கட்டுரை, அரசியல், கல்வி 3 நிமிட வாசிப்பு

கல்விக் கொள்கையில் கவனம் அளிக்க வேண்டிய சில விஷயங்கள்

என்.மாதவன்
05 May 2023, 5:00 am
2

ரு கிராமத்தில் ஒரு பள்ளி மூடப்படுவது என்பது அக்கிரமம்; அது தமது அங்கங்களில் வலிமையான ஒன்றை ஒரு கிராமம் இழப்பதற்கு ஒப்பாகும். அண்டை மாநிலங்களில் குறிப்பாக ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகள் சமீபத்தில் மூடப்பட்டுவிட்டதாகக் கேள்விப்பட்டபோது துடித்துப்போனேன். அது மட்டுமல்ல; தொடக்கநிலைப் பாடத்திட்டம், மதிப்பீடு வடிவமைப்பிற்கே பெரும் கார்பரேட் நிறுவனங்களைப் பல மாநிலங்கள் அமர்த்திக்கொண்டிருப்பதையும் கேள்விப்பட்டேன். பாடத்திட்டத்தைப் பொறுத்தவரைக் கேட்கவே வேண்டாம் என்கிறார்கள்; தன்னிச்சையாக ஒவ்வொரு மாநிலமும் விருப்பு வெறுப்போடு அணுகுவதான புலம்பல்களைக் கல்வியாளர்களிடமிருந்து கேட்க முடிகிறது. மனம் ரொம்பவும் கனத்துதான் டெல்லியிலிருந்து திரும்பினேன்.     

டெல்லியில் நடைபெற்ற தேசியக் கல்விப் பேரவைக் கூட்டத்தில் காதில் விழுந்த விஷயங்கள்தான் இவை. இந்தச் செய்திகள் மத்தியில், தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதத்தில் அரசுப் பள்ளிகளில் சுமார் 60,000 மாணவர்கள் சேர்க்கை நடந்திருப்பதை ஒருவர் அறிந்தால் ஆனந்த கூத்தாடக் கூடும். தமிழ்நாடு கல்வித் துறை மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம்; ஆனால், துடிப்போடு அது எப்போதும் செயல்படுகிறது.

அடித்தட்டிலிருந்து கல்வித் துறை வலியுறுத்தும் பல்வேறு பணிகளையும் அவசரகதியில் செய்யும் ஆயிரக்கணக்கானோரில் நானும் ஒருவன். பல்வேறு நேரங்களிலும் மன உளைச்சல்களுக்கும் ஆளாவேன். ஆனால், இந்த 60,000 குழந்தைகளை ஏப்ரல் மாதத்தில் சேர்த்திருப்பதன் மூலம் எத்தனை அரசுப் பள்ளிகள் காப்பாற்றப்பட்டிருக்கும் என்பதை நினைக்கும்போது பெருமிதமாக உள்ளது.

கல்வித் துறையின் செயல்பாடுகளோடு உடன்பட்டும் முரண்பட்டும் செயலாற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் செயல்பாட்டாளன் என்கிற முறையில் தமிழ்நாடு அரசின் கல்வித் துறை இப்படி கொத்துக் கொத்தாக பள்ளிகளை மூடும் சூழல் உருவாகக் கூடாது என்று எண்ணுகிறேன். ஒன்றிய அரசின் கல்விக்கொள்கையை ஏற்காமல், தமிழ்நாட்டுக்கு என ஒரு கல்விக்கொள்கையை வகுத்துக்கொண்டு நாம் செயல்படுவது நல்ல விஷயம். ஆனால், சில விஷயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும். 

முன்பருவக் கல்வி

தற்போது நடைமுறையில் உள்ள கல்வி உரிமைச் சட்டம் 6 முதல் 14 வயது  வரையுள்ள குழந்தைகளின் கல்வி உரிமையை வலியுறுத்துகிறது. தமிழ்நாட்டின் புதிய கல்விக் கொள்கை மூலம் 3 முதல் 18 வரை கல்வி கொடுப்பது அரசின் பொறுப்பாக வேண்டும். தமிழ்நாட்டின் முன்மாதிரி திட்டமான மதிய உணவு தற்போது அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்துவது தமிழ்நாட்டுக்குப் பெருமை தரும் ஒரு கூறு. இந்நிலையில் பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவு அதன் உண்மையான பொருளில் அமல்படுத்தப்பட வேண்டும். இதன் படிப்பினைகளும் இந்தியா முழுமைக்கும் பரவும் வகையில் அமைய வேண்டும். 

கல்விக் கட்டமைப்பு 

தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வியில் வாய்ப்புகள் பெருகிய வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பது இன்னும் தெளிவைக் கூட்டும். 1979 - 1980 காலகட்டத்தில் இன்று இருக்கும் எஸ்எஸ்எல்சி படிப்பு என்பது 11ஆம் வகுப்பு ஆகும். அதைத் தொடர்ந்து மாவட்ட அளவில் ஒன்றோ அல்லது இரண்டோ இருக்கும் புகுமுகக் கல்வி எனப்படும் ‘பியூசி’ (PUC) பயில வேண்டும். பின்னரே கல்லூரிக் கல்விக்குச் செல்ல இயலும். 1980களில் இந்த நடைமுறை சீர்திருத்தப்பட்டு, 10 +2 +3 என்ற வகையில் மாற்றப்பட்டது. அப்போது உயர்நிலைப் பள்ளிகளாக இருந்த பல பள்ளிகளும் மேல்நிலைப் பள்ளிகளாக மாற்றப்பட்டு அனைவரும் மேல்நிலைக் கல்வி பெறும் அளவுக்கு கல்விப் பரவல் ஏற்பட்டது. 

பின்னர் அனைவருக்கும் ஆரம்பக் கல்வி இயக்கம் (SSA) மூலமாக வாய்ப்புள்ள பல ஆரம்பப் பள்ளிகளும் நடுநிலைப் பள்ளியாகப் பரிணமித்து அனைத்துக் குழந்தைகளும் இடைநிற்றல் இல்லாமல் எட்டாம் வகுப்பை நிறைவுசெய்வதற்கு வழிவகை ஏற்பட்டது. பின்னர் மத்திய இடைநிலைக் கல்வித் திட்டம் (RMSA) மூலம் வாய்ப்புள்ள அனைத்து நடுநிலைப் பள்ளிகளும் உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகளில் வாய்ப்புள்ளவை மேல்நிலைப் பள்ளிகளாகவும் பரிணாமம் பெற்றன. 

இதனிடையே அரசின் வாய்ப்புக்கு உட்பட்டு அரசுக் கலை அறிவியல் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. இது இப்படியே பரவலாக்கப்படவும், தகுதியான பேராசிரியர்கள் பணியில் அமர்த்தப்படவும் வேண்டும். இதன் மூலம் கல்லூரிக் கல்வியை அடைந்திருப்போர் எண்ணிக்கை 52% எனும் கணக்கும் மேலும் கூடும். இவ்வாறு கல்லூரிப் படிப்பை முடிப்போருக்கான வேலைவாய்ப்புகளும் உறுதிப்படும் அளவுக்கு திறன் பெற்றோராக அவர்கள் வெளிவரவும் ஆவண செய்ய வேண்டும். 

இவ்வாறான பரிணாம வளர்ச்சிக்கு ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வு ஆகப் பெரிய உந்துசக்தியாக அமையும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அடுத்தடுத்த மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான சீர்திருத்தங்களிலும் ஆசிரியர்களின் கருத்துகளுக்கு கூடுதல் மதிப்பளிக்க வேண்டும்.  

ஆசிரியர்கள் நியமனம் 

நான் 2005களில் எனது முனைவர் பட்ட ஆய்வுக்காக மத்திய பிரதேச மாநிலம் செல்லும்போது அங்குள்ள பள்ளிகளில் அப்போதே பெரும்பாலும் தொகுப்பூதியம் பெறும் ஆசிரியர்கள் பணியாற்றிக்கொண்டிருந்தனர். அப்பொதெல்லாம் தமிழ்நாட்டை நான் பெருமையாக நினைப்பேன். தற்போது தொகுப்பூதிய ஆசிரியர்கள் நியமனம் கவலை தரும் ஒன்றாக உள்ளது. விரைவில் இந்நிலை மாறவும் கல்விக்கொள்கை வழிகாட்ட வேண்டும்.  

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

கண்களைத் திறக்கும் அறிவியல்காட்சிகள்

என்.மாதவன் 07 Apr 2023

பாடத்திட்டம் - கற்பித்தல் முறை

ஒன்றிய அரசு நாடு முழுமைக்கும் ஒரே கல்விமுறையைத் திணிப்பது எப்படி தவறோ அதுபோலவே மாநில அரசும் மாநிலம் முழுமைக்கும் ஒரே வகையான கற்பித்தல் மற்றும் மதிப்பீட்டு முறையை திணித்தலும் தவறே. குழந்தைகளின் சுதந்திர உணர்வு காக்கப்பட ஆசிரியர்களின் சுதந்திர உணர்வும் காக்கப்பட வேண்டும். பரிந்துரைகளை அளித்துவிட்டு அதனை நடைமுறைபடுத்தும் பொறுப்பை ஆசிரியர்களிடம் விட்டுவிட வேண்டும். தமது மேற்பார்வை இயந்திரத்தின் துணையோடு தமது பரிந்துரைகள் அனைத்தும் நிறைவேறுவதை உறுதிசெய்யலாம். 

தொழில்நுட்பம் - கற்றல் கற்பித்தல்

பாடநூல் எப்படி ஒரு துணைக் கருவியோ அந்த அளவிலேயே தொழில்நுட்பமும் ஒரு துணைக் கருவியாக வேண்டும். மாறிவரும் அறிவியல் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப ஆசிரியர்களும் தங்களை தகவமைத்துக்கொள்வதை உறுதிசெய்யும் ஏற்பாடுகள் தேவை. (ஆசிரியர்களும் தமது சொந்த வாழ்க்கைக்கு அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு ஈடாக குழந்தைகளின் கற்றல் கற்பித்தல் மதிப்பீட்டு செயல்பாடுகளுக்கும் பயன்படுத்த முன்வர வேண்டும். அறிவியல் தொழில்நுட்பம் தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ள புரட்சியினை உற்றுநோக்கும்போது இது மேலும் புரியும்).

இணையவழிப் பள்ளி மேலாண்மை 

அரசின் 7.5% இடஒதுக்கீடு போன்றவையும், மாணவர்கள் இடைநிற்றல் ஆகட்டும், இன்னபிற ஆரோக்கியமான செயல்பாடுகளாகட்டும் இணையவழி மேலாண்மை இல்லாமல் சாத்தியமாகாது. ஆனால், இணையவழிச் செயல்பாடுகளில் கற்பித்தல் நேரம் வீணாகாத அளவுக்கு அதற்கான பகுதி நேரப் பணியாளர்களை உறுதிபடுத்துவதை கல்விக்கொள்கை வலியுறுத்த வேண்டும்.

பல பத்தாண்டுகளாகவே தமிழ்நாட்டின் கல்வித் துறை இந்தியாவுக்கு முன்னோடியாக இருப்பது போன்று தமிழ்நாட்டின் புதிய கல்விக்கொள்கை அமைய வேண்டும், நிச்சயம் ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கையின் சாயல் இல்லாமல் அமைய வேண்டும் என்ற ஆவலின் வெளிப்பாடே இது!

 

தொடர்புடைய கட்டுரைகள் 

கண்களைத் திறக்கும் அறிவியல்காட்சிகள்
அக்கறையுடனேயே அடியெடுத்து வைத்திருக்கிறது பள்ளிக்கல்வித் துறை     

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
என்.மாதவன்

என்.மாதவன், கல்வியாளர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினர்.


1






பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

ARULRAJ S   1 year ago

நமது மாநில கல்வி கொள்கையில் மாணவர்கள் பாடங்களில் பயிலும் கருத்துக்களை நேரடியாக செயல் முறையாக கற்றல் என்பதும் அனைத்து பாடங்களுக்கும் இருக்க வேண்டும். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்தில் அறிவியல் மையம், கலாச்சார மையம், மாணவர்கள் வகுப்பு மற்றும் பாடங்கள் வாயிலாக புரியும் வண்ணம் அமைக்கலாம். ஆரம்ப வகுப்புகளில் குறைவான பாடங்களும் முழுவதும் செயல்முறை மூலம் படித்தும் புரிந்தும் இருக்கும் வகையிலும் மாணவர்களை ஆசிரியர்களும் வழி நடத்த வேண்டும்.. ஆசிரியர் பணி நியமனம் ஒவ்வொரு பத்து ஆண்டுக்கும் ஒருமுறை தற்போது நடைபெறுவது நிச்சயமாக உதவாது.... நிறைய முதலீடும் தேவை... அரசு இதற்கு செலவு செய்யுமா ...பார்ப்போம் பொறுத்திருந்து...

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

rajasekaranthirumalaisamy   1 year ago

இந்தியாவில் அரசு மற்றும் தனியாரில் நிரந்தரமாய் மாதச் சம்பளம் பெறுவோர் மற்றும் அன்றாட வாழ்க்கையை ஓட்டவே அவதிப்படும் மக்கள் என இரு மாறுபாடான வாழ்க்கை உடையவர்கள் உள்ளனர்...அதே போல் கல்வியிலும் வசதி வாய்ப்பு உள்ளவர்களுக்கு உயர்தர கல்வியும் ...வசதி வாய்ப்பு இல்லாத கிராமப்பகுதி அரசு பள்ளிகளை நம்பி உள்ளவர்கள் என இரு வேறு நிலை இருக்கிறது...சமநிலையை பொருளாதாரத்திலும் கல்வியிலும் கொண்டு வர வேண்டும்...கட்டுரையாளர் குறிப்பிட்டதைப் போல அந்தந்த ஒன்றியப் பகுதிகளில் உள்ள வேலை வாய்ப்புக்கான திறமைகளை மேம்படுத்தலுக்கான கல்வி திட்டம் தேவை...அரசு வேலை தனியார் வேலைகளுக்கு போட்டி போட இயலாதவர்களுக்கு இந்த திறன் மேம்பாட்டு கல்வியால் சுய தொழில் செய்யும் வாய்ப்பாவது கிடைக்கும்...

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

சட்டப்பூர்வ அங்கீகாரம்அத்திமரத்துக்கொல்லைகுஜராத்திதிருத்தங்கள்ஒற்றுப் பிழைஅரபுநிதிதேவை கூட்டாட்சிக்காகப் பணியாற்றும் ஓர் ஒன்றியப் பிவசனகர்த்தாநிர்வாகிஇரைப்பைப் புற்றுநோய்பூரி ஜெகந்நாதர்டீஸ்டா நதிநடந்தது பசுமைப் புரட்சி அல்ல; பேராசைப் புரட்சி!: தட்சிணாயனம்மஹாகாலேஸ்வர் ஆலயம்சோஷலிஸ்ட் தலைவர்தேர்தல் தோல்விஇலங்கைக்கு இவ்வளவு பொருளாதார நெருக்கடி ஏன்?உயிர்மை நேயமே நம் சிந்தனை மரபுமூன்று வகையான வாதங்கள்கல்வியாளர்களுக்கு முதுகெலும்பு தேவைசந்தைப் பொருளாதாரம்சியரா நூஜன்ட்முடி உதிரல்தமிழகப் பள்ளிக்கல்வித் துறைஎதிர்காலம்கோசம்பியின் மேதைமைg.kuppusamyசிக்கிம் அரசு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!