கட்டுரை, அரசியல், சர்வதேசம் 8 நிமிட வாசிப்பு
பாகிஸ்தான் அரசமைப்பு: ஓர் எளிய அறிமுகம்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவியிலிருந்து அகற்றபட்டிருப்பது, வெறும் அரசியல் மாற்ற நடவடிக்கை மட்டும் இல்லை. இந்த விவகாரத்தில் அடுத்தடுத்த நடந்த மாற்றங்கள் பாகிஸ்தான் நீதித் துறை மீது பெரும் மதிப்பையும், பாகிஸ்தான் அரசமைப்பு சார்ந்து அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தையும் உருவாக்கியுள்ளன. பாகிஸ்தானை அறிந்துகொள்வதற்கான சந்தர்ப்பமாகவும் நாம் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
பாகிஸ்தான் அரசமைப்பு எத்தகையது?
பாகிஸ்தானின் அரசமைப்புச் சட்டமும் பெரும்பாலும் பிரிட்டிஷார் கொண்டுவந்த ‘இந்திய அரசமைப்புச் சட்டம் 1935’ என்பதையே அடிப்படையாகக் கொண்டதுதான். பாகிஸ்தானை ‘இஸ்லாமியக் குடியரசு’ என்கிறது அரசமைப்புச் சட்டம். நாட்டின் அதிபர், பிரதமர் ஆகிய பதவிகளுக்கு முஸ்லிம் அல்லாத ஒருவர் நியமிக்கப்படவோ, தேர்ந்தெடுக்கப்படவோ கூடாது என்பது முக்கியமான அம்சங்களில் ஒன்று.
1974இல் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தமானது, அகமதியாக்கள் முஸ்லிம்கள் அல்ல என்று அறிவித்தது. முஸ்லிம் அல்லாதவர்களுக்கு நாடாளுமன்றத்தில் ஆறு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இஸ்லாமிய நாடுகளுடன் பாகிஸ்தானின் உறவை வலுப்படுத்துவது அவசியம் என்று அரசமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது. பாகிஸ்தானின் தண்டனையியல் சட்டத்தில் இஸ்லாமியச் சட்டப்படி திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இஸ்லாமியர் அல்லாதவர்கள் சிறுபான்மையினராகக் கருதப்பட்டு சட்டப்படி பாதுகாக்கப்படவேண்டும் என்கிறது அரசமைப்புச் சட்டம். ஆங்கிலம், உருது அதிகாரப்பூர்வ மொழிகள். (வங்கதேசம் பிரிவதற்கு முன்னால் வங்காளியும் தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது.)
உரிமைகளும் கடமைகளும்
உள்நாட்டு - வெளிநாட்டு ஆபத்துகள் நேரிடும்போது நெருக்கடிநிலையை அறிவிக்க அதிபருக்கு அதிகாரம் இருக்கிறது. உச்ச நீதிமன்றம்தான் எல்லாவித சட்டச் சிக்கல்களையும் தீர்க்க வேண்டிய இறுதி நீதி அமைப்பு. அது சுதந்திரமானது.
நாட்டுக்குள் மக்கள் எங்கு வேண்டுமானாலும் வசிக்கவும் வேலை பார்க்கவும் தொழில் செய்யவும், அவரவர் மதத்தைப் பின்பற்றவும் உயிரையும் உடைமைகளையும் காத்துக்கொள்ளவும் உரிமை படைத்தவர்கள். அடிமைத்தனம் கூடாது. மொழியுரிமை உண்டு. அரசால் குற்றஞ்சாட்டப்படும்போது நியாயமான நீதி விசாரணை பெற குடிமக்களுக்கு உரிமை உண்டு. அரசின் சேவைகளில் பாரபட்சம் இருந்தால் நீதிமன்றங்களை நாடி நியாயம் பெறலாம்.
பாகிஸ்தானில் ராணுவம் மேலாதிக்கம் மிகுந்த அமைப்பு என்பது உண்மைதான். ஆனால், அந்நாட்டு நாடாளுமன்றம், நீதிமன்றம் ஆகியவனவும் முற்றிலுமாக செல்வாக்கு இல்லாதவை கிடையாது. அவற்றுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பதே இப்போது வெளிப்பட்டிருக்கிறது.
பாகிஸ்தானில் இப்போது அமலில் இருப்பது ‘பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு அரசமைப்புச் சட்டம் -1973’ ஆகும். ஜுல்பிகர் அலி புட்டோ பிரதமராக இருந்தபோது எதிர்க்கட்சிகளின் உதவியோடு வடிவமைக்கப்பட்டது இது. சட்ட நிர்வாகம், அரசியல் கலாச்சாரம், அரசியல் நிர்வாக அமைப்பு முறைக்கு வழிகாட்ட அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது.
எப்படி நிர்வகிக்கப்படுகிறது பாகிஸ்தான்?
பாகிஸ்தான் என்பது பஞ்சாப், சிந்து, பலூசிஸ்தான், கைபர் பக்டூன்க்வா ஆகிய நான்கு மாநிலங்களைக் கொண்டது. அரசுக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கும் அதிகாரங்கள் எப்படிப்பட்டவை, நாடாளுமன்றம், நீதித் துறை, நிர்வாகத் துறை, ராணுவம் ஆகியவற்றின் அமைப்பு – அதிகாரம் - பங்களிப்பு ஆகியவை என்ன என்பது அரசமைப்புச் சட்டத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் அதிபர் அதிக அதிகாரங்கள் இல்லாதவர், சம்பிரதாயான தலைவர். நாட்டின் நிர்வாகத்துக்கு பிரதமர் தலைமையிலான தேசிய அமைச்சரவைதான் பொறுப்பு. அதிபரைவிட பிரதமர்தான் அதிகாரம் மிக்கவர். நாட்டின் நீதித் துறை ஆணைகளும் சட்டங்களும் இஸ்லாமியர்களின் புனித மறை நூலான குரான், சுன்னா ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும். நாடாளுமன்றம் இயற்றும் சட்டம் இவ்விரண்டுக்கும் எதிராக அல்லது முரணாக இருந்தால் அது செல்லுபடியாகாது.
அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தலாம். நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்குக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஆதரிக்கும் சட்டத் திருத்தங்கள் செல்லுபடியாகும். ஆனால், அவையும் நடைமுறையில் உள்ள அரசமைப்புச் சட்டத்துக்கோ, குர் ஆனுக்கோ, சுன்னாவுக்கோ விரோதமாக இருத்தல் கூடாது.
அரசமைப்புச் சட்டம் உருவான வரலாறு
பாகிஸ்தான் அரசமைப்புச் சட்டம் 1956, 1962 ஆகிய ஆண்டுகளிலும் இதற்கு முன்பாக இயற்றப்பட்டிருந்தாலும், 1973இல் இயற்றப்பட்ட சட்டமே இப்போது கடைப்பிடிக்கப்படுகிறது. பாகிஸ்தான் அரசமைப்புச் சட்டத்தில் மொத்தம் 26 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமலேயே அமலுக்கு வந்துள்ளன.
ஷரியத் நீதிமன்றம், இஸ்லாமிய சித்தாந்தப்படியான பேரவை ஆகிய இரு அமைப்புகளை அரசமைப்புச் சட்டம் உருவாக்கியிருக்கிறது. இவை சட்டத்தை, இஸ்லாமிய மத அடிப்படையில் விளக்கவும், செயல்படுத்தவும் உதவ ஏற்படுத்தப்பட்டவை.
அரசமைப்புச் சட்டத்தின் ஸ்தம்பிப்பு
1962இல் இயற்றப்பட்ட அரசமைப்புச் சட்டம் 1969இல் ராணுவ ஆட்சி ஏற்பட்டதும் செயல்படாமல் நிறுத்திவைக்கப்பட்டது. பிறகு 1972இல் கிட்டத்தட்ட கைவிடப்பட்டது. 1977இல் மீண்டும் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியபோதும் அரசமைப்புச் சட்டத்தின் செயல்பாடு நிறுத்தப்பட்டது. 1985இல் அரசமைப்புச் சட்டம் மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது.
1985இல் செய்த ஒரு சீர்திருத்தம் நாட்டின் உச்சபட்ச அதிகாரங்களை நாடாளுமன்றம், பிரதமரிடமிருந்து அதிபருக்கு மாற்றியது. 2004இல் செய்யப்பட்ட திருத்தம் மீண்டும் பிரதமருக்கும் நாடாளுமன்றத்துக்கும் அதிகாரங்களை வழங்கியது. 2010இல் செய்யப்பட்ட திருத்தம் அதிபரின் அதிகாரங்களை மேலும் குறைத்து நாடாளுமன்ற குடியரசாக நாட்டின் நிலையை அறிவித்தது.
இம்ரான் கானின் வீழ்ச்சி
பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியோடு பிரதமரானவர் என்று இம்ரானை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. அவருடைய பாகிஸ்தான் தேரிக் இன்சாஃப் (பிடிஐ) கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இடங்களைப் பெறவில்லை. ஆனால், பிற கட்சிகள் ஆதரவு தந்தன. எனவே பிரதமரானார்.
தேர்தலுக்கு முன்னர் அறிவித்த வாக்குறுதிகளைப் பெருமளவு இம்ரானால் நிறைவேற்ற முடியவில்லை. அதேவேளையில் எதிர்க்கட்சிகளைச் சாடுவதையும் எதிர்க்கட்சியினரை ஒடுக்குவதையும் தொடர்ந்து மேற்கொண்டார்.
தொடக்கக் காலத்தில் ராணுவத்தின் கண்ணசைவுக்கு ஏற்பச் செயல்பட்ட அவர், பதவியின் இறுதிக் காலத்தில் சுயமாகச் செயல்பட விரும்பினார், ராணுவத்தின் தலைமைத் தளபதியையே பதவியிலிருந்து நீக்கவும் வழி தேடினார். நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியிருக்கிறது.
சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுடன் இம்ரான் அதிகம் நெருங்கியதும் ஆப்கன் தாலிபான்களுக்கு அவர் ஆதரவு காட்டியதும் அமெரிக்காவால் விரும்பப்படவில்லை. பாகிஸ்தானின் பொருளாதாரத்துக்கு அமெரிக்க அரசு தந்த நிதியுதவிதான் இத்தனை ஆண்டுகளாக பெருமளவு முட்டுக்கொடுத்துவந்தது. இந்த நிலையில்தான் உக்ரைன் மீது தாக்குதல் தொடுத்திருந்த நிலையிலும், ரஷ்யாவுக்கு இம்ரான் சென்றதை அமெரிக்கா விரும்பவில்லை.
இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்ட எதிர்க்கட்சிகள் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தன. குதிரைப் பேரம் மூலம் வலுவைப் பெருக்க இம்ரான் திட்டமிட்டார். ஆனால் அவருடைய தோழமைக் கட்சியும் அவருடைய கட்சிக்காரர்களுமே அவரைக் கைவிடத் தயாராகிவிட்டனர். ஏப்ரல் 3 பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் ஆதரவு பிடிஐ கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று, ‘அன்னியச் சதி காரணமாக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டதால் அதன் மீது வாக்கெடுப்பு நடத்தக்கூடாது, அதை ரத்துசெய்ய வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர். நாடாளுமன்ற துணை சபாநாயகர் முகம்மது காசிம் கான் சூரி அதையேற்று, அந்தத் தீர்மானம் செல்லாது என்று வாக்கெடுப்புக்கே விடாமல் ரத்துசெய்தார்.
எதிர்க்கட்சிகள் மீண்டும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரக் கூடும் என்று எதிர்பார்த்து அதிபர் ஆரிஃப் ஆல்வி மூலமாக நாடாளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிடச் செய்தார் இம்ரான். உடனே எதிர்க்கட்சிகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தை நாடின. உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தலையிட்டு, நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில் நாடாளுமன்றத்தைக் கலைக்க உத்தரவிட்டதை ஏற்க முடியாது, நாடாளுமன்றத்துக்கு மீண்டும் உயிரூட்டப்படுகிறது, நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதமும் வாக்கெடுப்பும் அவசியம் என்று ஏப்ரல் 7இல் உத்தரவிட்டது.
பாகிஸ்தானின் வல்லமை மிக்க ராணுவமும் உச்ச நீதிமன்றத்துக்கு சார்பாகவே இருந்தது. எனவே மீண்டும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைச் சந்திப்பதைத் தவிர இம்ரானுக்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது. நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தன்னுடைய கைப்பாவையை இடைக்காலப் பிரதமராக நியமிக்க இம்ரான் கானின் திட்டமிட்டிருந்தார். உச்ச நீதிமன்றம் அதற்கும் தடை விதித்துவிட்டது. இடைக்காலப் பிரதமரைத் தேர்வுசெய்யும் பொறுப்பை எதிர்க்கட்சிகளுக்கு அளித்தது. எதிர்பார்த்தபடியே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் இம்ரான் கான் அரசு பதவி இழந்துவிட்டது.
இடைக்கால அரசு, பிரதமர் நியமனம் ஆகியவை ஒரு பக்கம் இருந்தாலும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலை உடனடியாக நடத்த முடியுமா என்று தேர்தல் ஆணையத்துடன் ஆலோசனை கலந்தது உச்ச நீதிமன்றம். அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என்று ஆணையம் கூறிவிட்டது.
ஆக, உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம், ராணுவம் யாவும் தத்தமது எல்லைக்குள் நின்றிருப்பதோடு, சரியாகவும் இம்முறை செயல்பட்டிருப்பது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. பாகிஸ்தானின் அரசமைப்பு மீது இது ஒரு மதிப்பைக் கொண்டுவந்திருக்கிறது.
1
2
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.