கட்டுரை, ஏன் எதற்கு எப்படி? 5 நிமிட வாசிப்பு

அணைப் பாதுகாப்பு மசோதா ஏன் எதிர்க்கப்படுகிறது?

டி.வி.பரத்வாஜ்
08 Dec 2021, 5:00 am
1

இந்திய அரசு கொண்டுவர முற்படும் அணைப் பாதுகாப்புச் சட்டத்தைத் தமிழ்நாட்டை ஆளும் திமுக கடுமையாக எதிர்க்கிறது. முதல்வர் ஸ்டாலின் கூட்டாட்சிக்கு எதிரான முன்னெடுப்பு என்று இதுகுறித்துப் பேசியிருக்கிறார். உள்ளபடி அணைப் பாதுகாப்பு மசோதா என்றால் என்ன? ஏன் அது கொண்டுவரப்படுகிறது? எதற்காக எதிர்க்கப்படுகிறது?

அணைப் பாதுகாப்பு மசோதாவின் நோக்கம் என்ன?

நாடு முழுவதிலும் இருக்கும் அணைகளின் பாதுகாப்புக்கு ஒரே மாதிரியான வழிமுறைகளை வகுக்கும் நோக்கத்தோடு கொண்டுவரப்படுகிறது இந்த மசோதா. மத்திய நிலையிலும் மாநிலங்களிலும் அணைப் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க இது வழிவகுக்கிறது. இந்த அமைப்புக்கான தலைமையகம் டில்லியில் இருக்கும். அணையை நிர்வகிக்கும் மாநிலமே அணையின் பாதுகாப்புக்குப் பொறுப்பு. அணைப் பாதுகாப்புக்கு தேசிய குழு, தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையம் என்று இரண்டு அமைப்புகள் உருவாக்கப்படும். முதலாவது ஆலோசனை அமைப்பு. இரண்டாவது ஆலோசனைகளைச் செயல்படுத்தும் அதிகாரமுள்ள அமைப்பு. ஆணையத்துக்கு ஒன்றிய அரசின் சார்பில் 10 பேர் நியமிக்கப்படுவர். மாநில அரசுகள் சுழற்சி முறையில் 7 பேரை நியமிக்கலாம். மூன்று நிபுணர்களும் இதில் இடம்பெறுவர்.

ஒரு மாநிலத்துக்குச் சொந்தமான அணை மற்றொரு மாநிலத்திலிருந்தால், மாநில அணைப் பாதுகாப்பு அமைப்பு செய்ய வேண்டிய பணிகளை தேசிய ஆணையம் செய்யும். அணைக்கு வரும் நீரின் வரத்து, அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு ஆகிய தகவல்கள் பதிவுசெய்யப்பட்டு வெளிப்படையாக அனைவரும் அறியும் வண்ணம் தெரிவிக்கப்பட வேண்டும். ஒவ்வோர் அணைக்கும் ஏற்படக்கூடிய அபாயங்களைப் பற்றிய கணிப்புகள், நெருக்கடி காலங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய அறிக்கைகளை உரிய அமைப்புகள் ஐந்தாண்டுகளுக்குள் தயாரித்தாக வேண்டும். அணையின் பாதுகாப்பு குறித்த மதிப்பீடுகளை சுய அதிகாரம் படைத்த நிபுணர்கள் குழு தயாரிக்க வேண்டும். புதிய அணைகளுக்கு, அவை கட்டப்படுவதற்கு முன்னதாகவே இத்தகைய அறிக்கைகள் இனி தயார் செய்யப்பட வேண்டும்.

பாஜகவின் புதிய செயல்திட்டமா இது?

அப்படிச் சொல்வதற்கு இல்லை. அணைகளைப் பாதுகாத்திட ஒரு சட்டம் 2010-ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலேயே திட்டமிடப்பட்டது என்பதை நாம் நினைவுகூர வேண்டும். அணைப் பாதுகாப்பு தொடர்பாக மத்திய நீர் வள ஆணையம் மாநில அரசுகளுக்கு அவ்வப்போது ஆலோசனைகளை வழங்கினாலும் நிர்வகிக்க பொதுவான மத்திய சட்டம் ஏதுமில்லை. சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு நிபுணர் குழு ஒன்று 1986 ஜூலையில் பரிந்துரைத்தது. எனவே இது பல ஆண்டுகளாகவே பேசப்பட்ட விஷயம். அரசமைப்புச் சட்டம், பிரிவு 252-ன்படி அணைப் பாதுகாப்புக்காக ஒன்றிய அரசு சட்டமியற்ற வேண்டும் என்று ஆந்திரம், வங்கம் இரு மாநிலங்களும் சட்டப்பேரவையில்  2007-ல் தீர்மானமே நிறைவேற்றின. 2010 முதல் வெவ்வேறு வடிவங்களில் இது மசோதாவாகவே உலா வந்துகொண்டிருந்தது.

இப்போதும்கூட மாநிலங்களின் உரிமைகளை இச்சட்டம் பறிப்பதான குரல்கள் எழுப்பப்படுவதில் ஒருபுறம் நியாயம் இருந்தாலும், மறுபுறம் வங்கம், ஆந்திரம் ஆகிய மாநில அரசுகள் ஒன்றிய அரசுக்கு அளிக்கும் நெருக்குதலும் இதற்கு ஒரு காரணம் ஆகும். காவிரி, முல்லைப்பெரியாறு நதிகளில் மட்டுமல்ல; கிருஷ்ணா, கோதாவரி, கங்கை, பிரம்மபுத்திரா என்று பல நதிகள் தொடர்பாக பல மாநிலங்களுக்கிடையே கடுமையான கருத்துவேற்றுமைகள் உள்ளன. மாநில முதல்வர்கள் சந்தித்துப் பேசி சுமுக முடிவு எட்டப்படுவது என்பது அரிதாக இருக்கிறது. இந்தப் பின்னணியோடும் இணைத்தே இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

இப்போது இதற்கு என்ன அவசியம்?

உலகிலேயே அணைகளின் எண்ணிக்கை அதிகமுள்ள நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்திலிருக்கிறது. 5,745 பெரிய அணைகள் இந்தியாவில் உள்ளன. இவற்றில் 67 அணைகள் இருபதாவது நூற்றாண்டுக்கும் முன்னால் கட்டப்பட்டவை. 1,039 அணைகள் இருபதாவது நூற்றாண்டின் முதல் எழுபது ஆண்டுகளில் கட்டப்பட்டவை. இந்த அணைகளுக்கும் மதகுகளுக்கும் வயதாகிவிட்டபடியால் இவற்றைக் கண்காணிப்பதும் பராமரிப்பதும் மிக மிக அவசியம். 1979-க்குப் பிறகு அணைகளில் சிறியதும் பெரியதுமாக 42 உடைப்புகள் ஏற்பட்டுள்ளன. 2021 நவம்பரில் கடப்பா மாவட்டத்தில் அன்னமய்யா அணையில் ஏற்பட்ட உடைப்பால் இருபது பேர் உயிரிழந்தனர். வெள்ளம் பாய்ந்து ஏராளமான விளைநிலங்களும் வீடுகளும் பாதிக்கப்பட்டன. ஆக, அணைப் பாதுகாப்பு முக்கியம் என்பதில் சந்தேகமே இல்லை.

எதிர்ப்பை எப்படிப் பார்ப்பது?

நதி நீர் விவகாரம் மாநிலங்களின் அதிகாரப் பட்டியலில் உள்ளது, அது தொடர்பாக ஒன்றிய அரசு சட்டமியற்றுவது மாநிலங்களின் உரிமைகளில் தலையிடுவது என்று கூறியிருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இதே கருத்தையே அதிமுக முதல்வர் ஜெயலலிதாவும் கொண்டிருந்தார். ஆக, இதைத் தமிழ்நாட்டின் நிலைப்பாடாகவும் நாம் பார்க்கலாம்.

தமிழகம் மட்டும் அல்லாது, கர்நாடகம், கேரளம், ஒடிஷா ஆகிய மாநிலங்களும், ‘மாநிலங்களுக்குள்ள இறையாண்மையில் குறுக்கிடும் வகையில் ஒன்றிய அரசு இப்படியான சட்டம் கொண்டுவரக் கூடாது!’ என்று கூறிவருகின்றன. தண்ணீர் என்பது மாநிலங்களின் அதிகாரப் பட்டியலில் இருக்கும்போது அணை பாதுகாப்பு மசோதாவை இயற்றும் அதிகாரம் ஒன்றிய அரசுக்குக் கிடையாது என்று அரசமைப்புச் சட்ட நிபுணர்கள் வாதிடுகின்றனர். அணையின் பாதுகாப்புக்கு அந்தந்த மாநிலங்கள்தான் பொறுப்பு என்பதால், அணைக்கு ஏதேனும் நேர்ந்தால், இழப்பீடும் மாநிலங்கள்தான் தர வேண்டும் என்பதைச் சொல்லாமல் சொல்கிறதா ஒன்றிய அரசு என்ற கேள்வி மாநில அரசுகளுக்கு இருக்கிறது. முல்லைப் பெரியாறுபோல ஏற்கெனவே தம் வசம் உள்ள அதிகாரம் பறிபோய்விடுமோ என்ற எண்ணமும் சில மாநிலங்களுக்கு உள்ளது. மாநிலத்துக்கு 7 பிரதிநிதிகள்தான், ஒன்றிய அரசுக்கோ 10 பிரதிநிதிகள் என்ற ஏற்பாட்டில் தேசிய கட்சிகள் ஆளும் மாநிலங்களின் கை ஓங்குமோ என்ற கவலை இருக்கிறது. இவை எல்லாம் புறக்கணிக்கக் கூடியவை இல்லை.

எல்லா நதிகளும் அதே மாநிலத்தில் தொடங்கி, அதே மாநிலத்தில் முடிந்தால் பிரச்சினையே இல்லை. இந்தியச் சூழல் அப்படி இல்லை. அதேசமயம், தேசங்கள் அளவில் நீளும் நதிகளும், எதிரும் புதிருமான நாடுகள் பகிர்ந்துகொள்ளும் நதிநீர்ப் பங்கீடும் இருக்கிறது என்பதை நாம் நினைவுகூர வேண்டும். கூட்டாட்சித் தத்துவப்படி தமிழ்நாட்டின் இன்றைய நிலைப்பாடு மிக முக்கியமானது. மாநிலங்கள் அதிகாரத்தில் இருக்கும் ஒரு விஷயத்தை ஏன் மாநிலங்களைக் கலந்தாசிக்காமல் ஒன்றிய அரசு எடுக்க வேண்டும்; ஏன் எல்லோரும் கலந்து பேசக் கூடாது என்கிற கோணத்திலும் இதை அணுகலாம்.

என்னவாகும்?

திமுக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்க்கும் இது, 2019 ஆகஸ்ட்டில் மக்களவையின் ஒப்புதல் பெற்றது. இப்போது 2021, டிசம்பர் 2 அன்று மாநிலங்களவையில் நான்கு மணி நேர விவாதத்துக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. விவாதம் தேசிய அளவில் வலுவடைந்தால் இது திரும்பப்பெறப்படலாம். ஆனால், அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே தோன்றுகிறது!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
டி.வி.பரத்வாஜ்

டி.வி.பரத்வாஜ், சுயாதீன பத்திரிகையாளர். வட இந்தியாவை மையக் களமாகக் கொண்டு எழுதுபவர்.1

பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   2 years ago

நடுவண் அரசின் நடுநிலை என்பது எப்பொழுதுமே சந்தேகத்துக்குரியது. அதனால் இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புகள் அதிகம்.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

அருஞ்சொல் எல்.ஐ.சி.மாதாந்திர அறிக்கைசூரத் நகர்பெருந்தன்மைஷி ஜிங் பிங்ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்ஜீவானந்தம் ஜெயமோகன்பூர்வ பௌத்தமும் புரட்சி பௌத்தமும்ஆண்-பெண் உறவுசாவர்க்கர்14 பத்திரிகையாளர்கள்ஓய்வுபெற்ற டிஜிபிகள்நர்சரி முனைஐபிசி 124 ஏகலைஞர் தெற்கிலிருந்து ஒரு சூரியன்வெறுப்பரசியல்நவீன இந்திய சிற்பிகள்ரத யாத்திரைதமிழ்நாடு பட்ஜெட்முற்போக்கானது: உண்மையா?மோசமான மேலாளர்தூய்மையான நகரம்மேற்கத்திய மருந்துகள்தேசிய ஊடகங்கள்அனைத்துமே கறுப்பு அல்லது வெள்ளை!காந்தியின் ஹிந்த் சுயராஜ் – சில மூலக்கூறுகள்அருஞ்சொல் தலையங்கம் சென்னை புத்தகக்காட்சிமுதியவர்கள்இந்தி அரசியலின் உண்மையான பின்னணிசமூகப் பொருளாதாரம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!