கட்டுரை, அரசியல், சட்டம், கலாச்சாரம் 10 நிமிட வாசிப்பு
மார்க்சிஸ்ட்டுகள் செய்த பெருந்தவறு
கேரள மீன் வளம் மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் ஷாஜி செரியனிடமிருந்து பதவி விலகல் கடிதம் பெற்று அமைச்சரவையைவிட்டு அவரை விலக்கியது மார்க்சிஸ்ட் அரசு செய்த மிகப் பெரிய தவறாகும்.
இடதுசாரி ஊழியர் கூட்டம் ஒன்றில் பேசிய ஷாஜி செரியன், அரசமைப்புச் சட்டத்தை விமர்சித்தார் என்று கூறுகிறார்கள். செய்திகளைப் படித்தால், ‘அச்சட்டம் தொழிலாளர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது; அதானிகளையும் அம்பானிகளையும் மட்டுமே காப்பாற்றிவருகிறது’ என்றே அவர் பேசியிருக்கிறார் என்பது தெரியவருகிறது. “அரசமைப்புச் சட்டத்தை பிரிட்டிஷ்காரர்கள் கூறியதின் அடிப்படையில் எழுதியதுடன், அதில் முட்டாள்தனமாக ஜனநாயகம், மதசார்பின்மை என்றெல்லாம் எழுதியிருக்கிறார்கள்!” என்று அவர் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.
கொள்கைகளுக்கு விரோதம்
மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஷாஜி செரியன் செங்கனூர் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். பின்னர் பினராயி விஜயன் தலைமையில் அமைந்த கேரள அரசில் அமைச்சராக சேர்த்துக்கொள்ளப்பட்டார். சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றபோதும், அமைச்சராகப் பதவியேற்றபோதும் அவர் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த உறுதிமொழியில் இந்திய அரசமைப்புச் சட்டத்தை விருப்பு வெறுப்பின்றி ஏற்றுக் கடைப்பிடிப்பேன் என்றும், இந்திய இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் காப்பேன் என்றும் உள்ளது. இந்த உறுதிமொழியை அவர் புறக்கணித்தார் என்பதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா?
எதிர்க்கட்சிகள் ஷாஜி செரியன் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியதைத் தொடர்ந்து, கேரள மாநில அட்வகேட் ஜெனரல் கோபாலகிருஷ்ண குரூப்பின் கருத்து கோரப்பட்டு அதன் அடிப்படையில் அவர் பதவி விலகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார் என்று கூறப்படுகிறது. அப்படி அட்வகேட் ஜெனரல் கருத்து தெரிவித்திருந்தால் அது தவறு; மேலும், இது இடதுசாரிகளின் கொள்கைகளுக்கும் விரோதமானதாகவே இருக்கும்.
இந்திய அரசமைப்பின் தாராளப் பண்பு
இந்திய அரசமைப்புச் சட்டமானது அடிப்படையில் தாராளப் பண்பைக் கொண்டிருக்கிறது. வங்கதேச அரசமைப்புச் சட்டம்போல (பிரிவு 7ஏ), அரசமைப்புச் சட்டத்தை அவமதிப்பதானது கடும் குற்றமாக்கப்பட்டு மரண தண்டனை வரை விதிப்பதற்கு வழிசெய்யப்பட்டுள்ள சட்டம் நம்முடையது இல்லை. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அப்படிப்பட்ட பிரிவு ஏதும் இல்லை. இன்னும் கேட்டால் பிரிவு 19(1)(a) கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில், அச்சட்டத்தை விமர்சிப்பதற்கான உரிமை குடிநபருக்கு உண்டு என்ற உரிமையையும் அது தருகிறது.
சட்டத்திருத்தங்கள்
இந்திய அரசமைப்புச் சட்டம் அடிப்படையில் பிரிட்டிஷ்காரர்கள் கொண்டுவந்த 1935ஆம் வருடத்திய இந்திய அரசாங்கச் சட்டத்தின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டது. சொல்லப்போனால், அதிலுள்ள பெரும்பான்மையான பகுதிகள் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இதுவரை இந்திய அரசமைப்புச் சட்டம் 102 முறை திருத்தப்பட்டுள்ளது.
அரசமைப்புச் சட்டத்தின் ஆரம்ப வரிகளில் உள்ள ‘மதச்சார்பின்மை’ எனும் சொல்லே 1950இல் நடைமுறையில் கொண்டுவரப்பட்ட அரசமைப்புச் சட்டத்தில் கிடையாது; 1976ஆம் வருடம் கொண்டுவரப்பட்ட 42வது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் கீழ் அது நுழைக்கப்பட்டதானது எத்தகைய திருத்தங்களுக்கு எல்லாம் அது இடம் அளித்திருக்கிறது என்பதற்கான உதாரணம்.
பல நிகழ்வுகளில் நீதிமன்றங்களின் தீர்ப்பின் அடிப்படையை ரத்து செய்வதற்காகவே திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. 1960களின் இறுதியில் கொண்டுவரப்பட்ட தனியார் வங்கிகள் தேசியமயம், மன்னர் மானிய ஒழிப்புச் சட்டம் இவற்றையெல்லாம் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமையாகக் கூறப்பட்டிருந்த 31வது பிரிவின் அடிப்படையில் சொத்துரிமையை மையமாக்கித்தான் அந்தத் தீர்ப்புகள் வெளியிடப்பட்டன. அந்த தீர்ப்புகளின் அடிப்படையை நீக்குவதற்காக அரசமைப்புச் சட்டத்தில் 24 மற்றும் 25வது சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. அந்தத் திருத்தங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டபோது, பிரதமர் இந்திரா காந்தியின் அச்சட்டத்திருத்தங்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கட்சி வாக்களித்தது.
திருத்தங்களை ஆதரித்துப் பேசிய மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் பி.ராமமூர்த்தி தனது உரையில் நீதிமன்றங்களைக் கடுமையாகச் சாடியதோடு, “மக்களுக்குத் தேவைப்படாத அரசமைப்புச் சட்டத்தை வங்கக்கடலில் வீசியெறிய வேண்டும்” என்று நாடாளுமன்ற அவையிலேயே கூறினார். அந்தச் சட்டத்திருத்தங்களை எதிர்த்துப் போடப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், நாடாளுமன்றத்திற்கு அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கு அதிகாரம் உள்ளது என்று கூறியது. அதன் பிறகு மார்க்சிஸ்ட் கட்சிகூட அரசமைப்புச் சட்டத்தில் செய்ய வேண்டிய திருத்தங்களைப் பற்றி அதன் மத்தியக் குழுவில் விவாதித்து ஓர் அறிக்கையை வெளியிட்டது.
நெருக்கடிநிலையின்போது, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் தள்ளிவைக்கப்பட்டன. அதனால், சட்ட விரோத கைதுகளைக்கூட நீதிமன்றத்திற்கு எடுத்துச்செல்ல முடியாத ஒரு நிலைமை இருந்தது. இடதுசாரி கட்சிகள் மட்டுமின்றி வலதுசாரி கட்சிகளின் தலைவர்களும் சிறைப்படுத்தப்பட்ட காலம் அது. பாஜகவின் தலைவர்கள் வாஜ்பாயி, அத்வானி, இன்றைய பிரதமர் மோடி இவர்களெல்லாம்கூட 21 மாதங்கள் விசாரணையின்றி சிறையில் வைக்கப்பட்டனர். நெருக்கடிக் காலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை அணுக முடியாது என்று சொல்லி உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் தன் பங்குக்கு ஏ.டி.எம்.ஜபல்பூர் என்ற வழக்கில் ஓர் அவமானகரமான தீர்ப்பை வெளியிட்டனர். எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளை முடக்கிய பிரதமர் இந்திரா காந்தி, அரசமைப்புச் சட்டத்தில் பல திருத்தங்களை அவசர அவசரமாக 42வது திருத்தச் சட்டத்தின் மூலம் வெளியிட்டார். அதைக் கருப்புச் சட்டம் என்றே எதிர்க்கட்சிகள் விமர்சித்தார்கள்.
இதன் பிறகு அரசமைப்புச் சட்டத்தைக் கடுமையாக விமர்சிப்பதை மார்க்சிஸ்ட்டுகள் நிறுத்திக்கொண்டதோடு, ஜனநாயக உரிமைகள் பறிபோகாமல் இருப்பதற்கு அரசமைப்புச் சட்டத்தைத் தூக்கிப்பிடிக்கவும் ஆரம்பித்தார்கள். ஏனென்றால், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பது அவசியம் ஆனது.
1978இல் தேர்தல் வந்தபோது, அதில் வெற்றிபெற்ற ஜனதா கட்சி பதவிக்கு வந்தது. அந்த சமயத்தில் 42வது சட்டத்திருத்தப் பிரிவை ரத்து செய்வோம் என்று ஜனதா கட்சி உறுதி அளித்ததுடன், நாடாளுமன்றத்தில் அதை நிறைவேற்றும் வகையில் 44வது சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்தார்கள். அப்போதுது சிறையிலிருந்தே முசாபர்பூர் தொகுதியிலிருந்து ஜார்ஜ் பெர்னாண்டஸ் வெற்றிபெற்றார்.
உறுதிமொழி
ஜனநாயகத்திற்கு விரோதமாக இந்திரா காந்தி அரசமைப்புச் சட்டத்தை 42வது சட்டத்திருத்தம் மூலம் அப்பொழுது திருத்தியிருந்தார். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியேற்க முற்பட்ட ஜார்ஜ் பெர்னாண்டஸ் தனது உறுதிமொழியின்போது அரசமைப்புச் சட்டத்தைக் காப்பேன் என்ற வரிகளுக்கிடையே 42வது அரசமைப்புத் திருத்தச் சட்டம் தவிர என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டதாகக் கூறி, அவர் பதவியேற்பதைத் தடுக்க வழக்கு போடப்பட்டது. அந்த வழக்கில் தீர்ப்பு வருவதற்குள் அவர் மொரார்ஜி தேசாய் தலைமையிலான அமைச்சரவையில் தொழிற்துறை அமைச்சராகியிருந்தார். வழக்கிற்காதாரமாக அகில இந்திய வானொலி உறுதியேற்பு நிகழ்வை பதிவுசெய்த ஒலிநாடா கொண்டுவர உத்தரவிடப்பட்டது. உறுதிமொழி ஏற்றுக்கொண்ட பகுதியடங்கிய ஒலிநாடாவில், அப்பகுதியில் தேய்மானம் ஏற்பட்டிருந்ததால் வழக்கிலிருந்து அவர் தலை தப்பியது.
உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பேன் என்று கூற வேண்டும். இந்தி மொழி ஆதிக்கத்தை எதிர்த்து 1986இல் நடத்திய போராட்டத்தின்போது அரசமைப்புச் சட்டத்தில், இந்திய ஆட்சிமொழியைப் பற்றி கூறப்பட்டுள்ள 17வது பகுதியை நகலெடுத்து பொது இடங்களில் எரித்ததைக் காரணம் காட்டி திமுகவின் பொதுச்செயலாளர் அன்பழகன் மற்றும் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவைத் தலைவரால் நிரந்தரமாக அவையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். அரசமைப்புச் சட்டத்தின் ஒரு பகுதியை எரித்தவர்கள் உறுதிமொழியை மீறியதற்காக விரட்டப்பட்டனர் என்று காரணம் கூறப்பட்டது. அதை எதிர்த்துப் போடப்பட்ட வழக்குகளும் நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டன. ஆனால், இந்தத் தகுதியிழப்புகள் எல்லாம் நீதிமன்றத்தில் வழக்காக எடுத்துச்செல்லப்பட்டு அதனையொட்டி எழுந்த நிகழ்வுகள்.
பாஜக வெற்றி பெற்று முதல் முறையாக ஆட்சியைப் பிடித்தபோது ராமர் கோயில் பிரச்சினையைக் கையில் எடுத்துக்கொண்டார்கள். அதன் தலைவர்கள் எல்லாப் பிரச்சினைகளையும் நீதிமன்றம் தீர்க்க முடியாது என்று கூறியதோடு, அரசமைப்புச் சட்டத்தைக் குறைகூற ஆரம்பித்தார்கள். அது மட்டுமின்றி ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி வெங்கடாசலய்யா தலைமையில் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தி அமைப்பதற்கான மறு ஆய்வுக்குழு ஒன்றை அமைத்தார்கள். அவர்களுடைய உண்மையான நோக்கம் இந்த அரசமைப்புச் சட்டத்தை மாற்றி தங்களது நோக்கங்களை எல்லாம் நிறைவேற்றிக்கொள்வதுதான். ஆனால், சிறிது மாதங்களில் பதவி விலக நேர்ந்ததால் அவர்களது நோக்கங்கள் நிறைவேறவில்லை.
இதுபோன்ற பல நிகழ்வுகளால் அரசமைப்புச் சட்டம் பல்வேறு தரப்பிலிருந்து கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அந்த விமர்சனப் பேச்சுகளினால் எந்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களோ (அ) அமைச்சர்களோ பதவி விலகும்படி இதுவரை நிர்ப்பந்திக்கப்படவில்லை. ஆனால், எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பியதாலேயே ஒரு தவறான சட்ட ஆலோசனை பெறப்பட்டு அமைச்சரை வீட்டுக்கு அனுப்பியதன் மூலம் மார்க்சிஸ்ட்டுகள் இன்று மிகப்பெரிய தவறை இழைத்திருக்கிறார்கள்.
மாபெரும் தவறு
ஷாஜி செரியனிடம் பதவி விலகக் கோரியபோது, மார்க்சிஸ்ட்டுகள் அவர் கட்சி விரோத நடவடிக்கையை மேற்கொண்டார் என்றோ, கட்சியின் கருத்துகளுக்கு விரோதமாகச் செயல்பட்டார் என்றோ கூறவில்லை. அப்படி இருக்கும்போது ஒரு முதலாளித்துவ ஜனநாயக அமைப்பில் செயல்படுவதனாலேயே அதிலுள்ள அமைப்புச் சட்டத்தையும் குறை கூறாமல் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று இதுவரை எந்தத் தத்துவ மேதையும் கூறவில்லை.
மாறாக, 1967ஆம் வருடம் வெற்றிபெற்ற இடதுசாரி அரசில் முதல்வராக இருந்த ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் நீதிமன்றங்களைப் பற்றி கருத்து தெரிவிக்கும்போது, ‘முதலாளித்துவப் பொருளாதாரம் முன்னணி வகிக்கும் இச்சூழ்நிலையில் நீதிமன்றங்கள் அதையும் தாண்டி செயல்பட முடியாது. அவையும் முதலாளித்துவத்தை ஆதரிக்கும் அமைப்புகளாகவே இருக்கும்’ என்று கூறியதனால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், மார்க்சிஸ்ட் தத்துவ மேதை ஈ.எம்.எஸ்ஸுக்கு மார்க்சிஸமே புரியவில்லை என்று சொன்னது. இந்தத் தீர்ப்பைக் கடுமையாக விமர்சித்து தங்களது ஆங்கில வார ஏடான ‘பீப்புள்ஸ் டெமாக்ரஸி’யில் கட்டுரையை வெளியிட்டார்கள் அன்றைய கட்சியினர். மாறாக, கட்டுரையாளர் தோழர் பசவப்பொன்னையா மீது யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.
அதேபோல, இன்று பாசிஸ போக்கில் செல்லும் பாஜகவின் பல தலைவர்கள் பல்வேறு காலகட்டங்களில் அரசமைப்புச் சட்டத்தைக் குறைகூறி பேசிவரும் பேச்சுக்களுக்கெல்லாம் எந்த நடவடிக்கையும் எடுக்கும்படி யாரும் கோரிக்கை விடவில்லை. சொல்லப்போனால், அமைச்சர் ஷாஜி செரியன் கூறிய கருத்துகளைவிட மோசமான கருத்துகளெல்லாம் பல சட்ட அறிஞர்களால் இங்கே பேசப்பட்டுள்ளன. அமைச்சர் பேசிய கருத்துகள் அவர் பதவியில் தொடர்வதை அனுமதிக்காது என்று யாரேனும் கருதினால் அவர்களை நீதிமன்றத்திற்கு சென்று நிவாரணம் தேடும்படி கூறியிருக்கலாம். கட்சிக்கு விரோதமான கருத்துகள் என்றால், அவருக்குத் தனிப்பட்ட ஆலோசனைகளை அளித்து எதிர்காலத்தில் இப்படிப்பட்ட பேச்சுகளைத் தவிர்க்கும்படி கூறியிருக்கலாம். இந்நடவடிக்கை தவறானது.
தேச விரோத கருத்துகள் மட்டுமல்ல, கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளில் தண்டிக்கபட்டவர்களும்கூட ஆட்சியாளர்களாக இருக்கும் காலம் இது. அப்படி இருக்க பெரிய தவறு ஏதேம் இழைத்திடாத ஓர் அமைச்சரை அவருடைய கருத்துகளுக்காக வீட்டுக்கு அனுப்பியது எவ்விதத்திலும் ஏற்கக் கூடியது இல்லை. எதிர்த்தரப்புப் பிரச்சாரங்களை நிறுத்தும் வண்ணம் தனது கட்சி அமைச்சரை வீட்டுக்கு அனுப்பிய மார்க்சிஸ்ட்டுகள் மாபெரும் தவறை இழைத்துள்ளார்கள்.
3
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
அ.பி 2 years ago
இந்த காலத்திலும் இப்படி ஒரு தலைமை! (கேரளா ஆட்சியாளர்கள்). பெருமையாக உள்ளது.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.