கட்டுரை, புதையல், ஆளுமைகள், அறிவியல் 4 நிமிட வாசிப்பு
அறிவியலுக்கு பாரத ரத்னா
இந்திய அரசு, சிந்தாமணி நாகேச ராமச்சந்திர ராவ் அவர்களுக்கு பாரத ரத்னா விருதை வழங்கியிருக்கிறது. நண்பர் ஒருவர் கூறியபடி ராவ் யார் என்பதே 99 சதவீத இந்தியர்களுக்குத் தெரியாது. இவ்வாறு சொல்வதால் அவரது புகழை நான் குறைத்து மதிப்பிடுவதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இந்தியர்கள் அறிவியல் மீது எவ்வளவு அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.
பேரறிஞர்
79 வயதான ராவ் அவர்களுடைய சாதனை உலக அளவில் மெச்சப்படுகிறது. வேதியல் துறையிலும் நானோடெக்னாலஜி துறையிலும் 1500 ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். 45 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். ‘Hirsh Index’ (ஹெர்ஷ் அளவீடு) என்று ஒன்று உலகம் முழுவதும் கையாளப்படுகிறது. இது விஞ்ஞானி ஒருவர் எழுதும் ஆய்வுக் கட்டுரைகள் எந்த அளவு மற்றைய விஞ்ஞானிகளால் கவனிக்கப்படுகின்றன என்பதை குறிக்கும். இதன்படி ராவ் அவர்களின் அளவீட்டு எண் 93+. இவரது கட்டுரைகள் 44,000 விஞ்ஞானிகளால் மேற்கோள் காட்டப்பட்டிருக்க்கின்றன. இந்தியாவிலேயே இந்த அளவு உலக விஞ்ஞானிகளால் கவனம் பெற்றவர் இவர் ஒருவர்தான்.
காசி இந்துப் பல்கலைக் கழகத்தில் வேதியலில் முதுகலைப் பட்டம் பெற்ற ராவ் அமெரிக்காவில் பர்ட்யூ பல்கலைக் கழகத்தில் முனைவருக்கான ஆராய்ச்சி செய்தார். பின்னர் கலிபோர்னியாவின் பெர்க்லி பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். 1959ஆம் ஆண்டு இந்தியா திரும்பியதும் இந்திய அறிவியற் கழகத்தில் (IISc) சேர்ந்தார். பின்னர் கான்பூர் இந்திய தொழிற்நுட்பக் கழகத்தில் பணி புரிந்தார். 1984ஆம் ஆண்டு இந்திய அறிவியற் கழகத்தின் தலைவராகப் பதவியேற்ற அவர் அங்கு பத்து ஆண்டுகள் பணிபுரிந்தார். JNCASR என்று அழைக்கப்படும் ஜவகர்லால் நேரு முதுநிலை அறிவியல் ஆராய்ச்சி மையத்தை பெங்களூரில் நிறுவியவர் இவரே. மையத்தின் தலைவராக பல ஆண்டுகள் பணிபுரிந்தார். பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் பல ஆண்டுகள் இயங்கினார். ராவ் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டதற்குக் காரணங்களில் இரண்டைக் குறிப்பிட வேண்டும். ஒன்று இவர் அறிவியல் நிறுவனங்களைக் கட்டமைத்தது. மற்றது அவை திறமையாக இயங்க உறுதுணையாக நின்றது. நான் பணி புரிந்த நிறுவனத்தின் சார்பில் ராவ் அவர்களை இருமுறை சந்தித்திருக்கிறேன். எளிமையானவர். அதிகம் பேசாதவர். செய்வதை திறமையாக, தவறேதும் இல்லாமல் செய்ய வேண்டும் என்பதை விரும்புபவர், அவ்வாறு செய்யவில்லை என்றால் மிகுந்த கோபம் கொள்வார் என்று அவரிடம் பணிபுரிந்த சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
சென்ற ஆண்டு கருத்துத் திருட்டு சம்பந்தமாக இவரது மேற்பார்வையில் எழுதிய ஆய்வுக் கட்டுரை ஒன்று பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. பழியை தனது மாணவர் மீது போட்டு தான் தப்பித்துக்கொள்ள முயல்கிறார் என்ற குற்றச்சாட்டு இவர் மீது வைக்கப்பட்டது. ஆனால் இவருடைய திறமையைப் பற்றி யாருக்கும் சந்தேகம் கிடையாது. உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களும் ஆராய்ச்சி நிறுவனங்களும், அரசுகளும் இவரைக் கௌரவித்துள்ளன.
இந்தியாவில் அறிவியலின் நிலைமை
இவ்வளவு புகழ்பெற்ற ஒருவர் இருப்பதே நம்மில் பலருக்குத் தெரியாதது இந்தியாவில் அறிவியலின் நிலைமை எவ்வாறு இருக்கிறது என்பதையே காட்டுகிறது. அறிவியல் அமைச்சகத்தில் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் இந்திய அறிவியல் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டு பல நாட்கள் ஆகிவிட்டன, நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கிறது என்று என்னிடம் சில நாட்களுக்கு முன்னால்தான் சொன்னார். நாடு முழுவதும் அறிவியல் துறையில் சேர்ந்து படிப்பவர்களில் திறமையானவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டேவருகிறது. தொழில்நுட்பக் கல்விதான் வேலைவாய்ப்புக்களைத் தரும் என்ற மந்தைப்புத்தி இளைய தலைமுறையினரை அறிவியலிலிருந்து அன்னியப்படுத்தி வைத்திருக்கிறது.
ராவ் அவர்களின் ஹெர்ஷ் அளவீட்டு எண் 93+ என்று சொன்னேன். இந்தியாவிலேயே முதன்மையானது அவருடையதுதான் என்று எண்ணுகிறேன். ஆனால் உலக அளவில் ஒப்பிடும் போது இவரது சாதனை பெரும் உயரத்தில் இருக்கிறது என்று சொல்ல முடியாது. வேதியல் துறையிலேயே ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஜார்ஜ் வைட்சைட்ஸ் என்பவர் 169 பெற்று முதல் நிலையில் இருக்கிறார்.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
இந்திய அறிவியல் ஆராய்ச்சியை உலகம் எப்படி மதிப்பிடுகிறது?
உலகப் புகழ்பெற்ற அறிவியல் இதழான 'நேச்சர்' (Nature) ஒவ்வொரு ஆண்டும் அது வெளியிட்ட ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையில் ஒரு அறிக்கையை வெளியிடுகிறது. 2012 ம் ஆண்டின் அறிக்கை சமீபத்தில் வந்தது. அது தந்திருக்கும் புள்ளி விவரங்கள் அதிர்ச்சியளிக்கக்கூடியதாக இருக்கின்றன. 'நேச்சர்' இதழ்களில் 2236 ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டு அமெரிக்கா முதல் இடம் வகிக்கிறது. சீனத்திற்கு ஆறாவது இடம். இந்தியாவின் இடம் இருபத்து நான்கு.
உலகின் முக்கியமான அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களின் பட்டியலையும் அது வெளியிட்டிருக்கிறது. 200 நிறுவனங்கள். ஒன்றுகூட இந்தியாவிலிருந்து இல்லை. சீனத்தின் ஒன்பது நிறுவனங்கள் பட்டியலில் இருக்கின்றன. இதைவிட ஆச்சரியம் தரக்கூடிய தகவல் என்னவென்றால் எதிர்காலத்தில் அறிவியல் துறையில் கவனிக்கப்பட வேண்டியவை என்று ஐந்து நாடுகளை இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இவை சைனா, அயர்லாந்து, பிரேசில், கென்யா, மற்றும் சவூதி அரேபியா! இந்தியா கணக்கிலேயே வரவில்லை. ஆசியாவில்கூட இந்தியா ஏழாவது இடத்தில் தைவானுக்கும் சிங்கப்பூருக்கும் பின்னால் இருக்கிறது. மொத்த அறிக்கையில் இந்தியாவின் பெயர் இரண்டு இடங்களில்தான் வருகிறது.
வழிதான் என்ன?
இந்த அறிக்கையை வைத்து இந்திய அறிவியலைக் குறைத்து அளவிட முடியாது என்று சொல்வதில் சிறிது உண்மை இருக்கிறது. ஆனால் பிரச்சினைகளையும் குறைத்து அளவிட முடியாது. நான் பல துடிப்பான ஆராய்ச்சியாளர்களிடம் பேசியிருக்கிறேன். அவர்கள் ஆராய்ச்சிக் கூடங்களுக்கும், இந்திய அறிவியலின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் அரசு நிறுவனங்களுக்கும், இளைய தலைவர்கள் வேண்டும் என்கிறார்கள்.
பெரியவர்கள் வெளியில் நின்று ஆலோசனை வழங்கலாம். ஆனால் நேரடி நிர்வாகத்தில் அவர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளக் கூடாது என்றும் சொல்கிறார்கள் இளைய விஞ்ஞானிகளின் குரல்கள் அரசிற்குச் சென்றடைய எந்த ஒரு சாதனமும் இல்லை என்பதும் உண்மை. எனவே, வெளிநாடுகளிலிருந்து கனவுகளோடு வந்த பலர் திரும்பச் சென்றுவிட்டனர்.
எதிர்காலம்
சுடர்மிகும் அறிவு படைத்த இளைஞர்களை அறிவியலை நோக்கி வரச் செய்வதே நாம் இன்று செய்ய வேண்டியது. இதை மிக முனைப்போடு செய்து வருபவர் நமது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் ராமசாமி அவர்கள். தமிழகத்தைச் சார்ந்தவர். இவரால் கொண்டுவரப்பட்ட ‘இன்ஸ்பைர்’ (Inspire) திட்டம் நாடெங்கும் போற்றப்படுகிறது. பத்து வயதில் தொடங்கி முப்பத்து இரண்டு வயது வரை அறிவியல் துறையைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. பெற்றோரிடமிருந்து பண உதவியை எதிர்பார்க்காமலே இன்று ஒரு திறமையான மாணவனால் அறிவியலில் உயர்கல்வி பெற முடியும். தமிழகத்தில் இந்தத் திட்டம் அதிகக் கவனிப்புப் பெறாதது ஆச்சரியத்தை அளிக்கிறது.
ராவ் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருக்கும் செய்தி இளைஞர்களை அறிவியல் பக்கம் திருப்பும் என்று நம்புகிறேன். குறிப்பாக தமிழ் இளைஞர்களை.
அறிவியல் மற்றும் மருத்துவத் துறைகளில் நோபல் பரிசு பெற்ற நால்வரில் மூவர் தமிழர்கள் என்பதை நமது இளைஞர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.







பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.