கோணங்கள் 8 நிமிட வாசிப்பு

ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் வேண்டுமா, கூடாதா?

டி.வி.பரத்வாஜ்
24 Dec 2021, 5:00 am
0

நாகாலாந்தில், நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களை ஏற்றி வந்த லாரியை, ‘பயங்கரவாதிகள் வந்த லாரி’ என்று கருதி துப்பாக்கிச்சூடு நடத்தியது ராணுவம். அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்த சம்பவமானது, அங்கு கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. அரசுக்கு எதிரான போராட்டங்களின் ஒரு பகுதியாக, ராணுவத்துக்கு வானளாவிய அதிகாரம் கொடுக்கும், ‘ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் 1958’ நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இப்போது வலுவடைந்திருக்கிறது. இதையொட்டி ‘இந்தச் சட்டம் தேவை - தேவை இல்லை’ என்று நாடு தழுவிய அளவில் விவாதம் மீண்டும் சூடுபிடித்திருக்கிறது. இங்கே இரு தரப்பையும் எதிரொலிக்கும் இரு முக்கியஸ்தர்களின்  கருத்துகளைத் தமிழ் வாசகர்கள் பார்வைக்காக ‘அருஞ்சொல்’ தொகுத்து அளித்திருக்கிறது.

 

சட்டத்தை விமர்சிக்கும் முன் தேவையையும் உணருங்கள்

பிரகாஷ் சிங், இந்தியக் காவல் துறை அறக்கட்டளைத் தலைவர் :

நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் டிசம்பர் 4 அன்று நடந்த சம்பவம் துயரகரமானது. அங்கு வாழும் கோன்யாக் பழங்குடிகள் அரசு ஆதரவாளர்கள்தான். தொழிலாளர்களைத் தீவிரவாதிகள் என்று தவறாக அடையாளம் கண்டு சுட்டிருக்கிறார்கள். இது மிகவும் துரதிருஷ்டவசமானது. இப்போது ராணுவமும், அரசும் கையோடு விசாரணைக் குழுக்களை நியமித்து  அறிக்கை கேட்டிருக்கின்றன.

இந்தச் சம்பவத்தை முன்வைத்து கலகக்கார நாகர்களின் ஆதரவாளர்கள் இந்திய ராணுவத்துக்கு களங்கத்தை ஏற்படுத்துகின்றனர். சட்டத்தைத் திரும்பப் பெறுவதுடன் தங்களுக்கென்று தனி அரசமைப்புச் சட்டம், கொடி வேண்டும் என்று கோருகின்றனர். 1950-களின் நடுப்பகுதியிலிருந்தே நமது பாதுகாப்புப் படைகள் இங்கு பல்வேறு இன்னல்களுக்கும் அரசியல்ரீதியிலான குளறுபடிகளுக்கும் இடையில்தான் பணியாற்றுகின்றனர்.

நாகர்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றாதவர்கள் என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. அரசுடன் செய்துகொள்ளும் எல்லா ஒப்பந்தங்களையுமே அவர்கள் மீறியுள்ளனர். அசாமின் நாகமலை மாவட்டத்தையும் துவான்சாங் எல்லைப்புறப் பகுதியையும் இணைத்து ஒரே அலகாக மாற்ற வேண்டும் என்று 1957-ல் கோரினர். மத்திய அரசு அதை ஏற்றது. நாகா குன்றுகள் துவான்சாங் பிரதேசம் உருவாக்கப்பட்டது. 1959-ல் கூடிய இன்னொரு நாகா மக்கள் மாநாடானது, ‘நாகாலாந்து என்ற பெயரில் தனி மாநிலம் உருவாக்கப்பட வேண்டும்’ என்று கோரியது. இதுவும் ஏற்கப்பட்டு 1963-ல் தனி நாகாலாந்து உருவாக்கப்பட்டது. ஆனாலும், அடுத்தடுத்த கோரிக்கைகளை முன்வைத்து அவை போராடுகின்றன.

மோன் மாவட்ட சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த நாகாலாந்து காவல் துறை, முதல் தகவல் அறிக்கையிலேயே ராணுவத்தின் நோக்கம் காயப்படுத்துவதும் கொல்வதும்தான் என்று குறிப்பிட்டிருக்கிறது. விசாரணைக்குப் பிறகுதான் இதை நிறுவ முடியும். காவல் துறையின் பணி இலக்கணத்துக்கே முரணானது இந்தப் பதிவு.

பயங்கரவாதிகளுக்கு எதிராகப் பாதுகாப்புப் படைகள் எடுக்கும் எல்லா நடவடிக்கைகளுமே பல எதிர்பாராத அம்சங்களை உள்ளடக்கியவை. சில வேளைகளில் உளவுத்தகவல் சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் போகலாம். சில வேளைகளில் தவறான தகவலைத் தந்து படைகளைப் பொறியில் சிக்க வைப்பதும் நடக்கும். தங்களுக்குத் தகவல் தருவது நண்பனா, பகைவனா என்று கண்டுபிடிக்க முடியாது. படையை நடத்திச் செல்பவர் சில விநாடிகளுக்குள் தவறான முடிவுகளை எடுத்துவிடக்கூடும். அம்மாதிரி தருணங்களில் தவறுகள் மட்டுமல்ல; பெரும் அபத்தங்களே நிகழ்ந்துவிடும். இராக்கில் மோசுல் நகரில் பதுங்கியிருந்த ஐஎஸ்ஐஎஸ் மீது குறிவைத்து 2017 மார்ச் 1-ல் நடந்த தாக்குதலில் 14 அப்பாவிகள் இறந்தனர்.  சிரியாவில் 2017 ஜூலை 15-ல் பன்னாட்டுப் படை விமானங்கள் டாயிஷ் தீவிரவாதிகளைத்தான் குறிவைத்தன. மாடர்ன் மெடிசின் என்ற மருத்துவமனை அருகில் நடந்த அத்தாக்குதலில் 13 சிவிலியன்கள் இறந்தனர்.  

ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் எங்கு தேவையில்லையோ அங்கிருந்து திரும்பப் பெறப்படுகிறது. 2015-ல் திரிபுராவிலிருந்தும் 2018-ல் மேகாலயாவிலிருந்தும் இப்படித் திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. அருணாசல பிரதேசத்தில் திராப், சாங்லாங், லோங்டிங் என்ற மூன்று மாவட்டங்களில் மட்டும் அமலில் இருக்கிறது. அசாம், நாகாலாந்தில் முழுமையாகவும், மணிப்பூரில் இம்பால் நகராட்சிப் பகுதி நீங்கலாகவும் அமலில் இருக்கிறது. ஜீவன் ரெட்டி விசாரணைக் குழு, இச்சட்டத்தை ரத்துசெய்துவிடலாம் என்று 2005-ல் பரிந்துரைத்தது. சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புகளையும் ஆலோசனை கலந்த பிறகுதான், அரசு இதில் முடிவெடுக்க வேண்டும்.

 

உடனடியாக நீக்கப்பட வேண்டியது இந்தக் கறுப்புச் சட்டம்

உதயன் மிஸ்ரா, எழுத்தாளர், ஓய்வுபெற்ற பேராசிரியர்:

அருணாசல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயம், மிசோரம், நாகாலாந்து, திரிபுரா மாநிலங்களில் அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமானது கலகக்காரர்களை ஒடுக்க ராணுவத்துக்கு சிறப்பு அதிகாரத்தைத் தருகிறது. இதன்படி, கலகத்தால் பாதிக்கப்பட்ட இடம் என்று அறிவிக்கப்படும் இடங்களில் இச்சட்டம் அமலாகும்.  

இச்சட்டப்படி ராணுவ அதிகாரி, அரசுக்கு எதிரான கலக நடவடிக்கையில் ஈடுபடுவோர் என்று சந்தேகப்பட்டாலே, அவர்கள் இருக்கும் இடங்களில், வாரன்ட் இல்லாமல் நுழையலாம், கைதுசெய்யலாம். தீவிரவாதிகளால் பிணையில் வைத்திருப்பதாகக் கருதப்படும் நபர்களை ராணுவம் விடுவிக்கலாம், திருடப்பட்டதாகக் கருதப்படும் எந்தச் சொத்துகளையும், தாக்குதலுக்காக வைத்திருக்கும் ஆயுதங்களையும் கைப்பற்றலாம். இச்சட்டப்படி கைதுசெய்யப்படும் நபர்களை அதிகம் தாமதிக்காமல் உடனடியாக அருகில் உள்ள காவல் துறையிடம் மேல் விசாரணைக்கு ஒப்படைத்துவிட வேண்டும். எந்தச் சூழ்நிலையில், எதற்காக அவர்களைக் கைதுசெய்திருக்கிறார்கள் என்பதைக் காவல் துறைக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துவிட வேண்டும். இந்தச் செயல்களில் ஈடுபடும் ராணுவ அதிகாரிகள் மீது வழக்கோ, விசாரணையோ மேற்கொள்ளப்பட இச்சட்டம் அனுமதிக்காது.

இந்த நடவடிக்கைக்கு முன்னதாக, சம்பந்தப்பட்ட ராணுவப் படை தங்களிடம் வழிகாட்டல் நடவடிக்கை எதையும் கேட்கவில்லை, எந்தச் சீண்டலும் இல்லாமலேயே தாங்களாகவே சுட்டுள்ளனர் என்று நாகாலாந்து காவல் துறை தனது முதல் தகவல் அறிக்கையில் பதிவுசெய்திருக்கிறது. தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்து நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்த பிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று ராணுவம் தெரிவிக்கிறது. ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் அமலில் இருக்கும் பகுதிகளில் சிவிலியன்களுடைய உயிர் எத்தகைய அச்சுறுத்தலில் இருக்கிறது என்பதையே இவை காட்டுகின்றன.

மோன் மாவட்டத்தில் நடந்த சம்பவம் விதிவிலக்கோ, தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதோ அல்ல. நிலக்கரித் தொழிலாளர்களின் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு வந்ததால் இது வெளியுலகுக்கு அம்பலமாகியிருக்கிறது. மாநிலத்தில் முழு அமைதி நிலவும்போது, பழங்குடிகள் தங்களுடைய கலாச்சார விழா (ஹார்ன்பில்) கொண்டாட்டங்களில் இருக்கும்போது இத்தாக்குதல் நடந்திருக்கிறது. ராணுவம் தேடுதல் வேட்டை அல்லது பாரா உஷார் நடவடிக்கை எடுத்தபோது இது நடந்திருந்தால் காட்சியே வேறாக இருந்திருக்கும். நாகாலாந்தில் மட்டுமல்ல, இச்சட்டம் அமலில் இருக்கும் இடங்களில் ராணுவத்தினரின் அத்துமீறல்கள் இச்சிறப்புச் சட்டம் அளிக்கும் பாதுகாப்பு காரணமாகவே வெளியுலகம் அறியாமல் மறைக்கப்பட்டுவிடுகின்றன. ஏராளமானவர்கள் இறந்துள்ளனர். சில சம்பவங்கள் மட்டுமே வெளியுலகுக்கு வருகின்றன.

இம்பாலில் ரிம்ஸ் மருத்துவமனை எதிரில் 9 அப்பாவி மக்கள் 1995-ல் மத்திய ரிசர்வ் போலீஸ் படையால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இம்பாலின் துலிஹால் விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடந்த பிறகு, 8-வது அசாம் ரைஃபிள்ஸ் படையினர் 10 பொதுமக்களைச் சுட்டுக்கொன்றனர். 2000-வது ஆண்டில் இது நடந்தது. இதற்குப் பிறகுதான் இரோம் சர்மிளா தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கி 16 ஆண்டுகள் தொடர்ந்து தேசிய அளவில் பேசப்பட்டார். அந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் அப்பாவிகள்தான் என்பதை மணிப்பூர் உயர் நீதிமன்றமும் விசாரணைக்குப் பிறகு உறுதிப்படுத்தியது.

2004-ல் தங்ஜாம் மனோரமா என்பவரை அசாம் ரைஃபிள்ஸ் படையினர் சித்திரவதை செய்து, பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தி கொன்றனர். இதைக் கண்டிக்க பெண்கள் சிலர் அசாம் ரைஃபிள்ஸ் படையின் காங்லா கோட்டை தலைமையகம் எதிரில் ஆடைகளைக் களைந்து நிர்வாணப் போராட்டம் நடத்தினர். இதற்குப் பிறகு மணிப்பூர் மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் இம்பாலுக்குச் சென்று, அவர்களுடைய ஆதங்கத்தைப் புரிந்துகொள்வதாகவும் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் மேலும் மனிதாபிமானத்தோடு செயல்படத்தக்க வகையில் திருத்தப்படும் என்றும் உறுதியளித்தார். நீதிபதி ஜீவன் ரெட்டி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கிவிடுமாறு ஜீவன் ரெட்டி பரிந்துரைத்தார். ஆனால் தேசப் பாதுகாப்பு கருதி அந்தப் பரிந்துரை ஏற்கப்படாமல், சட்டம் அப்படியே நீடிக்கிறது.

அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள உயிர் வாழ்வதற்கான உரிமையை ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் எளிதாகப் பறித்துவிடுகிறது. மத்திய அரசு வருத்தம் தெரிவித்துப் பயனில்லை, இதை உடனடியாக ரத்துசெய்வதுதான் மக்களுக்கு உண்மையான பாதுகாப்பாக இருக்கும்.

 

பேட்ரீசியா முக்கிம், ‘ஷில்லாங் டைம்ஸ்’ ஆசிரியர்:

இந்தச் சட்டத்தால் பயனில்லை என்பதற்கு நல்ல உதாரணம், இன்றைக்கும் மணிப்பூரில் 32 தீவிரவாத அமைப்புகள் செயல்படுகின்றன. நாகாலாந்தில் பெரும்பாலான தீவிரவாத அமைப்புகள், ‘நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில்-ஐசக் முய்வா’ (என்எஸ்சிஎன்-ஐமு) என்ற ஒரே பதாகையின் கீழ் சமரசப் பேச்சுகளில் ஈடுபட்டுள்ளன. அவற்றின் கோரிக்கைகள் தெளிவில்லாமல் இருக்கின்றன. சட்டம், ஒழுங்கு நிலைமை மிக மோசமாக பாதிக்கப்பட்டால்தான், ஒரு பிரதேசத்தை, ‘கலகம் பாதித்த பகுதி’யாக  அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வழிகாட்டியிருக்கிறது. சிறப்பு அதிகாரச் சட்டத்தின் மூன்றாவது பிரிவு காலவரம்பின்றி ஒரு பகுதியைக் கலவரப் பகுதியாக அறிவிக்க அனுமதிக்கிறது என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. ஆறு மாதங்களுக்கொருமுறை அச்சட்ட அமல் பற்றி ஆய்வு செய்யப்பட்டாக வேண்டும்.  நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் தீவிரவாதிகளை ஒடுக்க நம்மால் தனிப்படையை ஏற்படுத்த முடியவில்லை. எதிரிகளை எதிர்கொள்ளப் பயிற்சியளிக்கப்பட்ட ராணுவத்தை, நம் நாட்டு மக்களுக்கு எதிராகக் கொண்டுபோய் நிறுத்துவதன் மூலம் அவர்களை நாம் தவறாகப் பயன்படுத்துகிறோம்.

ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் தேவையா, இல்லையா என்று மக்களிடம் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். நாடு சுதந்திரம் அடைந்தபோது வட கிழக்கு மாநிலங்களின் சூழலையும் மக்களுடைய மனப்போக்கையும் புரிந்துகொள்ள முடியாததால் அவசரத் தேவைக்காக இச் சட்டம் பயன்படுத்தப்பட்டது சரி. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் நீடிப்பது சரியல்ல.

நாகாலாந்து மக்கள் ஒரு பக்கம் அரசுத்தரப்பிடமும், மறுபக்கம் தீவிரவாதிகள் தரப்பிடமும் மாட்டிக்கொண்டு விழிக்கின்றனர். வியாபாரிகள், தொழிலதிபர்கள், அரசாங்கம், அரசு ஊழியர்கள் என்று அனைவரையும் தீவிரவாதிகள் கட்டாயப்படுத்தி பணம் வசூலிக்கின்றனர். மாநிலங்களின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்படும் நிதியில்கூட பங்கு கேட்டு வாங்குகின்றனர்.  

 

கஜேந்தர் சிங், மேஜர் ஜெனரல் (ஓய்வு):

பல இடங்களில் அமைதியை நிலைநாட்ட ஆயுதப் படைகளின் சிறப்பு அதிகாரச் சட்டம்தான் உதவியது.  பயங்கரவாதத்தை ராணுவம் கொண்டு தீர்த்துவிட முடியாது; அதற்கான தீர்வுகள் அரசியல், பொருளாதார ரீதியாகத்தான் எடுக்கப்பட வேண்டும் என்றாலும், ஜம்மு-காஷ்மீரத்திலும் வட கிழக்கிலும் அமைதியை நிலைநாட்ட ராணுவம் உதவியிருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ராணுவம் இங்கே தொடர்ந்து செயல்பட்டாக வேண்டும் என்ற நிலை நீடித்தால் இச்சட்டத்தை ரத்து செய்வதோ, புதிதாக வேறு சட்டத்தை இயற்றுவதோ பலன் தராது.

உள்நாட்டுப் பாதுகாப்புப் பணியில் ராணுவத்தை நீண்ட காலம் ஈடுபடுத்துவது விரும்பத்தக்கதல்ல. தன் நாட்டு மக்களுடன் போர் செய்வதை எந்த ராணுவமும் விரும்பாது. தங்களுடைய காவல் துறையாலேயே நிலைமையைச் சமாளிக்க முடியுமா என்று மாநில அரசுகள்தான் பரிசீலிக்க வேண்டும். வட கிழக்கு மாநில மக்களை ராணுவம் நம்மவர்களாக இருப்பதில்லை என்ற வாதத்தைப் போல தவறானது இருக்க முடியாது. நானே அங்கே பல முறை பணியாற்றியிருக்கிறேன். ராணுவ வீரர்கள், வட கிழக்கு மாநில மக்கள் நம்முடையவர்களே என்ற எண்ணம் அகலாமல்தான் பணியாற்றுகின்றனர்.

வட கிழக்கு மாநிலங்களில் சட்டம், ஒழுங்கு சரியில்லை. அரசுக்கு விரோதமாகச் செயல்பட இளைஞர்களுக்கு தொடர்ந்து மூளைச் சலவை செய்கின்றனர். சித்தாந்தம் என்ற பெயரில் வெறுப்பையும் தேச விரோத எண்ணங்களையும் மூட்டுகின்றனர். வன்செயல்களில் ஈடுபட ஆயுதங்களையும் பணத்தையும் தருகின்றனர். எல்லோரிடமும் எல்லாவற்றுக்காகவும் கட்டாய வரி வசூலிக்கின்றனர். காவல் துறையும் உள்ளூர் நிர்வாகமும் இவற்றைத் தடுக்கும் வலுவோடு இல்லை. இந்தப் பகுதிகளில் மக்களிடையே இனம், மொழி, மத அடிப்படையில் பேதங்கள் இருக்கின்றன. இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.  

 

சஞ்சய் ஹசாரிகா, ஜீவன் ரெட்டி குழு உறுப்பினர், எழுத்தாளர்:

இந்தச் சட்டம் இருக்கும் வரை இதைத் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்புகளும் தொடரும். இந்தச் சட்டம் அப்படியொன்றும் எளிமையான சட்டம் அல்ல. இதற்கு ஆறு உட்பிரிவுகள் உள்ளன, ஆனால் விதிகள் எதுவும் வகுக்கப்படவில்லை. சந்தேகத்தின்பேரில் எவரை வேண்டுமானாலும் சுட்டுக்கொல்ல அதிகாரம் அளிக்கும் இச் சட்டம், எந்தவிதச் சட்ட நடவடிக்கையிலிருந்தும் ராணுவத்துக்கு முழுப் பாதுகாப்பு தருகிறது. கடந்த 63 ஆண்டுகளில் இச்சட்டம் அமலில் உள்ள ஏழு மாநிலங்களில் ஒரு வழக்குகூட இச்சட்டப் பயன்பாட்டுக்கு எதிராக நீதிமன்றத்துக்கு வந்ததில்லை.  நீதிபதி ஜீவன் ரெட்டி குழு சுட்டிக்காட்டியபடி, கடந்த 63 ஆண்டுக்கால பயன்பாட்டில் இச் சட்டமானது அடக்குமுறையின் அடையாளச் சின்னமாகவும், வெறுப்புக்குரிய ஒன்றாகவும், பாரபட்சத்துக்கான கருவியாகவும், அத்துமீறலுக்கு உதவியாகவும் இருந்துவருகிறது. இந்தச் சட்டத்தின் மீதான வெறுப்பு ராணுவத்தின் மீதான வெறுப்பாக மாறிவிடக் கூடாது என்று ரெட்டி குழு கவலைப்படுகிறது.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
டி.வி.பரத்வாஜ்

டி.வி.பரத்வாஜ், சுயாதீன பத்திரிகையாளர். வட இந்தியாவை மையக் களமாகக் கொண்டு எழுதுபவர்.


1






அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

உரிமைசர்வதேசம்இது சுற்றுலா தலம்குளோபல் இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிஸம் நெட்வொர்க்பெருநகர நகரங்கள்குற்றவியல் சட்டம்நிர்வாகத் துறைஜெயலலிதாவாதல்!பேரினவாதம்தேசிய பால் துறைகட்டுப்படாத மதவெறிலும்பன்பாலிவுட் நட்சத்திரங்கள்சாவர்க்கரின் இந்து மதச் சீர்திருத்த எண்ணங்கள்சாவர்க்கர்சட்டம் தடுமாறலாம்தெற்காசிய வம்சாவளிதலைமைஜெய் ஷாஇந்து – முஸ்லிம்இந்தி இதழியல்தேவேந்திர பட்நவிஸ்ஜக்கி வாசுதேவ்இருளும் நாட்கள்வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்மருத்துவத் தம்பதிநான்கு சிங்கங்கள்பயன்பாடு மொழிசமூக நலத் திட்டங்களும் அதிகாரப்பரவலாக்கமும்mk stalin

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!