கட்டுரை, விவசாயம், ஆளுமைகள் 4 நிமிட வாசிப்பு
தமிழ் ரத்தினம் எம்.எஸ்.சுவாமிநாதன்
பாலின்றிப் பிள்ளையழும்
பட்டினியால் தாயழுவாள்
வேலையின்றி நாமழுவோம் – என் தோழனே
வீடு முச்சூடும் அழும்!
- பெருந்தலைவர் ஜீவாவின் புகழ் பெற்ற பாடல்களில் ஒன்று இது.
விடுதலை பெற்ற இந்தியாவின் தொடக்கக் காலத்தில் பெரும்பான்மை இந்திய மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் ஒன்று.
உலகின் மிகப் பெரிய பொருளாதாரக் கொள்ளையை நடத்தி முடித்த பின்னரே பிரிட்டிஷார் இந்தியாவுக்கு சுதந்திரத்தை அளித்தார்கள். இந்திய விடுதலைக்குச் சில ஆண்டுகள் முன்பு, உலகின் மாபெரும் பஞ்சங்களுள் ஒன்றான வங்கப் பஞ்சம் நிகழ்ந்தது. ஆங்கிலேய அரசின் மெத்தனப் போக்கால், அது பெரும் மானுடத் துயரமாக மாறியிருந்தது. அந்தத் தலைமுறையில் பலருடைய வாழ்வில் பெரும் தாக்கத்தை இந்தப் பேரழிவு உண்டாக்கியது. அவர்களில் முக்கியமானவர் மான்கொம்பு சாம்பசிவம் சுவாமிநாதன். அப்போது அவர் வயது 18.
யார் இந்த சுவாமிநாதன்?
கும்பகோணத்தில் 1925ஆம் ஆண்டு பிறந்த சுவாமிநாதன் தனது 10வது வயதில், தந்தையை இழந்தார். பின்னர் அவரது தந்தையின் சகோதரரால் வளர்க்கப்பட்டார். வேளாண்மையில் ஈடுபட்ட குடும்பம் என்பதால், இளம் வயதிலிருந்தே வேளாண்மையையும், அதன் சிரமங்களையும் நேரில் கண்டுணர்ந்தவராக வளர்ந்தார் சுவாமிநாதன்.
தன் தந்தையின் அடிச்சுவட்டில் மருத்துவம் பயில விலங்கியல் பயின்றாலும், வங்கப் பஞ்சத்தின் விளைவுகளைக் கண்ட சுவாமிநாதன் வேளாண்மையில் ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்தார். கோவையிலுள்ள வேளாண் கல்லூரியில் இளநிலை அறிவியல் பயின்றார். பின்னர் டெல்லியிலுள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தில் பயிர் மரபியல் மற்றும் இனப்பெருக்கத் துறையில் முதுநிலை படித்தார். அதன் பின்னர் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் முதுமுனைவர் பட்டமும் பெற்றார்.
இந்தியாவுக்குத் திரும்பி வந்த சுவாமிநாதன் கட்டாக் நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில் நெல் பயிர் இனப்பெருக்க ஆராய்ச்சியாளராகச் சேர்ந்தார். ஆறு மாதங்களுக்குப் பிறகு, அங்கிருந்து விலகி, தான் முதுநிலை பயின்ற டெல்லி இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் மரபியல் துறையில் ஆராய்ச்சியாளராக இணைந்தார்.
இந்தக் காலகட்டத்தில்தான், இந்திய உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்கும் ஆய்வுகளை நடத்தத் தொடங்கினார். இதன் ஒரு பகுதியாகப் புகழ் பெற்ற வேளாண் விஞ்ஞானி நார்மன் போர்லாகுடன் (Norman Borlaug) இணைந்து பயணிக்கத் தொடங்கினார். அதன் பிறகு நிகழ்ந்ததை உலகம் ‘சரித்திரம்’ எனச் சொல்கிறது.
நார்மன் போர்லாக்கின் கடிதம்
அதிக மகசூல் தரும் மெக்சிகோ குட்டை ரக கோதுமை ரகங்களை இந்தியா ரகங்களுடன் இணைத்து, புதிய ரகங்களை உருவாக்கினார்கள். அவற்றின் மகசூல் அப்போதைய இந்திய ரகங்களைவிட மிக அதிகமாக இருந்தது. ஆனால், அவற்றின் சுவை இந்திய நாக்குகளுக்குப் பிடிக்கவில்லை. அவற்றை மேலும் மேம்படுத்தினார்கள். 1964ஆம் ஆண்டு, சுவாமிநாதன் பஞ்சாப் மாநிலமெங்கும் நடத்திய ஆய்வுகளில், உருவாக்கப்பட்ட புதிய ரகங்கள் அதிக மகசூல் தருவது உறுதிப்படுத்தப்பட்டது. 1968ஆம் ஆண்டு மட்டுமே பஞ்சாப் மாநிலத்தின் மகசூல் 30% அதிகரித்தது. அதிகம் நெல் விளையாத பஞ்சாப் மாநிலத்தில் நெல் மிக முக்கியமான வேளாண் பயிராக மாறியது.
இந்த முயற்சிகளின் பலனாக, 1970ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா உணவு தானிய இறக்குமதியை நிறுத்தியது. உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட ஏழை நாடுகளுள் ஒன்றான இந்தியா, இந்தச் சாதனையை நிகழ்த்தியது உலக வரலாற்றின் மிக முக்கிய நிகழ்வுகளுள் ஒன்றாகும். இதில் வேளாண் ஆராய்ச்சியில் பங்களிப்பைச் செய்த ஆராய்ச்சியாளர் நார்மன் போர்லாக்குக்கு 1970ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“பசுமைப் புரட்சியின் வெற்றி என்பது ஒரு கூட்டுமுயற்சி. இந்த வெற்றியில், இந்திய நிர்வாகிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் உழவர்கள் எனப் பலருக்கும் பங்கு உண்டு. ஆனால், அவற்றில் மிக முக்கிய பங்கு, மெக்சிகோ குட்டை ரகங்களின் அதிக விளைச்சல் சாத்தியங்களை முதலில் அங்கீகரித்த ஆய்வாளரான உங்களுக்குத்தான் சேர வேண்டும். நீங்கள் மட்டும் அதை அங்கீகரித்து முன்னெடுக்காமல் இருந்திருந்தால், ஆசியாவில் பசுமைப் புரட்சி நிகழ்ந்திருக்காது.”
ஓர் ஆய்வாளராக சுவாமிநாதனின் தனிப்பட்ட பங்களிப்பு இது. நார்மன் போர்லாக் குறிப்பிட்டதுபோல இந்தியாவின் பசுமைப் புரட்சி என்பது ஒரு மாபெரும் கூட்டு முயற்சிதான். இதில், இந்தியப் பிரதமர்கள் லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, சி.சுப்ரமணியம் போன்ற மாபெரும் தலைவர்கள் மிகப் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளனர்.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
குறிப்பாக, உணவு தானியங்களுக்கான ஆதரவு விலை, அந்த விலையில் அரசுக் கொள்முதல் போன்றவை உணவு தானிய உற்பத்திச் சாதனையில் மிகப் பெரும் பங்களிப்பைச் செய்திருக்கின்றன. புதிய ரகங்களை பெரும் ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டு பயிரிட்ட பஞ்சாப் உழவர்களுக்கும் இதில் பங்குண்டு. ஆனாலும், மிகத் துல்லியமாக, நாட்டிற்குத் தேவையான ரகங்களை ஆய்வுகள் வழி கண்டடைந்த டாக்டர் சுவாமிநாதனின் பங்களிப்பு முதன்மையானது.
இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு
நடந்தது பேராசைப் புரட்சி: எம்.எஸ்.சுவாமிநாதன் பேட்டி
29 Sep 2023
முதல் ஆசியர்
எம்.எஸ்.சுவாமிநாதன் 1982இல், மணிலாவில் உள்ள ‘உலக அரிசி ஆராய்ச்சி நிறுவன’த்தின் டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். இப்பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் ஆசியர் இவரே. சுவாமிநாதனுக்கு 1987ஆம் ஆண்டு ‘உலக உணவுப் பரிசு’ வழங்கப்பட்டது. இதன் மூலம் கிடைத்த பரிசுத் தொகையைக் கொண்டு, சென்னையில், ‘எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன’த்தைத் தொடங்கினார்.
மனித இனம் 1950களில், உணவுப் பற்றாக்குறையால் தவித்துக்கொண்டிருந்த காலத்தில், உற்பத்தி மேம்பாடே மிக முக்கியமான குறிக்கோளாக இருந்தது. அதிக மகசூல் தரும் ரகங்கள், செயற்கை உரங்கள், பூச்சி மருந்துகள் முதலியவற்றின் பயன்பாடு மிக அதிகமாக இருந்தன. இதனால், சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் மாசுபாடு, நிலத்தடி நீர் அளவு குறைதல், மண் வளம் குறைதல் போன்ற மோசமான பக்க விளைவுகள் ஏற்பட்டன. ஓர் ஆராய்ச்சியாளராக, அவரது கவனம் இயல்பாகவே இவற்றின் மீது திரும்பியது.
வளர்ச்சி என்பது திரும்பவே முடியாத ஒருவழிப் பாதையாகப் போய்விடக் கூடாது; அது நீடித்து நிற்கும் வளர்ச்சியாக இருக்க வேண்டும் எனக் குரல் கொடுத்தார் சுவாமிநாதன். அத்துடன், வேளாண்மையில் மிக முக்கியமான பங்கு பெண்களுக்கு உண்டு என்பதையும் உணர்ந்து, வேளாண் துறையில் இருக்கும் பெண்களின் மேம்பாட்டுக்காகவும் குரல் கொடுத்தார்.
அவர் உருவாக்கிய ‘எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்’ அறிவியலை நீடித்து நிலைக்கும் வளர்ச்சிக்காகப் பயன்படுத்துவதையே முதன்மைக் குறிக்கோளாக வைத்துச் செயல்பட்டுவருகிறது. அறிவியலின் உதவியோடு, வேளாண்மை மேம்பாடு என்பது ஏழை, பழங்குடி மற்றும் பெண்களுக்கு முக்கியத்துவம் தருவதாக இருக்க வேண்டும் என்பதையே அந்நிறுவனம் தனது செயல்பாடுகள் மூலம் வலியுறுத்திவருகிறது.
இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு
இயற்கை வேளாண்மையிலும் பிற்போக்குத்தனம் இருக்கிறது: பாமயன் பேட்டி
21 May 2023
வேளாண்மைக்கு அப்பால்…
வேளாண் ஆராய்ச்சித் தளத்தைத் தாண்டிய தளங்களிலும் சுவாமிநாதனின் பங்களிப்பு நாட்டிற்கு முக்கியமானது. இந்திய அரசு, இரண்டு முறை சுவாமிநாதனை அழைத்து, முக்கியமான கொள்கைகளில் அவரது பங்களிப்பைக் கேட்டிருக்கிறது. இந்திய அரசு, 1993ஆம் ஆண்டு, மக்கள்தொகையைக் குறைத்தல் தொடர்பாக ஒரு கமிட்டியை உருவாக்கியது. அதன் தலைவராக சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார். அக்கமிட்டி மக்கள்தொகை தொடர்பான கொள்கைத் தளத்தில் மிக முக்கியமான பரிந்துரைகளைச் செய்தது.
மக்கள்தொகையைக் குறைக்க அரசு முன்னெடுக்கும் கருத்தடை சிகிச்சைகள், இலக்குகள் என்னும் பிற்போக்கான அணுகுமுறையை விடுத்து, மக்கள் நல மேம்பாடு என்னும் முழுமையான அணுகுமுறை மாற்றத்தைச் செய்ய வேண்டும் என அந்த கமிட்டி பரிந்துரை செய்தது. இந்த அணுகுமுறையின் கீழ், திட்டங்கள் மையப்படுத்தப்படாமல், பஞ்சாயத்துகள் வழியே மக்களின் பங்களிப்போடு உருவாக்கப்பட்டு, நிறைவேற்றப்பட வேண்டும் என்பதும் முக்கியமான பரிந்துரை.
இதன் நீட்சியாகத்தான் 2004 மக்களவைத் தேர்தலில் வென்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ‘குறைந்தபட்ச செயல்திட்ட’த்தில் ‘தேசிய உழவர் ஆணையம்’ (National Commission on Farmers) இடம்பெற்றது! தேர்தலில் வென்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, தேசிய உழவர் ஆணையத்தை அமைத்தது. அதன் தலைவராக சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார்.
இந்தியாவில் உழவர் தற்கொலைகள் 1990க்குப் பிறகு மிக வேகமாக அதிகரித்து, சமூக - அரசியல் தளங்களில் மிக முக்கியமான பேசுபொருளாக இருந்தது. இந்த அவலத்தைச் சரிசெய்து, வேளாண்மையை மேம்படுத்தும் வழிகளை அடையாளம் கண்டு முன்னிறுத்தும் பணியைச் செய்யுமாறு அரசு இந்த ஆணையத்தைக் கேட்டுக்கொண்டது.
இந்த ஆணையத்தின் பரிந்துரைகளில் முக்கியமானது, வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை. 2019 இறுதியில் டெல்லியில் தொடங்கி ஒராண்டுக்கும் அதிகமாக நீடித்த உழவர் போராட்டம், இந்தப் பரிந்துரையை அமல்படுத்தச் சொல்லித்தான் கேட்டது. இன்றைக்கு கருத்தியல் தளத்தில் இது மிக நியாயமான ஒரு முன்மொழிவு என்று கருதும் சூழல் மெல்ல உருவாகிவருகிறது; வேளாண் நலத் திட்டத்தில் சுவாமிநாதனின் முக்கியமான பங்களிப்பு இது.
இதைத் தாண்டி, நீர்ப் பாசனக் கட்டமைப்பை அதிகரித்தல், வேளாண்மைக்கான கடன்களின் வட்டி விகிதத்தை மிகக் குறைவாக வைத்திருத்தல், அனைவருக்குமான பொது விநியோக முறை, ஊட்டச்சத்துத் திட்டங்களை பஞ்சாயத்துகள் மூலம் செயல்படுத்துதல், பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கான ஆதரவு, நிலத்தடி நீர் மேம்பாடு, வேளாண் திட்டங்களில் பஞ்சாயத்துகளின் பங்களிப்பு எனப் பாரதூரமான பரிந்துரைகளை சுவாமிநாதன் ஆணையம் செய்தது. இன்று ஆந்திரம் / தெலங்கானா மாநிலங்களில் நிறைவேற்றப்பட்டுவரும் மாபெரும் நீர்ப்பாசனத் திட்டங்கள், சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளின் வெளிப்பாடுகளே.
மாபெரும் இழப்பு!
வேளாண் பட்டதாரியாக என்னுடைய மனம் சுவாமிநாதனின் பெயரையும், சாதனைகளையும் கேட்காத நாளில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவரது மரணத்தை, தனிப்பட்ட இழப்பாகவே மனம் உணர்கிறது.
வாழ்நாளின் இறுதி வரை, சமூக மேம்பாட்டுக்கு உழைக்க வேண்டும் என்னும் மனநிலை கொண்டு வாழ்பவர்கள் வெகு சிலரே. வாழ்கையில் சமூகத்தை வழிநடத்தும் கலங்கரை விளக்கங்களாக இருக்கும் அவர்கள், மரணத்திற்குப் பின்னர் சமூகத்தின் நிரந்தர விடிவெள்ளிகளாக நிலைத்து நிற்பார்கள். அப்படிப்பட்ட பெருமைமிகு ஆளுமைகளில் ஒருவர் என்பதோடு இந்தியாவுக்குத் தமிழ்நாடு அளித்த ரத்தினங்களில் ஒருவர் என்றும் சுவாமிநாதனைக் குறிப்பிட வேண்டும். அஞ்சலிகள்!
தொடர்புடைய கட்டுரைகள்
நடந்தது பேராசைப் புரட்சி: எம்.எஸ்.சுவாமிநாதன் பேட்டி
இந்திய வேளாண்மைக்குத் தேவை புதிய கொள்கை
இயற்கை வேளாண்மையிலும் பிற்போக்குத்தனம் இருக்கிறது: பாமயன் பேட்டி
3
பின்னூட்டம் (3)
Login / Create an account to add a comment / reply.
J. Jayakumar 1 year ago
Well written article! Congrats! But what sort of recognition and rewards had Tamilnadu government bestowed on him all these years? While he won national and international accolades, what is the contribution of Tamilnadu in recognizing his monumental efforts towards a hunger-free-nation? The writer could have mentioned that too, or the lack of it, if it is so!
Reply 2 0
RAJA RAJAMANI 1 year ago
Tamil Nadu government, due to its casteist policies, will never honour him. Also the misunderstood influence of Nammazhvar as promoted by Vikatan, has done great damage to MSS's name and achievements in TN. I remember 1966-67 when we had to stand in que for 4 hours to get 2 days worth of PL480 wheat from the US and how the green revolution changed all that to India now a rice exporting nation. But as MSS says greed overcame care of the soil. That is not MSS' or scientists' fault.
Reply 0 0
M. Balasubramaniam 10 months ago
When Dr.M.S. Swaminathan wanted to start a research foundation in Chennai, Chief Minister Mu.Karunanidhi allotted land in Taramani free of cost. M S Swaminathan has himself acknowledged n wrote in his tweets when the chief minister passed away
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.