கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு

தெற்கு மேலே: தேவை புதிய கற்பனை

யோகேந்திர யாதவ்
22 Sep 2022, 4:59 am
0

இந்தியா தொடர்பாக ஒரு புதிய கற்பனைக்கு வழிவகுத்திருக்கிறது ராகுல் காந்தி பங்கெடுக்கும் ‘பாரத ஒற்றுமை யாத்திரை’. (பாஜகவின்) பெரும்பான்மையினவாதத்தை எதிர்த்து வெல்ல வேண்டும் என்றால், திராவிட அரசியலின் மூன்று சித்தாந்த அடிப்படைகளான பிராந்தியவியம், பகுத்தறிவியம், சமூக நீதி ஆகியவற்றை நோக்கிப் புதிய பார்வையை நாம் செலுத்த வேண்டும். 

உலகில் எங்காவது தெற்குப் பகுதி மேலே வரும்படியான வரைபடத்தைப் பார்த்திருக்கிறீர்களா? தெற்கு மேலே இருக்கும்படியான உலக வரைபடம், உங்களுடைய உலகம் தொடர்பான கண்ணோட்டத்தை அப்படியே தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிடும்! கீழே தெரிந்த ஆஸ்திரேலியா மேலேயும், ஆப்பிரிக்கக் கண்டம் நடுவிலும் லத்தீன் அமெரிக்க நாடுகள் தலைப்பகுதியிலும் தெரியவரும்.

உலகின் தெற்கை மேல் நிறுத்தி, ஐரோப்பாவையும் வட அமெரிக்காவையும் அவற்றுக்கு உரிய இடத்தில் கொண்டுபோய் பொருத்திவிடும். ஏற்கெனவே உங்களுக்குத் தெரிந்த ஓர் உண்மையை இப்போது உணர்வீர்கள்: உலகம் உருண்டையானது, அதைப் பார்க்க, சரியான கோணம் என்று எதுவும் இதுவரை அறியப்படவில்லை. வடக்கில் உள்ள நாடுகள் வரைபடத்தில் மேலே இருக்கும்படியாக நம்முடைய மனங்களில் பதிந்துவிட்ட காட்சிகள், நம்மை ஆண்ட காலனிய சக்திகள் நமக்குள் ஆழப்பதித்துவிட்ட சித்திரங்களாகும். 

வடக்கா, தெற்கா?

இந்தியாவுக்குமே நாம் ஏன் தெற்கை மேலே சித்தரிக்கும் வரைபடத்தை வைத்துக்கொள்ளக் கூடாது? பாரத ஒற்றுமை யாத்திரையின் முதல் நாளில் என்னை நானே கேட்டுக்கொண்ட கேள்வி இது. அன்றைக்கு நான் கன்னியாகுமரியில் இருந்தேன். குமரிமுனை என்பது இந்திய ‘பெருநிலப்பகுதியின்’ தெற்கில் உள்ள கடைக்கோடி நிலம், இந்தியாவுக்கே கடைசி தென்பகுதி அல்ல – காரணம் நிகோபார் தீவுகள் அதற்கும் தெற்கில் உள்ளன. இது கடல்களின் திரிவேணி சங்கமம். வங்கக் கடல், அரபிக் கடல், இந்தியப் பெருங்கடல்கள் ஒன்றுகூடுமிடம். விவேகானந்தரின் நினைவுச் சின்னமான தவப் பாறையும், ஓங்கி உயர்ந்து எழுந்துள்ள திருவள்ளுவர் சிலையும் என் பின்னாலிருக்க, அங்கிருந்து இந்த யாத்திரை இறுதியாகப் போய்ச் சேரவிருக்கும் காஷ்மீர திசையைப் பார்த்து ஒன்றை உணர்ந்தேன்: இந்தியாவின் தொடக்கப் புள்ளி இதுதான். கன்னியாகுமரியிலிருந்து இந்த யாத்திரையைத் தொடங்கியது இந்தியாவைப் பற்றிய புதிய கற்பனைக்கு வித்திட்டிருக்கிறது.

பேராசிரியர் ஜி.என்.தேவி இந்தக் கற்பனைக்கொரு பெயரைச் சூட்டுகிறார். ஆம், ‘தட்சிணாயனம்’ என்பது அப்பெயர். வேறு பல எழுத்தாளர்களுடன் இணைந்து 2016இல் அவர் தொடங்கிய இயக்கம் அது. இந்த யாத்திரையின் தொடக்க விழாவுக்கு வந்து, எங்களுடன் காலைச் சிற்றுண்டி அருந்த அவரும் சேர்ந்துகொண்டது எங்களுடைய நல்லூழ்தான். இட்லி-வடை-சாம்பாருடன் எனக்கு மிகவும் பிடித்த தென்னிந்திய ஃபில்டர் காபியும் பரிமாறப்பட்டது. ‘தட்சிணாயனம்’ தொடர்பான நிகழ்வையும் அதன் முக்கியத்துவத்தையும் பேராசிரியர் தேவி எங்களுக்கு விளக்கினார்.

தட்சிணாயனம்

கர்நாடகத்தில் பேராசிரியர் கால்புர்கி, வலதுசாரி சக்திகளால் கொலைப்பட்ட பிறகு கால்புர்கியின் துணைவியாருடன் சேர்ந்து வசிப்பதற்காக குஜராத்தின் வடோதரா நகரிலிருந்து கர்நாடகத்தின் தார்வாட் நகருக்குக் குடிபெயர்ந்தனர் தேவியும் அவருடைய மனைவி சுரேகாவும். இதையே அவர் ‘தட்சிணாயனம்’ என்று குறிப்பிடுகிறார். தட்சிணாயனம் என்கிற வார்த்தைக்கு ஏற்கெனவே இருக்கும் பொருளையும் (தெற்கு நோக்கிய நகர்வு) இணைத்து அதற்கு இரட்டை விளக்கம் தருகிறார் தேவி. தட்சிணாயனத்தில் தென் பகுதிக்குத்தான் முக்கியத்துவம். அடுத்தது நாள் பொழுதில் தட்சிணாயனத்தின்போது பகல் வேளையில் நேரம் குறைவாகவும், ‘இரவு’ நீண்டதாகவும் இருக்கும். இதை அவர் இன்றைய அரசியல் சூழலுக்கு உருவகப்படுத்துகிறார்.

இப்படி ‘பாரத ஒற்றுமை யாத்திரை’ இந்தியாவுக்கே (அரசியல்) தட்சிணாயன காலமாகத் திகழ்கிறது. இரவுகள் நெடியவை - பகல்கள் குறுகியவை. முன்னேறுவதற்கான வழி தென்னிந்தியா காட்டுகிறது. தெற்கை மையமாக வைத்து நாம் இனிச் செயல்பட வேண்டும். இந்தியக் குடியரசுக்கே மிகப் பெரிய சவாலும் ஆபத்தும் நேர்ந்திருக்கும் வேளையில், தென்னிந்தியாதான் நம்பிக்கையையும் உற்ற சிந்தனை வளங்களையும் அளிக்கிறது.

தென்னகப் பாடங்களில் என்ன சிறப்பு?

ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கமும் அதன் பரிவாரங்களும் நிகழ்த்திவரும் கலாச்சாரத் தாக்குதல்களுக்கு அதிகம் ஆட்படாமல் எதிர்த்து நிற்பதால் மட்டும் தென்னகம் சிறப்பான பகுதி அல்ல; கர்நாடகத்தில் 1991இல் சாதித்த பாஜக அரசின் ஆட்சியமைப்பு, தெலங்கானாவில் சமீபத்திய தேர்தல் வெற்றிகள், கேரளத்தில் ஆழ்ந்த ஆர்எஸ்எஸ் வேர்கள் என்று இருந்தாலும் இந்தியாவின் வடக்கிலும் மேற்கிலும் ஏற்படுத்த முடிந்த மேலாதிக்கத்தைத் தென்னிந்தியாவில் பாஜகவால் புகுத்த முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம், கேரளத்திலும் தமிழகத்திலும் நிலவும் அரசியல் கட்சிகளின் கட்டமைப்புதான்!

இந்தச் சிறப்புத்தன்மை - அரசுகளின் நிர்வாகத் திறமையுடன் முடிந்துவிடவில்லை. விந்திய மலைக்கு அப்பாலிருக்கும் வட மாநிலங்களைவிட தென்னிந்தியாவில், அரசுகளாகட்டும் உணவகங்களாகட்டும் ஓரளவுக்கு மேம்பட்டதாகவே இருப்பதைப் பயணிக்கும் எவருமே உணர்ந்துவிடலாம். ஆர்.எஸ்.நீலகண்டன் எழுதியிருக்கும் ‘தெற்கு எதிர் வடக்கு: இந்தியாவின் மாபெரும் பிளவு’ (South vs Norht: India’s Great Divide by Nilakantan R.S.) என்ற நூல் இவ்விரு நிலப்பரப்புகளின் வேறுபாட்டை மிகவும் அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கிறது. இந்திய மாநிலங்கள் தொடர்பான பொருளாதார, கல்வி, சுகாதாரத் தரவுகளை மேலோட்டமாகப் பார்த்தாலும்கூட - தென்னிந்தியக் குழந்தைகள் வட இந்தியக் குழந்தைகளைவிட சுகாதாரத்திலும் செல்வ வளத்திலும் வலுவாக இருப்பது புரியும்.

வட இந்தியக் குழந்தைகளைவிட தென்னிந்தியக் குழந்தைகளின் வாழ்க்கை வளமாகவும் வலுவாகவும் இருக்கின்றன. எழுத்தறிவைப் பெறுவதில் கேரளம் ஒரு முன்மாதிரி என்றால், இலக்கிய வளத்தில் கர்நாடகம் முன்னிலை வகிக்கிறது. நல்வாழ்வுத் திட்டங்களை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதைத் தமிழ்நாடு கற்றுத்தருகிறது. ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படாத இயற்கை வேளாண்மைச் சாகுபடியில் ஆந்திரம் முன்னோடியாகத் திகழ்கிறது. அரசு நிர்வாகத்தை எப்படி நடத்துவது என்பதில் பிற மாநிலங்கள் தென்னிந்திய மாநிலங்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.

இந்தியாவுக்கான திராவிடத் தருணம்

தென்னிந்தியாவின் நிர்வாக வெற்றிகள் பலவாக இருந்தும், பாரத ஒற்றுமை யாத்திரையின் முதல் நாளில் இது என்னுடைய சிந்தனையில் முதலிடம் பெறவில்லை. என்னுடைய ‘தட்சிணாயனம்’ என்பது சித்தாந்த இயக்கம் தொடர்பானது. தமிழ்நாட்டில் நின்றிருந்தபோது, திராவிட இயக்கத்தின் எழுச்சியும் வளர்ச்சியும் - அது ஏற்படுத்தி வைத்திருக்கும் நெடிய வலிமையான பாரம்பரியமுமே என் சிந்தனையை ஆக்கிரமித்திருந்தது. இருபதாவது நூற்றாண்டில் திராவிட இயக்கமானது ஒரு பிரச்சினையாகவும், இந்திய தேசியத்துக்கு சவாலாகவும் பார்க்கப்பட்டது.

இன்றைக்கு இந்திய அரசியல் நீரோட்டத்தின் புற வட்டப்பகுதியில் நிலைபெற்றுவிட்ட இந்த இயக்கம்தான், இந்திய தேசியத்துக்குப் புதிய வரையறையை உருவாக்குவதாகவும், இந்தியக் குடியரசை மேலாதிக்கர்களிடமிருந்து மீட்கக்கூடிய சக்தியாகவும் திகழ்கிறது. தேசியர்களின் பெரும்பான்மையினவியத்தின் தாக்குதல்களிலிருந்து இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும் என்றால் திராவிட அரசியலின் முப்பெரும் கொள்கைகளான பிரதேசவியம் (ரீஜனலிசம்), பகுத்தறிவியம், சமூக நீதி ஆகியவற்றைக் கைக்கொண்டாக வேண்டும்.

இந்த மூன்று சித்தாந்தங்களையும் அவற்றின் பழைய வடிவத்துக்கு மாறாகப் புதிய வடிவில் நாம் பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, பிரதேசவியம் என்ற கருத்திலிருந்து தமிழ் ஈழம் அல்லது கலாச்சார மேலாதிக்கத் தன்மையை நீக்கிவிட்டால், பாஜக - ஆர்எஸ்எஸ் முகாம் முன்வைக்கும் ‘ஒரே நாடு – ஒரே கலாச்சாரம்’ என்ற ஒற்றைத்தன்மையுள்ள ஒன்றிய மேலாதிக்கப் போக்குக்கு மாற்றான உண்மையான கூட்டாட்சி ஒன்றியத்தை முன்வைக்கிறது தமிழ் தேசிய சிந்தனை.  மாநிலங்களின் மொழி – சமூக, கலாச்சார தனித்தன்மைகளை அங்கீகரித்து - ஒருங்கிணைத்து வலுவான மாநிலங்களின் கூட்டமைப்பை உருவாக்கும் கற்பனையை இது முன்வைக்கிறது.

அதுபோலவே, சமூக நீதிக் கொள்கையை, பிராமண எதிர்ப்பு அரசியல் என்ற எளிதான வரையறைக்கும் அப்பாற்பட்டதாக வளர்த்தெடுக்க வேண்டும். பிறப்பு என்கிற விபத்தால் சிலருக்குக் கிடைக்கிற சமூக உயர் அந்தஸ்தால் ஏற்படும் அசமத்துவங்களைக் களைய, அதற்கு நேரெதிரான கண்ணாடி பிம்ப நடைமுறையைப் பின்பற்றக் கூடாது. சாதியமைப்பு என்ற கட்டமைப்பையும், பாலினப் பாகுபாடு போன்ற சமூக அசமத்துவங்களையும் களைய வேண்டும் என்ற சிந்தனை மேலும் வலுவூட்டப்பட வேண்டும்.

பகுத்தறிவு என்பது மதங்களுக்கு எதிரான கருத்து என்பதாக மட்டுமல்லாமல், மதம் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் அனைத்து விதமான வறட்டுக் கொள்கைகள், அடக்குமுறை, வன்முறை ஆகியவற்றுக்கு எதிரான கொள்கை வழிப்பட்ட நிலைப்பாடாகவும் தொடர வேண்டும். இதுதான் நமக்கு மிகவும் அவசியம் தேவைப்படும் புதிய மதச்சார்பின்மை கொள்கைக்கான அடிப்படையாக இருக்க முடியும்.

இந்தியாவின் தெற்கை மையப்படுத்தும் வரைபடத்தை நான் தேடிக்கொண்டிருந்தபோது, ‘ஹிமால் சௌத்-ஏசியா’  பத்திரிகை வெளியிட்ட தெற்காசிய நாடுகளின் வரைபடம் காணக் கிடைத்தது. அந்தப் பத்திரிகை இப்போது வெளிவருவது நின்றுவிட்டது. இலங்கையை வரைபடத்தின் உச்சியில் காட்டும் இந்த வரைபடம், தெற்காசியாவின் சரியான இருப்பிடத்தைக் காட்டும் ‘வலப்புற’ வரைபடமாக அழைக்கப்பட்டது.

இந்தியா தொடர்பான கண்ணோட்டத்திலும் நாம் இதைத்தான் செய்ய வேண்டும். இப்போதுள்ள இந்திய வரைபடத்தைச் சற்றே ‘வலப்புறமாக’ (தலைகீழாக) புரட்ட வேண்டும், தென்னிந்திய மாநிலங்கள் மேலே வர வேண்டும். இந்தியாவின் நன்மைக்கான தொலைநோக்கு சிந்தனையாக இதை நாம் கடைப்பிடிக்க வேண்டும். கன்னியாகுமரியில் தொடங்கியுள்ள ‘பாரத ஒற்றுமை யாத்திரை’ அதற்கான தொடக்கத்துக்கு வித்திட்டிருக்கிறது.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
யோகேந்திர யாதவ்

யோகேந்திர யாதவ், சமூக அறிவியலாளர், அரசியல் செயல்பாட்டாளர். ஸ்வராஜ் இந்தியாவின் தேசியத் தலைவர்.


3

2





அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

பீட்டர் அல்ஃபோன்ஸ் அருஞ்சொல் பேட்டிமேனாள் மத்திய நிதி அமைச்சர்சிறைஜெயமோகன் உரையாடு உலகாளு பேட்டிகாஞ்ச ஐலய்யா கட்டுரையூட்யூபர்கள்நளினி சிதம்பரம்திருநெல்வேலிப்ளூ சிட்டிபிராமணர்கள்மீனாட்சியம்மன் கதைலலாய் சிங்அண்ணா சமஸ்சாதிக் கொடுமைகளைத் தடுக்க அமெரிக்கா நடவடிக்கைகிலானிஅருஞ்சொல் ஜாட்நவீன ஓவியம் அறிமுகம்ரஞ்சனா நாச்சியார்கூட்டணி முறிவுஉண்மையைச் சொல்வதற்கான நேரம்கருத்துநிகர கடன் உச்ச வரம்புஹாங்காங் மாடல்ராமராஜ்யம்மொழித் திறன்ஜூலியன் அசாஞ்சேஇரும்புஉடல் மொழிபெரிய சவால்கள்ராகுல் நடைப்பயணம் இதுவரை சாதித்தது என்ன?

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!