கட்டுரை, நூல் விமர்சனம், இலக்கியம் 20 நிமிட வாசிப்பு

அழகியலும் மேலாதிக்க சுயமும்

சீனிவாச ராமாநுஜம்
14 Aug 2022, 5:00 am
1

ஹிதா மொழியாக்கம் செய்து, ‘எதிர்’ பதிப்பகம் வெளியிட்டிருக்கும் (2022) கூட்ஸின் நாவலான ‘மானக்கேடு’ தமிழுக்கு முக்கியமான ஒரு வரவு. தென்னாப்பிரிக்க நாவலான இது, கறுப்பர்–வெள்ளையருக்கு இடையேயான பண்பாட்டுரீதியான, சமூகரீதியான, பொருளாதாரரீதியான, விழுமியங்கள்ரீதியான பிளவுக்கோட்டைச் சுற்றி இயங்குகிறது. மேலாதிக்கச் சமூகக் குழுமத்தைச் சேர்ந்த ஒருவரின், அதாவது ஆங்கில இலக்கியப் பேராசிரியராக இருக்கும், ஐம்பத்திரண்டு வயதான ஒரு வெள்ளையரின் ஆதிக்க மனக் கட்டமைப்பை இந்த நாவல் மிக நுட்பமாக வெளிக்கொணர்கிறது. மேலாதிக்கக் கருத்தாக்கம் எப்படியெல்லாம் அதை வடிவமைத்துக்கொள்கிறது என்றும், ஒரு சுயத்தை எவ்வாறெல்லாம் கட்டமைக்கிறது என்பதன் மேலும் இந்த நாவல் அக்கறைகாட்டுகிறது. அதேசமயத்தில், இந்த மேலாதிக்க சுயத்தைக் கையாள்வதற்கான வழிமுறைகளையும் இந்த நாவல் பரிசோதித்துப்பார்க்கிறது. இந்த நாவலில் நாம் நம்மை அடையாளம் காண முடிகிறது. மேலாதிக்க சுயத்தின் பிரதிநிதியாக இருக்கிறார் பேராசிரியர் டேவிட். மேலாதிக்க சுயத்தின் கட்டமைப்பை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் அவரது மகளான லூஸி. பேராசிரியர் நாவலின் முதல் புள்ளியாகிறார் என்றால், லூஸி இரண்டாவது புள்ளியாகிறார். மூன்றாவது புள்ளி பெவ் ஷா. உடல் உபாதைகளால் தவித்துக்கொண்டிருக்கும் செல்லப் பிராணிகளை, குறிப்பாக அளவுக்கு அதிகமாக இனப்பெருக்கமாகியிருப்பதாகச் சொல்லப்படும் நாய்களைக் கருணைக் கொலை செய்யும் கறுப்பர் பெண். இம்மூவரையும், ஆங்கில ரொமான்டிக் இலக்கியப் பாரம்பரியமும் கருணைக் கொலைக்காகக் காத்திருக்கும் நாய்களும் இணைக்கும் கோடுகளாகின்றன. 

ஆங்கில இலக்கியப் பேராசிரியரான டேவிட், அவரைவிட முப்பது வயது இளையவரான மாணவியோடு அவரது ஒப்புதலோடு உடல் உறவுகொள்கிறார். இப்படித்தான் கதைசொல்லி நமக்குச் சொல்கிறார். கதைசொல்லி டேவிட் பாத்திரத்தோடு தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்கிறார். அதே சமயத்தில், அந்த மாணவி ஒரு கறுப்பர் என்பதை நேரடியாக இல்லாமல், நமக்குக் குறிப்பாக உணர்த்துகிறார். இந்த உடலுறவு ஒப்புதலோடு நடந்தது என்று டேவிட் பார்வையிலிருந்து சொன்னாலும், அது வன்புணர்வாக இருக்கக்கூடும் என்றும் மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறார். ஆக, டேவிட் மனவோட்டத்தோடு கதைசொல்லி தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டாலும், அதிலிருந்து விலகியும் இருக்கிறார். இரண்டு திருமணங்கள் செய்து விவாகரத்து செய்திருக்கும் இந்தப் பேராசிரியர் தனது பாலியல் தேவைகளை விலை கொடுத்துப் பூர்த்தி செய்துகொள்கிறவர். டேவிட்டை ஆங்கில ரொமான்டிக் இலக்கியத்தின் தந்தையான பைரன் முழுமையாக ஆக்கிரமித்திருக்கிறார். இலக்கிய விமர்சனங்கள் எழுதுவதில் சலிப்புற்றுப்போனதால், பைரன் குறித்து ஒரு ஓப்ரா எழுத வேண்டும் என்பது இவரது நீண்ட நாள் கனவு. அதற்கான தயாரிப்புகளையும் அவர் மேற்கொண்டுவருகிறார். சொல்லப்போனால், டேவிட் தன்னை பைரனாகவே நினைத்துக்கொள்கிறார் என்று சொல்ல முடியும். காமத்தை ஏரணங்களுக்குள் அடக்க முடியாது என்பது இவரது வாதம். காமம் அவரது அழகியலின் தவிர்க்கவியலாப் பகுதியாக இருக்கிறது. 

தன் மாணவியிடம் உடலுறவு கொண்ட காரணத்தால் பல்கலைக்கழத்தில் அந்த மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் டேவிட் விசாரிக்கப்படுகிறார். ஏன் தன்னுடைய மாணவியோடு இப்படியாக உறவுகொள்ள நேர்ந்தது என்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் மொழியில் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள டேவிட் மறுக்கிறார். அதாவது, நான் அறியாமல் என் நிலை தவறினேன், ஒரு நல்லாசிரியருக்கான நடத்தையிலிருந்து நான் வழுவினேன், தகப்பனாக இருந்து அந்த மாணவியைப் பாதுகாத்திருக்க வேண்டிய நானே அவளுக்குப் பெரும் கேடு செய்துவிட்டேன், நான் பாவம் செய்துவிட்டேன், என்னை மன்னித்துவிடுங்கள் போன்ற பொதுமொழியில் டேவிட் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று விசாரணைக் கமிட்டி உறுப்பினர்கள் எதிர்பார்க்கிறார்கள். அப்படிச் செய்தால் இந்த விஷயத்தை நல்ல விதமாக முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று அறிவுரையும் சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளும் டேவிட், அதை அவர்களுடைய மொழிக்கு மொழியாக்கம் செய்ய தீர்மானமாக மறுக்கிறார். எது இப்படியான நிலைப்பாட்டை எடுக்க டேவிட்டை உந்தித்தள்ளுகிறது என்று அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. தன்னுடைய செயல் மானுடர்களுக்கே (வெள்ளையர்–ஆண்) இயல்பான ஒன்று என்றும், மாணவியோடு உடலுறவு கொண்ட அந்தத் தருணத்தைப் பெரும் குற்றமாகப் பார்க்க மறுப்பதாகவும் சொல்கிறார். அதே சமயத்தில் மற்றவர்கள் தன்னைக் குற்றம்சாட்டுவதை ஏற்றுக்கொள்கிறேன் என்றும் சொல்கிறார். பின் ஒரு சமயம் தனது முன்னாள் மனைவி, ‘உன் மீது நல்லபிப்ராயம் ஏற்படும்படி நீ நடந்துகொள்ளவில்லையாமே’ என்பதற்கு, ‘நான் அபிப்ராயம் உண்டாக்க முயன்றுகொண்டிருக்கவில்லை. ஒரு கொள்கையை நிலைநிறுத்த முயன்றுகொண்டிருக்கிறேன்’ என்கிறார் டேவிட். அதாவது, விசாரணை செய்யும் உறுப்பினர்களுக்கும் டேவிட்டுக்கும் இடையே எப்படியான உரையாடலும் சாத்தியமில்லாமல்போகிறது. விசாரணை செய்தவர்கள் நடைமுறை சார்ந்த பதில்களை எதிர்பார்த்தார்கள் என்றால், அதற்கு டேவிட் இறங்கிவர மறுக்கிறார். இவர் திமிர் பிடித்துப் பேசுகிறார் என்றும், செய்த தவறுக்கு வருந்தவில்லை என்றும் அவர் பல்கலைக்கழகத்திலிருந்து வேலைநீக்கம் செய்யப்படுகிறார்.

இவருக்கும் இவரது முதல் மனைவிக்கும் பிறந்த பெண் லூஸி. கறுப்பர்கள் நிறைந்திருக்கும் கிராமம் ஒன்றில் சிறிய பண்ணை ஒன்றை நடத்திவருகிறார். திருமணமாகாத இவர் முழு விவசாயியாக வாழ்ந்துவருகிறார். இவளது வாழ்க்கை அன்றாடத்தன்மையிலானது. அதில் முழுநிறைவைக் கொண்டிருப்பவர். பண்ணையில் லூஸிக்கு சகவிதத்திலும் உதவிபுரிவது, ஒரு கறுப்பரான பெட்ருஸ். இவர் கடுமையான உழைப்பாளி. லூஸியின் பண்ணையில் குடும்பத்தோடு வசித்துவருகிறார். இந்தக் கிராமத்தில் நாய், பூனை, ஆடு போன்ற விலங்குகளுக்கான ‘மருத்துவமனை’ ஒன்றை நடத்திவருகிறார் பெவ் ஷா என்ற கறுப்பர். உண்மையில் இது மருத்துவமனை அல்ல; கருணைக்கொலைக்கூடம்.

பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்ட பின், வேலை ஏதுமில்லாததாலும், அவரது நண்பர்களால், மாணவர்களால், உடன் பணிபுரிந்தவர்களால் நிராகரிக்கப்படுவதாலும் தன் மகள் லூஸியோடு சிறிது காலம் வசிக்கலாம் என்று முடிவெடுக்கிறார். கிராமத்தில் லூஸிக்கு அன்றாட வேலைகளில் உதவிபுரிவதோடு, பெவ் ஷா நடத்தும் ‘மருத்துவமனை’யில் நாய்களுக்கு இறுதி ஊசி போட்டுக் கொல்லும்போது டேவிட் அவற்றைப் பிடித்துக்கொள்வது, இறந்த நாய்களை எரிக்கக் கொண்டுசெல்வது போன்ற வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறார். நாய்களுக்கு இறுதி ஊசி போடும் முன் அவற்றிடம் மிக அன்போடு நடந்துகொள்கிறார் பெவ் ஷா. இப்படி நடந்துகொள்வதை டேவிட்டால் புரிந்துகொள்ள முடியவில்லை. நாய்கள் இப்படிக் கொல்லப்படுவதை டேவிட் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். கருணைக்கொலை செய்வதை டேவிட் மனதளவில் ஏற்றுக்கொள்ளாததை நாய்கள் மோப்பம் பிடித்துவிடுவதால்தான் அவை தம்முடைய இறுதித் தருணங்களில் இவ்வளவு சிரமப்படுகின்றன என்கிறார் பெவ் ஷா. அவை எந்தச் சிரமமும் கொள்ளாமல் அமைதியாக மரணமடைய வேண்டும் என்பதே பெவ் ஷாவின் விருப்பம்.

இதற்கிடையில், இரண்டு ஆண்கள் ஒரு இளைஞன் என்று மூன்று கறுப்பர்கள் லூஸியின் பண்ணைவீட்டில் அத்துமீறுகிறார்கள். டேவிட்டைக் கழிப்பறையில் அடைத்துவிட்டு, லூஸியை வன்புணர்கிறார்கள். இந்த மோதலில் டேவிட்டுக்குத் தீக்காயங்களும் ஏற்படுகின்றன. வீட்டுப் பொருட்களும், டேவிட்டின் காரும் களவாடப்படுகின்றன. லூஸிக்கு எல்லா விதத்திலும் உதவிகள் செய்துகொண்டு அவளது பண்ணயிலேயே இருக்கும் பெட்ரூஸ் இந்தச் சம்பவம் நடந்த அன்று சொல்லிவைத்தாற்போல் அங்கு இல்லாமல்போகிறார். இந்தச் சம்பவம் நடந்த பின் ‘உங்களுக்கு நடந்ததை நீங்கள் சொல்லுங்கள், எனக்கு நடந்ததை நான் சொல்கிறேன்’ என்கிறாள் லூஸி. காவல் நிலையத்தில் வீட்டுப் பொருட்களும், காரும் களவுபோனதாகப் பதிவுசெய்கிறார்கள். ஆனால், தான் வன்புணரப்பட்டதாகப் புகார் கொடுக்க லூஸி மறுக்கிறாள். வன்புணர்ந்தவர்களைச் சட்டரீதியாகத் தண்டிக்கவே டேவிட் விரும்புகிறார். ஆனால், லூஸி தீர்மானமாக மறுக்கிறாள். காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டுத் திரும்பும்போது, லூஸி இவ்வாறு சொல்கிறாள்: “அது மிகக் குறிப்பாக எனக்கானதாக இருந்தது. அது அவ்வளவு தனிப்பட்ட வெறுப்புடன் நிகழ்த்தப்பட்டது. எதையும்விட அதுதான் என்னை ஸ்தம்பிக்கச்செய்தது. மற்ற எல்லாமும்... வழக்கமானதே. ஆனால், என்னை ஏன் அவர்கள் அவ்வளவு வெறுத்தார்கள்? இதற்கு முன் நான் அவர்களைப் பார்த்ததுகூட இல்லையே?” இதற்கு, “அவர்கள் வழியாகப் பேசியிருப்பது வரலாறு, தவறுகளின் வரலாறு. இது உதவுகிறது என்றால் இந்த வழியிலேயே யோசித்துப்பாரேன். இது தனிப்பட்ட நிகழ்வு என்பதுபோல் தோன்றலாம். ஆனால், அது உண்மையல்ல. இது இறங்கிவந்தது முன்னோர்களிடமிருந்து” என்கிறார் டேவிட். பிறகு அது குறித்துப் பேசுவதற்கு லூஸி தீர்மானமாக மறுக்கிறாள்.

டேவிட்டும் லூஸியும் இந்தச் சம்பவத்தை எப்படியாகப் பார்க்கிறார்கள் என்பதே நாவலின் மையமாகிறது. தன் மாணவியிடமே உடலுறவுகொண்டதைப் பொதுமொழிக்கு மாற்ற எப்படி டேவிட் மறுத்தாரோ அதுபோலவே தான் வன்புணர்வுக்கு ஆளானதைப் பொதுமொழிக்கு மாற்ற லூஸியும் மறுக்கிறாளா? டேவிட்டின் தனிமொழி எப்படி அவரை விசாரணை செய்தவர்களையும் அவரைச் சுற்றியிருந்தவர்களையும் அச்சுறுத்தியதோ அதுபோலவே டேவிட்டை லூஸியின் தனிமொழி அச்சுறுத்துகிறதா? இருவரின் வெளிப்பாடுகளும் ஒத்த தன்மையிலானவையாகத் தோன்றினாலும், அவை வேறானவற்றின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளன என்பதை நாவல் மிக நுட்பமாக விவரிக்கிறது. டேவிட்டின் தனிமொழி ‘நான்’ என்ற வெள்ளையர் மேலாதிக்கத்தின் மொழியாகிறது. ஆங்கில இலக்கியப் பாரம்பரியத்தின் துணைகொண்டு இது சாத்தியப்படுகிறது. ஆனால், ஒரு வெள்ளையராகவும் பெண்ணாகவும் இருக்கும் லூஸிக்கும் இது சாத்தியம்தானே? ஆனால், பாதிக்கப்பட்டது அவள்தானே. லூஸிக்கு நடந்ததை டேவிட் ‘குடிநபர்’ என்ற கருத்தமைவின் அடிப்படையில் பொதுமொழிக்கு மொழியாக்கம் செய்கிறார். இந்தக் கருத்தமைவின் ஊடாகத் தாக்கியவர்கள், தாக்கப்பட்டவர்கள் (கறுப்பர்–வெள்ளையர்) என்ற இருமைக்குள் வைத்துப் பார்க்கிறார். லூஸிக்கு நடந்தது கடந்த கால வெள்ளையர் ஆதிக்கத்தின் விளைவு என்று டேவிட் ஏற்றுக்கொண்டாலும், அதை எதிர்காலத்துக்கும் தொடர அனுமதிக்க முடியாது என்பதில் தீர்மானமாக இருக்கிறார். சட்டம், குடிநபர் போன்ற கருத்தாக்கங்கள் அவருக்கு உதவுகின்றன. இந்தக் கருத்தாக்கங்களை லூஸி நிராகரிக்கிறார். நாம் தென்னாப்பிரிக்காவில் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று தந்தையிடம் சொல்கிறாள். அதாவது, குடிநபர் என்ற கருத்தை வரலாறுகளுக்கு, பண்பாடுகளுக்கு அப்பால் உலகளாவியத்தன்மையிலான ஒன்றாக டேவிட் முன்வைப்பதை ஏற்றுக்கொள்ள லூஸி மறுக்கிறாள். இந்தக் கருத்தாக்கங்கள் வரலாறுகளுக்குக் கட்டுப்பட்டு, பண்பாடுகளுக்குக் கட்டுப்பட்டுதான் அவற்றை வரையறுத்துக்கொள்ள முடியும் என்பதாக லூஸி பார்க்கிறாள். ஏன் அவர்கள், அதாவது தன்னை வன்புணர்ந்தவர்கள் தன்னை இத்தனை அருவருப்பாகப் பார்த்தார்கள் என்பதே லூஸியின் பிரதானக் கேள்வியாகிறது. இதற்கான விடையை லூஸி கண்டடைய வேண்டியுள்ளது. பண்ணையை விற்றுவிட்டுத் தன்னோடு வந்துவிடுமாறு லூஸியிடம் சொல்கிறார் டேவிட். அவள் மறுக்கிறாள். லூஸியிடம், ‘நீ அபாயகரமான தவறு ஒன்றைச் செய்யும் தருவாயில் இருக்கிறாய். வரலாற்றின் முன் உன் தலையைத் தாழ்த்திக்கொள்ள நினைக்கிறாய்’ என்கிறார். வரலாறு கொண்டுவிட்டிருக்கும் இந்தத் தருணத்தைத் தனிமனிதர்களாக எவ்வாறு எதிர்கொள்வது? குடிநபர், சட்டம் போன்ற கருத்துகள் டேவிட்டுக்கு இருக்கின்றன. ஆனால், லூஸி இவற்றைக் கடந்து சிந்திக்க முற்படுகிறாள். இதனால்தான் தன் தந்தையிடம், ‘உங்களுக்கு இது புரியவில்லை. உங்களுக்குப் புரியவைக்க இதற்கு மேல் என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் வேண்டுமென்றே சூரிய ஒளி நுழைய முடியாத மூலையில் அமர்ந்திருப்பதாகத் தோன்றுகிறது. உங்களை நான் அந்த மூன்று மனிதக் குரங்குகளில் ஒன்றாகப் பார்க்கிறேன். உள்ளங்கைகளால் கண்களைப் பொத்தியிருக்கும் ஒன்றாக’ என்கிறாள். பெட்ருஸ் அவளது பண்ணையை அபகரித்துக்கொள்ளவே இப்படியெல்லாம் திட்டம் போடுவதாக டேவிட் சந்தேகப்படுகிறார். அவர் சந்தேகப்பட்டதுபோல், லூஸியை வன்புணர்ந்த மூவரில் ஒருவரான இளைஞன் பெட்ருஸின் உறவுக்காரன். பொருட்கள் களவாடப்பட்டதையும், லூஸி வன்புணரப்பட்டதையும் பெட்ருஸ் எதிர்கொள்ளும் விதம் டேவிட்டை ஆட்டம்காணவைக்கிறது. ஆனால், லூஸி யதார்த்தமாக எதிர்கொள்கிறாள். ‘ஏன் ஒருவர் இங்கே நிலைத்து வாழ்வதற்காக அவர் செலுத்தும் கட்டணமாக இருக்கக் கூடாது?’ என்று கேட்கிறாள். அதாவது, சமூகமாக வாழ்வதற்கான கட்டணம். இந்தக் கட்டணம் அவளது உடலாக மட்டுமல்லாமல் அந்த உடலுக்குள் உருப்பெற்றிருக்கும் கருவாகவும் இருக்கிறது. தன் வயிற்றில் வளரும் குழந்தை, நாளை கறுப்பர்களோடு இணைந்துவாழ்வதற்கான கட்டணம் என்பதாக லூஸி பார்க்கிறாள். லூஸியின் இந்த நிலைப்பாட்டைப் புரிந்துகொள்ளவது மிகவும் சிரமமானது. டேவிட்டிடமிருந்து நம்மை நாம் விலக்கிவைத்துக்கொள்ளவே முயலுவோம் என்றாலும்கூட, லூஸிக்கு நடந்த விஷயத்தைப் பொறுத்தமட்டில் அவர் பார்த்ததுபோல்தான் நாமும் பார்த்திருப்போம். நமக்கு வேறு சாத்தியங்கள் இருக்கின்றனவா? ஆனால், நம்மால் அவ்வளவு சுலபமாகப் புரிந்துகொள்ள முடியாத நிலைப்பாட்டை லூஸி எடுக்கிறாள். தன் உடலை வரலாற்றுரீதியான ஒன்றாக மட்டுமே, அதாவது வெள்ளையர் என்பதாக மட்டுமே லூஸி பார்ப்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா? அவள் வெள்ளையர் மட்டுமல்ல, பெண்ணும்கூட. இது சிக்கலை மேலும் கடினமாக்குகிறது. ஆனால், வரலாறுகளுக்கு அப்பால், பண்பாடுகளுக்கு அப்பால் உடல் என்பது, அது பெண்ணுடலாகவே இருந்தாலும்கூட, அதனளவில் ஏதேனும் அர்த்தத்தைக் கொண்டிருக்க முடியுமா? தன் உடல் என்ற இறையாண்மையை முன்வைக்கும் டேவிட்டின் நிலைப்பாட்டை நாம் விமர்சனமற்று ஏற்றுக்கொள்ள முடியுமா? வெள்ளை ஆண் என்ற அடிப்படையை டேவிட்டின் உடல் சுமந்திருப்பதால்தானே அவரால் தன்னை பைரனாக பாவித்துக்கொள்ள முடிகிறது. கறுப்பர் ஆண் ஒருவருக்கும் இந்த பாவனை சாத்தியப்படுமா? லூஸியை வன்புணர்ந்தவர்கள் தங்களை பைரனாக பாவித்துக்கொண்டிருக்க முடியுமா? ஆக, ஒரு உடல் என்பது வரலாற்றுரீதியான, பண்பாட்டுரீதியான அர்த்தப்பாடுகளையும், அதற்கு எதிரான அர்த்தப்பாடுகளையுமே கொண்டிருக்க முடியும். இதில் தனிமனிதர் என்ற கருத்தமைவை எங்கு பொறுத்துவது? லூஸி ‘நான்’, ‘என்னது’ என்பதையெல்லாம் மறுக்கும் நிலைக்குப் போகிறாளா? என்னுடைய புரிதலில் லூஸி இதையெல்லாம் மறுக்கவில்லை. ‘நான்’, ‘என்னது’ என்பதையெல்லாம் பரந்துபட்ட, அதாவது சமூகத் தளத்தில் பொருத்திப்பார்க்க முயல்கிறாள். பெண் என்பதைவிட வெள்ளையர் என்பதால் அவளை வன்புணர்ந்தவர்கள் அவள் மீது காட்டிய அருவருப்புதான் அவளுக்கு முக்கியமாகிறது. அவளது வயிற்றில் உள்ள உயிர்தான் அவள் எதிர்கொண்ட அருவருப்புக்கான பதிலாகிறது. இதை சற்று விரிவாகப் பார்ப்போம்.

கடந்த காலத்தின் தொடர்ச்சியாகவே நிகழ்காலச் சம்பவங்கள் நடக்கின்றன என்று டேவிட் ஏற்றுக்கொள்கிறார். காலத்தைக் கடந்த–நிகழ்–எதிர் காலம் என்று நேர்கோட்டில் பார்க்கிறார். ஆனால், லூஸி நிகழ்காலத்தைக் கடந்த காலத்தின் தொடர்ச்சியாக மட்டும் பார்க்கவில்லை, எதிர்காலத்தின் இறந்தகாலமாகப் பார்க்கிறாள். நிகழ்காலத்தை இரண்டு திசைகளிலிருந்தும் லூஸி பார்க்கிறாள். டேவிட்டின் நிலைப்பாட்டைப் புரிந்துகொள்வதில் சிக்கல் ஏதுமில்லை. ஆனால், லூஸியின் நிலைப்பாட்டை அவ்வளவு சுலபமாகப் புரிந்துகொள்ள முடியாது. லூஸியைப் புரிந்துகொள்ள, நாம் காந்தியின் வாழ்க்கையில் நடந்த மிக முக்கியமான விஷயத்தோடு இணைத்துப்பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். பல இஸ்லாமியர்களை மீண்டும் ‘இந்து’வாக மதம் மாற்றும் செயலில் ஈடுபட்டு வந்த ஆரிய சமாஜ்ஜைச் சேர்ந்த சாமி சாரதாநந்தா (Shraddhaanand), அப்துல் ரஷித் என்ற இஸ்லாமிய இளைஞரால் கொல்லப்பட்ட சம்பவத்தை காந்தி எவ்வாறு எதிர்கொண்டார் என்பதோடு இணைத்துப்பார்ப்பது லூஸியின் நிலைப்பாட்டைப் புரிந்துகொள்ள உதவும் என்று நினைக்கிறேன். 

1926, டிசம்பர் 23 தேதி அன்று சாரதாநந்தா கொல்லப்பட்டார். கொலை செய்த இஸ்லாமிய இளைஞரை காந்தி திரும்பத்திரும்ப ‘அன்பிற்குரிய சகோதரன்’ என்றே விளித்தார். மேலும், ‘நான் ஏன் அப்துல் ரஷித்தை சகோதரன் என்று அழைக்கிறேன் என்று ஒருவேளை நீங்கள் புரிந்துகொள்ளக்கூடும். நான் திரும்பவும் சொல்கிறேன், சாமிஜியைக் கொலை செய்த குற்றவாளியாக நான் அவனைப் பார்க்கவில்லை. சொல்லப்போனால் ஒருவர் மீது ஒருவர் விரோதம் கொண்டிருப்பவர்களான நாம்தான் குற்றவாளிகள்’ என்கிறார். மற்றொரு சமயம், ‘நான் அப்துல் ரஷித்துக்காக வாதிட விரும்புகிறேன். அவர் யார் என்று எனக்குத் தெரியாது. இந்தச் செயலைச் செய்ய எது அவரைத் துண்டியது என்பது எனக்கு முக்கியமில்லை. தவறு நம்மீதுதான்’ என்கிறார். அப்துல் ரஷித்தைக் கொலைகாரன் என்றோ, குற்றவாளி என்றோ காந்தி முன்வைக்க தீர்மானமாக மறுத்துவந்தார். அப்துல் ரஷித்தைக் கொலைகாரன் என்று அழைக்காமல் சகோதரன் என்று அழைத்ததற்கும், கொலையைக் கண்டிக்காததற்கும் காந்தியை சாவர்க்கர் கடுமையாக விமர்சித்தார். வெள்ளை அதிகாரி ஒருவரைக் கொன்ற 18 வயதே நிரம்பிய வங்கப் புரட்சிக்காரனை சகோதரன் என்று அழைக்க காந்தி ஏன் மறுக்கிறார் என்றும் சாவர்க்கர் கேட்கிறார். சாவர்க்கர் மட்டுமில்லை, பலரும் இவ்விஷயத்தில் காந்தியைக் கடுமையாக விமர்சித்தார்கள். பொது அறிவிலிருந்து பார்ப்போம் என்றால், நாமும் காந்தியைக் கடுமையாக விமர்சிக்கவே முடியும். பட்டப்பகலில் கொலை செய்த ஒருவரை காந்தி கொலைகாரன் என்று அழைக்க ஏன் மறுத்தார்? தான் வன்புணரப்பட்டேன் என்று வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள ஏன் லூஸி மறுத்தார்? சாவர்க்கரின் நிலைப்பாட்டை டேவிட் எடுக்கிறார் என்றால், காந்தியின் நிலைப்பாட்டை லூஸி எடுக்கிறார்.

என்னுடைய புரிதலில், காந்தியாகட்டும் லூஸியாகட்டும் இருவருமே சரி, தவறு என்பதைத் தனிமனித இறையாண்மை சார்ந்து வரையறுக்க மறுக்கிறார்கள். அதே சமயத்தில், கூட்டு அடையாளத்தின் சுமையைத் தனிமனிதர்கள் சுமக்கத்தான் வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். தனக்கு நடந்ததை நிகழ்காலத் தனிமனித இறையாண்மை அல்லது பெண் என்ற வட்டத்தின் அறத்துக்குள் பொருத்தாமல், தனக்கு நிகழ்ந்ததை எதிர்காலத்திலிருந்து லூஸி பார்க்கிறாள். லூஸியின் பார்வை கறுப்பர்–வெள்ளையர் ஒற்றுமை என்ற ரொமான்டிக் பார்வையின் அடிப்படையிலானது இல்லை. அவள் மேலாதிக்க சுயத்தை மறுக்கும் ஒரு சுயத்தைப் படைக்கும் செயலில் ஈடுபடுகிறார். காந்தியும் சாரதாநந்தா படுகொலையையும், அவரைக் கொன்ற அப்துல் ரஷித்தையும் எதிர்காலத்திலிருந்தே பார்க்கிறார். இது இந்து–முஸ்லிம் ஒற்றுமை என்ற ரொமான்டிக் பார்வை தொடர்பானது இல்லை. அப்துல் ரஷித்தைக் கொலைகாரன் என்று அழைக்க மறுப்பதால் இந்து–முஸ்லிம் ஒற்றுமை நிலைநாட்டப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. காந்தி, சாவர்க்கர், லூஸி, டேவிட் எல்லோரும் நிகழ்காலத்தின் மீது அக்கறை கொள்கிறார்கள் என்றாலும்கூட, சாவர்க்கரும் டேவிட்டும் நிகழ்காலத்தைக் கடந்த காலத்திலிருந்து பார்க்கிறார்கள் என்றால், காந்தியும் லூஸியும் நிகழ்காலத்தைக் கடந்த காலத்திலிருந்தும் எதிர்காலத்திலிருந்தும் பார்க்கிறார்கள். இந்த வேறுபாடு மிக முக்கியமானது. இப்படிப் பார்ப்பது, இன்றைய நோய்க்கூறுகளை வேறு விதமான விழுமியத்தோடு அணுகும் வாய்ப்பை உருவாக்கிக்கொடுக்கும். இது சாவர்க்கருக்கும் சாத்தியப்பாடாததுபோலவே, டேவிட்டுக்கும் சாத்தியப்படவில்லை. ஆனால், காந்தியைப் போல் லூஸி தனக்கு நடந்ததை எதிர்காலத்திலிருந்து, அதாவது எதிர்காலத்தின் இறந்த காலத்தில் நடந்த ஒன்றாகப் பார்க்கிறாள். இப்படிப் பார்க்க முடிந்ததால்தான், குடிநபர், சட்டம் போன்ற கருத்தாக்கங்களுக்குள் அவளுக்கு நடந்தை அடைக்க மறுக்கிறாள்; போலிஸிடம் தான் வன்புணரப்பட்டதாகப் புகார் அளிக்க மறுக்கிறாள்; வன்புணர்வால் உருவான கருவைக் கலைக்க மறுக்கிறாள். தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான இடைவெளி அவ்வளவு சுலபத்தில் கடக்க முடியாதது. இதன் காரணமாகவே பண்ணையில் டேவிட் இருக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறாள் லூஸி. அவளுக்கான நிகழ்காலப் பாதுகாப்பும், எதிர்காலப் பாதுகாப்பும் கறுப்பர் மத்தியில்தான் சாத்தியம் என்பதில் தீர்மானமாக இருக்கிறாள். ‘எப்பேர்பட்ட இழிநிலை. எவ்வளவு உயரிய லட்சியங்கள் இப்படி முடிவதற்குத்தானா’ என்று கேட்கிறார் டேவிட். லூஸி இப்படிச் சொல்கிறாள்: ‘ஆம் ஒப்புக்கொள்கிறேன், இழிநிலைதான். ஆனால், ஒருவேளை இதுவே தொடக்கத்துக்கான சரியான புள்ளியாகவும் இருக்கலாம். ஒருவேளை இதைத்தான் நான் ஏற்றுக்கொள்ள வேண்டுமாய் இருக்கலாம். மீண்டும் புதிதாகத் தொடங்குவதற்காக. ஒன்றுமில்லாமல். ஆனால், ஏதுமில்லாமல் இல்லை. ஒன்றுமில்லாமல். கடனட்டைகள் இல்லாமல், ஆயுதங்கள் இல்லாமல், சொத்துகள் இல்லாமல், உரிமைகள் இல்லாமல், மானம் இல்லாமல்.’ கறுப்பர்கள் நிலைக்குள் தன்னைப் பொருத்திக்கொள்கிறாள்.

ஒரு கட்டத்தில், தன் மகளின் நிலைப்பாட்டை டேவிட் புரிந்துகொள்வதுபோல் தோன்றுகிறது. இதுவரை பெண் உடல்களைத் தனக்கானதாகப் பார்த்துவந்த டேவிட் முதல் முறையாக ஒரு பெண் உடலுக்காகத் தன்னைக் கொடுக்கிறார். பெவ் ஷாவின் தேவையைப் பூர்த்திசெய்கிறார். பெவ் ஷா நடத்தும் நாய்கள் ‘மருத்துவமனை’யிலேயே தங்கி அவளுக்கு உதவிபுரிகிறார். அவரது லட்சியமான பைரன் ஓப்ராவை மனதில் படைத்துக்கொண்டிருக்கிறார். அவரோடு மிக நெருக்கமாக இருக்கும் பெவ் ஷாவும், இறப்பதற்குக் காத்திருக்கும் ஒரு நாயும் அவரது ஓப்ராவில் ஒரு பாத்திரமாக மாறுகிறார்கள். ஒருநாள், கொல்ல வேண்டிய நாய்கள் எல்லாவற்றையும் கொன்ற பிறகு, அவரோடு நெருக்கமாக இருந்த நாயையும், அதாவது ஓப்ராவில் பாத்திரமாக வந்த நாயையும் கொல்வதற்குத் தூக்கிச்செல்கிறார். ‘நீங்கள் அவனை இன்னும் ஒரு வாரத்துக்குக் காப்பாற்றிவைப்பீர்கள் என்று நினைத்தேன்’ என்று செல்லும் பெவ் ஷா, ‘அவனைக் கைவிடுகிறீர்களா’ என்று கேட்கிறாள். ‘ஆம், அவனைக் கைவிடுகிறேன்’ என்கிறார் டேவிட்.

இறுதியாக, ஆங்கில இலக்கியப் பாரம்பரியமே, அதன் அழகியல் மேலாதிக்கமே தன் சுயத்தின் அங்கமாக இருப்பதை டேவிட் உணர்ந்துகொள்வதுபோல் தெரிகிறது. தன் மாணவியான, தன்னைவிட முப்பது வயது இளையவரான கறுப்பர் பெண்ணை சம்பந்தத்தோடு என்ற போர்வையில் வன்புணர்ந்த, ஆங்கில இலக்கிய ரொமான்டிக் நாயகனாகத் தன்னை பாவித்துக்கொண்ட, தன்னுள் ஈரோஸ் நுழைந்துவிட்டான் என்றும் நான் என்ன செய்ய முடியும் என்றும் தன்னை நியாயப்படுத்திக்கொண்ட அவரது செயலைப் பொதுமொழிக்கு மாற்ற மறுத்த டேவிட், அவரது மகள் மூன்று கறுப்பர்களால் வன்புணரப்பட்டதைப் பெரும் குற்றமாகப் பார்க்கிறார். அவருடைய மகளோ அதைக் குற்றமாகப் பார்க்க மறுக்கிறாள். மிகச் சிக்கலான இந்தக் கதையாடல் டேவிட் பார்வையிலிருந்து வெகு இயல்பாக விவரிக்கப்பட்டிருக்கிறது. லூஸியின் பண்ணைவீட்டிலிருந்து வெளியேறிய பின் ஒன்று அவரது மகளை அவர் கைவிட வேண்டும் அல்லது அவர் எழுதவிருக்கும் பைரன் ஓப்ராவைக் கைவிட வேண்டும். ஓப்ரா எழுதுவதைக் கைவிடுவதன் மூலமாகத் தனது மேலாதிக்க சுயத்தின் மூலத்திலிருந்து அவர் தன்னைத் துண்டித்துக்கொள்வதுபோல் தோன்றுகிறது. டேவிட்டின் இந்த மாற்றத்தை லூஸியைவிட பெவ் ஷா ஆழமாக உணர்ந்திருப்பதுபோலும் தெரிகிறது.

இந்த நாவலை இப்படி ஒரு கறுப்பரால் எழுதியிருக்கவும் முடியாது. இதுபோல் ஒரு நாவல் சாத்தியப்பட்டிருந்தாலும்கூட அது வேறான வாசிப்பை வேண்டிநிற்கும். இந்த நாவலை ஒரு வெள்ளையர்–ஆண் எழுதியதே இப்படியான வாசிப்பை சாத்தியப்படுத்துகிறது. லூஸியும் டேவிட்டும் ஒரு கறுப்பராக இருந்திருப்பார்களானால், இந்த நாவலின் அர்த்தம் முற்றிலும் வேறானதாக இருக்கும். தனிமனிதத் தளத்தில் அழகியல் சார்ந்து எப்படி மேலாதிக்கம் வடிவம்கொள்கிறது என்பதை இந்த நாவல் மிக நுட்பமாக வெளிப்படுத்துகிறது. அழகியலோ இலக்கியப் பாரம்பரியமோ விழுமியமற்றவை அல்ல. நாம் உயர்த்திப்பிடிக்கும் அழகியல், மொழி, கலை இலக்கியம், பண்பாடு, மதம், இனம், சாதி, சரி, தவறு, உண்மை, அறம், தார்மீகம், தேசியம், அறிவியல், தொழில்நுட்பம், சித்தாந்தம் எல்லாமும் மேலாதிக்க சுயத்தின் பகுதியாகும் சாத்தியப்பாட்டை எப்போதும் கொண்டிருக்கின்றன. டேவிட் பாத்திரம் இதைத்தான் நமக்கு உணர்த்துகிறது.

இந்த நாவலை ஷஹிதா சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். நாவலின் தொனியை நம்மால் மீட்டெடுக்க முடிகிறது. ஆங்கிலத்தை நினைவூட்டாத வகையில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, லூஸியின் பிம்பம் மிகச் சிறப்பாக உள்வாங்கப்பட்டுள்ளது. பொதுவாகவே, ஷஹிதா அவருக்கென்ற பிரத்யேகமான வார்த்தைப் பிரயோகத்தைக் கொண்டிருக்கிறார். இந்தத் தனித்தன்மை பல இடங்களில் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. இந்த நாவலில் நம்மை நாம் அடையாளம் கண்டுகொள்ள முடியும். இதை நாம் பலவிதமாக அணுக முடிவதோடு மட்டுமல்லாமல், நம் இலக்கியங்களில் எப்படியான சுயம் வெளிப்படுத்தப்படுகிறது என்பதோடு இணைத்துப்பார்க்கவும் முடியும். இந்த நாவல் குறித்து சிந்திப்பது என்பது நாம் நம்மைப் புறவயப்படுத்திப்பார்க்கும் செயலாகவே இருக்க முடியும்.

                                                                         

நூல்: மானக்கேடு
ஆசிரியர்: ஜே.எம்.கூட்ஸி
தமிழில்: சஹிதா 
விலை: 399
பக்கங்கள்: 328
பதிப்பகம்: எதிர் வெளியீடு,
தொடர்புக்கு:
96, நியு ஸ்கீம் சாலை, பொள்ளாச்சி – 642002.

செல்பேசி: 9942511302

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சீனிவாச ராமாநுஜம்

சீனிவாச ராமாநுஜம், சமூக அறிவியலாளர். மொழிபெயர்ப்பாளர். பிரச்சினைகளின் அடிவேர்களை நோக்கிச் செல்லும் எழுத்துகள் இவருடையவை. ‘சந்நியாசமும் தீண்டாமையும்’, ‘இந்து மதம்: ஒரு விசாரணை’, ‘தற்கொலைகளைக் கொண்டாடுவோம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். சாதத் ஹசன் மண்டோவினுடைய ‘மண்டோ படைப்புகள்’, டி.ஆர்.நாகராஜ் எழுதிய ‘தீப்பற்றிய பாதங்கள்’, சுந்தர் சருக்கை - கோபால் குரு இணைந்து எழுதிய ‘விரிசல் கண்ணாடி’ உள்ளிட்ட நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குக் கொண்டுவந்தவர். தொடர்புக்கு: manuvibu.ram@gmail.com


2

2





பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

George joseph   2 years ago

மிகவும் முக்கியமான நாவல்.... மேலாதிக்க சுயத்தை அர்த்தப்படுத்தவா இந்த நாய் மற்றும் அதன் வால்... ஏன் அது சிவப்பு நிறத்தில் உள்ளது

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

வி.பி.சிங் சமஸ்கண்கள்அன்வர் ராஜா சமஸ் பேட்டிகடன்ராம்நாத் கோவிந்த்அதிதீவிர தேசியவாதிகள்ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுகாலை உணவுபாஜகவைத் தோற்கடிக்க மாய மந்திரம் தேவையில்லைஅசோகர் கல்வெட்டுகள்விமர்சனங்களே விளக்குகள்சாலைகள்வருமுன் காப்போம்இந்திய ரிசர்வ் வங்கிஹண்டே அருஞ்சொல் பேட்டிரீல்ஸ்என்சிபிஒரே தேசம் – ஒரே தேர்தல்dr ganesanபொது விவாதம்நூல் சேகரிப்பாளர்உடல் பருமன்கெவின்டர்ஸ் நிறுவனம்நீரிழிவுஅம்பானி ரிலையன்ஸ்தாண்டவராயனைத் தேடி…பெண் ஏன் அடிமையானாள்?: பெரியாரின் அடி தொட்டுதமிழ்த்தன்மைபக்கிரி பிள்ளைகேஜ்ரிவால் கைது: நீதி முறைமைக்கே ஒரு சவால்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!