கட்டுரை, தொடர், ஆரோக்கியம், வரும் முன் காக்க 10 நிமிட வாசிப்பு

தலைவலி – தப்பிப்பது எப்படி?

கு.கணேசன்
05 Jun 2022, 5:00 am
0

லைவலி என்பது தனிப்பட்ட நோயல்ல. அது ஓர் அறிகுறி. உடலில் ஏதோ ஒரு நோய் உள்ளது அல்லது ஒரு தொல்லை ஆரம்பிக்கிறது என்று அறிவிக்கும் அலாரம். வயது வித்தியாசம் பார்க்காமல் வருகிற ஒரு தொந்தரவு இது. நம் வாழ்நாளில் எப்போதாவது, ஒருநாளிலாவது தலைவலி வந்து அவதிப்பட்டிருப்போம். பரவலான தொல்லை இது.

தலைவலியானது சாதாரணதாகவும் இருக்கலாம்; உயிருக்கு ஆபத்து தருவதாகவும் இருக்கலாம். அதை மருத்துவர்தான் கண்டறிந்து கூற முடியும். ஆனால், அநேகம் பேர் தலைவலி என்றாலே “ஒரு பாராசிட்டமால் மாத்திரையைப் போட்டுக்கொள்வோம்” என்று தற்காலிக நிவாரணம் தேடுபவர்களாகத்தான் இருக்கின்றனர். அவசரத்துக்கு இது சரியாக தோன்றும். ஆனால், தலைவலி அடிக்கடி வந்தால் அதற்குக் காரணம் அறிவது முக்கியம்.

தலைவலி வகைகள்

தலைவலியில் முதல்நிலைத் தலைவலி (Primary headache), இரண்டாம் நிலைத் தலைவலி (Secondary headache) என்று இரண்டு வகை உண்டு.

‘மைக்ரேன்’ (Migraine) எனும் ஒற்றைத் தலைவலி, டென்சன் தலைவலி, கொத்துத் தலைவலி, முக நரம்புத் தலைவலி போன்றவை முதல் நிலையைச் சார்ந்தவை. 100ல் 90 பேருக்கு வருவது இந்த வகைதான். இதனால் ஆபத்து எதுவும் இல்லை. பயப்படத் தேவையில்லை.

இரண்டாம் நிலைத் தலைவலிக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. தலையில் அல்லது கழுத்தில் அடிபடுதல், உடலில் ஏதேனும் ஒரு நோய்த்தொற்று, மூளைக்காய்ச்சல் போன்ற கடுமையான தொற்று, மூளையில் கட்டி, கபால நீர் அழுத்தம் (Intra cranial pressure) ரத்தக் குழாய் பாதிப்பு, ரத்த ஓட்டத் தடை, ரத்தக் கசிவு, உயர் ரத்த அழுத்தம், கண் பார்வை பாதிப்பு, சைனஸ் அழற்சி, காது, மூக்கு, தொண்டை, பல், வாய், கபாலம் போன்றவற்றில் ஏற்படும் பிரச்சினைகள் எனப் பல காரணங்களால் இவ்வகைத் தலைவலி ஏற்படுகிறது.

எல்லா தலைவலிகளைப் பற்றியும் சொல்ல வேண்டுமானால், ஒரு நூல் எழுத வேண்டும். அதற்கு இங்கு இடம் இல்லை. எனவே, முதல்நிலைத் தலைவலிகளில் முக்கியமான மூன்றை மட்டும் இங்கு பார்ப்போம்.

ஒற்றைத் தலைவலி

இளம் வயதில் ஏற்படும் தலைவலி இது. சிறுவர்களுக்கு 10 வயதிலும் சிறுமிகளுக்கு 15 வயதிலும் இது தொடங்குகிறது. ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம் தொல்லை கொடுப்பது, பெண்களுக்கு மாதவிலக்கு நேரத்தில் ஒற்றைத் தலைவலி அதிகமாகும். மாதவிலக்கு நின்ற பிறகு அது வருவது குறைந்துவிடும். ஆண்களுக்கு 50 வயதைக் கடந்ததும் இது ஆரம்பிக்கும்.

பெரும்பாலும் பரம்பரைத்தன்மை காரணமாக இது வருகிறது. ஆபத்து இல்லாதது. தலையில் ஒரு பக்கத்திலோ அல்லது இரண்டு பக்கங்களிலோ வலி வரலாம். சில மணிநேரம் முதல் 3 நாட்கள் வரை இது தொல்லை கொடுக்கலாம். வாரம் ஒருமுறை / இருமுறை அல்லது மாதம் ஒருமுறை என்று முறைவைத்துக்கொண்டு வருவது ஒற்றைத் தலைவலி.

அறிகுறிகள்

ஒற்றைத் தலைவலி பொதுவாக 4 கட்டங்களாக வெளிப்படும்.

  1. முதல் கட்டத்தில் (Prodromal phase) தலைவலி வருவதற்கு முன்பு, உள்ளுணர்வுகளில் மாற்றங்கள் ஏற்படும். உதாரணமாக, லேசாகத் தூக்கம் வருவதுபோல் இருக்கும், கொட்டாவி வரும். உடல் களைப்பாக இருக்கும். காரணம் இல்லாமல் எரிச்சல் ஏற்படும். கோபம் வரும். பொறுமை இருக்காது. குமட்டலும் வாந்தியும் வரும். அடிக்கடி சிறுநீர் கழியும். தண்ணீர் தாகம் எடுக்கும்.
  2. இரண்டாம் கட்டத்துக்கு ‘ஆரா’ (Aura phase) என்று பெயர். இதில் கண்களுக்கு முன்னே ஒளி வட்டம் தோன்றுவதுபோலவும் அலை அலையாகத் தோன்றுவதுபோலவும் காணப்படும். சிலருக்குப் பார்வை குறைவதுபோலவும் இருக்கலாம், இன்னும் சிலருக்கு நாவில் சுவை குறைவதுபோலவும், கை, கால்களில் மதமதப்பு உள்ளதுபோலவும், வித்தியாசமான வாசனை வருவதுபோலவும், காதில் வித்தியாசமான ஒலி கேட்பதுபோலவும் இருக்கும். இல்லாத பொருட்களைப் பார்ப்பதுபோலவும் இருக்கும். ஐந்தில் ஒருவருக்கு இவை ஏற்படும். இதுதான் உண்மையான ஒற்றைத் தலைவலி.
  3. மூன்றாம் கட்டத்தில் (Attack phase) தலையின் முன்பக்கத்தில் கண்ணுக்குப் பின்புறம், ஒரு பக்கமாகத் தலைவலி தோன்றி, மறுபக்கத்துக்கும் பரவும். படிப்படியாக வலி அதிகரிக்கும். ‘விண் விண்’ என்று வலிக்கும். தலைவலி கடுமையாகும்போது வாந்தி வரும். அருகில் யார் இருந்தாலும் அவர்களுடன் பேசுவதுகூட எரிச்சலாகவும் கோபம் ஏற்படுத்துவதாகவும் இருக்கும். ஆதலால், இருட்டான இடத்திற்குச் சென்று ஓய்வெடுக்கத் தோன்றும்.
  4. இறுதிகட்டத்தில் (Postdromal phase) தலைவலி குறைந்து, கழுத்துக்கு வலி பரவியிருக்கும். கழுத்தும் வலிக்கும். உடலிலிருந்து சக்தி முழுவதும் வெளியேறிவிட்டதுபோல் இருக்கும். முக்கியமாக, சிந்திக்கும் திறன் குறைந்திருக்கும். மனக்குழப்பமும் ஏற்பட வாய்ப்பு உண்டு.

என்ன காரணம்?

அதிக மன அழுத்தம், சரியான உறக்கம் இல்லாதது, வெயிலில் அதிகம் அலைவது, கண்ணில் படும் அதிக வெளிச்சம், காதில் கேட்கும் அதிக இரைச்சல், ஒழுங்காகச் சாப்பிடாமல் பசியுடன் வேலை பார்ப்பது போன்றவை முக்கியமான காரணிகள். 

மேலும், சில உணவுப் பொருட்களும் ஒற்றைத் தலைவலியைத் தூண்டுகின்றன. உதாரணத்துக்கு சாக்லேட், தயிர், சீஸ் உள்ளிட்ட பால் பொருட்கள், முட்டை, ஐஸ்கிரீம், குளிர்பானங்கள், செயற்கை பழச்சாறு, சில வகை மீன்கள். ஓய்வில்லாத பிரயாணங்கள், மது அருந்துவது போன்றவையும் இதை வரவேற்கும்.

சிலருக்குக் குறிப்பிட்ட வேலையைச் செய்யும்போதும், குறிப்பிட்ட சூழலில் இருக்கும்போதும் ஒற்றைத் தலைவலி வரக்கூடும். தொலைக்காட்சியைத் தொடர்ந்து பார்க்கும்போது ஒற்றைத் தலைவலி வருவதை இங்கு நினைவுகூரலாம். பெண்களுக்கு மாதவிலக்கு காலத்தில் இது அதிகம் தொல்லை கொடுப்பது உண்டு. வாசனைத் திரவியங்கள், பூ வாசனை, பெட்ரோல் மற்றும் டீசல் புகை இத்தலைவலியைத் தூண்டும். சில மருந்துகளின் பக்கவிளைவாகவும் இது வரக்கூடும். உதாரணம்- கருத்தடை மாத்திரைகள்.

சாக்லேட், பால், பாலாடைக்கட்டி, ஈரல், இறைச்சி, சோயா சாஸ் ஆகிய உணவுகளில் ‘டைரமின்’ எனும் வேதிப்பொருள் அதிகமாக உள்ளது. இது குடலில் மோனோஅமைன் ஆக்ஸிடேஸ் எனும் என்சைமால் சிதைக்கப்பட வேண்டும். சிலருக்கு இந்த என்சைம் குறைவாகச் சுரக்கும். அப்போது டைரமின் முறையாகச் சிதைக்கப்படாமல் அப்படியே ரத்த ஓட்டத்தில் கலந்துவிடும். இதன் விளைவாக, ரத்த அழுத்தம் அதிகரித்து கடுமையான தலைவலி ஏற்படும். இதுபோல், பலதரப்பட்டட சூப்புகளிலும் சாஸ்களிலும் அஜினோமேட்டா எனும் உப்பு சேர்க்கப்படுகிறது. அதில் மோனோசோடியம் குளுட்டமேட் எனும் வேதிப்பொருள் உள்ளது. இது ரத்தக்குழாய்களை விரிவடையச் செய்து தலைவலியை உண்டாக்கும்.

மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் செரட்டோனின், சப்ஸ்டன்ஸ்-பி (Substance-B) எனும் வேதிப்பொருட்கள் சரியாகச் சுரக்காத நிலைமை ஒற்றைத் தலைவலிக்கு அடிப்படை காரணங்களாக மருத்துவத் துறை சொல்கிறது.

என்ன பரிசோதனை?

ஒற்றைத் தலைவலிக்கு என எந்தப் பரிசோதனையும் இல்லை. தலைவலிக்கு மற்ற காரணங்கள் ஏதேனும் இருக்கிறதா என்பதைத் தெரிந்து, அது இல்லாதபோது, ஒற்றைத் தலைவலியின் அறிகுறிகளை வைத்து இந்த நோய் உறுதிசெய்யப்படுகிறது. ரத்த அழுத்தம் பரிசோதனையும், பொதுவான ரத்தப் பரிசோதனைகளும், மூளையை இஇஜி, சிடி அல்லது எம்ஆர்ஐ ஸ்கேனும் எடுத்துப் பார்ப்பது வழக்கம். இப்போது ‘பெட் ஸ்கேன்’ எடுக்கிறார்கள். மூளையில் மிகவும் ஆரம்பநிலையில் உள்ள கட்டிகள் மற்றும் ரத்தக் குழாய் பாதிப்புகள் இதில் துல்லியமாகத் தெரியும். இரண்டாம் நிலைத் தலைவலி உள்ளவர்களுக்கு இது பெரிதும் பயன்படும்.

என்ன சிகிச்சை?

  1. தூண்டும் காரணிகளைத் தவிர்ப்பது இதன் சிகிச்சையில் முதல் கட்டம். முக்கியமானதும் இதுதான். உதாரணமாக, சாக்லேட் சாப்பிட்டால் ஒற்றைத் தலைவலி வருவது உறுதி என்றால், கட்டாயம் சாக்லேட்டைச் சாப்பிடக் கூடாது. மன அழுத்தம்தான் காரணம் என்றால், அதைக் குறைப்பதற்கான யோகா, தியானம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
  2. ஒற்றைத் தலைவலியைப் போக்க பீட்டா பிளாக்கர், வலிப்பு மருந்துகள், மன அழுத்தம் குறைக்கும் மருந்துகள், கால்சியம் சானல் பிளாக்கர், டிரிப்டான் மருந்துகள் (Triptans) எனப் பலதரப்பட்ட மருந்துகள் இப்போது நடைமுறையில் உள்ளன. மருத்துவர் யோசனைப்படி முறையாகச் சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
  3. இயன்முறை சிகிச்சை, அக்குபங்சர், அக்குபிரஷர், ரிலாக்சேசன் பயிற்சிகள், உடற்பயிற்சிகள் உள்ளிட்ட வாழ்க்கைமுறை மாற்றப் பயிற்சிகள், மூளை – மனம் - பழக்கம் சார்ந்த பயிற்சிகள் போன்றவை ஒற்றைத் தலைவலிக்கு நிவாரணம் தருவதோடு அதை வரவிடாமல் தடுக்கவும் உதவும்.

கொத்துத் தலைவலி

‘கிளஸ்டர்’ (Cluster headache) தலைவலி என அழைக்கப்படும் கொத்துத் தலைவலி அரிதாக வரும். இது ஆண்களுக்கு வரக்கூடிய தலைவலி. பெரும்பாலும் முப்பது வயதுக்கு மேல் உள்ளவர்களுக்குத்தான் இது வருகிறது. இது தினமும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வரும். குறைந்தது இரண்டு மணிநேரத்துக்கு வலி விடாது. அப்படியே விட்டாலும் மறுநாள் அதே நேரத்தில் மீண்டும் வந்துவிடும். இப்படி தொடர்ந்து சில வாரங்களுக்குப் படுத்திவிடும். தலையில் ஒரு பக்கம் மட்டும் குத்துவது போல் வலிக்கும். கண்கள் சிவக்கும். ஒரு பக்கமாகக் கண்ணீர் வரும். மூக்கு ஒழுகும். அதிகாலையில் தலைவலி வருவது இதன் சிறப்புத்தன்மை.

புகைபிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், மனக்கவலை உள்ளவர்கள், தாழ்வுமனப்பான்மை உள்ளவர்கள் ஆகியோருக்கு இத்தலைவலி அதிகம் தொல்லை தரும். இதற்கும் உணவுக்கும் தொடர்பு இல்லை என்பதிலிருந்து ஒற்றைத் தலைவலியைப் பிரித்து உணரலாம். சுமாடிரிப்டின் ஊசி மருந்து மற்றும் ஆக்ஸிஜன் சிகிச்சை பலனளிக்கும். நோயாளி மருத்துவமனையில் தங்கி இந்த சிகிச்சையைப் பெற வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி வெரப்பாமில் மற்றும் மெத்திசெர்ஜைட் மாத்திரைகளைத் தொடர்ந்து 3 மாதங்களுக்கு தடுப்பு மருந்துகளாக எடுத்துக்கொண்டால், கொத்துத் தலைவலியும் விடைபெற்றுக்கொள்ளும்.

டென்சன் தலைவலி

இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் பலருக்கும் வருகிற தலைவலி இது. இதுவும் பெண்களிடமே அதிகம். எந்த வயதிலும் இது வரக்கூடும். என்றாலும் நடுத்தர வயதினரிடம் இது அதிகம் காணப்படுகிறது. இந்த வலியால் நோயாளியின் வாழ்க்கைத் தரமும் வேலைத் திறனும் பாதிக்கப்படுகிறது.

எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென தலை முழுவதும் வலிக்கும். ஒரே இடத்தில் தொடர்ச்சியாக இருக்கும். தலையைச் சுற்றி கயிறு கட்டி அழுத்துவது போலிருக்கும். பக்க மண்டையிலும், பின் மண்டையிலும் வலி இருக்கும். இது பல வாரங்களுக்கு நீடிக்கும். வாந்தி இருக்காது. பார்வையில் மாறுதல்கள் காணப்படாது. இவற்றிலிருந்து ஒற்றைத் தலைவலியைப் பிரித்து உணரமுடியும். காலையில் இந்த வலி குறைவாகவும், நேரம் ஆக ஆக வலி கடுமையாவதும் இதன் சிறப்புத்தன்மை. முக்கியமாக மாலை நேரத்தில் அதிகம் படுத்தும். ஏதாவது ஒரு வேலையில் கவனம் திரும்பினால் வலி குறைவது போலிருக்கும்.

அதிக வேலைப் பளு, மனக் கவலை, மன அழுத்தம் பரபரப்பான வாழ்க்கைமுறைகள், எடுத்த குறிக்கோளை அடைய வேண்டும் என்ற முழுவேகத்தில் இருப்பவர்கள், குடும்பத்தில் திடீர் இழப்பு, வேலையின்மை, நிதி நெருக்கடி போன்ற பிரச்சினைகள் ஆகியவற்றால் தலை மற்றும் கழுத்துத் தசைகளை இறுக்கப்படுவதால் இந்தத் தலைவலி வருகிறது. சில வலி நிவாரணிகளும் அமிடிரிப்டிலின் மாத்திரையும் இதற்கு நிவாரணம் தருகின்றன.

மன அழுத்தத்தைக் குறைத்து, மனதுக்கு நல்ல ஓய்வு கொடுத்து, தேவையான அளவுக்கு நிம்மதியாக உறங்கினால் மட்டுமே இதைத் தவிர்க்க முடியும். இயன்முறை மருத்துவம், ஸ்ட்ரெஸ் மேனேஜ்மெண்ட் பயிற்சிகள், யோகா, தியானம் போன்ற வாழ்க்கைமுறை மாற்றங்கள் இதற்கு உதவும்.

(தொடர்ந்து பேசுவோம்)

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கு.கணேசன்

கு.கணேசன், பொது நல மருத்துவர்; மருத்துவத் துறையில் உலகளாவிய அளவில் நடக்கும் மாற்றங்களை ஆழ்ந்து அவதானித்து, எளிய மொழியில் மக்களுக்கு எழுதும் பணியில் ஈடுபட்டிருப்பவர்; ‘சர்க்கரைநோயுடன் வாழ்வது இனிது!’, ‘நலம், நலம் அறிய ஆவல்’, ‘செகண்ட் ஒப்பினீயன்’ உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: gganesan95@gmail.com


2


ஆருஷா ஒப்பந்தம்மசூதிதெய்வீகத்தன்மைகல்விச்சூழல்மது லிமாயிரஷ்யா370 இடங்கள்மஜ்லிஸ் கட்சிமாபெரும் கனவுசீனியர் வக்கீல்மண்டல் ஆணையம்பெருமாள்முருகன்சுயமான தனியொதுங்கல்நிறுவனங்கள் மீது தாக்குதல்வேந்தர் பதவியில் முதல்வர்ராஜமன்னார் குழுராம்நாத் கோயங்காகொட்டும் பனிதமிழ்ப் பிராமணர்கள் துரத்தப்பட்டார்களா?மகாபாரதம்புரிந்துணர்வு ஒப்பந்தம்பக்கிரி பிள்ளைசஞ்சீவ் சோப்ரா கட்டுரைசில இடதுசாரித் தோழர்களின் எதிர்வினையும்நெல்பொருளாதார நிபுணர்களும் உண்மை போன்ற தகவல்களும்ஆஸ்திரேலியாகிசுமுஉங்களுடைய மொபைல் உளவு பார்க்கப்படுகிறதா?தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!