கோணங்கள், ஏன் எதற்கு எப்படி? 4 நிமிட வாசிப்பு

காங்கிரஸில் ஏன் மேவானி சேரவில்லை: கட்சித்தாவல் தடைச் சட்டம் அறிவோம்!

டி.வி.பரத்வாஜ்
05 Oct 2021, 5:00 am
0

காங்கிரஸ் கட்சிக்குப் புதிய பலம் சேர்க்கும் நோக்கில், கட்சிக்கு வெளியிலிருந்து செயல்பாட்டாளர்களை உள்ளே கொண்டுவரும் பணியைத் தொடங்கியிருக்கிறார் ராகுல் காந்தி. சென்ற வாரத்தில் நாடு முழுக்க அறிமுகமான இரு முகங்கள் இப்படி காங்கிரஸில் இணைந்தனர். ஒருவர் கன்னையா குமார்; அவர் கட்சியில் முழுமையாக இணைந்தார். மற்றொருவர் மேவானி; அவர் உணர்வுபூர்வமாக மட்டும் இணைந்திருப்பதாகக் கூறினார். மேவானி இப்படி அறிவித்ததற்குக் காரணம் கட்சித் தாவல் தடைச் சட்டம். சுயேச்சையாக நின்று தேர்தலில் வென்று, குஜராத் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார் மேவானி. காங்கிரஸில் சேர்ந்தால், அவருடைய பதவி பறிபோகும் அபாயம் இருக்கிறது. ஆக, தேர்தல் வரை சுயேச்சையாக இருந்துவிட்டு, தேர்தல் சமயத்தில் காங்கிரஸில் இணைந்து அக்கட்சி சார்பில் வரும் தேர்தலில் அவர் போட்டியிடுவார் என்று தெரிகிறது. அது போகட்டும்! ஒருவர் தன்னுடைய விருப்பப்படி அரசியல் கட்சியில் சேரும் வாய்ப்பு மறுக்கப்படும் என்றால், அப்படி என்ன சக்தி கட்சித்தாவல் தடைச் சட்டத்துக்கு இருக்கிறது? ஏன் அது கொண்டுவரப்பட்டது? அதன் நல்ல, மோசமான விளைவுகள் என்ன? இங்கே பார்ப்போம்!

ஏன் இந்தச் சட்டம்?

பதவிக்காகவும் பண ஆதாயத்துக்காகவும் கட்சி மாறுவது என்பது பெரிய வியாதியாகவே ஒருகாலத்தில் இந்தியாவில் இருந்தது; குறிப்பாக, வட இந்தியாவில்!  ‘ஆயா ராம் - கயா ராம்’ என்ற சொலவடையே இதனால் ஏற்பட்டது. தமிழ்நாட்டிலும்கூட ராஜாஜி காலத்திலிருந்தே இந்தக் கதை உண்டு. கட்சி மாறுவதற்குப் பெயர் பெற்ற இருவர் - கே.எம். சுப்பிரமணியம், சி.வி.வேலப்பன் - இருந்தார்கள். ஒரே நாளில் காலையில் புதிய கட்சி, மாலையில் மீண்டும் தாய்க் கட்சி என்று திரும்பிய வேடிக்கைகள் நடந்திருக்கின்றன. பல மாநிலங்களில், பல அரசுகள் இதனால் நிலைக்குலைவுக்கு ஆளாகியிருக்கின்றன. எப்போது வேண்டுமானாலும், ஆட்சி கவிழ்க்கப்படலாம் என்ற சூழல் இருந்திருக்கிறது. இதைத் தடுக்க வேண்டும் என்ற குரல் பெரிதாக எழுந்த சூழலில்தான், நெடிய விவாதத்துக்குப் பிறகு, அரசமைப்புச் சட்டத்தின் பத்தாவது பிரிவில், கட்சித்தாவல் தடைச் சட்டம் 1985-ல் ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டது.

எப்போதெல்லாம் உறுப்பினர் பதவியிழப்பார்?

1. ஒரு அரசியல் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்று, அந்தக் கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து அவர் விலகினாலோ, சட்டப்பேரவையில் அல்லது மக்களவையில் கட்சியின் கொறடாவை (கட்டளையை) மீறி வாக்களித்தாலோ அல்லது வாக்களிக்காமல் இருந்தாலோ பதவியிழக்க நேரும்.

2. பேரவை அல்லது மக்களவை உறுப்பினர் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்ற பிறகு, இன்னோர் அரசியல் கட்சியில் சேர்ந்தால், அவர் தனது பதவியை இழக்க நேரும். 

3. நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படுபவர்கள் ஆறு மாதங்களுக்குள் அவர்கள் விரும்பும் ஒரு கட்சியில் சேர்ந்துகொள்ளலாம். அதற்கு மேல், ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்தால், அவர் ஆதாயத்துக்காகக் காத்திருந்து கட்சியில் சேருவதாகக் கருதப்படுகிறது. ஆகையால், அவரும் பதவியை இழக்க நேரிடும்.

தனிநபருக்கு சரி, அணியாகச் சென்றால்?

ஒரு கட்சியானது அது அவையில் பெற்றிருக்கக் கூடிய எண்ணிக்கையில், மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கைக்குக் குறையாத உறுப்பினர்கள் தனிப் பிரிவாகச் சேர்ந்து கட்சியிலிருந்து விலகுவதாக முடிவெடுத்தால், அவர்கள் பதவி நீடிக்கும்; இல்லையெனில், அணியாகப் பிரிந்து சென்றாலும், அவர்களும் பதவியை இழக்க வேண்டியதுதான்.

பதவி இழப்பை யார் தீர்மானிப்பது?    

சபாநாயகர்களுக்கு அந்த அதிகாரத்தைத் தருகிறது சட்டம். பேரவைத் தலைவர் அல்லது மக்களவைத் தலைவர் இந்த முடிவை எடுப்பார். ஆனால், எவ்வளவு நாட்களுக்குள் தனது முடிவை அவர் அறிவிக்க வேண்டும் என்று சட்டம் கூறவில்லை. ஆகையால், ஆளும் கட்சிக்கு ஆதரவாகவே இந்த விவகாரங்களில் சபாநாயகர்கள் பெரும்பாலும் செயல்படுகிறார்கள்; எதிர்க்கட்சிக்கு ஆளுங்கட்சி உறுப்பினர் தாவிவிட்டால் விரைந்தும், ஆளுங்கட்சிக்கு எதிர்க்கட்சிக்காரர் வந்துவிட்டால் தாமதித்தும் முடிவெடுக்கின்றனர். இதற்கு அவர்கள் கூச்சப்படுவதே இல்லை. 

நல்ல விளைவும், தீய விளைவும் என்ன?

உறுப்பினர்கள் தங்கள் சுயலாபத்துக்காக இஷ்டப்படி கட்சி மாறுவதையும், கட்சித் தலைமையை மிரட்டி தங்கள் கைக்குள் வைத்துக்கொள்வதையும் இச்சட்டம் தடுக்கிறது; நீடித்த ஒரு ஆட்சி அமைய வழிவகுக்கிறது. இது நல்ல அம்சம். எதிர் விளைவாகக் கட்சியும், கட்சித் தலைமையும் சர்வாதிகாரம் மிக்கவர்களாக ஆகிவிடுகிறார்கள். தன்னுடைய கட்சியோ, தலைவரோ தவறான முடிவை எடுத்தால்கூட அதைத் தட்டிக் கேட்டு, கட்சியிலிருந்து வெளியே வர முடியாத நிலைக்கு உறுப்பினர்கள் தள்ளப்படுகிறார்கள். இது தீய விளைவு.

என்ன தீர்வு?

கால மாற்றங்களுக்கு ஏற்ப இந்தச் சட்டத்திலும் சீர்திருத்தங்கள் வேண்டும். அனைத்துக் கட்சிகளுடனும் விவாதித்து, இச்சட்டத்தில் உள்ள குறைகள் போக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு எடுக்க வேண்டும். அரசியலர்கள் சட்டத்தை முன்வைத்து சூதாடாமல், தார்மிகரீதியாகச் செயல்பட வேண்டும்.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
டி.வி.பரத்வாஜ்

டி.வி.பரத்வாஜ், சுயாதீன பத்திரிகையாளர். வட இந்தியாவை மையக் களமாகக் கொண்டு எழுதுபவர்.


1






அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

குறியீடுகூத்துப்பட்டறைஅண்ணாஆஃப்கன் ஊடகம்பொடாசமூக உறவுமாநிலப் பெயர்அரசியல் பிரதிநிதித்துவம்வென்றவர்கள் தோற்கக்கூடும்கேஜிஎஃப் 2மேட்டிமைத்தனம்இந்திய அரசுநாடாளுமன்றக் கட்டிடம்கோதுமைஇந்தியா டுடே கருத்தரங்கம்ரிது மேனன்பருவ இதழ்கள்வாக்குப்பதிவுகொலையில் பிறந்த கடவுள்கள்சிங்களர்கள்பீட்டர் அல்ஃபோன்ஸ் சமஸ்இதழியலாளர்மாய-யதார்த்தம்ஒரு பயணம்மதுகர் தத்தாத்ரேய தேவரஸ்முகமதி நபிபகுஜன்மண்டல் ஆணையம்பொருளாதார மந்தநிலைஅறிவு மரபு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!