கட்டுரை 10 நிமிட வாசிப்பு

கேசவ் தேசிராஜு: ஒரு முன்னோடி இந்தியர்

ராமச்சந்திர குஹா
27 Sep 2021, 5:00 am
1

னிப்பட்ட வெற்றிக்காகவே சொந்த வாழ்க்கை முழுவதையும் செலவழித்துவிட்டதால், மற்றவர்களுக்காக வாழும் பெருமக்களைப் பார்க்கும்போதெல்லாம் குற்ற உணர்வு மேலிட, அவர்கள் மீது பெருமதிப்பு தோன்றப் பார்க்கிறேன்.

நான் மிகவும் நேசித்த அரசு அதிகாரி சமீபத்தில் தன்னுடைய அறுபத்தாறாவது வயதில் காலமாகிவிட்டார். சராசரி ஆயுள்காலம் அதிகரித்துவிட்ட இக்காலத்தில் இது இறப்புக்கான வயதே அல்ல.  கரோனாவாலும் அவர் பாதிக்கப்படவில்லை. சமூகத்துக்கும் அறிவுலகத்துக்கும் அவர் அளிக்க வேண்டிய சேவை எஞ்சியிருக்கும் வேளையில் காலம் அவரை முன்கூட்டியே பறித்துச் சென்றுவிட்டது. 

கேசவ் தேசிராஜு என்ற சிறப்புமிக்க மனிதரை நான் 1988-ல் சந்தித்தேன். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட அவர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தவர். மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்தபோது இன்றைய உத்தராகண்ட் மாநிலத்தின் மலைவாழ் மக்கள் அனைவருடைய மனங்களையும் கவர்ந்தவர் என்று பலரால் மிகவும் போற்றப்பட்டார்.

அசாதாரணமான அதிகாரி

அல்மோரா மாவட்டத்தில் அவர் பணியாற்றினார், அந்த மாவட்டம் தொடர்பில் என்னுடைய ஆராய்ச்சி நூலிலும் எழுதியிருக்கிறேன். அவர் அதிகாரியாக இருந்தபோது அவரைப் பார்க்கச் சென்றேன். தென்னிந்தியரான அவர் இந்தியை எவ்வளவு சரளமாகப் பேசுகிறார் என்று கவனித்து வியந்தேன். மாவட்டத் தலைநகரிலிருந்து வெகு தொலைவில் உள்ள உள்புறக் கிராமங்களுக்கும் மலைப்பகுதிகளுக்கும் போவதில் அவர் தீவிர ஆர்வமுள்ளவராக இருந்தார். மலைப் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வது எந்த அளவுக்கு சவாலானது என்பதை நன்கு உணர்ந்திருந்தார்.

உத்தர பிரதேசம் இரண்டாக பிரிக்கப்பட்டபோது புதிதாக உருவான உத்தராகண்ட் மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்ற விருப்பம் தெரிவித்தார். டேராடூனில்தான் பிறந்தேன், வளர்ந்தேன் என்பதால் அவர் அங்கே இருப்பதால் அந்த மாநிலத்துக்கு அடிக்கடி சென்றுவர எனக்கு மேலும் உற்சாகமே ஏற்பட்டது. அணை கட்டுமானப் பணிகளால் நீரில் மூழ்கிவிடும் வாய்ப்புகள் இருந்ததால் அனைவரும் வெளியேறிக்கொண்டிருந்த தேஹ்ரி நகருக்குச் சென்றேன். தேஹ்ரி அணையைக் கட்டக்கூடாது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்லால் பகுகுணா உண்ணாவிரதம் இருந்த இடத்தைப் பார்த்தேன். திரும்பும் வழியில், தேவதாரு (பைன்) மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்த தொடர்ச்சியான இமாலயத்தின் கட்வால் அடர்வனப் பகுதியை ரசித்தேன். டேராடூனில் உள்ள மாநில தலைமைச் செயலகத்தில் அனைவருமே தேசிராஜு மீது வைத்திருந்த அன்பையும் மரியாதையையும் கவனித்தேன். தன்னுடைய அதிகார வரம்புக்குள்பட்ட பிரதேசத்தின் அனைத்து அம்சங்களையும் அவர் நன்கு தெரிந்து வைத்திருந்ததாலும், நேர்மையானவராக இருந்ததாலும், மற்றவர்களுடன் பழகும் வேளையில் அதிகாரப்படிநிலையில் உயர்ந்த இடத்தில் இருக்கிறோம் என்ற கர்வம் இல்லாமல் அனைவருடனும் இயல்பாகப் பழகியதாலும் அவரை அனைவருமே மதித்தனர்.

மானுடவியல் அறிஞர் வெர்ரியர் எல்வின் ஆராய்ச்சி செய்த மத்திய பிரதேச மாநிலப் பழங்குடி கிராமங்களுக்கு கேசவ் தேசிராஜுடன் 1998இல் சென்றிருந்தேன். கடைசி நாள் இரவு அமர்கண்டக் என்ற இடத்தில் சாலையோர உணவகத்தில் இருவரும் சாப்பிட்டோம். ஒரு வாடிக்கையாளர் விட்டுச்சென்ற முந்தைய நாள் இந்தி நாளிதழை வாசித்த கேசவ தேசிராஜு், கர்நாடக இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவுள்ள செய்தியை வாசித்தார். அனுப்பூரிலிருந்து டெல்லி வரையிலான அந்த நீண்ட ரயில் பயணத்தின்போது, மும்பை சண்முகானந்த சபையில் தனது எட்டாவது வயதில் கேட்ட எம்.எஸ்.சுப்புலட்சுமியின் முதல் கச்சேரி முதல் ஒன்றுவிடாமல் நினைவுகூர்ந்து பேசினார். ஒவ்வொரு கச்சேரியிலும் எம்.எஸ்.சுப்புலட்சுமி எந்தப் பாடலைப் பாடினார் என்றும் கூறினார்.

உத்தராகண்டில் சில ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு அவரை மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலராக நியமித்தார்கள். போலியோ என்றழைக்கப்படும் இளம்பிள்ளை வாத நோயை ஒழிப்பதற்கான இயக்கத்தில் அவர் தனித்துவமான அரிய பணியைச் செய்தார். மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் குறித்த அவருடைய பிரச்சார இயக்கம் கவனத்தில் கொள்ள வைத்தது. அதே துறையில் செயலாளராக பதவி உயர்வு பெற்றதும், மனநலம் குன்றியோருக்கான சிகிச்சையை மேலும் பலருக்கு விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்தார்.

ஊழலுக்கு எதிரான கேடயம்

இந்திய மருத்துவ கவுன்சில்  அமைப்பில் இருந்த சில சதிகார ஊழல் பேர்வழிகளின் கொட்டத்தை ஒடுக்கினார் கேசவ் தேசிராஜு. அந்த அமைப்பினர் செல்வாக்கு மிக்க பல அரசியல் தலைவர்களைத் தங்களுக்கு ஆதரவாகச் செயல்பட வைக்கும் திறன் பெற்றவர்கள். இந்த நடவடிக்கையும் புகையிலைப் பொருள்களுக்கு எதிரான அவருடைய இடைவிடாத போரும் அவரை சுகாதார அமைச்சக செயலாளர் பதவியிலிருந்து வேறிடத்துக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மாற்றுவதற்குக் காரணங்கள் ஆகின. பொதுத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருந்ததால் சட்டவிரோத வழிகள் மூலம் தேர்தல் செலவுக்கு நிதி பெறுவதற்கு, நேர்மையான அந்த அதிகாரி தடைக்கல்லாக இருந்தார்.

ஆண்டுகள் செல்லச்செல்ல மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் என்றாலே, ஆணவம் மிக்கவர்களாகிவிடுவது வழக்கமாகிவிட்டிருப்பதை நாம் பார்க்கிறோம். நேர்மையாக இருக்க வேண்டும் என்ற வழியிலிருந்து தவறி, தங்களுடைய அரசியல் எஜமானர்களின் நம்பிக்கைக்குரியவர்களாக இருப்பதையும் அவர்கள் காட்டும் சலுகைகளுக்கு நன்றிக் கடன்பட்டவர்களாகச் செயல்படுவதையும் பார்க்கிறோம். கேசவ் தேசிராஜுவிடம் இந்தப்  பண்புகள் கிடையாது. இதனால்தான் அவர் காலத்தில் பணியாற்றிய பல ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இடையிலும் மக்கள் அவரை மரியாதையுடன் நடத்தினர், காலங்கள் பல கடந்தும் அவரைப் பற்றி நினைவுகூரும்போது அன்பும் மரியாதையும் கொண்டு பேசுகின்றனர்.

கேசவ் தேசிராஜுவுக்கு முன்னர் சுகாதாரத் துறைச் செயலாளராக இருந்த கே.சுஜாதா ராவைப் போலவே அவரையும் மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர்கள், சமூக சுகாதார ஊழியர்கள் என்று அனைத்துத் தரப்பினருமே மதித்தனர். அவரை சுகாதாரத் துறைச் செயலர் பதவியிலிருந்து நீக்கியதற்காக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் வாழ்ந்த மருத்துவத் துறை நிபுணர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

சுப்புலட்சுமியின் இசை ரசிகர்

கேசவ் தேசிராஜுவை நான் மேலும் நெருங்க நெருங்க, அவர் மீது எனக்கிருந்த பக்தி தொழில்ரீதியிலிருந்து மாறி தனிப்பட்ட முறையில் அதிகமாகிவிட்டது. தன்னுடைய உடன் பிறந்தவர்கள் மீது அவர் காட்டிய பாசம், கர்நாடக இசையில் அவருக்கிருந்த அபாரமான ஞானம் ஆகியவை என்னை வியப்பில் ஆழ்த்தின. மத்திய இந்தியா வழியாக அவருடன் நான் ரயிலில் பயணம் செய்தபோது எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இசை வாழ்க்கை வரலாற்றை எழுத வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்தார். சுகாதார அமைச்சகத்தில் அன்றாடம் நீண்ட நேரம் பணியாற்றிய காலங்களுக்குப் பிறகு, நேரு நினைவு அருங்காட்சியகத்திலிருந்து இசை தொடர்பான ஒலி – ஒளிப்பதிவுகளை சனிக்கிழமைதோறும் அமர்ந்து திரட்டினார். வெவ்வேறு நாள்களில் வெவ்வேறு இடங்களில் எம்.எஸ். செய்த கச்சேரிகளின் விவரங்களையும் தொகுத்தார். பணியிலிருந்து ஓராண்டுக்காலம் விடுமுறை எடுத்துக்கொள்ள அரசு அனுமதித்தபோது தன்னுடைய சொந்தச் செலவில் லண்டனுக்குச் சென்று இந்தியாவில் கிடைக்காத தகவல்களையும் கச்சேரிப் பதிவுகளையும் பிரிட்டிஷ் நூலகங்களில் தேடினார்.

அரசுப் பணியிலிருந்து கேசவ் தேசிராஜு ஓய்வுபெற்றபோது அவருடைய மனதில் பல பத்தாண்டுகளாக ஊறி வளர்ந்துகொண்டிருந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றிய இசை வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் உருப்பெற்றது. ஹார்ப்பர் காலின்ஸ் நிறுவனம் இந்த ஆண்டின் முற்பகுதியில் அந் நூலை வெளியிட்டது. ‘கிஃப்ட ட் வாய்ஸ்: தி லைஃப் அண்ட் ஆர்ட் ஆஃப் எம்.எஸ் சுப்புலட்சுமி’ (Gifted Voice: The Life and Art of M.S. Subbulakshmi) என்ற தலைப்பில் அது பிரசுரமானது. ஆலிவர் கிராஸ்கியின் ‘இன்டியன் சன்: தி லைஃப் அண்ட் மியூசிக் ஆஃப் ரவி சங்கர்’ (Indian Sun: The Life and Music of Ravi Shankar Kindle Edition) என்ற நூலுக்கு இணையாக அது இருந்தது. இந்திய இசைக்கலைஞர்கள் குறித்து அறிந்துகொள்ள மிகச் சிறந்த இரண்டு நூல்களில் ஒன்றாக அது திகழ்கிறது. ஓய்வுக்குப் பிறகு, தான் பணிபுரிந்த துறையைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு நூலை வெளிக்கொண்டுவந்தார்  கேசவ் தேசிராஜு. ‘ஹீலர்ஸ் ஆர் பிரிடேட்டர்ஸ்? ஹெல்த்கேர் கரப்ஷன் இன் இந்தியா’ (Healers or Predators?: Healthcare Corruption in India) என்ற அத்தொகுப்பு நூலை ‘ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ்’ வெளியிட்டது.

பெருமைமிகு நேருவிய இந்தியர் 

எதை சாதித்தாரோ அதற்காக அவரைப் போற்றினேன், அவருக்கு என்னவெல்லாம் தெரிந்திருந்ததோ அதற்காக அவர் மீது பொறாமைப்பட்டேன். நாங்களிருவருமே எங்களை ‘நேருவிய இந்தியர்கள்’ என்று அழைத்துக்கொள்வதை விரும்பினோம். நேரு விரும்பிய - அனைவரையும் அரவணைத்துச் செல்கிற, பன்மைத்துவக் கலாச்சாரத்தைக் கொண்ட இந்தியாவையே நாங்கள் விரும்பினோம். கேசவ தேசிராஜு், என்னைவிட ஆழ்ந்த நேருவிய இந்தியர், இந்தியாவின் காலாச்சார, மொழி வளத்தில் ஆழங்கால்பட்டவர். இசை பற்றிய வலுவான ஞானத்துடன், நம்முடைய தொன்மையான இலக்கியம் மீதும் அவருக்கு ஆழ்ந்த ஆர்வம் இருந்தது. தெலுங்கு, தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசுவார். சம்ஸ்கிருதமும் ஓரளவுக்குத் தெரியும். தெலுங்கைத் தவிர இந்த மொழிகள் எல்லாவற்றிலும் அவரால் எளிதாகப் படிக்க முடியும்! தியாகராஜ சுவாமிகளைப் பற்றி புத்தகம் எழுத ஆராய்ச்சி செய்ய வேண்டியிருந்ததால் தெலுங்கு மொழியில் எழுதவும் கற்று வந்தார். அவரது மரணத்தால் அந்த வேலை பாதியிலேயே நின்றுவிட்டது.

கேசவ் தேசிராஜு ‘இந்துத்துவா’ என்ற வார்த்தையையே வெறுத்தார். அவர் புரிந்துகொண்டு பின்பற்றிய இந்துமத சாரம், மனிதாபிமானமும் இரக்கமும் கொண்டது, ஆழ்ந்த மெய்யியல் கோட்பாடுகளைத் தனக்குள்ளே பொதிந்து வைத்திருப்பது; இந்து மதத்தின் காவலர்களாகத் தங்களைத் தாங்களே நியமித்துக்கொண்டு வன்முறை வெறியோடு வீதியில் திரிவோரால் அவற்றைப் புரிந்துகொள்ள முடியாது. இந்திய நாகரிக மரபுகளை அவர் ஆழ்ந்து கற்று புரிந்துகொண்டவர், நம்முடைய மரபில் உள்ளவற்றை சிதைக்கும் தீய சக்திகள் யார் என்று அவருக்குத் தெளிவான விழிப்புணர்வு இருந்தது. “கேசவ் தேசிராஜு உண்மையான தேசபக்தர், நம்முடைய குடியரசின் உயர்வான தொடக்க கால லட்சியங்களால் ரத்தமும் சதையுமாக உருவானவரே அவர்” என்று இளம் இந்தியர் ஒருவர் அவருக்கு சரியான புகழஞ்சலியைச் செலுத்தியுள்ளார்.

அறிஞர்கள் நகைச்சுவை உணர்வு இல்லாதவர்களாகவும் தங்களுடைய வேலையில் மட்டுமே குறியாக இருப்பவர்களாகவும் இருக்கலாம், அதிகாரிகள் பகட்டாகவும் தங்களைப் பற்றிய சுய உணர்வே பிரதானமாகவும் இருக்கலாம். இந்த அறிஞர் – அதிகாரியோ குறும்பும் நகைச்சுவை உணர்வும் மிக்கவர். 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் அவருக்கு இரங்கல் கட்டுரை எழுதிய ஜோ சோப்ரா இதை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் இறந்து ஒரு வாரமே ஆன நிலையிலும் எதையாவது வேடிக்கையாக படிக்கும்போதோ, சில கேலிக்கூத்தான விஷயங்களைக் கேள்விப்படும்போதோ அவரைப் பற்றிய நினைவே பன்னிரண்டு முறைகளுக்கும் மேல் வந்தது. இசை, மொழி, நிர்வாகம், பொதுக் கொள்கைகள் என்று எதைப்பற்றிய விளக்கமோ, கூடுதல் தகவலோ தேவைப்பட்டால் நான் முதலில் கேசவ் தேசிராஜுவைத்தான் கேட்பேன். அது மட்டுமல்ல நகைச்சுவைத் துணுக்குகளைப் படித்தாலோ, கேட்டாலோ, சுவாரஸ்யமான வம்பு என்றாலோ முதலில் அவரிடம்தான் பகிர்ந்துகொள்ள விரைவேன்.

சூழும் நினைவலைகள்

சக இந்தியரான அவரைப் பற்றி எனக்குள் எத்தனையோ சம்பவங்கள் புதைந்துள்ளன. அவற்றில் காலத்தால் முற்பட்ட ஒன்று இன்னமும் பசுமை மாறாமல் நினைவில்இருக்கிறது. அல்மோரா மாவட்டத்தில் உள்ள பன்னாரி தேவி ஆலயத்துக்கு 1988இல் ஒரு ஞாயிறன்று, சமூக சேவகர்கள் ஆசித் மித்ரா, லலித் பாண்டே, கேசவ் ஆகியோருடன் சென்றேன். கேசவின் வேண்டுகோளின்படி – சிவப்பு சுழல் விளக்கு பொருத்திய அவருடைய அரசு வாகனத்தில் அல்ல – ஆசித் ஓட்டிவந்த பழைய ஜீப்பில். அந்தப் பயணம் மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது. மாவட்ட நிர்வாகத்திலேயே உயர்ந்தபட்ச அதிகாரத்தில் இருப்பவர், தான் யாரென்றே மற்றவர்களுக்குத் தெரியக் கூடாது என்ற கவனத்துடன் - தனக்குப் பிடித்த நண்பர்களுடன்,  கருவாலி மரங்கள் (ஓக்) அடர்ந்த குன்றின் மீது நடந்தே ஏறி கோவிலுக்கு வந்தார்.

முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு இதேபோன்ற அனுபவம் குமாவோன் என்ற இடத்தில் ஏற்பட்டது. இதை நான் ராதா பட் என்ற காந்திய இயக்க முன்னோடியுடன் பகிர்ந்துகொண்டேன். சகோதரி ராதாவும் அவர் பங்குக்கு ஒரு நிகழ்ச்சியைக் கூறினார். அல்மோரா மாவட்ட ஆட்சியராக இருந்தபோது கௌசானி என்ற இடத்துக்கு வாகனத்தில் செல்வார். ஓட்டுநரை காத்திருக்குமாறு கூறிவிட்டு லட்சுமி ஆசிரமம் இருக்கும் குன்றின் மீது தனியாகவே ஏறிச் செல்வார். அந்தப் பகுதியையும் மக்களையும் நன்கு அறிந்த ஒருவரை அங்கே சந்தித்து அவருடன் ஓரிரு மணிகள் பேசிக்கொண்டிருப்பார். மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைத் தீர்மானிக்க இச் சந்திப்பு அவருக்கு நிரம்பவே உதவியது. அவருக்கு முன்னாலும் சரி – அவருக்குப் பிறகும் சரி எந்த மாவட்ட ஆட்சியரும் இப்படியொரு அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் அளவுக்கு புத்தி கூர்மையோ, எளிமையோ கொண்டிருக்கவில்லை.

இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருந்தபோது, அல்மோராவில் யாரை தேசிராஜு பார்க்கச் செல்வாரோ அவரே ஒரு செய்தி நறுக்கை  அனுப்பியிருந்தார், அதில் அல்மோரா மக்கள் அவருக்கு இரங்கல் கூட்டம் நடத்திய விவரம் இருந்தது. முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் தங்கள் மாவட்டத்தில் பணியாற்றிய ஆட்சியரின் மறைவு குறித்து அந்த மக்கள் துயரப்பட்டிருக்கிறார்கள், அவருக்கு நினைவஞ்சலிக் கூட்டத்தை நடத்தி தங்களுடைய நன்றியுணர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். மாவட்ட அளவில் மட்டுமல்லாமல் மாநில அளவிலும் தேசிய அளவிலும் உயர் பதவி வகித்த காலங்களில் இதைப் போல எத்தனையோ பேருடைய மனங்களைத் தன்னுடைய செயலால் கவர்ந்திருக்கிறார் கேசவ் தேசிராஜு.

கேசவ் தேசிராஜுவின் தாய்வழிப் பாட்டனார் தத்துவ மேதை சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவரும்கூட. ராதாகிருஷ்ணனின் பேரன் என்ற செருக்கோ, பெருமிதமோ அவருக்கு ஏற்படவில்லை. அதேசமயம் தாத்தாவின் பெயருக்கு மேலும் புகழ் ஏற்படும்படி நடந்துகொண்டார். இதுதான் அவருடைய இயல்பான தனித்துவம். அவருடன் பணியாற்றிய பலருக்கு இவர் புகழ்பெற்ற தலைவரின் பேரன் என்பதே தெரியாது. அவருடைய பாட்டனாரின் பிறந்த நாள் நூற்றாண்டு அன்று (செப்டம்பர் 5), ஆசிரியர் தினத்தில் மரணம் அடைந்துவிட்டார் என்பது வியப்பைப் தருகிறது. தன்னுடைய வாழ்க்கை மூலமும் நடத்தையினாலும் ஒருவர் உயர் பதவியில் இருந்தாலும் எப்படி கனிவோடும் கண்ணியத்தோடும் நடந்துகொள்ள வேண்டும் என்று பாடமாக வாழ்ந்துகாட்டிவிட்டார். அதேசமயம் எப்படி சுவாரஸ்யமாக வாழ்வது என்பதற்கும் அவரே உதாரணர். எனக்கு அறிமுகமான பிரமுகர்களிலேயே மிகவும் முன்மாதிரியான ஒருவர் கேசவ் தேசிராஜுதான் – பொது ஊழியராக, அறிஞராக, ஆசிரியராக, குடும்பத் தலைவராக, நண்பராக எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவரே தன்னிகரில்லாத உதாரணர்!

தமிழில்: சாரி

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.








பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Prabhu   3 years ago

ராமச்சந்திர குஹா போன்ற அறிஞர் ஒருவரால் இப்படிப் புகழப்பட வேண்டுமென்றால், கேசவ் தேசிராஜு எப்படியான ஆளுமையாக இருக்க வேண்டுமென்று புரிகிறது. சமூகநீதி: ஒரு அறப்போராட்டம் என்ற புத்தகம் வே.வசந்தி தேவி அவர்கள் கிருஷ்ணன் என்ற மேனாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியை நேர்காணல் செய்தது. அதை வாசிக்கும் போது கிருஷ்ணன் என்ற அந்த அதிகாரி இட ஒதுக்கீடு விடயத்தில் ஆற்றிய பங்கு பற்றி தெரியவரும். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அவர் இட ஒதுக்கீடு பற்றிய அரசின் நிலைப்படுகளில் நேரடியாகவும் உள்ளார்ந்தும் அரிய பெரிய பணிகளை ஆற்றியவர். படிக்கும் நமது நெஞ்சம் விம்மும்; கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருகும். அவரைப் போலவே, கேசவ் அவர்களும் வாழ்ந்து மறைந்துள்ளார். அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரைப் பற்றி தெரிந்திருக்கலாம் என்ற எண்ணம் எழுகிறது. சர்வபள்ளி அவர்களின் பேரன் என்பது அவரது அறிவெழுச்சியின் ஊற்று எங்கு இருந்தது என்பதை தெரிவிக்கிறது. Kesav Desiraju has truly carried the rich legacy of our formerly President Dr Radhakrishnan. An excellent memoir / obituary for the departed scholar. Well done, Guha!

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஏறுகோள்தவில் வித்வான்சார்லி சாப்ளின் பேட்டிபுதிய தொழில்கள்காங்கிரஸின் பொருளாதார மாடல்கோணங்கிபிரசாந்த சந்திர மஹலாநோபிஸ்நிதித் துறைநிகழ்நேரப் பதிவுகள்வருவாய்ப் பற்றாக்குறைஅண்ணா சமஸ்வடகிழக்குஅருவிசமமற்ற பிரதிநிதித்துவம்மொபைல் செயலிகள்வே.வசந்தி தேவி கட்டுரைஒவைஸிட்விட்டர் சிஇஓ பரக் அகர்வால்நிறுவனங்கள் மீது தாக்குதல்கடவுள் ஏன் சைவரானார்?கிளிநொச்சிசிறுபான்மைச் சமூகம்பிராந்திய சமத்துவம்முத்தலாக் முதல் ஹிஜாப் வரைஉழவர்களின் தோழர்அக்னிபாத்கலை ஒரு நல்ல தப்பித்தல்: சாரு பேட்டிஅஸ்ஸாம்ஸ்வாந்தே பேபுஆன்லைன் ரம்மி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!