்கக் கூடாதா? ஒரே இரவில், சிவகாசியில், திருப்பூரில், ஈரோட்டில், கரூரில், நாமக்கல்லில் நூற்றுக்கணக்கான கொடிகளைத் தயாரித்துக் கொடுத்திருப்போமே?"

அப்பாவு ஒலித்தது ஓர் இந்தியக் குடிநபரின் குரல். உண்மை, தமிழகத்தில் தயாரித்திருக்கலாம். அல்லது ஆலையும் அச்சகமும் உள்ள ஏதேனும் ஓர் இந்திய நகரத்தில் தயாரித்திருக்கலாம். அந்தக் கொடிகளைக் கனடா மாநாட்டில் பறக்கவிட்டிருக்கலாம். தர்மசங்கடம் தவிர்க்கப்பட்டிருக்கும். ஆனால் கர் தோறும் பறக்கவிடப் போதுமான ஆலைகளும் நவீன அச்சகங்களும் நம்மிடம் இல்லை. அதனினும் முக்கியமாகச் சீனாவின் விலையோடு நம்மவர்களால் போட்டியிட முடிவதில்லை.

சீனத் தயாரிப்பில் இந்தியக் கொடி

இந்தப் பிரச்சினை ஹர் கர் திரங்காவால் மட்டும் வந்ததில்லை. பல ஆண்டுகளாகவே சீனாவில் தயாரிக்கப்பட்ட இந்தியக் கொடிகள் பட்டொளி வீசிப் பறக்கின்றன. ஐந்தாண்டுகளுக்கு முன்னால் ஓர் ஆங்கில ஊடகம் களத்தில் ஆய்வு நடத்தியது. அப்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பெரிய கொடிகளின் (12'x 8') விலை, ரூ.230 முதல் ரூ.250 வரை விற்கப்பட்டபோது, சீனத் தயாரிப்புக் கொடிகள் ரூ.200க்குக் கிடைத்தன. அதற்கடுத்த அளவிலான (8'x6') உள்ளூர் தயாரிப்புகளின் விலை ரூ.130 முதல் ரூ.150ஆகவும், சீனத் தயாரிப்புகள் ரூ.90 ஆகவும் இருந்தன.

இந்த முறை விடுதலை நாளுக்கு ஒரு வாரம் முன்னதாகவே, ‘சீனா தயாரித்த கொடிகளைப் புறக்கணிப்போம்’ என்றொரு குரல் புனேவிலிருந்து ஒலித்தது. குரலுக்குச் சொந்தக்காரர் கிரீஷ் முருத்கர். இந்தியத் தேசியக் கொடிக்காகவே ஒரு ‘ஃப்ளேக் பவுண்டேஷன் ஆஃப் இந்தியா’ (Flag Foundation of India) அமைப்பை நடத்திவருபவர்.

கால்வான் எதிரொலி

சீனப் பொருட்களைப் புறக்கணிப்போம் என்கிற முழக்கம் நமக்குப் புதியதன்று. அது ஒவ்வொரு தீபாவளியின்போதும் பட்டாசுச் சத்தம் ஒலிப்பதற்கு முன்பு மேலெழும்பும். வெடி வெடித்து முடிந்ததும் தேய்ந்துபோகும். புறக்கணிப்புக் குரல் உச்சத்தில் ஒலித்தது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால். 2020, ஜூன் 15 அன்று கால்வான் பள்ளத்தாக்கில் இந்தியப் படை வீரர்கள் உயிர் நீத்தபோது, அந்த முழக்கத்தைப் பரவலாகக் கேட்க முடிந்தது. அப்போது இணையதளம் ஒன்றில் படித்த செய்தியை மறக்க முடியாது.

மதுரை பைபாஸ் சாலை உணவகம் ஒன்றின் உரிமையாளர் தனது கடை வாசலில் சீன உணவு வகைகள் இனி இங்கு விற்பனை இல்லை என்று கையால் எழுதிய அறிவிப்புப் பலகையை மாட்டினார். கூடவே சீனப் பொருட்களைப் புறக்கணிப்போம் என்கிற அச்சடித்த சுவரொட்டியையும் ஒட்டினார். அந்த உணவகத்திற்கு எந்த மூலப்பொருளும் சீனாவிலிருந்து வரவில்லை. ஃப்ரைடு ரைஸ், நூடுல்ஸ் என்கிற பெயர்களுக்கு அப்பால் அந்த உணவு வகைகளுக்கும் சீனாவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவை சீன உணவிற்கு அந்நியமான காரம், குணம், மணம் நிரம்பியவை. எனினும் கால்வான் பள்ளத்தாக்கிலிருந்து 3,000 கிலோ மீட்டருக்கு அப்பால் வசிக்கும் ஒரு வணிகர், சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு ஆற்றிய எதிர்வினை அது.

இந்தச் செய்தி நினைவில் இருப்பதற்குக் காரணம் அதன் பின்னூட்டங்களில் ஒன்று. அது இப்படி இருந்தது: “அந்தச் சுவரொட்டியைப் பெரிதாக்கிப் பாருங்கள். அதன் மூலையில் சீனாவில் தயாரிக்கப்பட்டது என்கிற வாசகம் இருக்கிறது.” நான் பெரிதாக்கிப் பார்த்தேன். அப்படி எந்த வாசகமும் இல்லை. அது ஒரு பகடி. அதை எழுதியவர் சீனாவைச் சுலபமாகப் புறக்கணித்துவிட முடியாது என்று சொல்லவருவதாக நாம் எடுத்துக்கொள்ளலாம். அவர் சீனாவைப் புறக்கணிக்க வேண்டாம் என்று சொல்வதாக நான் நினைக்கவில்லை, மாறாக அது சிரம சாத்தியம் என்கிறார்.

தடை தாண்டும் ஓட்டம்

கால்வான் சம்பவத்திற்குப் பிறகு, ஒன்றிய அரசின் பல துறைகளும் சீனப் புறக்கணிப்பை முன்னெடுத்துவருகின்றன. சுமார் 200 சீனச் செயலிகளைத் தடை செய்திருக்கிறது தகவல் தொழில்நுட்பத் துறை. சீனாவின் மின் உற்பத்திக் கருவிகளை இனி இறக்குமதி செய்யயலாகாது என்றது மின் துறை. சீனாவின் கட்டுமான நிறுவனங்களுக்குப் புதிய ஒப்பந்தங்களை வழங்க மறுத்து வருகின்றன ரயில்வே துறையும் தேசிய நெடுஞ்சாலைத் துறையும்.

ஹூவாயி, ‘ஸெட்டிஇ’ (ZTE) ஆகிய சீன நிறுவனங்கள் 5ஜி அலைக்கற்றையை இந்தியாவிற்குள் கொண்டுவர முடியாது; தடை விதித்திருக்கிறது தொலைத்தொடர்புத் துறை. சீனாவிலிருந்து வரும் முதலீடுகள் மீதான சிவப்பு நாடைவை இறுக்கியது நிதித் துறை. அதிக அளவில் இறக்குமதி செய்யப்படும் சீனப் பொருட்களுக்குக் கூடுதல் தீர்வை விதித்தது சுங்கத் துறை.

இப்படி வரிசையாகத் தடைகளைப் போட வேண்டாம் என்று சொல்கிறது சீனா. எல்லைப் பிரச்சினைகளைத் தனியாகப் பேசிக்கொள்ளலாம், வணிகம் தொடரட்டும் என்பது சீனாவின் கோரிக்கை. இந்தியா அதை ஒப்பவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் 15 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தேறிவிட்டன.

சீனப் படைகள் பின் வாங்கியபாடில்லை. எல்லைப் பிரச்சினையைத் தீர்த்துக்கொண்டு வணிகத்தைப் பற்றிப் பேசுவோம் என்பது இந்தியாவின் நிலைப்பாடு. அப்படியானால் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய-சீன வணிகம் பாதிக்கப்பட்டதா? சீனப் பொருட்களின் இறக்குமதி குறைந்ததா? புள்ளிவிவரங்கள் சொல்லும் செய்தி எதிர்த்திசையில் இருக்கிறது.

2021ஆம் ஆண்டில் இந்திய-சீன வணிகம் முதன்முறையாக 100 பில்லியன் டாலரைக் கடந்தது. ஆண்டிறுதியில் இரண்டு நாடுகளுக்கிடையேயான மொத்த விற்று வரவின் மதிப்பு 125.7 பில்லியன் டாலரை (சுமார் 10 லட்சம் கோடி ரூபாய்) எட்டியது. இது எப்போதும்போல் ஒரு சமனற்ற வணிகமாகவே இருந்தது. அதாவது இறக்குமதி அதிகமாகவும் ஏற்றுமதி குறைவாகவும் உள்ள வணிகம். கடந்த ஆண்டில் இந்தியா சீனாவிடமிருந்து இறக்குமதி செய்த பொருட்களின் மதிப்பு 97.5 பில்லியன் டாலர், ஏற்றுமதி செய்த பொருட்களின் மதிப்பு 28.1 பில்லியன் டாலர். 2021ஆம் ஆண்டின் முடிவில் ஐந்தொகை எழுதியபோது, அது 69.4 பில்லியன் டாலர் சீனாவிற்குச் சாதகமாக முடிந்தது.

எத்தனை தடைகள் விதித்தாலும் அதைச் சீனாவால் எப்படித் தாண்டிக் குதிக்க முடிகிறது? அந்த அளவிற்கு நமது சந்தை சீனாவைச் சார்ந்திருக்கிறதா?

சீனப் பிள்ளையார்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பேனா, பென்சில், பண்டம், பாத்திரம் என்று ஏராளமான பொருட்களில் ‘சீனாவில் தயாரிக்கப்பட்டது’ என்கிற ஸ்டிக்கரைப் பார்க்கிறோம். இந்தப் பட்டியலில் ஹாலிபேக்ஸ் நகரில் அப்பாவிடம் கொடுக்கப்பட தேசியக் கொடியையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். எனது நண்பர் வழங்கிய பிள்ளையார் சிற்பத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அந்தச் சிற்பத்தில் ஸ்டிக்கர் இல்லை. பள்ளிச் சீருடையில் குறும்புப் பார்வையுடன் கூடிய பிள்ளையார். எனது பிள்ளைகளுக்குப் பிடித்துக்கொண்டது. வெகு நாட்கள் எங்கள் வீட்டுத் தொலைக்காட்சிப் பெட்டியின் மேல் நின்று கொண்டது. சில பண்டிகைகளை அயல் நாட்டு இந்தியர்கள் உள்நாட்டினரைவிட விசேடமாகக் கொண்டாடுவார்கள்.

எனது ஹாங்காங் நண்பருக்கு நவராத்திரி அப்படியான பண்டிகை. அவர் வீட்டிற்குக் கொலுப் பார்க்கப் போகும் பெண்டிருக்கு வெற்றிலை பாக்கு கிடைக்கும்; கூடவே கண்ணைக் கவரும் ஒரு பிள்ளையாரும் கிடைப்பார். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விதமான பிள்ளையார். இந்தச் சீருடைப் பிள்ளையார் வீட்டுக்கு வந்ததும் நண்பரிடம் கேட்டேன்: ‘எப்படி இத்தனை பிள்ளையார்களைச் சென்னையிலிருந்து கொண்டு வருகிறீர்கள்?’ நண்பர் திருத்தினார். சென்னையிலிருந்து அல்ல, ஷென்ஜனிலிருந்து. சீன நகரத்திலிருந்து பிள்ளையார் சிற்பமா? இப்போது எனது கேள்விகள் கூடின.

‘விலை அதிகமா?’

‘இல்லை, குறைவு’

‘ஒவ்வொரு ஆண்டும் பிள்ளையார் வேறு வேறு வடிவம் எடுக்கிறாரே, வாங்குகிற இடத்தை மாற்றுவீர்களா?’

அடுத்தடுத்த ஆச்சரியங்களுக்கு நான் தயாராக இல்லை. ஆனால் நண்பர் தீர்மானமாக இருந்தார். அவர் சொன்னார்: ‘இன்னும் 200 ஆண்டுகளுக்கு நான் இடத்தை மாற்ற வேண்டியதில்லை. பிள்ளையார் மாடலைத் தேர்ந்தெடுத்து பணத்தையும் செலுத்தினால், இரண்டு வாரத்தில் 50 பிள்ளையார்கள் எனது ஹாங்காங் வீட்டு வாசலில் அணிவகுத்து நிற்பார்கள்.’

நண்பர் அன்பளிப்பாக வழங்கும் பிள்ளையார் சிற்பம் ஒன்றரை அடி உயரம் இருக்கும். எனில், சீனாவால் ‘உயர்ந்த’ சிற்பங்களையும் உருவாக்க முடியும். 2014ஆம் ஆண்டு குஜராத்தில் நிறுவப்பட்ட சர்தார் பட்டேலின் சிலை 600 அடி உயரம், செலவு: ரூ.2,700கோடி. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஹைதராபாத்தில் நிறுவப்பட்ட ராமானுஜரின் சிலை 216 அடி உயரம், செலவு: ரூ.1,000 கோடி. இரண்டு சிலைகளும் (அல்லது அவற்றின் கணிசமான பாகங்கள்) சீனத் தயாரிப்புகள்.

படேல் நின்ற கோலத்திலும் ராமானுஜர் அமர்ந்த கோலத்திலும் காட்சி தருகிறார்கள். இரண்டு சிலைகளுக்கும் பெயர்கள் உண்டு. முன்னவரின் பெயர் ‘ஒற்றுமையின் சிலை’, பின்னவரின் பெயர் ‘சமத்துவத்தின் சிலை’. பெயர்களை நம்மவர்கள்தான் சூட்டினார்கள். அதில் சீனர்கள் எந்தப் பங்கும் கோர முடியாது.

எடை கூடியது இறக்குமதித் தட்டு

இப்படி அழி ரப்பரிலிருந்து அதி உயரச் சிலைகள் வரை சீனப் பொருட்கள் நம்மிடையே உலவுகின்றன. அவை நம் கண்களுக்கு வெளிப்படையாகத் தெரிகின்றன. ஆனால், சீன இறக்குமதிகளில் இந்தப் பொருட்களின் பங்கு குறைவுதான். அப்படியானால் கணிசமான பங்கு வகிக்கும் பொருட்கள் எவை?

ஹாங்காங்கிலிருந்து வெளியாகும் 'சவுத் சைனா மார்னிங் போஸ்ட்' அந்தப் பொருட்களைப் பட்டியலிட்டது. இந்தியா இறக்குமதி செய்யும் மின்னணு சார்ந்த பொருட்களில் 60% சீனத் தயாரிப்புகள், மருந்துகளுக்கான மூலப் பொருட்களில் 70% சீனாவிலிருந்து வருகின்றன, ஆட்டோமைபல் உதிரிப் பாகங்களில் 25% சீனாவில் தயாராகின்றன.

இந்தியர்கள் பயன்படுத்தும் நீடித்துழைக்கும் பயனர் பொருட்களில் 45% சீனத் தயாரிப்புகள். ‘கன்ஸ்யூமர் டியூரப்ல்ஸ்’ (Consumer Durables) என்று சந்தையில் வழங்கப்படும் இந்த நீடித்துழைக்கும் பொருட்களில் குளிர் சாதனம், சலவை இயந்திரம், சோபா போன்ற வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள், ஆபரணம், சைக்கிள், குடை, பொம்மை, விளையாட்டுக் கருவிகள் முதலானவை வரும்.

இந்தியா மருந்துத் தயாரிப்பில் முன்னணியில் இருக்கிறது. பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவிற்கு ‘உலகத்தின் மருந்தகம்’ என்கிற பெயர் அப்படி வந்ததுதான். ஆனால், அதன் அடித்தளம் பலவீனமாக இருக்கிறது. கரோனாவிலிருந்து உலகம் மீண்டெழுந்தபோது, சீனத் தயாரிப்புகளுக்கு பெரும் கிராக்கி இருந்தது. நிலவில் உள்ள உற்பத்திச் சங்கிலியின் வாயிலாகச் சீனப் பொருட்கள் பல நாடுகளுக்குக் காலகாலத்தில் போய்ச் சேரவில்லை. மூலப்பொருட்களின் போதாமையால் இந்தியாவில் மருந்து உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது. நமது சார்புநிலை வெட்ட வெளிச்சமாகியது. எனினும் நாம் பாடம் கற்றதாகத் தெரியவில்லை.

எடை குறைந்தது ஏற்றுமதித் தட்டு

அடுத்து, இந்தியா சீனாவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்கள் யாவை? இரும்புத் தாது, கடல்சார் பொருட்கள், மசாலா பொருட்கள், வேதிப் பொருட்கள், பெட்ரோலியப் பொருட்கள் முதலானவை. அதாவது இந்தியா, சீனாவிற்கு ஏற்றுமதி செய்பவை முக்கியத்துவம் குறைந்த மூலப் பொருட்களாகவும் இடைநிலைப் பொருட்களாகவும் இருக்கின்றன.

அதேவேளையில் இறக்குமதி செய்பவை முழுமையடைந்த பொருட்களாகவும் இன்றியமையாத மூலப் பொருட்களாகவும் இருக்கின்றன. இதுதான் சமனற்ற வணிகத்திற்குக் காரணம். சீனப் பொருட்களைப் புறக்கணிக்க முடியாத நிலை நீடிப்பதற்கும் காரணம்.

என்ன செய்யலாம்?

இரண்டு காரியங்களைச் செய்யலாம். முதலாவதாக, நமது சிறு குறு நடுத்தரத் தொழில்கள் கடும் அவதியில் இருக்கின்றன. ஜிஎஸ்டி போன்ற வரிவிதிப்புகளால் அவற்றின் இன்னல்கள் பெருகிவிட்டன. அவற்றை மீட்டெடுக்க வேண்டும். பெரும் முதலாளிகளுக்கு மட்டும் சார்பான நிலைப்பாட்டால் இந்தப் பிரச்சினை வளரவே செய்யும். 2011இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தொழில் துறையின் பங்கு 23%ஆக இருந்தது.

இதை அதிகரிப்பதன் அவசியம் அப்போது பேசப்பட்டது. தொடர்ந்தும் பேசப்படுகிறது. ஆனால், நடந்தது வேறு. இப்போது அது 17%ஆகியிருக்கிறது. தொழில் துறைக்கு ஆதரவான கொள்கைகள் வகுக்கப்படவும் நடைமுறைப்படுத்தப்படவும் வேண்டும். 1990களில் மருந்து உற்பத்திக்கான பல வேதிப் பொருட்களைத் தயாரித்தவை பொதுத் துறை நிறுவனங்கள். புதிய பொருளாதாரக் கொள்கைகளால் அவை நசித்துவிட்டன. அவற்றுக்கு உயிரூட்ட வேண்டும்.

இரண்டாவதாக, நமது மனிதவளத்தை மேம்படுத்த வேண்டும். நம்மிடம் மனிதவளம் இருக்கிறது. ஆனால், பெருந்தொகைத் தொழிலாளரால் திறன் குறைந்த பணிகளில்தான் ஈடுபட முடிகிறது. பெண்களால் உற்பத்தியில் பங்கெடுக்க முடிவதில்லை. இரண்டுக்கும் காரணம் நமது நாடு கல்வியிலும் உடல் நலத்திலும் பின் தங்கியிருக்கிறது. அரசு, கல்வியையும் மருத்துவத்தையும் எல்லோருக்குமானதாக மாற்ற வேண்டும். அது இலவசமாகாது. அது மக்களின் அடிப்படை உரிமையாகும். அதைச் செய்தால் நாடும் நலம் பெறும், நாட்டு மக்களும் நலம் பெறுவார்கள்.

கரோனா காலத்தில் நமது பிரதமர் ‘ஆத்ம நிர்பார் பாரத்’ (இந்தி தெரிந்தவர்களின் மொழிபெயர்ப்பு: சுய சார்புள்ள இந்தியா) என்கிற முழக்கத்தை முன்னெடுத்தார். இதை முழு மூச்சில் நடப்பிலாக்க வேண்டும். அதற்கேற்றவாறு நமது தொழில் துறையும் தொழிலாளரும் தகவமைக்கப்பட வேண்டும்.

அப்போது கனரக இயந்திரங்களும் மின்னணுச் சாதனங்களும் வேதிப் பொருட்களும் இந்தியாவில் தயாராகும். அப்போது எனது நண்பர் பிள்ளையார் சிற்பங்களை சென்னையிலிருந்து வாங்குவார். மதுரை பைபாஸ் உணவக உரிமையாளர் ஃப்ரைடு ரைஸூம் நூடுல்ஸூம் விற்கத் தொடங்குவார். இந்திய தேசியக் கொடிகள் திருப்பூரிலும் சிவகாசியிலும் தயாராகும். அப்பாவு ஆவலாதிப்பட மாட்டார். 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
மு.இராமநாதன்

மு.இராமனாதன், பொறியாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com


3

2

பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Ayyanar Edadi   2 years ago

ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க வேண்டிய கட்டுரையாக கருதுகிறேன்.பொதுவாக சீனத் தயாரிப்புகளை புறக்கணிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு தான் முதல் இடத்தில் இருக்கிறது.இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் தலைமை மாற வேண்டும். ஏன் இன்னும் நாம் மற்ற நாடுகளை நம்பிக்கொண்டிருக்கிறோம் என்று தெரியவில்லை.ஒரு வேலை இந்திய நாட்டு தயாரிப்புகள் தரமில்லாது இருக்கிறதா என்ற ஐயப்பாடும் எழுகிறது

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

2015 வெள்ளம்கல்சுரல் காபிடல்மக்களவைபாரத் ராஷ்ட்ர சமிதிபருக்கைக் கண்ஜனநாயக வானில் நம்பிக்கைக் கீற்றுகள்மதவியம்ஓய்வுபெற்ற டிஜிபிகள்பணம்ரா.செந்தில்குமார் பேட்டிஅரவிந்த் கேஜ்ரிவால்வரிஆ.சிவசுப்பிரமணியன் சமஸ் பேட்டிநதி நீர் பிரச்சினைதேசிய இயக்கம்விசிலூதிகள்உற்பத்தி வரிபல்கலைக்கழகங்கள்உண்மை விமர்சனம்இந்திரா காந்திஜெய்பீம் ஞானவேல்ஒன்றிய நிதிநிலை அறிக்கைஅறிவுஜீவிபுரதப் புதையலும் கொழுப்புக் குவியலும்!லிண்டா கிராண்ட்தமிழில் அர்ச்சனைஅரவிந்த் பனகாரியாஆண்டாள்எழுத்துத் தேர்வுகு.கணேசன் கட்டுரை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!