கட்டுரை, அரசியல், சர்வதேசம் 7 நிமிட வாசிப்பு

வரவேற்பறையில் டிராகன்

ப.சிதம்பரம்
01 Aug 2022, 5:00 am
0

கார்கில் போரில் வென்ற 23வது ஆண்டை கடந்த ஜூலை 26இல் நாடு கொண்டாடியது. போரில் பங்கேற்றவர்களின் நினைவை அரசு போற்றுவது - அதிலும் உயிர்த் தியாகம் செய்த ஜவான்களுக்கு அஞ்சலி செலுத்துவது - பொருத்தமான செயலாகும். மூன்று மாதங்கள் நடந்த அந்தப் போரில் 527 இந்திய ஜவான்கள் இறந்தனர், 1,363 பேர் காயம் அடைந்தனர். நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் காக்க நாடு செய்த ‘சிறிய தியாகம்’ அல்ல அது.

ஐம்பதாண்டுகளுக்கு முன் நாடு இன்னொரு போரிலும் வென்றது. அது வங்கதேச விடுதலைக்கான போர். இந்திய ராணுவம் அந்தப் போரை இரு முனைகளில் எதிர்கொண்டது. கிழக்கு எல்லையில் ‘முக்தி வாஹினி’ என்கிற வங்கதேச விடுதலைப் படைக்கு உதவ அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் போர் நடத்தியது. மேற்கு எல்லையில் பாகிஸ்தான் விமானப் படை 11 இந்திய விமானப் படை நிலையங்கள் மீது தொடுத்த தாக்குதலுக்குப் பதிலடி அளித்தது. பிரதமர் இந்திரா காந்தியின் உத்தரவுப்படி, பாகிஸ்தானுக்குள் முழுதாகப் புகுந்து போர் செய்தது.

இந்தியத் தரப்பில் 3,000 ராணுவ வீரர்கள் இறந்தனர், 12,000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பாகிஸ்தானின் கிழக்குப் பிரிவு தரைப்படைத் தளபதி லெப்.ஜெனரல் ஏ.ஏ.கே.நியாஸி, நிபந்தனையின்றி இந்திய ராணுவத்திடம் சரண் அடைவதாக 1971 டிசம்பர் 16இல் அறிவித்தார். அதற்கான ஒப்பந்தத்தில் இந்திய ராணுவ அதிகாரி லெப். ஜெனரல் ஜே.எஸ்.அரோரா முன்னிலையில் கையெழுத்திட்டார். இந்திய ராணுவத்துக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி அது.

யானையல்ல, டிராகன்

அந்த இரண்டு போர் வெற்றிகளுமே பாகிஸ்தானுக்கு எதிரானவை. 1947, 1965 என்று இரு ஆண்டுகளில் நிகழ்த்திய போர்களில் இந்தியாவிடம் தோற்றும் பாகிஸ்தான் ராணுவம் பாடம் கற்கவில்லை. 1971இல் மிகப் பெரிய அளவில் தோற்ற பிறகும்கூட 1999இல் கார்கில் மலைப்பகுதியில் மிகப் பெரிய எண்ணிக்கையில் ரகசியமாக ஊடுருவியது. கார்கில் போர் தோல்விக்குப் பிறகும்கூட இந்தியப் பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தும் நடவடிக்கைகளை பாகிஸ்தான் கைவிடவில்லை.

மரபான போரில் இந்தியாவை ஒருகாலும் வெல்ல முடியாது என்று தெரிந்திருந்தும், சமாதானத்தை விரும்பாத அண்டை நாட்டுடன் சேர்ந்து வாழ வேண்டிய நிலையில் இருக்கிறோம். எனவே இடையூறை ஏற்படுத்தக்கூடிய யானையாக நம்முடைய வரவேற்பறையில் பாகிஸ்தான் இல்லை.

யானை அல்லது டிராகனாக நம்முடைய அறையை ஆக்கிரமித்திருப்பது சீனா. பாகிஸ்தானுக்கு எதிராக முண்டா தட்டும் இந்தியா, சீனத்தின் ஆக்கிரமிப்பு முயற்சிகளை எப்படி முறியடிப்பது என்ற தெளிவில்லாமல் திணறுகிறது என்பது மட்டும் நிச்சயம். தமிழ்நாட்டின் மகாபலிபுரத்தில் 2019 அக்டோபர் 11இல் ஒரே ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடியபோது, சீன அதிபர் ஜி ஜின் பிங் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளாமல் போய்விட்டதே என்ற உறுத்தல் பிரதமர் மோடியைக் குடைந்துகொண்டிருக்க வேண்டும்.

கடலிலிருந்து வீசிய மெல்லிய காற்றுக்கேற்ப ஊஞ்சல் அசைந்து ஆடியபோது, சீனத்தின் ‘மக்கள் விடுதலை சேனை’ (பிஎல்ஏ), இந்திய எல்லையில் ஊடுருவித் தாக்குவதற்கான திட்டத்தை வெகு தீவிரமாக தயாரித்துக்கொண்டிருந்தது. 2020 ஜனவரி முதல் தேதி ராணுவ நடவடிக்கைக்கான ஆணையில் ஜி ஜின் பிங் கையெழுத்திட்டுவிட்டார். மக்கள் விடுதலைச் சேனை, கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டைக் கடந்து இந்தியப் பகுதிக்குள் 2020 மார்ச் - ஏப்ரலில் நுழைந்துவிட்டது. 

ஒன்றுக்கொன்று முரணான குரல்கள்

சீன ஊடுருவலை இந்தியா 2020 மே 5-6 தேதிகளில்தான் கண்டுபிடித்தது. ஜூன் 15இல் ஊடுருவல்காரர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் வீரம் மிக்க 20 இந்திய ராணுவ ஜவான்கள் தங்களுடைய இன்னுயிரை ஈந்தனர். பிரதமர் மோடி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஜூன் 19இல் கூட்டினார். சீன ஊடுருவல் குறித்த தகவல்களைத் தெரிவித்த பிறகு முடிவுரையாக ஒன்றைக் கூறினார். “எந்த அன்னியரும் இந்திய எல்லைக்குள் ஊடுருவவில்லை, இந்தியப் பிரதேசத்தில் எந்த அன்னியரும் இல்லை.” இருப்பினும் ஏராளமான ராணுவ அதிகாரிகள், எல்லைப் பிரச்சினை நிபுணர்களின் கருத்துகளின்படி, ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள நிலத்தின் மீது இந்தியா தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்திருந்தது.

இரு நாடுகளுக்கும் இடையில் ராணுவ நிலையில் 16 சுற்றுப் பேச்சுகள் நடந்து முடிந்துள்ளன. இந்தியப் பிரதேசத்தில் அன்னியர்கள் எவரும் இல்லை என்றால் 20 இந்திய வீரர்கள் தங்களுடைய உயிரைத் தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏன் வந்தது? இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் இடையில், முடிவே இல்லாத இந்தச் சந்திப்புகளின்போது என்ன பேச்சுவார்த்தை நடக்கிறது? இந்திய வெளியுறவு அமைச்சகம் ஏன், ‘போர்க்களத்திலிருந்து விலகுவது’, ‘படைகளைத் திரும்ப அழைத்துக்கொள்வது’ என்ற வார்த்தைகளை அடிக்கடி குறிப்பிடுகிறது? இந்திய – சீன எல்லைப் பகுதியில் தாக்குதலுக்கு முந்தைய நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் அறிக்கையும் அமைச்சகத்தின் பிற அறிக்கைகளும் தொடர்ந்து கோருகின்றன அல்லவா?

கசப்பான உண்மைகளை ஒப்புக்கொள்வோம். கல்வான் பள்ளத்தாக்கு முழுவதுமே தனக்குச் சொந்தம் என்று உரிமை கொண்டாடுகிறது சீனம். கட்டுப்பாட்டு எல்லைக்கோடு ‘நாலாவது விரல்’ வழியாக – ‘எட்டாவது விரல்’ வழியாக அல்ல – செல்கிறது என்கிறது சீனம். (நாலாவது விரலுக்கும் எட்டாவது விரலுக்கும் இடைப்பட்ட நிலப் பரப்பு 2020 மே மாதத்துக்கு முன்னால் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. இங்கே ‘விரல்’ என்பது, ‘விரல்’ போன்ற நிலப்பகுதியைக் குறிப்பது). 16வது சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது ‘ஹாட் ஸ்பிரிங்ஸ்’ (வெந்நீர் ஊற்று) உள்ள இடத்தில் ஒரு அங்குலத்தையும் விட்டுத்தர முடியாது என்று மறுத்துவிட்டது.

டேம்சாக், டேப்சாங் குறித்து இந்தியா பேச விரும்பியபோது, அவை பற்றிப் பேசவும் சீனா மறுத்துவிட்டது. அக்சாய் சின் பகுதியில் ராணுவத் தாக்குதலுக்கு உதவும் கட்டுமானங்களை, இந்தியாவை ஒட்டிய 3,488 கிலோ மீட்டர் நெடுகிலும் அது மேற்கொண்டுவருகிறது. கட்டுப்பாட்டு எல்லைக் கோடு வரையிலும் 5ஜி தகவல்தொடர்பு வசதிகளை செய்துகொண்டுவிட்டது. பாங்காங் சோ ஏரியின் மீது புதிதாக பாலம் கட்டியிருக்கிறது. எல்லைக்கு மேலும் அதிக எண்ணிக்கையில் துருப்புகளையும் ராணுவப் போர்க்கருவிகளையும் கொண்டுவந்து குவிக்கிறது. புதிதாக தான் கட்டிவரும் கிராமங்களில் மக்களைக் குடியமர்த்திவருகிறது. இவற்றையெல்லாம் வானிலிருந்து எடுக்கப்படும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் தெரிவிக்கின்றன.

சீனம் தொடர்பான கொள்கையே இல்லை!

“ஆசியாவில் தன்னுடைய ஆதிக்கத்துக்குக் கட்டுப்பட்டு இரண்டாவது இடத்தில்தான் இந்தியா இருக்க வேண்டும் என்று சீனம் விரும்புகிறது. சீனம் விரும்பும் அதிகாரப் படிநிலையை இந்தியா ஏற்காது, சீன ஆக்கிரமிப்பில் உலகம் வருவதற்கும் அது இடம் கொடுக்காது” என்று முன்னாள் வெளியுறவுத் துறைச் செயலாளர் சியாம் சரண் தனது சமீபத்திய புத்தகத்தில் ('ஹவ் சீனா சீஸ் இந்தியா அண்ட் தி வேல்டு' - How China sees India and the World) குறிப்பிட்டிருக்கிறார். இது முற்றிலும் சரி.

சீனம் ஏன் இப்படி தன்னுடைய வல்லாதிக்கத்தை நிலைநிறுத்த முற்படுகிறது என்பதையும் அந்தப் புத்தகத்தில் சியாம் சரண் விவரித்திருக்கிறார். “பொருளாதாரம், ராணுவம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவில் பெரிய இடைவெளி இருப்பதாலும் அது தொடர்ந்து சீனத்துக்கு ஆதரவாகவே வளர்வதாலும் சீனா தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டப் பார்க்கிறது என்கிறார். பன்னாட்டுச் செலாவணி நிதியத்தின் கணக்குப்படி, 2021இல் சீனத்தின் ஜிடிபி 16,863 பில்லியன் அமெரிக்க டாலர்கள், இந்தியாவின் ஜிடிபியோ 2,946 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே.

இந்தியாவில் எந்தக் கட்சி ஆளுங்கட்சியாக இருந்தாலும், சீன விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் அரசுக்கும் இந்திய ராணுவத்துக்கும் ஆதரவாகத்தான் எல்லா காலங்களிலும் இருந்துவருகின்றன. இந்திய அரசியல் கட்சிகளுக்கு இடையிலும் மக்களுக்கு இடையிலும் ஒற்றுமை நிலவுவது மிகவும் முக்கியமானது. ஆனால், இப்படி ஒற்றுமையாக இருப்பதும் ஆதரவு தெரிவிப்பதுமே சீனக் கொள்கையாகிவிடாது.

எதிர்க்கட்சிகள் மீது அரசு நம்பிக்கை வைத்து, சீன விவகாரத்தின் அனைத்து உண்மைகளையும் பகிர்ந்துகொண்டால் மட்டுமே வெளிப்படையாக விவாதித்து, சீனாவை நாம் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற கொள்கையை உருவாக்க முடியும். இல்லாவிட்டால் இரு நாட்டு ராணுவத் தளபதிகளும் எத்தனை முறை சந்தித்துப் பேசினார்கள் என்ற எண்ணிக்கையை மட்டுமே அதிகரிக்கச் செய்வதுடன், நமக்கு ஏதோ சீனக் கொள்கை இருக்கிறது என்ற தவறான திருப்தியுடன், மாறிவிட்ட இந்தச் சூழலில் காலத்தைக் கடத்திக்கொண்டிருப்போம்.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

3

1

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

பொதுவுடைமைஇணையம்திராவிட இயக்க இதழ்கள் புறக்கணிக்கப்பட்டனவா?தேசிய மாநாட்டுக் கட்சிதமிழ் உரிமைஇத்தாலிகதைசொல்லல்வடகிழக்குவிழிஞ்சம் துறைமுகம்நிதிநிலை அறிக்கைதமிழக நிதிநிலை அறிக்கைபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாஏழைகளின் உணர்வுகளுடன் விளையாடும் பைஜூஸ்!சிவசங்கர் எஸ்.ஜேபசி மயக்கம்சர்தார் வல்லபபாய் படேல்தமிழ்நாட்டின் எதிர்வினைமுரளி மனோகர் ஜோஷிரசாயன உரம்மாநிலத் தலைகள்: ரேவந்த் ரெட்டிதிசு ஆய்வுப் பரிசோதனைவசந்திதேவிசென்னை மாநகராட்சி மருத்துவக் கல்லூரிஉணவு மானியம்வருமுன் காப்போம்அம்பேத்கர் அருஞ்சொல் கட்டுரை நாளை சென்னையா?எடை குறைப்புகேசிஆர்திராவிட இயக்கமும் ஆரிய மாயைகளும்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!