கட்டுரை, நூல் விமர்சனம் 7 நிமிட வாசிப்பு

அறிந்துகொள்வதும் பழகுவதும்: சீனிவாச ராமாநுஜம்

சீனிவாச ராமாநுஜம்
04 Mar 2021, 5:00 am
0

ழகுதல் என்பது செயல்பாட்டோடு தொடர்புகொண்டது. சிந்தனையோடு மட்டுப்பட்டதல்ல. பயிலுதலோடு தொடர்புகொண்டது. அரசியலைப் பயிலச் சொல்கிறார் சமஸ். கருத்தியல்ரீதியான, மொழிரீதியான உலகத்தோடு அவர் தன்னை மட்டுப்படுத்திக்கொள்ள மறுக்கிறார். பல சமயங்களில் சித்தாந்த அரசியல் வெறுமனே கருத்தியல்ரீதியாக, மொழிரீதியாகச் சுருங்கிப்போகிறது. இதிலிருந்து எவ்வாறு வெளியேறுவது என்பது சமஸின் அடிப்படையாக இருக்கிறது.

அரசியலை ஒரு சித்தாந்தமாக, கோட்பாடாக, கருத்தாக முன்வைத்து நம்மை நாம் வரையறுத்துக்கொள்ள முடியும். அது செயல்பாடாக மாறாமல் போகலாம். இந்தப் போதாமையைக் கணக்கில் கொண்டே இந்நூலின் தலைப்பை நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில், அனுபவங்களோடு தொடர்புகொண்டது அரசியல். உடலோடு தொடர்புகொண்டது. புலன்களோடு தொடர்புகொண்டது. அரசியலைக் கருத்தாக மட்டுமல்லாமல், அதைப் பழக முற்படும்போது நம்முடைய அரசியல் நிலைப்பாடு வாழ்க்கையிலிருந்து துண்டிக்கப்பட்டதாக இல்லாமல், மனிதர்களோடும் அன்றாட வாழ்க்கையோடும் இணைந்ததாகிறது. இதனால்தான், ‘குப்பையிலிருந்து தொடங்குவோம்’ என்கிறார் சமஸ்.  

எங்கு ஒழுங்கு இருக்கிறதோ அங்கு குப்பை இருக்கும் என்கிறார் ஓர் ஆய்வாளர். ஒழுங்கு என்பது மையத்தைச் சுற்றிச் செயல்படக்கூடியது. குப்பையோ ஒழுங்கின் எல்லைகளுக்கு அப்பால் தள்ளப்பட்டது. ஆக, குப்பையிலிருந்து தொடங்கும்போது அது ஒழுங்கை மறுவரையறை செய்கிறது. பத்து ஏக்கர் நிலத்தைச் சிறு காடாக மாற்றிய ‘மரம் தங்கசாமி’, காசு வாங்காமல் பள்ளிக்கூடம் நடத்தும் ‘கும்பகோணம் குருசாமி பாலசுப்பிரமணியம்’, மாங்குடி பள்ளி ஆசிரியரான ‘ஜோதிமணி வாத்தியார்’ ஆகியோரை நமக்கான முன்னுதாரணமாக முன்வைக்கிறார். இவர்கள் எவரும் மையத்தைச் சுற்றி இயங்கவில்லை. சுருக்கமாகச் சொல்வதென்றால், அரசியல் கற்பிப்பது, கற்றுக்கொள்வது மட்டுமே போதாது, சித்தாந்த அரசியல் மட்டுமே போதாது; நாம் அதைப் பழக வேண்டும், பயில வேண்டும் என்பதற்கு சமஸ் முக்கியத்துவம் கொடுக்கிறார். அவரது இந்த நிலைப்பாட்டில் நான் முழுமையாக உடன்படுகிறேன். வேறு விதமாகச் சொல்வதென்றால், சமஸின் அரசியலானது பண்பாட்டு அரசியல். சமஸின் இந்தப் பண்பாட்டு அரசியலே காந்தியில் தொடங்கும் அவரை அண்ணா வரை நெருக்கத்தில் கொண்டுசென்றுவிடுகிறது. அவர்களது அன்றாட வாழ்க்கை சமஸுக்கு முக்கியமாகப் படுகிறது.

சமஸ் முன்வைக்கும் அரசியலின் அடிப்படையானது இருப்பதைத் தலைகீழாக்கிப் போடுவதல்ல. பண்பாட்டுரீதியாக, சமூகரீதியாக, பொருளாதாரரீதியாக, தத்துவார்த்தரீதியாக ஏற்படும் மாற்றங்களே நீடித்து நிலைக்கக்கூடியவையாக இருக்கின்றன என்று சமஸ் நம்புகிறார். ஒரு கொள்கையோ அல்லது கோட்பாடோ சமூகத்தில் நிலைத்து நிற்பதற்கு அது அன்றாட வாழ்க்கையோடு இணைக்கப்பட்டதாக இருக்க வேண்டியிருக்கிறது. அன்றாட வாழ்க்கையின் பகுதி ஆகாத கொள்கைகள், கோட்பாடுகள் வெறுமனே மொழிரீதியாகச் சுருங்கிப்போகின்றன. எடுத்துக்காட்டாக, தீண்டாமையை எடுத்துக்கொள்வோம். நாம் எல்லோரும் தீண்டாமையை எதிர்க்கிறோம். ஆனால், தீண்டாமையை அரசியல்ரீதியாக எதிர்ப்பதற்குக் கற்றுக்கொண்டிருக்கும் நாம், அதை அன்றாட வாழ்க்கையில் எப்படி எதிர்ப்பது என்று கேட்டுக்கொள்வதில்லை. அன்றாட வாழ்கையில் அது எப்படியெல்லாம் அதை வெளிப்படுத்திக்கொள்கிறது என்று உள்வாங்கிக்கொள்வதில்லை. அன்றாட வாழ்க்கையில் எதிர்க்கத் தொடங்கினால்தான் நாம் அன்றாட வாழ்க்கையில் எப்படிப்பட்ட எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வோம்; நம்முடைய பெற்றோர்களின் நடத்தைகளை, உடன் பிறந்தவர்களின் நடத்தைகளை, நம்முடைய நடத்தைகளை நாம் விமர்சனபூர்வமாக எதிர்கொள்ளத் தொடங்குவோம். அன்றாட வாழ்க்கையின் பகுதியாகவே நம்முடைய உடல் வெளிப்படுகிறது. நம்முடைய புலன்களும் அன்றாடத்தன்மை சார்ந்தே வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆக, நம்முடைய அரசியல் நம் உடலின் பகுதியாக, நம்முடைய புலன்களின் பகுதியாக மாற வேண்டியுள்ளது. இதைப் பண்பாட்டுரீதியாக மட்டுமே சாத்தியப்படுத்த முடியும். நிலைத்திருக்கும் சித்தாந்தங்களும் பண்பாட்டுரீதியாகவே நிலைத்திருக்கின்றன. இதனால்தான், ‘மனிதர்களால் உருவாக்கப்பட்ட எதுவும் மனிதர்களால் மாற்றக்கூடியதும்தான்’ என்கிறார் சமஸ்.

இந்நூலில் காந்தி, அண்ணா இருவரையும் சமஸ் இணைக்கும் புள்ளி மிக முக்கியமானது. ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ என்ற அண்ணாவின் நிலைப்பாட்டையும் சமஸ் இந்த அன்றாடத்தன்மையிலிருந்தே அணுகுகிறார். எடுத்துக்காட்டாக, திராவிட நாடு கோரிக்கையை அண்ணா கைவிட்டதை சித்தாந்தரீதியாக, அரசியல்ரீதியாகப் பலரும் விமர்சிக்கும்போது, சமஸ் அதை சாதகமான ஒன்றாகப் பார்க்கிறார். அதாவது, திராவிட நாடு எப்படி இருக்க வேண்டும் என்று அண்ணா கண்ட கனவுகளை இந்தியா முழுவதற்கும் விரிவுபடுத்தியதாக வாசிக்கிறார். இது, பொருள்கோளியல்ரீதியாக மிக முக்கியமான வாசிப்பு. அண்ணாவின் முடிவு எவ்வாறு நடைமுறைத் தேவைகளை, நிர்ப்பந்தங்களை அடிப்படையாகக் கொண்டிருந்ததோ அதற்கு நிகராக சமஸும் நடைமுறைத் தளத்திலிருந்தே அதை அணுகுகிறார். ஒற்றையதிகார தேசிய அரசு முரட்டுத்தனமாகத் தலைவிரித்து ஆடும் இன்றைய சூழலில் இந்தியா முழுவதற்குமாக அண்ணாவை முன்னிறுத்த முற்படுவது மிக அவசியமான அரசியல் நிலைப்பாடாகிறது. இதுபோலவே காந்தியின் சம்பாரண் போராட்டத்தையும் சமஸ் வாசிக்கிறார். இந்தப் போராட்டமும் நடைமுறைத் தேவைகளுக்கும் நிர்ப்பந்தங்களுக்கும் முகங்கொடுத்த போராட்டமாகும். இந்தப் போராட்டத்தின் ஊடாக உருவான காந்தியையே இந்தியா தழுவிக்கொண்டது.

சமஸின் எழுத்துகள் ஊடாக வெளிப்படும் சமஸை நாம் எவ்வாறு உள்வாங்கிக்கொள்ளப்போகிறோம் என்பதே எனக்கு முக்கியமாகப் படுகிறது. கருத்துகளை, கோட்பாடுகளை வாழ்க்கையாக மாற்ற வேண்டியுள்ளது. இந்தச் செயல்பாடு ‘பழகுத’லோடு தொடர்புகொண்டது. கோட்பாட்டுரீதியான அரசியலுக்கும் நடைமுறைரீதியான வாழ்க்கைக்கும் இடையேயான உறவை நமக்கு இந்தப் புத்தகம் புலப்படுத்துகிறது. இந்தத் தளத்தில் இது மிக முக்கியமான ஒரு புத்தகம். இந்தப் புத்தகத்தோடு உரையாடுவது நமக்குப் பல புரிதல்களையும் திறப்புகளையும் கொடுக்கும்.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சீனிவாச ராமாநுஜம்

சீனிவாச ராமாநுஜம், சமூக அறிவியலாளர். மொழிபெயர்ப்பாளர். பிரச்சினைகளின் அடிவேர்களை நோக்கிச் செல்லும் எழுத்துகள் இவருடையவை. ‘சந்நியாசமும் தீண்டாமையும்’, ‘இந்து மதம்: ஒரு விசாரணை’, ‘தற்கொலைகளைக் கொண்டாடுவோம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். சாதத் ஹசன் மண்டோவினுடைய ‘மண்டோ படைப்புகள்’, டி.ஆர்.நாகராஜ் எழுதிய ‘தீப்பற்றிய பாதங்கள்’, சுந்தர் சருக்கை - கோபால் குரு இணைந்து எழுதிய ‘விரிசல் கண்ணாடி’ உள்ளிட்ட நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குக் கொண்டுவந்தவர். தொடர்புக்கு: manuvibu.ram@gmail.com








பிரபாகரன் சமஸ்வழக்குகள் தேக்கம்பழைய விழுமியங்கள்ஸ்டாலின் ராஜாங்கம்வாக்குப்பதிவுசமஸ் வி.பி. சிங்அவரவர் முன்னுரிமைகான் மார்க்கெட் மேட்டுக்குடிகள்மென் இந்துத்துவம்நேஷனலிஸம்சோழ தூதர் மு.கருணாநிதிரூபாய் - டாலர் செலாவணி விகிதம்மெத்தனால்இந்திய ஒன்றியம்உடற்பயிற்சிகுரங்கு அம்மைஒன்றிய – மாநில அரசு உறவுகள்பிராமணரல்லாதோர்லாபம்நிர்வாகத் துறைஎதிர்க்கட்சிஇடஒதுக்கீடுஅருஞ்சொல் நாராயண குருஅந்தணர்கள்குஜராத்தி வணிகர்கள்சங்க இலக்கியங்கள்இலக்கியவாதிகாட்சி மொழிஸ்ரீவில்லிபுத்தூர்மாதாந்திர நுகர்வுச் செலவு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!