கட்டுரை, அரசியல், சட்டம், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு
அமைச்சர்களை நீக்கும் அதிகாரம் ஆளுநர்களுக்கு உண்டா?
கேரளத்தைத் தாண்டி அதன் ஆளுநர் ஆரிப் முகமது கான் பேசிய பேச்சு பெரும் சர்ச்சைகளை உண்டாக்கியிருக்கிறது. அமைச்சரவையில் இருப்பவர்கள் ஆளுநர் பதவியைக் கேவலப்படுத்தும் வகையில் பேசினால், அமைச்சர்கள் மீது பதவி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று ஆளுநர் பேசியதே காரணம்.
அப்படிப்பட்ட அதிகார வரையறை ஆளுநருக்கு உள்ளதா? நேற்றைய ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் தலையங்கம் உள்பட ஆரிப் கானின் பேச்சில் உள்ள தவறைப் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சட்டம் என்ன சொல்கிறது?
மாநிலத்திற்கு ஒருவர் என்ற முறையில் மாநிலங்களுக்கு ஆளுநர்களைக் குடியரசுத் தலைவர் நியமிக்கலாம் என்று அரசமைப்புச் சட்டத்தின் 155வது பிரிவில் கூறப்பட்டுள்ளது. 156(1)வது பிரிவில் குடியரசுத் தலைவரின் விருப்பம் நீடிக்கும்வரைதான் அவர் ஆளுநராகச் செயல்பட முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. சட்டத்தில், ‘குடியரசுத் தலைவர்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவர் ஒன்றிய அமைச்சரவையின் ஆலோசனைக்குக் கட்டுப்பட்டவர் என்று பிரிவு 74இல் கூறப்பட்டுள்ளது.
ஆகவே, ஆளுநர் மத்தியில் கோலோச்சும் ஆளுங்கட்சியின் விருப்ப வரையறைபடிதான் பதவியில் இருக்க முடியும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
கேரள ஆளுநரோ அமைச்சரவையும் தன் விருப்பப்படி செயல்பட முடியும் என்று கூறுவது சட்டத்தில் இல்லாதது. தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையைக் கொஞ்சம் தட்டிவிட்டாலும் அது சமநிலைக்கு வரும்வரை ஆடிக்கொண்டுதான் இருக்கும் என்பதுபோல் இருக்கிறது.
ஆளுநருக்குக் கட்டுப்பாடு இல்லையா?
அரசமைப்புச் சட்டத்தின் 163வது பிரிவில், முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையின் ஆலோசனைப்படி மாநில ஆளுநர் நடக்க வேண்டும் என்றே கூறப்பட்டுள்ளது.
ஆனால், அரசமைப்புச் சட்டத்தின் 155,156(1) பிரிவுகளின்படி ஆளுநரை நியமிப்பவர் குடியரசுத் தலைவர் என்பதாலும், ஒன்றிய அமைச்சரவையின் ஆலோசனைக்குக் கட்டுப்பட்டவர் குடியரசுத் தலைவர் என்று அரசமைப்புச் சட்டத்தின் 74வது பிரிவில் (shall be bound) குறிப்பிடப்பட்டிருப்பதாலும், ‘மாநிலங்களைப் பொறுத்தவரை அமைச்சரவையின் ஆலோசனைப்படி நடக்கலாம் (may) என்று ஏதோ ஒரு கட்டுப்பாடற்ற முறையில் அவர் செயல்படலாம்’ என்ற தொனி நிலவுவதால், கேரள ஆளுநர் இப்படிப் பேசிவிட்டிருப்பாரோ என்று தோன்றுகிறது. நடைமுறையில் மாநில அமைச்சரவையின் ஆலோசனையின்றி ஆளுநர்கள் செயல்பட முடியாது.
இருப்பினும், சில ஆளுநர்கள் இந்தக் கட்டுப்பாடு எல்லாப் பொறுப்புகளுக்கும் பொருந்தாது என்றும், பல்கலைக்கழகங்களில் ஆளுநரே வேந்தர் என்ற பொறுப்பில் இருப்பார் என்று கூறியிருப்பதனால் பல்கலைக்கழக விவகாரங்களில் தனக்கு முழுக் கட்டுப்பாடும் உண்டு என்று கூற முற்பட்டுள்ளார்கள். சில உயர் நீதிமன்றங்களும் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டுள்ளன. இது சட்டப்படி சரியா என்று பார்த்தால், அதுவும் தவறு என்றே புரிந்துகொள்ளலாம்.
பல்கலைக்கழகங்களில் ஆளுநரின் அதிகாரம் என்ன?
சென்னை மாகாணத்தில் முதல் முறையாகப் பல்கலைக்கழகத்தைத் தோற்றுவிப்பதற்காக 1923இல் சென்னைப் பல்கலைக்கழகச் சட்டம் அன்றைய ஆளுநரின் கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டது. அச்சட்டத்திற்கான முன்னோடியாக இங்கிலாந்திலுள்ள பல்கலைக்கழகச் சட்டங்களின் மாதிரிகள் பயன்படுத்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாகவே, ‘மாகாணத்தின் ஆளுநரே பல்கலைக்கழகத்தின் வேந்தராக (Chancellor) இருப்பார்’ என்று கூறப்பட்டது.
அதாவது, ஆளுநருடைய கௌரவத் தலைமையின் கீழ் ஆட்சிக்குழு, செனட், கல்விக்குழு மற்றும் துணைவேந்தர் செயல்பட வேண்டும் என்றும் ஆளுநரது பதவியைப் பொறுத்தவரை அவர் பல்கலைக்கழகத்திற்கு வருகை தருவோர் (visitor) என்ற முறையில் செயல்படுவார். அதனால், பல்கலைக்கழகத்தின் தினசரி நடவடிக்கைகளில் தலையிடுவதற்கு அவருக்கு உரிமை ஏதும் இல்லை. பல்கலைக்கழக நடவடிக்கைகளை ஆட்சிக்குழு மட்டுமே நடத்திச் செல்லும். கல்வி சம்பந்தமான பிரச்சினைகளில் செனட் மற்றும் கல்விக்குழு மட்டுமே முடிவெடுக்கும். துணைவேந்தர் இந்த அதிகார அமைப்புகளின் உத்தரவுகளை நிறைவேற்றும் முதன்மைச் செயல் அலுவலராக இருப்பார். நிர்வாக விஷயங்களில் அவருக்கு உதவிடுவதற்காகவே பதிவாளர் பதவி ஏற்படுத்தப்பட்டது.
துணைவேந்தர் நியமனங்களிலும் பொறுக்குக் குழு (மூவர் அடங்கியது) தேர்வு நடைமுறைகளைக் கையாண்டு மூன்று பேர் பட்டியலை ஆளுநருக்கு அனுப்பி வைக்கும். அதில் ஆளுநர் கை காட்டும் ஒருவரை அரசு நியமிக்கும். ஆளுநர், ஆட்சிக்குழு மற்றும் செனட் நியமனம் செய்யும் மூவர் அக்குழுவில் பொறுப்பு வகிப்பார்கள். பல்கலைக்கழத்தில் நடைபெறும் விஷயங்களைக் கேட்டுப்பெறும் உரிமை வேந்தருக்கு (ஆளுநருக்கு) கொடுக்கப்பட்டுள்ளது.
இதுதான் நடைமுறை. கிட்டதட்ட ஆளுநருக்கான இடம் இங்கேயும் திட்டவட்டமாகத் தெரிகிறது. ஆனால், எப்போதெல்லாம் மாநில அரசு பலவீனமாக இருக்கிறதோ அப்போதெல்லாம் பல்கலைக்கழக விஷயங்களில் ராஜ்பவன்களின் தலையீடுகள் அதிகரித்துவந்துள்ளன. எங்கெல்லாம் ஆளுநர்கள் மாநில அரசுகளின் நடவடிக்கைகளில் நேரடியாகத் தலையிட முடியவில்லையோ அங்கெல்லாம் பல்கலைக்கழக நடவடிக்கைகளில் தலையிடுவதற்கு ஆளுநர்கள் பணிக்கப்பட்டனர்.
இதன் மூலம் தொடர்ந்து மாநில அரசுக்குக் குடைச்சல் கொடுக்கும் வேலையைத் திறம்பட செய்ய ஆரம்பித்தனர் ஆளுநர்கள். தமிழக ஆளுநர் பதவியேற்றவுடன் துணைவேந்தர்களை ராஜ்பவனுக்கு வரவழைத்து அவர்களுக்கு சனாதன வகுப்புகள் எடுப்பதில் தொடங்கி ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கையின் பிரச்சாரம் வரை எல்லா வேலைகளையும் செய்யாலாயினர். இதில் திருக்குறளுக்கு விளக்கவுரை வேறு!
தமிழ்நாடு மாநில உயர்கல்விக்கான கவுன்சில் என்று சட்டப்பூர்வமான அமைப்பொன்று இருக்கும்போதே தனியாக ஆளுநர் துணைவேந்தர்களை அழைத்துப் பேசுவது முறையா என்ற கேள்வியும் எழுந்தது.
துணைவேந்தர்கள் ஓய்வு பெறுவதற்கு முன்னாலேயே புதிய துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அரசைச் சார்ந்தது. டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் ஓய்வு பெறுவதையொட்டி பொறுக்குக் குழு ஒன்று அமைக்கப்பட்டு மூவர் அடங்கிய பட்டியல் ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டபோதும் அவர் அவற்றை நிராகரித்துவிட்டு சுதா சேஷய்யனுக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு உத்தரவு வழங்கியதற்கான காரணம் அவருக்கு மட்டுமே தெரியும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைப் புறக்கணித்தல்
மாநிலப் பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை மிகப் பெரிய நிதிச் சுமையை மாநில அரசுகள் ஏற்றே அவற்றை நடத்திவருகின்றன. எனவே, இந்தப் பல்கலைக்கழகங்களை நிர்வாகரீதியாகச் சீரமைக்கும், மேம்படுத்தும் நோக்கில் உத்தரவுகளைப் பிறப்பிக்கவும்,. நடவடிக்கைகளை எடுக்கவும் அவற்றுக்கு உரிமை உண்டு. இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையின் உத்தரவுகளைத் தொடர்ந்து புறக்கணிக்கும் வேலையை வேந்தர்களாகிய ஆளுநர்கள் செய்யும்போது இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டிய வேலையில் மாநில அரசுகள் இறங்குகின்றன.
அப்படித்தான் பல்கலைக்கழகச் சட்டங்களைத் திருத்தி மாநில முதல்வரையே பல்கலைக்கழங்களின் வேந்தராக அறிவிக்கும் சட்டத்திருத்தம் ஒன்று தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, மாநில ஆளுநர் ரவியிடம் அனுப்பப்பட்டது. பல வாரங்கள் ஆகிவிட்டன. இதுவரை அதற்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் அத்திருத்தத்தை மீண்டும் பரிசீலிப்பதற்குக்கூட முன்வரவில்லை.
கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானும் இதேபோல் கேரள சட்டமன்றம் நிறைவேற்றிய சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மறுத்துவருவதுடன், அதைப் பொதுவெளியில் விமர்சிக்கும் கேரள அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் தனக்கு இருப்பதாகவும் மிரட்டும் தொனியில் பேசிவருகிறார்.
கண்ணூர் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு மீண்டும் ஒரு தவணை பதவி நீட்டிப்பு வழங்க அரசு பரிந்துரைத்தபோது அதை நிராகரித்ததுடன், பலத்த எதிர்ப்பு வந்தவுடன் உத்தரவை வழங்கினார். அதே பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் ஒருவரைப் பணியமர்த்தியது முறைகேடு என்று கூறி ஆட்சிக்குழுவின் உத்தரவை ரத்துசெய்து தனது சர்வாதிகாரப் போக்கை வெளிப்படுத்தினார். இப்போது அமைச்சர்களை நீக்கும் அதிகாரமே தனக்கு இருப்பதாகப் பேசியிருக்கிறார்.
இவை எல்லாமே உணர்த்துவது ஒரு விஷயத்தைத்தான். நீண்ட காலத்துக்கு முன்னரே அண்ணா ‘ஆட்டுக்கு தாடி எதற்கு? நாட்டுக்கு கவர்னர் எதற்கு?’ என்ற கேள்வியை நாடாளுமன்றத்தில் எழுப்பினார். கடந்த 50 வருடங்களில் பல சட்ட ஆணையங்களும் எதிர்க்கட்சிகளும் ஆளுநர் பதவியின் அதிகார வரையறையை மாற்றி அமைக்க வேண்டும் என்று பல சமயங்களில் பேசிவிட்டன. அண்ணாவின் கேள்வியை மீண்டும் மீண்டும் நியாயப்படுத்தும் காரியங்களிலேயே தொடர்ந்தும் ஆளுநர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
ஒன்றிய ஆளுங்கட்சியின் செல்வாக்கைப் பெருக்குவதற்கு மாநிலங்களில் ஸ்திரமற்ற தன்மையை உருவாக்குவதற்கு ஆளுநர்களைப் பயன்படுத்திக்கொள்வதை அனுமதிக்கக் கூடாது என்று தென் மாநிலங்களிலுள்ள அரசுகளும் அவற்றை வழிநடத்திச் செல்லும் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து குரல் எழுப்புவதே இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள இப்போதுள்ள ஒரே வழியாகும்!
3
1
பின்னூட்டம் (2)
Login / Create an account to add a comment / reply.
Thiruvasagam 2 years ago
“பல்கலைக்கழகங்களில் ஆளுநரே வேந்தர் என்ற பொறுப்பில் இருப்பார் என்று கூறியிருப்பதனால் பல்கலைக்கழக விவகாரங்களில் தனக்கு முழுக் கட்டுப்பாடும் உண்டு என்று கூற முற்பட்டுள்ளார்கள். சில உயர் நீதிமன்றங்களும் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டுள்ளன. இது சட்டப்படி சரியா என்று பார்த்தால், அதுவும் தவறு என்றே புரிந்துகொள்ளலாம்.“ - இதுபோன்ற குழப்பும் வாதங்கள் இந்திய நீதித்துறையின் சாபக்கேடு! இந்த வாதம் மூலம் என்ன புரிந்து கொள்வது? 1) உயர்நீதி மன்றம் தவறான தீர்ப்பு வழங்கியுள்ளதா? 2) நீதித்துறையால் அரசமைப்பு சட்டத்தை புரிந்து கொள்ளமுடியாமல் உள்ளதா? 3) இல்லை இதைப் படித்துவிட்டு மக்கள் நீதித்துறையின் மீது நம்பிக்கை வைக்கவேண்டுமா அல்ல இழக்க வேண்டுமா?
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Shanmugakani 2 years ago
ஆளுநர்கள் சட்டத்திற்குப் புறம்பாகச் செல்படும்போது, மக்களாட்சிக் கோட்பாடகளுக்குக் கேடு வரும்பொழுது உச்சநீதி மன்றம் வாளாவிருப்பது ஏன்? மத்திய அரசு ஊக்கவிப்பது ஏன்? மத்தியில் ஆளுகின்ற அரசு எதுவாகிலும் இதே முறையைக் கையாள்கின்றன. ஆளுநர்களின் இந்த அடாவடிச் செயல்களுக்கு ஆரம்பவிழா செய்தது காங்கிரஸ், அதை வலுவாக்கியது பாஜக. மத்தியிலே கூட்டாட்சி ஏற்பட்டாலொழிய இதற்கு விடிவுகாலமில்லை.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.