கட்டுரை, புதையல், ஆரோக்கியம், மருத்துவம், சர்வதேசம், அறிவியல் 4 நிமிட வாசிப்பு
மேற்கத்திய மருந்துகள்: மறுக்க முடியாத சில உண்மைகள்
சில ஆண்டுகளுக்கு முன்னால் நான் வர்த்தகக் கழகம் ஒன்று ஒருங்கிணைப்பு செய்த கலந்தாய்விற்குச் சென்றிருந்தேன். நானோ டெக்னாலஜி பற்றிய ஆய்வு அது. மதியம் மூன்று மணியளவில் கரக்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கழகப் பேராசிரியர் ஒருவர் ஆய்வுக் கட்டுரையைப் படிக்கத் தொடங்கினார். முதல் சில நிமிடங்களிலேயே என்னை ஈர்த்துவிட்டார். ஆனால், அவரால் முழுவதும் பேச முடியவில்லை. பத்து நிமிடங்களில் மேடையிலிருந்து கீழே இறக்கப்பட்டார். காரணம்? பாபா ராம்தேவ் அங்கு வருகை தந்ததுதான். அவர் ஆயுர்வேத மருத்துவமுறையைப் பற்றிப் பேச வந்திருந்தார். கூட்டத்தில் இருந்த அனைவரும் அறிவியல் துறையைச் சார்ந்தவர்கள். ஆனாலும், மிகச் சிலரைத் தவிர, மற்ற அனைவரும் ராம்தேவைக் கேட்க ஆவலாக இருந்தார்கள். பேராசிரியர் அவமதிக்கப்பட்டதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை.
இது நடந்து சில மாதங்களில் எனது நண்பர், சுஷில் குமார், காலமானார். அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தில் (CSIR) என்னுடன் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். நீரிழிவு நோயால் துன்பப்பட்டுக்கொண்டிருந்தவர், பாபா ராம்தேவ் சொன்னார் என்று சுரைக்காய்ச் சாற்றைத் தினமும் குடித்துக்கொண்டிருந்தார். ராம்தேவ் சொல்லாதது சில சமயம் சுரைக்காய் சாறு விஷமாக ஆகக் கூடும் என்பது. ஒரு நாள், சாறு குடித்த சில மணி நேரங்களில் நண்பர் மரணத்தைச் சந்தித்தார். இந்தியா முழுவதும் பேசப்பட்ட மரணம் அது.
இந்த இரு நிகழ்வுகளும் அறிவியல் துறையைச் சார்ந்தவர்கள்கூட இந்திய மருத்துவமுறைகளின் மீது மாளாத, அறிவுப்பூர்வமற்ற காதல் கொண்டுள்ளனர் என்பதைக் காட்டுகின்றன. நான் இவ்வாறு சொல்வதனால் பழைய மருத்துவமுறைகளையோ அவை பரிந்துரைக்கும் மருந்துகளையோ முழுவதுமாக நிராகரிக்கிறேன் என்று அர்த்தமல்ல. நமது பாரம்பரிய மருந்துகள், மருத்துவமுறைகள் சிறந்தவை, அவற்றால் தீதற்ற நன்மை மட்டுமே விளையும் என்ற முன்முடிபோடு அவற்றை அணுகுவது அறிவுப்பூர்வமான செயலாகாது. நமது மூதாதையர்கள் தந்தவை என்பதனால் அவை கடவுளர் நிலையினை அடைந்துவிட்டன, அவற்றைக் கேள்விகளுக்கு உட்படுத்தக் கூடாது என்று கருதுவது அபாயகரமானது. மேற்கத்திய மருத்துவமுறையின்படி, ஒரு மருந்து மக்களைச் சென்றடைவதற்கு முன்னால் என்னென்ன சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறதோ அதே சோதனைகளுக்கு இந்திய மருத்துவமுறைப்படி பரிந்துரை செய்யப்படும் மருந்துகளும் உட்படுத்தப்பட வேண்டும் என்பது எனது கருத்து.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
மேற்கத்திய மருத்துவமுறை என்றால் என்ன?
மேற்கத்திய மருத்துவமுறைகளும் மருந்துகளும் அறிவியல் அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டவை. அறிவியல் அணுகுமுறை என்றால் என்ன என்பதை எனக்கு இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞரான நர்லீகர் ‘காலச்சுவடு’ இதழுக்காக அவரை நேர்கண்டபோது தெளிவாக விளக்கினார். இந்த அணுகுமுறை, கோட்பாடு (Theory), சோதனை (Experiment) கண்டறிதல் (Findings) என்ற மூன்றையும் உள்ளடக்கிய செயல்பாடு. இது படைப்பின் முழு ரகசியங்களையும் நமக்குக் காட்டும் திசையை நோக்கிச் செல்லும், முடிவே இல்லாத சுழற்படிக்கட்டு போன்றது. பயணத்தின்போது இடர்களும் சறுக்கல்களும் ஏற்படலாம். இந்தப் பாதை முழுவதும், தவறான சோதனைகள், பிழையான கண்டறிதல்கள் போன்றவற்றின் எச்சங்கள் சிதறிக் கிடக்கின்றன என்பதை ஒப்புக்கொள்பவர்களின் முதல் வரிசையில் விஞ்ஞானிகள் இருப்பார்கள்..
உதாரணமாக ரத்தம் உடலினுள், கடல் நீரைப் போல விரிவதும் சுருங்குவதுமாக இருக்கும் என்று மேற்கில் நினைத்த காலம் ஒன்று இருந்தது. முன்னோடிகளில் ஒருவரான கேலன் அவ்வாறுதான் நினைத்தார். கல்லீரல் ரத்தத்தை உற்பத்தி செய்கிறது, அதை திசுக்கள் உண்கின்றன என்று அவர் சொன்னார். ரத்த ஓட்டம் என்றால் என்ன என்பதை முதலில் உணர்ந்தவர் இபின் அன் நஃபீஸ் என்ற பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த எகிப்திய விஞ்ஞானி. ஆனால், பல சோதனைகள் செய்து ரத்தம் எவ்வாறு உடலில் ஓடுகிறது என்பதை நமக்குக் காட்டியவர் ஹார்வி. கேலன் சொன்னதெல்லாம் சரி என்று அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. இந்த சுதந்திரம் அவர்களுக்கு இருந்ததால்தான் மேற்கத்திய அறிவியலும் மருத்துவமும் முன்னேற முடிந்தது.
ஆனால், அவர்கள் வரலாற்றிலும் பலருக்கு பெரும் இடர்பாடுகள் நேர்ந்திருக்கின்றன. பழையவற்றை ஒதுக்கித் தள்ள அவர்களும் தயங்கினார்கள். சுத்தமாக இருந்தாலே பல வியாதிகளைத் தவிர்க்கலாம் என்பதை அவர்கள் புரிந்துகொண்டது பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில்தான். செமில்வைஸ் என்ற ஆஸ்திரிய மருத்துவர் கைகளைக் கழுவிவிட்டு நோயாளிகளை, குறிப்பாக மகப்பேறு மனைகளில் இருக்கும் பெண்களை, அணுகுங்கள் என்று பல முறைகள் சொல்லிப் பார்த்தார். யாரும் அவரை நம்பத் தயாராக இல்லை, அவரது மரணம் இளவயதிலேயே ஒரு மனநோயகத்தில் 1865ஆம் ஆண்டு ஏற்பட்டது.
மேற்கத்திய மருந்துகளைப் பற்றிக் குறை கூறுபவர்கள், அதனால் உலகிற்கு ஏற்பட்ட நன்மைகளைப் பற்றிப் பேசவே மாட்டார்கள். பென்சிலின் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால் இன்று உலகில் இருப்பவர்களில் 75% உயிரோடு இருக்க மாட்டார்கள். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தியக் குடிமகனின் சராசாரி வாழ்வுகாலம் சுமார் 22 வயதுதான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இன்று சுமார் 66 வயது என்றால் அதற்கு முக்கியமான காரணம் மேற்கத்திய மருந்துகள். அம்மையும், ப்ளேகும், போலியோவும் முழுவதுமாக மறைந்துவிட்டன. காலரா, காசநோய் என்றாலே மரணம்தான் என்ற நிலை மாறி பல நாட்கள் ஆகிவிட்டன. தலைவலிக்கு உடனே நிவாரணம் ஆஸ்பிரினும் பாரஸடமாலும் தருகின்றன. வலியே தெரியாமல் அறுவை சிகிச்சை நடக்கிறது. இன்சுலின் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பேருதவி செய்கிறது. மனநோயாளர்களுக்கு தோரஸைன் ஒரு வரம் என்றுதான் சொல்ல வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, கர்ப்பத்தடை மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டது பெண் விடுதலைக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று.
இந்த வெற்றிகளுக்குக் காரணம் மேற்கத்திய மருந்துகள் கடும் சோதனைகளுக்குப் பிறகே மக்களைச் சேர்ந்தடைகின்றன என்பதுதான். ஒரு புது மருந்து, கண்டுபிடிக்கப்பட்ட நாளிலிருந்து சந்தையை அடைவதற்கு 12 ஆண்டுகள் எடுக்கின்றன. கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளில் ஐயாயிரத்தில் ஒன்றே எல்லாச் சோதனைகளையும் கடந்து சந்தையை அடைகிறது. அடைந்த மருந்துகளும் சில சமயங்களில் திரும்பப் பெறப்பட்டு மறுசோதனைக்கு உள்ளாகின்றன. பெருநிறுவனங்கள் செய்யும் தகிடுதத்தங்களையும் மீறி உயிர் காப்பாற்றும் மருந்துகள் பல மக்களைச் சென்றடைந்திருக்கின்றன.
இத்தகைய சோதனைகளை ‘தேசிய’ மருந்துகள் கடந்து வந்திருக்கின்றனவா என்ற கேள்விக்கு ‘இல்லை’ என்பதுதான் பதில். அஸ்வகந்தா மூலிகையின் பயன்களைப் பற்றி பல ஆய்வுகள் நடந்துவிட்டன. ஆனால், இதுவரை உருப்படியான ஒரு மருந்துகூட வரவில்லை. மேற்கத்திய வழிமுறைகளை ஏன் கடைபிடிக்க வேண்டும், எங்களுக்கு என்று தனி வழிமுறை இருக்கிறதே என்று ஓர் ஆயுர்வேத மருத்துவர் கேட்கலாம். தவறேயில்லை. ஆனால், எந்த வழிமுறை இருந்தாலும் அது வல்லுநர்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். ஏன் இதுவரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதற்குச் சரியான பதில் மருத்துவர்தான் சொல்ல வேண்டும். சதி, சூழ்ச்சி என்று சொல்லித் தப்பித்துக்கொள்ள முயற்சி செய்யக் கூடாது.
இது நாட்டுப் பற்று சார்ந்ததல்ல. மனித உயிர் சார்ந்தது. உடல்நலம் சார்ந்தது.
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.