பேட்டி, கலாச்சாரம், இலக்கியம் 15 நிமிட வாசிப்பு

திறமை பெரிய விஷயம் இல்லை: ஜேம்ஸ் பால்ட்வின் பேட்டி

எஸ்.அப்துல் ஹமீது
23 Jun 2022, 5:00 am
2

சென்ற நூற்றாண்டில் வெளியான சிறந்த நாவல்களின் பட்டியல்களில் ஜேம்ஸ் பால்ட்வினின் (James Baldwin) நாவலான ‘கோ டெல் இட் ஆன் தி மவுன்டைன்’ (Go Tell It On The Mountain) தவறாமல் இடம்பெறும். ஆப்ரிக்க - அமெரிக்கரான ஜேம்ஸ் பால்ட்வின் சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக அடையாளப்படுத்தப்படுபவர். அவரது படைப்புகள் கறுப்பின மக்கள் எதிர்கொள்ளும் சமூக நெருக்கடி, உளவியல் நெருக்கடி, தனிமனித பாலியல் நெருக்கடி ஆகியவற்றைப் பேசுபவை. ‘வெள்ளையின உலகில் கறுப்புத் தோல் உடையவனாக இருப்பது எப்படியானதாக இருக்கும் என்பதை உணரச் செய்யும்’ என்று பால்ட்வினின் படைப்புகள் குறித்து விமர்சகர்கள் குறிப்பிடுவது உண்டு. 

2020இல் அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட், வெள்ளையினக் காவல் துறை அதிகாரியால் கொடூரமாக கொல்லப்பட்ட பிறகான விவாதங்களில், ஜேம்ஸ் பால்ட்வினும், அவரது படைப்புகளும் நினைவுகூரப்பட்டன. அமெரிக்காவின் நிறவெறியின் கொடூர முகத்துக்கு ஜேம்ஸ் பால்ட்வின் வாழ்க்கையும் ஒரு சாட்சி.

பால்ட்வின் 1924இல் நியூயார்க் நகரில் உள்ள ஹார்லெம் பகுதியில் பிறந்தார். அவரது உயிரியல் தந்தை யாரென்று அவருக்குத் தெரியாது. பால்ட்வினின் தாயும் இறுதிவரை அதை அவரிடம் சொல்லவில்லை. 1927இல் பால்ட்வினின் தாய் எம்மா பெர்டிஸ் ஜோன்ஸ், டேவிட் பால்ட்வின் என்பவரை மறுமணம் செய்துகொள்கிறார். டேவிட் பால்ட்வின் ஒரு தொழிலாளி. கூடவே, சர்ச்சில் பிரச்சாரம் செய்பவர். அவர்களுக்கு எட்டு குழந்தைகள் பிறக்கின்றன. டேவிட் பால்வின் குடும்பத்தைக் கவனித்துக்கொள்பவராக இல்லை. தவிர, பிள்ளைகளிடம் மூர்க்கமாக நடந்துகொள்பவராகவும் இருந்தார். இதனால், வீட்டுச் சூழல் ஜேம்ஸ் பால்ட்வினுக்கு மகிழ்ச்சிகரமானதாக இல்லை. கூடவே ஏழ்மை வேறு.

பால்ட்வினின் வீட்டுச்சூழல் மட்டுமல்ல; புறச்சூழலும் மிகவும் கொடுமையானதாக இருந்தது. ஆப்ரிக்க பூர்வீகம் கொண்ட மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் ஒன்று ஹார்லெம். அப்போது அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களின் மீதான ஒடுக்குமுறை தீவிரமாக நிலவியது. கறுப்பினத்தவர்களுக்கு வேலை மறுக்கப்பட்டது. வீடு மறுக்கப்பட்டது. பால்ட்வின் அவரது இளமைப் பருவம் முழுவதும் மிக மோசமாக நிற ஒடுக்குமுறையை எதிர்கொண்டுவந்துள்ளார். இந்தச் சமூக ஒடுக்குமுறை காரணமாக அவரது கறுப்பின நண்பர்கள் பலர் போதை, விபச்சாரம், வன்முறை என்ற பாதையில் சென்றனர். ஆனால், பால்ட்வினின் முன்னால் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இருந்தது.

பால்ட்வின் பள்ளியில் நன்றாகப் படிக்ககூடிய மாணவர். பள்ளி வயதிலேயே இலக்கிய நூல்கள் அவருக்கு அறிமுகமாகிவிட்டன. குடும்பச் சூழலிலிருந்தும், சமூக நெருக்கடியிலிருந்து வாசிப்பு அவருக்கு சற்று விடுதலை அளிக்கக் கூடியதாக இருந்தது. பால்ட்வின் தன்னுடைய 14 வயது 17 வயது வரையில் மூன்று ஆண்டுகாலம் பள்ளி நேரம் போக, சர்ச்சில் பிரச்சாரம் செய்பவராகவும் இருந்துள்ளார்.  

பால்ட்வினின் 19ஆம் வயதில் அவரது தந்தை இறந்துபோகிறார். குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு பால்ட்வினின் மேல் விழுகிறது. இரவு - பகலாக வேலை செய்கிறார். விடுதியில் பாத்திரம் கழுவுவது, இறைச்சியை பார்சல் செய்யும் வேலை எனப் பல வேலைகளையும் பால்ட்வின் செய்தார். ஆனால், உள்ளுக்குள் எழுத்தளாரக வேண்டும் என்று தீராத வேட்கை அவரிடம் இருந்தது. அதன் நீட்சியாக அவர் மேற்கொண்ட முயற்சிகளில், புத்தகங்களுக்கு மதிப்புரை எழுதும் வேலையை உருவாக்கிக்கொண்டார். படிப்படியாக எழுத்து வட்டம் அறிமுகம் அவருக்கு நிகழ்கிறது. அப்படியாகக் கலைத் துறை சார்ந்து ஒரு பணிக்காக அவருக்கு நல்கை கிடைக்கிறது.

பால்ட்வினுக்கு அமெரிக்கச் சூழல் சிறிதும் வாழ முடியாதாக இருந்தது. அங்கு நிறரீதியாக மிக மிக மோசமான ஒடுக்குமுறையை அன்றாடம் எதிர்கொள்ள வேண்டியதாக இருந்தது. கூடவே, அவர் தன்பால் ஈர்ப்பாளர். அவருள் ஒரு பயம் இருந்துகொண்டிருந்தது. அமெரிக்காவில் தொடர்ந்துதான் இருக்கும்பட்சத்தில் ஒன்று, தான் யாரையாவது கொல்ல நேரிடும்; இல்லையென்றால், தன்னை யாராவது கொலை செய்வதுவிடுவார்கள் என்று அஞ்சுகிறார். எனில், அமெரிக்காவிலிருந்து வெளியேறுவதான், தான் பிழைத்திருப்பதற்கான ஒரே வழி என்கிற முடிவுக்கு வருகிறார். நல்கை மூலம் கிடைத்த பணத்தில் நாற்பது டாலரை மட்டும் எடுத்துக்கொண்டு மீதத்தை வீட்டுக்குக் கொடுத்துவிட்டு, தன்னுடைய 24ஆம் வயதில் ஒரேடியாக வீட்டிலிருந்து விடைபெற்றுச் செல்கிறார் - அமெரிக்காவிலிருந்து பிரான்ஸுக்கு.

அப்போது பிரான்ஸின் கலாச்சாரச் சூழல், அறிவுச் சூழல் உலக நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்து. பால்ட்வினின் வாழ்க்கையில் பிரான்ஸ் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஜான் பால் சார்த்தர், சிமோன் தி பூவார், மார்க்ஸ் எர்ன்ஸ்ட், ட்ரூமன் கப்போட் உட்பட பல முக்கிய ஆளுமைகளின் அறிமுகம் பால்ட்வினுக்கு கிடைத்தது. அறிவுச் சூழலில் புழங்கும் வாய்ப்பை பிரான்ஸ் அவருக்கு ஏற்படுத்தித்தந்தது. எழுத்துலகில் முழு வீச்சில் செயல்படுகிறார். அவருடைய கட்டுரைகள் கவனம் ஈர்க்கத் தொடங்கின. பிரான்ஸில் இருந்த முதல் எட்டு ஆண்டுகளில் அவரது முக்கியமான மூன்று படைப்புகள் - ‘கோ டெல் இட் ஆன் மவுன்டைன்’ (Go Tell It On The Mountain, 1953), ‘நோட்ஸ் ஆஃப் ஏ நேட்டிவ் சன்’ (Notes of a Native Son, 1955) ‘ஜியோவன்னிஸ் ரூம்’ (Giovanni’s Room, 1956) வெளிவந்தன. அவரது எழுத்துச் சூழல் பெரும் தாக்கம் செலுத்தியது. அவற்றின் வழியாக ஜேம்ஸ் பால்ட்வின் கவனிக்கத்தக்க சர்வதேச எழுத்தாளராக கவனம் பெறலானார். 

இந்நிலையில், 1957இல் பால்ட்வின் மீண்டும் அமெரிக்காவுக்குத் திரும்பினார். அங்கு மனித உரிமைச் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டார். அந்த வகையில் பால்விட்ன் எழுத்தாளராக மட்டுமல்ல தீவிர களச் செயல்பாட்டாளராகவும் அறியப்படுபவர்.

பால்ட்வின் மொத்தமாக ஆறு நாவல்கள் எழுதியுள்ளார். நான்குக்கு மேற்பட்ட கட்டுரைத் தொகுப்புகளும், நாடகங்களும், வெளியாகியுள்ளன. அவரது நாவல்கள் பேசப்படும் அளவுக்கு அவரது கட்டுரைகளும் இன்றளவும் பேசப்படுகிறது. 1987இல் தன்னுடைய 63ஆம் வயதில் வயிற்றுப் புற்றுநோய் காரணமாக பிரான்ஸில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். 

ஜேம்ஸ் பால்ட்வின் 1984இல் ‘பாரிஸ் ரிவ்யூ’ இதழுக்கு வழங்கிய முக்கியமான நேர்காணலின் சுருக்கப்பட்ட வடிவத்தை ‘அருஞ்சொல்’ இங்கே தனது வாசகர்களுக்காகத் தருகிறது. 

நீங்கள் அமெரிக்காவிலிருந்து வெளியேறும் முடிவுக்கு வந்ததைப் பற்றி பகிர்ந்துகொள்ள முடியுமா?

நான் உடைந்துபோயிருந்தேன். பாரிஸுக்குச் செல்ல என் பையில் வெறும் நாற்பது டாலர்கள்தான் இருந்தன. ஆனால், எப்படியும் நியூயார்க்கை விட்டு வெளியேறியாக வேண்டிய நிலையில் நான் இருந்தேன். நியூயார்க்கில் மற்றவர்களின் அவலநிலையும் என்னை வேதனைப்படுத்தின. வாசிப்பு என்னைத் தனி உலகத்துக்கு அழைத்துச் சென்றது என்றாலும், நியூயார்க்கின் தெருக்கள், அதிகாரிகள், குளிர் ஆகியவற்றை நான் எதிர்கொண்டாக வேண்டி இருந்தது. அமெரிக்காவில் ஒரு வெள்ளையினத்தவராக இருப்பது என்றால் என்னவென்பதும் எனக்குத் தெரியும். அங்கு ஒரு கறுப்பினத்தவராக இருப்பது என்றால் என்னவென்பதும் எனக்குத் தெரியும். அங்கு எனக்கு என்ன நடக்கும் என்பதும் எனக்குத் தெரியும்.

என்னுடைய அதிர்ஷ்டம் தீர்ந்துவிட்டது. நான் தொடர்ந்து நியூயார்க்கில் இருந்தால் நான் ஜெயிலுக்குப் போக வேண்டியதாக இருக்கும். நான் யாரைவது கொல்லக் கூடும் அல்லது யாராவது என்னை கொல்லக் கூடும். அப்போது இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் என்னுடைய நண்பன் ஜார்ஜ் வாஷிங்டன் மேம்பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டான்.

நான் பாரீஸுக்கு 1948இல் வந்தபோது எனக்கு ஒரு வார்த்தைகூட பிரெஞ்சு தெரியாது. எனக்கு அங்கு எவரையும் தெரியாது. யாரையும் தெரிந்துகொள்ளவும் நான் விரும்பவில்லை. என்னிடம் இருந்த நாற்பது டாலர்களும் இரண்டு, மூன்று தினங்களில் தீர்ந்துவிட்டது. வாய்ப்பிருக்கும் சமயங்களில் கடன் பெற்றுக்கொண்டேன். ஒரு விடுதியிலிருந்து மற்றொரு விடுதிக்கு மாறிக்கொண்டிருந்தேன். அப்போது நான் நோய்வாய்ப்பட்டேன். அதிர்ஷ்டவசமாக நான் விடுதியிலிருந்து வெளியேற்றப்படவில்லை.

ஒரு கோர்சிகா குடும்பம் (பிரான்ஸில் உள்ள ஒரு தீவு கோர்சிகா) என்னைக் கவனித்துக்கொண்டனர். அதற்கான காரணம் எனக்கு இன்னும் தெரியவில்லை. ஒரு வயதான பெண்மணி எனக்கு சிகிச்சை அளித்தாள். நாட்டுப்புற மருத்துவம். ஒவ்வொரு நாள் காலையிலும் மாடிக்கு ஏறிவந்து, நான் உயிரோடு இருக்கிறேனா என்று உறுதிசெய்து எனக்கு சிகிச்சை அளிப்பாள். இந்தக் காலகட்டத்தில் நான் பெரும் தனிமையில் இருந்தேன். அந்தத் தனிமையைத்தான் நானும் விரும்பினேன். 

உங்கள் நண்பரை அந்த நகரம்தான் கொன்றது என்கிறீர்களா?

ஆம். அமெரிக்காவில் நீங்கள் வாழ இடம் தேடும்போது, வேலை தேடும்போது நீங்கள் உங்கள் முடிவை சந்தேகப்படத் தொடங்குவீர்கள். படிப்படியாக நீங்கள் எல்லாவற்றையும் சந்தேகப்படத் தொடங்குவீர்கள். நீங்கள் தெளிவற்ற நபராக மாறுவீர்கள். அது அப்படித்தான் தொடங்கும். அதன் பிறகு நீங்கள் தாக்கப்படுவீர்கள். அது திட்டமிடலுடன் நடக்கும். ஒட்டுமொத்த அமெரிக்கச் சமூகம் உங்களை ஒன்றுமில்லாதவராக ஆக்க முடிவுசெய்துவிட்டது. அம்மக்களுக்கு தாங்கள் ஒடுக்குமுறைகளை மேற்கொள்கிறோம் என்பதுகூட தெரியாது.

அப்படியான சூழலில், எழுத்து உங்களுக்கு மீட்சியாக அமைந்தது?

நான் எதிலிருந்தாவது தப்பித்தேனா என்று எனக்கு உறுதியாக தெரியவில்லை. ஒருவர் இப்போதும் அந்த ஒடுக்குமுறையின் கீழ்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார். ஒடுக்குமுறை இப்போது எனக்கு முந்தைய வடிவில் நிகழ்வில்லை. ஏனென்றால், நான் இப்போது ஜேம்ஸ் பால்ட்வின்.  நான் இப்போது சுரங்கப்பாதையில் தங்குவதில்லை. வாழ்வதற்கு இடம் தேடி அலைவதில்லை. ஆனாலும், இன்னும் ஒடுக்குமுறை நடக்கிறது. ஆக, மீட்சி என்பது இந்த இடத்துக்கு பொருத்தமான வார்த்தை இல்லை என்று நினைக்கிறேன். என்னுடைய சூழலை விவரிப்பதன் மூலம் இந்த ஒடுக்குமுறைகளுக்கு ஊடாக வாழக் கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது.

 

நீங்கள் எழுத்தாளராகத்தான் ஆகப்போகிறீர்கள் என்பதை எப்போது உணர்ந்தீர்கள்? 

என்னுடைய தந்தை இறந்தபோது. என் தந்தை இறப்பதற்கு முன்புவரையில் நான் வேறு ஏதாவது ஒன்றுதான் செய்வேன் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இசைக் கலைஞனாக வேண்டும், ஓவியராக வேண்டும், நடிகராக வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.  இவையெல்லாம் என்னுடைய 19 வயதுக்கு முன்னால். 

நான் வெள்ளையின வரையறைகளை எதிர்ப்பவன் என்று என்னைப் பற்றி என் தந்தை ஒருமுறை கூறினார். அது உண்மைதான். அதேசமயம், எது வெள்ளையின வரையறைகள் என்பதை என் தந்தையிடமிருந்தான் நான் தெரிந்துகொண்டேன். அவர் இறைபக்தி உடையவர். சில விஷயங்களில் அழகான மனிதர். சில விஷயங்களில் கொடூரமான மனிதர். அவருக்கு கடைசி குழந்தை பிறந்தபோது அவர் இறந்துவிட்டார். நான் அடுத்த கட்டத்தக்கு சென்றாக வேண்டிய தருணத்தில் இருப்பதை உணர்ந்தேன். நான் மூன்று ஆண்டுகள் – 14 வயதிலிருந்து 17 வயது வரையில் – மதப் பிரச்சாகரனாக இருந்தேன். அந்த மூன்று ஆண்டுகள்தான் என்னை எழுத்தாளனாக உருப்பெறச் செய்தது.

நீங்கள் எழுதும்போது வாசகனை மனிதில் கொண்டிருப்பீர்களா?

இல்லை. நீங்கள் அப்படி கொண்டிருக்க முடியாது. 

ஆக, எழுதுவது என்பது பிரச்சாரம் செய்வதுபோல் இல்லை? 

அவை இரண்டும் தனித்தனியானவை. நீங்கள் பிரசங்க மேடையில் நின்றுகொண்டிருக்கும்போது, நீங்கள் என்ன பேசப்போகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால், எழுத்தைப் பொருத்த வரையில், நீங்கள் அறிந்திராத ஒன்றை அறியவே எழுதுகிறீர்கள். என்னைப் பொறுத்தவரையில் எழுத்துச் செயல்பாடு என்பது நீங்கள் அறிந்திராத ஒன்றை, அறிய விரும்பதாக ஒன்றை, வேறுவழியின்றி நீங்கள் அறிய முயலும் பயணம்தான்.

நீங்கள் எழுத்தாளராக ஆனதற்கு இதுவும் காரணம்தான் இல்லையா? அதாவது உங்களை அறிந்துகொள்ள! 

ம்ம்ம்… நான் அவ்வாறாக முடிவெடுத்தாக சொல்லிவிட முடியாது. நான் எழுத்தாளனாக ஆகியே தீர வேண்டும் இல்லையென்றால், ஒன்றுமில்லாதகவனாக ஆகிவிடுவேன் என்கிற நிலையில் இருந்தேன். நான்தான் என் குடும்பத்தில் மூத்தவன் என்பதால், தந்தைப் பொறுப்பில் இருந்தேன். எனக்கு எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தேன். ஏனென்றால், எனக்கு ஏதேனும் நடந்தால், என் குடும்பத்தினர்கள் என்ன செய்வார்கள் என்ற எண்ணம் எனக்கு இருந்துகொண்டே இருந்தது. நியூயார்க்கில் - நான் பயணித்த சாலைகளில், நான் ஓடிய தெருக்களில் - என்னைப் போன்ற பையன்களுக்கு என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். வீட்டுக் கூரையின் மீதும், சுரங்கப்பாதைகளிலும் தூங்கி இருக்கிறேன். இன்னும் எனக்கும் பொதுக் கழிப்பிடம் அச்சமூட்டக்கூடியதாகவே இருக்கிறது. என் தந்தை இறந்தபோது, இனி நான் என்ன செய்ய வேண்டும் என்று அமர்ந்து சிந்திந்தேன்.

யாராவது உங்களை வழிநடத்தினார்களா? 

ஒருமுறை கறுப்பின ஓவியர் பியூஃபோர்ட் டெலானி (Beauford Delaney) உடன் ஒரு தெரு முனையில் சாலையைக் கடந்து செல்ல சிக்னலில் விளக்கு மாறுவதற்காகக் காத்திருந்தேன். அவர் கீழே தரையைக் காட்டி ‘பார்’ என்றார். பார்த்தேன். தண்ணீர் இருந்தது. அவர் சொன்னார் ‘மீண்டும் பார்’. நானும் பார்த்தேன். அந்தத் தண்ணீரில் எண்ணெய் கலந்து இருந்தது.  அந்த நகரம் அதில் பிரதிபலித்தது. அது எனக்கு மிகப் பெரும் திறப்பாக அமைந்தது. அதை என்னால் விவரிக்க முடியவில்லை. எப்படி பார்க்க வேண்டும் என்று அவர் எனக்கு கற்பித்தார். நான் பார்ப்பதை நம்புவதற்கும் எனக்கு கற்பித்தார். எப்படி பார்க்க வேண்டும் என்பதை எழுத்தாளர்களுக்கு ஓவியர்கள் அவ்வப்போது கற்றுத்தந்துள்ளனர். ஒருமுறை நீங்கள் அந்த அனுபவத்தை அடைந்தால், அதன் பிறகு உலகை வேறு விதமாகவே பார்ப்பீர்கள்.

வளர்ந்துவரும் எழுத்தாளருக்குப் பிற எழுத்தாளர்களைவிட ஓவியர்கள் உதவுவார்கள் என்று நினைக்கிறீர்களா? நீங்கள் நிறைய வாசித்தீர்களா?

நான் எல்லாவற்றையும் வாசித்தேன். ஹார்லெமில் உள்ள இரண்டு நூலங்களில் நான் படிப்பேன். அப்போது எனக்கு பதிமூன்று வயது இருக்கும். ஒருவர் இப்படியாகத்தான் எழுத்தைப் பற்றி தெரிந்துகொள்ள முடியும் என்று நினைக்கிறேன். முதலில், நீங்கள் எவ்வளவு குறைவாகத் தெரிந்துவைத்திருக்கிறீர்கள் என்பதை நீங்கள் கற்பீர்கள். நான் இப்போது வரையில் எப்படி எழுத வேண்டும் என்று கற்றுக்கொண்டிருக்கிறேன். எனக்கு அதன் தொழில்நுட்பம் இன்னும் தெரியவில்லை.

எனக்கு தெரிந்ததெல்லாம், வாசகனைப் பார்க்கச் செய்ய வேண்டும். அதாவது, வாசகனுக்கு நாம் ஓர் உலகைக் காட்ட வேண்டும். இதை நான் தஸ்தோவஸ்கியிடமிருந்தும் பல்ஸாக்கிடமிருந்தும் கற்றுக்கொண்டேன். நான் பல்ஸாக்கை அறிந்திருக்காவிட்டால், பிரான்ஸில் என் வாழ்க்கை நிச்சயம் வேறு விதமாகவே இருந்திருக்கும். எல்லா பிரெஞ்சு அமைப்புகளும் ஆளுமைகளும் வரவேற்புத்தன்மையைக் கொண்டிருப்பதாக நான் புரிந்துகொள்கிறேன். அதன் அடிப்படையிலேயே அந்த நாடும் அந்தச் சமூகமும் இயங்குகின்றன. அமெரிக்காவில் எனக்குக் கிடைக்காத உணர்வை பிரான்ஸ் எனக்கு வழங்கியது: ‘என்னால் ஒன்றைச் செய்ய முடிந்தால், நான் அதைச் செய்யலாம்.’ நான் பொதுமைப்படுத்தவில்லை. அமெரிக்காவில் நான் வளர்ந்த காலகட்டத்தில் என்னால் அப்படி இருக்க முடியவில்லை. நான் அங்கு ஏற்கனவே வரையறுக்கப்பட்டுவிட்டேன்.

நீங்கள் எழுதுவதற்கான நடைமுறை என்ன? 

என்னைப் பற்றி எனக்குச் சொல்லப்பட்டதிலிருந்து விடுபட்டு நான் யார், நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதை உணர்வதற்கு முதலில் நான் அனைத்திலிருந்தும் விலகி தனிமைக்குள் செல்ல வேண்டும். 1950இல் நான் ஒருவகையான உணர்வை அடைந்தேன். என் தோல் உதிர்ந்து நிர்வாணமான உணர்வு. அதன் பிறகு என்னால் என்னை இலகுவாகவும் இன்னும் துல்லியமாகவும் உணர முடிந்தது. அதன் பிறகே என்னால் எழுத முடிந்தது.

நீங்கள் 1945 முதல் 1956 வரையில் எழுதுவதற்கென்று நான்கு முறை உதவித்தொகை பெற்றீர்கள். அவை எந்த அளவுக்கு உங்களுக்கு உதவியது?

என்னுடைய 22ஆம் வயதில் கிடைத்த ஸாக்ஸ்டன் பெல்லோசிப் அப்போதைய என் மனநிலைக்கு மிகவும் முக்கியமானது. அப்போதுதான் நான் பதிப்பு உலகுக்கு அறிமுகமானேன். அதன் தொடர்ச்சியாகவே ‘நியூ லீடர்’ இதழுக்கு பன்னிரண்டு டாலருக்கு புத்தக மதிப்புரை எழுத ஆரம்பித்தேன். அதற்காக எப்போதும் நான் படித்துக்கொண்டிருக்க வேண்டும். தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்க வேண்டும். அது எழுத்தைக் கற்றுக்கொள்ள எனக்கு உதவியாக இருந்தது. நான் சேர்ந்து பணியாற்றியவர்கள் பெரும்பான்மையினர் இடதுசாரிகள், சோஷலிஸ்ட்டுகள். அந்த வகையில் நானும் இளம் சோஷலிஸ்ட்டாக இருந்தேன். அந்தச் சூழல் எனக்கு மிகவும் நன்றாக இருந்தது. அந்தச் சூழல்தான் என்னை விரக்தியிலிருந்து காப்பாற்றியது.

நீங்கள் எழுத நினைத்ததைத் துல்லியமாக எழுதிவிட்டீர்கள் என்று எப்போது உங்களுக்குத் தெரியவரும்? 

நான் பல முறை திருத்தி எழுதுவேன். அது வலி மிகுந்தது. அதற்கு மேலே திருத்தி எழுத ஒன்றும் இல்லை என்று நீங்கள் உணரும்போது நீங்கள் அதை முடித்துவிட்டதாக அர்த்தம். அது நீங்கள் எதிர்பார்த்ததுபோல் வரவில்லை என்றபோதிலும். 

ஒரு புத்தகத்தை எப்போது தொடங்குவீர்கள்?

ஏதாவது ஒன்று உங்களை விட்டு விலகாமல் உங்களைத் தொந்தரவு செய்துகொண்டிருக்கும். அது பெரும் வேதனை. இந்தப் புத்தகத்தை எழுத வேண்டும், இல்லையென்றால் செத்துப்போய்விட வேண்டும் என்று தோன்றும். நீங்கள் அதிலிருந்து தப்பிக்க முடியாது.

பொதுவாக கட்டுரைகள் எழுதுவது என்பது சற்று எளிமையானது, இல்லையா? உங்களை கோபமூட்டிய விஷயத்தைப் பற்றி அதில் எழுதுவீர்கள்?

கட்டுரை என்பது பார்ப்பதற்கு எளிமையானதாகத் தோன்றலாம். ஆனால், கட்டுரை எழுதுவதென்பது எளிமையானது அல்ல. கட்டுரை என்பது ஒரு விவாதம். கட்டுரையில் எழுத்தாளரின் தரப்பு தெளிவாக இருந்தாக வேண்டும். கட்டுரை எழுதுபவர், ஒன்றைச் சொல்லி வாசகனைத் தன் தரப்பை நோக்கி மாற்ற முயற்சிப்பார். நாவலைப் பொறுத்தவரையில், வாசகனுக்கு ஒன்றைக் காட்ட முயற்சிப்பார். இரண்டிலும் சிக்கலான விஷயங்கள் உள்ளன.

எழுதுவது தொடர்பான உங்கள் அனுபவம் பெருகும்போது, அறிவும் அதிகரிக்கும் என்று நினைக்கிறீர்களா? 

நீங்கள் எவ்வளவு குறைவாக அறிந்திருக்கிறீர்கள் என்பதை நீங்கள் தெரிந்துகொள்வீர்கள். போகப்போக எழுவது என்பது கடினமானதாக ஆகும். ஏனென்றால், எளிமைதான் உலகில் மிகவும் கடினமான விஷயம். அச்சமூட்டும் விஷயமும்கூட. நீங்கள் அணிந்திருக்கும் வேடங்கள் அனைத்தையும் கழற்ற வேண்டும். அவற்றில் சில உங்களிடம் இருக்கிறது என்பதுகூட உங்களுக்குத் தெரியாது. உங்கள் வார்த்தைகள் எலும்பைப் போல் சுத்தமாக இருக்க வேண்டும். அதுதான் இலக்கு. 

எப்படி எழுத்தாளன் ஆவது என்று ஆலோசனைக் கேட்டு உங்களைத் தேடிவரும் இளம் தலைமுறையினருக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

எழுதுங்கள். வாழவும் எழுதவும் ஒரு வழியைக் கண்டுபிடியுங்கள். நீங்கள் உண்மையில் எழுத்தாளனாக ஆகப்போகிறீர்கள் என்றால், உங்களை எவராலும் தடுக்க முடியாது. அதேபோல் நீங்கள் எழுத்தாளனாகப் போவதில்லையென்றால், யாராலும் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. உங்கள் பயணத்தின் ஆரம்பத்தில் உங்களுக்குத் தேவைப்படுவது எழுதுவதற்குக் கடின உழைப்புத் தேவை என்று யாராவது உங்களிடம் தெரிவிப்பதுதான்.

ஒருவரிடம் இருக்கும் திறமையை உங்களால் கண்டறிய முடியுமா?

திறமை பெரிய விஷயம் இல்லை. திறமையைவிட மேம்பட்ட பல விஷயங்கள் இருக்கின்றன: ஒழுக்கம், அன்பு, அதிர்ஷ்டம். எல்லாவற்றுக்கும் மேலாக, அனைத்தையும் தாங்கி தாக்குப்பிடித்து நிற்பதற்கான சக்தி!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

3

2

1
பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Saravanan P   1 year ago

A moving account of the life and thoughts of James Baldwin. The interview part of it is a good guidance for budding writers.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Gokulraj N   2 years ago

நம்மை மேலும் ஊக்கப்படுத்தும் தகவல்

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

பிடிஆர் சமஸ்சின்னம்மாமுஸ்லிம் பெண்கள்முதிர்ச்சிசந்தையில் சுவிசேஷம்சித்தாந்தம்காந்தி - அம்பேத்கர்ரிக்‌ஷாபாசிஸம்ராஷ்ட்ரீய ஜனதா தளம்சின்னம்புதுமடம் ஜாஃபர் அலி கட்டுரைபொருளாதாரக் குறியீடுவர்ணம்தாழ்வுணர்ச்சிஅரபு நாடுகள்உகாண்டாவரவேற்புபெண்களுக்கான பிரதிநிதித்துவம் சமூகநீதியோடு அமைட்டுஅணைப் பாதுகாப்பு மசோதா என்றால் என்ன?2019 ஆகஸ்ட் 5சமாஜ்வாடி கட்சிநீதிபதி துலியாஎண்ணெய்ச் சுரப்பிகள்கஸ்தூரிஅருஞ்சொல் - மன்னை ப.நாராயணசாமிதிருநாவுக்கரசர் சமஸ் பேட்டிஷேக் அப்துல்லாமோசமான தீர்ப்புஅகங்காரம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!