கட்டுரை, ஆரோக்கியம், வரும் முன் காக்க 5 நிமிட வாசிப்பு

இதயம் செயல் இழப்பது ஏன்?

கு.கணேசன்
24 Mar 2024, 5:00 am
0

ம்பது வயதான ராதாகிருஷ்ணன் ஒரு தனியார் வங்கியின் சீனியர் மேனேஜர். றெக்கை கட்டாத குறையாக கிளையன்ட், மீட்டிங், டார்கெட் என எப்போதும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருப்பவர். அவருக்குச் சில நாட்களாக இரவில் மட்டும் இருமல் வந்தது; கையிலிருந்த இருமல் மருந்தைக் குடித்துச் சமாளிக்கப் பார்த்தார்; முடியவில்லை.

ஒருநாள் இரவில் படுக்கவிடாமல் இருமல் படுத்தியதால், அருகிலிருந்த மருத்துவமனையில் அவசரப் பிரிவில் சிகிச்சை பெற்றார். அங்கு அவருக்கு இதயத்தில் பிரச்சினை இருக்கலாம் என்ற சந்தேகத்தில், “‘எக்கோ’ எடுக்க வேண்டும்” என்று சொன்னார்கள். அவர் மறுநாள் காலையில் வருவதாகச் சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டார். அலுவலகப் பணிச்சுமை பல ‘மறுநாள்’களைத் தள்ளிப் போட்டது. அவருக்கு வந்த இருமல் அவருடைய இதயம் ஆரோக்கியமாக இல்லை என்பதைச் சுட்டிக் காட்டும் ‘ப்ளூ டிக்’. அதைக் கவனிக்கத் தவறிவிட்டார் ராதாகிருஷ்ணன்.

அலுவலக விஷயமாக ஒருமுறை வெளியூருக்குப் போயிருந்தபோது, அவருக்குத் திடீரென்று தொடர் இருமலும் மூச்சுத்திணறலும் அதிகமாகி அலுவலகத்திலேயே மயங்கிச் சாய்ந்துவிட்டார். உடனிருந்தவர்கள் உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டனர். அங்கே அவருக்கு ‘மாஸ்டர் செக்கப்’ செய்தபோது, அவருடைய இருமலுக்கு இதயப் பிரச்சினைதான் காரணம் என்பது உறுதியானது. ஒரு வார ‘ஐசியூ’ சிகிச்சையில் போன உயிரை மீட்டுக்கொண்டுவந்தார் ராதாகிருஷ்ணன்.

அவர் மட்டுமல்ல, இப்படிப் பலரும் இருமலுக்கும் இதயத்துக்கும் தொடர்பு இருக்காது என்று எண்ணிக்கொள்வதால், பெரும்பாலும் அதை அலட்சியப்படுத்திவிடுகின்றனர். அந்த இருமல் அவர்களின் ‘இதயத்தின் குரல்’ எனத் தெரியவரும்போது, அந்தப் பிரச்சினை பல மடங்கு அதிகரித்துவிடுகிறது. ஏன், உயிருக்கே மோசமாகிவிடுகிறது.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

இதயத்துக்கு வரும் சோதனை

நம் உயிர் தாங்கும் இதயத்துக்குப் பல வழிகளில் சோதனை வருகிறது. முக்கியமானது, மாரடைப்பு. இது குறித்து அநேகருக்கும் தெரியும். அடுத்தது, ஹார்ட் ஃபெயிலியர் (Heart failure). அதாவது, இதயச் செயல் இழப்பு - தோற்கும் இதயம். இதுதான் அவ்வளவாகத் தெரியாத விஷயம், இந்தியாவில் சுமார் ஒரு கோடிப் பேருக்கு இந்தப் பிரச்சினை இருக்கிறது. முன்பெல்லாம் இது 60 வயது மூத்தகுடிகளுக்கே தொல்லை கொடுத்தது; தற்போதுள்ள அழுத்தம் மிகுந்த வாழ்க்கைச் சூழலும், பணிச்சூழலும் இப்போது வாழும் வயதில் உள்ள நடுத்தரமானவர்களுக்கும் இதை அழைத்துவருகின்றன.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

நெஞ்சில் வலி ஏற்படுவது ஏன்?

கு.கணேசன் 26 Nov 2023

இதயம் தோற்பது ஏன்?

‘இதயச் செயலிழப்பு’ என்று பொதுவாகச் சொல்லப்படும் இந்தப் பிரச்சினைக்கு ஓர் உதாரணம் சொன்னால் எளிதாகப் புரியும். புதிதாக ஒரு ஸ்மார்ட் போன் வாங்குகிறோம். ஆரம்பத்தில் நம் விருப்பத்துக்கு அது விறுவிறுப்பாக வேலை செய்யும். அப்போது நாம் விரும்பும் ஏகப்பட்ட ‘ஆப்’களை அதில் டவுண்லோடு செய்துவிடுவோம். சில வருடங்கள் கழிந்த பிறகு அதன் விறுவிறுப்பு, வேகம், செயல்திறன் எல்லாமே குறைந்துவிடும்; அடிக்கடி ‘ஹேங்’ ஆகி நம்மைச் சிரமப்படுத்தும்.

இதுதான் நம் இதயத்திலும் நடக்கிறது. வயதாக ஆக சில நோய்களின் காரணமாக இதயத்தின் தசைகள் வலுவிழந்து போவதால், வழக்கம்போல் இதயம் துடிக்க முடியாமல் திணறும். முக்கியமாக, இதயத்தின் இடதுபக்கக் கீழறை இப்படிச் சிரமப்படுகிறது. அப்போது உடலுக்குத் தேவையான ரத்தத்தை அனுப்ப முடியாமல் அது தோற்றுப்போகிறது. இதைத்தான் ‘தோற்கும் இதயம்’ என்கிறோம். போன தலைமுறை வரை மூத்த வயது முக்கியக் காரணமாக இருந்தது. இப்போது சொல்லப்படுவது நம் வாழ்க்கை முறையில் உட்கார்ந்துள்ளது.

இதயத்தில் ஏற்படும் கொரோனரி ரத்தக்குழாய் அடைப்பு (CAD) – அதுதான் சார் மாரடைப்பு - இந்தப் பிரச்சினைக்கு முதல் தூது விடுகிறது. தண்ணீர் கிடைக்காத நிலம் காய்ந்து, வெடிப்பு விட்டு, தரிசு நிலம் ஆகிறதல்லவா? அதுபோலத்தான், இந்த அடைப்பு வந்தவர்களுக்கு சிகிச்சை கிடைக்காதபோது, போதுமான அளவு ரத்தம் கிடைக்காமல், இதயத் தசைகள் காய்ந்து கடினமாகித் தழும்பாகிவிடுகிறது. இப்படித் தழும்பாகிப்போனத் தசைகளுக்கு ரத்தத்தை உந்தித் தள்ளும் சக்தி குறைந்துவிடுகிறது. அப்போது இதயம் தன் செயல்திறனில் தோற்றுப்போகிறது.

ஏற்கெனவே மாரடைப்பு வந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளாதவர்களுக்கும் மிகைத் தைராய்டு பிரச்சினை உள்ளவர்களுக்கும் இந்த ஆபத்து எண்ணெயில் பற்றிக்கொண்ட நெருப்பாக வந்துசேருகிறது. கட்டுப்பாடில்லாமல் எகிறிக் குதிக்கும் ரத்தக்கொதிப்பும் நீரிழிவும் ‘கூட்டணி’ வைத்துக்கொண்டால், ‘துடிப்புத் தேர்தலில்’ சுயேச்சை இதயம் தோல்வி அடைகிறது. 

அடுத்ததாக, ‘கார்டியோ மயோபதி’ என்று ஓர் இதயத் தாக்குதல் இருக்கிறது. இதனால் ஏற்படும் பிரதான பாதிப்பே இதயச் செயலிழப்புதான். இதில் இதய தசைநார்கள் வீங்கி, பழசாகிப்போன ரப்பர்க் குழாய்போல் இறுகிவிடும். கொடிய வைரஸ் கிருமிகள் இதயத்தில் தொற்றும்போதும் இதே நிலைமை ஏற்படுவதுண்டு. இறுகிப்போன இதயத்துக்கு உந்துவிசை குறைவு என்பதால் இதயம் தோல்வி அடைவதுண்டு.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

இளவயது மாரடைப்பு ஏன்?

கு.கணேசன் 31 Dec 2023

உயிர் காக்கும் எண்கள்!

மாரடைப்பு வந்தவருக்கு முதல் கட்டப் பரிசோதனையாக இசிஜி / டிரெட்மில் இருப்பதைப் போல, இதயச் செயலிழப்பை அறிய ‘எக்கோ’ முக்கியப் பரிசோதனையாக இருக்கிறது. நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம், ரத்தச் சர்க்கரை ஒவ்வொன்றுக்கும் இயல்பான அளவு எண் இருக்கிறதல்லவா? அதைப்போல ‘எக்கோ’வில் ‘உந்தும் அளவு’ (Ejection fraction-EF) என்று ஒன்று இருக்கிறது. இதயத்தின் ஒவ்வொரு துடிப்பின்போதும் எத்தனை சதவீத ரத்தத்தை அது உடலுக்குள் அனுப்புகிறது என்பதை அளக்கும் எண் இது.

ஆரோக்கியமான இதயத்துக்கு இது 50 முதல் 75% ஆக இருக்கும். இது 40 முதல் 49% வரை இருந்தால் இதயம் செயலிழக்கப்போகிறது என்று எச்சரிக்கும் அலாரம். இதற்கும் கீழே என்றால் அது செயலிழந்துவிட்டது எனச் சொல்லும் அபாயம். இந்த இதயத்தால் உடலுக்கும் மூளைக்கும் போதுமான ரத்தத்தை விநியோகிக்க முடியாது. அப்போது இதயம் சீரற்றுத் துடிக்கும் அல்லது துடிப்பைத் திடீரென்று நிறுத்திக்கொள்ளும். சிலருக்கு ஏற்படும் திடீர் மரணத்துக்கு இது ஒரு முக்கியக் காரணம். ஆகவேதான் தோற்கும் இதயத்தை அடையாளம் காண ‘எக்கோ’ எடுப்பது அவசியம்.

அலட்சியம் ஆகாது!

தன்னளவில் செயலிழந்து தோற்கப்போகும் இதயம் ஆரம்பத்திலேயே சில அறிகுறிகளைக் காட்டும். அவற்றை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது என்பதுதான் இங்கே முக்கியம். முதலாவதாக, நாட்பட்டச் சோர்வைச் சொல்லலாம். உடலுக்குத் தேவையான ரத்தம் கிடைக்காததால் உடல் சோர்வடைகிறது.

இரண்டாவதாக, மூச்சுத்திணறல். போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காததால் மூச்சு வாங்குகிறது. ஆரம்பத்தில் மாடிப்படிகளில் ஏறினால் மூச்சு வாங்கும். பிறகு வேகமாக நடந்தாலே மூச்சு வாங்கும். படுத்தால் மூச்சுவிடச் சிரமப்படும்; இரவில் இருமல் வந்து உறக்கத்தில் எழுப்பிவிடும். எழுந்து உட்கார்ந்தால் சிரமம் குறையும். இந்த இருமலின் கதவு நுரையீரலில் இல்லை; இதயத்தில் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள பல நாள் ஆகும்.

கடைசியில், கால் பாதம், முகம் வீங்கும். சிறுநீர் போவது குறையும். இதய நிறுத்தம் தொடங்கும். இந்தப் பிரச்சினைகள் உள்ளவர்கள் கட்டாயம் ‘எக்கோ’ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை இந்தப் பரிசோதனையை மேற்கொள்வது நல்லது. வரப்போகும் விபரீதம் புரியாமல் இதை மேற்கொள்ளத் தவறுபவர்கள்தான் உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் சிக்கிக்கொள்கின்றனர்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

இரவுத் தூக்கம் குறைவது ஏன்?

கு.கணேசன் 10 Dec 2023

என்ன சிகிச்சை உள்ளது?

இதயச் செயலிழப்பைச் சரிப்படுத்த இப்போது நவீன மருந்துகள் நிறைய உள்ளன. இதயத்தின் உந்து சக்தியை அதிகரிக்க ‘ஐசிடி’, ‘எக்மோ’ போன்ற துணைக் கருவிகள் உதவுகின்றன. கொரோனரி அடைப்பை சரிசெய்ய ’ஸ்டென்ட்’ சிகிச்சை/பைபாஸ் சிகிச்சைகளும் உள்ளன. அடிப்படை நோயை ஆரம்பத்திலேயே கவனித்து, தொடர்ச்சியாக மருந்து சாப்பிட்டால், இதயத்தின் தோல்வி சதவீதத்தை வெகுவாகக் குறைத்துவிடலாம்; வெற்றி விகிதத்தை அதிகப்படுத்திவிடலாம்.

இதைத் தடுக்க முடியுமா?

தாராளமாகத் தடுக்க முடியும். அதற்கு நம் வாழ்வியல் முறைகளையும் சரிப்படுத்திக்கொள்ள வேண்டும். உணவில் உப்பைக் குறைத்து ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது முக்கியம். இனிப்பைக் குறைத்து ரத்தச் சர்க்கரை எகிறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மது, புகை என்னும் வில்லன்களைத் துரத்துவது நல்லது. துரிதஉணவையும் கொழுப்புணவையும் குறைத்து உடல் பருமனுக்குக் கடிவாளம் போடவும்; ரத்த கொலஸ்டிராலுக்குச் சரியான எல்லை அமைப்பது நலம். இவை அனைத்தும் இதயத்துக்குப் பலம்.

அடுத்து, நடைப்பயிற்சி, யோகா உள்ளிட்ட உடற்பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நாள் முழுவதும் உற்சாகமாக இருப்பது, உறக்கம் குறைந்த இரவுகளைத் தவிர்ப்பது, போதுமான ஓய்வு எடுத்துக்கொள்வது, அலுவல் அழுத்தம் குறைய தியானம் உள்ளிட்ட மன அமைதி பயிற்சிகளுக்கு இடமளிப்பது, மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை முறைக்கு மாறிக்கொள்வது… இவையெல்லாம் இதயத்தின் உந்து சக்தியை அதிகரிக்கும் எரிபொருள்கள்.

இவற்றை ஏற்றுக்கொள்வதில் நமக்கு உடன்பாடு என்றால், சரியான எரிபொருளுடன் பராமரிக்கப்படும் வாகனங்கள் எத்தனை வருடங்கள் ஆனாலும் வேகம் குறையாமல் ஓடுவதுபோல், வயதாலும் நோயாலும் ஆரோக்கியத்தை இழக்காமல் நமது இதயங்கள் இயல்பாக இயங்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

நடைப் பயிற்சி எனும் அற்புதம்

கு.கணேசன் 13 Feb 2022

‘ஐசிடி’ தெரியுமா?

பார்ப்பதற்கு ஒரு பெரிய கைக்கடிகாரம் போலிருக்கும் இந்த மின்கருவியை (Implantable Cardioverter Defibrillator - ICD) இடது கழுத்துக்குக் கீழே, இதயத்துக்கு அருகே, சருமத்துக்கு அடியில், சிறிய அறுவை சிகிச்சை செய்து பொருத்திக்கொள்ளலாம். இதில் ஒரு பேட்டரி, மின்வயர்கள், மின்சுற்று இருக்கும். மின்வயர்களை இதயத்துக்குள் பொருத்திவிட வேண்டும். இந்தக் கருவி இதயத்தின் செயல்பாட்டை ‘ரோந்து சுற்றி’க் கண்காணிக்கும். இதயத்தின் செயல் குறைவதைத் தன்னுடைய பருந்துக் கண்களால் கண்டறிந்து, சரியான அளவில் ‘ஷாக்’ கொடுத்து, இதயத் துடிப்பைச் சீராக்கி, உயிரைக் காப்பாற்றிவிடும்.

 

‘எக்மோ’ என்னும் செயற்கை இதயம் 

“எக்ஸ்ட்ரா கார்ப்போரியல் மெம்பரேன் ஆக்ஸிஜினேஷன்” (Extra Corporeal Membrane Oxygenation) என்பதன் ஆங்கிலச் சொற்களின் முதல் எழுத்துச் சுருக்கம்தான் ‘எக்மோ’ (ECMO). உடலுக்கு வெளியிலிருந்து வேலை செய்யும் கருவி இது. இதயத்தின் பணியையும் நுரையீரல் பணியையும் ஒரேநேரத்தில் மேற்கொள்ளும் செயற்கை இதயம். இதயத்தின் செயல்பாடு முழுவதுமாகப் பாதிக்கப்பட்டு, ரத்த அழுத்தம் மிகவும் குறைந்து, சிறுநீர் வெளியேறும் அளவும் குறைந்து, மற்ற சிகிச்சைகள் எதுவுமே பலன் தரவில்லை என்றால், அவசரத்துக்கு இந்தக் கருவியைப் பயனாளிக்குப் பொருத்தி உயிரைக் காப்பற்ற முடியும்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

நடைப் பயிற்சி எனும் அற்புதம்
நெஞ்சில் வலி ஏற்படுவது ஏன்?
இளவயது மாரடைப்பு ஏன்?
இரவுத் தூக்கம் குறைவது ஏன்?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கு.கணேசன்

கு.கணேசன், பொது நல மருத்துவர்; மருத்துவத் துறையில் உலகளாவிய அளவில் நடக்கும் மாற்றங்களை ஆழ்ந்து அவதானித்து, எளிய மொழியில் மக்களுக்கு எழுதும் பணியில் ஈடுபட்டிருப்பவர்; ‘சர்க்கரைநோயுடன் வாழ்வது இனிது!’, ‘நலம், நலம் அறிய ஆவல்’, ‘செகண்ட் ஒப்பினீயன்’ உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: gganesan95@gmail.com


5






ராகுல்: கண்ணுக்குப் புலப்படாத நான்காவது குதிரைமத அரசியல்சாலைஆல்பர்ட் ஐன்ஸ்டீன்பி.ஏ.கிருஷ்ணன் சாவர்க்கர்சத்திரியர்இட ஒதுக்கீடுமாரடைப்புச் சிகிச்சைக்குப் பிறகு என்ன செய்வது?பவன் கேராபொருளாதார வளர்ச்சிலட்சியவாதிதிறன் வளர்ப்பு2002: இந்தத் தழும்புகள் மறையவே மறையாதுமாதாந்திர அறிக்கைநாடகக் குழுநூலகம்வெறுப்பைத் தூண்டும் பேச்சு செழிக்கிறதுஅணு ஆயுதங்கள்சவுரவ் கங்குலிஊடக ஆசிரியர்கள்தூக்க மாத்திரைசுதந்திர இந்தியாபெலகாவி பிறகுஇந்திய வேளாண் அறிவியல் துறைமெர்சோ: மறுவிசாரணைஒல்லியாக இருப்பது ஏன்?ஒடிஷாமக்களவைத் தேர்தல் 2024பக்தி இலக்கியம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!