கட்டுரை, ஆரோக்கியம், வரும் முன் காக்க 4 நிமிட வாசிப்பு

மயக்கம் வருவது ஏன்?

கு.கணேசன்
07 Jan 2024, 5:00 am
1

யக்கத்தில் பல வகை உண்டு. காதல் மயக்கம், இசை மயக்கம், இயற்கை மீது மயக்கம், புத்தக வாசிப்பில் மயக்கம் போன்ற மனம் சார்ந்த மயக்கங்கள் வாழ்க்கையை ரசிப்பதற்குத் தேவை என்பதால் இவற்றை நாம் வரவேற்கிறோம். அதேவேளையில் நாம் நன்றாக இருக்கும்போதே திடீரென்று கண்கள் இருட்டிக்கொண்டு வர, நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாத அளவுக்கு மூளை வேலை நிறுத்தம் செய்ய, உடல் தடாலடியாகக் கீழே சாய்ந்து விழும் உடல் சார்ந்த மயக்கத்தை யாரும் விரும்புவதில்லை.

மயக்கத்தின் வகைகள்

உடல் சார்ந்த மயக்கத்தில் ‘குறு மயக்கம்’ (Fainting / Syncope), ‘நெடு மயக்கம்’ (Unconsciousness) என்று இரு வகை உண்டு. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மக்கள் அதிகமாக நடமாடும் பொது இடங்களிலும், அலுவலகங்களிலும் திடீரென்று யாராவது மயக்கமடைந்து தரையில் விழுவதைப் பார்த்திருப்பீர்கள். குறிப்பாகப் பள்ளிகளில் காலை இறைவணக்கம் நிகழ்ச்சி நடைபெறும்போது மாணவர்கள் இவ்வாறு மயக்கமடைவது வழக்கம். இதைக் ‘குறு மயக்கம்’ என்கிறோம்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

ஏற்படுவது எப்படி?

மூளைக்குத் தேவையான ரத்தம் செல்ல தடை உண்டாவதுதான் குறு மயக்கம் ஏற்பட அடிப்படைக் காரணம். ஏதாவது ஒரு காரணத்தால் ரத்த ஓட்டம் சில நிமிடங்களுக்கு இடுப்புக் கீழ் நின்றுவிடுகிறது. மூளைக்குச் செல்லும் ரத்தம் குறைகிறது. இதனால் மயக்கம் ஏற்படுகிறது. மயங்கித் தரையில் விழுந்ததும் ரத்த ஓட்டம் சரியாகிவிடுகிறது. இதனால் மயக்கமும் சரியாகிவிடுகிறது.

காரணம் என்ன?

காலை உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வருவது முதற்காரணம். இதனைப் ‘பசி மயக்கம்’ என்று கூறுகிறோம். இரவுத் தூக்கம் தேவையான அளவுக்கு இல்லாதது அடுத்த காரணம். ஒரே இடத்தில் அதிக நேரம் நிற்பது மூன்றாவது காரணம். குறிப்பாக வெயிலில் நீண்ட நேரம் நின்றால் இவ்விதம் மயக்கம் வரும். உடற்சோர்வு இந்த மயக்கத்தை வரவழைக்கும்.

அளவுக்கு அதிகமாக விளையாடுவது, உடற்பயிற்சி செய்வது, ஓடுவது போன்றவற்றாலும் குறு மயக்கம் வரலாம். உணவு புரையேறுதல், தொண்ட அடைத்துக் கொள்ளுதல் ஆகிய காரணங்களும் இவ்வகை மயக்கத்தை வரவேற்கும். மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள, காற்றோட்டம் குறைந்த இடங்களில் அதிகநேரம் இருந்தாலும் இந்த மயக்கம் வருவதுண்டு.

பொக்கிஷம் இந்த நூல்

- தினத்தந்தி

சோழர்கள் இன்று

வீட்டிலிருந்தபடி ரூ.500 ஜிபே செய்து, முகவரியை அனுப்பி, கூரியர் வழியே நூலை வாங்க வாட்ஸப் செய்யுங்கள் 👇

75500 09565

உளவியல் காரணங்கள்

வீட்டுப்பாட வேலைகளைச் செய்யாமல் பள்ளிக்கு வருவதால் ஏற்படும் பயம், தேர்வு பயம், ஆசிரியர் மீதான பயம், பதற்றம், மன அழுத்தம் போன்ற காரணங்களாலும் குறு மயக்கம் ஏற்படுவதுண்டு. மனக்கவலை, இழப்பு, சோகம், திகில், அதிர்ச்சி போன்ற உளவியல் காரணங்களால் வயதில் பெரியவர்களுக்குக் குறு மயக்கம் ஏற்படுகிறது.

இறப்பு, இழப்பு போன்ற அதிர்ச்சி தரும் செய்திகளைக் கேட்டதும் மயக்கம் வருவது இதற்குச் சரியான எடுத்துக்காட்டு. நீண்ட நேரம் அழும்போது ஏற்படும் குறு மயக்கமும் இதைச் சேர்ந்ததுதான். மரணம் அடைந்தவர் வீடுகளில் பெண்கள் மயக்கம் அடைவது இதற்குப் பொருத்தமான ஓர் உதாரணம். சிலருக்கு ரத்தத்தைப் பார்த்தாலே மயக்கம் வரும். ரத்தப் பரிசோதனைக் கூடங்களில் ரத்தம் எடுக்கப்படும்போது சிலர் மயங்கி விழுவதைக் கேள்விப்பட்டிருப்பீர்களே!

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

இரவுத் தூக்கம் குறைவது ஏன்?

கு.கணேசன் 10 Dec 2023

நோய்களும் காரணமாகலாம்

இடைவிடாத இருமல் சில நிமிடங்களுக்கு நீடிக்கும்போது, வேகமாக எழுந்திருக்கும்போது இந்த மாதிரி குறு மயக்கம் வருவதுண்டு. நீண்ட நேரம் சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்குச் சிறுநீர் கழித்து முடிந்ததும் மயக்கம் வரும். கழுத்து எலும்பில் பிரச்சினை உள்ளவர்கள் தலையை ஒரு பக்கமாகச் சாய்க்கும்போது குறு மயக்கம் வரலாம்.

வாந்தி, வயிற்றுப்போக்கு காரணமாக உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும்போதும் உயரத்தில் ஏறும்போதும் மயக்கம் வரலாம். வெயிலில் அதிகமாக அலைவது, கடுமையான உடல் வலி, ரத்தசோகை, சத்துக்குறைவு, உணவு ஒவ்வாமை ஆகிய காரணங்களாலும் குறு மயக்கம் வருவதுண்டு.

என்ன அறிகுறி?

நின்ற நிலையிலோ உட்கார்ந்த நிலையிலோ இருக்கும் ஒருவர் திடீரென்று நினைவிழந்து, மயங்கி விழுவார். அடுத்த சில நிமிடங்களில் மயக்கம் தெளிந்து அவராகவே எழுந்துகொள்வார். மயக்கத்திலிருந்து விடுபட்டதும் சில நிமிடங்களுக்குக் கைகால்களில் நடுக்கம் இருக்கலாம். தசைத்துடிப்புகள் காணப்படலாம்.

எச்சரிக்கை அறிகுறிகள்

சிலருக்குக் குறு மயக்கம் ஏற்படுவதற்கு சற்று முன்பு படபடப்பு ஏற்படுவது, அடிக்கடி கொட்டாவி வருவது, ஊசி குத்துவது போன்ற உணர்வு, வியர்ப்பது, மூச்சு வாங்குவது, வாயைச் சுற்றி மதமதப்பு முதலிய அறிகுறிகள் தோன்றுவதுண்டு. இவை ஏற்பட்டவுடன் தரையில் அல்லது படுக்கையில் படுத்துவிட்டால் குறு மயக்கம் வராது.

முதலுதவி என்ன?

 • மயக்கம் அடைந்தவரை உடனடியாக நல்ல காற்றோட்டமான இடத்திற்கு அப்புறப்படுத்துங்கள்.
 • ஆடைகள் இறுக்கமாக இருந்தால், தளர்த்திவிடுங்கள்.
 • இடுப்பு பெல்ட்டை அகற்றுங்கள்.
 • தரையில் தலை கீழேயும் பாதங்கள் மேல்நோக்கியும் இருக்குமாறு படுக்க வையுங்கள்.
 • சில நிமிடங்களுக்குப் பாதங்களை உயர்த்திப் பிடித்துக்கொள்வது நல்லது.
 • தலையை ஒரு பக்கமாகச் சாய்த்துப் படுக்க வைத்தால் மூச்சுக்குழாய் அடைபடாமல் இருக்கும்.
 • தலைக்குத் தலையணை வைக்கக் கூடாது. பதிலாக, பாதங்களுக்கு அடியில் வைத்துக்கொள்ளலாம்.
 • முகத்தில் ‘சுளீர்’ என்று தண்ணீர் தெளியுங்கள். அப்படிச் செய்யும்போது முகத்தின் நரம்புகள் தூண்டப்படுவதால், மூளை நரம்புகளும் வேகமாக வேலை செய்யும். அப்போது மயக்கம் தெளிந்துவிடும்.
 • மயக்கம் தெளிந்தபின், குளுக்கோஸ் தண்ணீரில் சிறிதளவு உப்பைக் கலந்து குடிக்கத் தரலாம்.
 • ஐந்து நிமிடங்களுக்குள் மயக்கம் தெளியாவிட்டால் அது நெடுமயக்கமாக இருக்கலாம். இதற்கு மருத்துவர் உதவியை நாடுவதே நல்லது.

நெடு மயக்கத்துக்குக் காரணம்

வலிப்புநோய், இதயநோய், சிறுநீரக நோய், கல்லீரல் நோய், பக்கவாதம், வெப்பத்தாக்கு, மூளையில் ரத்தக்கசிவு, மூளைக்காய்ச்சல், மூளைக்கட்டி உள்ளவர்களுக்கு நெடு மயக்கம் வரும். இதயத்துடிப்பு, ரத்தச் சர்க்கரை, ரத்த அழுத்தம் ஆகியவை குறைவாக இருந்தாலும் மயக்கம் வரும்; மிக அதிகமாக இருந்தாலும் இவ்வகை மயக்கம் வரும். அதிக அளவில் மது குடிப்பது, போதை மாத்திரை களைச் சாப்பிடுவது, மின்சார அதிர்ச்சி, மருந்து ஒவ்வாமை, விஷக்கடி, விஷவாயு, தலையில் அடிபடுதல் போன்ற காரணங்களால் நெடு மயக்கம் ஏற்படும்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

நெஞ்சில் வலி ஏற்படுவது ஏன்?

கு.கணேசன் 26 Nov 2023

மயக்கம் - உண்மையா? நடிப்பா?

வீட்டிலோ, வேலை செய்யும் இடத்திலோ பிரச்சினை ஏற்படும்போது, அதிலிருந்துத் தப்பிக்க சிலர் மயக்கம் ஏற்பட்டுள்ளதுபோல் நடிப்பார்கள். அப்போது அந்த மயக்கம் உண்மையில்லை என்று எப்படித் தெரிந்துகொள்வது? அவருடைய கண் இமைகளை மேல்நோக்கி இழுங்கள். அவர் உண்மையிலேயே மயக்கநிலையில் இருந்தால், இமைகளை நீங்கள் மேல்நோக்கி இழுக்க முடியும். மயக்கம் அடைந்தது போல் நடிக்கிறார் என்றால், இமைகளை நீங்கள் மேலே இழுக்கும்போது அவர் இமைகளைத் திறக்கவிடமாட்டார். உண்மையில் மயக்கம் உள்ளவர்களுக்கு விழிகள் சுழலாது. மயக்கத்தில் உள்ளதுபோல் நடிப்பவர்களுக்கு இமைகளைத் திறந்தால் விழிகள் இங்கும் அங்கும் சுழலும். இவற்றிலிருந்து மயக்கம் உண்மையா, நடிப்பா என்று தெரிந்துகொள்ளலாம்.

தடுப்பது எப்படி?

 • முதல்முறையாக மயக்கம் ஏற்பட்டதும் ‘முழு உடல் பரிசோதனை’யை மேற்கொள்வது அவசியம்.
 • மயக்கத்துக்கான காரணம் அறிந்து சிகிச்சையை மேற்கொள்வது மீண்டும் மயக்கம் ஏற்படுவதைத் தடுக்கும்.
 • பயம், பதற்றம் போன்ற உளவியல் காரணமாக மயக்கம் வருபவர்களுக்குத் தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும் மனபலத்தை உண்டாக்கவும் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது, தியானம் மற்றும் யோகாசனம் பயில்வது உதவும்.
 • பள்ளி மாணவர்கள் காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.
 • வெயிலில் அளவுக்கு அதிகமாக விளையாடக் கூடாது.
 • அடிக்கடி மயக்கம் ஏற்படுபவர்கள் 'ஜிம்னாஸ்டிக்', ‘கம்பிப் பயிற்சிகள்’ போன்ற தசைப் பயிற்சிகளை மேற்கொள்ளக் கூடாது.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

நெஞ்சில் வலி ஏற்படுவது ஏன்?
களைப்பு ஏற்படுவது ஏன்?
இரவுத் தூக்கம் குறைவது ஏன்?
இளவயது மாரடைப்பு ஏன்?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கு.கணேசன்

கு.கணேசன், பொது நல மருத்துவர்; மருத்துவத் துறையில் உலகளாவிய அளவில் நடக்கும் மாற்றங்களை ஆழ்ந்து அவதானித்து, எளிய மொழியில் மக்களுக்கு எழுதும் பணியில் ஈடுபட்டிருப்பவர்; ‘சர்க்கரைநோயுடன் வாழ்வது இனிது!’, ‘நலம், நலம் அறிய ஆவல்’, ‘செகண்ட் ஒப்பினீயன்’ உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: gganesan95@gmail.com


4


பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

N Manoharan   6 months ago

இவரது கட்டுரை புத்தகங்களை படித்தால் நோயற்ற வாழ்வு வாழலாம். நன்றி🙏💕

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

தமிழ்நாட்டைப் பிரிக்கலாமா சமஸ் கட்டுரைதஞ்சை கோட்டைமுத்துசாமி பேட்டிகோம்பை அன்வர்சமிக்ஞைசமூக ஜனநாயகக் கட்சிவேளாண் சட்டங்கள்வி.பி.சிங் பேட்டிபசுங்குடில் வாயுக்கள்அரசியல் பழகுபாமகமரபணுக் கீற்றுதொழில்நுட்ப அறிவுஊட்டச்சத்துபுதிய கல்விக் கொள்கைஅம்பேத்கரிய கட்சிகள் திமுகவிடம் கற்றுக்கொள்ள வேண்டகௌதம் அதானிஎது தேசிய அரசு!ராஜேந்திர சோழன்குறைந்தபட்ச உத்தரவாத வருமானச் சட்டம்சம்ஸ்கிருதம்கடல் செல்வாக்குமிதவாதியுமல்லஇரண்டாம் நிலைத் தலைவலிகருத்தியல்எதிர்க்கட்சிகளுக்கு இது நல்ல வாய்ப்புதுப்புரவுத் தொழிலாளர்வலி அறியாத் தமிழர்கள்அரசமைப்புச் சட்டத் திருத்தம்அசோக்வர்த்தன் ஷெட்டி ஐஏஎஸ் பேட்டி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!