தமிழில் விவாதங்களை வளர்க்கும் பணியில் தன்னையும் ஈடுபடுத்திக்கொள்கிறது ‘அருஞ்சொல்’. ஆகையால், கட்டுரைகளை வாசிப்பவர்கள் ‘எனக்குப் பிடிக்கிறது அல்லது பிடிக்கவில்லை’ என்பதுபோல ஓரிரு வரிகளில் தங்கள் கருத்துகளை எழுதாமல் விரிவாக எழுதிட வேண்டுகிறோம். அப்படி எழுதப்படும் கருத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை ‘இன்னொரு குரல்’ பகுதியில் வெளியாகும். கருத்துகளைப் பின்னூட்டப் பகுதியில் எழுதிடுங்கள் அல்லது aruncholeditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடுங்கள். தயவுசெய்து உங்கள் பெயருடன், ஊர் பெயரையும் குறிப்பிடுங்கள்.
சமீபத்தில் வெளியான குடிமைப் பணித் தேர்வு முடிவுகளில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் சரிந்துள்ளது என்பது பேசுபொருளானது. இதைத் தொடர்ந்து ‘அருஞ்சொல்’ தளத்தில் மு.ராமநாதன் எழுதிய ‘ஆட்சிப் பணிகளில் தமிழர்கள் குறைய என்ன காரணம்?’ என்ற கட்டுரை வெளியானது. பரவலாக வாசிக்கப்பட்ட அந்தக் கட்டுரைக்கு ஏராளமான எதிர்வினைகள் வந்தன; அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவற்றை இங்கே தருகிறோம்.
அருஞ்சொல் தளத்தில் 2022 ஜூன் 08 அன்று கட்டுரையாளர் மு.இராமநாதன் எழுதிய 'ஆட்சிப் பணிகளில் தமிழர்கள் குறைய என்ன காரணம்?' கட்டுரையை வாசித்தேன். இந்தக் கட்டுரையில் எனக்குச் சில மாற்றுக்கருத்துகள் உள்ளன. ஆட்சிப் பணிக்கான குடிமைப் பணித் தேர்வின் (UPSC) முதல்நிலைத் தேர்வை ஒன்றிரண்டு நாட்களுக்கு முன்புதான் (ஜூன் 5) எழுதினேன் என்ற அடிப்படையில் என்னுடைய கருத்துகளை இங்கே பகிர விரும்புகிறேன்.
மு.இராமநாதன் தன் கட்டுரையில், “கணிசமானோர் தமிழைப் பயிற்றுமொழியாக படிப்பதில்லை” எனக் கூறுகிறார். எந்தப் புள்ளிவிவரத்தின் அடிப்படையில் இந்தக் கருத்தைக் கட்டுரையாளர் தெரிவிக்கிறார் எனப் புரிந்துகொள்ள முடியவில்லை. தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழைப் பாடமாக எடுத்துப் படிக்காதவர்கள் மட்டும்தான் ஆட்சிப் பணித் தேர்வுகளை எழுதுகிறார்கள் என்று கூறுகிறாரா? அப்படிக் கூறப்படும் பட்சத்தில் மேற்கூறிய கருத்தை ஒப்புக்கொள்ளலாம். இல்லையெனில், அவர் எப்படி பெரும்பாலானோருக்குத் தமிழே தெரியாது எனக் கூறுகிறார்? அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முழுக்க முழுக்க தமிழ்வழிக் கல்வியில் மட்டுமே பயின்று வெளியே வரும் மாணவர்கள்தான் தமிழகத்தில் அதிகம். இது கண்கூடான உண்மை.
நானும் அரசு உதவிபெறும் பள்ளியில் முழுக்க முழுக்க தமிழ்வழியில் பயின்றுதான் பள்ளிப்படிப்பை முடித்தேன். அரசு உதவிபெறும் கல்லூரியில்தான் இளங்கலை அறிவியலில் கல்லூரிப் படிப்பை முடித்தேன். இப்போது ஆட்சிப் பணி தேர்வில் தேர்ச்சி பெற முயன்றுகொண்டிருக்கிறேன்.
நாங்களும் ஆட்சிப் பணித் தேர்வுகளை எழுதத்தான் செய்கிறோம். ஆனால், நாங்கள் சந்திக்கும் பிரச்சினைகளைப் பற்றி கட்டுரையாளர் எங்கேயுமே குறிப்பிடவில்லை! இதில் முதல் பிரச்சினையே மொழியிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. ஆட்சிப் பணி தேர்வைத் தமிழில்கூட எழுதலாமே எனக் கூறுவார்கள். ஆனால், அது அப்படியில்லை. ‘முதன்மை தேர்வு’ (Mains) மட்டுமே தமிழில் எழுதக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
ஆனால், நீங்கள் முதன்மைத் தேர்வை எழுத வேண்டுமெனில் முதல்நிலை (Prelims) தேர்வில் முதலில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த முதல்நிலைத் தேர்வைத் தமிழில் எழுத முடியாது. ‘கொள்குறி வகை’யிலான (Objective) அந்தத் தேர்வில் ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே வினாக்கள் கேட்கப்பட்டிருக்கும். வேறு எந்த பிராந்திய மொழிகளுக்கும் அங்கே இடம் கிடையாது.
முதல்நிலைத் தேர்வில் காலையில் ஒரு பொதுப்பாட தாளையும் மதியம் ஒரு பொதுப்பாட தாளையும் எழுத வேண்டும். மதியம் நடைபெறும் அந்த இரண்டாவது தாள் ‘சிஎஸ்ஏடி’ (CSAT) என்று அழைக்கப்படும். இந்த தாள் 2011இல்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இது தேர்வர்களின் ஆங்கில, கணித அறிவு மற்றும் சமயோஜித திறனைச் சோதிக்கும் வகையிலான தாள். மொத்தம் 80 கேள்விகளை உள்ளடக்கி 200 மதிப்பெண்களைக் கொண்டது.
இந்தத் தாளில் குறைந்தபட்சமாக 66 மதிப்பெண்ணை எடுத்தால் மட்டுமே காலையில் நாம் எழுதிய முதல் தாளை மதிப்பீடு செய்வார்கள். ஆக, இரண்டாம் தாளில் நாம் கட்டாயமாக 66 மதிப்பெண்களை எடுத்தாக வேண்டும். இல்லையேல் முதல் தாளில் நாம் எவ்வளவு சிறப்பாக எழுதியிருந்தாலும் அது விரயம்தான். இரண்டாம் தாள் எவ்வளவு முக்கியம் என்பதை இதன்மூலம் புரிந்துகொள்ள முடியும். ஆனால், இந்த இரண்டாம் தாளில் மொழியை முன்வைத்து நடக்கும் ஒதுக்குதல் சகிக்க முடியாதது. வழக்கம்போல இந்தத் தாளிலும் கேள்விகள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டும்தான் இருக்கும்.
குறிப்பாக, ‘காம்பிரிஹென்சன்’ (Comprehension) வகை கேள்விகள் இந்தத் தாளில் அதிகம் இடம்பெறும். அதாவது, ஒரு பெரிய ஆங்கிலப் பத்தியைக் கொடுத்துவிட்டு அதன் கீழ் அதைப் பற்றி சில கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். நாம் அந்த ஆங்கிலப் பத்தியை வாசித்து பொருளுணர்ந்து கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு சரியான பதிலை அளிக்க வேண்டும். இதில் பிரச்சினை என்னவென்றால், கேள்விகளுக்குக் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு பதில்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியே இருக்கும். எதைத் தேர்வு செய்தாலுமே சரியாகத்தானே இருக்கும் என்றே தோன்றும். இதில் உண்மையிலேயே சரியான பதிலைக் கண்டுணர்வது ரொம்பவே கடினம். நேரமெடுத்து நுணுக்கமாக யோசித்தால் மட்டுமே சரியான பதிலைத் தேர்ந்தெடுக்க முடியும்.
¶
இந்தியைத் தாய்மொழியாக கொண்டவர்களுக்கு இதில் கூடுதல் சௌகரியம் ஒன்று கிடைக்கிறது. ஆங்கிலத்தில் இருக்கும் அந்த பத்தி அப்படியே இந்தியிலும் மொழிமாற்றப்பட்டு கொடுக்கப்பட்டிருக்கும். அவர்கள் அவர்களுடைய தாய்மொழியில் அந்தப் பத்தியின் பொருளை உள்வாங்கி, பதில்களுக்கிடையேயான நுணுக்கமான வேறுபாடுகளை எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதேபோல், நான் ஆங்கிலத்தில் ஒரு பத்தியை வாசித்து பொருளுணர்ந்துகொள்வதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் தாய்மொழியில் அதே பத்தியை வாசித்து உணர்பவர் எடுத்துக்கொள்ளும் நேரத்தைவிட நிச்சயமாக அதிகமாகத்தான் இருக்கும்.
இரண்டு மணிநேரத்தில் 80 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டிய சூழலில், ஒவ்வொரு நொடியுமே மதிப்புமிக்கது எனும்போது இந்த மொழி வேறுபாடுகளால் நான் ஒவ்வொரு நொடியிலுமே பின்தள்ளப்பட்டுக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன்.
நான் மேலே குறிப்பிட்ட இந்த மாதிரியான ‘காம்பிரிஹென்சன்’ வகையில் மட்டுமே இந்த முறை 27 கேள்விகளைக் கேட்டிருந்தார்கள். ஒரு கேள்விக்கு 2.5 மதிப்பெண் என்று பார்த்தால் இதில் மட்டுமே 67.5 மதிப்பெண்களை எடுக்கும் சாத்தியம் இருக்கிறது. இந்தத் தாளில் கட்டாயம் எடுக்க வேண்டிய மதிப்பெண்கள் 66 மட்டுமே. எனில், இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் எவ்வளவு சௌகரியத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை இதன் மூலமே உணர முடியும். இது எடுத்து காண்பிப்பதற்கான ஒரு சிறு உதாரணம் மட்டும்தான். முழுக்க முழுக்க இந்தி பேசும் மாணவர்களுக்கு இந்த தேர்வு கூடுதல் சௌகரியத்தை அளிக்கிறது என்பதை அவர்களாலேயேகூட மறுக்க முடியாது. இது மிகப் பெரிய பாரபட்சம் இல்லையா?
இந்தியா ஓர் ஒன்றியம் என்கிற கருத்தாக்கம் உண்மையெனில், ஆட்சிப் பணியில் இப்படியான போக்கையெல்லாம் ஒரு வஞ்சகமாகத்தான் பார்க்க முடியும். மதுரையில் ஒரு கல்லூரியில் இந்த முறை முதல்நிலை தேர்வை எழுதுயிருந்தேன். கல்லூரி வாசலில் மாணவர்களுக்கான தேர்வு குறித்தான அறிவிப்புகளை விளக்கி சுவரொட்டிகளை ஒட்டியிருந்தார்கள். அதில்கூட தமிழுக்கும் மற்ற பிராந்திய மொழிகளுக்கும் இடம் இல்லை. ஆங்கிலமும் இந்தியும் மட்டும்தான் இருந்தது. தேர்வு எழுதும் அறையில் மட்டுமல்ல; தேர்வு மையத்திற்கு வெளியே இருந்தே நம்மை அந்நியமாக உணர வைத்துவிடுகிறார்கள்.
என்னுடைய தேர்வு அறையில் 24 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அன்று என்னுடன் முதல்நிலை தேர்வை எழுதியவர்கள் வெறும் 5 பேர்தான். 19 பேர் தேர்வெழுதவே வரவில்லை. ஆட்சிப் பணியில் தமிழ்நாட்டின் தேய்மானத்தை நேரடியாக உணர்ந்தேன். தமிழ்நாடு சுதாரித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது.
ஆட்சிப் பணித் தேர்வானது ஒரு பூதம் போன்ற மிரட்சியை மாணவர்களுக்கு கொடுக்கிறது. அந்த மிரட்சிக்கு மிக முக்கிய காரணங்களுள் ஒன்று அந்நியமாக உணரச்செய்யும் மொழி வேறுபாடு. மாநிலங்களின் சுயாட்சியைப் பற்றி அதிகமாகப் பேசப்படும் இந்தக் காலத்தில் இந்த ஆட்சிப் பணித் தேர்வுகளில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தத்தைப் பற்றியும் பேசியாக வேண்டும். மத்திய அரசு மட்டுமில்லை. மாநில அரசுகளும் ஆட்சிப் பணி விஷயத்தில் சில முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும்!
என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தின்படி இன்னும் விரிவாக எழுத முடியும். வாய்ப்பிருந்தால் நல்குக.
-உ.ஸ்ரீராம், வயது 21. போட்டித் தேர்வர்
தொடர்புடைய கட்டுரை:
ஆட்சிப் பணிகளில் தமிழர்கள் குறைய என்ன காரணம்?
9
2
பின்னூட்டம் (4)
Login / Create an account to add a comment / reply.
Kavitha 2 years ago
பள்ளி,கல்லூரி என அனைத்தும் தமிழில் பயின்று தற்போது இது போன்ற தேர்வுகளை எதிர்க்கொள்ளும் என்னை போன்ற தேர்வர்களின் நிலை மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்தியா ஒரு பொருளாதார சமநிலை அற்ற நாடு. இங்கு கல்வி என்பதும் சமநிலை அற்றதாகவே(அரசு பள்ளி, தனியார் பள்ளி,சிபிஎஸ்இ)உள்ளது.இது போன்ற சூழலில் தேர்வுகளில் மட்டும் அரசு எப்படி சமநிலையை எதிர் பார்க்கிறது? இந்த மொழி பாகுபாடு என்பது என்னை போன்ற தமிழ் வழி பயின்ற மாணவர்களின் கனவுகளை சிதைப்பதாக உள்ளது.
Reply 3 0
Login / Create an account to add a comment / reply.
அ. சங்கர் பிரகாஷ் (https://twitter.com/ASP_TN) 2 years ago
இந்தி தெரிந்தவர்களுக்கு 'அனுகூலம்' இருப்பதை நாம் மறுக்க முடியாது. 1. ஆங்கிலத்துடன் அட்டவணை மொழிகள் அனைத்திலும் கேள்வித்தாள் இருப்பதே குறைந்தபட்சம் சமமான போட்டிக்கு வழிவகுக்கும். 2. இல்லையெனில், கேள்வித்தாள் ஆங்கிலத்திலோ அல்லது இந்தியிலோ மட்டும் இருக்க வேண்டும் (எந்த மொழியில் கேள்வித்தாள் வேண்டும் என்பதை எழுதுபவர் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்). இதன் மூலம் அந்த 'அனுகூலத்தை' மட்டுமாவது தடுக்கலாம். மேற்சொன்ன இரண்டில் ஒன்று நடக்கும் காலம் எப்போது வரும்?
Reply 3 0
Login / Create an account to add a comment / reply.
Shanmugasundaram Muthuvel 2 years ago
நேர்மையான கூர்மையான எழுத்து... உங்கள் கனவு நனவாகும்
Reply 4 0
Login / Create an account to add a comment / reply.
PON VIGNESH PAPPU S 2 years ago
இது தான் உண்மையான நிலவரம்
Reply 4 0
Login / Create an account to add a comment / reply.